பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பன்னாட்டு வாணிகம்

பன்னாட்டு வாணிகம் (International Trade) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

உலகமயமாதல்

உலகமயமாதல் என்பது ஒவ்வொரு நாடுகளின் பொருளாதாரத்தை, உலக நாடுகளின் பொருளாதாரத்தோடு இணைத்தல், பன்னாட்டு வாணிகம், பன்னாட்டு முதலீடு, பன்னாட்டு நிதி ஆகியவற்றின் அதிக அளவு வெளிப்படைத் தன்மையோடு செயல்படுவது உலகமயமாதலின் சாராம்சமாகும். உலக நாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைந்த ஒரே பொருளாதார அமைப்பாக மாற்றியமைப்பதற்கு உலகமயமாதல் என்று பெயர். அனைத்து நாடுகளின் பண்டங்கள் மற்றும் பணிகளின் வாணிபம், முதலீடு செய்வதற்குரிய அனைத்து தடைகளும் நீக்கப்படுகிறது.

கை பிரெய்ன்பாண்ட் (Guy Brainbant) என்பவரின் கூற்றுப்படி உலகமயமாக்கல் என்பது உலக வாணிகத்தை துவக்குவதோடு மட்டுமன்றி தொலை தொடர்பு வழிமுறைகளை முன்னேற்றமடையச் செய்தல், நிதி அங்காடியை பன்னாட்டு மயமாக்குதல், பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தல், மக்கள்தொகை பெயர்ச்சி, பொதுவாக தனிநபர்களின் இடப்பெயர்ச்சி அதிகமாதலின் காரணமாகவும் பண்டங்கள், முதலீடு, புள்ளிவிவரங்கள் மற்றும் கருத்துக்களோடு அன்றி தொற்றுநோய்கள், மாசு அடைதல் போன்றவை பற்றியும் ஆகும்.

உலகமயமாதல் என்பது கீழ்க்கண்ட அளவீடுகளைக் குறிக்கிறது.

 1. உலக நாடுகளின் வாணிபம் விரிவடைதல்.
 2. மக்கள் இடம் பெயர்தலை ஊக்குவித்தல்.
 3. பணம் அல்லது எதிர்காலச் செலுத்துகைகள் அதிக அளவில் பரிமாற்றம் நடைபெறுதல்.
 4. முதலீடு அதிக அளவில் இடம் பெயர்தல்.
 5. நிதி முதலீட்டின் இடப்பெயர்ச்சியை அதிகரித்தல்.
 6. மேற்கூறிய அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட வெளிநாட்டு நிறுவனங்கள் தோன்றுதல்.
 7. பல நாடுகளிடையே தொழில் நுட்பத்தை பரிவர்த்தனை செய்தல்.
 8. செய்தி மற்றும் மின் அணுச்சாதனங்களின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்தல்.
 9. கல்வி உட்பட வாணிபம் மற்றும் அனைத்து பணிகளின் உற்பத்தியை வளர்ச்சியடையச் செய்தல்.

தாராளமயமாக்கல் (Liberalization)

1991, ஜூன் மாதத்தில் அந்நியச் செலவாணி இருப்பானது உள்ளீடுகளுக்கான நிதி ஆதாரம் அளிக்க இரண்டு வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்ததொரு இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா, தாராளமயமாக்கல் பொருளாதாரத்தை கடைப்பிடித்து இச் சீர்கேட்டினால் கடனை குறித்த காலத்தில் திரும்பச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்தியாவின் கடன் தரம் தாழ்ந்து விட்ட நிலையில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களது இருப்பை வெளிநாட்டு நாணயமாக திரும்பப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்ததனால் குறுகிய காலக்கடன்களை வழங்கிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செலுத்தவேண்டிய கடனை குறித்த காலத்தில் செலுத்த முடியாத நிலை இந்திய அரசுக்கு ஏற்பட்டது.

எனவே, இப்பிரச்சினைகளை சமாளிக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை மீட்கவும், உள்நாட்டு வெளிநாட்டு துறைகளில் கடுமையான கொள்கை நடவடிக்கைகள் அறிமுகம் ஆகியது. இக்கொள்கை நடவடிக்கை அனைத்தும் ஒரு பகுதியில் உடனடித்தேவை கருதியும், மறுபகுதியில் உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் அறிவுரையின்படியும் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாராளமயமாக்கல் கொள்கையினால் வெளிச்சந்தை மையப் பொருளாதாரம் இந்தியாவில் வெகுவிரைவாக முன்னேறியது.

தாராளமயமாக்கலின் கொள்கை நடவடிக்கைகள்

தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் திட்டத்தின்படி மிகப்பெரிய கொள்கை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி அரசு ஜூலை 1991ல் 20% அளவிற்கு பணமதிப்பு செய்தது. புதிய தொழிற்கொள்கை, புதிய வாணிபக் கொள்கை, புதிய ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளை 1991ல் அறிவித்தது.

இதன்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிகைகளாவன: தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெறுதலை ரத்து செய்தல், பொதுத்துறை நிறுவனங்களுக்கான தடை செய்யப்பட்ட வாணிக நடைமுறைச் சட்டத்தை (MRTP-Act) திருத்தியமைத்தல், அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளை திரும்பப் பெருதல், தனியார் மயமாக்கலை ஊக்குவித்தல் சுங்கவரிகளை வெகுவாகக் குறைத்தல், அங்காடி தீர்மாணிக்கும் அந்நிய செலவாணிக்கு மாற்றிக்கொள்ளல், பல்வேறு நிதியியல் மற்றும் பணவியல் துறை சீர்திருத்தங்கள் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் புதியப் பொருளாதாரக் கொள்கைகளில் (NEP) அடங்குவதாகும்.

ஆண்டுகள் செல்ல நடப்புக்கணக்கில் நிலையான வளர்ச்சி இருந்தது. மேன்மேலும் அந்நிய நேரடி முதலீட்டிற்கு பல்வேறு துறைகள் திறந்துவிடப்பட்டன. இதனால் தொலைத் தொடர்பு, சாலைப் போக்குவரத்து, துறைமுகம், விமானப் போக்குவரத்து, காப்பீடு மற்றும் நிகர பெருந்துறைகளில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்தது.

1990களில் அமலாக்கப்பட்ட தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் காரணமாக ஒருங்கிணைந்த இந்தியாவில் கொண்டுவரப்பட்ட உலகலாவிய வாணிகம் மற்றும் முதலீட்டினால் சமீப ஆண்டுகளில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை இந்தியா கண்டது. இப்பெரும் வளர்ச்சி இருந்தும், வேலையின்மை, வறுமை, ஏற்றத்தாழ்வு, குறைவான அளவிளான மனித வளர்ச்சி ஆகியவை நம்நாட்டிற்கு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.

அயல்நாட்டு முதலீடு

1990களில் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார இடர்ப்பாட்டினை சரிசெய்ய மேற்கொள்ளப்பட்ட புதிய பொருளாதார கொள்கையின்படி அயல்நாட்டு முதலீடு மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. புதிய பொருளாதார கொள்கையின் மிக முக்கிய நோக்கம் அதிக அளவிலான பொருளாதார வளர்ச்சியை அடைவதாகும். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை அடைய, நாணய மதிப்பு குறைப்பு, பண இலக்கை குறைத்தல், பருப்பொருள் பற்றாக்குறையை குறைத்தல், வாணிபத்தை தாராளமயமாக்குதல், தொழில் துறையை தனியார் மயமாக்குதல், அயல்நாட்டு முதலீடுகள் மற்றும் போட்டிகளை வரவேற்றல் போன்ற வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டன. தொழில்துறையில் உள்ள முதலீட்டு இடைவெளியை நிரப்ப அயல்நாட்டு முதலீடு ஊக்குவிக்கப்பட்டது.

