பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / அரசியல் மற்றும் அரசாங்கம் / பன்னாட்டு அரசியல் நிறுவனங்கள் அமைப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பன்னாட்டு அரசியல் நிறுவனங்கள் அமைப்பு

பன்னாட்டு அரசியல் நிறுவனங்கள் அமைப்பு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

உள்நாடு மற்றும் உலகநாடுகளின் உறவுகளில் ஏற்படும் மாறுதல்கள், மற்றும் சமுதாயத்தை பன்னாட்டு போக்கு என்ற சொல் குறிப்பிடுகிறது. பன்னாட்டு உறவுகளின் தன்மையையும் போக்குகளையும் அறிவதற்கு பல அணுகுமுறைகள் இருக்கின்றன. அவைகளில் இரண்டு அணுகுமுறைகள் இங்கு விளக்கப்படுகின்றன.

வரலாற்று அணுகுமுறை

கடந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை கருத்தில் கொண்டு பன்னாட்டு உறவுகளை அறிந்துக் கொள்ளும் முறைக்கு வரலாற்று முறை என்று பெயர். இம்முறை இரண்டு முக்கிய அம்சங்களை அழுத்தமாக குறிப்பிடுகிறது.

 1. உள்நாடு மற்றும் பன்னாட்டு உறவுகளின் போக்கு நிலையானதாக இல்லாமல் அவ்வப்போது மாறுகின்ற தன்மையை உடையதாக இருக்கிறது.
 2. தற்கால உலக நாடுகளின் போக்கு அதன் அம்சங்களை மற்றும் வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு அறிய முற்படுகின்றபொழுது ஒவ்வொரு நாடும் முக்கியமானதாகும்.

நிறுவன அணுகுமுறை

பன்னாட்டு உறவுமுறையில் உள்ள அம்சங்களை அறிய முற்படுகின்றபொழுது வரலாற்று மற்றும் நிறுவன அணுகுமுறைகள் முக்கியமானவைகள் ஆகும்.

இவ்வணுகுமுறைகளைத் தெளிவாக அறிந்துகொள்வதற்காக அவை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன.

 1. முதல் பகுதி வரலாறு மற்றும் நிறுவனங்களின் தன்மையை விளக்குகிறது.
 2. இரண்டாவது பகுதி வட்டார மற்றும் பன்னாட்டு நிலையங்களின் அமைப்பு, அவை எவ்வாறு செயல்பட்டன மற்றும் எந்த அளவிற்கு வெற்றி பெற்றன போன்ற கருத்துக்களை விளக்குகின்றன.

தற்போது உலகமயமாக்கப்பட்ட பொருளாதார முறை மற்றும் தொடர்பு துறையில் ஏற்பட்டிருக்கின்ற பெரும் மாறுதல்களை உலக நாடுகள் அமைப்பில் நாம் காண்கிறோம். அத்தகைய சூழ்நிலைகளில் வாழ்கின்ற அளவிற்கு நாம் உள்ளாக்கப்பட்டிருக்கின்றோம். உள்நாடு மற்றும் உலக நாடுகளில் உறவுகளில் ஏற்படும் தொடர்ச்சி மற்றும் மாறுதல்களுக்கு ஏற்ப பன்னாட்டு வரலாறு எழுதப்படுகிறது. இதனைத் தெளிவாக அறிந்துக் கொள்வதற்காக சில நிறுவனங்கள் சார்ந்த கருத்துக்கள் இங்கு விளக்கப்பட்டிருக்கின்றன

மாணவர்கள் பன்னாட்டு அமைப்புகள் எதற்காக எவ்வாறாக ஏற்படுத்தப்பட்டன அல்லது விட்டுவிடப்பட்டன மற்றும் அவைகள் எவ்வாறு சமூக ஒழுங்கு மற்றும் முன்னேற்றம் கருதி மாற்றி அமைக்கப்பட்டன என்ற விவரங்களையெல்லாம் தெரிந்துக் கொள்வது அவசியமாகும். குழப்பமான சூழ்நிலையில் முன்னேற்றமோ நிலையான தன்மையோ அமைதியான முறையில் மாறுதல்கள் ஏற்படவோ முடியாது என்பது தெளிவாக வேண்டும். எனவே போராட்டங்கள் மற்றும் குழப்பமான சூழ்நிலைகளை விளக்கி அமைதி எவ்வாறு ஏற்பட வேண்டும் மாறுபட்ட நிலைகள் எவ்வாறு தோற்றுவிக்கப்பட வேண்டும் இதற்கு கூட்டு முயற்சியும் ஒத்துழைப்பும் எவ்வளவு அவசியமானது என்பதை அறிய வேண்டும். உள்நாட்டு, வெளிநாட்டு உறவுகளில் குழப்பங்கள் ஏற்படுவது இயல்பானதே. இவைகளை சமாளித்து அமைதியையும் ஒழுங்கையும் எவ்வாறு ஏற்படுத்த வேண்டும் என்பதையும் சம்மந்தப்பட்ட மக்களிடைய முன்னேற்றத்திற்கு எத்தகைய நடவடிக்கைகளை எடுத்து அவற்றை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை எல்லாம் அரசியல் அறிவியல் மாணவர்கள் தெரிந்து கொள்வது மிக அவசியமானதாகும்.

மேற்கூறப்பட்ட கருத்துக்களை தெரிந்து கொள்கின்ற முறையில் தேசிய மற்றும் பன்னாட்டு ஏற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டன, அவைகள் எந்த அளவிற்கு சம்மந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு பயன்பட்டன என்பதை சில உலக அமைப்புகளையும் அவற்றின் நடைமுறைகளையும் கொண்டு தெரிந்து கொள்ளலாம். இதற்கு உதாரணமாக, உலகநாடுகள் கழகம், ஐக்கிய நாடுகள் அமைப்பு, அணிசேரா நாடுகள் அமைப்பு, மற்றும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்களைக் கூறலாம்.

பன்னாட்டு அரசியல் நிறுவனங்களின் தொடர்ச்சி மற்றும் மாறுதல்

பன்னாட்டு அமைப்பு, நாடுகளின் எல்லைகள், அவைகள் பின்பற்றும் விதிகள், நடைமுறைகள், அவற்றிற்கு கிடைக்கின்ற வளங்கள் ஆதாரங்கள் மற்றும் அவைகளை நடைமுறைப்படுத்துகின்ற முறையில் மாறுபடுகின்றது.

நாடுகளுக்கிடையே உள்ள தொடர்புகள், அவைகள் அமைந்திருக்கின்ற இடங்கள் மற்றும் காலங்களைப் பொறுத்து அமைகின்றன. அவை சூழ்நிலைகளுக்கேற்ப மாறுபடும் தன்மையுடையவை. இந்த மாறுதல்களுக்கேற்பவோ அந்தந்த நாடுகளில் செயல்படுகின்ற நிறுவனங்களுடைய திறமைகளுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்பவோ அவற்றினுடைய வரலாறுகள் அமைகின்றன. அரசியல் துறையில் ஏற்படும் இழப்புகள் மற்றும் சாதனைகள் அதற்கு தகுந்தாற்போலவே சிறந்ததாக மற்றும் நிலையானதாக அல்லது தற்காலிகமானதாக மற்றும் சிறப்பற்றதாக மாற்றம் பெறுகின்றன.

குறிப்பாக 1648-இல் செய்துகொள்ளப்பட்ட வெஸ்ட் பாலியர் ஒப்பந்தம் உலகநாடுகள் அமைப்பில் பல நிகழ்வுகளை ஏற்படுத்தி மாற்றங்கள் செய்வதற்கு காரணமாக இருந்தது. அவற்றை முழுவதுமாக வரலாற்று நூல்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு 1917-ஆம் ஆண்டில் சோவியத் குடியரசுத் தோன்றியது. ஐக்கிய அமெரிக்க நாட்டிற்கு பெரிய சவாலாக வளர்ந்தது. அதனால் பன்னாட்டு அரசியலில் பல மாற்றங்களும் உயர்வுத் தாழ்வுகளும் ஏற்பட்டன. ஆனால் சோவியத் குடியரசு மறைந்த பிறகு பன்னாட்டு உறவுமுறைகளில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டன. ஐக்கிய அமெரிக்க நாட்டிற்கு ஏற்பட்ட சவாலும் அத்துடன் ஒழிந்தது.

