பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

போக்குவரத்து துறை

போக்குவரத்து துறையின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

வேகமான தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் போன்றவற்றால் மோட்டார் வாகனங்களின் வளர்ச்சி முன் நிகழ்ந்திராத புரட்சியினை இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில பத்தாண்டுகளில் சாலை விபத்துக்கள் காரணமாக அதிகரித்துள்ள நோயுறும் தன்மை மற்றும் இறப்பு போன்றவை உலகளவில் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது. சாலைப் போக்குவரத்து, சரக்கு மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்வதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதுடன், இது 65 விழுக்காடு சரக்கு போக்குவரத்து மற்றும் 87 விழுக்காடு பயணிகள் போக்குவரத்தை கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சாலைப் போக்குவரத்து ஆண்டொன்றிற்கு 7 முதல் 10 விழுக்காடு வளர்ந்து வரும் நிலையில், வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டொன்றிற்கு 12 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், பரந்து விரிந்த சாலை தொடரமைப்பு நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகை செய்கிறது.

வேகமான மக்கள் தொகை வளர்ச்சியுடன் அதிகரித்து வரும் பொருளாதார நடவடிக்கைகள், மோட்டார் வாகனங்களின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன. இவை, சாலை விபத்துக்கள் நிகழ்வதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். சாலை விபத்துக்கள் மனிதனால் ஏற்படுத்தக்கூடிய சோகமான நிகழ்வாக இருப்பதுடன், அவை நொடிப்பொழுதில் ஏற்படுகிறது. மனிதர்களின் அகால மரணம் மற்றும் துயரங்களை தவிர்க்கும் பொருட்டு, போக்குவரத்துத் துறை கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 • மோட்டார் வாகனச் சட்டங்கள் மற்றும் அவற்றின் கீழ் வகுக்கப்பட்டுள்ள விதிகளை கண்டிப்புடன் செயல்படுத்துதல்,
 • அதிக சுமை ஏற்றிச் செல்லுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும்போது செல்லிடப்பேசியினை பயன்படுத்துதல் போன்ற குற்றங்களுக்காக ஓட்டுநர் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்தல்,
 • வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் வாகன விற்பனையாளர்களை சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல்,
 • சுற்றுலா சீருந்து மற்றும் மேக்ஸிகேப் ஓட்டுநர்களின் பணி நேரத்தினை ஒழுங்குபடுத்துதல்.

போக்குவரத்துத் துறையின் பணிகள்

போக்குவரத்துத் துறையின் முக்கிய பணிகள் பின்வருமாறு:

 • ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமங்கள் வழங்குதல்,
 • வாகனங்களை பதிவு செய்தல், வாகனங்களை ஆய்வு செய்து, தகுதிச் சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், போக்குவரத்து வாகனங்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்குதல்,
 • மோட்டார் வாகனங்கள் மீதான வரி மற்றும் கட்டணங்களை வசூல் செய்தல், விபத்துக்குள்ளாகும் வாகனங்களை ஆய்வு செய்தல்,
 • மோட்டார் வாகனச் சட்டங்கள் மற்றும் அவற்றின் கீழ் வகுக்கப்பட்டுள்ள விதிகளின்படி சாலையில் வாகனங்களை ஆய்வு செய்து செயலாக்கப் பணி மேற்கொள்ளுதல்,
 • சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மற்றும் வாகனங்கள் வெளியேற்றும் புகையின் அளவை கட்டுப்படுத்துதல்,
 • ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை நிறுவுவதற்கான உரிமம் மற்றும் புகை பரிசோதனை நிலையங்கள் அமைப்பதற்கான உரிமம் வழங்குதல்.

