অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மக்களாட்சி அதிகாரப் பரவல்

மக்களாட்சி அதிகாரப் பரவல்

அறிமுகம்

மக்களோடு தொடர்புடைய நிறுவனங்கள் எதுவாயினும் அந்நிறுவனங்கள் சார்ந்த முக்கியமான கருத்துக்கள் இரண்டு. அவை அதிகார குவிப்பு மற்றும் அதிகாரப் பரவலாகும். இந்த கருத்துக்கள் அந்த நிறுவனங்களினுடைய கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்றுவதோடு தொடர்புடையவை ஆகும். உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் அவற்றிலும் குறிப்பாக குடியாட்சி அல்லாத அரசாங்கங்கள் அதிகாரங்களை செயல் துறையிடம் குவித்து வருகின்றன. இவ்வாறு அதிகாரங்கள் குவிக்கப்பட்ட போதும் அத்தகைய அரசாங்கங்கள் முழுமையாக திருப்தி அடைவதில்லை.

இது ஒரு முடிவில்லாத நிகழ்வு. இவ்வாறு தனி ஒருவரிடமோ அல்லது குறிப்பிட்ட ஏதேனும் ஒரு ஆதிக்க அதிகாரம் செலுத்தும் அமைப்பிடமோ அதிகாரத்தை குவிக்கும் போக்கு மக்களாட்சி அரசாங்கம் ஏற்படுகின்ற வரையிலும் இருந்து வந்துள்ளது. இதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவை கீழே தரப்பட்டுள்ளன.

  1. பரந்த அளவிலான தொழில்நுட்ப அடிப்படையில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டது.
  2. கீழ்மட்டத்திலுள்ள நிறுவனங்களின் அதிகாரங்களை மேலும் மேலும் எடுத்துக் கொண்டது.
  3. ஆட்சியாளர்கள் இடையே சுயக் கட்டுப்பாடு இல்லாமல் போனது.
  4. குறுகிய காலத்தில் நேர் வழியில் அல்லாமல் குறுக்கு வழிகளில் செல்வந்தராக வேண்டும் என்ற மக்களின் மனப்பான்மை.
  5. மேல்மட்ட அரசியல் வாதிகளிடையே நிகழும் அதிகார பேராசை, மற்றும்
  6. உற்பத்தியாளர்கள் மற்றும் உபயோகிப்பவர்களிடையே நேரடி தொடர்பு இல்லாமல் போனது.

மேலே கூறப்பட்ட காரணிகள் அரசாங்கங்கள் பொதுமக்களுடைய சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் தொழில் நுட்ப வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரங்களை பெறுவதற்கு கட்டாயப்படுத்தின. இவைகளின் தாக்கத்தால் தற்கால மக்கள் அவர்களின் துவக்கம், முன்னேற்றம், தன்னம்பிக்கை போன்ற தகுதிகளை இழந்தார்கள். அவர்களுடைய அன்றாட தேவைகள் எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தையே எதிர்பார்க்கின்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டார்கள். இவ்வாறு அவர்கள் தங்களின் முக்கியத்துவத்தை இழந்து அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு தகுதியும், திறமையும் அற்றவர்கள் ஆனார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் குடியாட்சி முறைகளில் அதிகாரபகிர்வு வேண்டுமென்ற போக்கு ஏற்பட்டது. இது அதிகார குவிப்புக்கு எதிர்மறையானது. இந்தியாவில் சுதந்திரம் கிடைத்த உடனேயே பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மக்களே அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன.

