பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / அரசியல் மற்றும் அரசாங்கம் / மத்திய - மாநில - உள்ளாட்சி அரசமைப்புகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மத்திய - மாநில - உள்ளாட்சி அரசமைப்புகள்

மத்திய - மாநில - உள்ளாட்சி அரசமைப்புகள் பற்றி கொடுக்கபட்டுள்ளது.

அறிமுகம்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் "சட்டங்களின் சட்டமாக” உள்ளது. இதுவே முதன்மையான, அடிப்படையான ஆவணம் ஆகும். இது தேசத்தின் விருப்பாற்றலைப் (The will of the Nation) பிரதிபலிக்கிறது. இந்திய நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் நீதி பற்றிய கொள்கைகள் இதில் இடம் பெற்றுள்ளன. இதன் அடிப்படையில் இந்திய ஆட்சி முறை மூன்றடுக்கு ஆட்சி அமைப்பைக் கொண்டுள்ளது. அவை

*மத்திய அரசு (Central Government)

*மாநில அரசு (State Government)

*உள்ளாட்சி நிர்வாகம் (Local Self Government)

மத்திய அரசு

இந்தியா உலக அளவிலேயே நீண்ட அரசியலமைப்புக் கொண்ட, மதச்சார்பற்ற, குடியரசு நாடு ஆகும். குடியரசுத்தலைவர் இதன் பெயரளவிலான (Nominal) ஆட்சித் தலைவர். பிரதமரின் தலைமையிலான அமைச்சரவையின் ஆணைப்படியே செயல்படுகிறார். எனவே குடியரசுத் தலைவர் பெயரளவிலான அதிகாரத்தையும் (Golden Zero), பிரதம அமைச்சர் உண்மையான அதிகாரத்தையும் கொண்டுள்ளார்.

குடியரசுத் தலைவர்க்குரிய தகுதிகள்

* இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.

* 35 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்.

* நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மாநிலச் சட்டமன்ற அவைகளிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது.

* மத்திய, மாநில அரசுப் பணியில் இருக்கக் கூடாது.

தேர்தல்

குடியரசுத் தலைவரைத் தேர்வாளர் குழு மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கிறது. இத்தேர்வாளர் குழுவில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், மாநிலச் சட்ட பேரவைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையைப் (Single Transferable Vote) பின்பற்றிக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி குடியரசுத் தலைவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கின்றார்.

குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்

குடியரசுத் தலைவர் பதவி ஏற்ற நாளிலிருந்து ஐந்து ஆண்டு காலத்துக்குப் பதவி வகிப்பார். பதவிக் காலம் முடிந்த பின்னரும் அடுத்த குடியரசுத் தலைவர் பொறுப்பேற்கும் வரை பதவியில் நீடிப்பார். இவர் பதவி விலக விரும்பினால் ராஜினாமா கடிதத்தைத் துணை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம். இவரைக் குற்ற விசாரணை (Impeachment) மூலமாக மட்டுமே பதவி நீக்கம் செய்ய முடியும்.

குடியரசுத் தலைவரின் அதிகாரங்களும் பணிகளும்

இந்தியக் குடியரசுத் தலைவருக்கு ஏராளமான அதிகாரங்கள் உள்ளன. பெரும்பான்மையானவை, பெயரளவிலான அதிகாரங்களாகும். வழக்கமாக குடியரசுத் தலைவர் பிரதம அமைச்சரின் ஆலோசனைப்படியே ஆட்சி செய்ய வேண்டும். அசாதாரணமான சூழலில் குடியரசுத் தலைவர் தன் விருப்புரிமை (Discretion) அதிகாரத்தைப் பயன்படுத்துவார்.

அ) ஆட்சி அதிகாரங்கள் (Executive powers)

குடியரசுத் தலைவர் இந்திய நாட்டின் தலைவர். எனவே ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் இவரிடம் உள்ளது. இவரது ஆட்சி அதிகாரங்கள் நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் வரை உள்ளது. அரசாங்கம் செய்து கொள்ளும் உடன்படிக்கைகளும், ஆட்சி அதிகாரங்களும் இவருக்கு உட்பட்டவை. நாட்டின் தலைவர் என்ற நிலையில் மத்திய அரசாங்கச் சட்டங்களை நடைமுறைப்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடும் அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு உண்டு.

ஆ) நிர்வாக அதிகாரங்கள் (Administrative Powers)

இந்திய நாட்டின் அனைத்து நிர்வாக நியமனங்களும், உத்தரவுகளும், அறிவுறுத்தல்களும் குடியரசுத் தலைவர் பெயரிலேயே வெளியிடப்படுகின்றன. பிரதமர், அமைச்சர்கள், அட்டர்னி ஜெனரல், தணிக்கைத் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாநில ஆளுநர்கள், அனைவரும் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகின்றனர். இதைப்போலவே மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில், மத்திய தேர்வாணையம், நிதிக் கமிஷன் போன்ற நிர்வாக ஆணையங்களை நியமிக்கும் அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு உள்ளது. அமைச்சரவைக் குழு எடுக்கும் அனைத்து முடிவுகளையும் பிரதம அமைச்சர் குடியரசுத் தலைவருக்குத் தெரிவிக்க வேண்டும்.

இ) சட்டமன்ற அதிகாரங்கள் (Legislative Powers)

குடியரசுத் தலைவரின் பதவி நாடாளுமன்றத்துடன் இணைந்த ஒன்றாகும். இவர் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை. எனினும் நாடாளுமன்றம் பற்றி முழுமையான அதிகாரம் இவருக்கு உண்டு. குடியரசுத் தலைவருக்கு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டவோ, நீட்டிக்கவோ, ஒத்திபோடவோ, அல்லது கலைக்கவோ அதிகாரம் உள்ளது. மேலவை, கீழவை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தை தலைமையேற்று நடத்த இவருக்கு அதிகாரமுண்டு. ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அரசாங்கத்தின் கொள்கைகள், திட்டங்கள் பற்றி ஒப்புதல் பெற்ற பிறகே சட்டமாகும். நிதி மசோதாக்கள் இவரது ஒப்புதல் பெற்ற பின்னரே நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும். நாடாளுமன்றத்திற்குத் தேவைப்படின் செய்திகள் அனுப்ப உரிமையுண்டு. நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கிடையே ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க இவர் கூட்டத்தைக் கூட்டலாம். நாடாளுமன்றம் கூட்டத் தொடரில் இல்லாதபோது குடியரசுத் தலைவர் அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்கலாம்.