மேற்கண்ட பணிகளை 1988- ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டம், 1989-ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ஆம் ஆண்டின் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள், 1974-ஆம் ஆண்டின் தமிழ்நாடு மோட்டார் வாகன வரி விதிப்புச் சட்டம் மற்றும் விதிகளின் படி இத்துறை செயல்படுத்துகிறது. மோட்டார் வாகனச் சட்டங்கள் மற்றும் அவற்றின் கீழ் வகுக்கப்பட்ட விதிகள், அடிப்படையிலேயே வாகனங்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான தன்மையை கொண்டதாக அமைந்துள்ளன.

நிர்வாக அமைப்பு

போக்குவரத்து ஆணையர் இத்துறையின் தலைவராக செயல்படுவதுடன், மாநில போக்குவரத்து அதிகாரியாகவும், சாலை பாதுகாப்பு ஆணையராகவும் செயல்படுகிறார். அவருக்கு உதவியாக ஒரு கூடுதல் போக்குவரத்து ஆணையர், மூன்று இணைப் போக்குவரத்து ஆணையர்கள் மற்றும் இரண்டு துணைப் போக்குவரத்து ஆணையர்கள் தலைமையிடத்திலும், இரண்டு இணைப் போக்குவரத்து ஆணையர்கள் சென்னை சரகத்திலும், இரண்டு இணைப் போக்குவரத்து ஆணையர்கள் கோயம்புத்தூர் மற்றும் மதுரையிலும் மற்றும் செயலாக்க பணிகளை மேம்படுத்த ஸ்ரீரங்கம் மற்றும் சென்னை ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு இரண்டு இணைப் போக்குவரத்து ஆணையர்களும் (செயலாக்கம்) உள்ளனர்.

மாநிலப் போக்குவரத்து அதிகாரியின் பணிகளும் அதிகாரங்களும் பின்வருமாறு :

 1. மாநிலத்தின் அனைத்து மண்டலப் போக்குவரத்து அதிகாரிகளின் நடவடிக்கைகள் மற்றும் கோட்பாடுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ;
 2. மண்டலப் போக்குவரத்து அதிகாரி இல்லாத இடங்களில் மண்டலப் போக்குவரத்து அதிகாரியாக செயல்படுதல் ;
 3. மண்டலப் போக்குவரத்து அதிகாரிகளுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணுதல்
 4. மேலே கூறப்பட்டுள்ள பணிகள் தவிர குறிப்பிடப்பெற்ற இதர பணிகளை செயல்படுத்துதல் ;

போக்குவரத்துத் துறை, களப்பணி நிலையில், 12 சரக அலுவலகங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு சரகமும் இணைப் போக்குவரத்து ஆணையர் அல்லது துணைப் போக்குவரத்து ஆணையர் தலைமையில் இயங்கி வருகிறது. சென்னை (வடக்கு), சென்னை (தெற்கு), கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நான்கு சரக அலுவலகங்கள் இணைப் போக்குவரத்து ஆணையர்களின் தலைமையில் இயங்கி வருகின்றன. எஞ்சியுள்ள விழுப்புரம், வேலூர், சேலம், ஈரோடு, தஞ்சாவூர், திருச்சி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய எட்டு சரக அலுவலகங்கள் துணைப் போக்குவரத்து ஆணையர்களின் தலைமையில் இயங்கி வருகின்றன. இச்சரக அலுவலர்களின் கட்டுப்பாட்டின் கீழ் 86 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், 59 பகுதி அலுவலகங்கள் மற்றும் 21 சோதனைச் சாவடிகள் இயங்கி வருகின்றன.

1988- ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் 1989-ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதிகளின் படி, அந்தந்த மாவட்டங்களிலுள்ள மாவட்ட ஆட்சியர்கள் மண்டலப் போக்குவரத்து அதிகாரியாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால், சென்னையை பொறுத்தமட்டில் சென்னை (வடக்கு) மற்றும் சென்னை (தெற்கு) இணைப்போக்குவரத்து ஆணையர்கள் மண்டல போக்குவரத்து அதிகாரியாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் போக்குவரத்து வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்குதல் மற்றும் அவற்றை முறைப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலர், மண்டல போக்குவரத்து அதிகாரியின் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