மக்களாட்சி அதிகாரப்ப பரவல் விளக்கம்

மக்களாட்சி என்பது மக்களால் நடத்தப்படும் ஆட்சி என்று பொருள்படும். இதில் மக்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மக்களுக்கு முக்கியத்துவம் தந்து ஊக்கப்படுத்துகின்ற பொழுது மக்களாட்சி குறிக்கோள்களை அடைவது எளிதாகிறது. கிரேக்கத் தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் மக்களுடைய நன்மைகளையும் முன்னேற்றத்தையும் அடைவதற்காக அரசு தொடர்ந்து செயல்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதுவே இக்கால மக்களாட்சியின் குறிக்கோளும் ஆகும். இதை அடைவதற்கு பொறுப்புகளும் நடைமுறைப்படுத்த வேண்டிய பணிகளும் பரவலாக்கப்பட வேண்டும். இதையே பரவலாக்குதல் என்று கூறுகிறோம்.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மக்கள் பங்கு கொண்டு அவர்களின் உழைப்பால் குறிக்கோள்களை அடைகின்றபொழுது மக்களாட்சி தத்துவங்கள் அடிப்படையில் அவை நிறைவேற்றப்படுகின்றன என்பது தான் மக்களாட்சி அதிகாரப் பரவல் என்பதன் பொருளாகும். அதிகாரப் பரவலின் முக்கியமான பகுதி முடிவெடுக்கும் உரிமையை மேல்மட்டத்திலிருந்து அடுத்த மட்டங்களில் உள்ளவர்களுக்கு தருவதாகும். அதிகாரப் பரவல் என்பது அடுத்தடுத்த நிலைகளிலுள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மக்களுடைய ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் அவர்களே அதனை செய்து முடித்துக்கொள்ள வகை செய்யும் முறையில் பணிகளையும் வளங்களையும் தருகின்ற தொடர்ந்து செயல்படும் நிகழ்வு ஆகும்.

மக்களாட்சி அதிகாரப்பரவலின் மற்றும் ஒரு அம்சம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அரசாங்க பிரதிநிதிகளின் அதிகார எல்லைக்குள் அரசாங்கத்தின் அதிகாரவர்க்கம் பணியாற்றுமாறு செய்வதாகும். இத்தகைய அதிகாரப் பரவலுக்கு அடுத்தடுத்த மட்டங்களிலுள்ள மக்கள் முடிவெடுப்பது, நிறைவேற்றுவது, அவைகளை விளக்குவது, அரசாங்கத்தால் கிடைக்கும் நன்மைகளை பகிர்ந்து கொள்வது போன்ற செயல்பாடுகளுக்கு தேவையான வட்டாரவாரியான வட்டார அமைப்புகளை ஏற்படுத்துவதாகும்.

அதிகாரப்பரவல் மற்றும் அதிகார ஒப்படைப்பு

அதிகாரப்பரவல் (decentralisation) மற்றும் அதிகார ஒப்படைப்பு (deligation) வெவ்வேறானவை. இரண்டும் ஒன்றாகாது. அதிகாரப்பரவல் மேல் மட்டத்தில் அதிகாரத்திலுள்ளவர்கள் சில அதிகாரங்களை கீழ்மட்டத்திலுள்ளவர்களுக்கு அதாவது அடுத்த நிலைகளில் உள்ளவர்களுக்கு முடிவெடுக்கும் அதிகார உரிமையை தருவதாகும். ஆனால் அதிகார ஒப்படைப்பு என்பது மேல் மட்டத்திலுள்ளவர்கள் அடுத்த மட்டங்களில் உள்ளவர்களுக்கு மேல் மட்டத்திலுள்ளவர்களின் பிரதிநிதிகளாக செயல்படுபவர்களுக்கு குறிப்பிட்ட பணிகளை மாற்றி தருவதாகும். இந்த ஏற்பாட்டின்படி முடிவுகள் எடுக்க அவைகளை நிறைவேற்றுவதற்கு உத்தரவு பிறப்பிக்க அவர்களுக்குள்ள உரிமைகளை மேல்மட்டத்திலுள்ளவர்கள் அவர்களிடமே வைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் பொறுப்புகளையும் கடமைகளையும் மாற்றித் தருவதில்லை. அவர்கள் செய்வதெல்லாம் கீழ்மட்டத்திலுள்ளவர் அல்லது மக்களுடைய பிரதிநிதிகள் என்னென்ன பணிகளை செய்ய வேண்டுமோ அவைகளை நிறைவேற்றுமாறு பணிப்பதே ஆகும். இத்தகைய அதிகாரப்பரவலை காலஞ்சென்ற பிரதம அமைச்சர் நேரு அவர்கள் "பஞ்சாயத்து ராஜ்ஜியம்” அல்லது "பஞ்சாயத்து ஆட்சி” என்று குறிப்பிட்டார்கள். எனவே அதிகாரப்பரவல் என்ற கருத்து பஞ்சாயத்து அமைப்புகளை குறிப்பிடுவதாக உள்ளது.