அயல்நாட்டு முதலீடானது தொழில்நுட்பம், அங்காடித் தொழில் முனைவு, நிர்வாகத் தொழில் நுணுக்கங்கள், இறக்குமதியை அதிகரிக்கச் செய்யும் புதிய வழிமுறைகள் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். முன்னுரிமை தொழில்களிலும், உயர்தர தொழில்நுட்பங்களிலும் அயல்நாட்டு முதலீட்டை அதிகரிக்க நேரடி அயல்நாட்டு முதலீடு அதன் பங்குத் தொகையில் 40% இலிருந்து 51% உயர்த்தி அனுமதியளித்தது. இவை பொதுவாக, பிற சேர்க்கை தொழில்கள் எனப்படும். இது அயல்நாட்டு முதலீட்டில் இந்தியாவின் கொள்கையை தெளிவாக்குகிறது.

 • மேலே வகுத்த வழிமுறைகள் அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு வழி வகுக்கிறது.
 • அயல்நாட்டு முதலீடு மற்றும் அயல்நாட்டு தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் தொடர்புடைய முடிவுகள் 1991ல் புதிய பொருளாதார கொள்கையில் ஏற்பட்ட மிகச்சிறிய மாற்றமாகும்.
 • புதிய பொருளாதாரக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்களை நான்கு வகையாக வகைப்படுத்தலாம்.

பண்டங்களை தேர்ந்தெடுத்தல்

 • அயல் நாட்டு முதலீடு தாரளமாக அனுமதிக்கப்பட்டதால், உற்பத்தி பண்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லுகிறது.
 • அங்காடியைத் தெரிவு செய்தல்
 • இந்தியச் சந்தையில், அயல்நாட்டு முதலீட்டாளர்கள் மிக சுலபமாக உள்நாட்டு முதலீட்டாளர்களோடு போட்டியிட முடிகிறது.
 • சொந்த அமைப்பைத் தேர்வு செய்தல்
 • பெரும்பாலும் அயல்நாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவு பங்கினை வைத்துக் கொள்ளலாம்.

வழிமுறைகளை எளிமையாக்குதல்

நேரடி வெளிநாட்டு முதலீடு மூன்று வழிகளில் நுழைகிறது.

 1. இந்திய ரிசர்வ் வங்கியில் நேரடி வழிமுறைகளில் அனுமதிக்கப்பட்ட முதலீடு.
 2. முன்னுரிமை பெற்ற '35' தொழிற்சாலைகளுள் ஒன்றிற்கு RBI 51% வரை நேரடி அயல்நாட்டு முதலீட்டிற்கு அனுமதியளிக்கிறது.

முன்னுரிமைத் தொழில்கள் தவிர பிற தொழில்களில் முதலீடு செய்ய பன்னாட்டுத் தொழிலின் இந்திய பங்குதாரர்கள், 51% மேல் முதலீடு செய்ய விரும்பினால், தொழிற்சாலைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் செயலகம் (SIA) அல்லது அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் வாரியத் (FIPB) திடம் அனுமதி பெற வேண்டும். மூன்றாவதாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலம் கிடைக்கும் முதலீடு பெற வேண்டும்.

தொழில்நுட்ப மாற்றம்

நாட்டின் முன்னேற்றத்திற்கு தொழில்நுட்பம் ஒரு முக்கிய காரணியாகும். தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நிலையும், தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகக்குறைந்த வேகத்தையும் உடையது வளரும் நாடுகளின் இயல்பு ஆகும். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை வேகப்படுத்தவும், நவீன முறைகளைப் பயன்படுத்தி பொருளாதார முன்னேற்றத்தை விரைவாக்க வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து வளரும் நாடுகளுக்கு கொண்டு வருதல் அவசியமாகும். தாராளமயமாக்கல், உலக மயமாக்கல் மூலம் தொழில்நுட்ப மாறுதல்களை எளிதாக கொண்டுவர புதிய பொருளாதாரக் கொள்கை வித்திட்டது.

உரிம ஒப்பந்தமூலமும், கூட்டு முயற்சி மூலமும் தொழில்நுட்ப மாற்றம் பேரளவில் நடைபெற்று வருகிறது. தொழில்நுட்ப மாற்றம் கீழ்க்கண்ட முறைகளில் நடைபெறுகிறது.

 1. தொழில்நுட்ப வல்லுனர்களை அமர்த்துதலும், பயிற்சி கொடுத்தலும்.
 2. எந்திரங்களையும் தளவாடங்களையும் அளிப்பதில் ஒப்பந்தங்களை ஏற்படுத்துதல்.
 3. உரிம ஒப்பந்தங்களை ஏற்படுத்துதல்.

வளரும் நாடுகளின் இயற்கை பொருளாதார சமூக நிலைகளுக்கு ஏற்ற அயல்நாட்டு தொழில்நுட்பமே தொழில்நுட்ப மாற்றத்திற்கு முக்கிய கூறுகளாக அமைகிறது.

வாணிகமும் பொருளாதார வளர்ச்சியும்

வாணிகத்தின் தோற்றம் பண்டமாற்று முறையிலிருந்து பணப் பொருளாதாரத்திற்கு மாறுதல் பொருளாதார வளர்ச்சிக்கு வாணிகம் ஒரு பெரும் திறவுகோள் ஆகும். வெவ்வேறு நிலைகளில் வர்த்தகம் (அ) வாணிகம் என்பது பண்டங்களின் பரிமாற்றமே ஆகும். தொன்மை வாய்ந்த வாணிப முறை பண்டமாற்று (Barter) முறையாகும். இதில் ஒரு வகைப் பண்டமானது மற்றொரு வகைப் பண்டங்களுடன் மாற்றிக்கொள்ளப்பட்டது. மனித இனத்தின் துவக்கக் காலக்கட்டத்தில், மனித தேவைகள் எளிமையானதாக இருந்தது. ஒவ்வொரு தனிநபரும் தனக்குத் தேவையானதைத் தானே உற்பத்தி செய்து கொண்டார். நாளடைவில் மனிதர்கள் வெவ்வேறு பணியில் வேலைக்கு அமர்ந்தார்கள். அதில் சிறப்புத் தேர்ச்சி அடைந்தவுடன் வாணிகம் நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில், பொருட்களை பொருட்களோடு நேரிடையாக மாற்றிக் கொள்ளும் முறையான பண்டமாற்றுமுறை நிலவி வந்தது. எடுத்துக்காட்டாக, பண்டமாற்று முறையில் உணவை அதிகமாகக் கொண்டிருந்த ஒரு நபர் தன்னிடம் உடை இல்லாமையால், தனது ஒரு பகுதி உணவை அதிகமாக உடை உள்ளவரிடம் மாற்றிக் கொள்கிறார். இந்த பண்டமாற்று முறையில் பல இடர்பாடுகளும், பல தடைகளும் காணப்பட்டன.

இம்முறையில் உள்ள இடர்பாடுகளில் குறிப்பிடத்தக்கது இருமுகத்தேவை பொருத்த மின்மையாகும். (double coincidence of want) எடுத்துக்காட்டாக, ஒருவனிடம் பசுமாடு ஒன்று இருக்கிறது. அவன் அதை அரிசியுடன் மாற்றிக் கொள்ள விரும்புகிறான். அரிசியை உடைய மற்றொருவனுக்கு, ஒரு குதிரைதான் தேவைப்படுகிறதே அன்றி ஒரு பசுமாடு அல்ல. இப்படிப்பட்ட நிலையில் பரிமாற்றம் ஏற்பட இயலாது. ஏனெனில் இருமுகத் தேவை பொருத்தமின்மை அங்கே நிலவுகிறது. இந்த எளிய பண்டமாற்று முறையானது, பரிமாற்ற முறையானது எண்ணிக்கையில் குறைந்ததாகவும், எளிமையானதாகவும் இருந்தால் நல்ல முறையில் செயல்பட்டிருக்கும் பரிமாற்ற அமைப்பு வளர, வளர தொழில்மயமாக்குதலினாலும், வீட்டு உற்பத்தி முறை தொழிற்சாலை அமைப்பிற்கு வழி வகுத்தது. இச்சந்தர்பத்தில் இருமுகத் தேவை பொருத்தமின்மை, பொருட்களின் பரிமாற்றத்தில் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது.

