பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / சுற்றுலா துறை / இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

அறிமுகம்

இந்தியாவில் பயணிகள் தங்குவதற்கு விஹாரங்களும், தர்மச் சத்திரங்களும் இருந்தன. அவ்விடங்களில் பயணம் செய்பவர்கள், அறிஞர்கள், நாடுகளைக் கண்டுபிடிக்கும் வீரர்கள், வணிகர்கள் போன்றோர் தங்கினர். அவர்கள் அளித்த கட்டணத்தில் அவ்விடுதிகள் நடந்தன.

பண்டைக் காலப் புத்தபிக்குகள் பயணிகள் தங்குவதற்கென முதன்முதலில் பாதுகாப்பான இடங்களைக் கட்டினர். இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள குடவரைக் கோயில்கள், வழிபடும் இடங்களாகவும், புத்த பிக்குகள் தங்கும் இடமாகவும் இருந்தன. புத்தபிக்குகள் அமைதியான இடங்களில் மடங்கள் கட்டி வாழ்ந்தனர். அவர்கள் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தங்களிடம் வந்து தங்கிய பயணிகளுக்குத் தங்க இடமும், உண்ண உணவும் அளித்தனர். அம்மடங்கள் முக்கியமான சாலைகளில் அமைந்திருந்தன. சில வணிகர்கள் அம்மடங்களின் நிர்வாகச் செலவை ஏற்றுக் கொண்டதாகக் கல்வெட்டுக்களால் அறியமுடிகிறது. அம்மடங்கள் வணிகர்கள் தங்கும் விடுதிகளாகப் பயன்பட்டன. வணிகர்களின் பணத்தைப் பாதுகாக்கும் இல்லங்களாகத் திகழ்ந்தன.

சமயத் தொடர்பான புனித இடங்களில் உணவுச் சாலைகளும் இருந்தன. அவ்வுணவுச் சாலைகளில் சமையற்காரர்கள் இருந்தனர். செர்சாசூரி என்னும் ஆப்கானியப் பேரரசர் நெடுஞ்சாலைகளை அமைத்தார். அச்சாலையில் குறிப்பிட்ட இடைவெளிக்குப் பின் உணவுச் சாலைகளை அமைத்து வணிகத்தையும், பயணத்தையும் பாதுகாத்தார். அதேபோல் முகம்மதியர்களும் தங்கள் நாடு முழுவதும் அவ்வகை உணவு விடுதிகளைக் கட்டினர். பிற்காலத்தில் அரசர்களும், நவாபுகளும், பெரும் வணிகர்களும், கொடையாளர்களும் உணவு விடுதிகளைக் கட்டிப் பயணத்தை எளிதாக்கினர். வாணிகம் பெருகிய காரணத்தால் பாதுகாப்பான தங்கும் இடங்களும், உணவு விடுதிகளும் பெருகின. அவ்வுணவுச் சாலைகள் பயணிகளுக்கு உணவும் பாதுகாப்பும் அளித்துடன், அவர்களது குதிரைகளுக்குத் தீவனமும் அளித்தன.

விடுதிகளின் தோற்றம்

சத்திரங்கள் பயணிகளின் தேவைக்கேற்பவும், பயணிகளைத் திருப்திபடுத்தும் நோக்குடனும் தற்கால விடுதிகளாக மாறின. அது மக்களின் வாழ்க்கைத் தரம், வாழ்க்கை முறை போன்றவற்றிற்கு ஏற்ப நடைபெற்றன. கி.பி.1744-ல் லண்டனில் டேவிட் லோ என்பவர் முதல் "குடும்ப விடுதியை" லார்டு ஆச்சரின் முன்னாள் வீடான "கோவன்ட் கார்டனில்" தொடங்கினார். அதன்பின் லண்டன், பிரைட்டன், பாஸ்டன் என்னும் இடங்களில் புதிய விடுதிகள் தோன்றலாயின. கி.பி.1820-ல் சுவிச்சர்லாந்தில் முதல் சுற்றுலா விடுதி கட்டப்பட்டது. புகைவண்டிப் பயணம் பெருகியதற்கு ஏற்பத் தங்கும் விடுதிகளும் பெருகலாயின. நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்புப் பெருகப் பெருக தங்கும் விடுதிகளும் பெருகின. நகரங்களில் நடைபெற்ற களியாட்டங்களைக் காண செல்லும் மக்களுக்கும் தங்கும் இடங்கள் தேவைப்பட்டன. எனவே பணக்காரர்கள் பலவகை விடுதிகளைக் கட்டினர்.

