பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

புதிய அரசியல் அறிவியல்

புதிய அரசியல் அறிவியல் - பொருள் மற்றும் முன் கருத்து படிவத்தின் தன்மை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

அரசு இயங்குகின்ற தன்மை பற்றி அறியும் இயல் அரசியல் அறிவியல் என்பதாகும். அரசாங்கத்தின் கட்டுமானம் மற்றும் அதன் இயக்கத்தை படிப்பதும் இதில் உள்ளடங்கியதாகும். அதனடிப்படையில் அரசியல் அறிஞர்கள் கீழ்க்கண்ட சமூக நிறுவனங்களை பற்றி படிக்க முற்படுகின்றனர்.

 1. கழகங்கள்
 2. கூட்டமைப்புகள்
 3. தேவாலயம்
 4. நிர்வாக அமைப்புகள்

ஜான் போதான் (1530 - 1596) என்ற பிரெஞ்சு தத்துவ ஞானி 'அரசியல் அறிவியல்’ என்ற பதத்தைப் பயன்படுத்தினார். முடிவு எடுப்பதில் அதிகார ஒதுக்கீடு மற்றும் அதிகார இடப்பெயர்வை பற்றிய செய்திகளை அரசியல் அறிவியலாளர்கள் கற்கின்றனர்.

அரசியல் அறிவியல் என்பது நேர்மறை எண்ணக் கருத்துகளை முன் நிறுத்துவதிலும், அரசியலை பகுப்பாய்வு செய்வதிலும் மேலும் கொள்கை உருவாக்கத்திற்கு தேவைப்படும் கருத்துகளை சிபாரிசு செய்வதிலும் முற்படும். பாரம்பரிய அரசியல் அறிவியல் என்பது மனதளவில் உருவாகும் எண்ணக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அறிவை வளர்ப்பதாகும். மேலும் அவைகள் ஒழுக்கலாறு அடிப்படையிலானவை. பாரம்பரிய அரசியல் கோட்பாடுகள் உத்தேசம் மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட முன் அனுபவம் மற்றும் ஆராய்ச்சி கேள்வி ஞானத்தால் உருவாகுவதாகும். ஆனால், புதிய அரசியல் அறிவியல் என்பது புள்ளி விவரங்களோடு சார்ந்த அறிவியல் அடிப்படையிலான கேள்வி ஞானமாகும். அரசியல் அறிவியலின் அறிவியல் தோற்றம் என்பது 1950-களில் நடைபெற்ற நடத்தை இயக்கத்தால் ஏற்பட்டதாகும்.

அறிவியல் ரீதியான அரசியல் என்பது 1950-களில் கண்ட நடத்தை இயல் புரட்சியின் மூலம் நாம் கண்டதாகும். இவ்வியக்கத்தின் பிறகே இவ்வியலின் பல உறுப்பினர்கள் அரசியல் பாடத்திற்கு ஒரு அறிவியல் தன்மை இருப்பதாக உணர்ந்து கொண்டனர். அரசியல் நடத்தைகளை உணர்வதிலும், எண்ணளவு அடிப்படையில் அரசியல் உணர்வுகளை துல்லியமாக எதிர்பார்ப்பதிலும், அனைவரும் ஏற்றுக் கொண்ட மதிப்பு அடிப்படையில் அல்லாத ஆராய்ச்சி வழிமுறைகளில், அரசியல் அறிவியல் நடத்தை இயலின் மூலம் நிலைநிறுத்தியது. நடத்தை இயக்கத்தின் பிறகு இவற்றில் சிறிது மாறி இருந்தாலும் நேர்மறை அறிவியல் மாதிரியை இன்றளவும் அரசியல் அறிவியல் பின்பற்றிவருகிறது. இதன் காரணமாய் எண்ண அடிப்படையில் உருவாகும் அரசியல் கோட்பாடுகள் ஒரளவு மங்கத் தொடங்கின. உண்மையில் வெறும் சிந்தனை அடிப்படையை அரசியல் கோட்பாடுகள் எண்ணளவு அடிப்படையிலான ஆதரிக்கவில்லை, என்பதால் நடத்தை இயல், எண்ணம் அடிப்படையிலான அரசியல் கோட்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

பணி சார் குழுமங்களின் ஆதரவினால் அரசியல் படிப்பு என்பது தொழில்ரீதியான இயல் என்ற அந்தஸ்தைப் பெற்றது.