மாநிலப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மண்டலப் போக்குவரத்து அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளுக்கு 1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 89 மற்றும் 90-ன் கீழ் மேல்முறையீடுகள் மற்றும் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவற்றின் மீது மாநிலப் போக்குவரத்து மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. செயலர், மாநிலப் போக்குவரத்து மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் மற்றும் துறைப்பிரதிநிதி என்ற பதவிகளின் பெயரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பணி நிலையில் உள்ள அதிகாரிகள் மாநிலப் போக்குவரத்து மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்திற்கு உதவி புரிந்து வருகின்றனர்.

பொது மக்களுக்கு வெளிப்படையான மற்றும் துரிதமான சேவையினை வழங்கும் பொருட்டு, இத்துறையில் பணியாளர்களின் எண்ணிக்கை வெவ்வேறு நிலைகளில் கணிசமான அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் பெருக்கம்

31.03.2018 அன்றைய நிலவரப்படி, மாநிலத்தில் 12.29 இலட்சம் போக்குவரத்து வாகனங்களும் 244.33 இலட்சம் போக்குவரத்து அல்லாத வாகனங்களும் என மொத்தம் 256.62 இலட்சம் வாகனங்கள் உள்ளன. வாகனங்களின் எண்ணிக்கையில் மகாராட்டிரம் மாநிலத்திற்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு இரண்டாவது இடத்தை வகிக்கிறது.

மோட்டார் வாகனங்கள், போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்கள் என விரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. வாடகை அல்லது வெகுமதிக்காக, பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து வாகனங்கள் ஆகும். நிலைப் பேருந்துகள், சரக்கு வாகனங்கள், ஒப்பந்த ஊர்திகளான ஆம்னி பேருந்துகள், மேக்ஸிகேப், சுற்றுலாச் சீருந்துகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் ஆகிய வாகனங்கள் போக்குவரத்து வாகனங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் (மோட்டார் சைக்கிள் / ஸ்கூட்டர்), இலகுரக வாகனங்கள் (சீருந்து மூன்று சக்கர வாகனங்கள்) இயலா நிலை வாகனங்கள் போன்றவை போக்குவரத்து அல்லாத வாகனங்கள் ஆகும்.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில், போக்குவரத்து வாகனங்கள் 4.79 விழுக்காடும், போக்குவரத்து அல்லாத வாகனங்கள் 95.21 விழுக்காடும் ஆகும். இரண்டு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 215.86 இலட்சம். இவை மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 84.12 விழுக்காடு ஆகும்.

ஓட்டுநர் உரிமம் வழங்குதல்

ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவோர் முதலில் பழகுநர் ஓட்டுநர் உரிமம் பெறவேண்டும். பழகுநர் உரிமம் பெறவரும் விண்ணப்பதாரர்கள் https://parivahan.gov.in இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பதாரர்களின் திறனை சோதிக்கும் பொருட்டு சாலை விதிகள், சமிக்ஞைகள் மற்றும் சாலை குறியீடுகள் பற்றிய தேர்வுகள் கணினி மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.

பழகுநர் ஓட்டுநர் உரிமம் பெற்ற நபர், அவ்வுரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு பின்னர் மற்றும் ஆறு மாத காலத்திற்குள் நிரந்தர ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிப்போருக்கு 1989-ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதிகளில், விதி 31-ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டங்களின்படி வழக்கத்திலுள்ள ஓட்டுநர் தேர்வுத் தளங்களில் ஓட்டுநர் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

31.03.2018 வரை வழங்கப்பட்டுள்ள மொத்த ஓட்டுநர் உரிமங்களின் எண்ணிக்கை 2.20 கோடியாகும். பணிபுரியும் பெண்களின் திறனை மேம்படுத்தும் வகையில், அவர்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து பணிபுரியும் இடங்களுக்கும், வங்கிகளுக்கும், சமூக அடிப்படையிலான நிறுவனங்களுக்கும் மேற்கொள்ளும் பயணத்தினை எளிதாக்கி, இருசக்கர வாகனங்கள் வாங்கும் பொருட்டு "அம்மா இருசக்கர வாகன திட்டத்தினை” தமிழக அரசு 2017-2018-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்திற்கு ஓட்டுநர் உரிமம் வைத்துக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை பதிவு செய்தல்