இத்துடன் வேறு சில குறைபாடுகளும், பண்டமாற்று முறையில் காணப்பட்டதால், வாணிபம் பாதிக்கப்பட்டது. இவ் இடர்பாடுகள் சேமிப்பின் மதிப்பளவு, மதிப்பின் அளவுகோல் மற்றும் நிலை மதிப்பு பற்றியதே. எனவே இப்பண்டமாற்று முறையை கைவிட்டு விட்டு ஒரு புதிய இடைப்பட்ட பண்டத்தை கண்டுபிடித்து அதன் மூலம் எளிதான முறையில் பொருள் விற்றுவாங்க அவசியம் ஏற்பட்டது. இவ் இடைப்பட்ட பண்டம் எல்லோரும் அறிந்த ஒன்றாகவும், எளிதாக பங்களிக்க கூடியதாகவும், பொதுவாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். ஏனெனில், அது பரிமாற்ற கருவியாக செயல்பட வேண்டும். இதுவே பணம் என அழைக்கப்பட்டது.

மனித கண்டுபிடிப்புகளில் அடிப்படையானது பணமாகும். மனிதனின் மொத்த சமுதாய வாழ்க்கையில் பணமே இன்றியமையாததாகும். ஆகவே பணம், பண்டங்களின் பரிவர்தனைக்கு, இடையீட்டு கருவியாகவும் பொது மதிப்பளவையாகவும், சேமிக்கும் கருவியாகவும், பிற்கால செலுத்துகைகளுக்கான நிலை மதிப்பாகவும் செயல்படுகிறது. இவ்வாறு பண்டமாற்று முறை பணப் பொருளாதாரத்திற்கு வழிவிட்டது.

பணம் அறிமுகமானதிலிருந்து பொருளுக்கு, பொருள் நேரடிப் பரிமாற்றமுறை கைவிடப்பட்டது. புதிய முறை கொண்டுவரப்பட்டது. இப்புதிய முறையில் ஒருவரிடமுள்ள ஒரு பொருளை பணத்திற்கு விற்று அப்பணத்தைக் கொண்டு தன் விருப்பத்திற்கு ஏற்ப பிரிதொருப் பொருளை வாங்கிக் கொள்ள முடியும். ஒவ்வொரு பொருளின் மதிப்பையும் வேறொருப் பொருளைக் கொண்டு மதிப்பீடு செய்யும்போது ஏற்படும் பிரச்சினைகைவிடப்பட்டு, அப்பொருளின் மதிப்பை பணம் என்ற ஒரேப் பொருளின் வாயிலாக வெளியிடுவது எளிதானதாகும். மேலும் இருமுகத்தேவை பொருத்தமின்மை என்ற பிரச்சனையும் தீர்க்கப்படுகிறது. தனது பொருளுக்கான ஒரு நுகர்வோனை மட்டும் கண்டறிந்தால் போதுமானதாகும். அந்நுகர்வோன், விற்பனையாளனுக்கு தேவையான பொருளை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

பணத்தை எளிதாக சேமித்து வைக்கலாம். தனது வருமானத்தில் ஒரு பங்கை எதிர்கால நுகர்விற்காக எடுத்து வைக்கலாம். இவ்வாறாக பணம் பண்டமாற்று முறையில் உள்ள அனைத்து இடர்பாடுகளையும் முழுமையாக நீக்குகின்றது. காகித பணம் அறிமுகமாவதற்கு முன் எப்பொருள் அனைவராலும் பொதுவான தேவையாக அமைகின்றதோ! அப்பொருளே பொதுவான அனுமதியுடன் பரிமாற்றுக் கருவியாக தெரிந்தெடுக்கப்பட்டது.

(எ.கா.) கரையோரப் பகுதியில் வாழ்ந்த மக்கள் சிப்பிக் கூடுகளையும், குளிர் நாடுகளில் வாழ்ந்த மக்கள் மிருகத் தோலையும், உரோமத்தையும் வெப்ப நாடுகளில் யானை தந்தம், பறவையின் இறகு மற்றும் புலிநகம் போன்றவை பணமாக பயன்படுத்தப்பட்டது. நாகரிகமும், பொருளாதார வளர்ச்சியும் முன்னேற்றம் அடையும்போது பொன், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்கள் பணமாக பயன்படுத்தினர். இவ் உலோகப் பணம் எடுத்துச் செய்வதற்கு பல சிரமம் நிறைந்ததாகவும், ஆபத்தானதாகவும் இருந்தது. 15 மற்றும் 16ம் நூற்றாண்டுகளில், ஐரோப்பிய வணிகர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட உலோக பணத்திற்கு நிகரான 'ரசீதுகளை எடுத்து செல்வது வழக்கத்தில் இருந்தது.

இவ்வாறாக உலோக பணத்திற்கு பதிலாக காகிதப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு, அந்தந்த நாட்டின் மைய வங்கியானது பணத்தை அச்சடிப்பதில் முற்றுரிமை பெற்றது. தற்போது “சட்டப் பூர்வ பணம்” (Legal Tender Money) என்பது மைய வங்கியால் வெளியிடப்படும் காகிதப் பணத்தையே குறிக்கும். இவ்வாறாக வங்கியியல் வாணிப வளர்ச்சியை உள்நாட்டிலும், பிறநாடுகளோடும் பணவியல் கருவிகளாகிய மாற்றுவீதம் போன்றவற்றை பயன்படுத்தி வாணிபத்தை வளரச் செய்கிறது. வர்த்தக துறையில் இன்றைய நாட்களில் காணப்படுகிறதான பலவித வாணிப பெருக்கமானது, பணம் இன்றி நடைபெறுவது சாத்தியமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

அயல்நாட்டு வாணிபத்தின் அவசியம்

பொது மக்களுக்கு அறிமுகமான வாணிப வகை சில்லரை வியாபாரமாகும். இங்கு, கடைக்காரன், தனிநபர்களுக்கு பணத்திற்காக பொருட்களை விற்பனை செய்வான். இந்த வியாபாரம் பெருமளவில் நடத்தப்பட்டால் அது மொத்த வியாபாரம் அல்லது வாணிபம் எனப்படும். இதில், தொழிற்சாலைகள் அல்லது உற்பத்தியாளர்கள் மொத்த வியாபாரிகளுக்கு பொருட்களை விற்று, அவர்கள் அப்பொருட்களை சில்லரை வியாபாரிகளுக்கு அல்லது கடைக்காரர்களுக்கு சிறிய அளவுகளில் விற்பனை செய்வார்கள். இவ்வாறாக, பண்டங்களும் பணிகளும் ஒரு நாட்டிற்குள் வெவ்வேறு வட்டாரங்களிடையே பரிவர்த்தனை செய்யப்படுவதை உள்நாட்டு வாணிபம் (Internal trade) என்று குறிக்கப்படும். பண்டங்களும் பணிகளும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளோடு பரிவர்த்தனை செய்யப்பட்டு வாணிபத் தொடர்பு நிலவினால் அதனை அயல்நாட்டு வாணிபம் என்று குறிப்பிடலாம்.

எந்த நாடும், முழுமையாக தன்னிறைவு அடைந்ததாக இருக்க இயலாது. எனவே ஒரு நாட்டின் தேவையை சந்திக்க அயல்நாட்டு வாணிபம் மிக மிக அவசியம். எந்த ஒருப் பொருள் உற்பத்தி செய்ய இயலாமை, உற்பத்தி செய்தாலும், உற்பத்தி செலவு அதிகரிக்கும் நிலையில் அந்நாட்டுமக்கள் அவ்வகை பொருள்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கி இன்பம் அடைய அயல்நாட்டு வாணிபம் உதவுகிறது. பூமி இயற்கையிலேயே, உற்பத்தி வளங்களை சமனற்ற நிலையில் பெற்றுள்ளது. நாடுகள், சீதோஷன நிலையிலும் கிடைக்கின்ற சாகுபடி செய்யும் நிலங்களும், காடுகள், சுரங்கங்கள், தாதுப்பொருள்கள், உழைப்பு, மூலதனம், தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோரின் திறமைகள் போன்றவற்றினால் ஒன்றுக்கொன்று வேறுபட்டுள்ளது. இவ்வாறு பலவகையான வேற்றுமைகளினால் எந்த நாடும் அனைத்து பொருள்களையும் குறைந்த செலவில் தானே உற்பத்தி செய்துக் கொள்ள திறமை பெற்றதாக இல்லை .

தனிநபர்களுக்குள் வேலைவகுப்பு முறை காணப்படுவது போல, உலக நாடுகளுக்கிடையிலும் இம்முறையே பின்பற்றப்படுகின்றது. ஒவ்வொரு நாடும் எந்தெந்த பொருள்களை மிக குறைந்த உற்பத்தி செலவில், உற்பத்தி செய்ய சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளதோ அப்பொருளையே, அந்நாடு உற்பத்தி செய்யும். இவ்வித பொருள்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, உற்பத்தி செலவில் குறைபாடு உடைய தனக்கு தேவையான பொருள்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளும். இவ்வகையான உற்பத்தி செலவில் காணப்படுகிறதான வேறுபாடுகள், பல்வேறு நாடுகளிடையே விலை பேதத்தை உண்டு பண்ணுகின்றன.

ஒப்பீட்டு நன்மைக் கோட்பாடு (Theory of Comparative Advantage)

'ஒப்பீட்டு நன்மைக் கோட்பாடு தடையில்லா வாணிபத்தின் நன்மைகளை விளக்குகிறது. தடையில்லா வாணிபத்தில், இரு நாடுகளிடையே வர்த்தகம் நடைபெறும்போது ஒரு நாடு மிகக் குறைந்த உற்பத்திச் செலவில், உற்பத்தி செய்ய சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளதோ அப்பொருளையே அந்நாடு உற்பத்தி செய்யும். மற்றொரு நாடு தன் தேவைக்கு அதனைப் பயன்படுத்திக் கொள்ள இயலும் என 'டேவிட் ரிக்கார்டோ' (அரசியல் பொருளாதார கொள்கைகள் மற்றும் வரிவிதிப்பு 1817) கூறுகிறார். இங்கு, உற்பத்திச் செலவு என்பதைவிட, எவ்வளவு எளிதாக நாடுகள் பல பண்டங்களை உற்பத்திச் செய்ய இயலும் என்பதை 'விகித அளவில்' ஒப்பிடுதல் அவசியம். இவ்வாறு நாடுகள் தாங்கள் திறமை பெற்ற பண்டங்கள் உற்பத்தியில் சிறப்பு கவனம் செலுத்தும்போது, இப்பண்டங்களை ஏற்றுமதி செய்துவிட்டு பிறநாடுகளிலிருந்து உற்பத்திச் செலவு குறைவாக உள்ள பண்டங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என ஒப்பீட்டு நன்மைக் கோட்பாடு விளக்குகிறது.

ஒப்பீட்டு நன்மைக் கோட்பாட்டினை பின்வருமாறு விளக்கலாம். A மற்றும் B எனும் இரு நாடுகள் தங்கள் பற்றாகுரை வளங்களைக்கொண்டு உணவு மற்றும் 'உடை' ஆகிய இரு பண்டங்களை உற்பத்திச் செய்வதாகக் கொள்வோம். 'A' நாட்டின் 0.50 அலகுகள் துணி விலை -2' அலகுகள் உணவு விலைக்கு சமமாகும் எனக் கொள்வோம். 'B' நாட்டில் உணவின் வியைானது 1.67 அலகு துணிக்கு சமமாகும். மேலும் துணியின் விலையானது 0.60 அலகு உணவாகும். இங்கு 'A' நாடானது ‘உணவு உற்பத்தியில் ஒப்பீட்டு நம்மையும் 'B' நாடானது துணி உற்பத்தியில் ஒப்பீட்டு நன்மையையும் பெற்றுள்ளதைக் காணலாம். எனவே, வர்த்தக உறவு முறையில் 'A' நாடு, உணவு உற்பத்திக்கு தனது வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் 'B' நாடு துணி உற்பத்திக்கு தனது வளங்கப் பயன்படுத்துவதன் மூலமும் உணவு மற்றும் 'துணி' விலைகள் மிகக் குறைந்த அளவில் இருப்பதைக் கண்கூடாகக் காணமுடியும்.

எனவே, இவ் ஒப்பீட்டு நன்மைக் கோட்பாடு, தடையில்லாவாணிபம் அனைத்து நாடுகளுக்கும் நலன் பயக்கும் எனக்கூறுகிறது.

பொருளாதார வளர்ச்சியில் அயல்நாட்டு வாணிபத்தின் பங்கு

கடந்த காலங்களில் அயல்நாட்டு வாணிபம், “வளர்ச்சியின் இயந்திரம்” ஆக செயல்பட்டது. இன்றைய காலங்களில் வெளிப்புற வளர்ச்சியையே அடிப்படையாக கொண்ட யுக்தியை பின்பற்றும் ஆசியாவின் புதிய தொழில்மயமாக்கும் பொருளாதார நாடுகள் பின்பற்றியதால் குறைந்த வளங்களுடனும் வளர்ச்சி குன்றியும் ஏழை நாடுகளாக உள்ள அந்நாடுகள், தமது இடர்பாடுகளை மேற்கொள்ள அயல்நாட்டு வாணிபம் துணைபுரிகிறது. அயல்நாட்டு வாணிபம் பொருளாதார வளர்ச்சிக்கு கீழ்க் காணுமாறு பல வழிகளில் துணை புரிகிறது.

 1. வளர்ச்சிக்கு அடிக்கோலும், மூலதன பண்டங்களின் இறக்குமதியை பெறுவதற்குரிய வழிமுறைகளைக் கண்டறிகிறது.
 2. தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு உதவுவதுடன், நாடுகளுக்கிடையே பரவலாக்கப்படவும்
 3. உற்பத்திக் காரணிகளின், உற்பத்தி திறன் அதிகரிக்க அனுமதிக்கிறது.
 4. இயக்க மாற்றத்தை (Dynamic Changes) ஏற்படுத்தும் அழுத்தத்தை உருவாக்குவதன் வாயிலாக இறக்குமதியிலிருந்து ஏற்படும் போட்டி அழுத்தம்,
 5. ஏற்றுமதி சந்தைக்காக ஏற்படும் போட்டி அழுத்தம் மேலும் i) உற்பத்தி வளங்களை மிக நன்றாக பங்கீடு செய்துக் கொள்ளுதல்.

நாட்டின் திறமையை முழுமையாக உபயோகிக்க, சிக்கன அளவுகளை (Economics of Scale)

அதிக அளவில் பயன்படுத்த, உள்நாட்டுத் தேவையினின்று உற்பத்தி முறை அமைப்பை வேறு வகையாக்க புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ள அவற்றை பெருமளவில் அனைவரும் அறியச் செய்ய ஏற்றுமதிகள் அனுமதிக்கின்றன. இதன் வாயிலாக உள்நாட்டு தொழிலில் விலை ஏற்றத்தினை ஏற்படுத்தாமல், இலாபநிலையை அதிகரிக்க உதவுகிறது.

அயல் நாட்டு வாணிபம் உழைப்பாளரின் நலனை நான்கு வழிகளில் உயர்த்துகிறது.

