பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நீதித்துறை

அரசாங்க அமைப்புகளில் ஒன்றான நீதித்துறை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அரசாங்க அமைப்புகள்

நீதி பரிபாலனம் இக்காலம் என்றில்லாமல் எல்லா காலங்களிலும் முக்கியமானதாக இருக்கிறது. அரசாங்கத்தின் வளர்ச்சியிலும் அதன் செயல்முறைகளிலும் எங்கு எப்போது எவ்வாறு நீதிப்பணிகள் ஏற்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன என்பது தெளிவாக அறுதியிட்டு கூறயியலாது. அரசாங்கம் மூன்று அமைப்புகளைக் கொண்டதாக இருக்கிறது.

அவை வருமாறு

 • அ. சட்டத்துறை
 • ஆ செயல்துறை (நிர்வாகத்துறை)
 • இ. நீதித்துறை

ஆரம்ப காலத்தில் இத்துறைகளின் பணிகள் தெளிவாக இருக்கவில்லை. முடியாட்சி முதல் உயர்குடியாட்சி, சிறுகுழு ஆட்சி மற்றும் கொடுங்கோல் ஆட்சி என பலவகைப்பட்ட அரசாங்க அமைப்புகள் பல்வேறு காலங்களில் பல நாடுகளில் இயங்கி வந்திருக்கின்றன. இவை எதிலுமே அந்த மூன்று துறைகளின் பணிகள் வரையறுக்கப்பட்டு ஒவ்வொரு துறையும் அதற்கென தரப்பட்ட பணிகளை செய்து வரவில்லை. பெரும்பாலான சமயங்களில் செயல்துறை இதர துறைகளின் பணிகளையும் அதே போல சட்டத்துறை மற்றும் நீதித்துறை அவற்றின் பணிகளோடு இதர துறைகளின் அலுவல்களையும் செய்து வந்திருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையிலும் அந்த நிலையே எல்லா நாடுகளிலும் நடைமுறையில் இருந்திருக்கிறது. கால மாறுபாடுகளாலும் மக்கள் சிந்தனைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களாலும், அரசாங்க அமைப்புகளிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டன. இருபதாம் நூற்றாண்டில் குடியாட்சி முறை பெரும்பாலான நாடுகளில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. குடியாட்சி முறையில் முக்கிய அடிப்படைகளில் நீதித்துறை தனியாக பிரிக்கப்பட்டு சுதந்திரமாக செயல்படவேண்டுமென்பதும் நீதித்துறையை சார்ந்தவர்கள் விருப்பு வெறுப்பு இல்லாமல் தங்களுடைய கடமைகளை செய்ய வேண்டும் என்பதும் வழக்குகளில் விரைந்து சட்ட அடிப்படையிலான தீர்ப்புகள் தரப்பட வேண்டுமென்பதும் முக்கியமான அம்சமாகும். நீதித்துறையை போலவே நிர்வாகத்துறை (செயல்துறை) மற்றும் சட்டத்துறை தனித்து ஒவ்வொன்றும் அதன் பணிகளை மற்றதோடு சார்ந்திராமல் செய்ய வேண்டுமென்பதும் இன்னொரு அம்சமாகும்.

இவ்வாறு நிர்வாகத்துறை, சட்டத்துறை மற்றும் நீதித்துறை தனித்தனியாக செயல்பட வேண்டும் என்பது அதிகார பிரிவினை கொள்கை என்று சொல்லப்படுகிறது. இக்கொள்கையை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மான்டெஸ்கியூ என்பவர் அவருடைய "சட்டங்களின் உயிர்’ (The Spirit of laws) 1748 ஆம் ஆண்டு வெளியிட்ட அவருடைய நூலில் விவரித்திருக்கின்றார். இக்கொள்கை அமெரிக்க அரசியலமைப்பை எழுதியவர்களால் ஏற்றுகொள்ளப்பட்டது. அதன் பிறகு இதர ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள் அவற்றினுடைய அரசியலமைப்பில் இக்கொள்கை அடிப்படையில் அரசாங்கம் செயல்படுவதற்கான விதிகளை எல்லாம் சேர்த்து அதன்படி அவைகளின் அரசாங்கங்கள் நடைபெறுகின்றன.