உதாரணங்கள்

 1. நாட்டிடை அரசியல் அறிவியல் குழுமம்
 2. இந்திய அரசியல் அறிவியல் குழுமம்
 3. இந்திய பொது நிர்வாக நிறுவனம்
 4. அமெரிக்க அரசியல் அறிவியல் குழுமம் தூய அறிவியல் நிலையை பெறவேண்டும் என்ற இலக்கை நோக்கி நடத்தை இயல் செல்லும் போது, அரசியல் அறிவியலுக்கு ஒரு தொழில் ரீதியான அந்தஸ்து கிடைக்கப்பெற்றது.

நடத்தை இயலின் காரணமாய் அரசியல் அறிவியலோடு தன்னை ஐக்கியப்படுத்தியது. இத்தகைய ஐக்கியப்படுதல் என்பது அன்று முதல் இன்று வரை எந்தவொரு மாற்றமில்லாமல் தொடர்கின்றது. அரசியலைப் பற்றிய உண்மையான அறிவை பெறவேண்டும் என்றால் அரசியல் அறிவியல் ஒரு அறிவியல் அடிப்படையிலான, தனித்தன்மைபெற்ற இயல் என்றும், தொழில்ரீதியான ஐக்கியப்படுத்துதல் என்ற நிலையில் இவ்வியல் தன்னைக் காட்டிக் கொள்ளவேண்டும். அறிவியல் அடிப்படையிலான வழிமுறைகளின் மூலம் அரசியல் ஆர்வலர்கள் குறிக்கோள் அடிப்படையிலான, எண்ணங்களின் அடிப்படையில் விடுபட்ட மதிநுட்ப ரீதியாக அரசியலை புதுமைப்படுத்துவதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். மதிப்பீட்டிலிருந்து விடுபட்ட (Value-free) அறிவியலில் எண்ணம் அடிப்படையிலான குறிக்கோள்கள் கிடையாது.

ஒரு தொழில் ரீதியான பார்வையின் மூலம் அரசியல் ஆர்வலர்கள் புதிய அரசியல் அறிவியலை அறிமுகப்படுத்தினர். அரசு அமைப்புகளில் அரசியல் அறிவுகளைப் புகுத்தினார்கள். பகுத்தறிவு ரீதியான அரசியல் கட்டளைகள், புதிய அரசியல் சமுதாயத்தை உருவாக்குவதில் சமூக பொறியாளர்களான சார்லஸ் மேரியம் மற்றும் ஹெரால்டு லாஸ்கி போன்றோர் முற்பட்டனர்.

புதிய அரசியல் அறிவியல் அறிஞர்கள் குடிமக்களை ஒரு கருவாக மேலும் உற்றுநோக்கி அறிவதில் தங்கள் கவனத்தைச் செலுத்தினர். சுதந்திர மக்களாட்சி அரசை ஊக்கப்படுத்துவதில் புதிய அரசியல் அறிஞர்கள் நாட்டம் கொண்டனர். அறிவியல் அடிப்படையிலான அரசியல் சாத்தியமென்றும் அதனடிப்படையில் உருவாகும் அரசியல் அறிவு சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளை நிரந்தரமாக தீர்க்கவல்லது என்ற அடிப்படையில் இயங்கினார்கள்.

நுட்ப ரீதியாய் உருவாக்கப்பெற்ற அரசியல் அறிவியல் அறிவினை அரசியல் அறிஞர்கள் அரசாங்கப் பணிகளில் தக்க வழிகளில் செலுத்தி பயன்பெறச் செய்தனர்.

மெரியம் தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரைகளில் அரசியல் அறிவியல் ஆழ்ந்த அறிவியல் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கருதினார். எதிர்பார்ப்பு மற்றும் யோசனை அடிப்படையிலான எண்ணங்களை விடுத்து அரசியல் அறிவியல், அறிவியல் நுட்பங்களையும், வழிமுறைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை காணத் துடித்தார். மனித நாகரீகத்தை முழுமை படுத்துவதில் எங்ங்ணம் அறிவியல் துணை புரிந்ததோ, அதே வகையில் அரசியல் அறிவியல் மனித நாகரீகத்தை காப்பதிலும், செழுமை படுத்துவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும். அறிவின் பரிணாம வளர்ச்சியினையும் மற்றும் மனித உணர்வுகளையும் கட்டுப்படுத்தும் குடிமக்கள் கல்வியின் மூலம் மக்களாட்சி மாண்புகளை வளர்க்க முற்பட்டார். இதன் மூலம் முழுமைப்பெற்ற சமுதாயத்தை மற்றும் மனித இனத்தை காணமுற்பட்டார். நடத்தை இயல் அறிஞர்களாகிய ஹினஸ் யூலா (Heinz Eulau) மற்றும் டேவிட் ஈஸ்டன் (David Easton) நடத்தை இயல் ஆராய்ச்சி முறைகளை கண்டறிந்து, பயன்படுத்தி ‘புதிய அரசியல் அறிவியலை” வளர்க்க முற்பட்டனர். புதிய அரசியல் அறிவியலின் குணாதிசயங்களாய் கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

