பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மனை நிர்வாகம்

மனை நிர்வாகம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மனித சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருப்பது குடும்பம். குடும்ப வாழ்வின் அடிப்படை அம்சமாக உள்ள மனை நிர்வாகம், குடும்பத்தின் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் குடும்ப நலம் போன்றவற்றில் பங்களிக்கின்றது.

குடும்பம் என்பது ஒரே வீட்டில் வசிக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களையும், இரத்த சம்பந்தமான உறவுடைய நபர்களையும், திருமணத்தின் மூலம் உறவு பெற்ற நபர்களையும் அங்கத்தினராகக் கொண்டுள்ளதாகும். குடும்பமானது சந்ததி விருத்தி, பொருளாதார செயல்பாடுகள், கல்வி மற்றும் பொழுது போக்கான காரியங்களை நிகழ்த்தும் ஒரு சமுதாய நிறுவனமாகும். அன்பு, பாசம், ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றால் மக்கள் ஒன்று கூடி வாழ்வதால் மனை நிர்வாகம் அடிப்படையில் மனித உறவுகளின் தன்மையை சம்பந்தப் படுத்துவதாக அமைந்துள்ளது.

இன்றைய சமுதாயம் நம் முன்னோர்களின் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. மேல்நாட்டு தொழில் நுட்பம், திரள் கல்வி, குடியரசு, தொழில்மயமாக்குதல், வேலை வாய்ப்பு ஆகியவை கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை குறைக்கிறது. இது வீட்டிலும், குடும்ப வாழ்க்கையிலும் அதிகமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. தகவல் தொடர்பு சாதனங்களில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் செய்திகளை பார்த்து, கேட்டு, சேகரிக்கும் வசதி அதிகமாகியுள்ளது. அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வெவ்வேறு பொருட்கள் மற்றும் செயல்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அதிகமான பெண்கள் வெளியில் வேலைக்கு செல்வதற்கு வழி வகுத்துள்ளது. இதனால் அதிகமான அளவில் வேறு சாதிக்குள்ளும் வேறு மதத்தினருக்குள்ளும் கலப்பு திருமணம் நடைபெறுவது அதிகரித்துள்ளது.

நேரம் அதிகம் எடுக்கும் குடும்ப வேலைகள், வேலையை எளிதாக்கும் உபகரணங்களைக் கொண்டு செய்யப்படுகிறது. பணிசெய்யும் பெண்கள் தங்கள் சமையல் வேலையை எளிதாகவும், துரிதமாகவும் செய்து முடிப்பதற்கு துரித உணவு வழிவகுக்கின்றது.

பெண்கள் வேலைக்கு செல்வதால் குடும்ப அங்கத்தினர்கள் தொன்றுதொட்டுக் செய்துவரும் பாரம்பரிய பணியில் அதிகளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. வீட்டு வேலை செய்யும் பணியில் உள்ளோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் வீட்டு வேலையை குடும்ப அங்கத்தினர்களே பகிர்ந்து செய்யும் நிலை அதிகரித்துள்ளது.

நிர்வாகம் என்பது மாற்றத்தில் அனுசரித்து போவதும் மாற்றத்தை ஏற்படுத்துவதும் ஆகும்.

மனை நிர்வாகம் என்பதன் கருத்து

குடும்பத்தின் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் குடும்ப நலம் ஆகியவற்றை கொடுக்கும் ஒரு முக்கியமான காரணி மனை நிர்வாகமாகும். இது குடும்ப நபர்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது. மனிதன் பலவித சாதனங்களை உபயோகிப்பதாலும், வாழ்க்கை சாதுரியங்களை மாற்றிக் கொண்டதாலும் இவ்வாழ்க்கை முறை சற்றே சிக்கலான ஒன்றாக மாறியுள்ளது. மனிதன் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் வேண்டியதை பெற்று தன் சமுதாய அந்தஸ்தை உயர்த்துவதற்கு தன்னிடத்திலுள்ள வளங்களை திறம்பட உபயோகிக்கத்தக்க திறன்களை அதிகரித்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாக உள்ளது. நிர்வாகம் என்பது நம்மிடத்தில் உள்ளதைப் பயன்படுத்தி நாம் விரும்புவதைப் பெற்றுக் கொள்வதாகும். நம்மிடத்தில் இருப்பது நேரம், பணம், சக்தி திறன் போன்ற வளங்கள் ஆகும். நாம் விரும்புவது நம் குறிக்கோளை அடைவதாகும். நம் குறிக்கோளை அடைவதில் வெற்றி பெறுவதே நம் இலட்சியமாகும். குறிக்கோளை அடைவதால் இன்பமும் அடையாமல் இருக்கும் போது அதிருப்தியும் ஏற்படுகின்றன.

நிர்வாக செயல்பாடுகளை திறம்பட பயன்படுத்துவதால் அதிருப்தியை தவிர்க்கலாம். ஒவ்வொரு தனி மனிதனின் நிர்வாகத் திறமையை பொருத்து நிர்வாகத்தின் தன்மை அமைகிறது. நிர்வாக செயல்பாடானது வளங்களை அறியவும், கிடைக்கக்கூடிய வளங்களை கண்டுபிடிக்கவும், அவற்றை சரியான முறையில் பயன் படுத்தி விரும்புகிற குறிக்கோளை அடையவும் வழிகாட்டுகிறது.

நிர்வாக செயல்பாடுகள் (முறைகள்)

நிர்வாக செயல்பாடுகள் மூன்று நிலைகளைக் கொண்டது.

திட்டமிடுதல்

நிர்வாக செயல்பாட்டின் வெற்றிக்கு திட்டமிடுதல் மிக முக்கியமானதாகும். இது அடிப்படையாக நம் குறிக்கோளை அடைவதற்கான வழிமுறைகளை வகுப்பதாகும். நம் அன்றாட வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் அனுபவங்கள் திட்டமிடுதலுக்குப் பெரிதும் உதவுகின்றன. அது மட்டுமின்றி, சிந்திக்கும் திறனும் தேவைப்படுகிறது. இச்சிந்தனைத் திறன் பழக்கத்தின் அடிப்படையிலோ அல்லது உணர்வு பூர்வமானதாகவோ இருக்கலாம். எனவே திட்டமிடுதல் என்பது நம் குறிக்கோளை அடையத் தேவையான வழிமுறைகளைப் பற்றி நன்கு சிந்தித்தலே ஆகும். ஏதேனும் ஒரு பணியின் ஆரம்பத்திலிருந்து இறுதி நிலை வரை முழுமையாக நாம் கற்பனை செய்து பார்த்தல் வேண்டும். நம் குறிக்கோளை அடைய எவ்வழிமுறை சுலபமாக உள்ளது என்பதை கவனித்து அதற்கேற்ப சிறந்த திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். சில வழிமுறைகளில் ஏதேனும் தடைகள் இருப்பதை உணர்ந்தால், திட்டமிடுபவர் அந்த தடைகளை நீக்குவதற்கான வழிகளை ஆராய வேண்டும். சிறுவர்கள் போதுமான அனுபவம் இல்லாதவர்களாததால் திட்டமிடுவதற்கு அனுபவம் வாய்ந்த பெரியவர்களை நாடுதல் நல்லது. திட்டமிடுதலின் இறுதி நிலை 'முடிவெடுத்தல்' அல்லது தீர்மானித்தல் என்பதாகும். முடிவெடுத்தல் என்பது செயலை வெளிப்படுத்தும் நுழைவாயில் ஆகும். திட்டமிடுபவர் தனது பழைய அனுபவங்களை மனதில் இருத்தி நன்றாக சிந்தித்து கவனமாக குறிக்கோளுக்கு ஏற்ப விவேகத்துடன் செயல்பட வேண்டும்.