ஒவ்வொரு வாகனமும் பொதுச் சாலையில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னர் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை 1988- ஆம் ஆண்டின் மோட்டார் வாகன சட்டப்பிரிவு 39 வலியுறுத்துகிறது. ஒவ்வொரு வாகனத்திற்கும் நிரந்தர பதிவு எண் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தகுதிச் சான்றிதழ் வழங்குதல்

ஒரு வாகனத்தின் தகுதிச் சான்றிதழ் செல்லத்தக்கதாக இருந்தால் மட்டுமே அவ்வாகனம் பதிவு செய்யப்பட்டதாக கருதப்படும். போக்குவரத்து அல்லாத வாகனங்களை பொறுத்தமட்டில், அவற்றின் பதிவுச் சான்றிதழ் பதிவு செய்த நாளிலிருந்து 15 வருடங்களுக்கு செல்லத்தக்கதாகும். அதன்பின்னர், 5 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படவேண்டும். அவ்வாகனத்தின் தகுதி, பதிவு செய்யும் அதிகாரியால் 1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகன சட்டப் பிரிவு 56-ன் கீழ் சரிபார்க்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. போக்குவரத்து வாகனங்களை பொறுத்தமட்டில், புதிய வாகனத்திற்கு முதல் 2 ஆண்டுகளுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பின்னர், அத்தகுதிச்சான்றிதழ் ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்பட வேண்டும். வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகையினை பரிசோதித்தும், வாகனத்தினை சரியான நிலையில் பராமரிப்பதை உறுதி செய்தும் வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.

வருவாய் ஈட்டுதல்

மாநில அரசின் முக்கிய வருவாய் ஈட்டும் துறைகளில் போக்குவரத்துத் துறையும் ஒன்றாகும். 1989-ஆம் ஆண்டின் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் மற்றும் 1989-ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதிகள் ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவாறு, இத்துறையின் பலவிதமான சேவைகளுக்கேற்ப கட்டணங்களும், வரிகளும் வசூலிக்கப்படுகின்றன. மேலும் 1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்ட விதிகளை மீறுவோரிடமிருந்து இணக்கக் கட்டணங்களும் வசூலிக்கப்படுகின்றன.

உள் கட்டமைப்பு மற்றும் சேவைகளின் திறன் மேம்படுத்துதல் (அ) அலுவலக உள்கட்டமைப்பு , போக்குவரத்து ஆணையர் தலைமையில் 2 இணைப் போக்குவரத்து ஆணையர் (செயலாக்கம்) அலுவலகங்கள், 12 சரக அலுவலகங்கள், 86 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், 59 பகுதி அலுவலகங்கள் மற்றும் 21 சோதனைச் சாவடிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 11 சரக அலுவலகங்கள், 49 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், 16 பகுதி அலுவலகங்கள் மற்றும் 3 சோதனைச் சாவடிகள் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன.

ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி

சோதனைச்சாவடிகளை நவீனமயமாக்கும் நோக்கத்துடன் திருவள்ளூர் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை எண்.5-ல் உள்ள பெத்திக்குப்பத்தில் போக்குவரத்துத் துறையுடன் இதர துறைகளான வருவாய்த் துறை, காவல் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளும் பயன்படுத்தும் விதத்தில் ஒருங்கிணைந்த நவீனமயமாக்கப்பட்ட சோதனைச்சாவடி ரூ.131.75 கோடி செலவில் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