நீதித்துறையின் தேவையும், அவசியமும்

மேலே சொல்லப்பட்டது போல நீதிபரிபாலனம் அரசாங்கத்தின் பணிகளுள் முக்கியமானது. நீதிபதி ஒருவர் வழக்கொன்றை விசாரிக்கின்றபோது நடுநிலைநின்று சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்க வேண்டும். இந்த அடிப்படையில் தான் எழுதப்பட்ட அரசியல் சட்டத்தின் பாதுகாவலனாக நீதித்துறை கருதப்படுகிறது.

எவ்வளவு விரைவாக வழக்குகள் முடிவுக்கு வந்து தீர்ப்புகள் தரப்படுகின்றனவோ அவ்வளவு விரைவாக வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மக்களுடைய உரிமைகளும், உடைமைகளும் பாதுகாக்கப்படும். இத்தகைய நிலை அவர்களுடைய சுதந்திரத்திற்கு பாதுகாப்பாகவும், அது கெடுக்கப்படாமல் சுதந்திரம் நிலை நாட்டப்படவும், குற்றம் இழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பாமல் இருக்கவும், தவறு செய்யாதவர்களுக்கு நீதி கிடைக்கவும் வகை செய்கிறது.

நாகரீக முறைகளை ஏற்று அவற்றை தொடர்ந்து பின்பற்றும் மக்களை கொண்ட நாடுகளில் நீதித்துறை தனித்து சுதந்திரமாக இயங்குவது ஏதேச்சதிகாரத்தை ஒழித்து மக்களுடைய சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்கு துணையாக இருக்கின்றது என்று இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பென்தாம் என்ற சமூக சீர்திருத்த அறிஞர் அவருடைய நூல்களில் வலியுறுத்தியிருக்கிறார்.

நீதிபதிகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகள்

தனிமனிதனுடைய சுதந்திரம் மற்றும் சமுதாயத்தின் பலவகைப்பட்ட பிரிவுகளின் அமைப்பு மற்றும் அவற்றின் இயக்கம் நீதித்துறை செயலாற்றும் பாங்கை பொறுத்தே அமைகிறது என்ற கருத்து தற்காலத்தில் எல்லா நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். எனவே நீதிபதிகள் உயர்ந்த நோக்கம் உடையவர்களாக ஞானம் உடையவர்களாக, சட்டக்கல்வியில் தேர்ந்தவர்களாக, இயற்றப்பட்ட சட்டங்களின் நோக்கங்களை நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இவை அல்லாமல் குறிப்பிட்ட வேறு சில தகுதிகளும் இருப்பது அவசியம் என ஒவ்வொரு நாடும் அதனுடைய அமைப்புக்கும் குறிக்கோள்களுக்கும் ஏற்றவாறு கருதி அதன் அடிப்படையில் தகுதிகளை தீர்மானிக்கிறது.

அமெரிக்க நீதித்துறை சார்ந்த சில கருத்துக்கள் அமெரிக்க அரசியலமைப்பு நீதிபதிகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகளை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அதில் காணப்படுவதெல்லாம் நீதிபதிகள் ‘நன்நடத்தை’ உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான். இதன் காரணமாக மரபு அடிப்படையில் அமெரிக்க குடியரசு தலைவரால் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உயர்மட்ட நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த நியமனங்களுக்கு பின்வரும் தகுதிகள் பொதுவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

(அ) மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களில் நீதித்துறையில் உள்ள அனுபவம், சட்டம் சம்மந்தப்பட்ட பட்டையங்கள் அல்லது உயர்கல்வியில் பெற்றுள்ள தகுதிகள்.

