பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை - நிர்வாகம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை - நிர்வாகம்

பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் நிர்வாகம் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நாட்டின் முக்கிய தொழிலான வேளாண்மையையே சார்ந்துள்ளது. நீர் வேளாண்மைக்கான முக்கிய மூலப்பொருளாகும். வேளாண்மைக்கு மட்டுமின்றி, வீட்டு உபயோகம், தொழிற்சாலைகள் மற்றும் இன்னபிற துறைகளுக்கும் நீர் பயன்படுத்தப்படுகிறது. கிடைக்கப்பெறும் நீரின் அளவு குறைந்த அளவே இருப்பதால் அதனைக் கொண்டு அனைத்து பயனீட்டாளர்களுக்கும் சரிவிகிதாச்சார அடிப்படையில் நீரினை பகிர்ந்தளிப்பது ஒரு முக்கியமான பணியாகும்.

ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை அணுகுமுறை மூலம் கிடைக்கப்பெறும் நீர்வளத்தைப் பெருக்கி, சேமித்து, திறம்படப் பயன்படுத்துவதற்கான பல்வேறு திட்டம் மற்றும் பணிகளை அரசு செயலாக்கி வருகிறது. நீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பாசன அமைப்புகளின் இயக்கம் மற்றும் பராமரிப்பில் நீரினை பயன்படுத்துவோரின் பங்களிப்பை உறுதி செய்திடவும், நீர் பங்கீட்டினை கடைநிலை வரை மேற்கொள்வதற்கும், பங்கேற்புப் பாசன மேலாண்மைக்கு சிறப்பு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

நீர்வள ஆதாரத்துறையின் செயல்பாடுகள்

ஆறுகள், அணைகள், ஏரிகள் மற்றும் இதர கட்டுமானங்கள் ஆகிய அனைத்து நீர்வள ஆதார அமைப்புகளும் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையின் மேலாண்மைக் கட்டுபாட்டில் உள்ளன. நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்கள் அணைகள், அணைக்கட்டுகள், தடுப்பணைகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களை கட்டமைத்து புதிய நீர்நிலைகளை உருவாக்குதல் மற்றும் இத்துறையின் கட்டுபாட்டில் உள்ள நீர் ஆதாரக்கட்டுமானங்களை புனரமைத்து பராமரிக்கும் பணிகளை இத்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும், செயற்கை முறை நிலத்தடி நீர் ஆதாரத்தை செறிவூட்டும் கட்டுமானங்களை அமைத்தல் மற்றும் மாநில அளவில் நதிகளை இணைக்கும் திட்டங்களை இத்துறை மேற்கொண்டு வருகிறது.

மாநிலத்தில் பெரிய, நடுத்தர மற்றும் சிறுபாசனத் திட்டங்களை உருவாக்கி செயலாக்குதல் மற்றும் மாநிலத்தின் அனைத்து அணைகளையும் பராமரித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர்வளங்களின் திறன்மிகு மேலாண்மையை உறுதி செய்யும் பொருட்டு பாசன அமைப்புகள் இயக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்படுகிறன்றன.

 • பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கான நீரினை ஒழுங்குமுறைபடுத்துதல் மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
 • கடலோர தடுப்புச் சுவர்கள், தூண்டில் வளைவுகள் போன்றவற்றை அமைத்தல் ஆகிய கடல் அரிப்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
 • கடலோரப் பகுதிகளில் கடல் நீர் ஊடுருவலைத் தடுப்பதற்கான கட்டமைப்புகளை அமைத்தல்.

தமிழ்நாட்டின் பாசன விவரங்கள்

மாநிலத்தில் 34 ஆறுகள் உள்ளன. இவை 127 உபவடி நிலங்களை உள்ளடக்கிய, 17 பெரிய வடிநிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தின் மொத்த மேற்பரப்பு நீர்வள ஆதாரம் 885 டி.எம்.சி. அடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில், அண்டை மாநிலங்களிலிருந்து மாநிலங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின் மூலம் பெறப்படும் 264 டி.எம்.சி. அடி நீரும் அடங்கும். நீர்வள ஆதாரத்துறையின் பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 89 அணைகளின் மொத்தக் கொள்ளளவு 238.58 டி.எம்.சி. அடியாகும். 14,098 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையின் பராமரிப்பிலுள்ளன.