 1. முன் அறிதல் மற்றும் விளக்கங்களை அளிப்பதில் அரசியல் அறிவியல் தக்க நெறிமுறைகளைக் கொண்டு அரசியல் நடத்தைகளைப் பயன்படுத்துவதாகும்.
 2. தனிமனித நடத்தை மற்றும் அரசியல் குழுக்களின் நடத்தைகளை எண்ணிக்கை அடிப்படையில் ஆராய்ச்சி செய்து அரசியல் புதிர்களை விளக்கச் செய்வதாகும்.
 3. முன்கூட்டி அறிதலை துணைசெய்யும் வகையில் புள்ளியல் விவரங்கள் அளவிடப்படவேண்டும்.
 4. ஒரு கோட்பாட்டின் மூலம் ஆராய்ச்சிகள் அமைய வேண்டும். மேலும் அவ்வாராய்ச்சிகள் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்ற கருத்து முன்படிவத்தினை பெற்றிருக்க வேண்டும்.
 5. உண்மையான அறிவியல் ஆராய்ச்சி முறைகளை அரசியல் அறிஞர்கள் பின்பற்றவேண்டும்.
 6. அளவிடமுடியாத கருத்துகளாகிய மக்களாட்சி, சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை எண்ணிக்கையளவில் ஆராயமுடியவில்லையென்றால் அவைகளை ஒதுக்கவேண்டும்.
 7. அரசியல் அறிவியல் ஒரு பல இயல் அறிவாக உருவாகவேண்டும்.
 8. பல்நோக்கு பகுப்பாய்வு, சர்வே ஆராய்ச்சி, கணக்கு மாதிரிகள் துணைகொண்டு அரசியல் அறிவியல் ஆராய்ச்சி வழிமுறைகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

யூலாவின் கருத்துப்படி பெரு அளவு பகுப்பாய்வு (Macro level analysis) என்பது நிறுவனங்களையும் சிறு அளவு பகுப்பாய்வு (Micro level analysis) என்பது தனிமனிதனையும் அடிப்படையாகக் கொண்டு அமையும். அறிவியல் ரீதியான அரசியல் என்பது அரசியல் நடத்தைகளை பெரு அளவு மற்றும் சிறு அளவு பகுப்பாய்வின் மூலம் நன்கு தெளிவு படுத்துவதாகும். ஒருமைதன்மை மற்றும் சீரான நெறிகளை வளர்ப்பதில் எண்ணிக்கை அடிப்படையிலான அறிவியல் தன் நோக்கினை செலுத்தும். நிறுவனங்களின் தாக்கம் தனிநபர் நடத்தையிலும், தனிநபர் தாக்கம் நிறுவனங்களின் மேலும் உள்ளவற்றை நாம் அறிவியல் ரீதியாய் அறியலாம்.

அரசியல் அறிஞர்கள் புள்ளியியல் விவரங்களையும், அதன் முடிவுகளையும் ஒழுங்கு படுத்த வேண்டும் என யூலா கருதுகின்றார். அளவிடுவது, இன்றைய ஆராய்ச்சி வழிமுறைகள், சோதனைக்குரிய கருத்து முன்படிவங்கள் ஆகியவைகள் செயல்பாட்டிற்குரிய மேலும் நம்பிக்கைக்குரிய அரசியல் அறிவினை பெருக்கும். எண்ணிக்கை அடிப்படையிலான அரசியல் அறிவியல் என்பது பல அரசியல் கருத்துகளுக்கு ஆதாரமாகவும், நம்பிக்கை தன்மையை கொடுப்பதிலும் முன் நிற்கும். நடத்தை இயல் மூலம் அறியப்படும் அரசியல் அறிவியல் என்பது பகுத்தறிவாக இருக்கும்.

அரசியல் அதிகாரம் என்றால் என்ன?