தல சுய ஆட்சி என்பதன் பொருள்

தல சுய ஆட்சி என்பது தனது நிறுவன அமைப்பு முறையிலும், பணிகளிலும், குறிக்கோளிலும் அரசாங்க அமைப்பினின்று வேறுபடுகிறது. கிராமங்களிலும் நகரங்களிலும் வாழும் மக்களின் நல்வாழ்வை உயர்த்துவதற்கான வழிமுறைகளை வகுத்து அவைகளை செவ்வனே செயல்படுத்துவதே தல சுய ஆட்சி நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளாகும். இது, அரசாங்க அமைப்பிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்றால் சட்டமன்ற, ஆட்சித்துறை, நீதித்துறை ஆகிய மூன்று அமைப்பு முறைகளைக் கொண்டது அரசாங்கம். நாட்டில் வாழும் மக்கள் மட்டுமன்றி அந்நாட்டின் தேசிய வருமான வழிமுறைகளும், அந்நாட்டின் அரசாங்க அதிகார எல்லைக்குள் அடங்கும்.

அதனுடைய செயல்முறைகள் சமூக பொருளாதார கலாச்சார அரசியல் தன்மை வாய்ந்தவை. அதனுடைய பொறுப்பின் கீழ் நாட்டின் செல்வ நிலையை பெருக்குதல் மக்களின் நல்வாழ்விற்கான வழிமுறைகளைக் கொண்டு வருதல் போன்ற ஒரு நாட்டை ஆளுவதற்கு தேவையான எல்லா வழிமுறைகளும் அதனுடைய பொறுப்பின் கீழ் வரும். எனவே, ஒரு நாட்டின் அரசாங்கத்தின் அதிகார வரம்பு அந்நாட்டின் எல்லை முழுவதிலும் எல்லா மக்களிடமும் பரவியிருக்கிறது. ஆனால், தலசுய ஆட்சி நிறுவனம் நாடு முழுவதும் அல்லாமல் அங்கங்கு பல பகுதிகளில் வாழும் மக்கள் தொகையின் நலனுக்காக செயல்படுகிறது. ஒரு பகுதி எல்லைக்குள் எழும் சிக்கல்கள் போன்றவைகள் அதனுடைய அதிகார வரம்பிற்குட்பட்டவை. தல சுய ஆட்சி நிறுவனம் அரசினால் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் அமைக்கப்படுகிறது. அந்நிறுவனத்தின் பணிகள் எந்த நிலையில், அது எந்த முறையில் செயல்பட வேண்டும் போன்ற எல்லா விவரங்களும் அச்சட்டத்திலேயே குறிக்கப்பட்டிருக்கிறது. எனவே தல சுய ஆட்சி நிறுவனம் அரசாங்கத்திற்கு உட்பட்ட ஒரு நிறுவனம். ஆதலால், அரசாங்கத்தை விட குறைவான மதிப்பையே பெற்றுள்ளது.

