பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / அரசு இறைமைக்கு ஏற்படும் சவால்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அரசு இறைமைக்கு ஏற்படும் சவால்கள்

அரசு இறைமைக்கு ஏற்படும் சவால்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

ஒரு அரசுக்கு, இறைமை தலையாய பண்பு கூறாகக் கருதப்படுகின்றது. இவ்வுலகில் சுதந்திரமான ஒவ்வொரு நாடும் இறைமை பெற்று திகழ்கின்றது. பொதுவாக இறைமையை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

 1. உள் இறைமை மற்றும்
 2. வெளி இறைமை

உள் இறைமை என்பது ஒரு நாடு தன்னில் உள்ளடக்கிய கழகங்கள் மற்றும் குழுக்களைக் காட்டிலும் தலையாய அதிகாரத்தை உடையது. வெளி இறைமை என்பது, ஒரு நாடு பன்னாட்டு அமைப்புக்களான ஐ.நா. சபை மற்றும் பன்னாட்டு நீதிமன்றம் ஆகியவற்றை தவிர மற்ற எந்த நாட்டிற்கும், அமைப்புக்கும் சட்ட ரீதியாக கட்டுப்பட வேண்டாம். உள் இறைமையை பொறுத்த வரையில் ஒரு அரசுக்கு இறைமை முழுமையாக உரித்தானது. அத்தகைய இறைமை உடைய அரசு அதன் விருப்பப்படி சட்டங்களை இயற்ற முடியும்.

A.V. டைசியின் கருத்துப்படி இறைமைக்கு இரண்டு விதமான எல்லை தடைகள் உள்ளன. குடிமக்கள் சட்டத்தை மதித்து நடத்தலும், எதிர்க்காமலும் இருக்கும்போது உள் இறைமை என்பது நிலைநாட்டப்படுகிறது. வெளி அல்லது புற இறைமை என்பது இறைமைப்பண்புடைய அரசொன்று இதர அயல்நாடுகளுடனான தொடர்பில் அதன் விருப்பப்படியான கொள்கையை பின்பற்றும் துணிவையும் ஆற்றலையும் பெற்றிருப்பதென்பதாகும். இன்றைக்கு அடிப்படையிலேயே நாடுகளின் உள் இறைமையும், வெளி இறைமையும் சவாலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. நாடுகளின் இறைமைக்கு இப்போது தொடர்ச்சியாக அச்சுறுத்துதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தகைய அச்சுறுத்துதல்கள் புதிய காலனி ஆதிக்கம் அல்லது பொருளாதார, உலகமயமாக்குதல் போன்றவற்றால் ஏற்படுகின்றது. பல அரசியல் அறிஞர்கள் தேசிய இறைமை கண்ணுக்கு புலப்படுகின்ற மற்றும் புலப்படாத காரணிகளால் பாதிப்புக்கு அல்லது சுருக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகக் கருதுகின்றனர்.

தேசிய இறைமைக்கு ஏற்படும் பாதிப்பு

தனிமனிதர்களையும், அமைப்புகளையும், அரசாங்கத்தையும் தகவல் தொடர்பு வலைப் பின்னலில் இணைக்கின்ற இவ்வுலகத்தை ‘உலக கிராமம்’ என்று கூறுவது சால பொறுத்தமாகும். இத்தகைய உலக கிராமம் வளர்ச்சி பெறுகின்ற செய்தி தொடர்பு நுட்பம் அறிவியல் ரீதியாக ஒரு உலக கலாச்சாரத்தை ஏற்படுத்தும் நோக்கில் சென்று கொண்டிருக்கிறது. தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் பொருளாதார சக்திகளின் உந்துதலின் காரணமாய் உலகமயமாக்குதல் என்பது 1990 களிலிருந்து வளர தொடங்கியது. உண்மையில் G8 நாடுகளின் பொருளாதார இச்சைகளைப் பூர்த்தி செய்வதிலும், பல தேசிய கழகங்களின் வியாபாரச் சந்தையை விரிவுப்படுத்துவதிலும் தான் உலகமயமாக்குதல் மிக முனைப்பாக செயல்பட்டு வந்துள்ளது. கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் பல தேசிய கழகங்களின் எண்ணிக்கை அபரிமித வளர்ச்சியினை அடைந்துள்ளன. கடந்த 1990- ஆம் ஆண்டுகளில் 3000 பல தேசிய கழகங்கள் என்ற எண்ணிக்கையில் இருந்தது. இன்று 63,000 எண்ணிக்கையை தொட்டுள்ளது. சோவியத் யூனியன் சிதைவுக்குப் பின்னும் ஐரோப்பிய யூனியன் ஏற்பட்டதிலிருந்து பல பல்தேசியகழகங்கள் வியத்தகு வளர்ச்சியை பெற்று உலக நாடுகளுக்கிடையே வாணிபத்தை விரிவுபடுத்தியிருக்கின்றன.