(ஆ) அரசியல் கோட்பாடு குறிப்பாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் பின்பற்றும் கொள்கையில் ஈடுபாடும் அதை பின்பற்றி நடத்தலும் அதாவது, அவ்வப்போது பதவியிலிருக்கும் குடியாட்சி தலைவர்கள் எந்த கட்சியை சார்ந்து எத்தகைய கொள்கையை குறிக்கோள்களாக கொண்டிருக்கிறார்களோ அவற்றை பின்பற்றுவது. உதாரணமாக பழமைவாத அல்லது மிதவாத கொள்கையை பின்பற்றும் குடியரசு தலைவர்கள் அக்கொள்கையை ஏற்றுக்கொள்பவர்களை நீதிபதிகளாக நியமிப்பர் என எதிர்ப்பார்க்கலாம். இந்த அடிப்படையில் நியமனங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

(இ) நீதிபதிகளாக நியமிக்க படுவோர்களில் பெரும்பாலானவர்கள் கட்சி சார்பு உடையவர்களாகவும் குடியரசு தலைவர் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த தலைவர்களை பின்பற்றி நடப்பவர்களாகவும் இருக்கின்றனர்.

(ஈ) அண்மைக்காலம் வரையிலும் இனம் மற்றும் ஆண், பெண் என்ற பாலின அடிப்படையிலும் கூட்டாட்சி நீதிபதிகள் ஆண்களாகவே இருந்தனர். பெண்கள் எவரும் நியமிக்கப்பட்டதில்லை. ஆனால் ரொனால்ட் ரீகன் குடியாட்சித்தலைவராக இருந்தபோது இந்த கொள்கையினின்றும் மாறுபட்டு பெண்களையும் நீதிபதிகளாக நியமித்தார். இப்போது வெள்ளையர்கள் மட்டுமல்லாமல் கறுப்பர்களும் ஆப்பிரிக்கா, மற்றும் இலத்தீன் இனத்தை சேர்ந்த அமெரிக்கர்களும் பெரும் அளவில் நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான தற்கால அரசாங்கங்கள் கீழே தரப்பட்டுள்ள சில பொதுவான கொள்கைகள் நீதிபதியாக நியமிக்கப்படுவர்களுக்கு இருக்க வேண்டுமென வற்புறுத்துகின்றன.

 • அ. குடிமை மற்றும் தேசியம்
 • ஆ வயது வரம்பு
 • இ. ஏதாவது ஒரு பாடத்தில் பட்ட படிப்பு தகுதி
 • ஈ. சட்ட கல்வியில் பட்டம்
 • உ. நீதித்துறையில் அல்லது வழக்கறிஞர்களாக குறிப்பிட்ட சில காலத்திற்கு உள்ள அனுபவம்
 • ஊ. சட்டம் மற்றும் நீதியியலில் சிறந்த புலமையுடையவராக இருத்தல்.

நீதி மறு ஆய்வு கொள்கை

அரசியலுக்கு நீதி மறு ஆய்வு அமெரிக்காவின் சிறந்த பங்களிப்பாகும். இயற்றப்பட்ட சட்டமொன்றை அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதல்ல என்றோ அல்லது அதற்கு அப்பாற்பட்டது என்றோ அறிவிக்கும் நீதித்துறைக்கு உள்ள அதிகாரம் நீதி மறு ஆய்வு (புனராய்வு) என்று அழைக்கப்படுகிறது. இம்முறை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் நடைமுறையிலிருந்து வருகிறது. இங்கெல்லாம் மேல்மட்டத்தில் உள்ள நீதிமன்றங்கள் சட்டங்கள் செல்ல தகாதவை என்று அறிவிக்கும் அதிகாரம் உடையவை. ஆனால் இங்கிலாந்து நாட்டில் மட்டும் இக்கொள்கை பின்பற்றபடவில்லை.