தல சுய ஆட்சியின் அவசியம்

தல சுய ஆட்சி சில காரணங்களால் ஒரு அவசியமான நிறுவனமாகிறது. தற்காலத்தில் அரசினமைப்புப் பெரியதாகியும் அதன் பணிகள் பெருகியும் காணப்படுகின்றன. அரசு பெரிய அமைப்பாகவும் அதில் வாழும்மக்கள் தொகையும் பெருகி இருப்பதால் ஒரு நாட்டின் அரசாங்கம் சிறந்த முறையில் செயல்படவும் அதன் பல்வேறான பகுதிகளில் வாழும் மக்களின் குறிப்பிட்ட தேவைகளை கவனிக்கவும் கடினமாயிருக்கிறது. ஒரு நாட்டில் எழும் சிக்கல்கள் இடத்திற்கிடம் மாறுபட்ட தன்மையுடையவை. ஒரே தன்மையுடையவை அல்ல. எல்லா சிக்கல்களையும் ஒரே மாதரியான முறையில் தீர்வு காண முடியாது. எனவே அதிகாரத்தைப் பிரித்து பன்முகப்படுத்தி அந்தந்த தலங்களிலுள்ள மக்களிடம் ஒப்படைப்பதன் மூலம் அவர்களே தங்களது தலங்களின் தேவைகளை ஆர்வத்துடன், செயல்படுத்த முடிகிறது. உதாரணமாக சுகாதாரம், தண்ணிர் வசதி, தொடக்க நிலைப்பள்ளி, போக்குவரத்து வசதி இவைகளை தல சுய ஆட்சி நிறுவனங்களால் தல மக்களுக்கு சிறந்த முறையில் செய்து தர முடியும்.

ஒற்றை ஆட்சியிலுள்ள (Unitary state) மத்திய அரசுகளாலோ அல்லது கூட்டாட்சியிலுள்ள (Federation) மாநில அரசுகளோ இவைகளைத் திறமையாக செயல்படுத்த முடியாது. தல சுய ஆட்சியினால் பல நன்மைகள் ஏற்படுவதால் அது ஒரு அவசியமான நிறுவனமாகிறது. கில்க்ரைஸ்டு (Gilchrist) என்பவர் திறமைக் காரணமாகவே தல சுய ஆட்சி மிக அவசியமாகிறது என்று கூறுகிறார். அரசாங்கத்தில் பலதரப்பட்ட நடவடிக்கைகளில் குறிப்பிட்ட சிலவற்றிற்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். இவைகள் திறமையான முறையில் செயல்படுத்தப்பட வேண்டுமென்றால் வேலைகள் யாரிடம் ஒப்படைக்கப்படுகின்றனவோ அவர்கள் மக்களால் இருக்கவோ, எடுக்கவோ இருக்கும்படியான அதிகார கட்டுப்பாட்டில் இருந்தால்தான் சாத்தியமாகும்.

தல சுய ஆட்சியின் அவசியத்திற்கு இரண்டாவது காரணமாக சிக்கனத்தை சொல்லலாம். அந்தந்த தலங்களின் தேவைகளை அந்தந்த தலங்களே கவனித்து, அவைகளுக்கான செலவுகளையும் அவைகளே ஏற்றுக் கொள்ள வேண்டும். சில சமயங்களில் அரசாங்கம் மானியங்களை, சில கட்டுத்திட்டங்களை ஏற்படுத்தி வழங்க நேரிடும்; அல்லது அரசாங்கம் உள்ளாட்சி மன்றங்களுக்கு (Local Bodies) சில குறிப்பிட்ட காரியங்களுக்கு கடன் பெற அதிகாரம் வழங்கும்; அல்லது உள்ளாட்சி மன்றங்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட மக்களிடம் வரி விதிக்கும் அதிகாரத்தை சில வரம்புகளுக்குட்பட்டு வழங்கலாம். வரி விதித்து நிதி பெறுவது உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒரு முக்கிய ஆதாரம். இப்படி வரி கொடுக்கும் மக்கள் உள்ளாட்சி மன்றங்களுக்கு அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதன் மூலம் செலவையும் நிர்வாகத்தையும் அவர்கள் பெரும்பாலும் கட்டுப்படுத்துகிறார்கள் என்று கூறலாம்.

