பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / சுற்றுலா துறை / சுற்றுலாவின் பயண முகவர்கள் – ஒர் பார்வை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றுலாவின் பயண முகவர்கள் – ஒர் பார்வை

சுற்றுலாவின் பயண முகவர்கள் – ஒர் பார்வை

முன்னுரை

பயணப்பணி நிறுவனங்களில் பணி புரிபவர்களே 'பயண முகவர்கள்' ஆவார். பயண முகவர்கள் தனியார் துறையைச் சார்ந்தவர்கள் ஆவர். அவர்கள் சுற்றுலாவில் முக்கியப்பங்கு பெறுவதுடன் சுற்றுலாத்துறையையும் வளர்க்கின்றனர். பயண முகவர்கள் சுற்றுலா மையங்களின் மேன்மையை மக்களிடம் பரப்பி மக்களைச் சுற்றுலா செல்லத் தூண்டுகின்றனர். மேலும் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வழிகாட்டுபவர் பயண முகவர்களேயாவர். பயண வசதிகளை மற்றவர்களுக்கு செய்து தருபவரை பயண முகவர் என்று கூறலாம். நல்ல பயிற்சியும் அனுபவமும் பெற்றிருக்கும் இந்த பயண முகவர்கள் வசதியாகப் பயணம் செய்வதற்கு அறிவுரை கூறுகின்றனர். பயணம் பற்றிய விபரங்களைத் தருவதும், பயணம் சம்பந்தப்பட்ட தேவைகளை நிறைவேற்றித் தருபவரும் பயண முகவரே அவரது பணிகளை விரிவாக ஆராயலாம்.

பயண முகவர்களின் பணிகள்

பயண முகவர்களின் பணிகள் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. மேலும் அவர்கள் எந்த வகை தொழில்களில் ஈடுபடுகின்றனர் என்பதைப் பொருந்தும் அவர்களது பணிகள் அமைகின்றன. சுற்றுலா முகவர்களின் அலுவலகம் அவர்கள் சுற்றுலாவைப்பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சுற்றுலாவோடு தொடர்புடைய பிற துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் முகவர்கள் அறிந்திருக்க வேண்டும். சுற்றுலா முகவர்களின் பணிகளைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

பயணத்தைப் பற்றிய செய்திகளைத் தெரிவித்தல்

ஒரு சுற்றுலாப் பயணியின் கருத்துப்படி ஒரு பயண முகவரின் முக்கியமான பணி என்னவென்றால் பயணங்களைப் பற்றிய தேவையான தகவல்களைப் பயணிகளுக்கு அளிக்க வேண்டும். தான் பயணம் செய்யப் போகும் இடங்களைப் பற்றிய பயணியின் விசாரணைகளுக்கு தக்க பதில் அளிக்க வேண்டும். எனவே பயணத்தைப் பற்றியும், சுற்றுலா மையத்தைப் பற்றியும் தெளிவான அறிவு இருந்தால் தான் பயணிகளின் சந்தேகங்களைத் தீர்க்கமுடியும். பயண முகவர் என்பவர் பயணம் செய்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கக் கூடியவர். எனவே சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ப நடக்க வேண்டும். அதேநேரம் சுற்றுலாவின் நுணுக்கங்களையும் அறிந்திருக்க வேண்டும். இவற்றிற்கு சுற்றுலா முகவர்கள் நல்ல நடையில் திறமையாக பேசக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் பயண முகவர்கள் இரண்டு அல்லது மூன்று மொழிகள் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