இன்றைய உலக அமைப்பு முறை

சோவியத் யூனியன் மறைவுக் காரணமாக இரண்டாக பிரிக்கப்பட்டிருந்த இருமுனை (Bipolar) உலக அமைப்பு மறைந்தது. சோவியத் குடியரசு இருந்த வரையிலும் சில நாடுகள் அமெரிக்காவை ஆதரிப்பவை என்றும் வேறு சில நாடுகள் சோவியத் யூனியனை ஆதரிப்பவை என்றும் உலகம் பிளவுப்பட்டிருந்தது.

சோவியத்யூனியன் மறைவிற்குப்பிறகு உலகம் ஒருமுனை உலக அமைப்பாக (Uni polar) அதாவது அமெரிக்கா ஒன்றே உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்குள்ளதாக இருந்து வருகிறது. 10.6 ஒரு நாட்டு ஆதிக்கம் : 1991-ல் நடைபெற்ற வளைகுடா நாடுகளுக்கு இடையிலான போர் ஒரு நாட்டு ஆதிக்கத்திற்கு வழி ஏற்படுத்தியது. 1990-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ம் தேதி குவைத் அரசு மீது ஈராக் அரசு போர்த்தொடுத்தது.

இதனை எதிர்த்து ஐக்கிய நாடுகள் கழக அமைப்பின் தீர்மானத்தை ஒட்டி ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. வளைகுடா போரின்போது எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்படி அமெரிக்கா ஐக்கிய நாடுகள் கழக அமைப்பையும் மிஞ்சியதாக அதையும் கட்டுப்படுத்துவதாக இருந்தது என்று தெரிய வந்தது.

இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நாடுகளின் மேலாதிக்கம் மறைந்து ஒரு நாட்டு மேலாதிக்கம் நடைமுறையில் இருக்கின்றபோது சிறிய நாடுகள் மதிக்கப்படாமல் அவைகளுக்கு தீங்கு இழைக்கும்போக்கு அதிகரித்து வருகிறது.

உலகநாடுகள் கழகம்

உலகநாடுகள் கழகம் ஐக்கிய நாடுகளின் கழகம் தோன்றுவதற்கு முன்னோடி அமைப்பாக அமைந்தது. இரண்டும் ஒரே மாதிரியான காரணங்களுக்காக, ஒரே மாதிரி சூழ்நிலைகளில் ஏற்பட்டன.

முதலாம் உலகப்போர் முடிந்து வர்சேல் ஒப்பந்த அடிப்படையில் உலக நாடுகளிடையே ஒத்துழைப்பு, அமைதி ஏற்படுத்துதல் மற்றும் தேச பாதுகாப்புக்கு உறுதியளித்தல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக 1919-ம் ஆண்டு உலக நாடுகள் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.

அதே காலகட்டத்தில்தான் உலக தொழிலாளர் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போர் ஏற்படுவதை தடுக்கத்தவறிய காரணத்தால் உலகநாடுகள் கழகம் செயலற்றதாயிற்று.

உலக நாடுகள் கழக தோல்விக்கான காரணம் (1921-1939)

அரசியலில் உலக நாடுகள் கழகம் தோற்றுவிக்கப்பட்டதுதான் முக்கியமான ஒரு உலக நிறுவனத்திற்கு உதாரணமாகும். இதன் தோல்விக்கு முக்கியமானக் காரணம் அப்போது நடைமுறையில் இருந்த நாடுகள் அமைப்பை அப்படியே பராமரிக்க வேண்டும் என்ற நோக்கமேயாகும்.

அதாவது வர்சேல் ஒப்பந்தத்தின் படி நடைமுறைக்கு வந்த உலக அமைப்பை பராமரிப்பதே ஆகும். இதர முக்கியக் காரணங்கள் வருமாறு:

 1. அது உலக அமைப்பு என்ற தன்மையை இழந்தது.
 2. அது ஐரோப்பியர்களின் மடமாக செயலாற்றியது.
 3. அமெரிக்க மேல் சபை உலக நாடுகள் கழக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது. அதனால் இக்கழகத்தை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்த அமெரிக்கா மற்றும் அதன் தலைவர் உட்ரோவில்சன் அதில் உறுப்பினராக சேரமுடியாமல் போனது.
 4. 1931-ஆம் ஆண்டு மஞ்சூரியா மீதான ஜப்பான் ஆக்கிரமிப்பை தடுக்க முடியாமல் போனது.
 5. 1931-ஆம் ஆண்டு முசோலினி அபிசினியாவை ஆக்கிரமித்தப் பொழுது தடைச் செய்ய முடியாமல் போனது.
 6. ஐரோப்பாவின் இதர பகுதிகளில் குடியாட்சிகள் மறைந்து சர்வாதிகார ஆட்சிகள் ஏற்பட்டது.
 7. ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தது. அவருடைய சோசலிசக் கட்சி அங்கு முக்கிய பங்கு வகித்தது.
 8. உலகப் பொருளாதாரத்தில் இக்கழகத்திற்கு எவ்வித பங்கு பணியும் இல்லாமல் போனது.
 9. இக்கழகத்திற்கு அமெரிக்கா தர வேண்டிய சந்தா தொகையை 25 விழுக்காடு அளவிற்கு குறைத்தது.
 10. ஆக்கிரமிப்பு அரசுகளின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது.

இக்கழகத்தின் வெற்றிகள்

 1. 1932-ம் ஆண்டு ஆயுத ஒழிப்பு மாநாடு நடைபெற முயற்சி எடுத்துக்கொண்டது.
 2. அபின் மற்றும் மயக்கந்தரும் மருந்துப் பொருட்கள் வியாபாரத்தை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது.
 3. இக்கழகத்தின் அனுபவங்கள் ஐக்கிய நாடு கழகங்கள் அமைப்பிற்கு பொருத்தமானதாக அமைந்தது.

ஐக்கிய நாடுகள் கழக அமைப்பு

ஐக்கிய நாடுகள் கழகம் என்ற பெயர் அமெரிக்க ஜனாதிபதியான ரூஸ்வெல்த் என்பவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு 1942-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி ஐக்கிய நாடுகள் கழக பிரகடனத்தில் முதன்முதலாக உபயோகத்திற்கு வந்தது. இரண்டாவது உலகப்போரின் போது எதிரிநாடுகளுடன் போரை தொடர்ந்து நடத்துவதற்கு 22 நாடுகளின் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு அளிப்பதாக வாக்குறுதித் தந்தார்கள். பிறகு 1945-ம் ஆண்டு ஐம்பது நாடுகள் அடங்கிய மாநாடு சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்றது.

அமெரிக்கா, இங்கிலாந்து, சோவியத்யூனியன் மற்றும் சீனாநாட்டு பிரதிநிதிகள் கொடுத்த ஆலோசனையின் பேரில் 1944-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டம்பார்ட்டன் ஒக்ஸ் என்ற ஊரில் நடந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் கழக சாசனத்தின் உள்ளடக்கங்கள் முடிவுச் செய்யப்பட்டது.

1945-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் தேதி ஐம்பது நாடுகளின் பிரதிநிதிகள் இந்த சாசனத்தில் கையெழுத்திட்டனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இருந்த போலண்ட்டு நாடு பிறகு தன்னுடைய கையெழுத்தை இட்டதின் மூலமாக அவற்றின் எண்ணிக்கை 51-ஆயிற்று.

1945-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் நாள் ஐக்கியநாடுகள் கழகம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. இந்த அடிப்படையில் ஐக்கிய நாடுகள் கழக தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24-ம் தேதி எல்லா நாடுகளாலும் கடைபிடிக்கப்படுகிறது.

1945-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற யால்தா (Yalta) மாநாட்டில் ஐக்கிய நாடுகள் கழக அமைப்புக்கான முடிவும் அக்கழக சாசனத்தில் சேர்க்கப்படவேண்டிய அம்சங்களும் சர்ச்சில், ரூஸ்வெல்த் மற்றும் ஸ்டாலின் ஆகியத் தலைவர்களால் முதன்முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதற்கு சான்பிரான்சிஸ்கோ மாநாடு இறுதி வடிவம் கொடுத்து மேலே சொல்லப்பட்டப்படி ஐக்கிய நாடுகள் கழகம் செயலாற்றத் தொடங்கியது.

ஐக்கிய நாடுகள் கழக பேரவை 1948-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதியன்று உலக மனித உரிமைகள் பிரகடனத்தை அறிவித்தது.