மூன்றாவதாக, பிரதிநிதித்துவ அரசுமுறையை மக்களுக்கு கற்றுணர்த்தும் ஒரு செயலியாக (Agency) இருக்கிறது. தற்கால அரசு முறையில் குடிமக்கள் நேரடியாக, தேசிய ஆளுகையில் பங்கெடுப்பது, ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வரும் தேர்தல்களின் போது தங்களது வாக்குகளை போடும்பொழுதுதான். இதனால் அரசியல் விவகாரங்களில் பங்கின்மை காரணமாக அதிருப்தி அல்லது ஆர்வமின்மை ஏற்படுவது சகஜமாகிறது. தல சுய ஆட்சிமுறை அவர்களை பொது விவகாரங்களில் ஈடுபடுத்துகிறது. இதனால் அதில் சிறந்த பயிற்சியை அளிக்கும் பள்ளியைப் போல் அது அமைகிறது.

நான்காவதாக, தல சுய ஆட்சி அரசாங்கத்தின் வேலை பளுவை குறைக்க உதவுகிறது. மேலும் தங்களின் நிர்வாகத்திலும், வரி வசூலித்து தருவதிலும் அரசாங்கத்திற்கு உதவியாய் உள்ளன.

கடைசியாக இவை வரப்போகும் சட்டங்களுக்குத் தேவையான விவரங்கள், ஆலோசனைகள் ஆகியவைகளைத் தருகின்றன. இதனால் அரசாங்கத்தின் கொள்கைகளை உறுதிப்படுத்தவும், சட்டமன்றங்களில் தகுந்த சட்டங்களை கொண்டு வரவும் சாத்தியமாகிறது. இதிலிருந்து தல சுய ஆட்சி முறை என்றால் என்னவென்பதும் தற்கால ஜனநாயக அரசிற்கு அவை எவ்வளவு முக்கியமானவை என்றும் தெளிவாகிறது.

தல சுய ஆட்சியின் சில பொதுவான பணிகள்

தல சுய ஆட்சிகளின் பணிகளை விரிவாக இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். அவை :

  • கட்டாயப் பணிகள் (Obligatory),
  • விருப்பப்பணிகள் (Discretionary).

தெருக்கள், பொது இடங்கள் இவைகளுக்கு விளக்குகள் போடுதல், தண்ணீர் வசதி, தீயணைப்பு பிறப்பு இறப்பு பதிவு, தொடக்கக் கல்வி, மருத்துவமனை போன்ற பொது நலத்திற்கு அவசியமானவை கட்டாயப்பணிகளாகும்.

விருப்பப்பணிகளாவன, பூங்காக்கள், பொது தோட்டங்கள், நூலகங்கள், நீச்சல் குளங்கள், மனமகிழ் மன்றங்கள் போன்ற வசதிகள் செய்து தருவனவாகும்.

வேறு சில சந்தர்ப்பங்களில் தல சுய ஆட்சி நிறுவனம் செய்யும் பணிகள்:

சில மாறுபட்ட சந்தர்ப்பங்களில் வேறு சில குறிப்பிட்ட பணிகளையும் தல சுய ஆட்சி மேற்கொள்கிறது. அவையாவன:

(அ) தலங்களில் சுய ஆட்சி உறுப்புகளாக இருந்து பணிபுரிவது;

(ஆ) தலங்களில் பொதுநலச் சேவைகள் செய்வதன் மூலும் தனிப்பட்டவர்களை நல்ல குடிமக்களாக்குவது;

(இ) கிராம நகரப் பகுதிகளில் சீரான திட்ட வளர்ச்சிகள் கொண்டுவர உதவுதல்;

(ஈ) தல வருவாய் வாய்ப்புகளைப் பெருக்கிப் பொதுநலத்திற்கு உபயோகப்படுத்துதல்;

(உ) கூட்டான முறையில் சமூக, பொருளாதார, கலாசார வளர்ச்சிகளுக்கு உதவுதல்.