பயணத்திற்கான திட்டங்களைத் தீட்டுதல்

திட்டங்களைத் தீட்டி அதன் அடிப்படையில் நடைபெறும் சுற்றுலாக்களே வெற்றியடைகின்றன. ஒரு சுற்றுலாவைத் திட்டமிட்டால்தான் அதற்காகும் செலவைக் கணக்கிட முடியும். திட்டமிடல் என்பது சற்று கடினமான வேலையாகும். இதற்கு ஆர்வமும் அனுபவமும், விடாமுயற்சியும் தேவை. பயணிகளின் விருப்பத்திற்கேற்ப திட்டமிட வேண்டும். எந்த வழித்தடத்தில் செல்லவேண்டும். எந்த வாகனத்தில் செல்ல வேண்டும், எங்கே தங்குவது, எங்கே உண்பது, எங்கே பயணிகளுக்கு பொழுதுபோக்கு கிடைக்கிறது போன்ற பல அம்சங்களையும் அலசி ஆராய்ந்து முன்கூட்டியே திட்டமிட்டு பயணிகளுக்கு உதவுவதே பயண முகவர்கள் பணியாகும்.

பயணத்திற்கான முன்னேற்பாடு செய்தல்

சுற்றுலாப் பயணம் சிறப்படைய சுற்றுலா முகவர்கள் சில முன்னேற்பாடுகளைச் செய்தாக வேண்டும். முதலாவதாக பருவங்காலங்களுக்கு ஏற்ற வகையில் சுற்றுலா மையங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பயணம் செய்ய இருக்கும் ஒவ்வொரு இடம் பற்றிய செய்திகளை முகவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பயணத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள மையங்களுக்கு முதலில் சென்று பார்வையிட்டு அங்குள்ள வசதிகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். போக்குவரத்து கம்பனிகள், ஓட்டல் சொந்தக்காரர்கள், கார் சொந்தக்காரர்கள் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களும் ஏற்பாடுகளும் செய்துகொள்ளுதல் அவசியம். இதற்குப் பிறகே பயணத்திற்கான முன்னேற்பாடுகளையும் செலவுகளையும் செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு ஏற்றபடி திட்டமிட்டுச் சுற்றுலாக் குழுவை அழைத்துச் செல்ல வேண்டும்.

பயண முகவர்கள் எவ்வளவுதான் திட்டமிட்டுச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தாலும் விளம்பரம் இல்லாமல் பயணிகள் சுற்றுலாவுக்கு வரமாட்டார்கள். எனவே மக்களுக்கு சுற்றுலாவை அறிவிக்க விளம்பரம் செய்ய வேண்டியுள்ளது. பெரிய சுற்றுலா முகவர்கள் தங்கள் நிறுவனங்களில் விளம்பரத்துக்காக தனியாக துறையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

சீட்டுகளை வாங்கித் தருதல்

பயணிகளுக்கு பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை வாங்கித் தருதல் பயண முகவர்களின் பணிகளில் ஒன்றாகும். விமானம், கப்பல், ரயில், பேருந்து

போன்றவற்றில் முன்பதிவு செய்து டிக்கட்டுகளை வாங்கிக் கொடுக்க வேண்டும். ஆனால் இப்படி பயணச் சீட்டுகளை வாங்கிக் கொடுக்கும் முகவர்களுக்கு பல்வேறு வகையான வாகனங்களைப் பற்றிய நுண்ணறிவு தேவைப்படுகிறது. விமானம், கப்பல், ரயில், பேருந்துகளின் கால அட்டவணை, கட்டண விபரம், பயணத்திற்காக எடுத்துக்கொள்ளும் நேரம், செல்லும் தடம் ஆகியவற்றையும் பயண முகவர் தெரிந்து வைத்திருக்கவேண்டும். அவ்வப்போது இவைகளில் ஏற்படும் மாற்றங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