இந்தியாவில் மாநிலங்களில் (States) உள்ள உயர் நீதிமன்றங்களும் இந்தியா முழுவதற்குமான நீதித்துறை பொறுப்பு வகிக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் நீதி மறு ஆய்வு அதிகாரம் கீழே தரப்பட்டுள்ள இனங்களில் வழங்கப்பட்டிருக்கிறது.

 • அ. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே ஏற்படும் சச்சரவுகள்.
 • ஆ. அரசியல் அமைப்பில் உள்ள விதி (சரத்து) ஏதேனும் பற்றி சந்தேகங்களோ அல்லது வேறுப்பட்ட கருத்துக்களோ நிலவுமானால் அதை விளக்குவது அல்லது விமர்சிப்பது
 • இ. ஆதார உரிமைகள் பாதுகாப்பு. மாநில சட்டமன்றங்களால் இயற்றப்படும் அரசியல் அமைப்பிற்கு எதிரான சட்டங்கள்.

நிறைகள்

 1. ஞானம் மற்றும் அனுபவ அடிப்படையில் நீதிபதிகள் நீதி மறு ஆய்வு செய்ய தகுதியுடையவர்கள்.
 2. அரசியல் அமைப்பின் பாதுகாவலனாக, கூட்டாட்சி நீதிமன்றம் செயல்பட வகைசெய்கிறது.
 3. சட்டமன்றங்கள் போலல்லாமல் நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படவும் ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளாமலும் இருக்க உதவுகிறது. மக்களுடைய குறிப்பாக சிறுபான்மையினருடைய உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. வரம்புக்குட்பட்ட சுதந்திரமான அரசாங்கம் செயல்படுவதற்கு வகை செய்கிறது. சட்டமன்றங்கள் அவசர அவசரமாக சட்டங்கள் இயற்றுவதினின்றும் பாதுகாப்பு தருகிறது.

குறைகள்

 1. அதிகாரப்பிரிவினைக் கொள்கைக்கு எதிரானதாக இருக்கக்கூடும்.
 2. நீதிமன்றங்களுக்கு இந்த அதிகாரம் தரப்படுவதால் நிர்வாகத் துறையும் சட்டத்துறையும் சிறந்த முறையில் பணியாற்ற முடியாமல் போகலாம்.
 3. சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு தேவையான கொள்கைகளையும், திட்டங்களையும் இக்கொள்கை பாதிக்க கூடும்.
 4. பெரும்பாலான வழக்குகள் மற்றும் பிரச்சினைகள் அரசியல், சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் சம்மந்தப்பட்டவைகளாகவே இருப்பதால் நீதித்துறை சட்டத்துறையை மிஞ்சிய அதிகாரம் பெற வகை செய்யும்.
 5. அமெரிக்காவிலும், இந்தியாவிலும் வழக்குகள் நான்கு அல்லது ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவாக விசாரிக்கப்படும்போது பெரும்பான்மை அடிப்படையில் முடிவுகள் செய்யப்படுகின்றன. இது நீதிபதிகளுக்கு இடையே உள்ள கருத்து வேற்றுமையை எடுத்துக்காட்டுவதோடு வழக்குகளின் தரங்களையும் பாதிக்கின்றது.
 6. நீதிபதிகள் சில சமயங்களில் காலத்திற்கு தகுந்தாற்போலவும், மாறுபட்ட சூழ்நிலைக்கு ஏற்பவும் நடந்து கொள்ளாமல் பழமைவாதிகளாக இருக்கின்றனர்.
 7. நீதிபதிகள் சில சமயங்களில் சட்டங்களின் உள் நோக்கம் என்ன என்பதை பாராமல் அவற்றிலுள்ள சொற்களின் பொருளுக்கு ஏற்ப தீர்ப்பு வழங்குகிறார்கள். இதனால் அவர்கள் கடின நோக்கம் உடையவர்களாகவும் மாறுகிறார்கள். இவ்வாறு நீதிமறு ஆய்வு பல நிறைகளையும் குறைகளையும் உடையதாக இருக்கின்றது. இதனால் சில சமயங்களில் சில தடைகள் ஏற்படுகின்றன.