சுருங்கக் கூறின் தல சுய ஆட்சி மன்றங்கள் குறிப்பாக இந்தியாவில், “அந்தந்த தலங்களில் தேசியத் திட்டங்களைச் செயல்படுத்தும் செயலிகளாக (agencies) மட்டுமன்றி, மக்களாட்சியின் முதன்மையான உறுப்பாகச் செயல்படுகின்றன. சமூக நலன், உள்ளாட்சிப் பணிகள் முதலியவைகளை ஏற்றுக் கொள்ள அவைகளே சிறந்த நிறுவனங்கள் ஆகும். குடிமக்களுக்குப் பொது சுகாதாரம் போன்ற வசதிகள் மட்டுமன்றி மகப்பேறு, குழந்தைகள் நலம், குடும்ப நலத் திட்டம், கல்வி, வீட்டு வசதி, சேரி ஒழிப்புப் போன்ற சமூக நலத் திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றுவதற்கு வேண்டிய மக்களாதரவு, ஒத்துழைப்பு இவைகளை ஒன்று திரட்டுகிறது’.

தல சுய ஆட்சி சிறந்த முறையில் செயல்பட வேண்டிய தேவைகள்

தல சுய ஆட்சி சிறந்த முறையில் செயல்பட வேண்டுமென்றால் அதற்கு சம்மந்தப்பட்ட அரசாங்கத்தின் ஊக்கமும் வழிகாட்டலும் மேற்பார்வையும் மிக அவசியம். மேற்பார்வை என்றால் உள்ளாட்சி நிர்வாகத்தில் தேவையற்ற முறையில் குறுக்கிடவேண்டும் என்று பொருளல்ல. தல மக்கள் தங்களது புத்திக் கூர்மையைத் தாங்களாகத் தொடங்கிச் செய்வதற்காக வழி வகைகளும், வாய்ப்புகளும் கொடுக்கப்பட வேண்டும். மேலும், உள்ளாட்சிமுறை வெற்றிகரமாகப் பணிபுரிய வேண்டுமென்றால் மக்கள் மனமுவந்து அதன் பணிகளில் பங்கெடுக்கவும் புதிய கருத்துகளையும் முறைகளையும் செயல்படுத்தவும் ஆர்வம் காட்ட வேண்டும்.

இதற்கு இன்றியமையாதது மக்கள், கல்வி அறிவு படைத்தவர்களாகவும், நல்ல ஆட்சிப் பொறுப்புணர்வு உள்ளவர்களாகவும் இருத்தலே ஆகும். மேலும், உள்ளாட்சியின் பணிகள் பெருகிக் கொண்டே போவதால் அவைகளுக்குப் போதுமான வருமான வழிகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு வருமான வழி முறை இல்லையேல் தலப்பிரச்சனைகள் புறக்கணிக்கப்படுவதுடன் உள்ளாட்சி நிர்வாகத்திலும் மக்கள் ஆர்வத்தை இழப்பர்.

தல சுய ஆட்சி முறைகளின் குறைபாடுகள்

தல சுய ஆட்சி முறையில் சில குறைபாடுகள் உள்ளன. தல சுய ஆட்சி முறையினால் மக்களிடம் குறுகிய மனப்பான்மை வளர வாய்ப்புள்ளது. நாட்டில் எழும் ஒவ்வொரு பிரச்சனையையும் தங்களது தலங்களைக் கொண்டே பார்க்கக்கூடும்.

