பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சுதந்திரம் - ஓர் கண்ணோட்டம்

சுதந்திரம் பற்றிய பல்வேறு அறிஞர்களின் கருத்துக்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

சுதந்திரம் எனும் சொல் "லைபர்" என்னும் லத்தீன் மொழியில் வேர்சொல்லாக கொண்ட ஆங்கில சொல் "லிபர்ட்டி" என்பதன் தமிழாக்கமாகும். இந்த லத்தீன் சொல்லுக்கு திட்டவட்டமான பொருள் அளித்தல் இயலாது. ஏனெனில் சுதந்திரம் (லிபர்டி) எனும் சொல்லும் சரி, விடுதலை (freedom, Independence) எனும் சொல்லும் சரி, பல்வகைகளில் பல்வேறு கருத்துக்களில் உபயோகப்படுத்தப்படுகின்றன. சுதந்திரம் சில சமயங்களில் உரிமை என்ற பொருளிலும் பிரயோகிக்கப்படுகிறது. ஆக, சுதந்திரம் உரிமை ஆகிய மூன்று கருத்துகளும், சுதந்திரம் எனும் கோட்பாட்டை சுற்றியே அமைந்துள்ளது. எனவே நாட்டின் குடிமக்களுக்கு பேச்சு, எழுத்து, வாழ்தல், பொருளீட்டுதல், மதம், மொழி ஆகிய எல்லாவற்றிலுமே பிறர் தலையீடு இன்றி அனைவரும் அனுபவிக்கப்படும் விடுதலையே சுதந்திரம் என்கிறோம். இம்மாதிரி அனுபவிப்பதிலிருந்து தனி நபர்களையோ மக்களுள் சிறு குழுவினரையோ, பிற தனி நபர்களோ பெருமக்கள் திரளோ தடுப்பதைத்தான் அரசியல் அறிஞர்கள் அநீதி என்பர்.

சுதந்திரத்தின் வரையறைகள்

டி.எச்.கிரீன் என்ற அறிஞர் சுதந்திரத்தைப் பின்வருமாறு விளக்குகிறார். தான் மட்டுமோ அல்லது மற்றவர்களுடன் சேர்ந்தோ எதையேனும் ஒன்றை செய்யக்கூடிய ஆற்றல் அல்லது அடையும் மகிழ்ச்சி சுதந்திரமாகும். மனிதர்கள் அவர்களுடைய சிறப்புத்தன்மையை அடைவதற்கு தேவையான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதே சுதந்திரமாகும். சுருங்கக்கூறின், சுதந்திரம் என்பது உரிமைகளின் வழிவந்தது. நல்ல ஒழுங்குள்ள சமுதாயத்தில் விருப்பப்பட்ட செயல்களை அதிக கட்டுப்பாடுகளின்றி செய்வதற்கு ஏதுவாக இருக்கும் அதிகபட்ச சாத்தியக் கூறே சுதந்திரமாகும்.

சுதந்திரத்தின் வகைகள்

மேக் ஐவர் மற்றும் லாஸ்கி ஆகியோர் கூற்றுப்படி, சுதந்திரம் பலவகைப்பட்டது.

 1. இயற்கை சுதந்திரம்
 2. சமூக சுதந்திரம்.

இயற்கை சுதந்திரம்

ஒரு மனிதன் தான் விரும்புபவற்றை செய்ய, நிலவும் குறுக்கீடுகளற்ற கட்டுப்பாடுகளற்ற சுதந்திரம் இயற்கை சுதந்திரமாகும். இயற்கை சுதந்திரம் என்பதை ஒர் அரசின் கீழ் மக்களுக்கு அளித்தல் இயலாது; ஏனெனில் இவ்வகை சுதந்திரம் முற்றிலும் கட்டுப்பாடற்றதாகும்; இவ்வகையில் அரசு அனுமதித்தால் நாட்டின் குழப்பமும், சட்டமின்மையும் தான் எஞ்சி நிற்கும். இயற்கை சுதந்திரம் எல்லைகளை கடந்து இருப்பதால் அது சுதந்திர நிலைக்கே எதிரானது. இதைத்தான் சமுதாய ஒப்பந்தத்தின் கோட்பாளர்களான ஹாப்ஸ், லாக், ரூசோ ஆகியோர்கள் விளக்கினார்கள். அரசு என்கிற அமைப்பு தோன்றுவதற்கு முற்பட்ட காலத்தில் தான் மனிதனுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாது இயற்கை சுதந்திரம் இருந்து வந்தது. யாரிடம் வலிமை அதிகமாக இருந்ததோ அவரே அளவற்ற சுதந்திரமுடையவராக இருந்திருப்பார்.