மாக்ஸ் வீபரின் கூற்றுப்படி அரசியல் அதிகாரம் என்பது வரலாற்று சமூகங்களில் எதேச்சதிகார வர்க்கம் தன்வசம் உள்ள ஒரு பரிசாகும், தற்கால சமுதாயத்தில் அது செல்வத்தின் படைகளாகும். தற்கால சமுதாயத்தில் அரசியல் அதிகாரத்தினை அடைவதில் சச்சரவுகள் இருந்தாலும், அரசியல் அதிகாரத்தினை இன்று குழுக்களின் சமூக அந்தஸ்து, அரசியல் குழாம், மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவைகள் அரசியல் அதிகாரத்தினை பெற்று விளங்குகின்றன.

சமுதாயத்தில் அரசியல் மற்றும் அரசியல் நிறுவனங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். கருத்து முன்படிவமாக, அரசியல் என்பது நாம் அன்றாட வாழ்வில் காணும் அதிகார உறவுகளை தெளிவுப் படுத்துவதாகும். உதாரணமாக, பெற்றோர்களிடையே அதிகார உறவுகள் இருப்பதைக் காணலாம். ஆகவே சமுதாயத்தில் சிறு அரசியல் (Micro Politics)மற்றும் பெரு அரசியல் (Macro Politics) உள்ளது. நாம் அன்றாட வாழ்க்கையில் காண்பது சிறு அரசியலாகும். நிறுவன அளவில் உள்ள அதிகார உறவுகள் பெரு அரசியல் எனலாம்.

அரசியல் சமூகவியல் என்ற பாடம் அரசு மற்றும் சமுதாயத்திற்கிடையே நிலவும் உறவுகளை பற்றிய படிப்புகளாகும். அதிகாரத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் நாம் அ மற்றும் ஆக்களுக்கிடையே உள்ள உறவுகளை அறிந்து கொள்ளவேண்டும். ஆ என்ற நபர் ஒரு காரியத்தை செய்யவேண்டாம் என்று நினைத்திருந்தாலும் அ அந்த காரியத்தை ஆ யின் மூலம் செய்து முடித்தால், அத்தகைய செயல்பாடு அ என்ற நபர் ஆ என்பவர் மீது செலுத்திய அதிகாரம் என நாம் கருதலாம். இதனடிப்படையில் அதிகாரம் என்பது ஒரு முக்கியமான முன் கருத்துப்படிவமாகும். மற்றொரு வகையில் நியமன அதிகாரம் என்பது ஆளுமையாகும் (Authority). உதாரணமாக, ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் தங்கள் மக்கள் மீது அதிகாரம் செலுத்த முற்படுவர். இதன் காரணமாய் நியமன அதிகாரத்தை மக்கள் மீது இத்தலைவர்கள் செலுத்துகின்றனர் என்று மக்களை நம்பச் செய்வார்கள்.

அதிகாரம், நியாயத்தன்மை மற்றும் ஆளுமை ஒன்றொடு ஒன்று தொடர்புடையது. மேலும் இணைந்தே செல்வதாகும். மற்றவர் செய்ய மறுப்பினும், அதை அவர்கள் கொண்டே செய்வது என்ற அதிகாரம் பல வகைகளை கொண்டதாகும். ஆளுமை என்பது அதிகாரத்தைப் போலத்தான். ஆனால் ஆளுமைக்கு நிறுவனங்களின் துணையுண்டு. ஆளுமையில்லாமல் அதிகாரம் மட்டுமே இருக்குமிடத்தில் அதிகாரத்திற்கு நியாயத்தன்மை தேவைப்படுகிறது. அதிகாரத்திற்கு நம்பிக்கை மற்றும் நியாயத்தன்மையிருக்குமேயானால் அது ஆளுமையாகும். அதிகாரம் (Power) மற்றும் ஆளுமை (Authority) அரசியல் சமூகவியல் அறிஞர்களை சிந்திக்கச் செய்யும் இரு அடிப்படையான முன் கருத்துப்படிவமாகும். தனிமனித கருத்து, குழுக்களின் நடத்தை குணாதிசயங்கள் மக்களின் எண்ணம் மற்றும் செயல்பாடுகளை இயக்கவல்லது அதிகாரமாகும். (உதாரணம் பெற்றோர் மற்றும் குழந்தைகள் அரசாங்கம் மற்றும் வரிகள்) ஆளுமை என்பது அதனோடு தொடர்புடைய நிறுவனங்களையும் குறிப்பிடுவதாகும். நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கிடையே தான் ஆளுமை வெளிப்பாடு அடையும்.