முன்னேற்றங்கள் ஏற்படாமல் போகின்றன. தவறுகளும் நடைபெறுகின்றன. இருப்பினும் இதனுடைய நிறைகள் குறைகளைவிட மிகுந்து காணப்படுவதால் இக்கொள்கை நீதித்துறையில் பின்பற்றப்படுவது அவசியமென எல்லோரும் அறிந்துள்ளனர்.

நீதித்துறை செயல் வேகம் (நீதி சுறுசுறுப்பு) (Judicial Activism)

நீதித்துறை மக்களாட்சிமுறை அரசாங்கத்தில் இன்றியமையாத ஒன்றாகும். அதனுடைய கடமைகளும் பொறுப்புகளும் அரசாங்கத்தினுடைய இதர துறைகள் போலவே மிக முக்கியமானவை. நாடாளுமன்ற குடியாட்சி முறையில் அதன் பல்வேறு அமைப்புகளும் சரியான முறையில் பணியாற்றுவதற்கு நீதிசார்ந்த அமைப்புகள் பல வகைகளில் துணைநிற்கின்றன.

பொது மக்கள் விருப்பம் மற்றும் அவர்கள் தூண்டுதல் காரணமாக நீதிமன்றங்கள் இப்போது நீதிவழங்குவதிலும் பொதுமக்கள் சம்பந்தமான வழக்குகளை தீர்ப்பதிலும் புதுப்புது யுக்திகள் மற்றும் நடைமுறைகளை பொது மக்கள் நலன் கருதி பின்பற்றி வருகின்றன. அவற்றுள் முக்கியமானதாக நீதித்துறை செயல் வேகம் என்ற புதுக்கொள்கை நடைமுறைக்கு வந்திருக்கிறது. இக்கொள்கை அரசாங்கத்தின் நாலாவது அங்கம் என்று அழைக்கப்படும் செய்தி மற்றும் விளம்பரத்துறை நடவடிக்கைகளை ஒட்டியும் குடிமக்களின் விருப்பத்திற்கு இணங்கவும் ஏற்பட்டது எனலாம். நீதித்துறையில் உள்ளவர்கள் இதர துறைகளில் உள்ளவர்கள் போலவே கல்வி மற்றும் இதர நடவடிக்கைகள் உடையவர்களாக இருக்கிறார்கள். இவர்களும் தவறுகள் செய்ய கூடியவர்கள் என்பதை மறுக்க இயலாது. எனவே விழிப்புணர்வு கொண்ட மக்கள் அவர்களுடைய சுதந்திரத்தையும் பாதுகாத்து கொள்கின்ற முறையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நீதித்துறை சுறுசுறுப்புக்கு மக்களாட்சி முறை நாடுகளில் அடிப்படைகளாகின்றன.

மக்களாட்சி முறை பின்பற்றப்படுகின்ற நாடுகளில் நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. அதன் காரணமாக நீதி மறுக்கப்படும் போது அந்த நீதி மடிந்துவிடுகிறது. எனவே நீதி விரைவாக வழங்கப்படவும் அந்நீதி நியாயமானதாக இருக்கவும் நீதித்துறைக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே நீதித்துறை பொது மக்களுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப ஆனால் அதே சமயத்தில் அரசாங்கத்தின் இதர பிரிவுகளுக்கு தீங்கு இழைக்காதவாறு நடுநிலை நின்று இருபிரிவினருக்கும் பாதுகாப்பு அளிப்பது மிக அவசியமாகிறது. ஆனால் இது நீதித்துறை ஏதேச்சதிகாரத்தில் முடிந்துவிடக்கூடாது.