இச்சோதனைச் சாவடியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், ஆந்திரப்பிரதேசம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வரும் வாகனங்களுக்காக 10 வழி பாதைகளும், வெளியே செல்லும் வாகனங்களுக்காக 6 வழி பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அளவுக்கதிகமாக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களையும், அரசுக்கு வரி ஏய்ப்பை ஏற்படுத்தும் வாகனங்களையும், சாலை விதிகளை மீறும் வாகனங்களையும் கால விரயமின்றி விரைவாக கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலும். ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைப்பதன் மூலம் அனைத்து வாகனங்களும் பல்வேறு துறைகள் மூலம் வெவ்வேறு இடங்களில் நிறுத்தி சோதனை செய்வதற்கு பதிலாக ஒரே இடத்தில் நிறுத்தி காலவிரயமின்றி சோதனையிட இயலும்.

கடந்த ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டு, அவற்றை நடைமுறைப்படுத்தும் பணிகள் வெவ்வேறு நிலைகளில் உள்ளன.

செயலாக்கப்பணிகளை வலுப்படுத்துதல்

1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் அதன்கீழ் வகுக்கப்பட்ட விதிகளை செயலாக்கம் செய்வது இத்துறையின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். போக்குவரத்துத் துறையில் மண்டல அலுவலகங்களுடன் கூடிய 12 செயலாக்கப்பிரிவுகள், சரக அலுவலகங்கள், ஸ்ரீரங்கம் மற்றும் சென்னை ஆகிய இரண்டு இடங்களில் உள்ள இணைப் போக்குவரத்து ஆணையர்களின் செயலாக்கம்) தலைமையில் இயங்கி வருகின்றன. மண்டல அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு செயலாக்கப் பிரிவிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் அவரின் கீழ் இயக்கூர்தி ஆய்வாளர் நிலை - 1, இயக்கூர்தி ஆய்வாளர் நிலை-II ஆகியோர் செயல்படுகின்றனர்.

மேலும், 2016-ஆம் ஆண்டு ஒரு இயக்கூர்தி ஆய்வாளர் நிலை - மற்றும் இரண்டு இயக்கூர்தி ஆய்வாளர் நிலை - II அடங்கிய 15 செயலாக்கப் பிரிவுகள், 15 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் செயலாக்கப் பணிகளை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.

வாகனச் சோதனை மேற்கொண்டு, அதிக சுமை ஏற்றிச் செல்லுதல், பதிவுச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், அனுமதிச் சீட்டு, காப்பீட்டுச் சான்றிதழ், மாசுகட்டுப்பாட்டுச் சான்றிதழ் ஆகியவற்றின் மெய்த்தன்மையை பரிசோதித்து, பழுதடைந்த முகப்பு விளக்குகளை பொருத்தி இருத்தல், சரியில்லாத பதிவெண் பலகையினை பொருத்தியிருப்பதை கண்டுபிடிப்பதுடன், எவ்வித வரி ஏய்ப்புமின்றி வாகன வரிகள் மற்றும் அபராதத் தொகை வசூலித்தல் போன்றவை செயலாக்கப் பணியாளர்களின் பணிகளாகும். வாகனங்களை சோதனை செய்வதற்காக தேசிய தகவல் மையத்தால் செயலாக்க மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பு சம்பந்தமான பணிகளை திறம்பட அமலாக்குவதற்கு சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.2.53 கோடி செலவில் டேப்லெட் கணினிகள் மற்றும் அச்சுப்பொறிகள் அனைத்து கள அலுவலர்களுக்கும் வழங்கப்படும். இதனால் விபத்துக்களின் எண்ணிக்கை குறைவதுடன் மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதி மீறல்களும் குறையும்.

