பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / இந்தியாவின் தேவை மாநிலங்களின் கூட்டாட்சி
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்தியாவின் தேவை மாநிலங்களின் கூட்டாட்சி

மாநிலங்களின் கூட்டாட்சி பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கூட்டாட்சி அரசியல் முறைமை அல்லது கூட்டாட்சித் தத்துவம் என்பது அண்மைக்காலத்தில் மதிப்புறு ஆட்சி முறையாகப் பெரிதும் போற்றப்படுகின்ற ஒரு நிர்வாக நிலைப்பாடாகும். கூட்டாட்சித் தத்துவம் ஒன்றும் இந்தியாவிற்குப் புதிதல்ல.

இதன் அடிப்படைக் கூறுகள் மன்னராட்சிக் காலத்திலேயே, குறிப்பாக வட இந்தியாவில் மௌரிய வம்ச நிர்வாக முறைகளிலும், தென்னிந்தியாவில் சேர, சோழ, பாண்டியர் ஆட்சியிலும் காணப்பட்டது. கிரேக்க நகர அரசாங்க முறையமைவுகளில் அடையாளப்படுத்தப்படுமளவிற்கு கூட்டாட்சி முறை மிகப் பழமை வாய்ந்ததாகும். 1787ஆம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பில் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டாலும், பல்வேறு படிநிலைகளில் வளர்ச்சியுற்று 18ம் நூற்றாண்டில் அமெரிக்கக் கூட்டு நாடுகள் எனும் ஐக்கிய அமெரிக்கா உருவாகும் நிலையில் கூட்டரசு முறை உறுதியான வெளிப்பாடாக நின்றது.

இந்தியாவில் 1919ம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டம் கூட்டாட்சி ஏற்படுவதற்கு வழிவகுத்தது. ஆனால் தொடர்ந்து உருவான சீர்திருத்தச் சட்டங்கள் இந்திய மக்களது எண்ணங்களைப் பூர்த்தி செய்யவில்லை என்பதைவிட அரசியல் முறையமைவுகளில் கூட்டாட்சிக் கோட்பாட்டினைப் பிரதிபலிப்பதாக இல்லை. மேலும் இது அரசியல் மேம்பாட்டிற்குரிய முக்கியக் கோரிக்கையாக மக்களிடையே வலுப்பெற்றது. தொடர்ந்து 1935-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய அரசாங்கச் சட்டம் இந்திய மக்களின் அரசியல் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கூட்டாட்சிக் கோட்பாடுகளை, அதன் சிறப்பம்சங்களை வலியுறுத்தியது. இச்சட்டம் ஒரு புதுமையான கூட்டாட்சியை உருவாக்கியது.

கோட்பாட்டளவில் நோக்கும்பொழுது இச்சட்டம் கூட்டாட்சியின் அனைத்துச் சிறப்புக்களையும் கொண்டிருந்தது. எழுதப்பட்ட, நெகிழாத அரசியலமைப்பும், மத்திய, மாநில அரசுகளுக்கிடையே அதிகாரப்பகிர்வும் கொண்டிருந்தது. நீதித்துறையன்றும் உருவாக்கப்பட்டிருந்தது.

தேசிய அளவிலும் உள்ளூர் அளவிலும் அல்லது உள்பகுதிகளின் அளவிலும் அதிகாரங்களைப் பங்கீடு செய்து கூட்டாட்சியில் இணைந்த ஒவ்வொரு அலகும் சமமான முறையில் நிர்வாகத் தொடர்புகளை பேணிக்கொள்வதோடு சுதந்திரமாகவும் தமது எல்லைக்குள் செயல்படும் ஓர் அரசு முறைதான் கூட்டாட்சி என்கிறார் அறிஞர் கே.சி.வெயர்.

கூட்டாட்சி என்பது பலதரப்பட்ட அரசியல் சமூகங்களை ஒரு பொதுக் கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைத்து அச்சமூகங்களின் பொதுத் தேவைகளை நிறைவு செய்வதற்கு ஏற்படுத்தப்படும் அரசாங்க முறையே அன்றி வேறில்லை. பொதுத் தேவைகளுக்காக அல்லது இலக்குகளுக்காக ஒரு பொது அரசாங்கக் கட்டமைப்பும், அக்கூட்டாட்சி முறைமையில் இணைந்துள்ள தனித்துவ அரசியல் சமூகங்களுக்காக உள்ளூர் அல்லது மாநில அரசாங்கக் கட்டமைப்புக்களும் இணைந்தே செயல்படும் சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது. கூட்டு அரசாங்கம் உருவாக்கப்படும்போது ஏற்றுக் கொள்ளப்படும்