விடுதிகளின் வெளிப்பாடு

அமெரிக்க அருந்தகத்திலிருந்து விடுதிகள் தோன்றின. பிரான்சில் பணக்காரர்களும், புகழ்பெற்றவர்களும் தங்கும் இடமாக விடுதிகள் விளங்கின. நகர் மன்றங்களும், அருந்தக சாலைகளும் விடுதிகள் என்று வழங்கப்பட்டன. கி.பி.1800-ல் அருந்தகம், ஓட்டல்கள், விடுதிகள் காபிகவுசஸ் போன்ற சொற்கள் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டன. கி.பி.1820-ல் ஓட்டல் என்றும் சொல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மக்கள் அவ்விடங்களில் உணவும், இரவில் உறையுளும் பெற்றனர். அமெரிக்க விடுதிகள் வணிகர்கள் ஒன்று கூடும் இடங்களாகத் திகழ்ந்தன. அக்காலத்தில் ஓட்டல்களை தரம் பிரிக்கவில்லை . 19-ம் நூற்றாண்டில் விடுதிகள் கூட்டங்களும், மாநாடுகளும் நடத்தும் இடங்களாக விளங்கின. கி.பி.1830-ல் ஹென்றி கிலோ என்பவர் பால்டிமோர் விடுதியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவ்விடுதியில் 200 தனி அறைகள் இருந்தன. இன்று அமெரிக்க விடுதிகளின் மொத்த வருமானத்தில் 1/3 பாகம் கூட்டங்கள், மாநாடுகள் போன்றவை நடத்தப்படுவதால் கிடைக்கின்றன.

சுற்றுலாத் துறை வளர்ச்சியில் விடுதிகள் மிகுந்த பங்கு வகிக்கின்றன. விடுதிகள் இல்லாமல் சுற்றுலா மையத்தை மேம்படுத்துவது மிகவும் கடினம். இந்தியாவில் முக்கியமான சுற்றுலா மையங்களின் மத்திய அரசும், மாநில அரசும் மற்றும் தனியார் துறைகளும் விதவிதமான விடுதிகளை அமைத்து சுற்றுலாப் பயணிகளின் இன்பப் பொழுதை இதமாக கழிப்பதற்கு உதவுகின்றது.

இந்தியாவில் சுற்றுலா 1960-ம் ஆண்டுக்குப்பிறகு வேகமாக வளர்ச்சியடைந்தது. எனவே சுற்றுலா மேம்பாட்டுக்கான ஆலோசனை கூறும்படி ஜா என்பவர் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த 'ஜாக்' கமிட்டி 1963-ல் தனது பரிந்துரைகளைத் சமர்பித்தது. மத்திய அரசு சுற்றுலாத் துறையில் மிகுதியான கவனம் செலுத்த வேண்டும். இந்திய விடுதிக்கழகம், இந்திய சுற்றுலாத்துறைக் கழகம், இந்திய சுற்றுலாத்துறை போக்குவரத்துக் கழகம் என்ற மூன்று கழகங்களை உருவாக்க வேண்டும் என்று ஜா கமிட்டி பரிந்துரைத்தது. அதன்படி மேற்கண்ட மூன்று கழகங்களை 1965-ல் இந்திய அரசு 1953-ம் வருடக் கம்பெனிச்சட்டத்தின் கீழ் அமைத்தது. சுற்றுலா விடுதிகளைக் கட்டி நிர்வாகிப்பது. சுற்றுலாப் பயணிகளுக்குப் போக்குவரத்துச் சாதனங்களைக் கொடுத்து உதவுவது போன்ற முக்கியப் பணிகளை இந்த மூன்று கழகங்களும் செய்தன.