பொருளாதார அடிப்படையில் நாடுகள் பலவும் இணைக்கப்பட்டது போல அரசு - சாரா அமைப்புகளும் மிக அதிக அளவில் தோன்றின. உதாரணம் : சிறைவாழுநர் விடுவிப்பு உலக அமைப்பு, செஞ்சிலுவைச் சங்க உலக அமைப்பு, எல்லையில்லா மருத்துவர்கள் பசுமை வழி அமைதி (Green Peace), சிக்கனமான தொலைதொடர்பு வசதிகளின் மூலம் மேற்கூறிய அமைப்புகள் எளிதில் தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்தி ஒரு நாட்டின் பொதுக்கொள்கையின் மீது பாதிப்பை ஏற்படுத்தியது. வலிமை குன்றிய நாடுகளில் இத்தகைய அரசு சாரா நிறுவனங்களின் பாதிப்பு என்பது அந்த நாட்டின் உள் இறைமையை பாதிப்பதாக உள்ளது. பன்னாட்டு நிதி நிறுவனம் மற்றும் பலநாடுகளைச் சேர்ந்த நிதிநிறுவனங்கள் பலவும் நிபந்தனைகள் மற்றும் இதர பல்வேறு கட்டுப்பாடுகள் அடிப்படையில் நிதி வழங்குவதாலும் அரசின் உள்நாட்டு இறைமை பாதிப்புக்குள்ளாகிறது.

ஐரோப்பிய யூனியன் அமைப்பு பாரம்பரிய இறைமையின் செயல்பாட்டு விதிகளுக்கு முற்றிலும் பொருத்தமற்றது. ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்கள் தேசிய அரசுக்கும் மேலான (Supra national) நிறுவன அமைப்புகளை உருவாக்கினர். உதாரணம் : ஐரோப்பிய நீதிமன்றம், ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய அமைச்சர்கள் அவை. தேசியத்திற்கு அப்பாற்பட்ட இத்தகைய நிறுவனங்கள் உறுப்பு நாடுகள் இயற்றுகின்ற முடிவுகளை எதிர்க்கலாம். உறுப்பு நாடுகளின் பணப்புழகத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி மற்றும் ஐரோப்பிய நிதிக் கழகம் ஏற்படுத்தப்பட்டன. ஒருங்கிணைக்கப்பட்ட ஐரோப்பிய சட்டம், மற்றும் மாஸ்ட்ரீட் உடன்படிக்கை ஆகியவை (Maastricht Treaty) ஐரோப்பிய நாடுகளின் நீதிமன்ற சுதந்திரத்தை பாதிக்கச் செய்வதால், உறுப்பு நாடுகளின் இறைமை பாதிப்படைவதாக உள்ளது.

தேசிய இறைமையை உலகமயமாக்குதலோடு தொடர்பு படுத்தப் பார்க்கும் போது பல கருத்துப் படிவமாக தென்படுகின்றது. பொருளாதாரம் மற்றும் கலாச்சார வாழ்வில் ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுடன் சார்ந்து உள்ளது என்பது தெளிவாகும். பொருளாதார தஞ்சத்தோடு (வியாபாரம், நிதி, மற்றும் நேரடி முதலீடு) கல்வி, தொழில்நுட்பம், அரசியல் கொள்கை, கலாச்சாரம், சுற்றுச்சூழ்நிலை, சட்டம், இராணுவ மற்றும் அரசியல் ஆகியவற்றிலும் மற்ற நாடுகளிடம் தஞ்சம் அடைகின்ற நிலை உலகமயமாக்குதல் மூலம் நடைபெறுகின்றது. பொருள் மற்றும் சேவைகள் நாடுகளின் எல்லையிலிருந்து மிக எளிதில் கடந்து செல்ல முடிகின்றது. சிறப்பு தகுதிகளைப் பெற்ற தொழிலாளர்கள் வெளி நாடுகளுக்கு செல்வதற்கு சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன.