திட்டமிடுபவர் என்ற முறையில் நாம் நம்முடைய சிந்தனை சக்தி, ஞாபக சக்தி, கூர்ந்து கவனித்தல், கற்பனைத் திறன் போன்ற திறன்களைத் தொடர்ந்து உபயோகப்படுத்துகிறோம். மேலும் பலதரப்பட்ட கருத்துக்களுக்கிடையேயுள்ள தொடர்பினைக் காரணங்களோடு ஆராய்ந்து கற்பனையின் மூலமாக இக்கருத்துக்களை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவையாக வரிசைப்படுத்தி திட்டமிட வேண்டும். இத்தகைய ஆற்றல்கள் நம்மிடையே அதிகமாக உருப்பெறும் போது அன்றாட வாழ்க்கையின் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப திட்டமிடுதல் எளிதாகிறது. உதாரணமாக, பிறந்த நாள் விருந்தொன்றுக்குத் திட்டமிடும்போது, கீழ்க்கண்ட கருத்துக்களை மனதில் கொள்ள வேண்டும்.

 1. விருந்து நடைபெறப் போகும் இடம்
 2. விருந்தாளிகளின் எண்ணிக்கை
 3. எம்மாதிரியான உணவு அளிக்கப்பட வேண்டும்?
 4. எவ்வளவு பணம் செலவிட வேண்டும்?
 5. எப்போது நாம் விருந்தை வைத்துக் கொள்ளப் போகிறோம்?

திட்டமிடும் போது கீழ்கண்ட குறிப்புகளை மனதில் கொள்ள வேண்டும்.

 1. வளங்களின் அளவு மற்றும் தேவைகள் இவை இரண்டுக்குமிடையில் சரியமைப்புக் காணப்பட வேண்டும்.
 2. தனிநபரின் சூழ்நிலைக்கேற்ப தீர்மானம் எடுக்க வேண்டும்.
 3. திட்டமிடுதல் உண்மையானதாக இருத்தல் வேண்டும்.
 4. திட்டமிடுதல் மாற்றியமைக்கும் தன்மையுடையதாக இருக்க வேண்டும்.

கட்டுப்படுத்துதல்

திட்டத்தை செயல்படுத்தும்போது அதற்கான வளங்களை உபயோகித்து அத்திட்டம் முழுமையாக வெற்றி பெறும் வரை கட்டுப்படுத்துதல் கையாளப்படுகிறது. இந்நிலையில் நாம் நம் சிந்தனையைச் சூழ்நிலைக்கேற்றாற் போல மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு மாற்றியமைத்தால் நாம் நம் குறிக்கோளை எளிதாக அடைய இயலும். உதாரணமாக உணவுத் திட்டமிடும் போது அங்காடியில் சில பொருட்கள் கிடைக்கவில்லையென்றால் சூழ்நிலைக்கேற்றாற்போல் நாம் புதிய தீர்மானம் எடுத்துக் கொள்ளலாம்.

கட்டுப்படுத்துதலின் வெவ்வேறு நிலைகள்

ஊக்குவித்தல் அல்லது சக்தியூட்டுதல்

இது ஒரு செயலை ஆரம்பிப்பது மற்றும் தொடர்ந்து செய்வதாகும். ஒரு குறிப்பிட்ட வேலையை செய்வோர் அவ்வேலையின் சரியான விளைவைப் பெறுவதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். திட்டமிடுதல் நன்றாக இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவது கடினமாக இருக்கும் போது சக்தியூட்டல் என்பது ஒரு ஊக்குவிக்கும் காரணியாக அமையும்.

சரிபார்த்தல்

சரிபார்த்தல் என்பது திட்ட முன்னேற்றத்தைப் படிப்படியாக, துரிதமாக மதிப்பிடுதலாகும். உதாரணம்: பள்ளிக்கு சரியான நேரத்தில் செல்வதற்கு ஆடைகள், உணவு மற்றும் புத்தகங்களை ஆயத்தப்படுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு ஆயத்தமாகும் போது ஒவ்வொரு நிலையிலும் நேரத்தை அடிப்படையாக வைத்து சரிபார்த்தல் அவசியமாகும்.

ஒழுங்குபடுத்தல்

 • திட்டமிடுதலில் ஏதாவது புதிய தீர்மானம் எடுக்கும்போது ஒழுங்குபடுத்தல் அவசியமாகிறது. இதை வளங்களின் அளவு மற்றும் தீர்க்க வேண்டிய பிரச்சனை ஆகியவற்றைப் பொறுத்து செயல்படுத்தலாம்.
 • செயல் திறன், வளங்கள் கிடைக்கப்பெற்றல் மற்றும் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவு இவையாவும் ஒரு செயலை கட்டுப்படுத்துவதற்கு முக்கியமானதாகும்.

மதிப்பிடுதல்

இது செயல்முறையை சரிபார்த்து முன்னேறிச் செல்வதற்கு உதவக் கூடிய முறையாகும். நாம் செய்யும் செயல் தடையின்றி நடக்க, முழு வேலையினையும் அவ்வப்போது மதிப்பிட வேண்டும். வேலை நடைபெறும் விதமும், இறுதி நிலையின் தரமும் மதிப்பிடப்படுகிறது. தெளிவான நோக்கங்களோடு நாம் செய்யும் செயல், முழு வேலையினையும் மதிப்பிட உதவுகிறது. ஒரு திட்டத்தின் வெற்றியோ, தோல்வியோ நாம் வரையறுத்துள்ள குறிக்கோள்களைப் பொறுத்து அமைந்துள்ளது. நம் செயல் தோல்வியடைந்தால், நம் திட்டத்தின் குறைபாடுகளைக் குறித்துக் கொண்டு எதிர்காலத் திட்டங்களில் அவற்றைச் சரி செய்து கொள்ள வேண்டும்.

நம் அன்றாட வாழ்க்கையில் மனை நிர்வாகம் என்பது இயக்கும் சக்தியாக இருப்பதுடன் குடும்ப வாழ்வின் நிர்வாக பகுதியாகவும் உள்ளது. நம் மிடத்திலுள்ள வளங்களைத் திறமையாக உபயோகிப்பதன் மூலம் நம் குறிக்கோள்களை அடைந்து வாழ்க்கையில் பூரண திருப்தியை அடையலாம்.

நேயங்கள், குறிக்கோள்கள், தரம்

நம் வாழ்க்கையை வடிவமைப்பதில் மனை நிர்வாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. மனித நேயத்தின் அடிப்படையில் தோன்றிய குறிக்கோள்களை அடைவதற்குத் தக்கவாறு வளங்களைத் தொகுத்து பயன்படுத்துவதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மனைநிர்வாகம் வழிவகுக்கிறது.

மனித நேயம், குறிக்கோள்கள், வாழ்க்கைத்தரம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மனித நேயமே அடிப்படையானது. இதிலிருந்துதான் மற்ற இரண்டும் தோன்றுகிறது. மனித நேயம் என்பது மனிதனுக்கு முக்கியமான ஒன்று. ஆனால் இதன் செயற்பாடுகளை முழுமையாக விளக்குவது அரிதானது. குறிக்கோள் என்பது மிகவும் குறிப்பானது. இது ஒருவன் எதனை அடையப் பாடுபடுகிறான் என்பதனை தெளிவாக விளக்கிவிடும். வாழ்க்கைத்தரம் என்பது எதனையும் ஒப்பிட்டு பார்ப்பதற்கான ஒரு அடிப்படையாகும்.

