பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழக அரசு கூட்டுறவு அமைப்பு

தமிழக அரசு கூட்டுறவு அமைப்பு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

"கூட்டுறவு என்பது மக்கள் தாமாகவே இணைந்து சமூக, பொருளாதார மற்றும் கலாச்சாரப் பயன்களை அனைவரும் பெறுவதற்காக கூட்டாக செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்" இன்றளவில் கூட்டுறவு இயக்கம் எல்லா நாட்டினராலும், ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதற்கு காரணம் கூட்டுறவு இயக்கத்தின் கொள்கைகளே. இதுவரை உருவாக்கப்பட்ட பொருளாதார முறைகளில் கூட்டுறவு அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சி முறையே மிகச் சிறந்த முறையாகும். கூட்டுறவு பொருளாதார அமைப்புக்கு காலத்தைக் கடந்து நிற்கும் ஆற்றல் உண்டு. அதற்குக் காரணிகளாக அமைவது, அதன் செயல்முறைக் கொள்கைகளும், அதன் தனித்துவமும் ஆகும்.

இந்தியக் கூட்டுறவு 1904 ம் ஆண்டு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் இயற்றப்பட்டு கூட்டுறவு கடன் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் முதல் கூட்டுறவுச் சங்கம் திருவள்ளூர் மாவட்டத்தில் திரூர் என்ற இடத்தில் தொடங்கப்பட்டது. இன்று எங்கும் கூட்டுறவு எதிலும் கூட்டுறவு என்ற நிலை உருவாகியுள்ளது. அன்று விவசாயிகளின் துயரைத் துடைக்க துவங்கப்பட்ட கூட்டுறவு இன்று அனைத்து மக்களின் துயரையும் துடைக்கிறது.

வெற்றிச் சிகரம் நோக்கி தமிழக கூட்டுறவு மாநில கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையம், மும்பை வழங்கிய, 2011-12 ஆம் ஆண்டிற்கான அகில இந்திய அளவிலான ஒட்டுமொத்த சிறந்த செயல்பாட்டிற்கான முதல் பரிசினை திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியும், தருமபுரி மாவட்டம், துறிஞ்சிப்பட்டி தொடக்க வேளாண்மைக் கடன் சங்கமும் பெற்றுள்ளன. மேலும் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கான இரண்டாம் பரிசினையும், அகில இந்திய வரைவோலை பரிமாற்றத் திட்டத்திற்கான முதல் பரிசினையும் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் வங்கியியல் உரிமத்தை பெற்று, இந்தியாவில் இரண்டாவது மாநிலமாக சாதனை படைத்துள்ளன. தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரது நிர்வாகக் கட்டுப்பாட்டில் 10,368 சங்கங்கள் 1,7068,812 உறுப்பினர்களுடன் இயங்கி வருகின்றன. இச்சங்கங்கள் ஆண்டொன்றுக்கு ரூ.1,20,889.60 கோடி அளவிற்கு தற்போது வணிக நடைமுறைகளை மேற்கொண்டுள்ளன. வேளாண்மை செழிப்புற, வேளாண் கடன், ஒரு முக்கிய பங்கு வகிப்பதால், கூட்டுறவு கடன் நிறுவனங்கள் வேளாண் சமுதாயத்திற்குத் தேவையான கடன் மற்றும் இடுபொருட்கள் நிறைவு செய்து நாட்டில் வேளாண் அமைப்பில் ஆக்கப்பூர்வமான மாறுதல்களை ஏற்படுத்தி உள்ளன. அத்துடன் கூட்டுறவுகள், உறுப்பினர்களின் வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தின் மூலம், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்தல் உட்பட நுகர்வோர் தேவைகளையும் நிறைவு செய்து, பெரும் பணியாற்றி வருகின்றன.

தமிழ்நாடு அரசு சமீபகாலத்தில், விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு வட்டியில்லாக் கடன்கள் வழங்குதல் போன்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களை முதன்முறையாக அறிமுகப்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. கூட்டுறவுகளை நவீனமயமாக்கும் வகையில் கணினிமயமாக்கல், மின்னணு வங்கியியல் மற்றும் நிகழ்நேர நிதிப்பரிமாற்றம், ஆகிய பல முன்னோடித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத்தொடர் முயற்சிகள் கூட்டுறவு வங்கிகள் பயனாளிகளுக்கு தரமான மற்றும் துரிதமான சேவைகளை அளிக்க உதவியுள்ளன.