பல மென்பொருள் பணியாளர்கள் அமெரிக்கா சென்று நிரந்தர தொழிலாளர் அல்லது குடிமக்கள் தகுதியை பெற்றனர். பலர் இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள் (NR) இரட்டை குடியுரிமை பெறுவதில் ஆர்வமாக உள்ளனர். இங்கணம் மாறுபட்ட உலகில் அரசுகள் செயல்படுவது என்பது மிகவும் சிக்கல்மிகுந்தது. உலக பொருளாதாரத்தை இணைக்கும் முயற்சியும், ஒரு நாட்டின் எல்லையை கடந்து மக்கள் இடப்பெயர்வு செய்வதும் தேசிய இறைமையைப் பாதிப்பதாக உள்ளது. தேசிய இறைமை என்பது இன்று தேசிய ராஜ்ஜிய மற்றும் உலக அளவில் பிளவுப்பட்டுள்ளது. நாடுகளுக்கு அப்பாற்பட்ட நிறுவன அமைப்புகள் மற்றும் நாட்டிடை வணிகச் சட்டமும் தேசிய இறைமையை வலிமை குன்றச் செய்ய வழிவகுத்தது. உலகமயமாக்குதலின் பல கூறுகள் மொத்தத்தில் தனிப்பட்ட இறைமை பெற்ற அரசுகள் கொள்கை உருவாக்கத்தில் தனிகவனமும் கட்டுப்பாட்டையும் செய்ய தவறிவிட்டன.

தேசத்திற்கு அப்பாற்பட்ட அமைப்புகளான உலக வியாபார அமைப்பு (WTO) ஐரோப்பிய யூனியன் (EU) வட அட்லாண்டிக் வியாபார உடன்படிக்கை கூட்டமைப்பு (NAFTA). உலக வங்கி (WB) மற்றும் பன்னாட்டு நிதிக்கழகம் (IMF) ஆகியவைகள் ஒரு நாட்டின் கொள்கையில் இன்று அதிக அளவில் தலையிட்டு இறைமைக்கு ஒரு சவாலாக திகழ்கின்றன. உலகமயமாக்குதல் என்பது அரசின் இறைமைக்கு பலவீனத்தை அளிக்கின்றது. பன்னாட்டு சட்டங்கள் மற்றும் நிறுவன அமைப்புகள், பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளின் செயல்பாட்டுத்திறம் ஆகியவற்றால் தேசிய இறைமை மிகவும் பாதிப்புக்குள்ளாகியது. எண்ணக் கருத்து முன்படிவமான தேசிய இறைமை உலகமயமாக்குதலின் மூலம் நலிவடைந்து பல சவால்களை சந்திக்க நேரிடுகின்றது.

தேசிய இறைமை அதிகாரமுடைய அரசு நியாயமான வன்முறையை பயன்படுத்தும் அதிகாரத்தைகூட நலிவடையச் செய்யும் வகையில் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகள் ஒரு சவாலாக திகழ்கின்றன.

தனியார் மயமாக்குதல் மற்றும் தாராளமயமாக்குதல் ஆகிய இரண்டும் உலக மயமாக்குதலின் இரண்டு ஆணிவேர்களாகும். இது வரை அரசாங்கம் மக்களுக்கு செய்த சேவைகள் இனிமேல் தனியார் வசம் ஒப்படைக்கும் போக்கு இன்று பல நாடுகளில் காணப்படுகிறது. தென்கொரியாவில் சேவைகள் தனியார் வசம் ஆனதால் கண்ட வெற்றியினால் பல ஆசிய நாடுகள் இன்று வரம்புக்குட்பட்ட அரசாங்கத்தையும், தாராள பொருளாதாரத்தையும் ஏற்க முனைகின்றன. தாராளமயமாக்குதல் இந்தியாவில் 1991ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதால் பல பொது நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கம் பொருள்கள் உற்பத்தி மற்றும் சேவைகள் மேல் விதித்திருந்த கட்டுப்பாடுகள் சிலவற்றை தளர்த்தியதால், சுதந்திரமான பகிரங்க போட்டியின் காரணமாய் இந்தியாவில் இன்று பல பல்நாட்டு கழகங்கள் (MNC’s) வியாபாரம் செய்ய முன்வந்துள்ளன.

இத்தகைய பல்நாட்டு கழகங்கள் தங்கள் வியாபாரச் செயல்பாடுகள் தங்குதடையின்றி நடைபெற தேசிய மற்றும் மாநில அளவில் கொள்கை முடிவுகள் மேற்கொள்வதில் தலையிடுகின்றன.