இதனால் தேசிய நன்மை பாதிக்கப்படலாம். மேலும் உள்ளாட்சி நிர்வாகத்திலும் கட்சி அரசியலின் தீமைகள் நுழைந்து விடுகின்றன. திறமையற்றவர்கள் கூடத் தங்களது செல்வாக்கினால் கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களாக நின்று உள்ளாட்சி நிறுவனங்களைக் கைப்பற்றித் தங்களது சுயநலத் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். திறமையான உள்ளாட்சி நிர்வாக முறைகூட இதனால் திறனற்றுப் போகிறது.

இக்குறைகளுக்குத் தீர்வு என்னவெனில் ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இது போன்ற திறமையற்றவர்கள் பதவியில் இருந்தால் பாதிக்கப்படும் என்று உணர்ந்தார்களேயானால் அத்திறனற்றவர்கள் பதவியில் இருக்கவே முடியாது. அவர்கள் அப்படியே பதவிக்கு வந்தாலும் பொறுப்புணர்வுள்ள குடிமக்கள் அவர்களை அடுத்த தேர்தலிலேயே எடுத்துவிட முடியும்.

உள்ளாட்சி முறை சரிவர செயல்படவில்லையென்றால் அதற்குக் குடிமக்களது அலட்சிய மனப்பான்மையும் பொறுப்பற்ற தன்மையும் ஒரு முக்கியக் காரணமாகும். காலதாமதமின்றி வரிகளை ஒழுங்காகச் செலுத்த வேண்டியதும் இப்பொறுப்புணர்ச்சிகளில் ஒன்றாகும். ஒவ்வொரு குடிமகனும் தான் சமூகத்தின் ஒரு பகுதி என்றும், தன்னுடைய ஒத்துழைப்பு இருந்தால் தான் நகரம் அல்லது கிராம வாழ்க்கை முறை வளமுறும் என்றும் உணர வேண்டும். சுருங்கக் கூறின், சமூக நல உணர்வை அவன் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வுணர்வு இருந்தால்தான் சமூகம் வளமுற்றுத் தல சுய ஆட்சி நிறுவனம் சிறப்பான முறையில் செயல்படும்.

தல சுய ஆட்சி முறை தோன்றிய விதம்

ஆங்கில அரசின் கீழ் இந்தியா இருந்தபோது தல சுய ஆட்சி சில குறிப்பிட்ட காரணங்களுக்காக எழுந்தது. அப்பொழுது இருந்த முக்கியக் காரணம் என்னவெனில், வியாபாரத்தைப் பெருக்கவும் சில சிக்கல்களைத் தீர்க்கவுமேயாகும்.

முதல் முதல் எழுந்த உள்ளாட்சி சட்டம் 1842 ஆம் ஆண்டு வங்காள மக்கள் சட்டம் என்ற பெயருடன் வந்தது. இச்சட்டம் வங்காள மாநிலத்திற்கு மட்டும் சோதனை முறையில் பார்ப்பதற்காக வந்தது. இச்சட்டத்தின் மூலம், உண்டாக்கப்பட்ட தல நிறுவனங்கள் சரியானபடி இயங்கவில்லை. இது எடுக்கப்பட்டு 1850 ஆம் ஆண்டு சட்டம் ஒன்று இந்தியா முழுவதுக்குமாகக் கொண்டுவரப்பட்டது. அதற்குப் பிறகு பலவகைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதன் விளைவாகப் பல சுய ஆட்சி நிறுவனங்கள் - உதாரணமாக, கல்கத்தா, பம்பாய் போன்ற நகரங்களில் நகராட்சி மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. தல சுய ஆட்சி நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்படுவதற்காக 1870 ஆம் ஆண்டு இந்தியாவில் வைசிராயாக இருந்த மேயோ பிரபு நிதிமுறையை பன்முகப்படுத்துவதற்கான ஆணையைப் பிறப்பித்தார்.