சட்ட வழிமுறைகள்

கூட்டரசிற்கும் உள்ளூர் அரசுகளுக்குமிடையே இருக்கும் உறவுகளையும், கடமைகளையும், உரிமைகளையும் தெளிவாக விளக்குவதுடன் இரண்டிற்குமிடையேயுள்ள சட்ட ஆக்க, அதிகாரப் பங்கீடுகளையும் எடுத்தியம்பும். இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றித்தான் இந்தியா, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் கூட்டாட்சி சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. இந்தியா கூட்டாட்சித் தத்துவத்தின் ஒரு சில அம்சங்களை உள்ளடக்கிய அரசியல் சாசனத்தையும், அரசியல் அமைப்பு முறைமைகளையும் கொண்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம்

 • மத்திய அரசிற்கு உயர் அதிகாரங்களை வழங்கியிருப்பினும் வரையறுக்கப்பட்ட நிலையில், மத்திய, மாநில அரசுகளுக்கிடையில் அதிகாரங்களையும், ஆதாரங்களையும் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் தொடர்ந்து இருந்து வருகின்றது.
 • மத்திய, மாநில அரசுகளுக்கிடையிலான உறவு என்பது கூட்டாட்சி முறையில் உள்ளதைப் போன்று இணக்கமாக இருத்தல் வேண்டும்.
 • ஆனால் நடைமுறையில் இந்திய அரசியல் அமைப்பு கூட்டாட்சி அம்சங்களை ஒருமுகப்படுத்தும் கூறுகளைச் சுற்றி வளைத்து உருவாக்கப்பட்டிருந்தாலும் அச்சட்டம் கூட்டாட்சி இயலை முழுமையாக எதிரொலிப்பதாக இல்லை.
 • கூட்டாட்சி கோட்பாடு, மத்திய &- மாநில அரசுகளின் உறவுகள் ஆகியவற்றின் வரலாற்றில் உருவாகும் தவறான புரிதல்களும், அதிகாரத்துவப் போக்கும், அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக கூட்டாட்சித் தத்துவத்தை மதிப்பிழக்கச் செய்துவிடுகின்றன.
 • அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளும், கூட்டாட்சித் தத்துவத்தை நோக்கிய கூடுதலான நடவடிக்கைகளும் அரசியல் சட்டத்தில், கூட்டாட்சி உணர்வில் பெரும் மாறுதலை ஏற்படுத்தவில்லையென்றாலும், இத்தத்துவம் முழுக்க முழுக்கப் பயனற்றது என்று கூறிவிடமுடியாது.
 • தேசத்தைக் கட்டமைப்பது, நீடித்த வளர்ச்சியை உறுதிப்படுத்துவது, தேச ஒற்றுமையைப் பேணுவது, தேசப் பாதுகாப்பினை பலப்படுத்துவது ஆகிய சவால்களை உலக அரங்கில் எதிர்கொள்வதற்கு கூட்டாட்சித் தத்துவம் என்றென்றும் ஒத்திசைவாய் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
 • உலகில் உள்ள 190க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏறத்தாழ 25 நாடுகள் கூட்டாட்சி முறையைப் பின்பற்றுகின்றது என்றும் ஏறத்தாழ 40 முதல் 50 சதவீத மக்கள் இந்த முறைமைகளை ஏற்றுக்கொண்டு அதன் கீழ் வாழ்கின்றனர் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையே மத்திய அரசினை மேலும் வலுப்படுத்துகின்ற மையநோக்குச் சக்திகளுக்கும், அதனை விட்டுத் தனித்துச் செயல்படுகின்ற அல்லது செயல்பட நினைக்கின்ற உள்ளூர் அல்லது மாநிலச் சக்திகளுக்கும் இடையே ஒரு வித சுமூகமான, சமநிலை அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதுதான். இத்தகைய அணுகுமுறை அல்லது தன்மை இந்தியக் கூட்டாட்சியில் முழுதும் வெளிப்படாத காரணத்தால், அரசியல் மாறுபாடுகளால் வெளிப்படாமல் தடுக்கப்படுவதால் கூட்டாட்சிக் கோட்பாடு நடைமுறையில் வெற்றிபெற இயலாமல் போய்விட்டது. மாநில அரசுகளின் ஒத்துழைப்பும், உதவியும் கேள்விக்குறியாகிவிட்டது.
 • மத்தியில் உள்ள அதிகாரப்போக்கால் மாநில அரசுகளின் உரிமைகளும், நலன்களும் புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகிவிட்டது. கூட்டாட்சி அரசாங்க முறையமைவின் சிறப்பியல்புகளையும், ஒற்றையாட்சி அரசாங்க முறையமைவின் சிறப்பியல்புகளையும் ஒருங்கே கொண்டு செயல்படுகிறது.