நம் வாழ்க்கையின் வழி நடத்த சமூக அமைப்புகள் சட்டம் மற்றும் வழிகாட்டிகளை உருவாக்குகின்றது. அத்தகைய சட்டம் மற்றும் விதிமுறைகள் ஆளுமையாகும். (உதாரணம்: பல்கலைக்கழகம் மற்றும் பேராசிரியர்கள்). பெரும் அளவிலான நிறுவனங்கள் வீழ்கின்ற போது (USSR) அதிகாரம் அவற்றினை கைப்பற்றும். நிலைத்த தன்மையுடைய ஆளுமையை உருவாக்கவேண்டுமென்றால், அதற்கு நியாயத்தன்மை தேவைப்படுகிறது. சுருங்கக்கூறின், அரசின் மூன்று முக்கிய குணாதியசங்கள் என்னவென்றால், அது அதிகாரம், ஆளுமை மற்றும் நியாயத்தன்மையாகும். அதிகாரம் என்பது பல்வேறு வடிவங்களை எடுத்தாலும் துன்புறுத்துதல், தாக்கம் மற்றும் கட்டுப்பாடு) ஆளுமையோடு செயல்படுத்தப்படும் அதிகாரம் அடிப்படையில் ஒருவரின் எண்ணத்தை மற்றவரின் மேல் திணித்து செயல்படுத்துவதாகும்.

ஆளுமையின் தன்மை மற்றும் முக்கியத்துவம்

மாக்ஸ்வீபரின் கருத்துப்படி ஆளுமை என்பது மூன்று வகைப்படும்

 • பாரம்பரிய ஆளுமை
 • தலைமைபண்பு ஆளுமை
 • சட்ட - பகுத்தறிவு ஆளுமை

அரசாட்சிகள் மற்றும் பேரரசுகளில் உள்ள பாரம்பரிய சமுதாயத்தில் நாம் பாரம்பரிய ஆளுமையைக் காணலாம். பாரம்பரிய ரீதியாக அதிகாரத்தை இச்சமூகங்களில் காணலாம். தனிமனித மாண்புகளின் மூலம் தலைமை ஆளுமை அதிகாரம் உருவாகும். தலைமை ஆளுமை பண்பையுடைய ஒரு தலைவன் மிக எளிதில் தன் மக்களோடு தொடர்பு கொள்வார். ஒரு சில சிறப்பு குணாதியசங்களின் திறமையின் காரணமாய் தலைமை ஆளுமை நபர்கள் தோன்றுகின்றார்கள். இன்றைய உலகில், சட்டப்பகுத்தறிவு அடிப்படையிலான ஆளுமையை நாம் அரசியல் சாசனத்தின் மூலம் பெறுகின்றோம்.

உயர் வகுப்பு கோட்பாடு

ஒரு சமுதாயத்தில் செல்வம், அதிகாரம், முன்னுரிமைகள் மற்றும் உயர் தகுதிகளைப் பெற்றவர்களை உயர் வகுப்பினர் என்று கூறுகிறோம்.

உயர் குடியினர் என்பதை பரிட்டோ கீழ்க்கண்ட வகையில் விளக்குகிறார்.

 1. ஒவ்வொரு சமுதாயத்திலும் சமத்துவமின்மை எப்பொழுதும் இருக்கும்.
 2. சிறுபான்மையினரான உயர்குடியினர் பெரும்பான்மையான மக்களை ஆள்வார்கள். உயர் குடியினரை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். "ஆட்சி செய்யும்’ உயர் குடியினர் மற்றும் ‘ஆட்சி செய்யா’ உயர் குடியினர் ஆவார்கள். இவ்விரு உயர் குடியினர் சமூக சமன்நிலையை செய்கின்றார்கள்.

உயர் குடியினர் என்ற கருத்து முன்படிவம், உயர்ந்த தகுதிகள், திறமை மற்றும் சிறப்பு சலுகைகளை பெற்றவர்களை குறிப்பதாகும். பரிட்டோவின் விளக்கப்படி உயர்குடியை இரண்டு விதமாக பார்க்கலாம்.