இவ்வாணையின் குறிக்கோள் என்னவெனில் கல்வி, பொதுநலம், சுகாதாரம், மருத்துவ வசதி இவைகளை வளர்க்கவும் உள்ளாட்சி நிறுவனங்களைப் பலப்படுத்தி சுய ஆட்சி முறையை வளர்ச்சிபெறச் செய்யவுமேயாகும். தல சுய ஆட்சி முறை வளர்ச்சியின் அடுத்த கட்டம் 1882 ஆம் ஆண்டில் தொடங்கியது. இந்த ஆண்டில் ரிப்பன் பிரபு தமது சொந்தக் கவனிப்பால் பொது விவகாரங்களில் நிறைய சந்தர்ப்பங்களையும் பொறுப்புகளையும் இந்தியர்களுக்கு அளித்தார்.

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்தரம் அடைந்ததும் உள்ளாட்சி மன்றங்களின் பணிகளும், நிர்வாக முறைகளும் தகுந்த சட்டமாற்றங்களுடன் எல்லா மாநிலங்களிலும் ஜனநாயக முறையாக்கப்பட்டன. கிராமப்புறங்களில் அரசு வளர்ச்சி மிக அவசியம் எனக் குறிப்பாக வலியுறுத்தப்பட்டது. காந்தியடிகள், கிராமப்புறங்கள் முதன்மையான முறையில் முன்னேற வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். நகர வளர்ச்சியும், இயந்திரத் தொழில் வளர்ச்சியுமே தற்கால நாகரிகத்தின் தீமைகளுக்கு அடிகோலாகுமென்றும் இவைகளைத் தீர்க்கும் மருந்து எதுவெனில் அக்காலங்களில் இருந்ததுபோல் கிராமங்கள் தன்னிறைவுத் தன்மையை உடையவையாக இருக்கவேண்டுமென்று எண்ணினார். சுதந்தர இந்தியாவின் தலைவர்கள் காந்தியடிகளின் சீடர்கள் என்ற முறையில் அவரது கருத்துகளுக்கு மதிப்புக் கொடுத்து அவைகளைச் செயலாக்க வேண்டுமென்று ஆர்வம் கொண்டிருந்தனர். 1947 ஆம் ஆண்டிற்குப் பிறகு வந்த கிராமப் பஞ்சாயத்துச் சட்டங்களும், 1958 ஆம் ஆண்டிலிருந்து வெளிவந்த பஞ்சாயத்து அரசுகளும் காந்தியடிகளின் தத்துவச் செல்வாக்கினால் உந்தப்பட்ட அரசியல் தலைவர்களால் கொண்டு வரப்பட்டவையேயாகும்.

இந்தியத் தல சுய ஆட்சி நிறுவனங்களின் வகை

விரிவாக எடுத்துக் கொண்டால் இந்தியத் தல சுய ஆட்சி நிறுவனங்களை இரு பிரிவாகப் பிரிக்கலாம். அவையாவன

  • நகர சுய ஆட்சி நிறுவனங்கள்,
  • கிராம சுய ஆட்சி நிறுவனங்கள்.

கிராமப்புற சுய ஆட்சி அமைப்புகள்

இவ்வகையில் பஞ்சாயத்து அமைப்புகள் வருகின்றன. இவ்வமைப்புகள் கிராம மக்கள் அவர்களுடைய அலுவல்களையும் தேவைகளையும் அவர்களே பெற்றுக் கொள்ள உதவுகின்றன. இது கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கும் பண்டைக்கால கிராமப்புற அமைப்புகளின் மறுமலர்ச்சிக்கும் வகை செய்யும் என்பது காந்திஜி போன்ற பெருந்தலைவர்களின் கருத்தாகும்.

இந்தியாவில் வட்டார சுய ஆட்சி நிறுவனங்களின் தகுதி, அமைப்பு மற்றும் பணிகள் சட்டப்படி ஏற்படுத்தப்படுகின்றன. இவைகளில், சுதந்திரத்திற்குப் பிறகு அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுக்கள் பலவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் பல சீரிய மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate