இந்தியாவின் அரசியலமைப்பு மத்திய அரசிற்கும் மாநில அரசுகளுக்கும் தனியான நிர்வாக முறையை அளித்து ஒரு கூட்டாட்சி அரசாங்க முறையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 29 மாநிலங்களும், தலைநகர் பிரதேசமான புதுடில்லி உள்பட 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. அரசியலமைப்பு, மத்திய மற்றும் மாநிலங்களின் ஆளுமைக்கான பகுதிகளைப் பெற்றுள்ளது. அரசியலமைப்பு விதி 370ன்படி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் அதற்கென்று தனி அரசியலமைப்பைப் பெற்றிருப்பதைத் தவிர, அரசியலமைப்பின் VI வது பகுதியில் விதி 152 லிருந்து விதி 237 வரை எல்லா மாநில அரசாங்கங்களும் ஒரே மாதிரியான அமைப்பைப் பெற்றுள்ளன என்பதை அது குறிப்பிடுகிறது. விரிவாகக் கூறினால் மத்திய அரசு பெற்றுள்ள பாராளுமன்ற அரசாங்க முறையே எல்லா மாநிலங்களிலும் உள்ளது. ஆளுநர், முதலமைச்சர், அமைச்சரவை, சட்டத்துறை, நீதித்துறை, செயலகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் அதற்குக் கீழுள்ள அமைப்புகள் போன்றவைகளை விளக்குவதன் மூலம் நாம் இங்கே தமிழ்நாட்டின் அரசாங்கத்தை அறியலாம்.
மாநிலத்தின் செயல்துறை அதிகாரம் ஆளுநரிடத்தில் உள்ளது. மற்றும் மாநிலத்தின் எல்லா செயல்துறை நடவடிக்கைகளும் ஆளுநரின் பெயரில் செயல்படுத்தப்பட உள்ளன. ஆனால், பாராளுமன்ற முறைக்கிணங்க, அவர் மாநிலத்தின் பெயரளவுத் தலைவராக செயல்பட கடமைப்பட்டுள்ளார். பொதுவாக, அரசியலமைப்பு விதி 153க்கிணங்க, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஆளுநர் இருப்பார். ஆனால், 1956 ஆம் ஆண்டின் அரசியலமைப்புத் திருத்தம் ஒரு ஆளுநர் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் பதவி வகிக்கலாம் என்று வழிவகை செய்தது. ஆளுநர் என்பவர் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. ஆனால், ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுகிறார். ஜனாதிபதியின் விருப்பம் உள்ளவரை பதவி வகிக்கிறார். 35 வயது நிரம்பிய எந்த இந்தியக் குடிமகனும் அந்தப் பதவிக்குத் தகுதியுடையவர். ஆனால், விதி 158க்கிணங்க அவர் எவ்வித வருவாய்தரும் பதவியை வகித்தல் கூடாது மற்றும் மத்திய அல்லது எந்த மாநிலச் சட்டத்துறையிலும் உறுப்பினராக இருத்தல் கூடாது. ஆனால், ஆளுநராக நியமனம் செய்யப்படவேண்டிய ஒரு நபர் பின்வரும் தன்மைகளில் திருப்தி படுத்தவேண்டும் என்று சர்க்காரியா ஆணையம் கூறியுள்ளது.
அரசியலமைப்பிற்கிணங்க, ஆளுநர் ஜனாதிபதியால் நியமனம் செய்யபடுகிறார். ஆனால், நடைமுறையில், பிரதம மந்திரியின் பரிந்துரையின்பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார். ஆளுநர் பதவியின் இயல்பான காலம் ஐந்து வருடங்கள் ஆகும். அவருக்கு மறு பதவிக்காலமும் கொடுக்கப்படலாம். அவரின் பதவிக்காலம் முடிவடைந்த போதிலும்கூட பின்னர் வருபவர் பதவியேற்கும் வரை பதவியில் தொடர்கிறார். ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என்று இருக்கின்றபோதிலும், அவருடைய இராஜினாமாவாலோ அல்லது ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்வதாலோ அவர் பதவி இழக்கலாம். மாநிலச் சட்டத்துறையில் வாக்கெடுப்புப்பெறாத தொகுப்பு நிதியிலிருந்து அவர் தனது சம்பளத்தைப் பெறுகிறார்.
ஆளுநரின் அதிகாரங்களும், பணிகளும் ஆளுநர் மாநில செயல்துறையின் தலைவராகத் திகழ்கிறார். மற்றும் அதிகமான அதிகாரங்களையும் அவர் பெற்றுள்ளார். விதி 163-க்கிணங்க, ஆளுநர் தனது பணிகளையும் அதிகாராங்களையும் செயல்படுத்துகின்றபோது, சில குறிப்பட்ட விதிவிலக்குகளைத்தவிர, முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையால் வழிநடத்தப்படுகிறார். மாநில அளவிலான செயல்துறைத் தலைவராக ஆளுநர் பின்வருகின்ற பணிகளையும் அதிகாரங்களையும் பெற்றுள்ளார்.
அவர் எந்த விவாதத்தின் மீதான அமைச்சரவையின் முடிவையும் தன்னிடம் சமர்ப்பிக்கும்படி முதலமைச்சரை கேட்கலாம். அவர், தனது பெயரால் அமுல்படுத்தப்படுகின்ற ஆணைகள் தொடர்பான விதிகளை ஏற்படுத்தலாம். ஆனால், அவை நியாமானதாக பிரச்சினைக்கு இடம் தராதவையாக இருத்தல் வேண்டும்.
அரசாங்க செயல்பாடுகளின் சீர்பாட்டிற்காகவும், அச்செயல்பாடுகளை அமைச்சர்களிடையே பகிர்ந்தளிக்கவும் அவர் விதிகளை ஏற்படுத்தலாம். விதி 356- ன்படி, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த ஜனாதிபதிக்கு அவர் பரிந்துரை செய்யலாம். இவ்வித ஆட்சிக் காலத்தில், ஜனாதிபதியின் முகவராக இருந்துகொண்டு விரிவான செயல்துறை அதிகாரங்களை ஆளுநர் செலுத்துகிறார்.
வருடாந்திர நிதிநிலை அறிக்கை எனப்படும் மாநிலத்தின் வரவுசெலவுத்திட்டம் சட்டமன்றத்தின் முன் வைக்கப்படுகிறதா என்பதைக் கவனிக்க அவர் கடமைப்பட்டுள்ளார். அவரின் முன்பரிந்துரைபெற்ற பின்னரே மாநில சட்டமன்றத்தில் பண மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட முடியும். எந்த ஒரு மானியக் கோரிக்கைக்கும் அவரின் பரிந்துரை விதிவிலக்கு அளிக்கப்படமாட்டாது. எவ்வித எதிர்பாராத செலவினத்தைச் சந்திப்பதற்கும் மாநில கூட்டு நிதியிலிருந்து முன்பணத்தை அவர் ஏற்படுத்தலாம். மற்றும், பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின் நிதிநிலைமையை ஆய்வு செய்வதற்காக ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் ஒரு நிதி ஆணையத்தை அவர் அமைக்கிறார்.
ஆளுநர் எவ்வித குற்றத்தின் தண்டனையிலிருந்தும் ஒருவரின் தண்டனையை குறைக்கவோ, தள்ளிவைக்கவோ அல்லது மன்னிப்பு வழங்கவோ முடியும். ஆனால், ஆளுநரின் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதியின் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்திலிருந்து பின்வரும் வழிகளில் வேறுபடுகிறது.
மேலே கூறப்பட்ட பணிகள் மற்றும் அதிகாரங்களுடன், ஆளுநர் பின்வருகின்ற இதரப் பணிகளையும் செயல்படுத்துகிறார்.
இந்திய அரசியலமைப்பு மத்தியிலும், மாநிலங்களிலும் பாராளுமன்ற அரசாங்க முறையை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக, ஒரு பெயரளவு நிர்வாகியாக மட்டுமே ஆளுநர் ஆக்கப்பட்டிருக்கிறார் மற்றும் முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவை உண்மையான செயல்துறையாக அமைகிறது. ஆகவே, முதலமைச்சரைத் தலைவராகப் பெற்றுள்ள அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையுடன், ஆளுநர் தனது அதிகாரங்களையும், பணிகளையும் செயல்படுத்தக் கடமைப்பட்டவர். உண்மையில், இந்தியக் கூட்டாட்சி முறையில் மாநிலத்தின் அரசியலமைப்புத்தலைவர், மத்திய அரசின் பிரதிநிதி ஆகிய இரட்டைத்தன்மையான பங்கினை ஆளுநர் பதவிக்கு அரசியலமைப்பு வழங்கயுள்ளது.
இந்திய அரசியலமைப்புக்கிணங்க, மாநிலச் செயல்துறையில் பெயரளவுத் தலைவராக ஆளுநரும் உண்மையான தலைவராக முதலமைச்சரும் உள்ளனர். பாராளுமன்ற அரசாங்க முறை நிலவுவதால், இரண்டு வகையான தலைவர்களை நாம் காண்கின்றோம். இவ்வாறு மாநில அளவில் முதலமைச்சரின் நிலை மத்தியில் பிரதம மந்திரியின் நிலையைப் போன்றது. விதி 163-ன் படி, தன்விருப்ப அதிகாரங்களைத் தவிர, மற்ற அதிகாரங்களையும் பணிகளையும் ஆளுநர் செயல்படுத்துவதில் உதவியும் ஆலோசனையும் கூறுவதற்கு, முதலமைச்சரைத் தலைவராகப் பெற்றுள்ள ஒரு அமைச்சரவையை ஒவ்வொரு மாநிலமும் பெற்றிருக்கும். முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். நடைமுறையில், மாநில சட்டசபைக்கான பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்தவுடன், மாநிலத்தில் அமைச்சகம் அமைக்க பெரும்பான்மைக் கட்சியின் தலைவரை ஆளுநர் அழைக்கிறார். ஆளுநரின் விருப்பம் உள்ளவரை முதலமைச்சர் பதவி வகிப்பார். இருப்பினும், முதலமைச்சர் பதவியின் இயல்பான பதவிக்காலம் ஐந்து வருடங்கள் ஆகும். ஆனால், இராஜினாமாவாலும், விதி 356-ன்படி மாநில அவசரநிலை அமுலாக்கத்தாலும் அவர் பதவி இழக்கலாம்.
முதலமைச்சர் மாநில நிர்வாகத்தின் தலைவராக இருக்கிறார். அவர் அதிகமான பணிகளையும், அதிகாரங்களையும் பெற்றுள்ளார். முதலமைச்சரின் பணிகளும் அதிகாரங்களும் பின்வருமாறு
விதி 167-ன்படி ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் இடையிலான தொடர்பின் பிரதான வழியாக முதலமைச்சர் உள்ளார். மற்றும்
பின்வரும் அலுவலர்களின் நியமனம் தொடர்பாக ஆளுநருக்கு அவர் ஆலோசனை கூறுகிறார்.
இவ்வாறாக, மாநில நிர்வாகத்தில் மிக முக்கியமான மற்றும் உயர்ந்த பங்கில் முதலமைச்சர் செயல்படுகிறார். இருப்பினும், ஆளுநர் சிறப்பு நிலையைப் பெற்றுள்ள மாநிலங்களில் அவரின் தன்விருப்ப அதிகாரங்கள் முதலமைச்சரின் பங்கு மற்றும் முக்கியத்துவத்தை சிறிதளவு குறைத்துள்ளன. ஆனால், தமிழ்நாடு போன்ற அமைச்சரவை உறுதிப்பாடுள்ள மாநிலங்களில் அவ்வாறு இருக்கமுடியாது.
பெயரளவுத் தலைவராக இருக்கிறார் மற்றும் மாநில அரசாங்கத்தின் உண்மையான அதிகாரம் அமைச்சரவையிடம் உள்ளது. ஆளுநர் தன் விருப்ப அதிகாரங்களைப் பெற்றுள்ள போதிலும், அவர் எப்போதாவது அவைகளைச் செயல்படுத்துகிறார். ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, ஆளுநர் முதலமைச்சரை நியமிக்கிறார் மற்றும் அவரின் பரிந்துரையின்பேரில் மற்ற அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். அமைச்சர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட பதவிக்காலம் இல்லை. மேலும் அவர்கள் ஆளுநரின் விருப்பம் உள்ளவரைப் பதவி வகிப்பர். இருப்பினும், அமைச்சர்களின் இயல்பான பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். அவ்வப்போது மாநில சட்டத்துறையால் அமைச்சர்களின் சம்பளங்களும் படிகளும் நிர்ணயிக்கப்படுகின்றன.
மத்திய அரசாங்கத்தில் உள்ளதைப் போல மாநிலங்களில் பாராளுமன்ற அரசாங்கமுறை பின்பற்றப்படுவதால், அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் மாநிலச் சட்ட சபைக்கு பொறுப்புடையவர்களாக உள்ளனர். அமைச்சர்கள் சட்ட சபையில் உறுப்பினர்களாகவும் உள்ளனர். அதன் விளைவாக, அமைச்சர்கள் ஒரு குழுவாக செயல்படுகின்றனர். ‘ஒருவருக்காக அனைவர் மற்றும் அனைவருக்காக ஒருவர்” என்ற கொள்கை அமைச்சரவையின் செயல்பாட்டில் பணிபுரிகிறது. அமைச்சரவையின் கூட்டு முடிவிலிருந்து ஒரு அமைச்சர் தன்னைப் பிரிக்க முடியாது. சட்டசபையின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும்வரை அமைச்சரவை அதிகாரத்தில் இருக்கிறது. சட்ட சபையில் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், முதலமைச்சரால் தலைமை வகிக்கப்படும் அமைச்சரவை இராஜினாமாவை சமர்பிக்க கடமைப்பட்டுள்ளது. இதற்குக் கூட்டுப் பொறுப்பு என்று பெயர்.
அமைச்சரவையின் அளவு தொடர்பாக, இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஒரேமாதிரியாக இல்லை. நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் (ARC) பின்வருமாறு கூறியுள்ளது. “பல்வேறு மாநிலங்களில் உள்ள நிர்வாகத் தேவைகளைப் பரந்த நோக்கில் கணக்கில் எடுத்துக்கொண்டு, உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரம் போன்ற பெரிய மாநிலங்களில் கிட்டத்தட்ட 20 நபர்களை அமைச்சரவையில் பெற்றிருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம். மதராஸ் (தற்போது தமிழ்நாடு), கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசம் போன்ற நடுத்தர அளவிலான மாநிலங்கள் 14 முதல் 18 வரை அமைச்சர்கள் இருக்கலாம். கேரளா, ஹரியானா மற்றும் பஞ்சாப் போன்ற சிறிய மாநிலங்கள் 8 முதல் 12 வரை அமைச்சர்களைப் பெற்றிருக்கலாம். இருப்பினும், அமைச்சரவையில் அளவு, தொடர்புடைய மாநில முதலமைச்சரைச் சார்ந்துள்ளது. ஆனால், சமீபகால அரசியலமைப்புத் திருத்ததிற்கிணங்க, மாநில சட்டசபையின் மொத்த உறுப்பினர்களின் 15 சதவிகிதத்திற்கு மேல் அமைச்சர்களின் எண்ணிக்கை செல்லக்கூடாது. ஒவ்வொரு அமைச்சரும் மாநில சட்டசபையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். இல்லையென்றால், ஆறு மாதத்திற்குள் அதன் உறுப்பினராக. தமிழ்நாட்டில் சட்டசபை பலத்திற்கேற்ப (234 உறுப்பினர்கள்) அமைச்சர்களின் எண்ணிக்கை 36 வரை, அதாவது 234ன் 15 சதவிகிதம் இருக்கலாம்.
மாநிலத்தில் சட்டத்துறையின் குறிப்பாக சட்டசபையின் வழிகாட்டியாகவும், எஜமானாகவும் அமைச்சரவை இருக்கிறது. அதுதவிர, மாநிலத்தின் பொதுக் கொள்கைகளை உருவாக்குபவர்களாகவும், அமுல்படுத்துபவர்களாகவும் அமைச்சர்கள் உள்ளனர். இருப்பினும், அமைச்சரவைக்கு எதிராக ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இயற்றும் உரிமையை மாநில சட்டசபைப் பெற்றுத்திகழ்கிறது. எனவே, மாநில சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது சீரிய விமர்சனத்திற்கு அமைச்சர்கள் உட்படுத்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டில், இது வரையில் எந்த அமைச்சரவைக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதுவும் இயற்றப்படவில்லை. ஆனால், 1963-ல் காமராஜ் திட்டத்திற்கு இணங்க முதலமைச்சர் பதவியிலிருந்து கே. காமராஜ் இராஜினாமா செய்தார். விதி 356-ன்படி மாநில அவசரநிலைப் பிரகடனத்திற்கிணங்க 1980-ல் எம்.ஜி.இராமச்சந்திரன் அமைச்சரவை கலைக்கட்டப்பட்டது. இதேபோல, 1991ல் மு.கருணாநிதி அமைச்சரவை கலைக்கப்பட்டது. சுருக்கத்தில், முதலமைச்சரை தலைவராகப் பெற்றுள்ள அமைச்சரவை மாநிலத்தில் மக்களின் நலனுக்காக எதையும் அல்லது ஒவ்வொன்றையும் தீர்மானிக்கிறது.
ஒரு மாநில சட்டமன்றம் ஆளுநர் மற்றும் ஒன்று அல்லது இரண்டு சபைகளைப் பெற்றுள்ளது. ஒரு மாநில சட்டமன்றம் ஒரவையை உடையதாகவோ அல்லது ஈரவையை உடையதாகவோ இருக்கலாம். தற்போது பீகார், கர்நாடகம், மஹராஷ்ட்ரம், உத்திரப்பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற 5 மாநிலங்கள் மட்டும் ஈரவை சட்டமன்றத்தைப் பெற்றுள்ளன.
ஒரு மாநிலத்தில் சட்டசபை என்பது கீழவை அல்லது முதலவை என்றும் மேலவை அல்லது இரண்டாம் அவை என்றும் இரு அவைகளைக் கொண்டிருக்கலாம். அல்லது முதலவை அல்லது கீழ் அவையை மட்டுமேயுடையதாகவும் இருக்கலாம். ஒரவை முறையில் சட்டசபை என்ற பெயர் நிலவுகிறது. 1986-வரை தமிழ்நாடு சட்டமன்றம் ஈரவையைப் பெற்றிருந்தது. அந்த ஆண்டு முதலமச்சரான எம்.ஜி.இராமச்சந்திரனால் தலைமை வகித்த அஇஅதிமுக அரசாங்கத்தில், மேலவை என்ற இரண்டாம் அவை ரத்து செய்யப்பட்டது. எனவே, தமிழ்நாட்டில் ஒரு சபை மட்டுமே இருப்பினும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் இரண்டு அவைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது.
மேலவை ஒரு அலங்கார சபையாக மட்டுமே உள்ளது. மேலும் அதன் மிகுந்த நிலைப்பாடு கீழவையின் விருப்பத்தைச் சார்ந்திருக்கிறது. அரசியலமைப்பின் விதி 169-ன் படி,தொடர்புடைய மாநிலத்தின் பரிந்துரையின் மீது பாராளுமன்றத்தின் ஒரு சாதாரணச் சட்டத்தால் மேலவை ஏற்படுத்தப்படலாம். அல்லது ஒழிக்கப்படலாம். ஆனால், மேலவையை உருவாக்குவதற்கு அல்லது ஒழிப்பதற்குச் சட்டசபையின் பரிந்துரை அவசியம். இப்பரிந்துரை மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களால் ஆதரிக்கப்பட்டு நிறைவேற்றப்படவேண்டும்.
அமைப்பு மேலவையின் உறுப்பினர்கள் சட்ட சபையின் மொத்த உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமலும் ஆனால் நாற்பதுக்குக் குறையாமலும் இருப்பார்கள். தமிழ்நாட்டின் மேலவை கலைக்கப்பட்டபோது கவுன்சில் 63 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. இயல்பாகவே, நேரடித் தேர்தல், மறைமுகத் தேர்தல் மற்றும் நியமனம் போன்றவை அடங்கிய ஒரு கலப்பு பிரதிநிதித்துவத்தால் அது அமைக்கப்படுகிறது. மேலவைக்கான தேர்தல்கள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையால் ஒற்றை மாற்று வாக்கு முறையில் பின்வருகின்ற வகையில் நடத்தப்படுகின்றன (விதி - 17).
தகுதிகளும், பதவிக்காலமும் அரசியலமைப்புக்கிணங்க, மேலவை உறுப்பினராவதற்கு ஒரு நபர் பின்வருகின்ற தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
பாராளுமன்றத்தின் இராஜ்ய சபையைப் போல, அதன் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒய்வு பெறுகின்றனர். மேலவை உறுப்பினர் ஆறு வருட பதவிக்காலத்தைப் பெற்றுள்ளார். மேலும் அவர் கவுன்சிலுக்கு மறுமுறை தேர்ந்தெடுக்கப்படலாம்.