உலகளவில் அரசாங்கம் செய்யவேண்டிய பணிகள் தனியார் வசம் ஆக்கப்படுவதால் தேசிய இறைமை மங்கும் நிலை உள்ளது. உலகமயமாக்குதல் என்ற அடிப்படையில் பெரும் வியாபார மேலாண்மையாளர்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதோர் புதிய கொள்கையை உருவாக்குபவர்கள் போல் உள்ளனர். சுருங்கும் தன்மையான அரசின் பொறுப்புகளும் விரிவாக்கம் செய்யப்படுகின்ற தனியார் சேவைகளினால் அரசாங்கத்தில் அதிகார வர்க்கத்தின் முக்கியத்துவம் குறைக்கப்படுகின்றது. ஒழுங்குபடுத்தும் பணிகளே அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்தியாவில் 1991 முதல் லைசென்சு ராஜ்’ என்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

உலகமயமாக்குதலின் முதன்மைக் கொள்கையின் முக்கிய நோக்கம் உலக பொருளாதாரத்தை ஒருங்கிணைப்பதே ஆகும். ஆகவே இது அரசியல் மற்றும் கலாச்சார இணைப்பில் தோல்வியை கண்டது. இதன் காரணமாய் பல கலாச்சார குழுக்களிடம் தத்தம் கலாச்சார உணர்வுகள் மேலோங்கி உலக பொது கலாச்சாரத்தை (அமெரிக்கா - மேற்கு கலாச்சாரம்) எதிர்க்க முற்பட்டது. சாமுவேல் பி.ஹண்டிங்டன் கருதுவது போல, உலகமயமாக்குதல் என்பது நாகரீகங்களின் மோதல்களை தூண்டச் செய்ததாகும்.

நாகரீகங்களின் பிழையான கோடுகள்’ நாகரீக மோதல்களுக்கு துணை நிற்கும். நாகரீக மோதல்களை கட்டுப்படுத்த உருவாக்கப்படும் தீர்மானங்களினால் தேசிய இறைமைக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகின்றது. இத்தகைய சூழ்நிலைகளில் தேசிய எல்லை கோடுகள் திருத்தப்படலாம் மற்றும் தேசிய இறைமைக்கான பொருள் விளக்கம் மாற்றமடையலாம்.

பல சமூகவியல் அறிஞர்கள் உலகமயமாக்குதலின் மூலம் தேசிய இறைமை கீழ்க்கண்ட சக்திகளின் மூலம் பாதிப்பை அடையும்.

 • அ. அடிப்படைவாத சக்திகள் (மதவாதிகள்)
 • ஆ. புதிய காலணி ஆதிக்கம்
 • இ. நாகரீக மோதல்கள் மற்றும்
 • ஈ. புதிய அரசியல்.

உலகமயமாக்குதல் மற்றும் அரசு இறைமை எதிர்கொள்ளும் சவால்கள்

உலகமயமாக்குதலுக்கும் அரசு இறைமைக்கும் ஒரு தொடர்புண்டு. திறந்தவெளி, எல்லையில்லா உலக பொருளாதாரத்தை தோற்றுவிக்க நாடுகளிடையே காணப்படும் வியாபாரக் கட்டுப்பாடுகளை தவிர்த்து தடையில்லா வாணிபம் நடக்கச் செய்வது என்பதுதான் உலகமயமாக்குதல் என்பதாகும். ஆகவே உலகமயமாக்குதல் என்பதற்கு சக்திவாய்ந்த அரசியல், பொருளாதார மற்றும் சமூக படிவங்கள் உண்டு எனலாம். ஒரு உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் தேசிய இறைமை மற்றும் தேசிய எல்லைகளுக்கு ஒரு அளவு உண்டு. மேலாண்மை இயலின் குருவென்று அழைக்கப்படும் பீட்டர் டிரக்கர் கூறுவது போல் உலகமயமாக்கப்பட்ட பெருளாதாரத்தில் தேசிய எல்லைகள் பொறுத்தமில்லாமல் போய்விடுகின்றன.

ஒரு உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் ஒரு நாட்டின் இறைமை கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் வாயிலாக பாதுகாக்கப்படலாம்.