விமானக் கட்டணம் கம்பனிக்கு கம்பனி மாறுபடுகின்றது. மேலும் நாட்டுக்கு நாடு பணத்தின் மதிப்பும் மாறுகிறது. சில விமானக் கம்பனிகள் திடீரென பயண நேரத்தை மாற்றிவிடும், ரத்து செய்யும். புதிய வழித்தடங்களை அறிவிக்கும். பயண முகவர்கள் இது போன்ற மாற்றங்களை உடனுக்குடன் தெரிந்து வைத்துக்கொள்ளுதல் அவசியம். ரயில் பயணங்களிலும் பல சிக்கல்களை முகவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இந்தியாவில் விரைவு வண்டிகளுக்கும் சாதாரண ரயில் வண்டிகளுக்குமிடையே கட்டணத்தில் வேறுபாடுகள் உள்ளன. அடிக்கடி கட்டணங்களும் கூட்டப்படுகின்றன. மேலும் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, குளுகுளு வகுப்பு போன்றவற்றிற்கும் கட்டணங்கள் மாறுபடுகின்றன. எனவே பயணமுகவர் இதனையெல்லாம் கவனமாக தெரிந்து கொள்ள வேண்டும். பேருந்துகளிலும் இதே நிலைதான். எனவேதான் சுற்றுலா முகவர்கள் விமானம், ரயில், பேருந்து கட்டண மாற்றங்கள், கால அட்டவணை மாற்றங்கள் ஆகியவைகளை அவ்வப்போது அறிந்துகொண்டு மிக எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.

வெளிநாட்டு நாணய மாற்று செய்து கொடுத்தல்

பயணிகளுக்கு தேவையான வெளிநாட்டு நாணய மாற்றம் செய்து கொடுத்தல், பயணக்காசோலைகள் ஆகியவற்றை வழங்குவதும் சுற்றுலா முகவரின் பணிகளாகும். இதனால் பயணிகள் சிரமமில்லாமலும், காலவிரயம் இல்லாமலும் சுற்றுலாவை மேற்கொள்ளமுடிகிறது. இதனால் நாணய மாற்றுக்கட்டுப்பாடு விதிமுறைகள், ஒரு நாட்டு நாணயத்திற்கும் மற்றொரு நாட்டு நாணயத்திற்கும் மதிப்பிலுள்ள வேறுபாடுகள் போன்ற விபரங்களை அறிந்திருக்க வேண்டியது பயண முகவரின் பணியாகும். இதனால் வெளிநாட்டுப் பணம் பெறுவதற்காக பயணிகளுக்கு ஏற்படும் கஷ்டங்கள் வெகுவாகக் குறைகிறது.

ஆயுள் காப்பீடு செய்து தருதல்

சுற்றுலாப் பயணிகளுக்கு உயிருக்கு ஆயுள் பாதுகாப்பு பாலிசிகளையும், அவர்களது விலை உயர்ந்த உடமைகளைப் பாதுகாக்க பொது பாதுகாப்பு பாலிசிகளை எடுத்துத் தருவது பயணமுகவர்களின் கடமையாகும். விமானப் பயணத்தின் போது விபத்து ஏற்பட்டால் விமானக் கம்பனியே நஷ்டஈடு தருகிறது. இவ்வாறு பாலிசிகளை எடுத்துக் கொடுப்பதால் பயணிகளின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் கிடைக்கிறது.

சுருக்கமாக சுற்றுலா முகவரின் பணிகளைக் கீழ்க்கண்டவாறு கூறலாம்:

 • தனிநபருக்கேற்ற பயணத்திற்குத் திட்டமிடல்,
 • பாதுகாப்பாக பயணிகளைஅழைத்துச் செல்லுதல்,
 • குழுச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து அழைத்துச் செல்லல்.
 • விடுதிகளில் தங்குவதற்கு அறைகளை முன்பதிவு செய்தல்,
 • உணவு வசதிகளைச் செய்துதருதல்,
 • வாகனங்களை ஏற்பாடு செய்து தருதல்,
 • வாகனங்களிலிருந்து விடுதிகளுக்குப் பயணிகளின் உடைமைகளைப் பத்திரமாக எடுத்துச் செல்லுதல்,
 • இசைக்கச்சேரி, திரைப்படம், நாடகம் போன்றவற்றிற்கு அனுமதிச் சீட்டு முன்பதிவு செய்தல்.
 • சுற்றுலாவை விளம்பரப்படுத்துதல், பயணிகளின் உடமைகளை காப்பீடு செய்தல்,
 • மொழி நூல்களைக் கொடுத்தல்
 • பயணக்காசோலைகள் மற்றும் வெளிநாட்டுப் பணத்தை மாற்றுதல்,
 • விசா, பாஸ்போர்ட், சுகாதாரச் சான்றிதழ்களை பெற்றுத் தருதல்.
 • விமானம், ரயில், கப்பல் பேருந்து போன்றவை செல்லும் நேரங்களை  அறிந்திருத்தல்,
 • விடுதிகளின் கட்டணம் அவைகளின் தரம் மற்றும் அறைகளின் அமைப்பு போன்றவற்றைத் தெரிந்திருத்தல்.
 • வணிகச் சுற்றுலா, சமயச் சுற்றுலா, விளையாட்டுப் போட்டிகள், கூட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றிற்கு பயண ஏற்பாடுகளைச் செய்து தருதல் ஆகியவை பயண முகவர்கள் பயணியாகக் கருதப்படுகிறது.