 1. ஒவ்வொரு சமுதாயத்திலும் சலுகைகளையுடைய மக்கள் உள்ளனர். ஆகவே சமூக வாழ்வில் சமத்துவமின்மை தவிர்க்க இயலாதது. (சமூக வகைபாடுகள்)
 2. ஒவ்வொரு சமுதாயத்திலும் உயர் குடியினர் சிறுபான்மையினராகவே இருந்து பெரும்பான்மையான மக்களை ஆட்சி செய்வர்.

உயர் குடியினர் கோட்பாட்டாளர்கள் கூறுவது என்னவென்றால் மக்களாட்சி அமைப்புகளில் ஆட்சி செய்கின்ற ஒரு சில உயர் குடியினரே கொள்கை முடிவினை எடுக்கின்றார்கள். பல குழுக்களுக்கிடையே நடைபெறும் பகிரங்க போட்டியின் விளைவாய் ஏற்படும் கொள்கை முடிவுகள் அல்ல என்பதை நாம் அறியலாம். ராபர்ட் மைக்கேல் கூற்றுப்படி கீழ்க்கண்டவைகள் உயர்குடி வகுப்பினரை விளக்கும் கொள்கைகள் ஆகும்.

 • ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு குறிப்பிட்ட அதிகாரம் உடையவர்கள் சமுதாயத்தை கட்டுப்படுத்துவார்கள். எந்தவிதமான அரசாங்கமோ அல்லது பொருளாதாரமோ, அவற்றில் என்றும் உயர்குடி ஆட்சிதான் கோலோச்சும். பெரும்பான்மையான மக்கள் தங்களை ஆட்சி செய்யமாட்டார்கள்.
 • கிடைக்கின்ற வளங்களை தக்க அமைப்பு ரீதியாகவும், கூட்டு முயற்சியிலும் பெருமளவில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பர். உயர்குடி உறுப்பினர்கள் அதிகாரத்தை மையப்படுத்தி ஆட்சி செய்வார்கள்.
 • கிடைக்கின்ற அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி உயர்குடி வகுப்பினர் தங்கள் அதிகாரத்தை பாதுகாத்தும், விரிவுபடுத்தியும் கொள்வர். தங்களுக்கு பயன்படும் என்றாலொழிய அதிகாரத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். தன்னிச்சையாக தங்கள் அதிகாரத்தை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
 • தங்கள் சமுதாயத்தை ஆட்சி செய்ய பல நுட்ப முறைகளை உயர் குடியினர் பின்பற்றுவர். பொருளாதாரத்தை கட்டுப்படுத்தல், காவல் மற்றும் இராணுவத்தை தங்கள் நலன் காக்க பயன்படுத்துதல், கல்வி முறை மற்றும் மக்கள் தொடர்பு சாதனங்களை தங்களுக்கு சாதகமாக சூழ்ச்சியாக நடத்துதல், தங்களை எதிர்பவர்களை தனிமைப்படுத்துவது அல்லது தீர்த்துகட்டுவது, தங்கள் அதிகாரத்தையும் ஆட்சியையும் நியாயப்படுத்தும் அரசியல் கொள்கைகளை உருவாக்குவது போன்ற வழிகளை பின்பற்றி தங்கள் ஆட்சியை நிலைப்படுத்துவர்.
 • தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களின் சுயநலத்தை பேணவும், தங்களின் அதிகார இடத்தை தக்க வைத்துக்கொள்வதில் அக்கறை காட்டுவர். இரண்டு காரணங்களுக்காக மார்கீசிய கோட்பாட்டினை உயர் கோட்பாட்டாளர்கள் மறுக்கின்றனர்.

சமூக வர்க்க கோட்பாடு

1. மார்கீசியம் குறிப்பிடுகின்ற 'ஆதிக்க வர்க்கம்’ என்பது தவறு, ஏனெனில் தற்கால தொழிற்கூட சமுதாயங்களில் உயர்குடி வகுப்பினரின் தொடர்ச்சியான சுழற்சி முறைதான் வழக்கில் உள்ளது.

2. ஒவ்வொரு சமுதாயத்திலும் சமூக படிநிலைகள் இருப்பதால் வர்க்கம் என்ற பிரிவு முக்கியத்துவம் பெறுகின்றது.

மக்களாட்சி மற்றும் உயர்குடியினர் கோட்பாட்டில் உள்ள அடிப்படை முரண்பாடுகள்.

1 உயர்குடியினர் கோட்பாடு என்பது ஒவ்வொரு சமுதாயத்திலும் சமத்துவமின்மை இருப்பதை குறிப்பிடுகின்றது. ஆனால் மக்களாட்சி கோட்பாடு சமுதாயத்தில் சமத்தவம் இருப்பதாகக் கூறுகிறது.