நீதிமுறையிலும் நீதித்துறையிலும் அவைசார்ந்த அமைப்புகளிலும் உதாரணமாக நீதிபதிகள், தரகர்கள் நடுநிலையற்றவர்கள், சார்புடைய அரசு வழக்கறிஞர்கள் போன்றவர்களிடையே லஞ்சம் போன்ற சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் பல வழக்கங்கள் இருக்கின்றன. இவைகளும் மாற்றப்படுவதோடு காலப்போக்கில் ஒழிக்கப்படுவது மிக இன்றியமையாதது ஆகும். இவை எல்லாவற்றையும் செய்து முடிக்க கூடிய வாய்ப்புகளும் சூழ்நிலைகளும் நீதித்துறையை சேர்ந்தவர்களுக்கு அதிகமாக இருக்கின்றன. இவர்கள் எந்த அளவிற்கு உண்மையாகவும், நியாயமாகவும், விறுவிறுப்புடனும் இவர்களுடைய கடமைகளைச் செய்கின்றார்களோ அப்போது நீதித்துறை சுறுசுறுப்பு மக்களால் வரவேற்கப்படும். சட்ட அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு மக்களிடத்தில் நம்பிக்கை ஏற்படும்.

நீதித்துறை சுதந்திரம்

நீதி தெய்வீகத்தன்மை உடையதென மக்கள் கருதுகிறார்கள். நீதிபதிகள் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் எவர் பக்கமும் சாராமல் சமநிலையில் இருந்து நீதிவழங்க வேண்டும். தற்கால பொதுநல அரசில் இத்தகைய சுதந்திரம் மிகவும் தேவைப்படுகிறது. பொதுநல அரசில் பொது மக்களுக்கு நன்மைகள் ஒரு பக்கம் இருக்க தீமைகள் ஏற்படவும் சந்தர்ப்பங்கள் உண்டு. எனவே வழக்குகளும் அதிக அளவில் நீதிமன்றங்களுக்கு கொண்டுவரப்படும். இத்தகைய சூழ்நிலைகளில் நீதிபதிகள் தங்களுடைய சுதந்திரத்தை நிலை நிறுத்துகின்ற முறையில் பச்சாதாபம் இல்லாமல் தீர்ப்பு சொல்வது அவசியமாகும். பின்வரும் காரணிகள் நீதித்துறை சுதந்திரத்தை நிலைநாட்டுகின்றன.

நீதிபதிகள் நியமன முறை

முன்னேற்றமடைந்த நாடுகளில் மூன்று முறைகளில் நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். அவை

அ. மக்களால் தேர்ந்தெடுக்கும் முறை

ஆ. சுவிட்ஸர்லாந்து நாட்டில் சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் முறை

இ. நிர்வாகத் துறையால் நியமிக்கப்படும் முறை.

இவற்றின் விளக்கம் கீழே தரப்படுகிறது.

அ. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறை. இம்முறை பிரான்ஸ் நாட்டில் பின்பற்றப்பட்டது. அதன் பிறகு அமெரிக்கா, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் சில மகாணங்கள் இந்த முறையை பின்பற்றுகின்றன. லாஸ்கி மக்களால் தேர்ந்தெடுக்கும் முறை மோசமானது.

எனவே அவர்கள் வழங்கும் தீர்ப்புகளும் நியாயமானவைகளாக, உண்மையானவைகளாக இருக்க முடியாது என்று கூறுகிறார். கார்னர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கும் முறை நீதித்துறையின் பெருமையை தரம் தாழ்த்தி காட்டுவதோடு நீதிபதிகளை அரசியல் சார்புடையவர்களாக காட்டுவதோடு நீதிபதிகள் அரசியல் சார்புடையவர்களாக, சட்டத்தை அடிப்படையாக கொள்ளாமல் நீதிவழங்க காரணமாகிறது என்று விளக்குகிறார்.