 1. விதி 1- அப்பிரகடனத்தின் விதி 2-ன்படி மக்கள் அனைவரும் பிறப்பினால் சமமானோர்கள். அவர்களுக்கு மரியாதையும் உரிமைகளும் சமஅளவில் உண்டு. அவர்கள் அனைவரும் அவர்கள் மனசாட்சிப்படி நடந்துகொண்டு மற்றோர்களை சகோதரத்துவ அன்போடு நடத்த வேண்டும்.
 2. விதி2-ன்படி எல்லா மக்களும் இனம், நிறம், மொழி, சமயம், அரசியல் மற்றும் கருத்துக்கள் அடிப்படையிலோ ஆண் பெண் என்ற அடிப்படையிலோ வித்தியாசம் இல்லாமல் எல்லா சுதந்திரங்களையும், உரிமைகளையும் பெற்றுள்ளார்கள் என்று கூறுகிறது.

வில்சனால் வற்புறுத்தப்பட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட உலக நாடுகள் கழகத்தின் கொள்கைகள் பெரும்பாலானவை ஐக்கிய நாடுகள் கழகத்தின் கொள்கைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஐக்கிய நாடுகள் கழக சாசனம் (UNO Charter)

ஐக்கிய நாடுகள் கழக சாசனம் அதில் அங்கம் வகிக்கும் நாடுகளுடைய உரிமைகள் அவை நிறைவேற்ற வேண்டிய கடமைகள் மற்றும் அக்கழகத்தின் உறுப்புகள் அதைப்பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைக்கிறது.

நோக்கங்கள்

ஐக்கிய நாடுகள் கழக சாசனத்தில் உலக அமைதி மற்றும் உலக நாடுகளின் பாதுகாப்பு முக்கியமான நோக்கங்களாக சொல்லப்பட்டிருக்கிறது.

 1. உலக நாடுகளுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துதல்
 2. பொருளாதார சமூக பண்பாடு மற்றும் மனிதாபிமான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் ஒத்துழைத்தல்
 3. சுதந்திரம் மற்றும் உரிமைகைளை மதித்து அவைகளுக்கு ஆதரவுத் தருதல்.
 4. மேற்கூறியவற்றை அடைவதற்கு வழிவகைகள் கண்டு அவை நிறைவேற கருவியாக இருத்தல்.

ஐக்கிய நாடுகள் கழகத்தில் ஆறு முக்கிய உறுப்புகள் உள்ளன.

அவை,

 1. பொதுப்பேரவை
 2. பாதுகாப்பு மன்றம்
 3. பொருளாதார மற்றும் சமுதாய மன்றம்
 4. தர்மகர்த்தா கழகம்
 5. உலக நீதிமன்றம்
 6. செயலகம்

இவைத் தவிர ஐக்கிய நாடுகள் கழகத்தைச் சேர்ந்த பதினைந்து பிரதிநிதி மன்றங்களும், இவை எல்லாவற்றிற்கும் பொதுவான பல்வேறு இதர அமைப்புகளும் உலகெங்கும் இருக்கின்றன. இவைகளுடைய நோக்கங்களும் திட்டங்களும் உலகளாவியவை.

ஐக்கிய நாடுகள் கழக குடும்பம்

மேற்க்கூறப்பட்ட அமைப்புகளோடு குழந்தைகள் நலநிதிக் கழகம், முன்னேற்ற திட்ட குழு இன்னும் சிறப்புமிக்க இதர பிரதிநிதி மன்றங்கள் பல உள்ளன. இவையெல்லாம் உலக நாடுகளில் சமுதாய முன்னேற்றம் பொருளாதார வளர்ச்சி மற்றும் தேவைப்படும் உதவிகள் சீர்த்திருத்தங்கள் ஆகியவற்றிற்கு தகுந்த ஆலோசனைகள் வழங்குவதோடு அவற்றிற்கு பொருளாதார உதவிகளையும் செய்து வருகின்றன.

ஐக்கிய நாடுகள் கழக பொதுப் பேரவை

இப்பேரவை ஐக்கிய நாடுகள் கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதாரமாக இருக்கிறது. இதில் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரே ஒரு வாக்கு மட்டும் தரப்படுகிறது. அமைதி, பாதுகாப்பு, புது உறுப்பினர்களை அனுமதித்தல் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றிய முடிவுகளை பேரவை எடுக்கிறது.

பொதுப் பேரவையின் குழுக்கள்

பேரவையில் குழுக்களின் எண்ணிக்கை ஆறு.

முதல் குழு, ஆயுத ஒழிப்பு மற்றும் உலக நாடுகளின் பாதுகாப்புப் பற்றியது. இரண்டாவது குழு, பொருளாதார மற்றும் நிதி சம்பந்தப்பட்டது. மூன்றாவது சமூக மனிதாபிமான மற்றும் பண்பாடுப் பற்றியக் குழு. நான்காவது, காலனி ஒழிப்பு மற்றும் சிறப்பு அரசியல் நிலை. ஐந்தாவது நிர்வாகம் மற்றும் வரவுச் செலவுத் திட்டம் பற்றிய குழு. ஆறாவது, சட்டம், நீதி பற்றிய குழு. குறிப்பிட்டச் சில பிரச்சினைகள் குழுக்களின் முழுக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு கூட்டம் முடிவில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. குழுக் கூட்டங்களில் முடிவுகள் சாதாரண பெரும்பான்மை அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன. இவ்வாறு குழுக்களால் எடுக்கப்படும் முடிவுகள் பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்பப்படுகின்றன. பொதுப் பேரவையில் கலந்து கொண்டுள்ள பல்வேறு அரசாங்கங்களின் பிரதிநிதிகள் சம்மந்தப்பட்ட பொருள்கள் மற்றும் பிரச்சினைகள் பற்றிய கருத்துக்களையும் அவற்றின் நிறைவுகளையும், குறைகளையும் எடுத்துரைக்கின்றனர்.

பேரவையில் விவாதங்கள், எடுத்துக் கொள்ளப்பட்டப் பொருள்களின் தராதர அடிப்படையில் நடைப் பெறுகின்றன. விவாத முடிவில் வாக்கெடுக்கப்பட்டு பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றப்படுகின்றன. இவ்வாறு பொதுப் பேரவையால் ஏற்றுக் கொள்ளப்படும் தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் கழகத்தின் பணிகளுக்கு ஆதாரமாகும்.

மேல்சொல்லப்பட்டவாறு எடுக்கப்பட்ட முடிவுகள் கீழே தரப்படும் முறைகளின் அடிப்படையில் நடைமுறைப் படுத்தப்படுகின்றன.

ஆயுத ஒழிப்பு அமைதி காத்தல், வளர்ச்சி மற்றும் மனித உரிமைகள் பற்றி பொதுப் பேரவையால் நியமிக்கப்படும் குழுக்கள் மற்றும் இதர அமைப்புகள் இவற்றைப் பற்றி விவாதித்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

ஐக்கிய நாடுகள் கழகத்தின் அமைப்பு

 1. பொதுச் செயலாளர் செயலகம்
 2. பாதுகாப்பு சபை
 3. பொதுச் சபை
 4. உறுப்பு நாடுகள்
 5. பொறுப்பாண்மை நீதிமன்றம்
 6. பன்னாட்டு நீதிபதிகள்

சில சமயங்களில் பொதுப் பேரவையால் அழைக்கப்படும் உலக மாநாடுகளிலும் இவை விவாதிக்கப்பட்டு நிறைவேற்ற நடவடிக்ககைள் எடுக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் கழக பொதுச் செயலர் மற்றும் செயலகம் அந்த செயலகத்தில் பணி புரியும் பல நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் போன்றவர்களாலும் நடைமுறைப் படுத்தப்படுகின்றன.

பணிகளும் அதிகாரங்களும்

பொதுப்பேரவை

உலக அமைதி காத்தல், உலக நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆயுதங்கள், மற்றும் போர்க்கருவிகள் பற்றி தீர்மானிக்கப்பட வேண்டிய கொள்கைகள் அவற்றை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி ஆலோசித்து முடிவெடுத்தல். ஐக்கிய நாடுகள் கழக நிறுவனங்களின் பணிகள் மற்றும் அதிகாரங்கள் பாதிக்கப்படும் போது அதைப் பற்றி ஆலோசித்து முடிவெடுத்தல்.