கூட்டுறவு அமைப்பு

எல்லாக் கூட்டுறவு அமைப்புகளிலும், நிர்வாக முறையில் இரண்டு அடுக்குகள் உள்ளன. மேல் அடுக்குகளில் பேரவை, நிர்வாகக்குழு, தலைவர் என்ற மூன்று அங்கங்களும் கீழ் அடுக்கில், மேலாண்மை இயக்குநர், பொது மேலாளர், செயலாளர், அலுவலர் மற்றும் பணியாளர்கள் என்ற அங்கங்களும் உள்ளன.

உறுப்பினர்கள் பேரவை

கூட்டுறவு தத்துவத்தின்படி உறுப்பினர்களின் பேரவையானது சங்கத்தின் ஒர் உயர்ந்த நிலை அமைப்பாகும். ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவடைவதிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் ஒருமுறையாவது பேரவை கூடி கீழ்க்கண்டுள்ள பொருட்கள் பற்றி விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.

  • ஆண்டு வரவு செலவு திட்டம் ஒப்புதல் செய்தல்
  • தணிக்கை அறிக்கை மற்றும் ஆண்டறிக்கையும் வாசித்து அங்கீகரித்தல்.
  • நிகர லாபப் பங்கீட்டினை அங்கீகரித்தல்.
  • சங்கத்தின் செயல்திட்டத்தை மதிப்பிடுதல்.
  • முந்தைய ஆண்டில் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கும், அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் சங்கம் செய்திருந்த சேவைகளின் விவரங்களை பரிசீலித்தல்.
  • புதிய துணைவிதிகளை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது ஏற்கனவே உள்ள துணை விதிகளுக்கு திருத்தங்களை ஏற்றுக்கொள்ளுதல்.
  • தகுதியற்ற உறுப்பினரை விலக்குவது பற்றி முடிவெடுத்தல்.

சங்கப் பேரவை நிர்வாகக் குழுவால் கூட்டப்படவேண்டும். சங்க பேரவையை சங்க அலுவலகத்தில் அல்லது சங்கத் தலைமையிடத்தில் அனைவரும் கலந்துகொள்ளும் வசதியான இடத்தில் கூட்ட வேண்டும்.  உறுப்பினர்களுக்கு துணை விதிகளில் குறிப்பிட்ட நாட்களுக்குள் பேரவைக் கூட்ட, முன் அறிவிப்பு அனுப்ப வேண்டும்.

நிர்வாகக் குழு

ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகம் உறுப்பினர்களால் சட்டம் விதிகள் மற்றும் சங்க துணை விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். நிர்வாகக் குழு உறுப்பினர்களுள் ஒருவர் தலைவராகவும் இன்னொருவர் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

நிர்வாகக் குழு கூட்டம்

நிர்வாகக்குழுக் கூட்டத்திற்கு 3 நாட்களுக்கு குறையாமல் முன்னறிவிப்புக் கொடுக்க வேண்டும். இக்கூட்டத்தை சங்கத்தின் செயல் எல்லையில் எங்கு வேண்டுமானாலும் கூட்டலாம். மேலாண்மை இயக்குநர், தலைவருடன் அல்லது அவர் இல்லாத நேர்வில் துணைத்தலைவருடன் கலந்து, நிர்வாகக்குழு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். மேலாண்மை இயக்குநர் இல்லாதபோது தலைவர் நிர்வாகக்குழு கூட்டத்தைக் கூட்டவேண்டும். மூன்று மாதங்களுக்குள் குறைந்தது ஒரு முறையாவது நிர்வாகக்குழு கூட்டம் கூட்டப்பட வேண்டும். தலைவர் துணைத் தலைவர் தலைவர் பேரவைக் கூட்டத்தையும், நிர்வாகக்குழு கூட்டத்தையும் தலைமை தாங்கி நடத்தவேண்டும். சங்க துணை விதியில் குறிப்பிட்டுள்ளபடி சங்க நிர்வாகத்தை தலைவர் நடத்த வேண்டும்.

தலைவர் பதவி காலியாக உள்ளபோது, தலைவரின் அனைத்து அதிகாரங்களையும் துணைத் தலைவர் செயல்படுத்தலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் - கையேடு

3.03703703704
ஜெகதீஸ் May 11, 2020 07:46 PM

கூட்டுறவு கடன் சங்கத்தில் VRS உள்ளதா?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top