ஆ. சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் முறை. இம்முறை சுவிட்ஸர்லாந்தில் உள்ள கான்டன்கள் (Cantons) என்று அழைக்கப்படும் மாகாணங்களில் பின்பற்றப்படுகிறது. இது ஒரு சிறந்த முறையாகாது. அதிகாரப் பிரிவு கோட்பாட்டிற்கு மாறானது. இம்முறை நீதித்துறை சட்டமன்றத்தின் ஏவலாளாகக் கருதப்படும். அல்லாமலும் அப்போது ஆட்சியிலிருக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக நீதிபதிகள் செயலாற்றுவார்கள். அதனால் அவர்கள் சுதந்திரத்தை இழப்பார்கள்.

இ. நிர்வாகத்தால் நியமிக்கப்படும் முறை. இம்முறை இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகிறது. உலகின் இதர பல நாடுகளும் இம்முறையையே பெரும்பாலும் பின்பற்றுகின்றன. இந்த முறையில் நியமிக்கப்படும் நீதிபதிகள் தேர்வுகள் எழுதுவதன் மூலமாகவும் நேர்காணல் மூலமாகவும் இதர தகுந்த தேர்வு முறை அடிப்படையிலும் நியமிக்கப்படுகிறார்கள். எனவே இவர்களுடைய சுதந்திரத்திற்கு கேடு ஏற்படுவதில்லை. நீதிபதிகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், அனுபவங்கள் எல்லாம் பார்த்து அந்த அடிப்படையில் அவர்கள் நீதித்துறை தொடர்புடைய அமைச்சகத்தால் பரிந்துரை செய்யப்பட்டு நிர்வாகத்திற்குக் தலைமையாக இருப்பவரால் நியமிக்கப்படுவதால் அவர்கள் சுயமாகவும், நேர்மையாகவும், சிறப்பாகவும் பணியாற்ற முடியும். இம்முறையை லாஸ்கி போன்ற அறிஞர்கள் சிறந்தது என்று கூறியிருக்கின்றார்கள்.

நீண்ட பதவிக்காலம்

நீதித்துறை சுதந்திரமாக இயங்குவதற்கு இன்றியமையாத அடுத்த காரணி நீண்ட காலத்திற்கு பதவிக்காலம் இருக்க வேண்டும் என்பதாகும். இதனால் குறுகிய காலத்திற்கு நியமிக்கபடுவோர்களிடையே காணப்படுகின்ற சுயநலம், லஞ்சம் போன்ற குறைகள் இருக்காது என்று கருதப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் உயர்மட்ட நீதித்துறையை சேர்ந்த நீதிபதிகளின் பதவிக்காலம் 60,65,70 வயது என்பதாக இருக்கிறது. ஹமில்டன் போன்ற அறிஞர்கள் நீண்ட பதவி காலத்திற்கு நியமிக்கப்படும் நீதிபதிகள் யோக்கியமானவர்களாகவும் சிறந்த அறிவுடையவர்களாகவும் இருப்பார்கள் என்பதோடு அரசாங்கத்திற்கும் பெருமை ஏற்பட முயற்சிப்பார்கள் என்று கூறுகிறார்.

பணிக்கால உறுதி

நீதித்துறை சுதந்திரம் நீதிபதிகளின் நீண்ட பதவிக்காலம், பதவியில் பணி நிரந்தரம் போன்றவற்றையும் அடிப்படையாகக் கொண்டது. அதாவது அவர்கள் பதவியிலிருந்து எளிதில் விலக்கப்படாமல் இருக்க வேண்டும். இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பெரும்பாலான தற்கால அரசாங்கங்கள் இத்தகைய பணி விதிகளை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இவைகள் எளிதில் மாற்ற முடியாதவாறு அரசியலமைப்பு சட்டத்திலேயே சேர்த்து நீதித்துறை சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கு நல்ல ஏற்பாடுகள் செய்திருக்கின்றன. எனவே நீதிபதிகளை எளிதில் பதவியிலிருந்து நீக்கமுடியாது.