ஆனால் பின்னர் இந்திய அரசு பொருளாதாரச் சிக்கனம், திறமையாகச் செயல்படல், ஒவ்வொன்றும் ஒருங்கிணைந்து செயல்படல், முறையாகத் திட்டங்கள் தீட்டல் போன்ற காரணங்களுக்காக இந்த மூன்று கழகங்களையும் இணைக்க முடிவு செய்தது. அதன்படி 1966 அக்டோபர் 1-ம் தேதி இந்த மூன்று நிறுவனங்களும் இனணக்கப்பட்டு டெல்லியில் இந்திய சுற்றுலா வளர்ச்சிக்கழகம் என்ற பெயருடன் சுற்றுலாத்துறையின் ஆதரவுடன் செயல்பட ஆரம்பித்தது. நிர்வாகச் சீர்திருத்தக் குழுவின் பரிந்துரையின்படி, அசோகா ஓட்டல்கள், ஜன்பத் ஓட்டல்கள், லோடி ஓட்டல்கள், ரஞ்சித் ஓட்டல்கள் ஆகியவை இந்தியா சுற்றுலாக் கழகத்துடன் 1970 மார்ச் 28-ல் இணைக்கப்பட்டு செயல்படத் தொடங்கின. இந்தியா சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஒரு அரசு பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நோக்கங்கள்

இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நோக்கங்களையும், பணிகளையும் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.

  1. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஓட்டல்கள், மோட்டல்கள், சிற்றுண்டியகங்கள், விருந்தினர் மாளிகைகள், பயணியர் மாளிகைகள், கடற்கரை பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவற்றைப் பல்வேறு இடங்களில் நிறுவிப் பராமரித்தல்.
  2. சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டிய அனைத்துரக போக்குவரத்து வசதிகளை அளித்தல்.
  3. சுற்றுலாப் பயணிகளின் இன்பப் பொழுது போக்கிற்காக இன்னிசை நிகழ்ச்சிகள், ஒலி ஒளி காட்சிகள், நாட்டிய நாடகங்கள் முதலானவற்றை நடத்துதல்.
  4. அயல் நாடுகளில் உள்ள பயணிகளைக் கவர்ந்திழுப்பதற்காக நாட்டில் உள்ள பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை விளம்பரம் மூலம் தெரியப்படுத்துதல்.
  5. சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் கிடைக்கக்கூடிய பல்பொருள் அங்காடிகளை ஏற்படுத்துதல்.
  1. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சுற்றுலா சம்பந்தப்பட்ட மேலாண்மை சேவை செய்து கொடுத்தல் ஆகியவையாகும்.

இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பணிகள்

இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகமானது சிறப்பான பல பணிகளைச் செய்து வருகிறது. விடுதிகள், சிற்றுண்டி சாலைகள் மற்றும் சுற்றுலாவின் பிற துறைகளில் தேவைப்படும் மனித சக்தியை உருவாக்கும் நடவடிக்கைகளைச் செய்து வருகிறது. இதற்காக இந்த கழகம் நாட்டில் 21 விடுதி நிர்வாகம் மற்றும் விருந்துபசரிக்கும் தொழில் நுட்ப நிறுவனங்களையும் 15 சமையல்கலை பயிற்றுவிக்கும் நிறுவனங்களையும் அமைத்துள்ளது. இந்த நிறுவனங்கள் விடுதி நிர்வாகத்திலும், சமையல்கலையிலும் பட்டய வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த படிப்புகள் ஆறுமாதம் முதல் ஒருவருடம் வரையிலான கால அளவு கொண்டவை. இந்த வகுப்புகள் மூலம் சுற்றுலாத் துறைக்குத் தேவைப்படும் மனித சக்தி கிடைக்கிறது.