பொதுப் பேரவையின் பணிகளும் அதிகாரங்களும்

 1. உலக அரசியல் நடப்புகள், வளர்ச்சி, பன்னாட்டு சட்டம், மனித உரிமைகள், மனித சுதந்திரம், மற்றும் பொருளாதார, சமூக, கல்வி, சுகாதாரம் மற்றும் பன்பாட்டுத் துறைகளில் எடுக்கப்படவேண்டிய முடிவுகள் பற்றி ஆய்வு செய்தல்.
 2. நாடுகளுக்கு இடையே ஏற்படும் சச்சரவுகளை அமைதியான முறையில் தீர்த்து வைக்கக் கூடிய பரிந்துரைகள் பற்றி முடிவெடுத்தல்.
 3. பாதுகாப்பு மன்றம் மற்றும் சமூக பொருளாதார மன்றம் ஆகியவற்றிற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது.
 4. பன்னாட்டு நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை தேர்ந்தெடுத்தல்
 5. ஐக்கிய நாடுகள் கழக பொதுச் செயலரை தேர்ந்தெடுத்து நியமித்தல்.

பொதுப்பேரவையின் வருடாந்திர கூட்டங்கள் செப்டம்பர் மாதத்தில் தொடங்குகின்றன. ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்ற கூட்டத்திற்கானத் தலைவர் அப்போதே தேர்ந்தெடுக்கப்படுவார். இருபத்தொரு துணைத் தலைவர்கள், முக்கியக் குழுக்களின் தலைவர்கள் எல்லோரும் கூட்டத் தொடக்கத்திலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பூகோள ரீதியாக ஆப்ரிக்கா, ஆசியா, மேற்கு ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, கரிபியன் மற்றும் மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் இப்பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஆண்டு தோறும் நடைபெறுகின்ற முறைப்படியான கூட்டங்கள் தவிர தனிக்கூட்டங்களும் கூட்டப்படலாம். இக்கூட்டங்கள் பொதுப்பேரவை உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் அல்லது பாதுகாப்பு மன்ற உறுப்பினரில் யாராவது ஒருவர் கேட்டுக் கொள்ளும் பொழுது கூட்டப்படுகின்றன. வருடாந்திரக் கூட்டங்கள் கூடும்போது பொதுப்பேரவையில் பொதுவான விவாதங்கள் நடைபெறுகின்றன. இத்தகைய கூட்டங்களில் உறுப்புநாடுகளின் தலைவர்கள் கலந்துக் கொண்டு உலக நிலவரம், உலக அரசியல் இவை பற்றிய பிரச்சனைகளை அவர்களுடைய உரைகளில் குறிப்பிட்டு பேசுவது நடைமுறையில் இருந்து வருகிறது.

பாதுகாப்புச் சபை

பாதுகாப்புச் சபையின் தலையாயப் பொறுப்பு பன்னாட்டு அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதாகும். அது அதனுடைய பணிகளை தொடர்ந்து செய்வதற்கு வசதியாக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள்.

எப்பொழுதெல்லாம் அமைதிக்கு பங்கம் விளைகிறதோ, அப்பொழுதெல்லாம் பாதுகாப்புச்சபை உடனடியாக கூடி தனது பரிந்துரைகளை போரில் ஈடுபட்டுள்ள நாடுகளை அமைதியான முறையில் ஒப்பந்தம் ஏற்படுத்த முனையும். பல விஷயங்களில், பாதுகாப்புச்சபை நேரடியாகவே தனது சோதனை செய்யவும், சமாதானப்படுத்தவும் விழையலாம். பாதுகாப்புச்சபை சிறப்பு தூதுவர்களையும், பிரதிநிதிகளையும் அல்லது பொதுச் செயலாளரை நியமிக்க பணிக்கலாம். மேலும் பாதுகாப்புச்சபை அமைதியான முறையில் போரை முடிவுக்கு கொண்டுவரலாம். எப்பொழுதெல்லாம் நாடுகளுக்கிடையேயான பிணக்குகள் போருக்கு இட்டு செல்கிறதோ அப்பொழுதெல்லாம் பாதுகாப்புச்சபையின் முழுமுதன் நோக்கம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதாகும்.

பல நேரங்கள் பாதுகாப்புச்சபை போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்த பாடுபட்டு போட்டி நாடுகளுக்கிடையே பிணக்குகளை தீர்த்து வைக்கிறது. பாதுகாப்புச்சபையே ஐ.நா அமைதிப்படையை அனுப்பி அமைதியான முறையில் போரை தீர்த்து வைக்க உதவுகிறது.

பாதுகாப்புச்சபை அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்ற நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கவும், கூட்டாக இராணுவ நடவடிக்கையும் மேற்கொள்ளலாம். ஐநாவின் எந்த உறுப்பு நாடு ஏதேனும் பாதுகாப்புச்சபையின் நடவடிக்கைக்கு எதிராவோ, பணிய மறுக்கவோ செய்தால் அவ்வுறுப்பு நாட்டின் உரிமைகளையும் சலுகைகளையும் ஐக்கிய நாடுகள் கழக பொதுச் சபையிலிருந்து நீக்கலாம். பாதுகாப்புச்சபை ஐ.நா வின் உறுப்பு நாடுகள் ஐ.நா வின் சாசனத்தை மதிக்காமல் இருந்தால் ஐநா உறுப்பு நாட்டிற்கான பிரதிநிதித்துவத்தை நீக்கலாம். பாதுகாப்புச்சபையின் உறுப்பினரல்லாத ஐக்கிய நாடுகளின் சபையின் உறுப்பு நாட்டை பாதுகாப்புச்சபையின் விவாதங்களில் பங்கேற்க அழைக்கலாம். ஆனால் அந்நாட்டிற்கு வாக்களிக்கும் உரிமையில்லை. மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளிடையேயும், உறுப்பு நாடுகள் அல்லாத நாடுகளுக்கிடையே பிணக்குகளை தீர்த்து வைக்க உதவுகிறது. அந்நாடுகளையும் விவாதங்களுக்கு அழைக்கலாம்.

பாதுகாப்புச்சபையின் தலைவர் ஆங்கில எழுத்து முறையில் மாதம் ஒரு முறை சுழற்சி முறையில் உறுப்பு நாடுகளுக்கிடையே தேர்ந்தெடுக்கப்படுகின்றார். பாதுகாப்பு சபையில் 15 உறுப்பு நாடுகள் உள்ளன என ஏற்கனவே பார்த்தோம். ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் தவிர 10 நிரந்திரமில்லாத உறுப்பு நாடுகள் பொதுச் சபையின் மூலம் இரண்டாண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

பாதுகாப்புச்சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள்

 1. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
 2. பிரான்ஸ்
 3. ரஷ்யா
 4. ஐக்கிய இங்கிலாந்து
 5. சீனா

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு வாக்கு என்ற முறையில் முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு 9 வாக்குகள் தேவைப்படுகின்றன. அவ் 9 வாக்குகளில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளின் வாக்குக் கட்டாயம் தேவை. தீர்மானம் ஒன்றை ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளும் ஏற்றுக் கொள்ளும் விதி "வல்லரசு ஒற்றுமை’ என்று அழைக்கப்படுகிறது.

இவற்றில் ஒன்று ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அத்தீர்மானம் நிறைவேறாது. இம்முறை தடுப்பாணை (Veto) அதிகாரம் எனப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பு நாடுகளும் பாதுகாப்புச்சபையில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். பாதுகாப்புச்சபையின் முடிவுகளை உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்வது கட்டாயமாகும்.

பொருளாதார மற்றும் சமூக கழகம்

ஐக்கிய நாடுகள் கழகத்தைச் சேர்ந்த 14 ஏஜென்சிகளின் அலுவல்களை இது ஒருங்கிணைக்கிறது. மேலும் பத்து பணிசார்ந்த கழகங்கள் மற்றும் ஐந்து பிரதேச கழகங்கள் மற்றும் பதினொன்று ஐக்கிய நாடுகள் கழக நிதி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட திட்டங்கள் கொள்கைகள் ஆகியவைகளை இக்கழகம் பரிசீலித்து ஐக்கிய நாடுகள் கழகத்திற்கு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரைக்கிறது. இக்கழகம் வேலைவாய்ப்பு பொருளாதார வளர்ச்சி சமூக முன்னேற்றம் ஆகிய துறைகளில் உயர் நிலையை எட்டுவதற்கு உறுப்பு நாடுகளுக்கு உதவுகிறது. இந்த பணிக்காக கிட்டத்தட்ட 2100-க்கும் அதிகமான கல்வியாளர்கள், வர்த்தகப் பிரதிநிதிகள் மற்றும் இதர அமைப்புக்களை இது கலந்து ஆலோசிக்கிறது. இக்கழகம் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தைக் கூட்டி முடிவெடுப்பதற்கு தேவையாக உள்ள ஆலோசனைகளை வழங்குகிறது.