சுற்றுலா முகவர்களுக்கு கிடைக்கும் வருவாய்

பயணத் திட்ட விபரங்களை மக்களுக்குத் தெரிவித்து அவர்களது ஐயங்களைப் போக்கி அவர்களைச் சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்று தக்க ஏற்பாடுகளையெல்லாம் செய்து கொடுக்கும் சுற்றுலா முகவர்களுக்கு கீழ்க்கண்ட பல வழிகளில் வருவாய் கிடைக்கிறது.

 • விமானம், கப்பல், ரயில், பேருந்து, கார், ஹோட்டல் முதலானவைகளின் சேவைகளை பயணிகளுக்கு வாங்கி கொடுப்பதால் இந்த நிறுவனங்கள் சுற்றுலா முகவர்களுக்கு சேவை ஊழியம் கொடுக்கின்றன. இதன் மூலம் முகவர்கள் வருவாய் கிடைக்கிறது.
 • அன்னிய நாட்டு பணமாற்றம், காப்பீடு செய்து கொடுப்பது மூலமாகவும், பயணிகளின் காசோலையை மாற்றிக் கொடுப்பதன் வழியாகவும் முகவர்களுக்கு பணம் கிடைக்கிறது.
 • பயணிகள் முன்கூட்டியே செலுத்தும் பயணக் கட்டணம், வைப்புத்தொகைகள் முதலானவற்றின் மூலம் கிடைக்கும் குறுகியகால வட்டித்தொகை.
 • சுற்றுலாவை வெற்றிகரமாக நடத்தி முடித்தபின் பயணிகள் மனமுவந்து அளிக்கும் அன்பளிப்புத்தொகை மூலமாகவும் முகவர்களுக்குப் பணம் கிடைக்கிறது.

இவ்வாறு சுற்றுலாவை நடத்திக்கொடுக்கும் பயண முகவர்கள் பல்வேறு வழிகளில் வருமானம் பெறுகின்றனர்.

இந்தியாவில் சுற்றுலா முகவர்கள்

இந்திய சுதந்திரம் அடைந்த பின்னர் இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. எனவே சுற்றுலாவை மேம்படுத்த இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் பிறகுதான் முறையான பயண முகவர்கள் நியமனம் செய்யப்பட்டனர் 1949-ல் ஆறு பயண முகவர்கள் ஒன்று சேர்ந்து ஜே.காட்கரா என்பவரின் தலைமையில் 'இந்தியா பயண முகவர்கள் சங்கம்' ஒன்று அமைக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் பயண முகவர்களின் நலன்களைப் பாதுகாப்பதேயாகும். அதன் பிறகு இந்த சங்கமானது முறையாகவும், திட்டமிட்டபடியும் செயல்படத் தொடங்கியது. இது மிகவும் பரந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. சுமார் 300 உறுப்பினர்கள் கொண்ட பயண முகவர்களின் சங்கம் சென்னை , பம்பாய், கல்கத்தா, டில்லி ஆகிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்திய அரசாங்கம் பயண முகவர்களின் முக்கியத்துவம் கருதி பல நிபந்தனைகளை விதித்து சுற்றுலா முகவர்களுக்கு அங்கீகாரம் வழங்கியது. நிபந்தனைகளை நிறைவேற்றும் பயணமுகவர்களுக்கு இந்திய அரசின் சுற்றுலா  இயக்குநர் அங்கீகாரம் வழங்குவார். பயண முகவர்களின் அங்கீகாரத்திற்காக அரசு கீழ்க்கண்ட விதிமுறைகளைக் கொண்டு வந்தது. அதன்படி,