2 உயர் குடியினர் கோட்பாடு என்பது ஒரு சில உயர் குடியினரே பெரும்பான்மையான மக்கள் மீது ஆதிக்கம் செய்வதாகப் பகர்கின்றது. ஆனால் மக்களாட்சி கோட்பாடு என்பது பெரும்பான்மையாளர்களே ஆட்சி செய்கின்றனர் எனக் கருதுகின்றது. ராபர்ட் மைகேல் அதிகார வர்க்க எதேச்சதிகார ஆட்சியைப் பற்றி கூறுகிறார்.

தற்கால மக்கள் நலம் நாடும் அரசுகளில் அதிகார வர்க்கத்தின் ஆட்சி அதிகாரங்கள் வளர்ந்து வருவதாகக் கூறுகின்றார்.

 1. இராணுவத்தின் துணைகொண்டு, சிறு குழு தலைவர்கள் அரசியல் ரீதியாக ஆட்சி செய்வது.
 2. நுட்ப பணியாளர்களை சார்ந்து ஆட்சி செய்யும் அரசியல் தலைவர்கள்இத்தகைய நுட்ப பணியாளர்கள் சமுதாயத்தின் அன்றாட நடவடிக்கையை கட்டுப்படுத்தி ஆட்சி செய்வர்.
 3. பொருளாதார மந்தநிலை ஏற்படுகின்ற காலங்களில் சமுதாயத்தில் பொருளாதார வளர்ச்சியினைப் பெருக்குதல்.
 4. பல வர்க்கங்களின் மீது அடக்குமுறையைப் பயன்படுத்துதல், குறிப்பாக மத்திய வருவாய் வர்க்கத்தினர் மீது. காரல் மார்க்ஸின் உயர்குடி வகுப்பினர் அல்லா கோட்பாடு ஒரு சமுதாயத்தில் அரசியல் அதிகாரம் எவ்வாறு பிரித்தளிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆரம்ப காலம் முதற்கொண்டே விளக்கியது மார்கீசிய கோட்பாடாகும். மார்க்ஸின் கூற்றுப்படி ஒவ்வொரு நாகரீகமடைந்த சமுதாயத்திலும் அரசியல் அதிகாரம் என்பது சமமான அளவில் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றது. பொருள் உற்பத்தி செய்யும் முறையை தங்கள் வசமாக்கி கொண்டு ஆட்சியில் உள்ளவர்கள் அரசியல் அதிகாரத்தை ஒருமுகப்படுத்துவர். ஆகையால் அரசியல் தலைவர்கள் ஆதிக்க வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் ஆவார்கள். அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க சமூக பொருளாதார காரணிகள் தீர்மானிக்கின்றது. ஆளப்படுவோருக்கும், ஆள்வோருக்கும் இடையே தொடர்ச்சியாக நடைபெறும் சச்சரவுகள் சமூக முறைமைகளை நிலை நிறுத்துகிறது. இத்தகைய சச்சரவுகள் உற்பத்தி சக்திகளை தீர்மானம் செய்கின்றது. வர்க்கரீதியாக முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என இருவேறு கூறாக மாறும் வர்க்க வேறுபாட்டுடன் வர்க்க பேதங்கள் உருவாக்குகின்றன. சச்சரவுகளின் தன்மைகளின் அடிப்படையில் அதிகார பகிர்ந்தளிப்பு நடைபெறுகிறது. ஆகவே பொருளாதார தன்மையை தீர்க்கவல்லது மார்க்கீசிய கோட்பாடு. அது வர்க்க போராட்டத்தை தூண்டவல்லது. வன்முறை அடிப்படையில் புரட்சியை ஆதரிப்பது. ஆகவே மற்ற சிந்தனையாளர்கள் மார்க்சீய கோட்பாட்டினை எதிர்க்கின்றார்கள்.