மாநிலத்தில் கிடைக்கப்பெறும் நிலத்தடி நீர்வள ஆதாரத்தில் சுமார் 77 சதவிகிதம் பயன்பாட்டில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

துறையின் அமைப்பு

முதன்மைத் தலைமைப் பொறியாளர், நீர்வள ஆதாரத்துறை மற்றும் முதன்மைத் தலைமைப் பொறியாளர், கட்டடம் ஆகியோர் பொதுப்பணித் துறையின் இரு தொழில்நுட்பத் தலைவர்களாக செயல்படுகின்றனர். தலைமைப் பொறியாளர் (பொது) துறையின் பணியமைப்பு மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்கிறார். தற்பொழுது, முதன்மைத் தலைமைப் பொறியாளர் (கட்டடங்கள்) மற்றும் தலைமைப் பொறியாளர் (கட்டடங்கள்) சென்னை மண்டலம் தலைமைப் பொறியாளர் (பொது) பதவியையும் வகித்து வருகிறார். நீர்வள ஆதாரத்துறை, ஆற்று வடிநில அடிப்படையில் சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலைமை ஏற்கும் தலைமைப் பொறியாளர் அம்மண்டலத்தின் எல்லைக்குட்பட்ட ஆற்று வடிநிலங்களின் மேலாளராக செயல்படுகிறார். மேலும், 6 தலைமைப் பொறியாளர்கள், சிறப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தலைமைப் பொறியாளர்களின் செயல்பாடுகள்

 • வடிநிலங்களுக்கான நோக்கம் மற்றும் குறிக்கோள்களை அடைதல்,
 • பணிகளின் முன்னுரிமையைக் கண்டறிதல்,
 • போதிய தரக்கட்டுப்பாட்டு முறைகளைக் கடைப்பிடித்தல் பாசன கட்டமைப்பு மற்றும் அதன் தொடர்பான அமைப்புகளை முன்னுரிமை அடிப்படையில் பராமரித்தல் அனைத்து பணிகளிலும் போதுமான தரக்கட்டுப்பாட்டு முறையினை செயல்படுத்துதல்,
 • பாசனத் திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல்,
 • பொருளாதார மறுவாழ்வுத் திட்டம் ஆகியவற்றை உறுதி செய்தல்

தலைமைப் பொறியாளர், இயக்கம் மற்றும் பராமரிப்பு

அணைப் பாதுகாப்பு இயக்ககம், மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளின் (நீர்வள ஆதாரத்துறை மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அணைகள்) உறுதித் தன்மை குறித்த அறிக்கைகளை தயாரித்து ஒருங்கிணைந்த ஆண்டறிக்கையை மத்திய நீர் குழுமத்திற்கு அளிக்கின்றது. பொதுப்பணி பணிமனை மற்றும் பண்டகசாலை, நீர் வழிந்தோடி, மதகுகள் மற்றும் நீரொழுங்கி கதவுகள் மற்றும் ஏற்றி இறக்கும் அமைப்புகளை தயாரித்தல் மற்றும் அவசர கால பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்கிறது. இவ்வமைப்பு மாநிலத்திலுள்ள அணைகளின் நீரோட்டத் தரவுகளை சேகரித்து தினசரி நீர் அறிக்கையினை அளித்து வருகிறது. இதற்காக நீர் விவரக் குறிப்பு மையம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இம்மையமானது ஒவ்வொரு ஆண்டும், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தேவைப்படும் கூடுதல் அலுவலர்களின் மாற்றுப்பணி சேவையுடன் வெள்ளம் குறித்த தகவல்களையும் சேகரிக்கிறது.

தலைமைப் பொறியாளர், மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையம்

இம்மையம், மாநிலத்தின் நிலநீர் இருப்பையும், தரத்தையும் கால வரையறைகளில் அளவிட்டு வருகிறது.