பயணிகளின் நலனை கருத்திற்கொண்டு விழாக்காலங்கள் மற்றும் சிறப்பு வேளைகளின்போது ஆம்னிப் பேருந்துகளில் காலமுறை தணிக்கைகள் இத்துறையினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்று, அதிக சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணிக்கவும், இதர தொடர்புடைய குற்றங்களை தடுப்பதற்காகவும், மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் இத்துறையின் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் காலமுறையில் 24 மணிநேர சிறப்பு வாகன சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு, பள்ளிப் பேருந்துகளை இத்துறை காலமுறையில் சோதனை செய்து வருகிறது. மேலும், திருத்திய ஆட்டோரிக்ஷா கட்டணம் வசூலிப்பதையும் மற்றும் கட்டணமானியை இயக்காமல் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுவதையும் ஒருங்கிணைந்து தீவிர சோதனை மேற்கொள்கின்றனர்.

1988- ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 194-ன்கீழ், சரக்கு வாகனங்களில் அதிக சுமை ஏற்றி வரும் குற்றத்திற்கு அபராதம் விதிக்கப்படுகிறது. 1988- ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 113 மற்றும் 114-ன்கீழ் அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி அதிக சுமை இறக்கி வைக்கப்படுகிறது. மேலும், 1984-ஆம் ஆண்டின் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்துவதைத் தடுக்கும் சட்டத்தின்படி, சரக்கு வாகனங்களில் அதிக சுமை ஏற்றிச் சென்றால் காவல்துறை மூலம் குற்றவழக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

மின் ஆளுமை நடவடிக்கைகள்

(அ) மின் ஆளுமை

வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துரிதமான, தங்குதடையற்ற, திறமையான சேவைகளை வழங்கும் பொருட்டு போக்குவரத்துத் துறை கணினிமயமாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஓட்டுநர் உரிமங்கள், அனுமதிச் சீட்டுகள், பதிவுச் சான்றிதழ்கள், தகுதிச் சான்றிதழ்கள், வாகனங்களுக்கான கட்டணம் மற்றும் வரிகளை வசூலித்தல் ஆகிய பணிகள் அனைத்தும் தேசிய தகவல் மையத்தினரால் "வாகன்" மற்றும் "சாரதி” எனும் மென்பொருட்கள் மூலம் கணினி வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய தகவல் மையத்தின் மூலம் ஓட்டுநர் உரிமங்கள் தாமதமாக வழங்குவதை தடுப்பதற்கும், பணியினை துரிதப்படுத்துவதற்கும் மின்-ஆளுமை செயல்படுத்தப்பட்டுள்ளது.

மின்-ஆளுமை திட்டத்தினை செயல்படுத்திய பின்னர், விவரங்களை கையாள்வது மிகவும் எளிதாகவும், துரிதமாகவும் உள்ளது. இதன் மூலம், இத்துறை வசதியான, திறமையான மற்றும் வெளிப்படையான முறையில் சேவைகளை அனைத்து குடிமக்களுக்கும் வழங்குகிறது.

வாகனங்கள் தொடர்பான வரிகள் மற்றும் கட்டணங்கள் வசூலித்தல், பதிவுச் சான்றிதழ், தகுதிச் சான்றிதழ், தவணைக் கொள்முதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு “வாகன்" மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் அதன் தொடர்பான பணிகளைச் செய்வதற்கு “சாரதி” மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

தேசிய தகவல் மையத்தில் உள்ள மைய சர்வருக்கு அனைத்து தகவல்களையும் அனுப்பும் பொருட்டு, அனைத்து சரக அலுவலகங்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களுக்கு பிரத்யேகமான அகண்ட அலைவரிசை வசதி (Virtually Private Network) வழங்கப்பட்டுள்ளது. வாகனப் பதிவு மற்றும் ஒட்டுநர் உரிமம் குறித்த விவரங்கள் அடங்கிய மாநிலப் பதிவேடு தேசிய தகவல் மையத்தினரால் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்படி விவரங்கள் புதுடெல்லியில் உள்ள தேசிய பதிவேட்டிற்கு அனுப்பப்படுகிறது. மாநில மற்றும் தேசிய பதிவேட்டில் உள்ள வாகன விவரங்கள் மற்றும் ஓட்டுநர் உரிம விவரங்கள், இதர துறைகளான காவல் துறை, மாநில குற்ற ஆவணக் காப்பகம், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் கடவுச் சீட்டு வழங்கும் அலுவலகம் ஆகிய துறைகளுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