மேலும் இந்த கழகம் சாகசசுற்றுலாவை மேம்படுத்தவும் சில நிறுவனங்களை நடத்தி வருகிறது. கோவாவில் தேசிய நீர் விளையாட்டு நிறுவனமும் குல்மார்க்கில் இந்திய மலையேறுதல் மற்றும் வான்பறக்கும் பயிற்சி நிறுவனமும் செயல்பட்டு வருகின்றன. மேலும் இது சம்பந்தமாக ஆலி, பாட்னிடாப், குல்மார்க், குலு ஆகிய இடங்களில் வகுப்புகளையும் நடத்தி வருகிறது. இந்திய சுற்றுலா வளர்ச்சிக்கழகம்.

மேலும் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நாட்டிலுள்ள நட்சத்திர விடுதிகளை தரவாரியாக (ஒன்று முதல் ஐந்து நட்சத்திரம்) வகைப்படுத்துகிறது. ஒவ்வொரு மூன்று வருடத்திற்கு ஒரு முறை இவ்வாறு வகைப்படுத்துகிறது. இதற்காகவே விடுதிகள் மற்றும் சிற்றுண்டிச்சாலை ஒப்புதல் மற்றும் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் மத்திய சுற்றுலாத்துறை, மாநில அரசுகள், விடுதி மற்றும் சுற்றுலாத்துறை சங்கங்களின் பிரதிநிதிகள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

2000-ம் வருட மார்ச் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1164 விடுதிகள் உள்ளன. அவைகளில் 72,156 அறைகள் உள்ளன. இந்த விடுதிகள் அனைத்தும் சுற்றுலாத்துறையால் அங்கீகரிக்கப்பட்டவை ஆகும். தற்சமயம் 157 ஒரு நட்சத்திர விடுதிகள், 377 இரண்டு விடுதிகள், 356 மூன்று நட்சத்திர விடுதிகள், 94 நான்கு நட்சத்திர விடுதிகள், 62 ஐந்து நட்சத்திர விடுதிகள், 54 ஐந்து நட்சத்திர டீலக்ஸ் விடுதிகள், 64 பாரம்பரியத் தன்மை கொண்ட விடுதிகள் இந்தியாவில் உள்ளன. இந்த விடுதிகள் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் சேவை செய்து வருகின்றன.

மேலே கூறப்பட்ட நோக்கங்களையும், பணிகளையும் நிறைவேற்றும் வகையில், இந்திய சுற்றுலா வளர்ச்சிக்கழகம், மைய அரசின் 'சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் சுற்றுலாவை முன்னேற்றி வருகிறது. 1969-ம் ஆண்டு 129 அறைகளையும் ஐம்பது பேரூந்துகளை மட்டுமே கொண்டிருந்த இக்கழகம் இன்று மூவாயிரத்துக்கும் மேற்பட்ட விடுதி அறைகளையும், முந்நூறுக்கும் மேற்பட்ட பேருந்துகளையும் கொண்டு திறமையாகச் செயல்பட்டுவருகிறது. எனவே புதுத்தெம்புடன் வளர்ந்துவருகிறது. இந்தியாவில் சுற்றுலா ஒரு தனித்துறையாக அங்கீகரிக்கப்பட்ட பிறகு இந்த கழகத்தின் செயல்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகம் புது டெல்லியில் உள்ள தனது தலைமைக் கழகத்தில் விற்பனைப் பிரிவு ஒன்றையும் துவங்கி சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை செய்து வருகிறது. சுற்றுலாவை வணிகமயமாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் உள்ள பல்வேறு நிபுணர் குழுக்களும், ஆலோசனைக் குழுக்களும் நல்ல முறையில் செயல்பட்டு சுற்றுலாத்துறை வளர்வதற்குப் பாடுபட்டு வருகின்றன.

தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகம்

சுற்றுலாத் துறையின் மூலம் கிடைத்த வருமானத்தைக் கணக்கில் கொண்டு, அந்த துறையை மேம்படுத்த தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தியது. இதன் விளைவாக அமைக்கப்பட்டதுதான் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆகும்.