நேயம்

நேயம் என்பது இலக்கு, நிபந்தனை, சூழ்நிலை, குறிக்கோள் கருத்து ஆகியவற்றிற்கு கொடுக்கப்படும் மதிப்பாகும். மனிதனின் விருப்பத்தினை நிறைவேற்றுவதற்கான ஒரு பொருளின் அல்லது மனிதனின் திறமையே நேயம் ஆகும். இதுவே நம் செயல்பாட்டிற்கு வழியாகவும் நம் குறிகோள்களுக்கு ஆதாரமாகவும் அமைகிறது. இவை மனிதனால் உருவாக்கப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு பிறகு அனுபவிக்கப்படுகிறது. எதை ஒருவன் நேயமாக கருதுகிறானோ அது அவனுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் இருக்கும். இவை படிப்படியாக காலத்தின் சூழ்நிலைக்கேற்ப மாறக் கூடிய இயல்புடையவை.

மனித நேயத்தின் தன்மை ஒவ்வொருவரிடத்தும் வேறுபட்டு இருக்கும். மனித நேயமானது மனிதன் தான் தேடுகின்ற நிறைவை அடைவதற்கான முயற்சிகளை அறிவுடன் செயல்படுத்த உதவுகின்றது.

மனித நேயமானது இருவகைப்படும்.

அவை

 1. இயல்புடைய நேயம் (Intrinsic)
 2. தூண்டக்கூடிய நேயம் (Instrumental)

மனித இயல்புடைய நேயம் ஒருவரது சொந்த நலனுக்காக விரும்பத்தக்கதும் முக்கியமானதுமாகும். உதாரணமாக கலையுணர்வு என்பது அழகை இரசிக்கும் தன்மையுடைய இயல்பான நேயமாகும். ஆனால் தூண்டக்கூடிய தன்மையுள்ள நேயம் மற்ற நேயங்களை அடைவதற்குத் தூண்டுகோலாக அமைந்துள்ளது. உதாரணம் திறமையுடன் வேலை செய்தல்.

சில நேயங்கள் இந்த இரண்டு தன்மைகளையும் கொண்டுள்ளன. மனித நேயங்களான அன்பு, பாசம், ஆரோக்கியம், விளையாட்டு விருப்பத்துடன் கற்பனை மற்றும் ஆக்கத்திறனுடன் ஈடுபடக் கூடிய செயல்களாகும்.

கலை

வசதி, குறிக்கோள், ஆர்வம், அறிவு, விவேகம், விளையாட்டு, கலை மற்றும் மதம் போன்றவைகள் இரண்டு தன்மையுமுள்ள நேயங்களாகும். பார்க்கர் என்பவர் முதன்மையான நேயங்களை கீழ்கண்டவாறு வகைப்படுத்தியுள்ளார்.

அன்பு

மனித உறவில் காணப்படும் ஆர்வத்தைக் குறிக்கும். பாலியல் அன்பு, பெற்றோர் அன்பு, சிநேகித அன்பு, சமுதாயப் பற்று போன்றவை இத்தலைப்பில் அடங்கும். ஆரோக்கியம் இது உடல், உள்ளம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தைக் குறிக்கும்.

வசதி

வாழ்க்கை இன்பமாக, மகிழ்ச்சியாக இருக்கத் தேவைப்படும் நேயமாகும். இந்த நேயமானது அழகு மிகுந்த எல்லா கலைப் பொருட்களையும் இரசிக்கும் தன்மையாகும். மதம் நேர்மையுடன் வாழ்க்கைக் குறிக்கோளை அடைவதற்கு வழிகோலுகிற நேயமாகும். மனிதன் எப்படி நேர்மையாக வாழ வேண்டும்? எதற்காக வாழ வேண்டும் என்னும் தத்துவத்தை உள்ளடக்கியது.

நேயம் மனிதர்களின் விருப்பம் மற்றும் ஆர்வத்தால் வளர்கிறது. மனித நேயமானது மனித பண்பாட்டிற்கேற்ப மாறக் கூடியது. குடும்ப நபர்களிடையே மனித நேயம் வளர்வதற்கு குடும்பமே பொறுப்பாகும்.

குறிக்கோள்கள் (Goals)

குறிக்கோள் என்பது மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்ட நோக்கங்கள். இந்த குறிக்கோள்கள் ஒருவருடைய விருப்பம், கடந்த கால அனுபவங்கள் மற்றும் சுற்றுப்புறம் இவற்றால் மாற்றப்படுகின்றன. குறிக்கோளை அடைவதற்கு ஒவ்வொரு தனிமனிதனும், குடும்பமும், விருப்பத்துடன் செயல்படுகின்றன. குடும்ப குறிக்கோள், குடும்ப வாழ்க்கைத் தரத்தையும், அமைப்பையும் வடிவமைக்க உதவுகிறது.

தனிமனிதனுடைய குறிக்கோளையோ அல்லது குடும்ப குறிக்கோளையோ ஏற்படுத்துவதற்கும், அடைவதற்கும், அறிவு, தீர்வு காணும் தன்மை மற்றும் குடும்ப வளங்களைப் பயன்படுத்த உதவும் வழிகளைப் புரிந்து கொள்ளும் திறன் தேவைப்படுகிறது. குறிக்கோள்கள் தீர்மானமாகவும், தெளிவாகவும் எளிதில் அடையக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

குறிக்கோள்கள் அமைப்பது வாழ்க்கையில் குறிக்கோளை வெற்றிகரமாக அடைவதற்கு உண்டாகும் விருப்பம் அல்லது ஆர்வமாகும். அறிவு மற்றும் விவேகம் அன்றாடம் நேர்மையான வாழ்க்கை வாழ்வதற்கு அறிவும், விவேகமும் மிக முக்கியமாக கருதப்படும் நேயமாகும். தொழில் நுட்ப ஆர்வம் அல்லது திறமையான உழைப்பு நல்ல ஆக்கப்பூர்வமான பொருட்களைத் தயாரிப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் உதவும் நேயமாகும்.

பல குறிக்கோள்கள் உடனடியாக அடையக் கூடியதாக இருக்கும். ஒரு குறிக்கோளின் வெற்றி அடுத்த குறிக்கோளுக்கும் அதற்கடுத்த குறிக்கோளுக்கும் வழிகோலுகிறது. குறிக்கோள்களை குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால குறிக்கோள்களாக வகைப்படுத்தலாம்.

தரம் என்பது மனிதனின் நிறைவான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது எவை, தேவையானது எவை என்பதனைப் பற்றி மனதிற்குள் எழுகின்ற நினைவுகளேயாகும். நாம் நினைப்பவற்றை வாழ்க்கையில் அடைந்து விட்டால் மகிழ்ச்சியையும், இல்லாவிடின் மனச்சங்கடமான நிலையையும் இது ஏற்படுத்துகிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையின் வழி முறைக்கும், பழக்கங்களுக்கும் இது ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது.

குறைந்த கால குறிக்கோள் உடனடியாக அடையக் கூடிய ஒன்றாகும். இவை குறிக்கோளின் ஆரம்ப நிலையாகும். அவை நீண்ட இலட்சியத்திற்கு வழிகோலுகிறது. குடும்ப சூழ்நிலையும் அனுபவங்களும் குடும்பத்தின் குறிக்கோள்கள் உருவாக காரணமாக அமைகின்றன.

குடும்பத்தின் மிக முக்கியமான குறிக்கோள்கள் அல்லது இலட்சியங்கள்

 • குடும்பத்தினருக்கு போதுமான உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அளிப்பது.
 • குடும்பத்தில் ஒவ்வொரு தனி நபருக்கும் போதுமான பூரண வளர்ச்சிக்கு வழிவகுப்பது.
 • குடும்ப உறவுகளை நிறைவாக்குவது.
 • மனித வேற்றுமைகளை அறிந்து, ஏற்று அதைப் பாராட்டுதல். சமுதாயத்துடனும் அதன் உட்பிரிவுகளுடனும் நல்லுறவினை மேற்கொள்ளுதல்.