ஈ) நீதித்துறை அதிகாரங்கள்

உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கவோ, நீக்கவோ இவருக்கு அதிகாரமுண்டு. இவர் நீதியின் தலையூற்று (Fountain - Head of Justice) . எனவே இவருக்குக் குற்ற மன்னிப்பு, தண்டனைக் குறைப்பு, தண்டனை ஒத்திவைப்பு பற்றிய அதிகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசனை பெறலாம். குடியரசுத் தலைவருக்கு எதிராக வழக்கு தொடரவோ, இழப்பீடு வேண்டவோ முடியாது.

உ) நிதித்துறை அதிகாரங்கள் (Financial powers)

ஆண்டு வரவு செலவு கணக்கு இவரது சார்பாக நாடாளுமன்றத்தில் அளிக்கப்படுகிறது. இவரது பரிந்துரையின்றி எந்த நிதி மசோதாவும் அறிமுகப்படுத்த முடியாது. அனைத்து நிதி மசோதாக்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே சட்டமாகும். நிதிக்கமிஷன் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர்தான் நாட்டின் நிதிநிலை உறுதியாக உள்ளதா எனத் தீர்மானிக்கிறார்.

ஊ) இராணுவ அதிகாரங்கள் (Military Powers)

குடியரசுத் தலைவர் நாட்டின் முப்படைகளுக்கும் (தரைப்படை - கடற்படை - விமானப்படை) தலைவர் ஆவார். முப்படைகளின் தலைவரையும் இவரே நியமிக்கிறார். அமைதிக் காலத்திலும், போர்க் காலங்களிலும், நெருக்கடி நேரத்திலும் முப்படைகளும் இவரது கட்டளைக்குக் கட்டுப்பட்டவை. போர்களைத் தொடங்கவோ, நிறுத்தவோ உடன்படிக்கை செய்து கொள்ளவோ குடியரசுத் தலைவரின் ஆணைத் தேவைப்படுகிறது. உள்நாட்டுக் கிளர்ச்சியையோ, வெளிநாட்டு படையெடுப்புகளையோ முறியடிக்க இராணுவத்தைப் பயன்படுத்தும் முழு அதிகாரம் இவருக்கு உண்டு .

எ) நெருக்கடி நிலை அதிகாரங்கள் (Emergency Power)

நெருக்கடி நிலை 3 வகைப்படும். அவை,

* வெளி நெருக்கடி நிலை

* உள் நெருக்கடி நிலை

* நிதி நெருக்கடி நிலை

*வெளி நெருக்கடி நிலை

இந்தியாவின் மீது பிற நாடுகள் போர் தொடுக்கவோ, அல்லது ஆக்கிரமிக்கவோ ஆபத்து ஏற்பட்டாலோ குடியரசுத் தலைவர் வெளி நெருக்கடி நிலை பிரகடனம் செய்யலாம்.

* உள் நெருக்கடி நிலை

தேச விரோத, சமூக விரோத மற்றும் ஆயுதக் கிளர்ச்சியால் நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்தால் குடியரசுத் தலைவர் நாடு முழுவதுமோ அல்லது பாதிக்கப்பட்ட பகுதிக்கோ உள் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யலாம்.

* நிதி நெருக்கடி நிலை

இந்தியாவின் நிதி பாதுகாப்புக்கோ, அல்லது அதன் நிதி நாணயத்துக்கோ பாதிப்பு ஏற்பட்டால் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலை பிரகடனம் செய்யலாம்.

இந்தியப் பிரதமர் (The Prime Minister of India)

குடியரசுத் தலைவர் பிரதமரை நியமிக்கிறார். பிரதமர் அமைச்சர்களை நியமிக்கிறார். அமைச்சர்கள் 3 வகைப்படுவர்.

* அமைச்சர் குழு அல்லது காபினெட் அமைச்சர்கள்

ஒவ்வொரு காபினெட் அமைச்சரும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இலாக்காக்களுக்குப் பொறுப்பானவர்கள்.

* இராஜாங்க அமைச்சர்கள்

இவர்கள் இரண்டாம் முக்கியத்துவம் வாய்ந்த இலாக்காக்களுக்குப் பொறுப்பானவர்கள்.

* துணை அமைச்சர்கள்

அமைச்சர்களுக்கு உதவி செய்பவர். 3 வகை அமைச்சர்களையும் உள்ளடக்கியதே அமைச்சரவை ஆகும்.

அமைச்சர்களின் முக்கியப் பணிகள்

* நிர்வாகப் பணி

* சட்டமன்றப் பணி

* நிதிப்பணி

* நெருக்கடி காலப் பணி

பிரதமர்

இந்திய நாடாளுமன்றத்தில் இவர்தான் ஆட்சித்தலைவர். இவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். அரசாங்கத்தின் உண்மையான அதிகாரங்களின் உறைவிடம் இவரே.

நடைமுறையில் பிரதமர், நாடாளுமன்ற மக்களவையில் அறுதிப் பெரும்பான்மையும் நம்பிக்கையும் பெற்றுள்ள கட்சி, அல்லது கூட்டணிக் கட்சிகளின் தலைவராக இருப்பார். பிரதமரின் அதிகாரங்களும் பணிகளும்

*அமைச்சர்கள் நியமனம்

அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பது பிரதமரின் தனிச் சிறப்புரிமை ஆகும். இதில் பிரதமருக்கு முழுச் சுதந்திரம் உண்டு. இவரது ஆலோசனைப்படியே குடியரசுத் தலைவர் அமைச்சர்களை நியமிக்கிறார். அமைச்சரைவையை மாற்றி அமைக்கவோ, புதிய அமைச்சரைச் சேர்க்கவோ, அமைச்சர்களை விலக்கவோ அல்லது அமைச்சரவையைக் கலைக்கவோ பிரதமருக்கு முழு அதிகாரம் உண்டு.

* அமைச்சரவை தலைவர்

பிரதமர் அமைச்சரவைகளின் தலைவர். அதேபோன்று இவர் அமைச்சர் குழு அல்லது காபினெட்டின் தலைவருமாவார். இக்கூட்டங்களுக்கு இவர் தலைமை தாங்குகிறார். ஒவ்வொரு கொள்கை முடிவும் அமைச்சர்கள் குழுவில்தான் தீர்மானிக்கப்படுகிறது. பிரதமரின் திறமையான, தொலைநோக்குடைய, தனித்தன்மையே அமைச்சரவையை ஓரணியாகச் செயல்பட வைக்கிறது.

பிரதமரும், குடியரசுத் தலைவரும்

பிரதமர் அரசாங்கத்தின் தலைவர், குடியரசுத் தலைவர் நாட்டின் அதிபர், அமைச்சர் குழு எடுக்கும் முடிவுகளை உடனுக்குடன் குடியரசுத் தலைவருக்குத் தெரிவிக்க வேண்டியது பிரதமரின் கடமையாகும். குடியமரத் தலைவர் கேட்கும் தகவல்களைக் கொடுக்க பிரதமர் கடமைப்பட்டுள்ளார். பிரதமர், அரசாங்கத்திற்கும், குடியரசுத் தலைவருக்கும் இடையே இணைப்புப் பாலமாகச் செயல்படுகிறார். பிரதமர், குடியரசுத் தலைவர் இருவரும் அரசியலமைப்புச் சட்டத்தின் இரு கண்களாவர்.

பிரதமரும் நாடாளுமன்றமும்

பெரும்பான்மை பலமுடைய கட்சி அல்லது கூட்டணிக் கட்சியின் தலைவர் என்ற முறையில் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பிரதமரின் பணி குறிப்பிடத்தக்கது. அனைத்து அரசாங்கத் தீர்மானங்களும், மசோதாக்களும், பிரதமரின் அனுமதியுடன் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படுகிறது. பிரதமர் அரசாங்க கொள்கைகளை அவையில் அறிவிக்கிறார். அவையின் அமைதியையும், கட்டுப்பாட்டையும், காக்க பிரதமர் சபாநாயருக்குத் துணையாக உள்ளார்.

மக்களவைத்தலைவர்

பிரதமர் 'மக்களவை சபாநாயகருக்குக் கீழ் வரும் மக்களவைத் தலைவர். இவர் மக்களவை உறுப்பினராக இல்லாவிடில் தனது கட்சியைச் சார்ந்த மூத்தவர் ஒருவரை சபாநாயகராக நியமிக்கிறார். பிரதமர் கட்சி வேறுபாடு இன்றி அவையிலுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் பொறுப்பானவர் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும், கலைக்கவும் பிரதமர் முடிவு செய்கிறார். அமைச்சர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்கிறார். நாடாளுமன்றக் கூட்டங்களில் முடிவெடுக்க இயலாத நிலையில் அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்கச் செய்கிறார். அரசாங்கக் கொள்கைகளையும், கட்சித் திட்டங்களையும் ஒருங்கிணைக்கிறார். பிரதமருக்குக் கடமைகளைவிட பொறுப்புகள் அதிகம். இவர் நாடாளுமன்ற அரசாங்க முறையின் குவி மையமாக உள்ளார்.

பன்னாட்டு அரசியலில் பிரதமர் பங்கு

சர்வதேச அரசியலில் பிரதமர் முக்கிய பங்காற்றுகிறார். உலக நாடுகளுடன் நட்புணர்வை வளர்ப்பதே பிரதமரின் முக்கிய கடமையாகும். பிரதமர் சர்வதேச பிரச்சனைகள் பற்றிய இந்தியாவின் நிலையை உலக அரங்குகளில் விளக்கிப் பேசுகிறார்.

நாடாளுமன்றம் (Parliament)

குடியரசுத் தலைவரையும் இரு அவைகளையும் சேர்ந்ததே நாடாளுமன்றம் ஆகும். இந்திய நாடாளுமன்றம் ஈரவை மன்ற முறையைச் சார்ந்தது.

* ராஜ்ய சபை (Rajya Sabha) அல்லது நாடாளுமன்ற மேலவை

* மக்களவை (Lok Sabha) அல்லது நாடாளுமன்றக் கீழவை

மாநிலங்களவை (Rajya Sabha)

மாநிலங்களவை உறுப்பினர்கள் 3 வகைப்படுவர்.

1. மாநிலங்கள் பிரதிநிதிகள்

2. யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள்

3. நியமனப் பிரதிநிதிகள்

மாநிலங்களின் பிரதிநிதிகள்

ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்கள் தொகைக்கேற்ப உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவர். இவர்கள் மாநிலச் சட்டப் பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு மாற்றக் கூடிய ஒற்றை வாக்குச் சீட்டு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்படுகிறது.

யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள்

மாநிலப் பிரதிநிதிகள் போன்றே இவர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

நியமனப் பிரதிநிதிகள்

இலக்கியம், கலை, அறிவியல், சமூகச் சேவை ஆகிய துறைகளில் சிறப்பு அறிவும், நடைமுறை அனுபவமுடைய 12 பேரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

மாநிலங்களவை உறுப்பினர்க்குரியத் தகுதிகள் :

* இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.

* 30 வயது முடிந்திருக்க வேண்டும்.

* நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

* மத்திய, மாநில அரசு ஊழியராக இருக்கக் கூடாது.

* மாநிலங்களவை உறுப்பினராவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருக்கக் கூடாது.

* மனவளர்ச்சி குறைந்தவராக இருக்கக் கூடாது.

* மக்களவை உறுப்பினராக இருக்கக் கூடாது.

பதவிக்காலம்

மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக் காலம் 6 ஆண்டுகள். இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை ஒய்வு பெறுவர். இவ்வாறு காலியாகும் பதவிகளுக்குப் புதிய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். மாநிலங்களவை நிரந்தரமானது. மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை 250. தமிழ்நாட்டின் மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை 18.

மாநிலங்களவைத் தலைவர்

குடியரசுத் துணைத் தலைவர் பதவியிலுள்ளவர் மாநிலங்களவைத் தலைவர் ஆவார். இவர் மாநிலங்களவை உறுப்பினர் அல்ல. எனவே இவருக்கு அவையில் வாக்களிக்கும் உரிமை இல்லை. எனினும் வாக்குகள் சமமாகப் பிரிந்தால் “முடிவு செய் வாக்கை ” (Casting Vote) அளித்துச் சிக்கலுக்குத் தீர்வு காண்பார். கூட்ட நடவடிக்கைகளை அமைதியுடன் ஒழுங்காகவும், மரபமைதிக் காத்தும் நடத்திச் செல்வார். இவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமாயின் அது பற்றிய தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, மக்களவையில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

மாநிலங்களவையின் அதிகாரங்களும் பணிகளும்

மாநிலங்களவை அதிகாரங்கள் மக்களவையின் அதிகாரங்களுக்கு இணையானவை. ஆனால் 'பண மசோதாக்கள்' (Money Bills) மக்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்த வேண்டும். மாநிலங்களவை அமைச்சர்கள் சமர்ப்பிக்கும் அரசாங்கக் கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றை உறுப்பினர்கள் விமர்சனம் செய்வர். சட்டத் திருத்தங்கள் செய்ய மாநிலங்களவையின் ஒப்புதல் கட்டாயம் தேவை. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கெதிராகத் தீர்மானம் நிறைவேற்றி மக்களவையில் ஒப்புதல் பெற்றுப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டு வரும் அதிரரம் மாநிலங்களவைக்கு மட்டுமே உரியது. நாடு நெருக்கடி நிலைக்கு உட்படும்போது மாநிலங்களவை தொடர்ந்து செயல்பட்டு ஆட்சி நடவடிக்கைகளை அக்கறையோடு கண்காணிக்கும்.

மக்களவை (Lok Sabha)

நாடாளுமன்றத்தின் கீழவை “லோக்சபா” அல்லது “மக்களவை' என அழைக்கப்படுகிறது. இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநில மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அமைந்துள்ளது.

ஒவ்வொரு உறுப்பினரும் 5 லட்சத்துக்குக் குறையாமலும் 7.5 லட்சத்துக்கு மிகாமலும் உள்ள வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவை தவிர இரண்டு ஆங்கிலோ இந்தியரையும், ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும் உறுப்பினராகக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். தற்போது உள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 545. தமிழ்நாட்டிலிருந்து 39 மக்களவை உறுப்பினரும் பாண்டிச்சேரியிலிருந்து ஓர் உறுப்பினரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

'வயது வந்தோருக்கு வாக்குரிமை' என்ற அடிப்படையில் 18 வயது நிரம்பிய ஆண் / பெண் வாக்காளர்கள் மக்களவைக்கு வாக்களிக்கின்றனர்.

மக்களவை உறுப்பினர்க்குரிய தகுதிகள்

* இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.

* 25 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

* போட்டியிடும் தொகுதியில் குறிப்பிட்ட ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும்.

* மத்திய மாநில அரசுப் பணியில் ஊதியம் பெறும் பதவியில் இருக்கக் கூடாது.

* மக்களவை உறுப்பினராவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருக்கக் கூடாது.

* மன வளர்ச்சிக் குறைந்தோரும், திவாலானவர்களும் போட்டியிடத் தகுதி இல்லை.

பதவிக்காலம்

மக்களவை உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுக் காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பதவியேற்கையில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விசுவாசமாக இருப்பதாகவும், நாட்டின் ஒற்றுமையைப் போற்றிக் காப்பதாகவும் உறுதி அளிக்க வேண்டும்.

மக்களவையின் அதிகாரங்கள், பணிகள்

சட்டமியற்றும் அதிகாரம்

மக்களவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதால் மாநிலங்களைவை உறுப்பினர்களைவிட இவர்களுக்கு அதிகாரங்கள் அதிகமுள்ளது. இவர்கள் மக்களுக்குப் பதில் சொல்லும் பொறுப்புடையவர்கள். பண மசோதாக்கள் மக்களவையில் மட்டுமே கொண்டு வர முடியும். இது குறித்து முழு அதிகாரம் மக்களவைக்கு உண்டு. சட்டமியற்றலிலும் மக்களவையின் பங்கு பெரியது. சட்டத்திருத்தத்தில் இரு அவைகளுக்கும் சம அதிகாரம் உள்ளது.

நிர்வாக அதிகாரங்கள்

பிரதமரும் அவரது அமைச்சர்களும் மக்களவைக்குப் பொறுப்பானவர்கள். பிரதமர் அமைச்சரவைக்கும், அமைச்சர்கள் அவர்கள் சார்ந்த துறைக்கும் பதில் சொல்லக் கடமையுண்டு. அரசின் கொள்கைகளும், திட்டங்களும், செயல்பாடுகளும் அவையில் உறுப்பினர்களால் கடுமையாக விமர்சிக்கப்படும். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தின் தவறுகளையும், பலவீனங்களையும் ஊழல்களையும், சுட்டிக்காட்ட முடியும். அத்தீர்மானம் நிறைவேறினால் அரசு பதவி விலக வேண்டும்.

நீதித்துறை அதிகாரங்கள்

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நீக்குவது குறித்த தீர்மானத்தை விவாதிக்கும்போது மக்களவை, நீதிமன்றம்போல் செயல்படுகிறது. இதற்கு குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் மக்களவையின் ஒப்புதல் தேவை. நெருக்கடி நிலைப் பிரகடனம் மக்களவையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். சர்வதேச உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மக்களவைக்கு உண்டு.

மக்களவை சபாநாயகர்

சபாநாயகர் மக்களவைத் தலைவர் ஆவார். மக்களவையின் மூத்த உறுப்பினர் மக்களவை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள். இவரது பதவிக்காலம் முடியுமுன்னர் மக்களவை கலைக்கப்பட்டால், புதிய அவை அமைக்கப்படும் வரை இவரே பதவியில் நீடிப்பார். சபாநாயகர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படலாம். அவையின் பெருமை, இவற்றிற்குக் கேடு விளைவித்தால், அக்குற்றத்திற்காகப் பதவி நீக்கம் செய்யப்படலாம். சபாநாயகரை அவமதிப்பது அரசுச் சட்டத்தை அவமதிப்பதாகும்.

மக்களவை சபாநாயகரின் அதிகாரங்களும் பணிகளும்

சபாநாயகருக்கு விரிவான அதிகாரங்கள் உண்டு. அவை,

* அவை நடவடிக்கைகளைக் கண்ணியத்தோடும், கட்டுப்பாட்டோடும் முறையாக நடத்துதல்.

* சுயக் கட்டுப்பாடின்றி விதிகளை மீறி நடந்து கொள்ளும் உறுப்பினர் மீது தக்க நடவடிக்கை, எச்சரித்தல், கண்டித்தல், வெளியேற்றுதல் போன்றவற்றை மேற்கொள்ளல்.

* எந்த உறுப்பினர் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்பதைத் தீர்மானித்தல்.

* விவாதங்களில் கால எல்லையை நிர்ணயித்தல்.

* அவை நடக்கும்போது பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்தல்.

* அவை நடவடிக்கைகளைச் சரியாகப் பதிவு செய்தல், தடைசெய்யப்பட்ட பேச்சுக்களைக் குறிப்பினின்று நீக்குதல்.

* உறுப்பினர்களின் அதிகாரங்கள், சலுகைகள் மற்றும் காப்புரிமைகளைப் பாதுகாத்தல்.

* மசோதாக்கள், பணமசோதாக்கள் போன்றவற்றிற்குச் சான்றளித்தல்.

* இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குதல்,

* கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட வேண்டிய கேள்விகளையும் அவற்றின் வரிசையையும் முடிவு செய்தல்.

* மக்களவைக் குழுக்களின் தலைவர்களையும், உறுப்பினர்களையும் நியமித்தல்.

* மக்களவைக்கும் குடியரசுத் தலைவருக்கும் இடையே தகவல் தொடர்புப் பாலமாக இருத்தல்.

* அவையின் எந்த உறுப்பினரும் கைது செய்யப்படாமல் பாதுகாத்தல்.

* உறுப்பினர்களின் வழக்குகளில் சாட்சி சொல்ல அனுமதித்தல் * உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை ஏற்றுக் கொள்ளுதல்.

* மக்களவைச் செயலகத்தின் தலைவராகச் செயல்படுதல்.

உச்சநீதிமன்றம் (The Supreme Court)

உச்சநீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும், நாடாளுமன்றம் அவ்வப்போது நிர்ணயிக்கும் எண்ணிக்கை கொண்ட நீதிபதிகளையும் கொண்டது. தேவை ஏற்படின் குடியரசுத் தலைவர் தற்காலிக நீதிபதிகளை நியமனம் செய்யலாம். உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியைப் பணிமூப்பு அடிப்படையில் நியமிப்பது மரபு. நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்வதற்குச் சிக்கல் மிகுந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தற்போதைய எண்ணிக்கை 26 ஆகும்.

உச்சநீதிமன்ற அதிகாரங்கள்

உச்சநீதிமன்றம் நீதிமன்ற ஆவணங்களைப் பத்திரமாகப் பாதுகாக்கின்றது. உச்ச நீதிமன்ற அதிகாரங்கள் மூன்று வகைப்படும். அவை,

முதல் விசாரணை அதிகாரம் (Original jurisdiction)

அ) மத்திய அரசுக்கும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் இடையிலான வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளித்தல்.

ஆ) மாநிலங்களுக்கிடையே வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளித்தல்.

இ) மத்திய அரசும் மாநில அரசும் ஒருபுறமும், மாநிலங்கள் மறுபுறமும் இருந்து தொடரும் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளித்தல்.

மேல்முறையீட்டு விசாரணை அதிகாரம் (Appellate)

மாநிலங்களிலுள்ள உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை எதிர்த்து வரும் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளித்தல்.

ஆலோசனை அதிகாரம் (Advisiory)

குடியரசுத் தலைவருக்குத் தேவையான நேரங்களில் சட்ட ஆலோசனை வழங்குகிறது. தக்க காரணங்களுக்கு ஆலோசனை கூற மறுப்பது.

பிற அதிகாரங்கள் (Miscellaneous powers)

மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம். நீதிமன்ற அவமதிப்புக்காகச் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரித்துத் தண்டிக்கலாம்.

தக்க காரணங்களுக்காக எவர் மீதும் நீதி ஆணைகளைப் (Writes) பிறப்பிக்கலாம். உச்சநீதிமன்றத் தீர்ப்புகள், கீழ் நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும்.

உச்ச நீதி மன்றம் மட்டுமே நீதிப்புனராய்வு (Judicial Review) செய்ய முடியும். பொது நல வழக்குகளை (Public Interest Petitions) விசாரித்துத் தீர்ப்பு வழங்கும்.

மாநிலச் சட்டமன்றம்

மைய அரசு அமைப்பைப் போலவே மாநில அரசு அமைப்பு காணப்படுகிறது. இந்திய அரசு கூட்டாட்சி அரசு முறையைப் பின்பற்றுகிறது. இந்தியாவில் 28 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன.

ஒவ்வொரு மாநிலத்திலும் அரசுத் தலைவர் கவர்னர் / ஆளுநர் இருக்கின்றார். யூனியன் பிரதேசத்திற்கு உதவி ஆளுநர் தலைமை வகிக்கின்றார். சட்டத்துறை, நிர்வாகத் துறை, நீதித்துறை போன்ற மூன்று முக்கியத் துறைகள் அரசிடம் காணப்படுகின்றன.

இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலத்திலும் சட்டமன்றம் உள்ளது. சட்டமன்றத்தின் இரு அவைகளாவன.

* சட்டப் பேரவை (கீழ் அவை)

* சட்ட மேலவை (மேல் அவை)

சில மாநிலங்களில் கீழ் அவை மட்டுமே செயல்படுகிறது. தமிழ்நாட்டில் கீழ் அவை மட்டுமே செயல்படுகிறது.

சட்டப் பேரவை: உறுப்பினர்கள் பொதுமக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். சட்டப்பேரவையின் குறைந்தபட்ச உறுப்பினர்கள் 60, உயர்ந்தபட்ச உறுப்பினர்கள் 500 ஆகும். சட்டப்பேரவையின் உண்மையான அங்கத்தினர்களின் எண்ணிக்கை மாநிலத்தின் மக்கட் தொகையைப் பொருத்தது. தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 234, நியமன (ஆங்கில இந்தியர்) உறுப்பினர்கள் மொத்தம் 235 உறுப்பினர்கள் உள்ளனர். சட்டப் பேரவைக் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பவர் சபாநாயகர் ஆவார். இவர்கள் பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

* சட்ட மேலவை (விதான் பிரசாத்: சட்டமேலவை அங்கத்தினர்கள் பொதுமக்ளால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. சட்டப் பேரவை அங்கத்தினர்களிள் 3இல் 1 பகுதிக்கு மேலில்லாத எண்ணிக்கையுள்ள அங்கத்தினர்கள் 30 வயது உள்ளவர்கள் சட்டமேலவை உறுப்பினர் ஆகலாம். இவர்கள் பதவிக்காலம் 6 ஆண்டுகள். இது நிரந்தரமான அவை ஆகும். சட்டமேலவைக் கூட்டத்திற்கு அவைத்தலைவர் தலைமை வகிக்கிறார்.

மாநிலச் சட்டமன்றத்தின் பணிகள்

மாநிலச் சட்டமன்றம், மாநிலப் பட்டியலிலிருந்தும் பொதுப்பட்டியலிலிருந்தும் சட்டமியற்றுகிறது. மூன்றுமுறை சட்ட வரைவு வாசிக்கப்பட்ட பின்னரே ஒப்புதல் அளிக்கப்படும். பின்னர் ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்படும். மாநிலத்தின் நிதிசார்ந்த செயல்களில் சட்டமன்றம் கட்டுப்படுத்துகிறது.

சட்டப் பேரவையின் செயல்களுக்கு அமைச்சரவை பொறுப்பு வகிக்கிறது. ஆகையால் சட்டசபை நிர்வாகச் சபையைக் கட்டுப்படுத்துகிறது. சட்ட மேலவையை விட சட்டப்பேரவை அதிகாரமிக்கது.

மாநில செயலாட்சி (அ) நிர்வாகத்துறை

ஆளுநர்: மாநிலச் செயலாட்சித் துறையின் தலைமைப் பொறுப்பினை வகிப்பவர் ஆளுநர் ஆவார். மைய அரசின் ஆலோசனைப்படி 5 ஆண்டுகளுக்குக் குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார். 35 வயது நிரம்பிய இந்தியக் குடிமகன் / குடிமகள் ஆளுநர் நியமனத்திற்குத் தகுதியானவர் ஆவார்.

ஆளுநரின் அதிகாரங்கள்

சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை, நிதித்துறை போன்றவற்றின் மீது ஆளுநர் அதிகாரங்களைப் பெற்றிருக்கின்றார். சரத்து 154 இன் படி மாநிலத்தின் செயலாட்சித்துறை அதிகாரங்கள் யாவும் அரசியலமைப்புச் செயல்படி ஆளுநரிடம் உள்ளது

* நிர்வாக அதிகாரம்: மாநில அரசின் அனைத்து நிர்வாக முடிவுகள் மற்றும் செயல்கள் அனைத்திற்கும் ஒப்புதல் அளிப்பவர் ஆளுநர் ஆவார். ஆளுநர் முதல் அமைச்சரையும் மற்றும் முதல் அமைச்சரின் ஆலோசனைப்படி பிற அமைச்சர்களையும் மற்றும் அரசின் தலைமை வழக்கறிஞரையும், அரசுப் பணியாளர் தேர்வுக்குழு உறுப்பினர்களையும் நியமனம் செய்கிறார்.

* சட்ட நிர்வாகம்: சட்டமன்றம் கூட்ட அழைப்பு விடுத்தல், சட்டசபை ஒத்திவைத்தல், மற்றும் சட்டபையைக் கலைத்தல் போன்ற அதிகாரங்களை ஆளுநர் பெற்றுள்ளார். எல்லாச் சட்டங்களும் இவருடைய ஒப்புதலைப் பெற வேண்டும். சட்டப்பேரவை, செயலில் இல்லாதபோது அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க அதிகாரமுண்டு. மேலவை உறுப்பினர்கள் சிலரையும் இவர் நியமனம் செய்கிறார்.

* நிதி அதிகாரம்: நிதித் தொடர்புடைய சட்ட வரைவை அறிமுகப்படுத்துவதற்கு முன் ஆளுநரின் ஒப்புதல் பெற்ற பின்பே சட்டப் பேரவையில் வைக்கப்பட வேண்டும்.

* நீதி அதிகாரம்: தலைமை நீதிபதி மற்றும் நீதிதுறையின் உயர் அலுவலர்களை நியமனம் செய்தல், மாறுதல் செய்தல் அல்லது பதவி உயர்வளித்தல் போன்ற அதிகாரங்களை ஆளுநர் பெற்றிருக்கின்றார். அவசரக்காலங்களில் ஆட்சிப் பொறுப்பைக் குடியரசுத் தலைவரே ஏற்க, ஆலோசனை சொல்ல உரிமை உண்டு. மாநில அரசு கலைந்து போனால் ஆளுநரே உண்மையான அதிகாரம் பெறுகின்றார்.

முதலமைச்சர்

தேர்தலில் வெற்றி பெற்ற / பெரும்பான்மை பெற்ற கட்சித் தலைவரை ஆளுநர் அழைப்பார். மாநில நிர்வாகம் ஏற்கவும் பிற அமைச்சர்களைப் பட்டியலிடவும் அறிவிப்பார். பெரும்பான்மை பெற்ற கட்சித் தலைவரையே மாநில முதலமைச்சராக நியமிப்பார்.

அமைச்சரவை: மாநிலத்தின் உண்மை நிர்வாகம் அமைச்சர் அவையிடம் உள்ளது. முதலமைச்சர் தன் அமைச்சர் குழு உறுப்பினர்கள் பட்டியலை ஆளுநர் ஒப்புதல் பெற்று அறிவிப்பார். அமைச்சர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்.

அதிகாரங்கள் : அமைச்சர் அவை மாநிலச் சட்டமன்றத்திற்குப் பொறுப்பு வாய்ந்தது. சட்டமன்றத்தில் அமைச்சர்கள் பங்கேற்றுக் கலந்துரையாடலாம். பின்னரே அரசு மசோதா மற்றும் நிதி மசோதா சட்டமாக்கப்படும். எனவே நெருங்கிய உறவு, அமைச்சர் அவைக்கும், மாநில சட்டமன்றத்திற்கும் உண்டு.

மாநில நீதித்துறை

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் நீதித்துறை உள்ளது. இங்குத் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளும் உள்ளனர். குடியரசுத் தலைவரால் தலைமை நீதிபதி நியமிக்கப்படுகிறார்.

தகுதிகள்: தலைமை நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். நீதிமன்றத்தில் நீதிபதியாக, குறைந்தது 10 ஆண்டுகள் அல்லது தலைமை நீதிமன்றத்தில் வழக்குரைஞராக 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். இவர் 62 வயது முடிவில் ஓய்வு பெறுவார்.

அதிகாரங்கள் மற்றும் பணிகள்: மாநிலத்தின் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் உயர்ந்த நீதிமன்றம் இதுவே ஆகும். மாவட்ட நீதி மன்றத்திலிருந்து வரும் வழக்குகளை விசாரிக்கும் மேல்முறையீடு மன்றமாக மாநில உயர்நீதிமன்றம் திகழ்கிறது. இது கீழ் நீதிமன்றங்களுக்கு ஆலோசனைகள் மற்றும் சட்ட வரைவுகளை அளிக்கிறது.

கீழ்நீதிமன்றங்கள்: ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட நீதிமன்றம் உள்ளது. மாவட்டத்தின் உரிமையியல் குற்றவியல் விசாரிக்கும் உயர் நீதி மன்றம் இதுவே ஆகும். மாவட்ட நீதிபதியை மாநில ஆளுநர் நியமனம் செய்கிறார். இதன் கீழ் மாஜிஸ்டிரேட்டு குற்றவியல் நீதிமன்றமும், முன்சீப் உரிமையியல் நீதி மன்றமும் உள்ளன.

வருவாய்த்துறை நீதிமன்றம்: இதன்கீழ் மாவட்ட நீதிமன்றம் அமையும். இதில் மாவட்ட ஆட்சியர், தாசில்தார் ஆகியோர் செயல்படுவர். மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் வருவாய் அலுவலர் ஆவார். மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடு செய்யலாம்.

லோக் அதாலத்

நாட்டின் பல மாவட்டங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடித்துவைக்கும் பணியைச் செய்கிறது. உரிமையியல் நீதிமன்றத்திற்குச் சமமாக இம்மன்றம் கருதப்படுகிறது.

குடும்ப நீதிமன்றம்: 1984 ஆம் ஆண்டு குடும்ப நீதி மன்றச் சட்டப்படி இந்நீதி மன்ற நோக்கம், சமாதானப்படுத்துதல், விரைந்து வழக்குகளை முடித்துவைத்தல் போன்ற பணிகளைக் குடும்பம் மற்றும் திருமண விவகாரத்தில் செய்கிறது.

உள்ளாட்சி அமைப்புகள்

இந்திய நாடு மூன்றடுக்கு ஆட்சியமைப்பைக் கொண்டுள்ளது. அவையாவன

* மைய அரசு அல்லது நடுவண் அரசு

* மாநில அரசு

* உள்ளாட்சி அமைப்புகள் - நகர் பாலிகா, கிராம ஊராட்சி

சோழர் ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாகச் செயல்பட்டன. குடவோலை முறை மூலம் உள்ளாட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என உத்திரமேரூர் கல்வெட்டு தெளிவாகக் குறிப்பிடுகிறது. மேலும் இக்கல்வெட்டு கிராமச் சபைகள் பற்றியும், வாரியங்கள் அமைத்துப் பொது அலுவல்களைக் கவனித்தது பற்றியும் குறிப்பிடுகிறது. விஜயநகர அரசிலும் கிராம அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். ஆங்கிலேயர் ஆட்சியில் வைசிராய் ரிப்பன் பிரபு காலத்தில் 1884இல் “தல சுய ஆட்சித் திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி ஜில்லா போர்டுகளும், தாலுகா போர்டுகளும் ஏற்படுத்தப்பட்டன.

இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தாலுகா, ஜில்லா போர்டுகள் ஒழிக்கப்பட்டன. கிராமப் பஞ்சாயத்து யூனியன், நகராட்சிகள், மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டன. பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி அமைப்புகள் நலிவடைந்தன. பல உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டன. பல்வேறு அரசியல் காரணங்களால் உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் நடைபெறவில்லை. எனினும் அவை அனைத்தும் தனி அதிகாரிகளின் கீழ் செயல்பட்டன.

பஞ்சாயத்து ராஜ் சட்டம்

இந்தியாவின் உயிர் நாடியாகிய கிராமங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் புத்துயிர் ஊட்டி அவைகளுக்கான தேர்தல் நடைபெற முன்னாள் பிரதமர் திரு ராஜிவ்காந்தி அவர்களால் உருவாக்கப்பட்டதே பஞ்சாயத்துராஜ் சட்டம் ஆகும். இந்திய அரசியலமைப்பின் 73 ஆவது மற்றும் 74 ஆவது திருத்தங்களால் பஞ்சாயத்துராஜ் சட்டமும், நகர் பாலிகா சட்டமும் நிறைவேற்றப்பட்டன. மாநில அரசுகள் தத்தம் மாநிலத்தில் நிலவும் சூழ்நிலைக்கேற்ப தனியான சட்டங்களை உருவாக்க இது வழி வகை செய்தது.

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்புகள்

* இச்சட்டத்தின் மூலம் கிராமம், பஞ்சாயத்து, ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் அதிகாரப் பரவல் வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் தேவைகளையும் வளர்ச்சியையும் தாங்களாகவே திட்டமிட்டு நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பை அளித்துள்ளது.

* மத்திய மாநில அரசுகளுக்கு இணையான அங்கீகாரத்தை இச்சட்டம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளை அனைத்து மாநிலங்களிலும் கண்டிப்பாக அமுல்படுத்த இச்சட்டம் உறுதிசெய்தது. காலம் தாழ்ந்தபோதும் உள்ளாட்சி அமைப்பின் உருவாக்கத்தையோ செயல்பாட்டையோ தவிர்த்திட முடியாது.

* நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவதுபோல், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெற இச்சட்டம் வலியுறுத்துகிறது. உள்ளாட்சி அமைப்புகளை மாநில அரசு கலைத்தால் உடனே 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

* உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில அளவில் உயர்நீதிபதி தகுதி கொண்ட மாநிலத் தேர்தல் கமிஷன் ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.