மேலும், மாநிலத்தில் முழு அளவிலான வானிலை குறித்த தகவல் நிலையங்களைப் பராமரித்தல், நீர்த்தாங்கிகளின் வரைபடம் மற்றும் நீர்த்தாங்கிகளை மேலாண்மை செய்தல் மற்றும் நிலத்தடி நீர் கண்காணிப்பு இணைவமைவை பலப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தலைமைப் பொறியாளர் மற்றும் இயக்குநர், நீர் ஆய்வு நிறுவனம்

 • தமிழ்நாட்டின் அனைத்து ஆற்றுப் படுகைகளில் உள்ள நீர்வள ஆதாரங்களை நுண்ணிய அளவில் திட்டமிடுதல், மதிப்பிடுதல் மற்றும் நிர்வகித்தல்.
 • வடிநில ஆற்றுப்படுகைக்களுக்கான நுண்ணிய அளவிலான மறு ஆய்வு பணிகளை மேற்கொள்ளுதல்.
 • மேம்படுத்தப்பட்ட தொலையுணர்வு மையத்தின் மூலம் மாநிலத்தின் வடிநில மற்றும் உபவடிநில ஆற்று படுகை வரை படங்களை தயாரித்தல்.
 • புதிய திட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடனும், விவசாயிகள்
 • அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து செயல்படுதல்.
 • பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கான நீரொழுங்குமுறை மற்றும் வெள்ளத் தடுப்பு.
 • கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகள்.

தலைமைப் பொறியாளர், திட்ட உருவாக்கம்

 • நில அளவை மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு புதிய திட்டங்களை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ளுதல்.
 • தல விவரங்களின் அடிப்படையில் திட்டப் பணிகளுக்குத் தேவையான அனைத்து கூறுகளுக்கு வடிவமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல்.
 • திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை தயாரித்தல்.
 • நீரியல் மற்றும் நீர்நிலையியல் ஆய்வு நிறுவனம் இவ்வமைப்பின் கீழ் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில், நீரியல், நீர்நிலையியல் மற்றும் கடலோர கட்டுமானங்கள் சம்பந்தப்பட்ட மாதிரி வடிவமைப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன.

மேலும், இந்நிறுவனம் மாநிலத்தின் கடற்கரையோரங்களில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்தல் மற்றும் கடலோரப் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்தல் ஆகிய பணிகளையும் மேற்கொள்கிறது.

நீர்வடிப்பகுதி மேலாண்மை வாரியக் கோட்டம், தமிழ்நாட்டில் தெரிவு செய்யப்பட்ட நீர்த்தேக்கங்களில் வண்டல்மண் படிவு மற்றும் நீர்வடிப்பகுதி மேலாண்மை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, நீர்த்தேக்கங்களில் வண்டல்மண் படிவால் குறைந்துள்ள கொள்ளளவினை கண்டறிந்து வருகின்றது.

தலைமைப் பொறியாளர் மற்றும் இயக்குநர், பாசன மேலாண்மை பயிற்சி நிலையம்

இந்நிலையத்தினால் அலுவலர்கள் மற்றும் களப் பணியாளர்களுக்கு பாசன மேலாண்மை, நிலத்தடி நீரை மேம்படுத்துதல் மற்றும் மேலாண்மை மற்றும் கணினி தொடர்பான பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், பேரிடர் மேலாண்மை, கடற்கரை நீரியல் மற்றும் கடல் நீர் ஊடுருவலைத் தடுத்தல், அணை பாதுகாப்பு மற்றும் அணை பாதுகாப்பு கருவிகள் அமைத்தல் போன்ற தனிச்சிறப்பு வாய்ந்த பயிற்சிகள் பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தால் அளிக்கப்படுகின்றன. இந்நிலையம், அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் மற்றும் பயிற்சி சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்கிறது.

விவசாய அமைப்பின் பொறுப்பாளர்கள் பயனடையும் வகையில் துவக்கநிலை பயிற்சிகள் அளிக்கப்படுகறிது.