வாழ்க்கைத் தரம்

தரம் என்பது ஒப்பிடுவதற்கு அல்லது மதிப்பிடுவதற்கு உதவக்கூடிய அளவுகோலாகும். மனித நேயம் மற்றும் குறிக்கோளை விட வாழ்க்கை தரம் மிகவும் குறிப்பானது. தரம் சில குறிப்பிடத்தக்க அல்லது முக்கியமான பொருட்களுடன் தொடர்பு உடையது. இது புறக் காரணிகள் மூலம் பாதிப்படைகிறது. வாழ்க்கை குறிக்கோளை அடைவதற்காக ஏற்படுத்தப்பட்ட எல்லைக்கோடே தரம் ஆகும்.

வாழ்க்கைத் தரம் ஒவ்வொருவரின் குடும்ப நேயத்திற்கு ஏற்றவாறு வேறுபடுகிறது. இதன் அடிப்படையில் வாழ்க்கைத் தரத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை.

 1. பழங்கால வரை முறைகள்
 2. சூழ்நிலைக்கேற்றவாறு மாறக்கூடிய வரைமுறைகள் ஆகும்.

பழங்கால வரைமுறைகள்

சமூக நேயத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிலைப்படுத்தப் பட்டது. இதில் மக்கள் வரைமுறைக்கேற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்கின்றனர். இவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலையானது. சமூகத்தின் நிலை மாறுபடும் பொழுது தான் இது மாறுதலுக்குட்படுகிறது.

சூழ்நிலைக்கேற்றவாறு மாறக் கூடிய வரைமுறைகள்

ஒவ்வொரு தனி மனிதனின் தேவைக்கேற்றவாறு தோன்றக் கூடியதும், மாறக் கூடியதுமாகும். மனிதனின் சூழ்நிலைக்குத் தக்கவாறு மாறக்கூடியது. ஆனால் இந்த வரைமுறைத் திட்டங்கள் சமுதாயத்தால் அதிகமாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. பல முக்கியமான வாழ்க்கையின் வரைமுறைகள் ஒன்று சேர்ந்து வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்துகிறது. அது ஒரு குடும்பத்தின் சந்தோஷமான வாழ்விற்கு தேவையான உபகரணங்கள், ஒத்தாசைகள் மற்றும் மன நிறைவின் தன்மையை உள்ளடக்கியது.

ஹேசல் கெர்க் என்பவர் "வாழ்க்கைத் தரம் என்பது முக்கியமான மனித நேயங்களின் மூலம் பெறப்படுகிறது என்று கூறியுள்ளார்.

தீர்மானித்தல்

மனை நிர்வாகம் என்பது தீர்மானங்களை எடுக்கும் ஒரு துரிதமான செயலாகும். தீர்மானித்தல் என்பது மனை நிர்வாகத்தின் இதயம் போன்றதாகும். தீர்மானங்களை எடுப்பதற்கு, தேவையான தகவல்கள் அதை வாழ்க்கை சூழ்நிலையில் உபயோகப்படுத்துதல் மற்றும் அவற்றை தெரிந்துகொண்டு பயன்படுத்தும் ஆர்வம் ஆகியவை அவசியம். ஆகவே நிர்வாகத்தில் தீர்மானங்களை எடுப்பதென்பது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனையான சூழ்நிலையில் முக்கியமான தகவல்களை தெரிந்துகொள்ளல் மற்றும் அவற்றை உண்மையில் உபயோகித்தல் ஆகும். நம் அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சூழ்நிலை பற்றிய அறிவும் அந்த அறிவினை நடைமுறையின்படி நம் விருப்பத்திற்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்வதற்கான திறமையும் தேவைப்படுகிறது.

மனை நிர்வாகம் என்பது பல தொடர்ச்சியான தீர்மானங்கள் எடுக்கும் மன நிலையை உள்ளடக்கியதாகும்.

தீர்மானித்தலின் படிகளாவன

 1. பிரச்சனைகளை உணர்தல்
 2. பிரச்சனைக்குரிய தீர்வுகளை கண்டறிதல்
 3. தீர்வுகளை ஆராய்தல்
 4. பிரச்சனைக்கான தீர்வை தேர்ந்தெடுத்தல்

மனை நிர்வாகத்தில் தீர்மானித்தலின் பிரச்சனைகளை உணர்தல்

இது முதலில் பிரச்சனையை புரிந்து கொள்வதாகும். பிரச்சனையைப் புரிந்து கொள்வதற்கு சரியான செய்திகள் தேவைப்படுகிறது. பிரச்சனையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமலோ, அல்லது அதற்குரிய காரணங்களைப் பற்றிய செய்தி இல்லாவிட்டாலோ, இதனைப் பற்றி அறியாமல் இருந்தாலோ, நம்மால் தெளிவாகப் பிரச்சனை என்ன என்பதை உணர முடியாது. அதற்குச் சிறப்பான தீர்வும் எடுக்க முடியாது. உதாரணம் நம் வீட்டிற்குத் தேவையான வேலையை எளிதாக்கும் சாதனங்களை வாங்குதல், வீட்டு வேலைகளைத் திட்டமிடுதல், குடும்பத்திற்கான உடைகளைத் தேர்ந்தெடுத்தல்.

பிரச்சனைக்குரிய தீர்வுகளை கண்டறிதல்

பிரச்சனைக்குரிய காரணங்களைப் புரிந்து கொண்டு அதற்குரிய பல அணுகுமுறைகளைப் பற்றி சிந்தித்தால் தான் சிறப்பான வழிமுறைகளைப் பெற முடியும். இதற்கு சிறந்த அறிவுத் திறனும் வளமும் தேவைப்படுகிறது.

பிரச்சனைக்குரிய தீர்வுகளை ஆராய்தல்

தீர்வுகளை கண்டறிந்த பிறகு ஒவ்வொரு வழிமுறைகளின் நன்மை தீமைகளை தனித்தனியாக ஆராய வேண்டும். நம்முடைய மதிப்பீட்டிற்கும், குறிக்கோளுக்கும், ஏற்றவாறு நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான செயல் முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பிரச்சனைக்குரிய தீர்வுகளை தேர்ந்தெடுத்தல்

தீர்வுகளை ஆராய்ந்த பிறகு எது சிறப்பானதாக கருதப்படுகிறதோ அதனைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்த வேண்டும். இந்த நிலையில் மதிப்பிடுதல் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

தீர்மானித்தலின் செயல்பாடு மற்றும் விளைவுகளுக்குப் பொறுப்பேற்றல்

இது தீர்வு காணுதலில் ஏற்படும் விளைவுகளைத் தீர ஆராய்ந்து அதனை ஏற்றுக் கொள்ளும் திறன் ஆகும். இது ஒரு மதிப்பிடும் நிலையாகும். தீர்மானித்தலின் இறுதி விளைவை இது குறிக்கும். இத்தகையத் தீர்வு காணும் முறையானது தன்னம்பிக்கையையும், மனோதைரியத்தையும் அளித்து எந்த பிரச்சனையையும் தெளிவுடன் சமாளிப்பதற்கு பலத்தையும், எதிர்காலத்தில் அளிக்கிறது.

தீர்மானித்தலின் வகைகள்

தீர்மானித்தலில் பல வகைகள் உள்ளன. அவை,

தனி நபர் தீர்மானம்

தன்மைக்கேற்ப தீர்மானம் பரிந்துரைக்கப்படும். இது சிறிது கடினமான சற்று தாமதமான செயல் முறையாகும். சில சமயங்களில் குழு நபர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்படவும் வாய்ப்புண்டு.