தர்மகர்த்தாக் கழகம் :

1994-ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் இக்கழகம் செயல்படவில்லை. கடைசியாக இருந்த தர்மகர்த்தா நாடான பலோ 1994-ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி சுதந்திரம் பெற்றது. இக்கழகம் செய்ய வேண்டிய கடமை அத்துடன் முடிந்துப் போனது.

இக்கழகம் சுதந்திரம் பெறாமல் இருந்த நாடுகளுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை நோக்கமாகக் கொண்டிருந்தது. முதலாம் உலகப்போருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் பின்னால் சுமார் 100 நாடுகள் சுதந்திரம் பெற வேண்டியவைகளாக இருந்தன. இவற்றில் பல அவைகளாகவே விடுதலைப் பெற்றுவிட்டன.

விடுதலைப் பெறாமல் இருந்த இதர நாடுகளுக்கு சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து விடுதலைப் பெற்றுத் தரும் பணியை இது மேற்கொண்டிருக்கிறது. இப்பணியை சம்மந்தப்பட்ட நாடுகளிலிருந்து விண்ணப்பங்களைப் பெற்று அவற்றின் மேல் நடவடிக்கை எடுத்து விடுதலைப் பெற்றுத் தரும் பணியை இது செய்தது.

உலக நீதிமன்றம்

ஐக்கிய நாடுகள் கழகத்தில் இது ஒரு முக்கியமான அங்கமாகும். நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டில் தி.ஹேக் என்ற ஊரில் “அமைதி அரண்மனை” என்ற கட்டிடத்தில் துவக்கப்பட்டு 1946-ஆம் ஆண்டு பணியாற்றத் தொடங்கியது. இது உலகநாடுகள் கழகத்தால் ஏற்படுத்தப்பட்ட உலக நீதிமன்றத்தின் மறுபதிப்பாகும்.

இந்நீதிமன்றத்தின் பணிகள்

இந்த நீதிமன்றம் இரு வகையானப் பணிகளைச் செய்கிறது. முதலாவது ஐக்கிய நாடுகள் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளுக்கிடையே ஏற்படும் சட்டம் மற்றும் நியாய அடிப்படையில் ஏற்படும் தாவாக்களில் பன்னாட்டுச் சட்ட அடிப்படையில் அவைகளைத் தீர்த்து வைக்கிறது.

இரண்டாவதாக ஐக்கிய நாடுகள் கழகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறுவனங்களுக்கிடையே சட்ட சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படும்போது அவைகள் பற்றி ஆலோசனை வழங்குகிறது.

நீதிமன்றத்தின் அமைப்பு

இந்த நீதிமன்றத்தில் மொத்தம் 10 நீதிபதிகள் இருக்கின்றார்கள். இவர்களின் பதவிக்காலம் 9 ஆண்டுகள் ஆகும். மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகள் மூன்றாண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பதவிக்காலம் முடிந்தாலும் அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம். இந்த நீதிபதிகள் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்களோ அந்த நாட்டில், உயர் நிலையில் உள்ள நீதிமன்றத்தில் நியமிக்கப்படுவதற்கு என்னத் தகுதிகள் வேண்டுமோ அந்தத் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் அவர்கள் சேர்ந்த நாட்டினுடைய பிரதிநிதிகளாகக் கருதப்படமாட்டார்கள்.

இந்நீதிமன்றம் உலகத்தில் நடைமுறையில் இருந்துவரும் பண்பாடு, மற்றும் நீதி வழங்கும் முறைகளை பிரதிபலிப்பதாக செயல்பட வேண்டும். இந்த நீதிபதிகள் ஐக்கிய நாடுகள் கழக பொதுப் பேரவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதனை பாதுகாப்புச் சபையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஐக்கிய நாடுகள் கழக செயலகம்

ஐக்கிய நாடுகள் கழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் அலுவலகங்களில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அலுவலர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் ஐக்கிய நாடுகள் கழகத்தில் கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் பணிகளை செய்கிறார்கள்.

இவர்களுக்கெல்லாம் தலைவராக பொதுப்பேரவையால் பரிந்துரைக்கப்பட்டு பாதுகாப்புச் சபையால் நியமிக்கப்படுகின்ற பொதுச் செயலாளர் தலைமை வகிக்கிறார். இவருடைய பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இவர் மீண்டும் இந்த பதவிக்கு நியமிக்கப்படலாம். செயலகத்தின் பணிகள் பலதரப்பட்டவை. இவற்றில் முக்கியமானவை உலக அமைதிக்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவது அரசுகளுக்கிடையே ஏற்படும் சச்சரவுகளில் சமரசம் செய்வது சமூக பொருளாதாரதுறைகளில் ஏற்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் தேவையான திட்டங்களை வகுத்து செயல்படுத்துதல், மற்றும் மனித உரிமைகள் மீறப்படாமல் பாதுகாத்தல் போன்றவையாகும்.

இச் செயலகம் ஐக்கிய நாடுகள் கழகம் என்னென்னப் பணிகளையும் கடமைகளையும் செய்து வருகிறது என்பதை தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாக அவ்வப்போது உலக நாடுகளுக்குத் தெரிவிப்பது, உலகப் பிரச்சனைகள் பற்றி மாநாடுகள் நடத்துவது, மற்றும் ஐக்கிய நாடுகள் கழகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வமான மொழிகளுக்கு மொழி பெயர்ப்புகளை இதர மொழிகளில் வெளியிடுவது ஆகியப்பல பணிகளைச் செய்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் கழகத்தின் தலைமையகம் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில் இயங்குகிறது. இதனுடைய கிளைகள் பல நாடுகளில் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை அடிஸ்அபாபா, பேங்காக், பேரூட், ஜெனிவா, நைரோபி, சாண்டியாகோ மற்றும் வியன்னா நகரங்களில் செயல்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் கழகத்தின் முக்கிய அமைப்புகள்

 1. ஐக்கிய நாடுகள் கழகத்தின் உணவு மற்றும் வேளாண்மை (FAO) கழகம்
 2. சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA), வியன்னா, ஆஸ்திரியா
 3. சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) மன்டிரியல்-கனடா,
 4. சர்வதேச ஆட்சிப் பணி ஆணையம், (ICSC) நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
 5. பன்னாட்டு நீதிமன்றம் (ICJ) திஹேக், நெதர்லாந்து.
 6. பன்னாட்டு முன்னேற்ற அமைப்பு (IDA) வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்கா,
 7. (உலகவங்கி குழு) பன்னாட்டு நிதி
 8. வேளாண்மை வளர்ச்சி வங்கி (IFDA) - ரோம், இத்தாலி.
 9. உலக தொழிலாளர்கள் அமைப்பு (ILO) ஜெனிவா, சுவிட்சர்லாந்து.
 10. பன்னாட்டு கடல்வாழ் அமைப்பு (IMO) லண்டன், இங்கிலாந்து.
 11. உலக நிதி நிறுவனம் (IMF) வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்கா
 12. சர்வதேச பெண்கள் முன்னேற்றம், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அமைப்பு (INSTRAW), சாந்தே டோமின்கே
 13. பன்னாட்டு தொலை தொடர்பு மையம். (TO) ஜெனிவா, சுவிட்சர்லாந்து.
 14. உலக வர்த்தகமையம் (ITC) – ஜெனிவா, சுவிட்சர்லாந்து
 15. ஐக்கிய நாடுகளின் கூட்டு செயல்திட்டம்-HIV/AIDS (UNAIDS) ஜெனிவா, சுவிட்சர்லாந்து.
 16. செய்தி சாதனமும் அமைதி நிறுவனமும் (University of Peace) பாரிஸ், பிரான்ஸ்.
 17. ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நலநிதி (UNICEF) நியூயார்க், ஐக்கிய அமெரிக்க நாடுகள்.
 18. ஐக்கிய நாடுகளின் வர்த்தக முன்னேற்ற மாநாடு - (UNCTAO) ஜெனிவா, சுவிட்சர்லாந்து.
 19. ஐக்கிய நாடுகளின் சர்வதேச மருந்து கட்டுப்பாடு (Drug Control) திட்டம் (UNDCP) வியன்னா, ஆஸ்திரியா.
 20. ஐக்கிய நாடுகளின் பெண்கள் நல முன்னேற்ற நிதி (UNIFEM) - நியூயார்க், ஐக்கிய அமெரிக்க நாடு.
 21. ஐக்கிய நாடுகளின் முன்னேற்ற திட்டங்கள் (UNDP) நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடு.
 22. ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) பாரிஸ், பிரான்ஸ்
 23. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டப்பணிகள் (UNEP) நைரோபி - கென்யா.
 24. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம், (OHCHR) ஜெனிவா, சுவிட்சர்லாந்து.
 25. ஐக்கிய நாடுகளின் தொழில் துறை முன்னேற்ற அமைப்பு (UNIDO) வியன்னா, ஆஸ்திரியா.
 26. ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதி - (UNFPA) நியூயார்க், ஐக்கிய அமெரிக்க நாடு.
 27. ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம் (UNU) டோக்கியோ, ஜப்பான்.
 28. ஐக்கிய நாடுகள் தொண்டர்கள் (UNU) பான், ஜெர்மனி
 29. பன்னாட்டு அஞ்சல் கழகம் (UPU) பெர்ன், சுவிட்சர்லாந்து.
 30. பெண்கள் காப்பகம்-நியூயார்க், அமெரிக்க ஐக்கிய நாடு
 31. உலகவங்கி குழுமம் - வாஷிங்டன், அமெரிக்க ஐக்கிய நாடு
 32. உலக உணவு திட்டம் (WFD) ரோம், இத்தாலி
 33. உலக சுகாதார நிறுவனம் (WHO) ஜெனிவா, சுவிட்சர்லாந்து.
 34. உலக அறிவுசார் பொருள் கழகம் (WIPO) ஜெனிவா, சுவிட்சர்லாந்து.
 35. உலக வானிலை அமைப்பு (WMO) ஜெனிவா, சுவிட்சர்லாந்து
 36. உலக சுற்றுலா அமைப்பு - மேட்ரைட் - ஸ்பெயின்
 37. உலக வர்த்தக மையம் - (WTO) ஜெனிவா, சுவிட்சர்லாந்து.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு: (SAARC)