போதுமென்ற அளவிற்கு ஊதிய உத்திரவாதம்

நீதிபதிகளுக்கு அவர்களுடைய கல்வி மற்றும் இதர தகுதிகள் அடிப்படையிலும், அனுபவம், சமுதாயத்தில் அவர்களுக்கு இருக்க கூடிய அந்தஸ்து போன்றவைகளை கருத்தில் கொண்டும், தகாத வழிகளில் பொருளிட்ட முற்படாமல் இருக்கவும் போதிய ஊதியம் தரவேண்டும். அப்போது தான் நீதிபதி பதவிக்கு தகுந்தவர்களும், சிறந்தவர்களும் வருவார்கள். மேலும் நீதிபதிகள் பதவியில் இருக்கும் போது எக்காரணம் கொண்டும் அவர்களுடைய ஊதியம் மற்றும் இதரபடிகள் மேலும் உத்திரவாதம் தரப்பட்டுள்ள பணி செய்யும் காலம் குறைக்கப்படவோ மறுக்கப்படவோ கூடாது. அவர்கள் பதவியிலிருந்து ஒய்வு பெறும்போது அமைதியாக ஒய்வு காலத்தை பெறுவதற்கு ஏற்ற வகையில் ஒய்வு ஊதியம் வழங்கப்பட வேண்டும். இவைகளையெல்லாம் உறுதி செய்யும் வகையில் நீதித்துறைக்கான நிதிகள் தேசிய அரசாங்கத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிதிஆதாரங்களிலிருந்து வழங்கப்படுகிறது.

உயர் தகுதி

நீதி, சுதந்திரம், அதன் முக்கியத்துவம், நீதிபதிகளின் சிறப்பு, அவர்கள் சரியான முடிவுகளை வழங்குதல், சுதந்திரமாக கருத்துக்கள் சொல்லுதல் ஆகியவை நீதிபதிகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகளாகும்.

நிர்வாகத்தினின்றும் நீதித்துறையை பிரித்தல்

இப்பாடத்தில் மான்டெஸ்கியூ என்பவரது அதிகாரப் பிரிவினை கொள்கை பற்றி வேறொரு இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் நீதித்துறை நிர்வாகத்துறையினின்றும் பிரிக்கப்பட்டு தனியாகவும் சுதந்திரமாகவும் செயல்படுமாறு செய்யப்பட்டிருக்கிறது. எனவே நீதித்துறையை கட்டுப்படுத்துவது அதன் சுதந்திரத்திற்கு கேடு விளைவிப்பது போன்ற செயல்களில் நிர்வாகத்துறை தலையிட முடியாது. எனவே நீதிபதிகள் பயம் இல்லாமல் சுதந்திரமாக தீர்ப்புகள் வழங்கலாம்.

ஒய்வு காலத்தில் பணியாற்றுவதற்கு தடை

நீதிபதிகள் அவர்கள் பதவிக் காலம் முடிந்த பிறகு நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் போன்ற நீதி சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடக்கூடாது. ஏனெனில் அவர்கள் பதவியிலிருந்தபோது அவர்களுடன் பணியாற்றியவர்கள் முன்னேயே வாதிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இது தவிர்க்கப்பட வேண்டும்.

முடிவுரை

மேற்கூறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் நீதித்துறை சுதந்திரமாக செயல்பட நீதிபதிகள் நியமன முறை சிறந்ததாக இருக்கவேண்டும். அவர்களுக்கு தரப்படும் ஊதியம் அவர்கள் செய்யும் பணிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். பதவிக்காலமும் குறிப்பிட்ட காலத்திற்கென உறுதி செய்யப்பட்டிருத்தல் அவசியம். அரசியல் தலையீடு இருக்கக் கூடாது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் ஆராய்ச்சி கல்வியியல் நிறுவனம்

Filed under:
3.14285714286
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top