அமைப்பு

1971 ஜூலை 1-ம் தேதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இந்தக் கழகம் கீழ்க்கண்ட முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழக சுற்றுலா மையங்களை மேம்படுத்துதல், குறைந்த வருமானம் பெறுவோர் தங்குவதற்குரிய ஓய்வு விடுதிகளை நிர்மானித்து நிர்வாகம் செய்தல், சுற்றுலா பற்றிய விளம்பரம் செய்தல், தொடர் பயண சுற்றுலாக்களை நடத்துதல் போன்ற அடிப்படை நோக்கங்களைக் கொண்டுள்ளது. இந்த சுற்றுலாத்துறை ஐம்பது லட்சம் மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சின்னம் 'குடை' ஆகும். இக்கழகத்தின் தலைமை இடம் சுற்றுலாத்துறை வளாகம் ஓமந்தூரார் அரசினர் தோட்டம், சென்னை -2 ல் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் தங்கும் விடுதிகள் படகு இல்லங்கள், பேருந்துகள் போன்றவை இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இவை ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சென்னை மண்டலத்தில் மாமல்லபுரம், முட்டக்காடு, காஞ்சிப்புரம், வண்டலூர் போன்ற பகுதிகளும், மதுரை மண்டலத்தில் கொடைக்கானல், பழனி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளும், திருச்சி மண்டலத்தில் கன்னியாகுமரி, குற்றாலம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளும், கோவை மண்டலத்தில் உதகை, முதுமலை, ஏற்காடு, ஒகேனக்கல் போன்ற பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. இவைகளில் கோவை மண்டலத்திலிருந்தே கழகத்திற்கு அதிக வருவாய் கிடைத்து வருகிறது. 1998-ம் வருடம் மட்டும் 533 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. 2000-ம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் தமிழ்நாட்டில் 666.95 கோடி ரூபாய் அந்நிய செலவாணி கிடைத்துள்ளது.

சிறப்புப் பணிகள்

தமழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 115 தகவல் நிலையங்கள், 42 பயணியர் அலுவலகங்கள், 50 செய்தி நிறுவனங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. புதுடில்லி, சென்னை, ராமேஸ்வரம் முதலான நகரங்களில் இதன் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தைப் பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு சென்னையில் ரூ.2 கோடி செலவில் சுற்றுலா தகவல் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்த செலவில் தங்கும் வசதிகளைச் செய்து வருகிறது. பயணிகளைப் பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு அழைத்துச் செல்ல திட்டங்கள் திட்டி செயல்படுத்துகிறது. 26 வகையான சுற்றுலாக்களை நடத்தி வருகிறது. 'தமிழ்நாடு உணவு விடுதி' என்ற பெயரில் புகழ்பெற்ற சுற்றுலா மையங்களில் உண்ணும் விடுதிகளையும் தங்கும் விடுதிகளையும் கட்டி சேவை செய்து வருகிறது. இக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 36 தங்கும் விடுதிகள் உள்ளன. இவற்றுள் நட்சத்திர தகுதபெற்ற ஓட்டல்கள் ஐந்து உள்ளன. இவன முறையே மதுரை, கோயம்புத்தூர், ஒனேக்கல், ஏற்காடு ஆகிய இடங்களில் உள்ளன.

இக்கழகம் சென்னை , சிதம்பரம், கோயம்புத்தூர், குன்னூர், குற்றாலம், ஒகனேக்கல், ஓசூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கும்பகோணம், கொடைக்கானல், மதுரை, மாமல்லபுரம், மேல்மருவத்தூர், முதுமலை, நாகப்பட்டினம், பழனி,பிச்சாவரம், ராமேஸ்வரம், ராணிப்பேட்டை, சேலம், சாத்தூர், தஞ்சாவூர், திருச்சி, திருச்செந்தூர், திருநெல்வேலி, திருத்தணி, உழுந்தூர் பேட்டை, உதகமண்டலம், ஏர்க்காடு ஆகிய இடங்களில் விடுதிகளை அமைத்து நிர்வகித்து வருகிறது. மேலும் கடற்கரை விடுதியையும் நடத்தி வருகிறது. இது தவிர தமிழ்நாடு முழுவதிலும் மொத்தம் பத்து இளைஞர் விடுதிகளையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை, மதுரை, திருச்சி முதலிய நகரங்களிலிருந்து அவற்றைச் சுற்றியுள்ள சுற்றுலா மையங்களைச் சுற்றிப்பார்க்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து கீழ்க்கண்ட பல சுற்றுலாக்களை நடத்தி வருகிறது. ஒரு நாள் சென்னை நகர சுற்றுலா, மாமல்லபுரம் சுற்றுலா, ஒரு நாள் பாண்டிச்சேரி சுற்றுலா, திருப்பதி சுற்றுலா, ஒரு நாள் தேசியர் தரிசன சுற்றுலா (மாங்காடு), ஒரு நாள் திருமலா தரிசன சுற்றுலா, ஒரு நாள் தொண்டை நாட்டு திருப்பதிகள் சுற்றுலா, ஒரு நாள் வேளாங்கண்ணி சுற்றுலா, திருவண்ணாமலை கிரிவலம் சுற்றுலா, தென்னன்கூர் சுற்றுலா, ஒரு நாள் வல்லக்கோட்டை திருத்தலை சுற்றுலா ஆகியவையாகும்.