பழக்கத்திற்குட்பட்ட தீர்மானம்

இது தீர்மானத்தின் மிகவும் அடிப்படைச் செயலாகும். நம் அன்றாட வாழ்க்கையில் வெவ்வேறு செயல்களை வழக்கமாக, வரிசை படி செய்வதற்கு பயிற்சி பெறப்படுகிறது. அதனால் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி நிகழ்கின்ற எந்த செயல்களையும் பழக்கத்தின் காரணமாக எதை முதலில் செய்ய வேண்டும், எதைப் பிறகு செய்யலாம் என்பதனை எளிதில் நம்மால் தீர்மானம் செய்து அதன்படி வெகு எளிதாகச் செயல்பட முடிகிறது.

தலையாயத் தீர்மானம்

இது ஒரு செயலை முழுமையாக முடிப்பதற்கு ஆதரவு தரக்கூடிய பல தீர்மானங்களைக் கொண்டது. உதாரணம் வீடு வாங்குவது என்பது ஒரு முக்கியமான தீர்மானமாகும். இதற்கு துணையாக உள்ள பல காரணிகளான சேமிப்பு, போக்குவரத்து வசதி, சமூக வசதிகள் போன்றவற்றைச் சிந்தித்தப் பிறகே வீடு வாங்குவதைப் பற்றி தீர்மானம் செய்ய வேண்டும்.

பொருளாதாரத் தீர்மானம்

இது குடும்ப வளங்களை ஒதுக்கீடு செய்வது மற்றும் தேவைக்கேற்ப மாற்றி உபயோகிப்பதைச் சார்ந்தது. இத்தீர்மானத்தில், ஒரு குறிக்கோளை அடைவதற்கு தேவையான மனித மற்றும் பொருள் வளத்தை ஒதுக்கீடு செய்வது அவசியமாகும். அதிகமான நிறைவை தரும் பலவிதமான குறிக்கோள்களை அடைவதற்கான வளங்களின் ஒதுக்கீட்டை இது வெளிக்காட்டுகிறது.

தொழில்நுட்ப ரீதியான தீர்மானம்

இது திட்டமிட்ட குறிக்கோளைப் பெறுவதற்காக கிடைக்கக் கூடிய வளங்களை ஒருங்கிணைத்து சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கான தீர்மானங்களை எடுப்பதாகும். இது ஒரு தனி நபரைச் சார்ந்ததாகும். உதாரணம் : படிப்பு தனி நபர் தீர்மானத்தை மிகவும் விரைவாக எடுக்கலாம். இந்த தீர்மானம் அவரவரின் நேயம், குறிக்கோள், வாழ்க்கையின் தரம், மற்றும் அவர்களின் பங்கேற்பை பொறுத்து அமைவதாகும்.

குழு தீர்மானம்

பல நபர்களின் கருத்து, ஆலோசனைகள் பரிந்துரைக்கப்பட்டு அதிலிருந்து சிறப்பானவற்றைத் தேர்ந்தெடுப்பது குழு தீர்மானமாகும்.

நிர்வாகம்

திட்டமிடுதல்

நிர்வகிப்பதில் முதல்நிலை திட்டமிடுதலாகும். அன்றாட, வாராந்திர, பருவ மற்றும் சிறப்பு வேலைகளை செய்ய தேவையான அளவு நேரத்தை கணக்கில் கொண்டு நேரம் மற்றும் செய்முறை ஆகியவற்றைத் திட்டமிட வேண்டும்.

நேரத்தை திட்டமிடுதலில் நான்கு படிகள் உள்ளன. அவை

படி - 1 குடும்பத்தின் தினசரி, வாராந்திர, பருவ மற்றும் பொழுதுபோக்கு செயல்களை பட்டியலிடுதல்

எளிதான வேலை - உதாரணம் :- தையல், பாத்திரங்கள். கழுவுதல், தட்டுமுட்டு சாமான்களை சுத்தம் செய்தல், பெருக்குதல் போன்றவையாகும்.

நடுத்தர வேலை - உதாரணம் :- மாவுபிசைதல், துணிகளை ஸ்திரி போடுதல் மற்றும் துணிகளை தொங்கவிடுதல்.

கடினமான வேலை - உதாரணம்:- படுக்கை செய்தல், தரையை தூய்மைப்படுத்தல், துணி துவைத்தல், குழந்தைகளைத் தூக்கிச் செல்லுதல் ஆகியவை.

பல வேலைகளைச் செய்வதற்கு சக்தியின் உபயோகம், மன சரீர நிலை, தசை அழுத்தம், பணியில் கவனம் மற்றும் அவர்களின் திறமை போன்றவற்றை பொறுத்ததாகும். சோர்வு அல்லது களைப்பு, வேலை செய்யும் அளவை குறைக்கும் நிலையாகும். சோர்வை இரண்டாக வகைப்படுத்தலாம் அவை உடல் சோர்வு மற்றும் உள்ளச் சோர்வு. களைப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளன.

அவை.

 • அதிக நேரம் உழைப்பு (உடலால், மனதால்)
 • கடினமான உழைப்பு
 • கட்டாய உழைப்பு
 • தெரியாத வேலை
 • வேலையை முடிக்க முடியாத சூழ்நிலை
 • ஒரே விதமான வேலை
 • ஊக்குவித்தல் இல்லாமை
 • வேலையில் விருப்பமின்மை
 • வேலையை நிறுத்த விருப்பம்
 • திட்டத்தில் தோல்வி

படி - 2 அன்றாடம் குறித்த நேரத்தில் வழக்கமான வேலை முறைகளை செய்ய திட்டம் தீட்டுதல். இப்படி செய்வதன் மூலம் எஞ்சியுள்ள நேரத்தை அறிய உதவுகின்றது.

படி - 3 சிறப்பு மற்றும் பருவ வேலைகளை, மீதமுள்ள நேரத்தில் செய்யும்படி அமைக்க வேண்டும்.

படி - 4 குடும்பத்தில் யார் எந்த வேலையை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். இதை அனைவரும் விவாதித்து முடிவு செய்யலாம்.

கட்டுப்படுத்துதல்

நேரம் மற்றும் சக்தி நிர்வாகத்தில் அடுத்து வருவது கட்டுப்படுத்துதல் ஆகும். இது நேரம் மற்றும் செயல் முறைத்திட்டத்தை செயலாக்கம் செய்தல் ஆகும். இத்திட்டத்தில் ஏற்படும் தடைகளைப் பொறுத்து திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். ஊக்குவித்தல் செயலாக்க முறையை நடைமுறை செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. திறமையை வளர்த்தல் மற்றும் சுலபமான தொழில் நுணுக்கங்களை பயன்படுத்துவதின் மூலம் செலவாகும் நேரம் மற்றும் சக்தியை குறைக்கலாம்.

திட்டத்தைத் தீட்டும் போதும், திட்டத்தை செயலாக்கம் செய்யும் போதும் மற்றும் விளைவுகளை ஆய்வு செய்யும் போதும், மதிப்பீடு செய்தல் வேண்டும். திட்டமிட்டபடி வேலைகள் நடைபெறுகின்றதா என்பதை உறுதி செய்யவும், செய்யும் வேலையையும் மற்றும் வேலை நிறைவேறுதலைக் கண்டறியவும், தொடர்ச்சியான மதிப்பீடு செய்ய வேண்டும்.