(ஆ) அனைத்து அலுவலகங்களையும் தமிழ்நாடு மாநில பெரும்பரப்பு வலை அமைப்புகள் (TNSWAN) மூலம் இணைவமைத்தல் / தொடரமைத்தல்

இத்துறையில் உள்ள அலுவலகங்களுக்கிடையே தடையற்ற தகவல் பரிமாற்றத் தொடர்பை ஏற்படுத்திடவும், செயலாக்கப் பிரிவு அலுவலர்கள் கையடக்க கருவியின் மூலம் தொலைவிடங்களிலிருந்து விவரங்களை பெறுவதற்கும் வசதியாக தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் தமிழ்நாடு மாநில பெரும்பரப்பு வலை அமைப்பு (Tamil Nadu State Wide Area Network) இணைப்பைப் பெறுவதற்கு ரூ.5.40 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை கேட்டுக் கொண்டதனடிப்படையில், வலைதளம் வாயிலான வாகன் மற்றும் சாரதி (பெயர்ப்பு - 4) அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வாகன் (பெயர்ப்பு - 4) அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து வலை அமைப்புகளும் தொடர்ந்து கிடைப்பதற்கும், சாலைப் பாதுகாப்பு மற்றும் செயலாக்கப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் களப்பணியாளர்களுக்கு அனைத்து தரவுகளும் கிடைப்பதற்கும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தில் உள்ள மைய சர்வரில் தரவுகளை விரைவாகவும் முறையாகவும் அனுப்புவதற்கும் ஏதுவாக தமிழ்நாடு மாநில பெரும்பரப்பு வலை அமைப்பு (Tamil Nadu State Wide Area Network) இணைப்பைத் தவிர கூடுதலாக அகன்ற அலைவரிசை வசதி (Virtually Private Network) இணைப்பு அனைத்து அலுவலகங்களுக்கும் ரூ.1.82 கோடி செலவில் சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

(இ) வலை அடிப்படையிலான ஓட்டுநர் உரிமங்கள் /பதிவுச் சான்றிதழ்கள் நடைமுறைப்படுத்துதல்

வாகன் மற்றும் சாரதி (பெயர்ப்பு-1) என்ற மென்பொருள், போக்குவரத்துத் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது, வலை அடிப்படையிலான சாரதி (பெயர்ப்பு -4) சோதனை அடிப்படையில் சென்னை (கிழக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைமுறைபடுத்தப்பட்டு அனைத்து அலுவலகங்களிலும் 01.03.2017 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வலை அடிப்படையிலான வாகன் (பெயர்ப்பு - 4) 46 அலுவலகங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இத்துறை, பாரத ஸ்டேட் வங்கியின் இ-சேவை நுழைவு வாயிலின் மூலம் வரி மற்றும் கட்டணங்களை வசூலிப்பதற்கு, பாரத ஸ்டேட் வங்கியினை ஒருங்கிணைப்பாளராக கொண்டு அவ்வங்கியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இ - சேவை நுழைவு வாயில் மூலம் வரி மற்றும் கட்டணங்கள் வசூலிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர், வாகன் (பெயர்ப்பு - 4) அனைத்து அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

சாரதி (பெயர்ப்பு - 4) மூலம் விண்ண ப்பதாரரின் இரத்தப்பிரிவு, ஆதார் எண், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் ஆகிய விவரங்களை தர இயலும். ஓட்டுநர் உரிமத்தில் விரைவு பதில் குறியீடு (QR Code 2D Bar Code) அச்சிடப்பட்டுள்ளதால், விரைவு பதில் குறியீடு ஸ்கேனர் வாயிலாக ஓட்டுநர் உரிமத்தின் விவரங்களை அறிவதன் மூலம் சம்பவ இடத்திலேயே ஒட்டுநர் உரிமங்களின் உண்மைத்தன்மை அறிய இயலும். இதுபோன்று, வாகன் (பெயர்ப்பு -4) நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக, வாகனங்களின் விவரங்களை உடனுக்குடன் அறியமுடியும். இதன்மூலம் வாகன விபத்துக்கள் நிகழும்போது, விபத்தில் பாதிக்கப்பட்டவரை விரைவில் அடையாளம் கண்டு அவரது குடும்பத்தினருக்கு தேவையான உதவியை வழங்க இயலும்.