சமூக சுதந்திரம்

சமூக அமைப்பில் அங்கம் வகிக்கும் மனிதன் அவன் வாழ்க்கையில் பெறும் சுதந்திரம், சமூக சுதந்திரத்தைக் குறிக்கிறது. இது, பொதுநலன் கருதி விதிக்கப்பட்டுள்ள கட்டுப் பாடுகளுக்கு உட்பட்டு அவன் விரும்பியதை செய்யலாம் என்பதாகும். சமுதாயம் ஏற்றுக் கொண்டிருக்கும் கடமைகள், உரிமைகள் மற்றும் சலுகைகளை அரசும் ஏற்றுக் கொண்டு அவைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. சமூக சுதந்திரம் பின்வருமாறு பிரிக்கப்பட்டிருக்கிறது.

 • தனிமனித சுதந்திரம்
 • அரசியல் சுதந்திரம்
 • வீட்டு சுதந்திரம்
 • தேசிய சுதந்திரம்
 • சர்வதேச சுதந்திரம்
 • பொருளாதார சுதந்திரம்
 • தார்மீக சுதந்திரம்

தனிமனித சுதந்திரம்

சமுதாய சுதந்திரத்தின் ஒரு பிரிவு தனி சுதந்திரமாகும். இது தனி மனிதனுடைய வாழ்க்கையோடு தொடர்பு கொண்டது. ஒருவன் தான் விரும்பும் செயல் தடையின்றி செய்வதற்கு வழிவகுப்பது தனிமனித சுதந்திரமாகும். அவ்வாறு செய்யப்படக்கூடிய செயல் அம்மனிதனை சமுதாயத்தில் தனித்து இருக்கவும் செய்யக்கூடும்.

அரசியல் சுதந்திரம்

அரசியல் சுதந்திரம் என்பதும், அரசியல் அமைப்பின் கீழ் குறிப்பிட்ட சுதந்திரம் என்பதும் இரண்டும் ஒன்றையே குறிப்பதாகும். தாங்கள் விரும்பும் அரசை மக்களே தேர்ந்தெடுப்பது அரசியல் சுதந்திரத்தின் ஒர் வெளிப்பாடேயாகும்.

மக்களாட்சி தேர்தலில் வாக்களிக்கும் சுதந்திரம், முழுத் தகுதியின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட சுதந்திரம், அரசாங்க பணிகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு சுதந்திரம் அல்லது உரிமை, மற்றும் அரசாங்கத்தின் செயல்பாட்டினை, சட்ட விளிம்பிற்குள் விமர்சிக்க முழு சுதந்திரம் ஆகியவை அனைத்தும் அரசியல் சுதந்திரத்தின் பிரிவுகளாகும்.

வீட்டு சுதந்திரம்

வீட்டு சுதந்திரம் என்பது குடும்ப அளவில் ஒரு மனிதனால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பற்றியதாகும். மனைவியை உரிய மதிப்புகளுடன் நடத்துவது, பெற்ற குழந்தைகளை சரியாகப் பராமரித்து சிறந்த குடிமகனாக்குவது சொத்துக்களை ஆண்டு அனுபவிக்க மற்றும் சுயமாக நின்று இயங்கும் அளவிற்கு உரிய உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை கொண்டு வாழ்க்கை நடத்த ஏதுவாக இருப்பது வீட்டு சுதந்திரமாகும்.

தேசிய சுதந்திரம்

தேச விடுதலை என்பது தேசிய சுதந்திரத்தின் ஒரு வெளிப்பாடாகும். எந்த ஒரு தேசமும் மற்றொரு தேசத்தின் கீழ் இயங்க வேண்டிய நிர்பந்தமில்லை என்பதே தேசிய சுதந்திரமாகும். சுதந்திரப் போர்கள் நிகழ காரணமாக இருப்பது தேசிய சுதந்திர உணர்வாகும்.