 1. ஏற்றுமதியின் அதிகரிப்பால், உழைப்பாளர்களின் கூலி உயர்கிறது
 2. மலிவான இறக்குமதியால், உழைப்பாளிகள் நுகர்வோராகவும் இருப்பதால் வாணிபம் அவர்களுக்கு உடனடி இலாபத்தை தருகிறது.
 3. உழைப்பாளிகள், உற்பத்தி செய்யும் பண்டங்களின் மதிப்பு அதிகரிப்பால், அதிக உழைப்பாளர்கள் கூடுதலான உற்பத்தி திறனை பெற இயலுகிறது.
 4. வாணிபத்தின் மூலமாக தொழில் நிறைந்த நாடுகளில் இருந்து தொழில்நுட்பமானது குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு பரிமாற்றப்படுகிறது. இத் தொழில்நுட்ப மாற்றம் திறமையான தொழிலாளிகளுக்கு பேருதவியாக உள்ளது. அநேக வளர்ந்து வரும் நாடுகளில் வெளிப்படையான வாணிபம் ஏழ்மைநிலையைக் குறைக்கிறது.
 5. 21-ம் நூற்றாண்டில் வளர்ந்துவரும் நாடுகள் பொருளாதார வளர்ச்சியடைய, அயல்நாட்டு வாணிபம் கீழ்கண்டவாறு சாதகமான நிலைமைகளை ஏற்படுத்துகிறது. அவைகள் பின்வருமாறு
 6. உலகமயமாதல் மூலம் பெரும்வாரியான பண்டங்களும், பணிகளும் நாடுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுகிறது.
 7. உற்பத்தி நடவடிக்கைகள் தொழில்சார்ந்த நாடுகளிலிருந்து வளரும் நாடுகளுக்கு தொடர்ச்சியான மறுபகிர்வு செய்வதனால் பண்டங்களின் வர்த்தகத்திற்கு மட்டுமின்றி, வர்த்தகம் செய்யகூடும் பணிகளுக்கும் வாய்ப்பளிக்கிறது.
 8. வாணிபம், உலக மயமாதலின் மற்றொரு அடிப்படைக் கூறாகிய அதாவது பன்னாட்டு உற்பத்தி வலையமைப்புடன் பின்னிப் பிணைந்துள்ளது. வாணிப வளர்ச்சியானது நீண்டகாலம் நிலைக்கக்கூடிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஊன்றுக்கோலாய் இருக்கிறது.
 9. உலக வர்த்தக நிறுவனம் (WTO) ஆனது சுங்கவரி, வாணிபம் குறித்த பொது உடன்பாடு (GATT) ஆகியவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட்டு சாதகமான வர்த்தக சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் பலதரப்பட்ட பண்டங்களையும், பணிகளையும் பரிவர்தனை செய்துக் கொள்ள ஊன்றுக்கோலாய் உள்ளது.
 10. சமீப காலங்களில் வளர்ந்து வரும் நாடுகளுக்கான உலக வர்தகத்தில் பங்கேற்காமல் இருக்க விதிக்கப்பட்ட தடைகள் தளர்த்தப்பட்டன. குறைவான தடைகள் வளர்ந்துவரும் நாடுகளில் ஒரு கிளர்ச்சியூட்டும் மாற்றங்களை ஏற்படுத்தியது. அவைகள் ஏற்றுமதி பண்டங்களை சார்ந்திருப்பதை விடுத்து உற்பத்தி மற்றும் பணிகள் மீது அதிகமாக சார்ந்திருக்க செய்தது.
 11. இத்துடன், வளர்ந்துவரும் நாடுகளுக்கு ஏற்றுமதிச் செய்தல் அதிக முக்கியத்துவம் பெற்றது.

பன்னாட்டு நிதி நிறுவனம் (International Monetary Fund)

பன்னாட்டு நிதி நிறுவனத்தின் தோற்றம் உலக பொருளாதார ஒற்றுமை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் எனலாம். இந்நிதி நிறுவனத்தை தோற்றுவிக்க பிரிட்டன் உட்ஸ் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டு, 1947 மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.

பன்னாட்டு நிதி நிறுவனத்தின் ஒப்பந்த பிரிவின் நோக்கங்களாவன

 1. உலக நாடுகளிடையே நிதி தொடர்பான ஒற்றுமையை மேம்படுத்துதல்.
 2. அயல்நாட்டு நாணய மாற்று விகிதத்தை (Foreign Exchange rate) நிலைப்படுத்துதல்
 3. நாணய மாற்று கட்டுப்பாடுகளை நீக்குதல்.

1996-97ல் ஏற்றுமதியின் மதிப்பு குறையத் தொடங்கியது. 1999-2000ல் ஏற்றுமதியின் மதிப்பு விரைவாக உயரத் தொடங்கியது. 2000-01ல் ஏற்றுமதி 21% வளர்ச்சியடைந்தது. ஆனால் உலக உற்பத்தி குறைவு, உலகத் தேவைக்குறைவும் ஏற்றுமதியின் வளர்ச்சி விகிதத்தை குறைத்தது. உலக பண்டங்களின் விலை உயர்வும், உள்நாட்டு உற்பத்தித் துறையின் மீட்சியும், பணமதிப்புக் குறைப்பும், பிற ஏற்றுமதியை ஊக்குவிக்கும் முறைகளும், ஏற்றுமதியின் அளவானது சுருக்கமாக கூறினால் இந்தியாவின் ஏற்றுமதி கடந்த 35 வருடங்களில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது. நாட்டு வருமானத்தில் ஏற்றுமதியின் பங்கு பாராட்டப்படத்தக்க அளவில் உயர்ந்து காணப்பட்டது. ஆனால் உலக வர்த்தகத்தில் இதன் பங்கு குறைவாகக் காணப்பட்டது.

வாணிபத்தின் பகுதிகள் மற்றும் வாணிபத்தை நெறிப்படுத்துதல்

பண்டங்கள், பணிகள் ஏற்றுமதி, இறக்குமதி பற்றியது வாணிப பகுதிகள் எனப்படும் அல்லது ஒரு நாட்டின் பண்டங்களின் ஏற்றுமதி, இறக்குமதியைப் பற்றியதாகும். ஆகவே இது நாட்டின் அமைப்பு நாட்டு முன்னேற்றத்தின் அளவு பற்றியது. வளரும் நாடுகள் கச்சாப் பொருட்கள், வேளாண்மைப் பொருட்கள், இடைநிலைப் பண்டங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கின்றன. வளர்ச்சியடைந்த நாடுகள் முடிவடைந்த பண்டங்கள், இயந்திரங்கள், தளவாடங்களையும், தொழில் நுணுக்கங்களையும் ஏற்றுமதி செய்கின்றன. 'வாணிபத்தை நெறிப்படுத்துதல்' என்பது யாரிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. யாருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதைப் பற்றி பயிலுவதாகும்.

இந்தியாவின் இறக்குமதி

இந்தியாவில் இறக்குமதி மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அவையாவன.

 1. மூலதனப் பண்டங்கள்,
 2. கச்சாப் பொருட்கள்
 3. நுகர்வுப் பண்டங்கள்

மூலதனப் பண்டங்களின் இறக்குமதி

உலோகங்கள், இயந்திரங்களும் தளவாடங்களும், இதர சாதனங்கள், போக்குவரத்து சாதனங்கள். மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் முதலியன மூலதனப் பண்டங்களாகும். இப்பண்டங்கள் தொழிற்துறை வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும். 1960-61ல் ரூ. 356 கோடியாக இருந்த இறக்குமதிப் பண்டங்களின் அளவு 1997-98ல் ரூ. 26,532 கோடியாக அதிகரித்துள்ளது.

கச்சாப் பொருட்கள் மற்றும் இடைநிலைப் பண்டங்களின் இறக்குமதி

பருத்தி, சணல், உரம், இரசாயனப் பொருட்கள், கச்சா எண்ணெய் முதலியன இதில் அடங்கும் நாட்டின் பொருளாதார முன்னேற்ற செயல்பாடுகளுக்கு அதிக எண்ணிக்கையிலான கச்சாப் பொருட்கள் மற்றும் இடைநிலைப் பண்டங்களை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது.

இப்பண்டங்களின் இறக்குமதி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 1960-61ல் இறக்குமதிப் பண்டங்களின் அளவு ரூ. 69 கோடியிலிருந்து 1997-98ல் ரூ. 30,538க்கு உயர்ந்துள்ளது. மொத்த இறக்குமதியில் பெட்ரோலியப் பண்டங்களின் அளவு மட்டும் 23% ஆக உள்ளது. உரங்கள் வேளாண்மைத் தொழிலுக்கு முக்கியமான உள்ளீடு ஆகும். இரசாயனப் பொருட்கள் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய உள்ளீடு ஆகும். இந்தியாவில் இப்பண்டங்களின் இறக்குமதியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 1960-61ல் இப்பண்டங்களின் இறக்குமதி ரூ. 88 கோடியாக இருந்தது. 1997-98ல் ரூ. 3755 கோடியாக அதிகரித்துள்ளது.