 1. தொழிற்கூட சமுதாயம் முதன்மையாக்கப்படவேண்டும்.
 2. சரிசம சமுதாயம்
 3. மக்களாட்சி அரசியல் நிறுவனங்கள்
 4. உலகளவில் பொருளாதார ரீதியாக பேரம் பேசும் சக்தி
 5. அரசு சாரா அமைப்புகள் அமைக்கப்படுதல்
 6. அறிவை அடிப்படையாக கொண்ட சமுதாயம்
 7. வளர்ந்த செய்தி தொடர்பு சாதனங்கள்
 8. உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தின் விளைவால் பெறப்பட்ட நன்மைகளை தக்க முறையில் பகிர்ந்தளிக்கும் முறைமைகள்.
 9. தொழிலாளர்களுக்கு தக்க சமூக பாதுகாப்புகள்
 10. அதிகார வர்க்கத்திற்கு வரையறை செய்யப்பட்ட பங்குபணி மற்றும் அரசின் நலன் காக்கும் பணிகளின் விரிவாக்கம். மேற்கூறிய பண்புகள் இல்லாத நாடுகளில் உலகமயமாக்கப்படுதலை அறிமுகப்படுத்துதல் என்பது தேசிய இறைமையை பல் தேசிய கழகங்களுக்கு சரண் செய்வதற்கு ஒப்பாகும் என பல அறிஞர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவில் உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரம் ஒரு சோசலிச தளத்தில் தான் கட்டப்பட்டுள்ளது. வறுமை, கல்வி, அறியாமை, சமத்துவமின்மை என்ற கட்டத்தில் தாராள பொருளாதாராம் என்பது மக்களின் எதிர்ப்பையும், தொழிலாளர் அமைதியின்மையையும்தான் வளர்க்கும். இதன் விளைவாய் தேசியத்திற்கு அப்பாற்பட்ட அமைப்புகளை பன்னாட்டு நிதிக் கழகம் (MF) மற்றும் உலக வங்கி (WB) ஆகிய சக்திகளுக்கு தேசிய இறைமை வழிவிட்டுச் செல்கின்றது. மேலும், இத்தகைய மாறுதல்கள் நாடுகளுக்கிடையே செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைகள் மற்றும் தேசிய கொள்கையின் மூலம் நியாயப்படுத்தப்படுகின்றன.

அரசாங்கம் இன்று உலக அளவிலான மனித உரிமை சட்டங்களுக்கு ஓரளவிற்கு மாற்றப்பட்டுள்ளது. தேசத்திற்கு அப்பாற்பட்ட உலக தேசிய அமைப்புகள் பல நாடுகளின் மனித உரிமைகளை பாதுகாக்க முற்படுவதால் தேசிய இறைமையும் குடிமக்கள் உரிமையும் வெகுவாக வலுவிழந்துள்ளன.

வேறு நாட்டிற்கு குடிபெயறும் சட்டங்கள் இன்று மிகவும் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் விளைவால் முரண்பாடுடைய சட்டங்கள் தோன்றியுள்ளன. வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள பெரும் வியாபாரக் குழுக்கள் தங்களுக்கு சாதகமான வகையில் எல்லையை கடந்து செல்லும் விதிமுறை கட்டுப்பாடுகளை தளர்த்தி தங்களின் நிதி மற்றும் பணியாளர் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டன. இருப்பினும் வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்குள் நுழைவதை கட்டுப்படுத்தி ஒழுங்கு செய்யும் தங்களின் இறையாண்மை அதிகாரத்தை பலநாடுகள் இன்றும் தொடர்ந்து பின்பற்றுகின்றன.

உள்நாட்டு நீதிமன்றங்கள் உலக மனித உரிமை உடன்பாடுகளை கையில் கொண்டு தனிமனித உரிமைகளை பாதுகாக்க முற்படும் செயல்பாடுகள் அரசு இறைமையை வெகுவாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாய் அரசு இறைமையின் அடித்தளமும், தேசியமும் மறுவிளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் குடியுரிமை என்பது மறைய தொடங்கி குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் என்பதற்கு வேறுபாடு இல்லாமல் போய்விடும். ஒரு ஆராய்ச்சியாளர் கூறுவது போல தேசிய இறைமையின் வளர்ச்சியை, தேசிய தேவைகள், முன்னுரிமைகள் என்பதைக் காட்டிலும் சந்தை நிலவரமே தீர்மானம் செய்கின்றது. ஆகவே நாடுகளின் இறைமை செல்லத்தக்கது அல்ல என்ற நிலைமையில் உள்ளது. தேசிய சமூக உடன்படிக்கைகள் முறியடிக்கப்பட்டு இன்று பன்னாட்டு உடன்படிக்கைகள் செய்யப்பட்டு செயலாக்கப்படுகின்றன.

