பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கிராமப்புறங்களில் தல சுய ஆட்சி

கிராமப்புறங்களில் தல சுய ஆட்சி முறை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பஞ்சாயத்து சபைகள்

நகரங்கள், பேரூர்கள் இவைகளில் மட்டும் தல சுய ஆட்சியை நிறுவினால் போதாது. இந்திய மக்கள் தொகையின் எழுபது விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மக்கள் நிர்வாக முறையில் எதுவும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை என்றால் தல சுய ஆட்சி முறையின் குறிக்கோளே முழுமை பெறாமல் வீணாகிவிடும். எனவே, இம்மக்கள் தங்கள் நலனைத் தாங்களே நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வழிமுறைகளைக் கொண்டுவர வேண்டும்.

காந்தி அடிகள் போன்றோர் விரும்பிய பொருளாதார நிலையில், செழுமை அப்போதுதான் ஏற்படும். மேலும், சுய ஆட்சி முறைக்குத் தேவையான பயிற்சியும் அவர்களுக்குக் கிடைக்கின்றது. புதிய முறைகளைக் கொண்டு வருவதற்கான ஊக்கமும் நம்பிக்கையும் அவர்கள் பெறுகிறார்கள்.

இக் குறிக்கோள்களை மனத்தில் வைத்தே, இந்தியா சுதந்தரம் அடைந்ததும் பஞ்சாயத்து அரசு முறை எல்லாக் கிராமப்புறங்களிலும் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது பஞ்சாயத்து அரசு முறையே கிராமத்தின் மையமாக அமைந்துள்ளது. இதனைக் கொண்டு வருவதற்கு முன் இந்தியத் தலைவர்களும், அரசாங்கமும் இதனால் என்னென்ன சிக்கல்களும், பிரச்சனைகளும் எழலாம் என்று அறிந்து கொள்வதற்காகப் பல குழுக்களை அமைத்தனர்.

இப்படிப்பட்ட கமிட்டிகளின் அறிக்கைகளை, சிபாரிசுகளை ஒட்டியும், சமூக வளர்ச்சி, கிராமப்புற அபிவிருத்தி திட்டங்களுக்காக உண்டான திட்டக்குழு போன்ற அமைப்புகளின் பயிற்சிகளை ஒட்டியும் ஒரு பரந்த அடிப்படை கொண்ட பஞ்சாயத்து அரசு அமைப்பு 1958ல் ஏற்படுத்தப்பட்டது.

1958 ஆம் ஆண்டு தொடங்கி அதற்குப் பிறகும் மாநில அரசாங்கங்களால் கொண்டுவரப்பட்ட சட்டங்களின் மூலம் இவ்வமைப்பு நடைமுறையில் இயங்க ஆரம்பித்தன. இருந்தும் பஞ்சாயத்து நிறுவனங்கள் எம் முறையில் இருக்க வேண்டுமோ அம்முறையில் இல்லை என்றும் நாட்டில் ஜனநாயகம் பலமான அடித்தளத்தை பெறவில்லை என்றும் பலர் கருதுகின்றனர். ஆனால், பஞ்சாயத்து நிறுவனங்கள், தொடர்ந்து பணி புரிவதையும் கிராம, சமூகப் பொருளாதாரப் புனரமைப்பிற்கு அவைகள் இன்றியமையாதவை என்பதையும் எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாயத்து அரசு அமைப்பு

தமிழ்நாட்டில் பஞ்சாயத்து அரசு முறை, தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958-ன்படி ஏற்படுத்தப்பட்டது. இந்த முறை கிராமப் பஞ்சாயத்து அடிப்படையில் அமைந்துள்ளது. இதற்கு மேலாகப் பஞ்சாயத்து ஒன்றியங்களும், மாவட்ட வளர்ச்சிக் குழுக்களும் உள்ளன. இந்தப் புதிய அமைப்புமுறையில், மாவட்ட கழகங்கள் (Boards) அகற்றப்பட்டுப் பஞ்சாயத்து ஒன்றியங்கள் அவற்றின் வாரிசுகளாக ஆயின.

பஞ்சாயத்து ஒன்றியத்தின் பரப்பளவு சமூக முன்னேற்றத் திட்டத்திலுள்ள அபிவிருத்தி பிளாக்குகளின் சம எல்லை அமைப்புகளாக அமைக்கப்பட்டன. கிராம மட்டங்களின் மக்களால் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட பஞ்சாயத்துக் கவுன்சில்களில் இருக்கின்றன. மேற்படி உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுக்கின்றனர். இப்பொழுது பஞ்சாயத்துத் தலைவரையும் நேரிடையாக மக்களால் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முயற்சி இருக்கிறது. பஞ்சாயத்து யூனியனில் அதன் அதிகாரத்திற்குட்பட்ட பஞ்சாயத்துக் கவுன்சில்களின் தலைவர்கள் அங்கத்தினர்களாக உள்ளனர். இவர்கள், பஞ்சாயத்து யூனியன் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

தமிழ்நாட்டிலுள்ள பஞ்சாயத்து அரசு நிறுவனங்களின் அமைப்பைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கலாம்.