சர்வதேச சுதந்திரம்

உலகளாவிய நோக்கில், இவ்வுலகத்தின் மீது எவ்விதமான கட்டுப்பாட்டு எல்லைகள் இல்லை என்பதும் பலப் பிரயோகம் என்பதற்கு எந்த மதிப்பும் இல்லை என்பதுமே சர்வதேச சுதந்திரத்தின் முக்கியம்சமாகும். சர்வதேச அளவில், போரொழிப்பது, கொலையில்லா உலகத்தை நிர்மாணிப்பது, சர்ச்சைகளுக்கு அமைதி வழியில் தீர்வு காண்பது போன்ற சர்வதேச சுதந்திரத்தின் வெளிப்பாடுகளாகும்.

பொருளாதார சுதந்திரம்

பொருளாதார பாதுகாப்பும், உணவிற்காக ஒருவர் சம்பாதிப்பதில் வாய்ப்பும், பொருளும் இருத்தல் வேண்டும். நாளைய தேவைகளிலிருந்து ஒருவன் பாதுகாக்கப்படுவது பொருளாதார சுதந்திரமாகும்.

தார்மீக சுதந்திரம்

சித்தாந்த ரீதியில் கருத்தியலாக எழுந்த சிந்தனை தார்மீக சுதந்திரமாகும். பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற பண்டைய அறிஞர்களும், ரூசோ, காண்ட், ஹென்ஸ், கிரீன் மற்றும் பொஸான்கே போன்ற பிற்காலத்திய அறிஞர்களும் இது குறித்து அதிகம் சிந்தித்துள்ளனர். ஒவ்வொரு மனிதனுக்கும், தனித்துவம் உள்ளது. அவன் தன் ஆளுமையயை மேம்படுத்திக் கொள்ளவே எத்தனிக்கிறான். அதே சமயத்தில் அவன் பிறருக்காகவும் வாழ்பவனாக இருத்தல் அவசியம். அதுவே பரிபூர்ண தன்னையறிதல் எனப்படும்.

தனிமனித சுதந்திரத்தின் முக்கியத்துவம்

சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனும், தன்னுடைய சொந்த விருப்பத்தின் பால் வாழ வழிவகுப்பதே தனிமனித சுதந்திரமாகும். மனிதன் தான் சார்ந்திருக்கும் சமூக முறைமையின் மத்தியில் இருக்கிறான். மனிதனுடைய மனம், அவனுடைய தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையிலேயே இயங்குகிறது. இயக்கத்தின் போது எதிர்மறை விளைவுகள் நேருமாயின் அவற்றை அவன் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை பெற்றிருக்க வேண்டும். அரசே, ஒருவனுடைய சுதந்திரத்திற்கு எல்லைகளை வகுக்கிறது பலவிதமான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அத்தகைய எல்லைகளும் கட்டுப்பாடுகளும் மிகவும் அவசியமாகிறது; ஏனெனில் இன்றும் நாம், கட்டுப்பாடுகளற்ற எல்லைகளற்ற அரசினை பெறும் அளவிற்கு வளர்ச்சி பெறவில்லை. சமுதாயம் என்பது பலதரப்பட்ட மக்களை கொண்டதாக உள்ளது. அறிவார்ந்தவர்களும் உள்ளனர்; சாமானியர்களும் உள்ளனர்; பலசாலிகளும் உள்ளனர் பலவீனமானவர்களும் உள்ளனர்.

இத்தகைய அமைப்பில் ஒருவொருக்கொருவர் பரஸ்பர உரிமைகளை, சுதந்திரங்களை அறிந்து ஏற்றுக் கொண்டு இயைந்து வாழ்வதால் மட்டுமே ஒரு அரசு சரிவர இயங்கும். இச்சூழலில், தனிமனித சுதந்திரத்தின் முக்கியத்துவம், அதனை பாதுகாக்க வேண்டிய அவசியமும் எழுகிறது. இயற்கை சூழலை, புவியில் தன்மை மனித உழைப்பு மாற்றும் வல்லமை கொண்டுள்ள போது, உலகில் தேசங்களை, நாடுகளை தோற்றுவிக்க மன ஆற்றலை தகுந்த முறையில் பயன்படுத்தி சிறந்த தேசத்தை, நாட்டை உருவாக்கலாம்.

சமத்துவம்

சமத்துவம், அரசியல் அறிவியலின் ஒரு முக்கிய ஆய்வுப்பொருளாகும். நல்லாட்சி, சிறந்த ஜனநாயகம், நல்லரசு, போன்ற அநேக கருத்துக்களின் அச்சாணியாக "சமத்துவம்" (Equality) திகழ்கிறது. ஆகவே, அரசியல், சமூகம், மதம், இனம், மொழி, பொருளாதாரம், தனிநபர் சமத்துவம் என பல்வேறு வகைகளில் சமத்துவ நிலை உண்டு. மனித வரலாற்றில் அநேக போராட்டங்கள் இத்தகைய சமத்துவத்தை நிலைநாட்டவே செய்யப்பட்டன என்றால் மிகையாகாது. இக்கோட்பாடு 19 ம் நூற்றாண்டில் சுதந்திரத்தைப் போன்றே முக்கியமானதாகக் கருதப்பட்டது.