மேற்கூறிய பகுப்பாய்வின் மூலம் நாம் அறிவது என்னவென்றால் தேசிய இறைமையின் உலகமயமாக்குதலின் தாக்கம் என்பது வளர்ச்சி குன்றிய மற்றும் வளர்ச்சி பெறும் நாடுகளைக் காட்டிலும் வளர்ச்சி பெற்ற நாடுகளே அதிக நன்மைகளை பெற்றுள்ளன. வளர்ச்சி குன்றிய மற்றும் வளர்ச்சி பெறுகின்ற நாடுகள் தாராள பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தினால் அது தேசிய இறைமையை மிகவும் பாதிக்கச் செய்கின்றது.

உலகமயமாக்கப்படுதலின் பொதுவான தாக்கங்கள்

 1. பன்னாட்டு தேசிய அமைப்புகள் பல்வேறு இடங்களில் உள்ள சமூகங்களில் தங்கள் தாக்கத்தை வெளிப்படுத்தும். முதலில் தொடர்பு சார்ந்த செயலாக்கத்தில் (உற்பத்தி, சேவைகள் மற்றும் விற்பனை) ஈடுபடுவர். மேலும் அப்பகுதியில் உள்ள குறைந்த ஊதியத்திற்கு உழைக்கும் தொழிலாளர்கள் மற்றும் வளங்களைச் சுரண்டுவர்.
 2. பன்னாட்டு தேசிய அமைப்புகள் வருவதற்கு முன்பிருந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதில் வேலைபார்த்த பலபேர் பணியை இழப்பார்கள்.
 3. இத்தகைய போக்கு வேலையில்லா நிலமையை உருவாக்கும். புதிய மற்றும் இதுகாறும் குறைந்த அளவில் சுரண்டப்பட்ட சந்தையைத் தேடுவார்கள்.
 4. பன்னாட்டு தேசிய கம்பெனிகள் இராஜ்ஜிய குழுக்கள் மற்றும் ஒரு நாட்டின் கொள்கை உருவாக்கத்தில் அதிக அளவில் தலையிடுவர். தனியார் வசமாக்கப்படுதலிலும், சிறந்த சேவை கொள்கையின் மூலம் அவ்வமைப்புகளுக்கு லாபம் கிடைக்கும்.
 5. உலகமயமாக்குதலின் மற்றொரு தாக்கம் என்னவெனில் பன்னாட்டு தேசிய வல்லுநர்கள் மற்றும் பொது - தொடர்பு பணியாளர்கள் உள்நாட்டு போட்டியாளரைக் காட்டிலும் மிக அதிகமான ஊதியத்தை பெறுவர்.
 6. இதன் விளைவாய் ஏற்படும் இழப்பு என்பது ஒரு நாட்டின் தேசிய அரசாங்கம் நேரிடையாக தங்கள் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்த இயலாது. (குறிப்பாக பரந்த பொருளாதார மேலாண்மையை பொறுத்தமட்டில்)
 7. உயிரியல் மற்றும் டிஜிடல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலமாக இன்று புதிய உற்பத்தியும் மற்றும் மாறுதலையும் நாம் கண்டுள்ளோம். புதிய கண்டுபிடிப்புகளான இண்டர்நெட் மூலம் உலக அளவில் பல செய்திகளை அறிந்து ஒருங்கிணைப்பு செயல்பாடுகளில் மகத்தான வளர்ச்சியடைந்துள்ளோம்.
 8. நிலம், உபகரணம் மற்றும் உழைப்பைக் காட்டிலும் இன்றைக்கு அறிவு வாழ்க்கை தரத்தை வகுப்பதில் ஒரு முக்கியமான காரணியாக உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சிபெற்ற நாடுகள் இன்றைக்கு அறிவை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
 9. பெரிய பன்னாட்டு தேசிய கழகங்கள் இன்றும் பொருளாதார மற்றும் கலாச்சார அதிகாரங்களை பெற்று விளங்குகின்றன. உதாராணம். கோக்கோ - கோலா, நைகி, மக்டோனால்ட் மற்றும் லிவிஸ்,
 10. இந்திய தொழிலதிபர்கள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் முதலீடு செய்வதில் தோல்வியுற்று, உலகமயமாக்கப்படுதலில் தங்களை இணைத்துக் கொண்டு, பெரிய பல்தேச கழகங்களோடு பங்குதாரராக சேர்ந்து வீழ்ந்து போகின்ற தங்களின் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுகின்றனர்.
 11. உலகமயமாக்கப்படுதலை ஆதரிக்கின்ற நபர்கள் இதனால் இந்திய தொழிற்கூடங்கள் நசிவடைவதில்லை என்றும் மாறாக அது புதிய தொழிற்கூடங்களை தோற்றுவிக்கவும், இந்திய பொருளாதாரத்தை மிக விரைவாக முன்னேற துணை செய்கின்றது என்றும் பகர்கின்றனர். ஆனால் ஒரு விரிவான பகுப்பாய்வில் பார்க்கும் போது கடந்த பல ஆண்டுகளில் வெளிநாட்டின் நேரடி முதலீட்டின் மூலம் புதிய உற்பத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனக் கூற இயலாது.