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒத்துழைப்புக் கழகம் துவங்க 1980-இல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 1981-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையின் தலைநகர் கொழும்புவில் முதல்மாநாடு நடைபெற்றது. இதில் ஏழுநாடுகளைச் சேர்ந்த வெளிநாடு அலவல்களை கவனிக்கும் செயலர்கள் கலந்துக் கொண்டார்கள். இவர்கள் பிறகு ஒரு குழுவாக அமைந்து சார்க்கில் அங்கம் வகிக்கும் நாடுகளின் நோக்கங்கள் மற்றும் பணிகளை முடிவுச் செய்தனர். அவற்றை இந்த நாடுகளைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் ஏற்றுக் கொண்ட பிறகு நடைமுறைக்கு வந்தன. கூட்டுறவு, வேளாண்மை, ஊரக முன்னேற்றம், செய்தித் தொடர்பு, வானிலை, நல்வாழ்வு மற்றும் மக்கள் தொகை பற்றியத் துறைகளில் இந்த நாடுகள் எல்லாம் கூடி காண வேண்டிய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை முடிவுச் செய்து நடைமுறைப்படுத்த ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வமைப்பின் உறுப்பினர்கள்: பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் பூரீலங்கா ஆகியவை அங்கம் வகிக்கின்றன.

நோக்கம்

இக்கூட்டமைப்பிலுள்ள மக்களுடைய தன்னம்பிக்கை, ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இதர வட்டார அமைப்புகள், உலக அமைப்புகளோடு தொடர்பு வைத்துக்கொண்டு தேவையான உதவிகளை பெற்று வளர்ச்சிக்கு ஒன்றுபட்டு பணியாற்றுதல்.

வெளியுறவு அமைச்சர்களின் நிலைக் குழு

இந்நிலைக்குழுவில் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் அங்கம் வகிக்கிறார்கள். தேவைக்குத் தகுந்தார்ப் போல இக்குழு அதன் கூட்டங்களை நடத்தலாம். இருப்பினும் வருடத்தில் இரண்டு முறைகள் தான் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இக்குழுவினுடைய பணிகள் நிறைவேற்றத்திற்கு தேவையான உபக்குழுக்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுகின்றன. இக்குழுவுக்கு செயலகம் ஒன்று இருக்கிறது. இதனுடைய நிதி ஆதாரம், பணிகள், கடமைகள் மற்றும் இதர அம்சங்கள் அதனால் ஏற்படுத்தப்படும் திட்டக்குழுவால் முடிவுச் செய்யயப்படுகிறது.

செயலகம்

இதனுடைய செயலகத்தில் ஆறு நெறியாளர்கள் மற்றும் பொதுப் பணியாளர்கள் இருக்கிறார்கள். இதனுடைய தலைமைச் செயலர் உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் குழுவால் இரண்டு ஆண்டு பதவிக் காலத்திற்கு நியமிக்கப்படுகிறார். இச் செயலகம் உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை, மற்றும் கூட்டுறவை வளர்க்க அதனால் இயன்ற அனைத்தையும் சிறப்புடன் செய்து வருகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு : (ASEAN)

1967-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ஆம் நாள் இவ்வமைப்பு பேங்காக் நகரில் தோற்றுவிக்கப்பட்டது. இதில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் தொடக்கத்தில் சேர்ந்தன. பிறகு 1999-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ஆம் நாள் கம்போடியாவும் அதில் சேர்ந்துக் கொண்டது. தற்போது இந்தியாவும் அதனுடைய தோழமை நாடாக இருந்து வருகிறது.

நோக்கங்கள் :

இவ்வமைப்பின் நோக்கங்கள் வருமாறு:

 • தென் கிழக்கு ஆசிய நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி சமுதாய மேம்பாடு மற்றும் பண்பாட்டு வளர்ச்சி ஆகியவற்றை அறிந்து முன்னேற்றம் காண்பதற்கான நடவடிக்கைகளை அமைதியான முறையில் செய்வது.
 • 2-வது ஐக்கிய நாடுகள் கழக கொள்கைகள் அதன் முடிவுகள் வழிக்காட்டுதல்களை ஆதாரமாகக் கொண்டு உறுப்பு நாடுகளில் சட்டம் ஒழுங்கு மற்றும் நீதி ஆகியவற்றைப் பின்பற்றி இந்த நாடுகளின் உறுதியான நிலை மற்றும் அமைதி ஆகியவற்றிக்காகப் பாடுபடுதல்.

அமைப்பு:

இவ்வமைப்பின் கொள்கை முடிவிற்கு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அல்லது அரசாங்கத் தலைவர்கள் பொறுப்பேற்கும் குழு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அல்லாமலும் வெளியுறவு அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று இதற்கு உதவியாக இருந்து அவ்வப்போது தகுந்த ஆலோசனைகளை வழங்கிவருகிறது. இக்குழுக்களின் கூட்டம் ஆண்டுக்கொரு முறை நடைப்பெறுகிறது. தேவைப்படும் பொழுது கூட்டங்களை நடத்தவும் வகைச் செய்யப்பட்டிருக்கிறது.

இக்கூட்டங்களில் வேளாண்மை, காடுகள், பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், நிதி ஆதாரங்கள், செய்தித் தொடர்பு, முதலீடு செய்தல், தொழிலாளர் நலம், ஏழ்மை ஒழிப்பு, அறிவியல் குற்றங்கள், சுற்றுலா, இளைஞர்நலன் மற்றும் முன்னேற்றம் ஆகிய பொருள்கள் பற்றி விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படுகின்றன.

இவ்வமைப்பிற்கு அமைச்சர் தகுதியுடைய பொதுச் செயலர் ஒருவர் நியமிக்கப்படுகிறார். இவர் ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பார். இவருக்கு உதவியாக இதர அலுவலர்கள் திறந்த முறை தேர்வுக் கொள்கை அடிப்படையில் உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வமைப்புக்கு உதவியாக பிரதிநிதிக்குழுக்கள் பலவும் பல நாடுகளில் தகவல்கள் சேகரித்து வேண்டிய உதவிகளை அவ்வப்போது செய்கின்றன.