சமத்துவத்தின் வரையறை

எச்.ஜே. லாஸ்கி, "சமத்துவம் என்பது அடிப்படையில் சமன்படுத்தப்படும் செய்வகை" என தமது நூலான "அரசியலின் இலக்கண"த்தில் சமத்துவத்தை வரையறுக்கிறார். அரசியல் சமூகம் ஆகிய இரண்டையும் ஒரு நாணயத்தின இரு பக்கங்களென்றால், சுதந்திரமும், சமத்துவமும் அதே போல் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனலாம்.

சமத்துவக் கோட்பாடு

சமுதாயத்தில் உள்ள மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் என்றாலும், உருவத்தில் உயரமான ஒருவருடன் குள்ளமாக இருப்பவருடனோ, பலமான ஒருவருடன் பலவீன மானவரையோ சமமாக நோக்குவது சரியன்று. சமனற்ற இருவர்களை அவர்கள் "மனிதர்கள்" என்ற ஒரு சொல்லில் விளித்து சமூக நிறுவனங்கள் அனைவரும் சமமே என்ற நிலைப் பாட்டினை நிறுவுகின்றன. மனிதன் என்ற அந்தஸ்த்தை அனைவருக்கும் தர வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. இந்த நோக்கில் பார்க்கும் பொழுது, சமத்துவம் இரு பரிமாணங்களை கொண்டுள்ளதாக அறியலாம். அவை நேர் சமத்துவம், எதிர்மறை சமத்துவம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நேர் சமத்துவம் (Positive aspect of equality)

அனைவருக்கும் சமஉரிமை, சமமான அந்தஸ்து போன்றவற்றை வலியுறுத்துவது நேர் சமத்துவமாகும். சமுதாயத்தில் வாழும் மனிதர்களை பிறப்பு நிறம், இனம், மொழி போன்றவற்றை வைத்து எவ்விதத்திலும் சலுகைகள் மறுக்கப்படக்கூடாது என்பதை நேர் சமத்துவம் வலியுறுத்துகிறது.

எதிர்மறை சமத்துவம் (Negative aspect of equality)

சமுதாயத்தில் உள்ள அனைவரும் சமமாக பாவிக்கப்பட வேண்டும். பிறப்பு, நிறம், இனம் மொழி போன்றவற்றை வைத்து எவ்விதத்திலும் சலுகைகள் வழங்கப்படக் கூடாது என்பதை எதிர்மறை சமத்துவம் வலியுறுத்துகிறது.

சமத்துவத்தின் வகைகள்

 • இயற்கை சமத்துவம்
 • சிவில் சமத்துவம்
 • அரசியல் சமத்துவம்
 • பொருளாதார சமத்துவம்
 • பன்னாட்டு சமத்துவம்

இயற்கை சமத்துவம்

ஜான் லாக் ரூசோ போன்ற சமுதாய ஒப்பந்த சிந்தனையாளர்கள் மட்டுமே சமுதாயமானது, இயற்கையிலே சுதந்திரமும், சமத்துவமும் கொண்டுள்ளதாக அமைந்திருக்கிறது என கருதினர். நிலவியலில், அவ்வாறான சமத்துவமோ, சுதந்திரமோ இல்லை என்பதே யதார்த்தம். ஆகவே சிந்தனையாளர்கள் உருவகித்த இயற்கை சமத்துவம் வெறும் தோற்றம் அளவிற்கே பொறுத்தமுடையது எனலாம்.

சிவில் சமத்துவம்

நாட்டில் இயற்றப்படும் சட்டங்களில் மக்களிடையே வித்தியாசங்களை ஏற்படுத்திவிடக்கூடாது; அப்போது தான் சட்டத்தின் முன் சமத்துவம் இருக்க முடியும். மதம், இனம், சாதி, பால் என்ற எந்த ஒரு அடிப்படையிலும் ஒரு சாராருக்கு சலுகைகள் வழங்கியும், பிறருக்கு அதே சலுகைகளை வழங்க மறுத்ததாலும், சமத்துவம் தனிநபருக்கு மறுக்கப்படுகிறது என பொருள்பட்டுவிடும். அவ்வாறு அனைவருக்கும் சமமான, சமத்துவத்தை நிறுவுவதே இராணுவம் சாரா தனிநபர் சமத்துவம் (சிவில் சமத்துவம்) எனப்படும்.