உலகமயமாக்கப்படல் மற்றும் இந்திய கலாச்சாரம்

மேற்கு கலாச்சாரம் உன்னிப்பாக கவனிக்க தக்கது என்னவெனில் இந்தியர்கள் பொதுவாக இந்திய கலாச்சாரத்தை பின்பற்ற எண்ணுவர். சாமுவேல். P. ஹட்டிங்டன் கூறுவது போல் இந்திய கலாச்சாரம் மிகவும் “பலம்’ வாய்ந்ததாகும். மேலும் வேற்று கலாச்சாரத்திலிருந்து பல நடவடிக்கை மற்றும் கருத்துக்களை பெற்றாலும், இந்திய கலாச்சாரத்தின் அடிப்படை தன்மையை அது விட்டுக் கொடுப்பதில்லை. வெளிநாட்டு பொருட்கள் மற்றும் சேவைகள் மீது இந்தியாவில் பல எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதன் மூலம் இந்தியர் தம் கலாச்சாரத்தையும், தனித்தன்மையையும் பாதுகாக்க தவறவில்லை. மேற்கு நாட்டு மேலாண்மை செயல்பாடுகள் நம்நாட்டின் வியாபாரத்தில், குறிப்பாக கணினி மென்பொருள் தொழிற்கூடங்களில் மிக விரைவில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இந்தியர்கள் இன்றும், உள்நாட்டு உணவு வகைகள், உள்நாட்டு தொலைக்காட்சி மற்றும் உள்நாட்டு திரைப்படம் ஆகியவற்றை கண்டுகளிக்கின்றனர். பாரம்பரிய உடைகளையே பெரிதும் அணிகின்றனர். இதன் காரணமாய் மேற்கு நாட்டின் கம்பெனிகள் இந்திய சந்தையில் ஊடுருவுவதில் பல சங்கடங்களை எதிர் கொள்கின்றன.

அமர்த்தியா சென்னின் கருத்துக்கள்

அமர்த்தியா சென் கூறுகிறார், “சந்தை பொருளாதாரம்’ தன்னைத்தானே இயக்கவல்லது அல்ல. புதிய தாராள பொருளாதாரக் கொள்கை நல்ல வளர்ச்சியினைக் கண்டுள்ளது. இதை ஆதரித்தவர்கள் அமெரிக்காவில் அரசியல்வாதியான ரீகன் மற்றும் இங்கிலாந்தின் தாட்சர் ஆவார்கள். மனிதாபிமான வளர்ச்சியே இன்றைய வளரும் நாடுகளான இந்தியாவிற்கு தேவையாகும். உலகமயமாக்கப்படுதலில் அரசியல் மற்றும் பொருளதார சுதந்திரத்தை நாம் இழந்து விடக்கூடாது. சந்தைப் பொருளாதாரம் மற்றும் பொதுநலப்பொருளாதாரம் ஆகிய இரண்டுகளுக்குமிடையே ஒரு சமனிலையான அணுகுமுறை தேவைப்படுகிறது.

பன்னாட்டு தேசிய கழகங்கள் பிரெட்டன் வுட்ஸ் (Bretton Woods) அமைப்புகளோடு (உலக வங்கி, பன்னாட்டு நிதிக்கழக மானிய நிதி மற்றும் உலக வியாபார அமைப்பு) ஒன்றிணைந்து காட் (GATT) ஒப்பந்தத்தின் மூலம் பல திட்டங்களை திணித்துள்ளன. இத்திட்டத்தின் காரணமாய் இன்று பல பன்னாட்டு தேசிய கழகங்கள் பல வியாபாரத் தடைகளைக் கடந்து தங்கள் வாணிபத்தை விரிவாக்கம் செய்துள்ளன.