நுகர்வுப் பண்டங்கள் இறக்குமதி

உணவுப் பொருட்கள், மின் சாதனங்கள், மருந்து வகைகள், காகிதம் ஆகியவற்றின் இறக்குமதியும் இதில் அடங்கும். 3வது ஐந்தாண்டு திட்டம் வரை இந்தியா உணவுப் பண்டங்கள் உற்பத்தியில் கடுமையான பற்றாக்குறையை எதிர்நோக்கியது. இதன் விளைவாக இந்தியா, அதிக அளவில் உணவுப் பண்டங்களை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. 1960-61ல் உணவுப் பண்டங்களின் இறக்குமதி 3748 ஆயிரம் டன் (ரூ. 181 கோடி) ஆகும். 1997-98ல் இது 1399 ஆயிரம் டன்னாக அதிகரித்தது. தற்போது உணவுப் பொருள் உற்பத்தியில் இந்தியா தற்சார்பு' அடைந்துள்ளது.

இந்திய இறக்குமதியின் வழி முறைகள்

திட்ட காலத்தில், இந்தியாவின் இறக்குமதியில் பலவகையான மாற்றங்கள் ஏற்பட்டன. அதில் சில முக்கிய கருத்துக்கள் பின்வருமாறு :

பொருளாதார திட்டமிடுதலின் துவக்க காலத்தில், தேர்ந்தெடுத்த சில நாடுகளிலிருந்து மட்டுமே நாம் இறக்குமதி செய்தோம். ஆனால் தற்போது இந்நிலை மாறியுள்ளது. உலகின் பல நாடுகளிலிருந்தும் பல்வேறுபட்ட பண்டங்கள் மற்றும் பணிகளை நாம் இறக்குமதி செய்கிறோம். இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களை வாங்குவதில் முக்கியமாக நாம் (OECD) பொருளாதார ஒற்றுமை மற்றும் முன்னேற்ற அமைப்பு நாடுகளையும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் சார்ந்துள்ளோம்.

உணவுப் பொருள்கள் மற்றும் பெட்ரோலியப் பண்டங்கள் அளிப்பில் நாம் (OPEC) எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அமைப்பு நாடுகளைச் சார்ந்துள்ளோம். OECD நாடுகள் இறக்குமதியின் பெரும் பகுதியை நமக்கு அளிக்கின்றன. 1997-98ல் மொத்த இறக்குமதியான ரூ. 1,51,553 கோடியில் ரூ. 75,593 கோடி இந்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இது மொத்த இறக்குமதியில் 49.9% ஆகும். அமெரிக்கா, பெல்ஜியம், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரிட்டன் முதலியன இறக்குமதிப் பண்டங்களை வழங்கும் முக்கிய நாடுகள் ஆகும்.

இந்தியாவின் ஏற்றுமதியின் தன்மை

இந்திய ஏற்றுமதியானது இரு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.

 1. பழமையான இனங்களின் ஏற்றுமதி.
 2. பழமை சாராத இனங்களின் ஏற்றுமதி. பழமையான இனங்களின் ஏற்றுமதி தேனீர், காப்பி, சணல், சணல் பொருட்கள், இரும்புத் தாது, வாசனைப் பொருட்கள், விலங்குகளின் தோல், பருத்தி, மீன், மீன் பண்டங்கள், கனிவளங்கள் முதலியன இவ்வினங்களில் அடங்கும்.

திட்ட துவக்க காலங்களில், மொத்த ஏற்றுமதியில், 80% இவ்வினங்களாகும். இவ்வினங்களின் பங்கு மெதுவாகக் குறைந்து வருகிறது. மாறாக, பழமை சாராத இனங்களின் பங்கு அதிகரித்துள்ளது. தற்போது பழமையான இனங்களின் பங்கு மொத்த ஏற்றுமதியில் 18.8% ஆகும்.

பழமை சாராத இனங்கள்

 • சர்க்கரை,
 • பொறியியல் பண்டங்கள்,
 • இரசாயனப் பண்டங்கள்,
 • இரும்பு, எஃகு,
 • மின்சாதனப் பொருட்கள்,
 • தோல் பண்டங்கள்,
 • கற்கள் மற்றும் ஆபரணங்கள்

இந்த இனங்களின் ஏற்றுமதியில் அடங்கும். சமீபகாலமாக ஏற்றுமதியின் தன்மையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. உலகிலுள்ள பல நாடுகளுக்கும், நாம் பழமை சாராத இனங்களின் பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் இவ்வினங்களின் பங்கு மெதுவாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சில வருடங்களாக கீழ்நோக்கிச் செல்லும் போக்கு காணப்படுகிறது.

இந்திய ஏற்றுமதியின் போக்கு

 • திட்ட காலத்தில், நாம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.
 • தற்போது நாம் வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட 180 நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்கிறோம். நமது ஏற்றுமதியின் பெரும் பங்கு கீழ்க்கண்ட நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

பொருளாதார ஒற்றுமை மற்றும் முன்னேற்ற அமைப்பு நாடுகள்

(பெல்ஜியம், பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து, வட அமெரிக்கா, கனடா, அமெரிக்கா, ஆஸ்டிராலியா மற்றும் ஜப்பான்) மொத்த ஏற்றுமதியில் 1990-91ல் 53.5%மாக இருந்தது 1999-2000ல் 55.7%மாக அதிகரித்துள்ளது. (OPEC) எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகள் (ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா) 1990-91ல் மொத்த ஏற்றுமதியில் 5.6%மாக இருந்த நமது ஏற்றுமதியின் பங்கு 1999-2000ல் 10% ஆக அதிகரித்துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகள்

(GDR) ஜெர்மனி, ருமேனியா, ரஷ்யா) 1990-91ல் 17.9% ஆக இருந்த நமது ஏற்றுமதியின் பங்கு 3.1%மாக 1999-2000ல் குறைந்துவிட்டது.

மற்ற குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள்

(ஆப்பிரிக்கா, ஆசியா, இலத்தீன், அமெரிக்கா) நமது ஏற்றுமதியின் பங்கு 16.8% ஆக 1990-91ல் இருந்து 1999-2000ல் 28.2% ஆக உயர்ந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகாலத்தில், ஏற்றுமதியின் பங்கு, அளவு, தன்மை முதலியவற்றில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இவற்றில் பல மாற்றங்கள் நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான மாற்றங்கள் ஆகும்.

அயல்நாட்டு வாணிபச் செலுத்து சமநிலை (Balance of Payments)

அயல்நாட்டு வாணிபச் செலுத்தும் நிலை என்பதன் பொருள் மற்றும் இலக்கணம்

அயல்நாட்டு வாணிப செலுத்து நிலை என்பது “ஒரு குறிப்பிட்ட ஆண்டு (1 ஆண்டு) ஒரு நாடு உலகின் இதர நாடுகளோடு கொண்டிருந்த அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் குறிப்பதாகும்” ஒரு நாட்டின் சர்வதேச பொருளாதார நிலையை விளக்குகிறது. ஒரு நாட்டின் சர்வதேச பொருளாதார வளர்ச்சி அந்நாட்டின் வாணிபச் செலுத்து சமநிலையின் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு நாடும் உலகின் பிற நாடுகளோடு தங்களின் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இவ்வாறான நடவடிக்கைகளால் ஒரு நாடு தான் செலுத்துகைகளைப் (Payments) பெறுவதோடு தானும் பிற நாடுகளுக்கு கொடுக்க வேண்டியுள்ளது. (Makes Payments) எனவே 'அயல்நாட்டு வாணிபச் செலுத்து சமநிலை என்பது இவ்வாறான வரவு மற்றும் செலவு அறிக்கைக் கணக்கின் தொகுப்பே ஆகும்.