வேலையை எளிதாக்குதல்

வேலையை எளிதாக்குதல் என்பது வேலையை சுலபமாக செய்தலாகும். "நிக்கல் மற்றும் டார்சே” என்பவர்கள் எளிதாக, சுலபமாக, வேகமாக மற்றும் கவனமாக வேலையை செய்வதே வேலையை எளிதாக்குதல் என்று கூறுகின்றனர். குறைந்த நேரத்தில், குறிப்பிட்ட அளவு சக்தியை பயன்படுத்தி அதிகமான செயல்களை செய்தலே வேலையை எளிதாக்குவதின் முக்கிய நோக்கம் என்று கிராஸ் மற்றும் கிராண்டல் கூறுகின்றனர். மனையமைப்பு பல் வேறுபட்ட செயல்களை உள்ளடக்கியதாகும். அநேக நேரங்களில் இவை நீண்ட சுவாரஸ்யமில்லாத, ஒரே மாதிரியான, சலிப்புண்டாக்குகிற, நேரம், திறமை மற்றும் சக்தியை அதிகமாக செயல்படுத்தக் கூடிய வேலைகளாக அமைகின்றன.

வேலையை எளிதாக்குவதற்கு உடலின் பாகங்களை சரியாகவும், வீணாக்காத அல்லது சிக்கனமான முறையில் பயன்படுத்தியும் எளிதாக்கலாம். இவற்றை செய்வதற்கு கீழ்கண்டவாறு உடல்பாகங்களை பயன்படுத்தலாம்.

உடல் பாகங்களை சரியாக பயன்படுத்துதல்

 • தசைகளை சிறப்பாகப் பயன்படுத்துதல்
 • வரிசையாக வேலையைச் செய்தல்
 • வேலை செய்வதில் திறமையை வளர்த்தல்
 • உபகரணங்கள் மற்றும் செயல் வரிசையை மாற்றுதல்

வேலையை எளிதாக்கும் கருவிகளை உபயோகித்தல், வேலை செய்யும் இடம் மற்றும் உபகரணங்களை சரியான உயரம், ஆழம், பருமனுடன் திட்டமிடுவது, வீட்டில் பொருட்களை சேமிக்க போதுமான இடம், மற்றும் வெளிச்சம் ஆகியவை வேலைதிறனை அதிகரிக்கும்.

உற்பத்தி செய்யும் வரிசையை மாற்றுதல்

குடும்ப வேலை அதிகமாக இருக்கும் போது, வேலையை ஒன்று சேர்த்து செய்து, வேண்டாத செயல்களை நீக்கிவிடும் போது நேரமும், சக்தியும் குறைகிறது.

பலனை மாற்றுதல்

பெறப்படப் போகிற பலனின் எதிர்பார்ப்பு மற்றும் தரத்தை மாற்றும் போது வேலை எளிதாக்கப்படுகிறது.

பொருட்களை மாற்றுதல்

பலனை பெறுவதற்கு மூலப்பொருளை மாற்றி அமைக்கலாம்.

எரிபொருளும் அடுப்புகளும்

சமையலறை சிக்கனமாகவும், வசதியுடனும், தூய்மையாகவும், கவரக்கூடியதாகவும் இருத்தல் குடும்பத்தலைவிக்கு அதிகமாக திருப்தியை கொடுக்கும். குறைந்த செலவில் நேரமும் சக்தியும் அதிகம் பயன்படுத்தாமல் இருப்பதற்கு சரியான எரிபொருளும் அடுப்புகளும் குடும்ப தலைவிக்கு உதவுகின்றன.

எரிந்து வெப்ப சக்தியைக் கொடுக்கும் பொருளுக்கு எரிபொருள் எனப் பெயர். எரிபொருள் கொடுக்கும் வெப்பத்தின் அளவைப் பொறுத்து எரிபொருட்களைத் தரப்படுத்தலாம். வீடும், தொழிற்சாலையும் எரிபொருளின்றி இயங்க முடியாது. எல்லா எரிபொருட்களும் எரி தன்மையுடைய கார்பனையும், ஹைட்ரஜனையும் அதனுடன் எரியா தன்மையுடைய கார்பன்-டை-ஆக்சைடையும், ஈரப்பதத்தையும் கொண்டுள்ளன.

நல்ல எரிபொருளின் தன்மைகள்

ஒரு நல்ல எரிபொருள் கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்.

 1. வெப்பத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
 2. விலை குறைவானதாக இருக்க வேண்டும்.
 3. சேமித்து எடுத்துச் செல்ல சுலபமாக இருத்தல் வேண்டும்.
 4. எரிந்தபின் கிடைக்கும் பொருட்கள் சுலபமாக அப்புறப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.

எரிபொருளின் வகைகள்

எரிபொருளை திட, திரவ, வாயு, மின்சாரம் என்று நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

 1. இயற்கை திடப்பொருளுக்கு உதாரணம் விறகு, கரி. செயற்கை எரிபொருளாக அடுப்புக்கரி தயாரிக்கப்படுகிறது.
 2. திரவப்பொருளின் இயற்கை வடிவம் பெட்ரோலியம். அதிலிருந்து செயற்கையாக பெட்ரோல், மண்ணெண்ணெய், ஆல்கஹால் தயாரிக்கப்படுகின்றது.
 3. வாயுப் பொருளின் இயற்கை வடிவம், இயற்கை வாயு. அதிலிருந்து செயற்கையாக அசீட்டிலின், சாண எரிவாயு ஆகியவை தயாரிக்கப்படுகிறது.
 4. மின்சாரம்
 5. சூரிய ஒளி
 6. மின் நுண் அலைகள்

திடநிலை எரிபொருள்

விறகு

விறகுதான் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் எரிபொருள். விறகுகளை உபயோகப்படுத்துமுன் உலர வைத்துத் தேவையான அளவில் வெட்டி வைத்துக்கொள்ளுதல் நமக்கு வசதியானது. விறகின் எரியும் தன்மையைப் பொறுத்து, சில வேகமாகவும், ஒழுங்காகவும் நீண்ட நேரமும் எரியும். விறகின் ஒரு முனை எரியும் போது, மற்றொரு முனையில் ஓர் எண்ணெய் போன்ற திரவம் கசிவதைக் காணலாம். ஒரு விறகில் எவ்வளவு எண்ணெய் இருக்கிறதோ, அவ்வளவு நன்றாக, அது எரிந்து வெப்பத்தை கொடுக்கும். உதாரணமாக யூகலிப்டஸ் மரத்தைக் குறிப்பிடலாம். பொதுவாக சவுக்கு மரம், புளிய மரம், மாமரம் ஆகிய மரங்கள் விறகுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. எண்ணெய், வாயு, மின்சாரம் ஆகிய எரிபொருளின் பயன், பாதுகாப்பு ஆகியவற்றை அறியாத பாமர மக்கள், விறகே அதிக வசதியான எரிபொருள் எனக் கருதுகின்றனர்.

விறகுகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்

விறகுகள் ஈரமாக இருக்கும் போது பற்ற வைப்பது கடினம். இடம் விட்டு இடம் எடுத்துச் செல்வதும், பாதுகாத்து வைப்பதும் எளிதல்ல. அப்படியே சேமித்தாலும் அது இருக்குமிடம் எறும்பு, கறையான்களின் உறைவிடமாகி சுற்றுப்புறக் கேட்டை விளைவிக்கும்.

சில விறகு வகைகள் அதிகப் புகையை வெளிவிடும். புகை சூழ்ந்த சமையலறை, அங்கு வேலை செய்பவருக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். சமையலறை சுவரிலும் பாத்திரங்களிலும் அதிகம் கரி படியும். கரிபிடித்தப் பாத்திரங்களைச் சுத்தப்படுத்துவது கடினமான வேலையாக அமையும். புகை வெளியில் செல்வதற்கு புகைபோக்கி வைக்க வேண்டிய செலவும் ஏற்படும்.