அரசியல் சமத்துவம்

எல்லாக் குடிமக்களுக்கும், எந்த ஒரு வித்தியாசமும் இன்றி பொதுத் தேர்தலில் வாக்கு அளிப்பதற்கும் போட்டியிடுவதற்கும் உரிமைகள் வழங்கப்படுமெனில் அத்தகைய சமத்துவமே அரசியல் சமத்துவம் எனப்படும். இந்திய அரசியலமைப்பில் 18 வயது வந்த இந்திய குடிமக்கள் அனைவரும் பொதுவாக வாக்களிக்கலாம் என்ற நிலை உள்ளது.

சமுதாய சமத்துவம்

தனிநபர் சமத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், தானாகவே சமுதாய சமத்துவம், அல்லது சமூக சமத்துவம் தோன்றிவிடுகிறது. சமுதாய சமத்துவம் அரசியலமைப்பு சட்டத்தில் பெருமளவு நம் நாட்டில் நிலை நாட்டப்பட்டுள்ளது. சட்ட திட்டங்கள் ஆயிரம் இருந்தாலும், சமுதாய சமத்துவம் மக்களுடைய மனமாற்றத்தால் மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது.

பொருளாதார சமத்துவம்

லாஸ்கி, "அரசியல் சமத்துவத்தை தொடர்ந்து பொருளாதார சமத்துவமும் அளிக்கப்படவில்லையானால்", அரசியல் சமத்துவம் என்பது உண்மையாகி விடாது. தற்கால ‘சூழ்நிலையில், மக்களுள் பெரும்பாலோர் பொருளாதார நிலையில் மிகவும் வறியவர்களாக இருப்பார்கள் எனில் அங்கே பொருளாதார சமத்துவம் கிடையாது. அதோடுமட்டுமின்றி வேறுபல சமத்துவ நிலைகள், உரிமைகளும் பொருளின்றி பயனற்றதாகிவிடும். பொருளாதார சமத்துவம் என்றால் அனைத்து குடிமக்களுக்கும் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்யும்வண்ணம் பொருளாதார மேம்பாட்டை உறுதிப்படுத்துவதே பொருளாதார சமத்துவம் என்பதாகும் என கூறுகிறார்.

சர்வதேச சமத்துவம்

அனைத்து தேச மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஒரு நாடு இன்னொரு நாட்டை சமமாக பாவித்தலும் இதில் அடங்கும்.

சமத்துவத்தின் நோக்கங்கள்

சமத்துவத்தின் முக்கிய நோக்கங்களாவன

 1. எந்த ஒரு தனிநபருக்கும் அல்லது குழுவினருக்கும், வேறு பலருக்கு இல்லாத விசேஷ சலுகைகள் எவையும் அறவே வழங்கப்படக்கூடாது.
 2. ஒவ்வொருவரும், அவர்தம் ஆளுமைத்திறனை வளர்த்துக்கொள்ளும் பொருட்டு, சமமாக வாய்ப்புக்கள் பெற வேண்டும்.
 3. மக்களிடையே எவ்விதமான பாகுபாடான நிலைப்பாடும் காணப்படக்கூடாது; சலுகைகள் வழங்கப்படக்கூடாது. ஆனால் உரிய காரணங்களை முன்னிட்டு சலுகைகள் வழங்கலாம்.
 4. அதிகாரத்தை பெறும் நோக்கில் ஒவ்வொருவருக்கும் சம அளவில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

சுதந்திரமும் சமத்துவமும்

சுதந்திரம் சமத்துவத்திற்கெதிரானது என்றும், அவ்வாறு இல்லை என்றும் அரசியல் சிந்தனையாளர்கள் தொடர்ந்து வாதிட்டு வருகின்றனர். இரண்டும் ஒரு திசையில் பயணிக்க முடியாது. எனினும், சமத்துவம் இல்லையேல் சுதந்திரம் இல்லை. இதை அடைவதற்கு சுதந்திரம் மிகவும் அவசியமானதாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
3.34615384615
s.madhuram rajkumar Aug 07, 2020 07:38 PM

super

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top