* பஞ்சாயத்து ராஜ் அமைப்பு கிராமம், ஒன்றியம், மாவட்டம் என்ற மூன்றடுக்கு கொண்டது. இதைப்போன்று நகர்பாலிகா பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளைக் கொண்டது. இவை தனித்த உள்ளாட்சி மன்றங்கள் ஆகும்.

* தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினருக்கு அப்பகுதி மக்கள் தொகையில் அவர்களிருக்கும் சதவீதத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்துப் பதவிகளிலும் (மேயர், பஞ்சாயத்துத் தலைவர், ஒன்றியத்தலைவர், மாவட்டத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்) மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

* விவசாயம், நில மேம்பாடு, கால்நடை, மீன்வளம், நீர்ப்பாசனம், சமூகக் காடுகள், சாலைகள், சாலை விளக்குகள், கல்வி, வறுமை ஒழிப்பு, நூலகங்கள், சுகாதாரம், குடும்ப நலம், பொது விநியோகமுறை போன்ற 29 வகையான கடமைகளை ஆற்றுவதற்குப் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

* மாநில அளவில் பஞ்சாயத்து நிதிக்கமிஷன் ஒன்று நிதி ஒதுக்கீட்டிற்கு ஆலோசனை கூற உருவாக்கப்பட்டுள்ளது.

* மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மாவட்டத் திட்டக்குழு அமைத்து வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவர்.

தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் - 1994

தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் அமைப்பு மூன்றடுக்குளைக் கொண்டது.

* கிராம ஊராட்சி

* ஊராட்சி ஒன்றியம்

* மாவட்டப் பஞ்சாயத்து

கிராம ஊராட்சியில் மக்கள்தொகை 500க்குக் குறையாமல் இருப்பர். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 5க்குக் குறையாமலும் 15 க்கு மிகாமலும் உறுப்பினர்கள் இருப்பர். இதன் உறுப்பினர்களை வாக்காளர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பர்.

தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்ட திருத்தம் - 2006

1994, தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டப்படி உள்ளாட்சி அமைப்பில் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வீண் செலவுகளையும், கால விரயத்தையும் தவிர்ப்பதற்காக, 2006 தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத் திருத்தப்படி மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், கிராம ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் போன்ற பதவிகளை வார்டு உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.

கிராம ஊராட்சி

மக்கள் தொகை 500க்குக் குறையாமல் உள்ள கிராமங்களில் கிராம ஊராட்சி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12,618 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் தங்களுக்குள் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பர். கிராம ஊராட்சியில் உள்ள எல்லா வாக்காளர்களும் கிராமச் சபையில் உறுப்பினர் ஆவர். ஆண்டுக்கு 3 முறை கிராமச் சபை கண்டிப்பாகக் கூட்டப்படவேண்டும்; ஊராட்சி மன்றத் தலைவர் கிராமச் சபையின் தலைவருமாவார்.

6 மாதங்களுக்கு ஒரு முறை கிராமச்சபை கட்டாயம் கூட்டப்பட வேண்டும். ஊராட்சிகளின் ஆண்டுத் திட்டங்களை அங்கீகரித்தல், வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்தல், ஊராட்சியின் பணிகளைக் கண்காணித்தல், இவை கிராம ஊராட்சிகளின் பணிகள். ஊராட்சி மன்றத் தலைவரே கிராமச்சபை, மற்றும் ஊராட்சிமன்றக் கூட்டங்களைக் கூட்டுவார். அனைத்திற்கும் இவரே தலைமை வகிப்பார்.

ஊராட்சி ஒன்றியம்

மூன்றடுக்கு ஊராட்சி அமைப்பின் இரண்டாவது நிலை ஊராட்சி ஒன்றியம் ஆகும். இது ஒவ்வொரு வளர்ச்சி வட்டாரத்திலும் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. ஒன்றிய உறுப்பினர்களைக் கட்சி அடிப்படையில் வாக்காளர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 1/5 பங்கு எண்ணிக்கைக்குச் சமமான உறுப்பினர்களை ஊராட்சி மன்றத் தலைவர்கள் மறைமுகமாகத் தேர்ந்தெடுப்பர். ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அனைவரும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களாக இருப்பர். இவ்வாறு இது ஐவகை உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக இருக்கும். ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒரு தலைவரையும், துணைத் தலைவரையும் தேர்ந்தெடுப்பர். தலைவர் சேர்மன் என அழைக்கப்படுவார்.

தலைவரின் கடமைகள்

*ஊராட்சி ஒன்றியக் கூட்டத்தைக் கூட்டுதல்.

*புதிய சட்டப்படி கடமைகளைச் செய்தல், அதிகாரம் செலுத்துதல்,

*ஆவணங்களைக் கையாளுதல்

*அரசுக்கும், ஊராட்சி ஒன்றியத்திற்கும் இடையே பாலம் போல் செயல்படுதல்.

மாவட்ட ஊராட்சி

ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் மாவட்ட ஊராட்சி செயல்படும் 20,000 மக்கள் தொகை தொகுதிகளாக மாவட்ட பஞ்சாயத்து பிரிக்கப்படும். வாக்காளர்கள் மாவட்ட ஊராட்சிக்கு ஒரு உறுப்பினரைக் கட்சி அடிப்படையில் தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஈடாக 1/5 பங்கு உறுப்பினர்களை ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் தேர்ந்தெடுப்பர். அந்த வருவாய் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மற்றும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களாகச் செயல்படுவர். இவ்வாறு இது ஐவகை உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக இருக்கும்.

மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவரின் பணிகள்

* மாவட்ட ஊராட்சி மன்றக் கூட்டத்தைக் கூட்டுதல்.

*பஞ்சாயத்து ராஜ் அளிக்கும் உரிமைகளையும் கடமைகளையும் அதிகாரத்தையும் செயல்படுத்துதல்.

*மாவட்ட ஊராட்சி ஆவணங்களைக் கையாளுதல்.

*அரசுக்கும், மாவட்ட ஊராட்சிகளுக்கும் இடையே இனிய நல்லுறவை ஏற்படுத்துதல்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு புத்தகம்

2.92682926829
ஜெயஸ்ரீ Apr 05, 2019 12:52 AM

மிகவும் பயனுள்ள தகவல்கள்
நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top