பொதுவாகவே, மேலவை ஒரு அலங்கார அவையாக மட்டுமே திகழ்கிறது. அதனால், அது ஒரு நலிந்த அவையாகக் கருதப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் அல்லது அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களின் ஒப்புதலளிப்பில் அது பங்கேற்பதில்லை. சுருக்கத்தில், கீழவையுடன் தொடர்புப் படுத்துகையில், மேலவை அதிகாரமற்றதாக உள்ளது. மாநில சட்டமன்றத்தின் இரண்டாம் அவை அல்லது மேலவை என்று அதை அழைப்பது பொருத்தமற்றதாக உள்ளது. முன்னர் குறிப்பிட்டதைப் போல், தமிழ்நாட்டில் மேலவை தற்போது இல்லை. ஆகவே, தமிழ்நாடு ஒரவை சட்டமன்றத்தைப் பெற்றுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும், பொதுவாக சட்டத்துறை என்பது சட்டசபை என பொருள்படும். மேலவையுள்ள மாநிலத்தில் கூட இதே நிலைதான். தமிழ்நாடு சட்டத்துறை சட்டசபை என்ற ஒரே ஒரு அவையை மட்டுமே பெற்றுள்ளது. அமைப்பு அரசியலமைப்பின் விதி 170-க்கிணங்க, ஒரு மாநில சட்டசபை 500-க்கு மிகாமலும் 50-க்கு குறையாமலும் உறுப்பினர்களைப் பெற்றிருக்கும். எனினும், அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமாக ஒரு சட்டசபையின் குறைந்தபட்ச பலத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பாராளுமன்றம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டு சட்டசபை 235 உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது. இதில் 234 உறுப்பினர்களை வயது வந்தோர் வாக்குரிமை அடிப்படையில் தேர்தல் தொகுதிகளிலிருந்து மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மற்றுமுள்ள ஒரு உறுப்பினர் ஆங்கிலோ-இந்திய இனத்திலிருந்து ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். இருப்பினும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர்களுக்காக அவையில் இடங்கள் ஒதுக்கப்படும்.
சட்டசபை உறுப்பினர் பதவிக்காக போட்டியிடும் ஒரு நபர் பின்வருகின்ற தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
இயல்பாகவே, சட்டசபையின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும். ஆனால், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் அதன் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் என்பது விதிவிலக்காகும். இருப்பினும், விதி 356-ன்படி மாநில அவசரநிலை என்று அழைக்கப்படுகின்ற ஜனாதிபதியின் பிரகடனப்படுத்தும் ஆணையின் விளைவாக, எந்த நேரமும் ஆளுநரால் சட்டசபை கலைக்கப்படலாம். விதி 352-ன்படி தேசிய அவசரநிலையின் காரணமாக, சட்டசபையின் பதவிக்காலம் பாராளுமன்றத்தால் நீட்டிக்கப்படலாம். ஆனால் அது ஒரு வருடத்திற்கு மிகக் கூடாது. இருப்பினும், அவசரநிலைப் பிரகடனம் வாபஸ் பெற்றபிறகு ஆறு மாதத்திற்குள் புதிய தேர்தல்கள் நடத்த வேண்டும். இவைதவிர, பதவிக்காலம் முடிவதற்கு முன்பே சட்டசபையை கலைப்பதற்கான பரிந்துரை செய்வதற்கு, ஆளுநரிடம் முதலமைச்சர் தானாக முன்வரலாம். அதிகாரங்களும், பணிகளும் தமிழ்நாட்டில் சட்டசபை பல்வேறு பணிகளைச் செய்கின்ற ஒரு அரசியல் நிறுவனமாக உள்ளது.
மேலே கூறப்பட்ட அதிகாரங்கள் சட்டசபைக்கு மட்டுமே உரித்தானதாகும். இவ்வாறாக, கோட்பாடு மற்றும் நடைமுறை ரீதியில் சட்டசபை மிகுந்த அதிகாரங்களைப் பெற்றுள்ளது. எனவே, சட்டசபை உறுப்பினர்கள் (M.L.A) மேலவை உறுப்பினர்களைவிட (M.L.C)அதிக அதிகாரங்களும் பணிகளும் பெற்றுள்ளனர்.
ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் ஆராய்ச்சி கல்வியியல் நிறுவனம்