  1. பஞ்சாயத்துக்கள் - (அ) கிராமப் பஞ்சாயத்துகள், (ஆ) நகரப் பஞ்சாயத்துகள்
  2. பஞ்சாயத்து யூனியன்
  3. மாவட்ட அபிவிருத்திக் கவுன்சில்
  4. மாநில மட்டத்திலுள்ள பஞ்சாயத்து அபிவிருத்தி ஆலோசனைக் குழுக்கள்:

மேற்கூறப்பட்ட அமைப்புகள் 1994 ம் ஆண்டு வரையும் அதற்கு பிறகு புதுச்சட்ட அடிப்படையில் தேர்தல்கள் நடைபெறும் வரை வழக்கில் இருந்தன.

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம், 1994

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் தமிழ்நாட்டில் பஞ்சாயத்து அமைப்பு வளர்ந்த வரலாற்றில் முக்கியமானதொரு மைல் கல்லாகும். தல சுய ஆட்சி நடைமுறை தமிழ்நாட்டில் இதற்கு முன்பு எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக அமையவில்லை. எனவே தேசீய மட்டத்திலும், மாநிலங்கள் மட்டத்திலும் இவைகள் சிறப்பாக செயல்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று எல்லோரும் விரும்பினார்கள். நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய அரசியல் கட்சிகளும் பஞ்சாயத்து அமைப்பை பற்றி நன்றாக அறிந்திருந்தவர்களும் இக்கருத்தை ஆதரித்தார்கள், எனவே பிரதமர் திரு. ராஜிவ் காந்தி அவர்கள் இந்த அமைப்புகளை வலுப்படுத்துவதற்கு 1985ம் ஆண்டு முயற்சி மேற்கொண்டார்கள். இருப்பினும் அவருடைய முயற்சிகள் அப்போது அவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

அவருக்குப் பிறகு தேசீய முன்னணியின் திரு.வி.பி.சிங் சட்டமியற்றுவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சியும் வெற்றி பெறவில்லை. பிறகு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திரு. பி.வி நரசிம்மராவ் அவர்கள் பிரதம மந்திரியாக இருந்த போது எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு 73-வது அரசியலமைப்பு திருத்த சட்டம் 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் இந்தியாவிலுள்ள மொத்த மாநிலங்களில் 50 விழுக்காடு மாநிலங்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டபோது 1993-ம் ஆண்டு மே மாதம் நடைமுறை படுத்தப்பட்டது. இது ராஜிவ் காந்தி அவர்களின் கனவை நினைவாக்கியது என்று சொல்லலாம்.

இச்சட்டம் பஞ்சாயத்து அமைப்புகள் அவற்றின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை தீவிரமாக செய்து முடிப்பதற்கு உதவியாக இருந்தது. இச்சட்டம் பிற்காலத்தில பல முக்கியமான மாறுதல்கள் ஏற்பட வகை செய்தது.

இந்திய கூட்டாட்சியிலுள்ள ஒவ்வொரு மாநிலமும் இந்த பஞ்சாயத்துராஜ் சட்டத்தை நிறைவேற்றுவது கட்டாயமாக்கப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது சட்டப்படியானது. ஏதேனும் ஒர் மாநிலம் இந்த சட்டப்பூர்வ கடமையை நிறைவேற்ற தவறினால் அதற்கு மைய அரசின் மானியங்கள் பெற தகுதி கிடையாது என்பது கட்டாயமாக்கப்பட்டது.

மக்களுடைய அன்றாட வாழ்வோடு தொடர்புடைய தெளிவாக கூறப்பட்டுள்ள 29 கடமைகளை பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் முடிவெடுக்க அதிகாரம் தரப்பட்டன. முடிவுகளை நிறைவேற்றுவதைப் பொறுத்தளவில் அவற்றின் பணி முன்பிருந்திருந்ததைக் காட்டிலும் சிறப்பாக அமைந்தது. இவைகள் அந்த அந்த மாநிலங்களின் பிரதிநிதிகளாக செயல்பட வேண்டும்.

பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுடைய அதிகாரங்கள் பணிகள் எல்லாம் இந்த பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் தெளிவாக எடுத்து சொல்லப்பட்டு இருக்கின்றன.

தமிழ்நாட்டில் பங்சாயத்து ராஜ் அமைப்பு முறை

73-வது அரசியலமைப்பு திருத்த சட்ட அடிப்படையில் தமிழ்நாட்டு அரசாங்கம், தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1994ஐ இயற்றியது.

இச்சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் தற்போது பஞ்சாயத்து அமைப்புகளின் எண்ணிக்கை கீழ்க்கண்டவாறு உள்ளது.

  1. 12619 - கிராம பஞ்சாயத்துக்கள்
  2. 385 - ஊராட்சி ஒன்றியங்கள், மற்றும்
  3. 29 - மாவட்ட பஞ்சாயத்துக்களும் உள்ளன.

இவ்வமைப்புகள் தற்போது முழுவீச்சில் பணியாற்றி வருகின்றன. மக்கள் பிரதிநிதிகள் அவர்களின் பகுதி மற்றும் சமுதாயம் தொடர்புடைய ஒவ்வொரு செயலிலும் தீவிர ஈடுபாடு கொண்டு செயலாற்றுகிறார்கள்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.08108108108
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top