தன்மை மற்றும் மற்றவரை கவருதலின் நன்மைகள்

அரசியல் சமூகவியல் என்பது எங்ங்ணம் மற்றவரை கவருதல், அரசியல் அதிகாரம் மற்றும் அதன் பகிர்வு ஆகியவற்றைப் பற்றி அறிவதாகும். தற்கால சமுதாயத்தில் மற்றவரை எந்தளவுக்கு நாம் கவருகிறோம் என்ற அடிப்படையில் நாம் வளமை பெறுகின்றோம். ஆகவே அதிகாரம் என்பது மற்றவரை கவரும் விதத்தில் தீர்மானிக்கப்படுகிறது. மற்றவரை கவருதல் என்பது ஒரு நபரின் நடத்தையை இயல்பாக கட்டுப்படுத்துவதாகும். இது அவர்கள் விரும்பும் வண்ணமாக இல்லாமல் எதிராகவும் இருக்கலாம். ஹரால்டு லாஸ்வேல் மற்றும் ஆபிரகாம் கப்பலான் மற்றவரை கவருதல் என்ற கருத்தை விளக்க முற்படும் பொழுது ‘கவருகின்ற தன்மையின் அடிப்படையில் அரசியல் தன்மைகள் தீர்மானிக்கப்படுகிறது’ எனக் கூறுகின்றார்கள். மற்றவரின் நடத்தையை பாதிப்பு அடையச் செய்யும் குணாதியசத்தை நாம் கவருதல் எனக் கூறுகிறோம். சில சமயம் மற்றவரை கவரும் தன்மை உச்சநிலையில் இருக்கும். இத்தகைய தருணத்தில் அதிகாரத்தை வைத்திருப்போர் அதிக கவருகின்ற தன்மையை பெற்றிருக்கவேண்டும்.

மூர்க்கதனம்

கவருதல் என்பதற்கான ஈடு கொடுக்கும் தன்மையில் சிறிது குறையும் பொழுது மூர்க்கத்தனத்தோடு கூடிய அதிகாரத்தை நாம் பயன்படுத்துகின்றோம். இதை நாம் மூர்க்கத்தனமான கவருதல் எனக் கூறுகிறோம். அச்சுறுத்துதல் அல்லது கட்டுப்பாட்டுகளை விதித்தல் என்ற விதத்திலான கவருகின்ற தன்மைகளை நாம் பயன்படுத்துகின்றோம். இத்தகைய அச்சுறுத்துதல்கள் பாராட்டுகள் அல்லது கொடுமைப் படுத்துதல் என்பவற்றோடு துணைவரும். தண்டனைகள் என்பது எதிர்மறையான கட்டுபாடுகள் எனவும், பாராட்டுகள் நேர்மறையான கட்டுப்பாடுகள் என நாம் எடுத்துக் கொள்ளலாம்.

மற்றவரை கவரும் தன்மையின் அளவு

மற்றவரின் நடத்தையை தாக்கம் செய்கின்ற வகையில் பயன்படுத்தும் எதிர்மறையான அல்லது நேர்மறையான கட்டுப்பாடுகளை நாம் அதிகாரம் என்ற பொருள் விளக்கத்தை அளிக்கின்றோம்.

தொடர்புடையது

அதிகாரம் என்பது தனிநபரின் சொத்து அன்று. அடிப்படையில் அது மற்றவையோடு தொடர்புடையதாகும். மற்றவர்களை தொடர்புபடுத்தியே அதிகாரம் பயன்படுத்தப்படும். ஏனையவரின் நடத்தையை பாதிக்கச் செய்வது அதிகாரம் எனக் கூறுகிறோம். ஒரு சமுதாயத்தில் அதிகாரம் செலுத்துகின்றவர், அதிகாரம் செலுத்தப்படுகின்றவர்கள் என்று உறவுகள் அதிகாரத்திற்கு தொடர்புடையவனவாக உள்ளது. நகரம் மற்றும் கிராம சமுதாயங்களில் இத்தகைய அதிகார உறவுகளை நாம் காணலாம். அரசு மற்றும் அதன் நிறுவனங்களின் அரசியல் அதிகாரம் செயலாக்கப்படுகிறது. அரசின் அதிகாரத்தின் மூலம் அரசியல் தீர்மானிக்கப்படுகிறது. சமுதாயத்தின் பல அடுக்குகளில் காணப்படும் அதிகாரத்தைக் காட்டிலும் எந்த விதத்திலும் அரசின் அதிகாரம் வேறுபட்டது அல்ல. ஆகவே சமுதாய மாற்று காரணிகளின்பார்வையில் அதிகாரம் தீர்மானிக்கப்படுகிறது. சமூக செயல்பாட்டின் அடிப்படையில், அரசியல் அதிகாரம் தீர்மானம் செய்யப்படுகிறது. சமுதாயம் செயல்படும் விதம் மற்றும் அரசியல் அதிகாரங்கள் மாறும் தன்மைபடைத்தது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
2.9
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top