பன்னாட்டு நிதிக்கழகம் மற்றும் உலக வங்கியின் திட்டங்கள்

 • வரவு - செலவு திட்டத்தின் அரசு மானியத்தைக் குறைப்பது.
 • விவசாய உற்பத்தி சார்ந்த பொருட்களுக்குரிய அரசு மானியத்தை குறைத்தல்.
 • உணவிற்கான அரசு மானியத்தை நீக்குதல்.
 • தாராள பொருளாதார கொள்கையைப் பின்பற்றுதல்.
 • வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவித்தல்.
 • வங்கிகளை தனியார் வசப்படுத்துதல்.
 • இறக்குமதிக் கொள்கையை எளிமையாக்குதல்.

உலக வர்த்தக அமைப்பு (WTO)

 • அரசு மானியத்தை குறைத்தல். உள்நாட்டு விவசாயத்திற்குரிய ஆதரவை குறைத்தல்.
 • பொது விநியோக முறையை நீக்குதல்.
 • வளர்ச்சி பெறுகின்ற நாடுகள் தடையில்லா வியாபாரத்தை பின்பற்றுதல்.
 • பயன்படு தொழிற்கூடங்களை அமைப்பதில் பன்னாட்டு தேசிய கழகங்களுக்கு எந்தவொரு தடையும் இல்லாதிருத்தல்.
 • இறக்குமதி மீதான தடைகளை நீக்குதல்.
 • வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீதான தடைகளை நீக்குதல்.

வளர்ச்சி பெறும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் வண்ணம் பிரெட்டன் வுட்ஸ் அமைப்புகள் பொருளாதாரக் கொள்கைகளை வளர்ச்சி பெறும் நாடுகளின் மீது திணிக்கின்றன. இந்திய பொருளாதாரத்தை ஜூலை 1991 க்குப் பிறகு தணிக்கை செய்யப்பட்ட போது குறிப்பிடும் வகையில் எந்தவொரு வளர்ச்சியையும் எட்டவில்லை. உற்பத்தி துறையில் முதலிடோ அல்லது தொழில்நுட்பமோ திறந்த பொருளாதாரத்தின் மூலம் இந்தியாவில் பெருமளவு வந்தது எனக் கூற இயலாது.

செய்தி உலகம்

செய்தி தொடர்புகளில் நாம் கண்ட புரட்சி இன்று அரசுகளை வெறும் சிறிய நகர அரசுகளாக மாற்றியுள்ளது. தொழிற்புரட்சி ஒரு மையப்படுத்தும் சக்தியாக விளங்கியது. ஆனால் செய்தி தொடர்பு புரட்சி பரவலாக்கும் சக்தியாக உள்ளது.

திறனாய்வு

பழைய உலக வரைபடத்தின் எல்லைகள் ஆட்டம் கண்டுள்ளன. பெரிய அரசுகள் சிதைந்துள்ளன, சில பெரிய வியாபார கூட்டுகளை ஏற்படுத்தி கொண்டுள்ளன. பல மேற்கு நாடுகள் உலகமயமாக்கப்படுதலில் தங்கள் இறைமையை சந்தை பொருளாதாரத்திற்கு விட்டு கொடுத்துள்ளன. பல சமூக மற்றும் பொருளாதார பொறுப்புகள் தனியார் மற்றும் அரசு சாரா அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆப்பிரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் யூகோசோலோவியா நாடுகளில் 19 ஆம் நூற்றாண்டில் காணப்பட்ட தேசிய உணர்வு, குறுகிய தேசியம் மற்றும் சகிப்புத்தன்மையற்ற மனப்போக்கு வளர்ந்து இனப் படுகொலைக்கு தூண்டியுள்ளது. ஈராக்கில் குருடுகள் (Kurds) சுதானில் இஸ்லாம் மதத்தில் அல்லாதவர்கள், திபேத்தில் சீனர்கள் இத்தகைய இனப்படுகொலைக்கு ஆளாகும் நிலை தோன்றியுள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் ஆராய்ச்சி கல்வியியல் நிறுவனம்

3.16129032258
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top