இயக்குநர், மாநில நீர்வள ஆதார மேலாண்மை முகமை (SWaRMA)

இம்முகமை நீர் பங்கீடு, வடிநில நீர்மேம்பாடு மற்றும் திறன்மிகு நீர் மேலாண்மை அணுகுமுறையை செயல்படுத்துவது குறித்து அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

இயக்குநர், கொதிகலன்கள் இயக்ககம் கொதிகலன்கள் சட்டம், 1923-ன்படி கொதிகலன்கள் பாதுகாப்பாக இயங்கவும், கொதிகலன்களால் பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் பாதுகாக்கும் அதிகாரம் படைத்த அமைப்பாகவும் கொதிகலன்கள் இயக்ககம் செயல்படுகிறது.

கொதிகலன்கள் மற்றும் வார்ப்படப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு கொதிகலன்கள் இயக்ககம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

பாசனம் தொடர்பான விவரங்களை துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலகங்களை அணுகிப் பெறலாம்.

நீர்வள ஆதாரத்துறையின் சேவைகள்

 • அணைகள், நீர்த்தேக்கங்கள், அணைக்கட்டுகள், தடுப்பணைகள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் போன்றவற்றை கட்டுதல், புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல்.
 • புதிய நீர் ஆதார உள்கட்டமைப்பு, திட்டங்களை செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்வதற்கு முன்பு இத்திட்டங்களை உருவாக்குதல்,
 • சாத்தியக் கூறு ஆய்வு, மண் பரிசோதனைகள், விரிவான ஆய்வு, விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், செலவினத்திற்கான நிதி குறித்து மாநில / மத்திய அரசிடம் ஒப்புதல் பெறுதல் போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கியது.
 • திட்டங்களை செயல்படுத்துவதற்கு, தேவையான நிலங்களை கையகப்படுத்துவதற்கும் கணிசமான கால அவகாசம் தேவைப்படும். ஒப்பந்த கால அளவானது 6 மாதம் முதல் 24 மாதம் வரை திட்டத்தின் மதிப்பு மற்றும் பணியை தொடங்கும் காலத்தை பொருட்டு மாறுபடும்.
 • வெளிநாட்டு நிதி உதவி நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பெரிய திட்டங்கள் 6 முதல் 8 வருட காலத்தில் படிப்படியாக செயலாக்கப்படும்.
 • அனைத்து புனரமைப்பு பணிகளும் பாசனமில்லாத காலங்களில் மட்டும் விரைந்து செயல்படுத்த இயலும். ஏரிகள், வாய்க்கால்கள் மற்றும் உபரி நீர் செல்வழிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் பிற துறைகளால் நடப்படும் மரங்களை அகற்றுதல்,
 • சுற்று சூழல் அனுமதி, கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதி பெறுதல் போன்றவையும் திட்டத்தின் கால அளவை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாகும்.

பாசன அமைப்பின் கடைமடைப் பகுதி வரை பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்தலை உறுதி செய்யும் பொருட்டு காலமுறைப்படி பராமரிப்பு பணிகள் உரிய தரத்தில் குறித்த காலத்திற்குள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிமராமத்து முறைக்கு புத்துயிரூட்டுதல் - பங்கேற்பு அணுகுமுறையுடன் நீர்நிலைகளை மீட்டெடுத்தல் பயனீட்டாளர்களின் பங்கேற்புடன், நீர்நிலைகளை மீளப்பெரும் பொருட்டும் நீர்வள மேலாண்மையை மேம்படுத்துவதற்கும் குடிமராமத்து முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மொத்த மதிப்பீட்டில், 10 சதவிகிதம் விவசாய சங்கங்கள் அல்லது பாசனதாரர்கள் ஆகியோரிடமிருந்து உழைப்பு அல்லது பொருள் அல்லது பணப் பங்களிப்பாகப் பெறப்பட வேண்டும். வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதார அமைப்பின் தலைமைப் பொறியாளர், குடிமராமத்துப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஆவார்.