அரசியல் கூட்டுறவு

சகிப்புத்தன்மை அடிப்படையில் பிரதேச ஒற்றுமை உறுதிப்பாடு மற்றும் முன்னேற்றம் ஆகிய துறைகளில் இந்நாடுகள் அரசியல் முடிவுகளை எடுக்கின்றன. இவைகளை நிறைவேற்றும்போது தன்னம்பிக்கை, தற்காப்பு, கூட்டுறவு, சகோதரத்துவம் மற்றும் ஒருவரை ஒருவர் மதித்து நடக்கும் கொள்கைகள் அடிப்படையில் அரசியல் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

இதனால் ஏறத்தாழ 30 ஆண்டுக்காலமாக இந்நாடுகளில் ஒற்றுமை நிலவுகிறது. எதிர்ப்பு அநேகமாக இல்லை.

பொருளாதார மற்றும் பணிசார் ஒத்துழைப்பு

இக்கூட்டமைப்பு தோன்றிய போது உறுப்பு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மற்றும் வியாபாரம் சொல்லும்படியாக இல்லை. ஆனால் 1967 முதல் 1970 வரை அதற்கும் பிறகு 1977 வரையிலான காலக் கட்டங்களில் இந்த நாடுகள் இத்துறைகளில் பல சலுகைகளை அளித்தன. அதனால் வர்த்தகம் நிதி மற்றும் பொருளாதாரத் துறைகளில் முதலீடு செய்யும் துறையில் தடைகள் நீக்கப்பட்டன. இதனால் நெடுஞ்சாலைகள், இரயில்வே அமைப்புகள், முக்கியமானத் துறைமுகங்கள் மற்றும் கால்வாய், கடல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக எல்லாத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க் மாற்றங்களும் வளர்ச்சிகளும் ஏற்பட்டதனால் மக்களினுடைய நலன் பாதுகாக்கப்படுகிறது.

வெளியுறவுகள்

2020-ஆம் ஆணடுக்குள் விரைந்து முன்னேற்றம் காணவேண்டும் என்ற குறிக்கோளோடு இக்கூட்டமைப்பு நாடுகள் இதர உலக நாடுகளுடன் தங்களுடைய சாதனைகள், வளர்ச்சிகள், முன்னேற்றம் ஆகியவற்றை பகிர்ந்துக் கொள்கின்றன. இந்த அடிப்படையில் 1992-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த நாடுகளின் உச்சி மாநாட்டில் உலகில் உள்ள இதர நாடுகளோடு தொடர்ந்து நல்லுறவுகளை ஏற்படுத்திக் கொண்டு முன்னேற்றம் காணவேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. எனவே ஆஸ்திரேலியா, கனடா, சீனா, நியூசிலாந்து கொரியா போன்ற நாடுகளோடு நல்லுறவுகள் ஏற்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அணிசேரா இயக்கம் (NAM)

அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் நாடுகளுக்கிடையே 1949-89 ஆகிய காலக்கட்டத்தில் பனிப்போர் நடந்த போது அணிசேரா இயக்கம் தோன்றியது. இவ்வியக்கம் ஆரம்பத்தில் ஏழை நாடுகளுக்காக என்று ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் பிறகு எண்ணெய் வளம் மிக்க நாடுகளும் இதன் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

1995-ஆம் ஆண்டு இதன் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 113. இதனில் 85 எண்ணெய் உற்பத்திச் செய்யும் நாடுகள் இருந்தன. உலகப் பொருளாதார அடிப்படைக்கு மேல் வருமானமுள்ள நாடுகள் ஏழு மட்டுமே இருந்தன. ஆனால் அணிசேரா நாடுகளினுடைய கூட்டு மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேலாகும். அணிசேரா இயக்கம் என்பது கொள்கை அல்ல. ஆனால் ஒரு நடைமுறை. இந்த இயக்கம் எந்த அணியையும் சேர்ந்திராமல் நடுநிலை வகித்தது.

துவக்கம் :

சில சமயங்களில் பொதுப் பேரவையால் அழைக்கப்படும் உலக மாநாடுகளிலும் இவை விவாதிக்கப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் கழக பொதுச் செயலர் மற்றும் செயலகம் அந்த செயலகத்தில் பணிபுரியும் பல நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் போன்றவர்களாலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

உலக நாடுகள் அமெரிக்காவையும் சோவியத் யூனியனையும் தலைமையாகக் கொண்ட தனித்தனி அணிகளாக பிளவுபட்டிருந்தன. இருப்பினும் 1920-இல் ‘மூன்றாம் அணி ஒன்று அணிசேரா இயக்கமாக தோன்றியது. இந்த இயக்கம் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற நாடுகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்தோனேசியாவில் பாண்டுங் என்ற நகரில் 1955-இல் ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அணி சேரா நாடுகள் இயக்கம் ஆரம்பிக்க பூர்வாங்க முயற்சிகள் நடைபெற்றன.

இதில் இந்தியப் பிரதமர் பண்டித ஜவஹர்லால்நேரு, கானா நாட்டு பிரதமர் என்குரமா, எகிப்து நாட்டுத் தலைவர் அப்துல் நாசர், இந்தோனேசியா நாட்டுத் தலைவர் சுகர்ணோ மற்றும் யூகோஸ்லோவியா நாட்டுத் தலைவர் டிட்டோ ஆகியவர்கள் எல்லோரும் சேர்ந்து பெல்கிரேடு நகரில் நடைபெற்ற மாநாட்டில் இவ்வியக்கத்தை 1961-இல் ஏற்படுத்தினார்கள்.

பனிப்போரின்போது அணிசேரா இயக்கம்

பனிப்போர் நடைபெற்றக் காலத்தில் இவ்வணியைச் சார்ந்த நாடுகளை தங்களின் பக்கம் இழுக்க அமெரிக்காவும் சோவித் யூனியனும் பல முயற்சிகளை மேற்கொண்டன. அவற்றிலிருந்து தான் அஸ்வான் நதி அணைக்கட்டு கட்டுவதற்கு எகிப்து நாட்டிற்கு சோவியத் யூனியன் செய்த பொருளுதவியாகும். வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளைப் போல அணிசேரா நாடுகள் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. இதனால் வல்லரசுகள் அவைகளை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பொருளாதார மற்றும் இதர உதவிகளை செய்ய முன் வந்தன. இந்த இயக்கத்தில் சேர்ந்ததின் காரணமாக அணிசேரா நாடுகளின் பலம் மற்றும் மதிப்பு உயர்ந்தது.

ஐக்கிய நாடுகள் கழக பேரவையிலும் இதர அமைப்புகளிலும் அணிசேரா நாடுகள் பல சமயங்களில் ஒன்று சேர்ந்து செயலாற்றினார்கள். இருப்பினும் வல்லரசுகளின் ஆதிக்கத்தையும் அவர்களுடைய பலத்தையும் இவர்களால் சந்திக்க முடியவில்லை. இவ்வியக்கத்தில் ஆரம்பத்தில் 25 நாடுகளும் அதன்பிறகு 113 நாடுகளும் பார்வையாளர் தகுதியுடைய 17 நாடுகளும் 2000-ம் ஆவது ஆண்டில் அங்கம் பெற்றிருந்தன.

இவ்வியக்கத்தில் ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரிப்பியன், மால்டா போன்ற பகுதிகளைச் சேர்ந்த நாடுகள் சேர்ந்திருந்தன. யூகோஸ்லோவியா மட்டும் தான் ஐரோப்பாவைச் சார்ந்த நாடாகும். இவ்வியக்கம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அதன் கூட்டத்தை நடத்தியது.

பனிப்போர் முடிந்த பிறகு இவ்வியக்கம் தோற்றுவிக்கப்பட்ட முக்கியக் காரணி இல்லாமல் போயிற்று. இருப்பினும் ஏழ்மையை அகற்றுதல் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் அணுகுண்டு தயாரிப்பதை தடுத்தல் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தலை ஒழித்தல் ஆகிய நோக்கங்களை அடைவதற்காக இந்த இயக்கம் தொடர்ந்து இயக்குகிறது.

அணிசேரா இயக்கத்தின் தற்கால பொருத்தம்

பனிப்போர் முடிவிற்கு வந்துவிட்டாலும் தீவிரவாதம், புறக்கணித்தல், கொடூரத்தன்மை வாய்ந்த தேசீயம், பயங்கரவாதம், உலக அழிவிற்கு வழிவகுக்கும் ஆயுதக்குவிப்பு போன்ற சக்திகள் இன்றும் உலகை பயமுறுத்திக் கொண்டு இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் உலக மயமாக்குதலில் புதுப்புது பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவை எல்லாம் தற்கால உலகப்பொருளாதாரம், நாடுகளுக்கிடையேயான ஒற்றுமை ஆகியவற்றை பாதிக்கின்றன.