இந்திய அரசாங்க முறை

இந்திய அரசாங்க முறை செயல்படுவதால் உண்மையான, வலுவான கூட்டாட்சியாக பரிணமிக்க முடியாமல் ‘அரைக்கூட்டாட்சித் தன்மை” கொண்டதாக உள்ளது. இரு அரசாங்க முறையமைவுகள், அதிகாரப்பங்கீடு, எழுதப்பட்ட, உறுதியான அரசியலமைப்பு, அரசியலமைப்பின் உயர்தன்மை, இரு அவைகள், உயர்தன்மை வாய்ந்த நீதிமன்றம் போன்ற கூட்டாட்சிச் சிறப்பம்சங்களை இந்தியா பெற்றிருப்பினும் கூட்டாட்சியின் பங்காளிகளாகக் கருதப்படும் உள்ளூர் அல்லது மாநிலங்கள் அதனைச் சார்ந்த அரசியல் சமூகங்கள் முற்றிலும் ஒதுக்கப்படுவதால், பழிதீர்க்கும் அரசியல் தலைதூக்குவதால் பிற நாடுகளுக்கு வழிகாட்டியாக, முன்மாதிரியாகத் திகழ வேண்டிய கூட்டாட்சித் தத்துவம் வலுவிழந்து நிற்கின்றது.

தேசிய இனங்களின் கூட்டமைப்பு

 • தேசிய இனங்களின் கூட்டமைப்பான இந்தியாவின் இயல்பு நிலைக்கேற்ப இந்திய அரசியல் மாநில அரசியல் நடைமுறைகளைச் சார்ந்து இயங்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் எதிர்வரும் காலங்களில் இந்தியாவின் மத்திய அரசாங்கம் என்பது மாநிலங்களின் கூட்டாட்சியாக, மாநிலங்களை அரவணைத்துச் செல்லும் தன்மையுடையதாக அமைவதுதான் இயல்பானதாக இருக்க முடியும். மாநிலங்களின் அதிகார வரம்பிற்குள் மத்திய அரசு தேவையின்றி தலையிடுவதும், மாநில அரசின் செயல்பாடுகளிலும், ஜனநாயக நிகழ்வுகளிலும் குறுக்கிட்டு ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் கூட்டாட்சிக்கு எதிரானது என்பது உணரப்பட வேண்டும்.
 • உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகப் போற்றப்படுகின்ற, வேற்றுமையில் ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்கின்ற, 29 மாநிலங்களையும், எண்ணற்ற சாதி, மதக் குழுக்களையும் கொண்ட மதிப்புமிகு நாடாகத் திகழும் நம் நாட்டில், அனைத்து அரசாங்க முறையமைவுகளையும் ஒருங்கிணைத்து, சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கான பொதுத் தளத்தை அளித்திடக் கூடிய ஒரு ஜனநாயகக் கூட்டாட்சி அமைப்பிற்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றோம் அல்லது ஏங்கித் தவிக்கின்றோம். நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்கக் கூடிய அரசு நிர்வாகக் கட்டமைப்பில் ஒரு கூட்டாட்சிப் பரிமாணத்தை உருவாக்கிட முயற்சிகள் மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகும். ஒரு கூட்டாட்சியில், ஜனநாயகத்தின் தேவைகளை மேலும் சிறப்பான வழிகளில் நிறைவேற்றமுடியும். சர்வதேச சவால்களை எதிர்கொள்வதற்கும், அரசியல் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கும் மக்கள் பங்கேற்புடன் கூடிய மாநிலங்களின் கூட்டாட்சி உறுதி செய்யப்பட வேண்டும்.
 • அத்தகைய கூட்டாட்சி இந்தியாவில் வெற்றி பெற வேண்டுமானால் அரசியலமைப்பு நிறுவனங்கள், முறையமைவுகள் பெரும்பாலும் ஒத்த தன்மையுடையதாக செயல்படுதல் வேண்டும். பலதரப்பட்ட அரசியல் சமூகங்களின் நலன்கள் பொதுத்தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு மேம்படுத்தப்படவேண்டும்.
 • அனைத்துத் தரப்பினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பொருளாதார  வளர்ச்சி ஏற்றதாழ்வின்றி முன்னெடுக்கப்பட வேண்டும். சமத்துவமற்ற தன்மை புறந்தள்ளப்பட்டு சிறப்புத் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் பூர்த்தி செய்யும், வளர்ச்சியை ஊக்குவிக்கும் நிர்வாக முறைமை ஏற்படுத்தப்படவேண்டும். மாநிலங்களுடன் அரசியல் மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நல்லுறவைப் பேணும் தொலைநோக்குப் பார்வை கொண்ட திறமைவாய்ந்த தலைமைத்துவம் வேண்டும். ஆதாரங்களைச் சரியான, நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ளும் வகையில், மத்திய, மாநில அரசுகளுக்கிடையில் அனைத்து வகையான உறவுகளும் சீர்மைப்படுத்தப்பட வேண்டும்.
 • மத்திய, மாநில அரசுகள்  தங்களுக்கிடையில் சமத்துவம் பேணி, புரிந்துணர்வு அடிப்படையில் இணைந்து செயலாற்றுவதற்கான விருப்பம் இலக்காக நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்தியாவில் கூட்டாட்சி வலுப்படுவதற்கும், நிலையான அரசியல் முறையமைவுகள் ஏற்படுவதற்கும் தற்போதைய தேவை மாநிலங்களின் கூட்டாட்சி தான் என்பதை எண்ணிப்பார்த்து அரசுகள் செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top