(ஈ) போக்குவரத்துத் துறையின் இணையதள சேவைகள்

பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் போக்குவரத்துத் துறையின் இணையதளம் (http://tnsta.gov.in) வாயிலாக கீழ்க்காணும் சேவைகள் வழங்கப்படுகின்றன.

 1. குறியீட்டு எண் வாயிலாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களின் எல்லைகளை அறிந்து கொள்ளுதல் ;
 2. இத்துறையின் மூலம் வழங்கப்பட்டு வரும் பல்வேறு சேவைகளுக்கான விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளுதல்;
 3. கீழ்க்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்;
 4. ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் மூலம் பழகுநர் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ;
 5. வாகன விற்பனையாளர்களிடமிருந்து வாகனங்களுக்கான பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்கள்;
 6. தவணை கொள்முதல் பெற்ற / இரத்து செய்த விவரத்தினை பதிவு செய்யப் பெறப்படும் விண்ணப்பங்கள்;
 7. சிறப்புப் பதிவு எண்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள்;
 8. http://vahan.nic.in/npermit இணைய தளத்தின் வாயிலாக தேசிய அனுமதிச்சீட்டு பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்;
 9. இத்துறையால் வழங்கப்படும் பல்வேறு வகையான சேவைகளை பெறும் பொருட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் - பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்களை நேரில் சந்திப்பதற்கு இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்தல்;
 10. இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் குறைகளைப் பதிவு செய்தல்;
 11. வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் பகுதி அலுவலகங்களில் தினமும் தொடங்கப்படும் தொடக்க பதிவு எண்களின் விவரங்களைக் கண்டறிதல்.

கீழ்க்காணும் இரு சேவைகள் பொது சேவை மையத்துடன் இ-சேவை வாயிலாக வழங்கப்படுகின்றன.

சரக்குகள் மற்றும் பயணிகள் போக்குவரத்து இயக்குவது மிகவும் அவசியமாகிறது. ஒருமித்த அடிப்படையில் ஒருமுனை வரி அல்லது வரிச் சலுகைகளுடன் தேவையான அளவிற்கு சரக்கு வாகனங்கள், ஒப்பந்த ஊர்திகள், நிலை பேருந்துகளை அண்டை மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு ஏற்கனவே, அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுடன் மாநில ஒப்பந்தங்கள் செய்துள்ளது. மேலும் கூடுதல் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த மேற்கண்ட அண்டை மாநிலங்களுடன் துணை ஒப்பந்தங்கள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இத்துணை ஒப்பந்தங்கள் மூலம் முக்கிய வியாபார மையங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல போக்குவரத்து சேவை வழங்கப்படுகிறது.

ஆதாரம் – தமிழ்நாடு அரசு

3.02631578947
நவின் Jun 22, 2020 01:48 PM

தமிழகத்தில் எந்த ஆண்டு வாகன பதிவு புத்தகத்தில் இருந்து அட்டையாக மாற்றப்பட்டது

இராஜ்குமார் Jul 03, 2019 12:15 PM

புழல் காவாங்கரை கெம்ப் ஆகியவை அடங்கும் சார்ந்த சாலையில் நடைபாதை அமைய எர்பாடு செய்து தரவேண்டும்

தினமும் காலையில் மாலையில் மத்தியில் என்னட்ற விபத்தில் சிக்கியவர் பல இடங்களில் உண்டு

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top