இவற்றை எதிர்கொள்வதற்கும் அவைகளால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கும் தற்கால உலகமைப்பில் அணிசேரா நாடுகள் பெரும் பங்காற்ற முடியும். (உ.ம்) முதலீட்டாளர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பன்னாட்டு வர்த்தக அமைப்புகள் இதர நாடுகளில் அவர்கள் மேற்க்கொண்டுள்ள வர்த்தகத்தில ஏற்படும் சட்டப்பிரச்சினைகள் மற்றும் உலகம் தழுவிய இயற்கை சூழல்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளிலும் உலக நாடுகளின் வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளிலும் பெரிய நாடுகளின் பாதிப்பு இல்லாமல் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

ஜி8 நாடுகளுடைய பாதிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து பொருளாதார துறையில் பின்தங்கிய நாடுகளுக்கு உதவி செய்ய முடியும்.

இவைகள்

 1. ஐக்கிய நாடுகள் கழகம் மற்றும் பாதுகாப்பு சபை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படாமல் இருத்தல்.
 2. எதேச்சதிகார போக்குகளை பின்பற்றி மற்ற நாடுகளை துன்புறுத்தும் அடாவடி நாடுகளின் போக்கு, மற்றும்
 3. மூன்றாவது உலக நாடுகளுடைய பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தை தடைப்படுத்தும் முயற்சிகள் ஆகிய துறைகளில் அணிசேரா நாடுகளின் இயக்கம் சிறந்த பணியாற்ற முடியும்.

மேலே கூறப்பட்ட துறைகளில் இந்தியா தகுந்த நடவடிக்கைகளை எடுத்து விரைவான முன்னேற்றம் காண்பதற்கு சிறந்த பணியாற்ற முடியும். அணிசேரா நாடுகளிடையே புதுஉத்வேகம் தற்போது காணப்படுவதால் இந்தியா, இந்த துறையில் முயற்சி மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும்.

குறிப்பாக பெரும் வல்லரசுகளின் போட்டியில்லாமல் ஒரே ஒரு வல்லரசு என்ற நிலையில் உலகம் இப்போது இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் அணிசேரா இயக்கம் முன்பைக் காட்டிலும் இன்னும் சிறப்பாக செயலாற்ற முடியும். அதற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது.

உலக அரசியலமைப்பின் பண்புகள்

இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் உலக அமைப்பின் பண்புகள் என கீழ்க்கண்டவற்றை குறிப்பிடலாம்.

கொள்கைப்பிடிப்பு:

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோஷலிசக் கொள்கைகள் மறைந்து மக்களாட்சி முறை சார்ந்த முதலாளித்துவ போக்கு தற்போது மேலோங்கி இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த மக்கள் தொடர்பு சாதனங்கள் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் அபகரிக்கும் போக்கு பொருளாதார சுரண்டல் ஆகிய பண்புகள் தொழிற்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது மேலோங்கி இருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது.

குறிக்கோள்கள்

ஜி.7 நாடுகள் அமைப்பு அவர்களுடைய நிதிநிறுவனங்கள், வளர்ந்துவரும் உலக வர்த்தகம் ஆகியவை இதர நாடுகளின் வளர்ச்சியில்பெரும் பங்கு வைக்கின்றன. இவையெல்லாம் சரியான முறையில் நடைபெறுவதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் ஜி.7 நாடுகள் எல்லா வகையிலும் பலம் பொருந்தியவை. இவைகளின் ஆதிக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல் பெரிய நோக்கமாகும்.

அதிகார விநியோகம்

இரு உலக ஆதிக்க சக்தி மறைந்த ஒரே உலகமென்ற யுத்தி மேலோங்கியிருக்கிறது. இதில் முன்னணியில் இருப்பது ஜி.7-நாடுகள். இந்த நாடுகள் அமெரிக்கா மற்றும் பன்னாட்டு நிதிநிறுவனம் ஆகியவற்றின் ஆதரவோடு மூன்றாவது உலகம் என்று சொல்லப்படுகின்ற முன்னேறிவரும் நாடுகளின் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த ஆதிக்கத்தின் தன்மையை பின்வருமாறு குறிப்பிடலாம்.

அ) பாதுகாப்பு - உலகம் முழுவதற்கும் தலைமை தாங்குவதற்கான ராணுவ வளர்ச்சியும் மற்றும் அதிகாரத்தையும் அமெரிக்காப் பெற்றுள்ளது.

ஆ) பண்பாடு - அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய கூட்டமைப்பின் பங்கு செய்து கொள்ளப்பட்ட குழுவின் அதிகாரம் மேலோங்கி இருக்கிறது.

இ) அரசியல்/இராஜதந்திரம் - வளர்ச்சி காணாத நாடுகளின் கட்டுப்படுத்தும் தன்மை இப்பொழுது குறைந்துவிட்டது. இருப்பினும் அந்தந்த பகுதிகளில் மூன்றாம் உலகத்தை சேர்ந்த நாடுகளுடைய முக்கியத்துவம் குறையாமல் அவ்வாறே இருக்கிறது.

இந்தியாவிற்கு சாதகமான சூழ்நிலைகள்

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் சேர்ந்த நாட்டிற்கு இப்போதுள்ள உலக நடப்பில் சாகதம் மற்றும் பாதகமான சூழ்நிலைகள் இருக்கின்றன. அவைகளில் இந்தியாவிற்கு நன்மை தரக்கூடிய சில கீழே தரப்பட்டு இருக்கின்றது.

அ) அமெரிக்காவோடு உள்ள உறவில் தற்போது பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியாவிற்கு சாதகமான சூழ்நிலைகள் இருக்கின்றன. ஏனெனில் இந்தியா, பரப்பளவிலும் மக்கட்தொகையிலும் பொருள் விற்பனைச் சந்தைதியிலும் மற்றும் இதர துறைகளிலும் மேலோங்கி நிற்கிறது. இதனால் ஜி.7-நாடுகள் அதிக அளவில் இந்தியாவிற்கு உதவி செய்ய விரும்பலாம்.

ஆ) இரு உலக பேரரசுகளுக்கிடையேயான போட்டிகள் தற்போது மறைந்து விட்டதனால் அமெரிக்காவோடு உள்ள இந்திய உறவு மேம்பட்டுக் காணப்படுகிறது.

இ) இந்தியா மற்றும் சீனா அரசுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் ரஷ்யாவினோடு உள்ள உறவுகளை பாதிக்காது என தோன்றுகிறது.

ஈ) தெற்காசிய நாடுகளில் இந்தியாவிற்குள்ள முக்கியத்துவம்

உ) ரஷ்யா மற்றும் இதர சோவியத் குடியரசுகளிலிருந்து நவீன ஆயுதங்களை செலவில்லாமல் பெற்று இந்தியாவினுடைய தொழிற்நுட்பத்தை வளர்த்துக்கொள்ளும் சூழ்நிலை.

ஊ) இதர நாடுகளில் முதலீடு மற்றும் உயர் தொழிற்நுட்ப பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

எ) உலகப்பொருளாதாரத்தில் இந்தியா தனக்கென சில பகுதிகளை தேர்ந்தெடுத்து அதனுடைய ஏற்றுமதிக்கு ஊக்கம் அளிக்க முடியும்.

ஏ) மூன்றாம் உலக நாடுகளில் வளர்ச்சியடைந்த நாடு என்ற அடிப்படையில் அவைகளுக்கு தலைமை ஏற்கும் தகுதியுடையது.

ஐ) இந்தியாவும், பிரேசிலும் ஒர் புதிய உலகத்தையும் அதற்கான சூழ்நிலையையும் வெற்றிகரமாக செயல்படுத்தக்கூடிய நிலையில் இருக்கின்றன.

இந்தியாவின் முன் உள்ள சவால்கள்

அ) ஐக்கிய நாடுகள் கழகத்தில் பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆக வேண்டிய கட்டாயம்.

ஆ) பொருளாதாரத் துறையில் இந்தியா வளர்ந்த நாடுகளோடு போட்டியிட வேண்டிய சூழ்நிலை. இவைகளை இந்தியா சமாளிக்க கூடிய வளர்ச்சி அடைகின்ற போது இப்பகுதியில் இந்தியாவின் ஆதிக்கம் மேலோங்கும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

2.93617021277
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top