இத்திட்டத்தில், வரத்து வாய்க்கால்கள், கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், கலிங்குகள், மதகுகளை பலப்படுத்துதல் மற்றும் மறுகட்டுமானம் செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. விவசாய சங்கங்கள், பாசன சபைகள், பாசனதாரர் மற்றும் பாசனதாரர்களின் தொகுப்பின் மூலம் சிறு பணிகள் நியமன அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. நீர்வள ஆதாரத்துறையின் மூலம் பெரும் பணிகள் நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படுகின்றன.

மண்தன்மை மற்றும் ஆராய்ச்சிக் கோட்டம் வழங்கும் தொழில்நுட்ப கலந்தறி சேவைகள் மண்தன்மை மற்றும் ஆராய்ச்சிப் பரிசோதனைக் கூடங்கள் வாயிலாக, மண்தன்மை ஆய்வு, கற்காரை பரிசோதனைகள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் வேதியியல் தன்மைகளை பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றிற்கு கட்டண அடிப்படையில் தொழில்நுட்ப கலந்தறி சேவை அளிக்கப்பட்டு வருகின்றன.

மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையம் வழங்கும் தொழில்நுட்ப ஆலோசனை சேவைகள்

மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையம் மற்றும் அதன் கோட்டம், விவசாய பெருமக்கள் மற்றும் பொதுமக்களுக்கு கட்டண அடிப்படையில் பின்வரும் கலந்தறி ஆலோசனை சேவைகளை அளித்து வருகிறது :

 • அ. ஆழ்துளைக் கிணறு / திறந்தவெளிக்கிணறு அமைக்க தகுந்த இடம் தெரிவு செய்வதற்கான புவி இயற்பியல் ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.
 • ஆ. மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீரின் தரம் தொடர்பான ஆய்வுகள்.
 • இ. தகவல்களை பரிமாறுதல்.

பங்கேற்பு பாசன மேலாண்மைத் திட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் அமைப்பு முறை மேலாண்மைச் சட்டம், 2000 (தமிழ்நாடு சட்டம் 7/2001) இயற்றப்பட்டு 01.10.2002 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில் பின்வரும் விவசாய அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

அ. முதல் நிலை - நீரினைப் பயன்படுத்துவோர்களைக் கொண்ட 'நீரினைப் பயன்படுத்துவோர் சங்கம்.”

ஆ. இரண்டாம் நிலை - “பகிர்மானக் குழு.'' இ. திட்ட அளவில் “திட்டக் குழு.” இந்த அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்படும் அலுவலக பொறுப்பாளர்கள் 5 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் பொறுப்பில் இருப்பர்.

இச்சட்டத்தின்படி அரசினால் விவசாயிகள் அமைப்பின் தகுதிவாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீன்பாசி குத்தகை வருமானத்தை விவசாயிகள் அமைப்புகளுடன் பகிர்ந்துகொள்ள அரசு ஆணையிட்டுள்ளது.

விவசாயிகளை பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுத்தும் வகையில், குடிமராமத்து முறையை அரசு மீண்டும் புதுப்பித்துள்ளது. இத்திட்டத்தின்படி ரூ.10 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள பராமரிப்பு பணிகளை விருப்பமுள்ள விவசாயிகளிடம் ஒப்பளிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

நீர் வாரச் சந்தை (பாசன மதிப்பீடு மற்றும் செயல் திட்டம்)

பாசன மதிப்பீடு மற்றும் செயல் திட்டம், பாசன மேலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நல்லிணக்கம் இருந்தால்தான் பாசன மேலாண்மை பயனுள்ள வகையில் செயல்படுத்தப்படும் என்கிற அடிப்படைத் தத்துவத்தைக் கொண்டுள்ளது. ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் செயல்பட்டு, இருக்கின்ற தகவல்களைப் பரிமாறி, அதனடிப்படையில் இணைந்த முடிவுகளை எடுத்தால்தான் இவ்வொத்துழைப்பு நிலைக்கும். ஆகவே, இந்நோக்கத்தை அடைய உரிய எல்லைக்குட்பட்ட உதவிப் பொறியாளர் / இளநிலைப் பொறியாளர்களால் நீர் வாரச் சந்தை நடத்தப்பட்டு வருகிறது.