ஒரு நாள் சுருட்டப்பள்ளி சுற்றுலா, நான்கு நாள் சோழ நாட்டு திருப்பதியின் சுற்றுலா, ஐந்து நாள் பாண்டிய நாட்டு திருப்பதிகள் சுற்றுலா, ஆறு நாள் தென்னிந்திய சுற்றுலா, ஒரு நாள் முகாம்பிகை சுற்றுலா, ஏழு நாள் கோவா மந்திராலய சுற்றுலா, எட்டு நாள் முகாம்பிகை சுற்றுலா, எட்டு நாள் கிழக்கு மேற்கு கடற்கரை சுற்றுலா, எட்டு நாள் தமிழ்நாடு சுற்றுலா, எட்டு நாள் ஆந்திரா சுற்றுலா, பதினான்கு நாள் மும்பை அஜந்தா எல்லோரா சுற்றுலா, பதினான்கு நாள் தென்னிந்திய சுற்றுலா, பதினான்கு நாள் பூரி, கயா, காசி, அலகாபாத் சுற்றுலா மற்றும் மாணவர்களுக்கு பேக்கேஜ் சுற்றுலா ஆகியவைகளை சிறப்புடன் நடத்தி வருகிறது.

கோடை வாசஸ்தலங்களையும், கோவில்களையும், விடுமுறை பொழுது போக்கிடங்களையும் பார்வையிடுவதில் அயல்நாட்டுப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே இக்கழகம் கொடைக்கானல், முட்டக்காடு பிச்சாவரம், ஊட்டி, ஏற்காடு ஆகிய இயற்கை அழகுமிக்க இடங்களில் படகு வீடுகளைக்கட்டி சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது. முட்டக்காட்டில் அயல்நாட்டுப் பயணிகளைக் கவரும் வகையில் பல புதிய நீர் விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தகவல் மையம் மற்றும் விற்பனைக்கூடம் சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் மைய நூலகத்தில் செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயணிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த மையம் தொடங்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல்கள் இங்கு கிடைக்கலாம். சுற்றுலா கையேடுகள் பிரதிகள், வரைபடங்களும் கிடைக்கும். சுற்றுலாவுக்கான பயணச்சீட்டுகள் முன்பதிவு வசதியும் இங்கு உண்டு.

இவ்வாறு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் அரிய முயற்சியாலும், தமிழக அரசின் ஆதரவாலும் சுற்றுலாத்துறை தமிழகத்தில் சிறப்பான வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் தமிழக சுற்றுலாத்துறை அயல்நாட்டு மக்களால் ஈர்க்கப்படுவதால் இந்திய அரசு அதிக அளவில் அன்னிய செலவாணியை ஈட்டி வருவதுடன் தேசியப் பொருளாதாரத்தையும் உயர்த்தி வரகிறது. 1995-96-ம் வருட மதிப்பீட்டின் படி சுற்றுலா மூலம் தமிழகத்தில் 9,76,680 பேர் வேலை வாய்ப்பும் 12,22,587 பேர் மறைமுக வேலைவாய்ப்பு பெற்றனர்.

ஆதாரம் : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

3.3
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top