 • பயண முகவர்கள் ஓராண்டு முன் அனுபவம் உடையவர்களாக இருக்கவேண்டும்.
 • அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் அவ்வப்போது அரசு வெளியிடும் ஆணைகளையும் சட்டங்களையும் மதித்து நடக்க வேண்டும்.
 • பயண முகவர்களுக்குத் தனி அலுவலகங்களும், நேரடி பணியாளர்களும் இருக்கவேண்டும். இந்த முழுநேர ஊழியர் நாணயம் மாற்று, நடப்பு செய்திகள் முன்பதிவு செய்தல் போன்ற விபரங்களை அறிந்திருக்க வேண்டும்.
 • மேலும் பயண முகவர் ஆங்கிலம், இந்தி, ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் வட்டார மொழிகளை அறிந்திருக்கவேண்டும்.
 • பயண முகவர்களுக்கு நாடு முழுவதற்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும்.
 • இத்தகைய அங்கீகாரம் பெற்ற பயண முகவர்கள் அரசாங்கத்தால் அங்கீகாரம் பெற்ற சுற்றுலா வழிகாட்டிகளையே பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
 • அங்கீகாரம் பெற்ற பயண முகவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டறிக்கை ஒன்றை அரசுக்கு சமர்பிக்க வேண்டும். அதில் அந்த ஆண்டு சென்ற இடங்கள், அழைத்துச் செல்லப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை அதற்காக வசூலிக்கப்பட்ட தொகை முதலியன இடம் பெற்றிருக்க வேண்டும்.
 • பயண முகவர்கட்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டதை ரத்து செய்வதற்கு அரசுக்கு அதிகாரம் உண்டு.
 • அங்கீகாரம் பெற்ற பயண முகவர்கள் நேரடியாக ரயில் அல்லது பேருந்து பயணச்சீட்டை விற்க முடியாது. அந்த போக்குவரத்து போர்டுகளின் வழியாகவேதான் விற்க முடியும்.
 • பயணமுகவர்கள் ரிசர்வ் வங்கியின் உரிமமும், பன்னாட்டு விமானப் போக்குவரவு கழகத்தின் அங்கீகாரமும் பெற்றிருக்க வேண்டும். மேலும் வணிகர் சட்டத்தின் படி பதிவு செய்திருக்க வேண்டும்.
 • அங்கீகாரம் பெற விரும்பும் முகவர்கள் குறைந்த பட்சமாக ஒரு லட்சரூபாய் முதலீடு செய்திருக்க வேண்டும்.
 • அங்கீகாரம் பெற விரும்பும் முகவர்கள் அங்கீகாரம் பெற இயக்குநர், சுற்றுலாத்துறை அமைச்சகம், புதுடில்லி என்ற முகவரிக்கு விண்ணப்பித்து உரிய வழியில் பதிவு செய்துகொள்ளுதல் வேண்டும்.

சுற்றுலா வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் சுற்றுலா முகவர்கள் செய்து வரும் பணி எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாது. வெளிநாடுகளிலும் அரசாங்கங்கள் சுற்றுலா முகவர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டே செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் சுற்றுலா முகவர்களின் அலுவலகங்கள் திறப்பதற்கும் உதவி செய்கின்றன. உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலா முகவர்களின் நலன்களைப் பாதுகாக்க பயணமுகவர் கழகங்களின் உலக கூட்டமைப்பு ஒன்றும் அமைக்கப்பட்டு செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
3.25
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top