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்

தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் சட்டம், 2007

நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் ஆக்கிரமிப்புகளைத் தடுக்கவும் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அரசு "தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் சட்டம்" (தமிழ்நாடு சட்டம் எண்.8/2007) எனும் சட்டத்தை இயற்றி உள்ளது.

சட்டத்தை அமல்படுத்த நியமிக்கப்பட்ட அலுவலர்கள் :

நில அளவை அலுவலர் நில அளவை மற்றும் நிலப் பதிவேடுகள் துறையில் நில அளவை அலுவலர் பணி நிலைக்குக் குறையாத பதவியில் உள்ள குறுவட்ட நில அளவையர் அல்லது நகர நில அளவையர்.

நீர்வள் ஆதாரத்துறையின் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு அலுவலர் பொறுப்பான பொதுப்பணித்துறையின் உதவி பொறியாளர்/இளம் பொறியாளர்கள்/ மேற்பார்வையாளர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 மாதம் வரை நீட்டிக்கப்படக் கூடிய சிறை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் தண்டனை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து.

தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டம், 1905

தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டம், 1905 அரசின் சொத்துக்களை அத்து மீறி ஆக்கிரமிப்பு செய்வதைத் தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டம், 1905 இயற்றப்பட்டுள்ளது. அரசாணை எண்.2898, வருவாய்த்துறை, நாள் 03.12.1969-ன்படி பொதுப்பணித்துறையின் புறம்போக்கு நிலங்கள், வாய்க்கால்கள் மற்றும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அதிகாரம் உதவிப் பொறியாளர் (தற்போது உதவி செயற் பொறியாளர்கள்) மட்டுமே ஆவார். இச்சட்டத்தின்படி நீர்வள ஆதாரத்துறையின் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், செயல்முறை மற்றும் வழிமுறைகளை உருவாக்கவும் உதவிப் பொறியாளர் முதல் செயற்பொறியாளர் நிலை வரை பொறுப்புகளை நிர்ணயித்து (அரசாணை நிலை எண்.540, வருவாய் [LD6(2)] துறை, நாள் 04.12.2014 மற்றும் அரசாணை நிலை எண்.148, வருவாய் [LD6(2)] துறை, நாள் 24.03.2016) ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

குறைகள் தீர்த்தல்

பொதுமக்களிடமிருந்து உரிய ஒப்புகையுடன் கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. அவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் உரிய நபர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வரும் மனுக்களை பெற்று அதை உரிய கல அதிகாரிகளுக்கு அனுப்பி அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆராயப்படுகிறது.

தமிழ் நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம், 1998

1998 ஆம் ஆண்டைய தமிழ் நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம், 11.12.1998 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சட்டம், பொதுப் பணிகளில் ஒளிவுமறைவற்ற தன்மையை ஏற்படுத்துதல், ஒப்பந்தப் புள்ளிகளை கோருதல் மற்றும் ஏற்பது ஆகிய பணிகள் தொடர்பான நடைமுறைகளை வரையறுக்கிறது.

மின்னணு ஒப்பந்த முறை

ரூ.10.00 இலட்சத்திற்கு மிகையான பணிகளுக்கான திறந்த நிலை ஒப்பந்த ஆவணங்களை மின்னணு மூலம் இலவசமாக வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒப்பந்தக்காரர்களைப் பதிவு செய்தல்

நீர்வள ஆதாரத்துறையில் ஒப்பந்த முறையில் பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்பந்தக்காரர்களை உரிய வகுப்பில் கண்காணிப்புப் பொறியாளர் / செயற் பொறியாளர் ஆகியோர் பதிவு செய்து வருகின்றனர்.

அரசின் நீர் ஆதாரங்களிலிருந்து நீர் வழங்குதல்

பாசனப் பயன்பாடு

பாசனத்திற்காக நீரினைப் பயன்படுத்துவோரிடமிருந்து தனிப்பட்ட தண்ணீர்த் தீர்வை ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.