ஒரு நாட்டின் அயல்நாட்டு வாணிபச் செலுத்துச் சமநிலை என்பது அந்நாடு உலகின் பிற நாடுகளோடு ஒரு குறிப்பிட்ட காலத்தில் கொண்டுள்ள அனைத்து வகையான பணவியல் நடவடிக்கைகளின் பதிவு” எனப் பொருளியல் அறிஞர் பென்ஹாம் (Benham) வரையறுத்துள்ளார். பொருளியல் அறிஞர் கின்டில் பர்கரின் கூற்றுப்படி அயல்நாட்டு வாணிபச் செலுத்துச் சமநிலை என்பது “ஒரு நாட்டில் குடியிருப்பவர் அனைவருக்கும் மற்றும் அயல்நாடுகளில் குடியிருப்பவருக்கும் இடையே உள்ள அனைத்து பொருளாதார நடவடிக்கைகளின் பதிவே” ஆகும் என்கிறார்.

அயல்நாட்டு வாணிபச் செலுத்து சமநிலையின் தொகுப்பு

“ஒரு நாட்டின் அனைத்து வகையான அயல்நாட்டு வரவு செலவுகளின் பதிவுகள் அனைத்தையும் காண்பிக்கும் அறிக்கை அல்லது கணக்கே” அயல்நாட்டு வாணிபச் செலுத்துச் சமநிலையாகும். இது புலனாகும் மற்றும் புலனாகப் பொருள்களின் பதிவு அனைத்தையும் குறிப்பதாகும். புலனாகும் பொருள்கள் என்பது பண்டங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியைக் குறிப்பதாகும். புலனாகாப் பொருள்கள் என்பது பணிகள் (Service) அயல்நாட்டுப் பரிவர்தனை (foreign transfer) மற்றும் அயல்நாட்டு நடவடிக்கைகள் (foreign transactions) இவையனைத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியைக் குறிப்பதாகும். அயல்நாட்டு வாணிபச் செலுத்துச் சமநிலையென்பது “நடப்புக் கணக்கில் உள்ள வாணிபச் செலுத்து சமநிலை மற்றும் முதலீட்டுக் கணக்கில் உள்ள வாணிபச் செலுத்து சமநிலை எனவும் வகைப்படுத்தப்படுகிறது. நடப்புக் கணக்கில் உள்ள வாணிபச் செலுத்து சமநிலை என்பது நாட்டின் பண்டங்கள், பணிகளின் மாற்றம் மற்றும் வாணிகத்தை குறிப்பதோடு புலனாகாத பொருள்களான நன்கொடை, ஒருபடித்தான மாற்றம் (Unilateral Transfer) போன்றவற்றைக் குறிப்பதாகும்.

மூலதனக் கணக்கில் உள்ள வாணிபச் செலுத்துச் சமநிலை என்பது நாட்டின் சர்வதேச அளவில் காணப்படும் நிதி நிலைமை, (Financial Position in the international scenario) அயல்நாட்டு பரிவர்த்தனையின் கூட்டுத்தொகை, அயல் நாட்டின் சொத்து மற்றும் கடன்கள் (liabilities). சர்வதேச நிதிலைமையில் நடப்பு நடவடிக்கைகளின் தாக்கம் போன்றவையாகும்'.

அயல்நாட்டு வாணிபச் சமநிலை (Balance of Trade)

அயல்நாட்டு வாணிபச் சமநிலை என்பது “புலனாகும் பொருள்களின் வாணிபத்தை மட்டுமே குறிப்பதாகும். புலனாகும் பொருள்கள் என்பது ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் அளவு, வாணிபம், தங்கம், வெள்ளி மற்றும் இதரப் பண்டங்கள் ஆகியவற்றைக் குறிப்பதாகும். புலனாகாத பொருள்கள் என்பது பணிகள் பரஸ்பரம் செலுத்தப்படுதல், அதாவது கடல் வாணிகம், காப்பீடு மற்றும் வங்கியியல் நிறுவனங்கள், வட்டி செலுத்துதல், பங்கு, (Dividend) சுற்றுலாப் பயணிகளின் செலவு மற்றும் இதை போன்ற பிறவற்றைக் குறிப்பதாகும். அயல்நாட்டு வாணிபச் சமநிலை என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டின் (1 ஆண்டு) ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் புலனாகும் பொருள்களின் மதிப்பளவே ஆகும்.

ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஏற்றுமதியும், இறக்குமதியும் மிகச் சரிசமமாக இருப்பின் அயல்நாட்டு வாணிபச் சமநிலை சரிசமமாகும். ஏற்றுமதியின் மதிப்பு இறக்குமதியின் மதிப்பைவிட அதிகமாக இருந்தால் அது “சாதக வாணிபச் சமநிலை” என்றழைக்கப்படுகிறது. இறக்குமதியின் மதிப்பு ஏற்றுமதியின் மதிப்பைவிட அதிகமாக இருந்தால் அது 'பாதக வாணிபச் சமநிலை' என்றழைக்கப்படுகிறது. கடன் கொடுத்துதவும் மற்றும் தன்னிச்சை மூலதனம் (Accommodating and Autonomous Capital)

நடப்புக் கணக்குச் சமநிலையில் ஒரு நாட்டிற்கு பற்றாக்குறை இருந்தால் அத்தகைய பற்றாக்குறையை போக்க மூலதனக் கணக்கில் சரிசெய்து வாணிபச் செலுத்து சமநிலையை சமநிலைக்கு (equilibrium) கொண்டுவரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கான சாத்தியக் கூறுகள் - தன்னிச்சை மூலதன நடவடிக்கையின் மூலமோ அல்லது கடன் கொடுத்துதவும் மூலதன ஓட்டத்தின் மூலமோ ஏற்படலாம். சுங்க வரி, வாணிபம் குறித்த பொது உடன்பாடு (GATT) (காட்) (General agreement on Tariff and Trade) சுங்கவரி, வாணிபம் குறித்த பொது உடன்பாடு (GATT) என்பது 'நாடுகள் தங்களுக்கிடையே குறிப்பிட்ட சட்டதிட்டங்களின்படி, நெறியுரைகள், நடத்தை விதிகளின்படி சர்வதேச சுங்கவரி மற்றும் வாணிபத்தை ஒழுங்குமுறைப்படுத்தி வணிக ஒப்பந்தத்தை மேற்கொள்ளுதல்' ஆகும். அனைத்துலக நாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டும் நாடுகளிடையே தடையில்லா வாணிகச் சூழலை உருவாக்கும் பொருட்டும் 1948-ஆம் ஆண்டு ஜெனிவாவில் சுங்கவரி வாணிபம் குறித்த பொது உடன்பாடு (GATT) ஏற்படுத்தப்பட்டது. தற்போது 'காட்டில் (GATT) 117 உறுப்பு நாடுகள் உள்ளன. இதன் முக்கிய நோக்கம் வாணிபத் தடையை நீக்கி சந்தையில் போட்டியிடும் திறனை உருவாக்குதல் ஆகும். 'சுங்க வரியில் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி சர்வதேச அளவில் ஒரு முக்கிய அங்கமாக காட் அமைப்பு செயல்படுகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட கால அளவிலும் இதன் உறுப்பு நாடுகள் பன்னாட்டு வாணிபம் பொருட்டு ஒன்று கூடி தங்களுக்குள் ஏற்றுமதி அளவு, சுங்க வரி மற்றும் இதர இடர்ப்பாடுகள் குறித்து உடன்பாடு செய்து கொள்ளும். பலதரப்பட்ட வாணிப விரிவாக்கத்திற்கு 'காட் அமைப்பு ஒரு நிரந்தர பன்னாட்டு வாணிப அமைப்பாக செயல்படுகிறது. காட் அமைப்பு WTO ஆக 1995ஆம் ஆண்டு உருவாகியது. 'காட்' (GATT) அமைப்பின் நோக்கங்கள்

பன்னாட்டு வாணிகத்தை விரிவுபடுத்துதல்

பங்கேற்பு நாடுகளின் முழு வேலை வாய்ப்பு உத்தரவாதத்துடன் உலக உற்பத்தியைப் பெருக்குதல். 1993ஆம் ஆண்டின் “உருகுவே” சுற்றுப்பேச்சுகள் இதற்கு ஆர்வமூட்டியது. வழக்கமான 'சுங்க வரி' மற்றும் 'சுங்க வரியற்ற நடவடிக்கை மட்டுமல்லாமல் வாணிகத் தொடர்புடைய அறிவுசார் பண்டங்களின் உரிமை (TRIPS), வாணிகம் சார்ந்த முதலீடு (TRIMS) மற்றும் பணிகளின் வாணிக உறவுகள் (Trade in Services) போன்ற விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

உறுப்பு நாடுகளுக்கிடையே வேளாண்மை, பருத்தி நெசவுத் தொழில் (Textiles), அறிவு சார் பண்டங்களின் உரிமைக்கள் (TRIPS) மற்றும் பொருள் குவிப்புத் தடுப்பு (anti dumping) போன்ற துறைகளின் (areas) கருத்து வேறுபாடு நிலவியது. 'உருகுவே' சுற்றுப் பேச்சுகள் பணிகள் மற்றும் வேளாண்மைத் துறையில் 'காட்'டின் எல்லையை விரிவாக்கியது. 'உருகுவே நடவடிக்கைகள் அனைத்து வர்த்தகத் தடைகளையும் போக்க விரும்பியது.