வறட்டி

விறகுடன், மாட்டுச் சாணத்தை வறட்டியாகத் தட்டிக் காய வைத்து, அடுப்பு எரியப் பயன்படுத்துகிறார்கள். ஈரமாக இருந்தால் புழு, பூச்சிகள் உண்டாகும். எனவே அவ்வளவு ஆரோக்கியமானதாக இது கருதப்படுவதில்லை. சாணத்தை வறட்டியாக உபயோகப்படுத்துவதை விட, உரமாக உபயோகப்படுத்துவதே சிறந்தது.

நிலக்கரி

பூகம்பம் போன்ற இயற்கையின் சீற்றத்தினால் பெரிய காடுகளின் மரங்கள் எரிந்து பூமியில் புதையுண்டன. இவை எல்லாம் பூமியின் வெப்பத்தாலும், அழுத்தத்தினாலும் நிலக்கரியாக மாறிவிட்டன. தற்போது இந்தியாவில், ஆந்திராவில் சிங்கரேனியிலும், மேற்கு வங்கத்தில் ரானிகஞ்சிலும் நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி கிடைக்கிறது. நிலக்கரி எரியும் போது அதிக வெப்பத்தை கொடுத்தாலும் புகையையும் அதிகம் வெளிவிடுகிறது.

அடுப்புக்கரி

விறகு எரிவதன் மூலம் கரி கிடைக்கிறது. விறகு எரிந்து சாம்பலாகும் முன்பே மூடிவைத்தால் கரி கிடைக்கும்.

திரவநிலையில் உள்ள எரிபொருள்

பெட்ரோல், மண்ணெண்ணெய், ஆல்கஹால் போன்றவை திரவ நிலையில் உள்ள எரிபொருட்கள். இதில் மண்ணெண்ணெய் விலை குறைவாக இருப்பதனால் கிராமப்புறத்தில் வீட்டு விளக்குகள் எரியவும், அடுப்புகளுக்கும் இது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை எரிப்பதில் சிரமம் ஏற்படுவதில்லை.

வாயுநிலையில் உள்ள எரிபொருள்

நிலக்கரி வாயு, அசிட்டிலின் வாயு, நீர்க்கப்பட்ட பெட்ரோலியம் வாயு (LPG), சாண வாயு ஆகியவை வாயு எரிபொருள்களாகும். இந்தியாவில் நீர்க்கப்பட்ட பெட்ரோலியம் வாயு சிலிண்டர்களில் அடைக்கப்பட்டு வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

எரிவாயு மிகச் சிறந்த எரிபொருளாகக் கருதப்படுகிறது. பாத்திரத்தில் கரி பிடிப்பதில்லை. வேலையும் சீக்கிரம் முடிந்து விடும். இதன் வெப்பத்தைத் தேவையான அளவு எளிதில் குறைக்கவோ, கூட்டவோ முடியும். உபயோகம் இல்லாத வாயு சிலிண்டரை நன்கு மூடி வைக்க வேண்டும். இல்லாவிடில் கார்பன் மோனாக்ஸைடு வாயு மூலம் ஆபத்து நேரிடும்.

மாட்டுச் சாண வாயு (Bio Gas)

இது கிராமப்புற மக்களுக்கு ஏற்றது. சாணத்தை நொதிக்க வைப்பதன் மூலம் வாயு உண்டாகிறது என்ற தத்துவம் இங்கு பின்பற்றப்படுகிறது. இதற்கு செங்கல் கொண்டு ஒரு பெரிய தொட்டி கட்ட வேண்டும். தொட்டியின் மேற்புறம் பீப்பாயைக் கவிழ்த்து வைக்க வேண்டும். சாணம் புளித்து அதிலிருந்து மீத்தேன் வாயு 60% மற்றும் ஹைட்ரஜன் 40% காற்றுக் குமிழ் வடிவத்தில் வெளிவரும். இந்த வாயு, தொட்டியில் உண்டாகும் பொழுது அதிலிருக்கும் பீப்பாய், வாயுவினால் மேலே தூக்கப்படுகிறது. பீப்பாயின் மேற் பாகத்தில் ஒரு சிறு துளையிட்டுக் குழாய் ஒன்றைப் பொருத்த வேண்டும். இக்குழாய் மூலம் வாயுவைச் சமையலறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். கிராமங்களில் இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாயு, எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இதிலிருந்து வெளிவரும் வாயு, புகையில்லாமல் நீலநிறத்துடன் எரியும். இதனால் இவ்வெரிவாயு அதிக சக்தியுடையதாயும், சிக்கனமானதாயும், எளிமையானதுமாகவும் உள்ளது. பாத்திரங்கள் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதும் எளிது. இதில் நச்சு வாயுவான கார்பன் மோனாக்ஸைடு வெளிவருவதில்லை.

அடுப்புகள்

வீட்டின் சமையலறையில் முக்கிய இடம் பெறுவது அடுப்புகள் ஆகும். அடுப்புகளைப் பண வசதிக்கேற்பவும், எரி பொருள் கிடைப்பதற்கேற்பவும் தேர்ந்தெடுக்கிறார்கள். நம் நாட்டின் அறிவியல் முன்னேற்றம் முழு அளவில் கிராமங்களுக்கு எட்டாததால், கிராம மக்கள் பெரும்பாலும் விறகு அடுப்புகளையே பயன்படுத்துகிறார்கள். மேலும் விறகு அதிக பணச் செலவின்றி மக்களுக்கு கிடைக்கின்றது. நம் நாட்டில் பழக்கத்தில் உள்ள பல்வேறு அடுப்புகளைப் பற்றி இப்போது அறிந்து கொள்ளலாம்.

பாரம்பரிய அடுப்புகள்

இது இந்தியாவில் பெரும்பான்மையான இடங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. எந்த அளவிலும், வகையிலும் செய்யப்பட்டப் பாத்திரங்களைத் தாங்குமளவு மூன்று கற்களின் மேல் அமைக்கப்பட்டதாகும். இந்த அடுப்பில் பயன்படுத்தப்படும் எரிபொருள் மரத்துண்டுகளும், சுள்ளிகளுமாகும். விறகிலிருந்து கிடைக்கும் தீயானது, மரத்தூள், கழிவுத்தாள், மாட்டுச் சாணம், வறட்டி, தேங்காய் ஓடு இவற்றால் கிடைக்கும் தீயைக் காட்டிலும் சீராகவும், ஒரே அளவிலும் இருக்கும்.

புகையில்லா அடுப்புகள்

பழங்காலந்தொட்டு உபயோகிக்கப்பட்ட பாரம்பரிய அடுப்புகள் அதிக புகை வெளிவிடாததாயும், சிக்கனம் மிகுந்ததாயும், சக்தி வாய்ந்ததாயும் புதிய உருவம் பெற்றன. சிவப்புக்களிமண், மாட்டுச் சாணம், வைக்கோல் ஆகியவை கொண்டு இதற்கான மேடை அமைக்கப்படுகின்றன. புகையானது புகைப் போக்கிகள் வழியாக வெளியேற்றப்பட்டு, சமையலறைப் புகையின்றி இருக்கும். வழக்கமாக இதில் மூன்று சமைக்கும் பாத்திரங்கள் வைப்பதற்கு இடம் இருக்கும். ஒரு புறத்தில் தீ மூட்டி அடுப்பைப் பற்றவைத்தால் வெப்பம் பற்ற இடத்திற்குச் செல்ல வழி உள்ளது. ஏதாவது ஒரு அடுப்பை உபயோகிக்காத போது, வெளியே புகை வருவதைத் தடுக்க அந்த துவாரத்தை மூடி வைக்க வேண்டும்.