நன்செய் நிலங்களுக்கு எக்டேருக்கு ரூ.12 மற்றும் புன்செய் நிலங்களுக்கு எக்டேருக்கு ரூ.5 மட்டும் நிலத் தீர்வையாக வருவாய்த் துறை வசூல் செய்கிறது. (அரசாணை (நிலை) எண்.544, வருவாய் (RA1(1)) துறை, நாள் 20.10.2010).

முறையற்ற பாசனத்திற்கு எக்டேருக்கு ரூ.500/-ஐ வருவாய்த் துறை தண்டத்தீர்வையாக வசூலிக்கிறது. (அரசாணை நிலை எண்.545, வருவாய் [RA1(1)] துறை , நாள் 20.10.2010). 52. குடிநீர் பயன்பாடு தொழிற்சாலை பயன்பாடு அரசு நீர் ஆதாரங்களிலிருந்து நாளொன்றுக்கு 1 மில்லியன் காலன் அளவுக்கு குறைவாக தண்ணீர் எடுப்பதற்கு வருவாய்த்துறையின் பரிந்துரையின் பேரில் மாசு கட்டுபாட்டு வாரியத்தின் ஒத்திசைவுடன் அரசால் அனுமதி வழங்கப்படுகிறது.

அரசு நீர் ஆதாரங்களிலிருந்து நாளொன்றுக்கு 1 மில்லியன் காலன் மற்றும் அதற்கு மேல் நீர் எடுப்பதற்கு தொழில்நுட்ப துணைக்குழுவின் பரிந்துரை மீது நீர்ப் பயன்பாட்டுக் குழுவின் ஒப்புதலுக்குப் பின் நீர் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

மணல் குவாரி 03.10.2003 முதல் மணல் குவாரி பணிகளை நீர்வள ஆதாரத்துறை செயல்படுத்தி வருகிறது. தற்பொழுது ஒரு லாரி லோடு (2 யூனிட்டுகள்) மணல் ரூ.800/-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 02.06.2017 முதல் முதன்மைத் தலைமைப் பொறியாளர், நீ.ஆ.து. தலைமையின் கீழ் சுரங்கம் மற்றும் கண்காணிப்பு வட்டம், மணல் குவாரி பணிகளை கவனிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வட்டத்தின் கீழ் 2 சுரங்கம் மற்றும் கண்காணிப்பு கோட்டங்கள், திருச்சி மற்றும் விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் பிற நீர்நிலைகளிலிருந்து களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மட்பாண்டம் செய்பவர்களுக்கு வழங்குதல்

மாநிலத்தில் உள்ள ஏரிகள், வாய்க்கால்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் (சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் நீங்கலாக) அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்கள் ஏரியின் படுகைகள், வாய்க்கால்கள் மற்றும் நீர்த்தேக்கங்களிலிருந்து களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை மாவட்ட ஆட்சியர், மாவட்ட அரசிதழில் அறிவிக்கை வெளியிட்ட பிறகு, வட்டாட்சியரின் அனுமதியுடன் இலவசமாக எடுக்க அனுமதிக்கப்படுவர்.

வேளாண் பயன்பாட்டிற்காக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வண்டல் மண் மற்றும் களிமண் அகற்றும் அளவு, நன்செய் நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டருக்கு மிகாமலும் (ஹெக்டேருக்கு 185 கன மீட்டருக்கு மிகாமலும்) மற்றும் புன்செய் நிலங்களில் ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டருக்கு மிகாமலும் (ஹெக்டேருக்கு 222 கன மீட்டருக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வீடு சார்ந்த (domestic) பயன்பாட்டிற்கு மண், சவுடு மற்றும் சரளை மண் எடுக்கும் அளவு 30 கன மீட்டருக்கு மிகாமலும், மட்பாண்டங்கள் செய்வதற்கு எடுக்கப்படும் களிமண் 60 கன மீட்டருக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை

3.09523809524
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top