உலக வர்த்தக அமைப்பு (World Trade Organisation - WTO)

"காட் சமரசப் பேச்சுவார்த்தைகள் ஏழு சுற்றுகள் நடைபெற்று உருகுவே சுற்று என்றழைக்கப்படும் எட்டாவது சுற்று சமரசப் பேச்சு வார்த்தைகள் 1989ல் தொடங்கி 1995ஆம் ஆண்டு 'உலக வர்த்தக அமைப்பு (WTO) உருவாக்கப்பட்டதோடு, பேச்சு வார்த்தைகள் நிறைவடைந்தன.

'காட்' அமைப்பின் கோட்பாடுகளும் உடன்பாடுகளும் இவ்வமைப்பில் (WTO)ல் பின்பற்றப்பட்டன. 161 உறுப்பு நாடுகளைக் கொண்ட உலக வர்த்தக அமைப்பானது, உறுப்பு நாடுகளுக்குள் எழும் வர்த்தகப் பிரச்சினைகளை நிர்வகித்து தீர்த்து வைக்கும். 'காட்' அமைப்பைப்போல் அல்லாமல் WTO அமைப்பு உறுதியான, திறமையான நிர்வாக அமைப்பைக் கொண்டதாகும். WTO வின் 'தலைமை இயக்குனராக' ரோபர்டோ அஸ்விடோ (Roberto Azeveedo) என்பவர் 2013ஆம் ஆண்டு தொடங்கி 4 ஆண்டுகளுக்கு இப்பதவியை வகித்து வருகிறார்.

WTO-வின் முக்கிய நோக்கம் பேதமற்ற, சுதந்திரமான வர்த்தகமே ஆகும். அதாவது ஒரு சில வர்த்தகதடைகளே (சுங்கவரிகள் மற்றும் சுங்கவரியில்லாதவை) இங்கு காண இயலும். அதுமேலும், குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு, போட்டியுடன் கூடிய வர்த்தக அமைப்பு நிலையை உருவாக்கி, அவைகள் சரிசெய்யக்கூடிய அளவுக்கு நேரம் ஒதுக்கி நெகிழ்ச்சியுள்ள வர்த்தகத்துடன் கூடிய சலுகைகளைத் தந்துள்ளது.

WTO - வின் முக்கிய பணிகளாவன

 • WTO உறுப்பு நாடுகளின் வர்த்தக உடன்பாடுகளை நிர்வகித்தல்.
 • வர்த்தக சமரசப் பேச்சுக்கு ஒரு அமைப்பு.
 • வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்.
 • தேச அளவிலான வர்த்தகக் கொள்கைகளைக் கண்காணித்தல்.
 • வளர்ந்துவரும் நாடுகளுக்கு தொழில் நுட்ப உதவியும் பயிற்சியும் கொடுத்துதவுதல்.
 • இதர சர்வதேச அமைப்புகளோடு கூட்டுறவுடன் செயல்படுதல்.

WTO வின் அனைத்து உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் அளவிலான மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டப்பட்டு, இம்மாநாட்டில் பலவகையான வர்த்தக உடன்பாட்டு சிறப்பு செயல்திட்டம் (SAP) 1983ல் தொடங்கப்பெற்ற இத்திட்டம், மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலைக்கேற்ப உலக வங்கியின் உதவும் திறனை உயர்த்த உதவுகிறது. அடிப்படை மாற்றத்தை சரிசெய்யும் உதவி (SAF) 1985ல் தொடங்கப்பெற்ற இவ்வுதவியின் மூலம் செலுத்துநிலை பற்றாக்குறையைச் சமன் செய்ய உதவுவதோடு வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் உலக வங்கி உதவுகிறது.

கடன் வழங்குவதற்கான சில நிபந்தனைகள்

 1. திறமையான ஒழுங்கு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதோடு நாட்டின் கொள்கைகள்
 2. ஒளிவு மறைவு இன்றியும் அரசியல் பாதிப்பு இல்லாமலும் இருத்தல் வேண்டும்.
 3. இடர்ப்பாடுகளை தவிர்க்கக்கூடிய போதுமான மேலாண்மை.
 4. நீண்டகால நிதி ஆதாரம் வழிவகை செய்தல்
 5. மொத்த உள்நாட்டு உற்பத்தியை உயர்த்திட தனியார்த் துறையின் பங்கினைக் கூட்டுதல். வங்கிக் கடனுதவி (Bank Borrowing)

உலக வங்கி அதன் உறுப்பு நாடுகள் சந்தாத் தொகையில் மூலதனம் பெற்று செயல்படும் ஒரு கூட்டு நிறுவனம். சர்வதேச மூலதன அங்காடி அடிப்படை மற்றும் செலவாணிப்பண பண்டமாற்று உடன்பாடு (Currency Swap Agreement-CSA) அடிப்படையில், இவ்வங்கியானது நீண்டகால, மத்தியகால நிதியிலிருந்து கடன் வழங்குகிறது.

கடன் வழங்கும் செயல்பாடுகள் (Lending Activities)

பின்வரும் வழிகளில் இவ்வங்கி இதன் உறுப்பு நாடுகளுக்கு கடனுதவி வழங்குகிறது. தனது சொந்த நிதியிலிருந்து சந்தைப்படுத்துதல் (அல்லது) பங்கேற்பு மூலம் வழங்கும் கடன். அங்காடியிலிருந்து பெறப்பட்ட கடனிலிருந்து அல்லது வங்கி பெற்ற கடனிலிருந்து வழங்கப்படும் கடன்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ உறுப்பு நாடுகள் தனி முதலீட்டாளர்களிடமிருந்து பெறுகின்ற கடன்களுக்கு உறுதியளித்தல். இவ்வங்கியானது அதன் உறுப்பு நாடுகளுக்கு, அடிப்படை மாற்றத்தைச் சரிசெய்யும் உதவி (SAF) மற்றும் சிறப்பு செயல்திட்டம் (SAP) இவற்றின் மூலம் கடன் வசதி ஏற்படுத்தித் தருகிறது. இவ்வங்கி கல்வி, மக்கள் தொகை, உடல்நலம், சத்துணவு மற்றும் சுற்றுச்சூழல் போன்ற மனிதவள மேம்பாடு சார்ந்தவற்றின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

பன்னாட்டு நிதிக் கழகம் (International Finance Corporation)

உலக வங்கியுடன் இணைந்த நிறுவனமான சர்வதேச நிதிக்கழகம் 1956ஆம் ஆண்டு நிறுவப் பெற்றது. வளரும் நாடுகளிலுள்ள தனியார் நிறுவனங்களுக்கு உதவும் நோக்கத்துடன் அந்நிறுவனங்களுக்கு இடர்பாடு மூலதனத்தை (Risk Capital) அளித்து இக்கழகம் உதவி செய்கிறது. வளரும் நாடுகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும் செயல் திட்டங்களுக்கு சர்வதேச நிதிக்கழகம் கடன் மற்றும் சமச்சீர் நிதி மூலம் நிதி உதவி செய்கிறது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

2.96
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top