மின்சாரம் முன்னேற்றமடைந்த நாடுகளில் மின்சாரம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது விலை உயர்ந்த எரிபொருளாகும். இதிலிருந்து புகையோ, தூசியோ வராததால் சமையலறை மிகவும் சுத்தமாக இருக்கும். இந்திய மக்கள் மின்சார அடுப்பை அதிகம் உபயோகிப்பதில்லை. மின்சாரம் என்பது நன்மை செய்யக்கூடிய பணியாள் ஆனால் தீமை செய்யும் எஜமான் அல்லது அதிகாரியாகும், என்ற சான்றோர் சொல்லை நாம் மறந்துவிடக்கூடாது.

மரக்கரி அடுப்பு

இந்த அடுப்பு இரும்பால் ஆனது. விலை மலிவானது, குறைந்த அளவு புகை வெளிவரக்கூடியது. மரக்கரி என்பது எரிந்த மரத்திலிருந்து பெறப்படும் கரியாகும். இது எளிதில் உடையக் கூடியதும், கருமை நிறத்துடனும் காணப்படும். எளிதில் தீ பற்றக்கூடியதுடன், ஒரே சீராக சிவப்பு நிறத்துடன் எரியக்கூடியது. அடிக்கடி விசிறினால் தொடர்ந்து சம அளவு வெப்பத்தை உருவாக்க முடியும். அறையில் சரியான காற்றோட்டம் இல்லையென்றால் மரக்கரியிலிருந்து வெளிவரும் கார்பன் மோனாக்ஸைடு வாயு தீமை விளைவிக்கும்.

மண்ணெண்ணெய் அடுப்பு

விறகு அடுப்பை விட இது மேலானது. எளிதில் பற்ற வைக்க முடியும். பல இடங்களுக்கும் எளிதில் எடுத்துச் செல்லலாம். பல வகைகளிலும் பல விலைகளிலும் கிடைக்கின்றன. இதற்கு சுத்தமான எண்ணெய் உபயோகிக்க வேண்டும். திரியின் எரிந்த பாகத்தை அடிக்கடி வெட்டி விட வேண்டும். நீல நிற சுவாலை வந்தபின்னரே பாத்திரத்தை அடுப்பின்மேல் வைக்க வேண்டும். இது பாத்திரத்தில் அதிகக் கரிபிடிப்பதைத் தடுக்கும். சுத்தமாகப் பராமரிக்கப்படாத அடுப்பில் சமைக்கும் பண்டங்கள் மண்ணெண்ணெய் வாடையைத் தரும். நாம் பராமரிக்கும் தன்மையை பொறுத்தே இந்த அடுப்புகளின் திறமை அதிகரிக்கும்.

காற்றழுத்த மண்ணெண்ணெய் அடுப்பு

திரி மண்ணெண்ணெய் அடுப்பை விட இவ்வடுப்பு சிறந்தது. இவ்வடுப்பு அடியில் ஒரு எரிபொருள் சேமத்தொட்டியும் மேலே எரியும் குழாயையும் கொண்டது. இத்தொட்டியுடன் ஒரு காற்றடிக்கும் விசைக்குழாயும் (Pump) மண்ணெண்ணெய் தொட்டிக்கு, மூடியும், காற்றை எடுத்து விடுகின்ற திருகும் உள்ளன. அடுப்பின் நடுப்பகுதியில் எண்ணெய் ஊற்றுவதற்காக ஒரு சிறிய கோப்பையும் அதனுடன் இணைக்கப்பட்ட குழாயின் வாய்ப்புறத்தில் சிறிய காற்றழுத்த மண்ணெண்ணெய் அடுப்பு இவ்வகை அடுப்பு சுத்தப்படுத்துவதற்கு எளிதானதல்ல. பற்றவைப்பதற்கு முன்னர் திரி அடைத்துக் கொள்ளாமல் இருக்க சிறிய துவாரத்தை கூரான ஊசியினால், குத்தி சுத்தம் செய்து பின்பு காற்றடிக்க வேண்டும். குறைந்த அளவு வெப்பத்தில் செய்யும் வேலைகளுக்கும் இவ்வடுப்பு பயன்படாது. இவ்வடுப்பில் ஓரளவிற்குத்தான் தீயை குறைக்க முடியும். காற்றின் அழுத்தத்தை சீராக வைக்க அடிக்கடி விசை குழாய் மூலம் காற்றடிக்க வேண்டும்.

வாயு அடுப்பு

கரிவாயு, இயற்கை வாயு, மாட்டுச் சாண வாயு, அசிட்டிலின் வாயு, திரவ வடிவிலான பெட்ரோலியம் வாயு ஆகியவை இந்த அடுப்பில் பயன்படுத்தும் எரிபொருட்களாகும். வெப்பம் எளிதாக இந்த அடுப்புகளில் கட்டுப்படுத்தப்படுவதால், சமையலை திறமையான முறையில் செய்ய முடியும்.

பொருளாதார ரீதியிலும் இது சிறந்தது. வாயு உள்ள சிலிண்டரானது ஒரு ரப்பர் குழாய் மூலம் அடுப்புடன் இணைக்கப்படுகிறது. சிலிண்டரின் ரெகுலேட்டரில் உள்ள வால்வைத் திறந்தால், வாயு அடுப்பைப் போய்ச் சேரும். இவ்வகை அடுப்பானது குடும்பத்தலைவி சமைப்பதில் தன் சக்தியையும், நேரத்தையும் குறைந்த அளவு செலவழிக்க உதவுகிறது. பாத்திரத்தின் அடிப்பாகத்தில் கரி படியாததால் அவற்றைத் துலக்குவது எளிதாகிறது. சமையலறையைப் புகையின்றி பளிச்சென வைத்துக் கொள்ள முடிகிறது. பெரிய விடுதிகளிலும் உணவகங்களிலும் இவ்வகை அடுப்புகள் மிகவும் உபயோகமாக உள்ளன. இவ்வகை அடுப்பின் சிலிண்டரில் வாயுக்கசிவு ஏற்படாமல் கவனித்துக்கொள்ள வேண்டும்.

அடுப்புகளில் வெப்பம் கடத்தும் தன்மை உடைய கம்பிச் சுருளின் மூலம் மின்சாரம் பாய்கிறது. இதில் சமைப்பதன் மூலம் புகையோ, சாம்பலோ உண்டாவதில்லை. இந்தியாவில் மின்சாரத்தின் விலை அதிகமாக இருப்பதாலும், மின்சாரம் எப்போதும் கிடைக்காததாலும், மின்சார அடுப்புகளின் விலை அதிகம் உள்ளதாலும், விபத்து ஏற்படுமோ என்ற மக்களின் அச்ச உணர்வினாலும், அதிகமான வீடுகளில் மின்சார அடுப்புகள் பயன்படுத்தப்படுவதில்லை .

சூரிய அடுப்பு

தற்காலத்தில் அறிவியல் முன்னேற்றத்தால், பல்வேறு சக்தி சாதனங்களை நமது அன்றாட எரிபொருள் உபயோகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள நாம் அறிந்துள்ளோம். இன்று சூரிய சக்தியைக் கொண்டு பல்வேறு சமைக்கும் கருவிகளை அமைப்பதில் நாம் முன்னேறி உள்ளோம். இதில் சூரிய அடுப்பு நம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. சூரிய ஒளிக்கதிர்களைப் பிரதிபலிக்கும் கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஒழுங்கான வடிவில் அமைக்கப்பட்ட சூரிய அடுப்பு 450°C வெப்பத்தை அளிக்கவல்லது. இந்தியா போன்ற வெப்ப மண்டலப் பிரதேசங்களில், கிராமப் புறங்களில் சூரிய அடுப்பின் நன்மைகளை எடுத்துக் கூறி இவற்றைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.

Filed under:
3.1724137931
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top