பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நாட்டு வருமானம்

நாட்டு வருமானம் (National Income) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

உலகத்தில் சில நாடுகள் செல்வந்த நாடுகளாகவும், சில ஏழை நாடுகளாகவும், பல நாடுகள் நடுத்தரமாகவும் உள்ளன. நாட்டின் செயல்பாடுகள் உற்பத்தியின் அளவோடு தொடர்புடையது அல்லது மொத்த பொருளாதார நடவடிக்கைகளோடு தொடர்புடையது. நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பை கணக்கிடுவதற்கு நாட்டு வருமானம் மற்றும் உற்பத்தியின் முறைகள் அளவு கோளாகப் பயன்படுத்தப்படுகிறது. நாட்டு வருமானத்தையும், உற்பத்தியையும் அளவீடு செய்ய மொத்த நாட்டு உற்பத்தி (GNP), மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), மொத்த நாட்டு வருமானம் (GNI), நிகர நாட்டு உற்பத்தி (NNP), நிகர நாட்டு வருமானம் (NNI) ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். மத்திய புள்ளியியல் அமைப்பு, இந்தியாவில், நாட்டு வருமானத்தை கணக்கிடுகிறது.

உங்களுடைய கல்வியின் முன்னேற்றம் மற்ற மாணவர்களோடு உங்களது மதிப்பெண்கள் ஒப்பிட்டு கணக்கிடப்படுகிறது. அதே போல நாட்டினுடைய பொருளியல் செயல்பாடுகள் நாட்டின் வருமானத்தை அளவுகோலாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. பல்வேறு காரணங்களுக்காக நாட்டு வருமானத்தைக் கணக்கிடுதல் மிக அவசியமாகும். நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி அறியவும், அரசுக்கு தேவையான பொருத்தமான முன்னேற்ற கொள்கைகளை உருவாக்கவும். பண்டங்களுக்கான எதிர்காலத் தேவையை நிறுவனங்கள் அறிந்து கொள்ளவும், உலக நாடுகளுடன் ஒப்பிடவும் பயன்படுகிறது.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை அறிந்து கொள்ள தலா வருமானம் அல்லது தனிநபர் வருமானம் ஒரு அளவுகோளாகப் பயன்படுகிறது. பொருளாதார முன்னேற்றம் சார்ந்த அறிஞர்கள் GNPயை மக்களின் நலத்தை அளவிடும் கருவியாக பயன்படுத்துவதில் பல குறைபாடுகள் உள்ளதாக கருதுகிறார்கள். அவர்கள் கூற்றுப்படி, மனித நலம் நாட்டு வருமானத்தை மட்டும் சார்ந்தது அல்ல. நாட்டு வருமானத்தை அளவிடுவதில் GNP, வறுமை, கல்வி, பொதுநலம், பாலின சமன்பாடு, மனித நலம் பற்றிய பல பிரச்சினைகள் ஆகியவற்றை தவிர்த்துவிட்டது. அவர்கள் நலத்தை மதிப்பீடு செய்ய வேறு பல கருவிகளான மனித வளர்ச்சிக் குறியீடுகளை பயன்படுத்துகின்றனர். செல்வந்த நாடுகள், நாட்டு வருமானத்தில் உயர்ந்தும், மனித வள மேம்பாட்டில் தாழ்ந்தும் காணப்படுகிறது. அதே போல ஏழை நாடுகள் மனித வள மேம்பாட்டில் உயர்ந்தும் நாட்டு வருமானத்தில் தாழ்ந்தும் காணப்படுகின்றார்கள். இந்தியாவில் (GDP) வேகமாக வளர்ச்சியடைந்தாலும் மனித வளர்ச்சி குறியீட்டைப் பொறுத்தவரை, மற்ற நாடுகளை விட குறைவாக காணப்படுகிறது.

நாட்டு வருமானத்தின் இலக்கணம்

நாட்டு வருமானம் என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும். இது உற்பத்தியிலிருந்து கிடைக்கும் மொத்த வருமானம் அல்லது உற்பத்திக்காக செய்யப்படும் மொத்த செலவைக் குறிக்கும். ஆல்பிரட் மார்ஷல் ஒரு நாட்டின் உழைப்பும் முதலும் அந்நாட்டின் வளங்களுடன் கூடி ஓராண்டு காலத்தில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் அனைத்து வகையான பணிகள் ஆகியவற்றின் மொத்த நிகர மதிப்பு. இது நாட்டின் நிகர ஆண்டு வருமானம் அல்லது நாட்டின் வருவாய் அல்லது நாட்டு வருமான ஈவு எனப்படுகிறது. இர்விங் பிஷ்ஷர்பண்டங்களிலிருந்தோ அல்லது சுற்றுப்புறச் சூழலிருந்தோ கடைசி நுகர்வோருக்கு கிடைக்கும் பணிகள் நாட்டு வருமான ஈவு அல்லது நாட்டு வருமானம் எனப்படும்.

இந்திய நாட்டு வருமான கணக்கீட்டுக் குழு

நாட்டு வருமானம் என்பது மறுமுறை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண மதிப்பாகும். மொத்த நாட்டு உற்பத்தி (GNP) என்பது ஒரு நாட்டில் மொத்தமாக உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் ஒரு தெளிவான கணக்கீட்டு அளவு எனலாம். இதனை நுகர்வு, மொத்த முதலீடு, அரசு வாங்கும் பண்டங்கள் மற்றும் பணிகளின் அளவு நிகர ஏற்றுமதி ஆகியவற்றின் டாலர் மதிப்பின் (பணம்) கூட்டுத் தொகை எனலாம்.

மேற்கண்ட இலக்கணங்களில் பல வேறுபாடுகள் காணப்படினும், அடிப்படையில் நாட்டு வருமானம் என்பது ஒட்டுமொத்த நாட்டின் வருமானமாகும் என்பது தெளிவாக உள்ளது.

அடிப்படைக் கருத்துக்கள் (Basic Concepts)

மொத்த நாட்டு உற்பத்தி (GNP)

மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் (ஈட்டிய வருமானம்) உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகள்) மதிப்பைக் குறிக்கும். வெளிநாட்டு முதலீடு மூலம் ஈட்டிய இலாபமும் இதில் அடங்கும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)

ஒரு ஆண்டில் நாட்டின் எல்லைக்குள் உள்ள உற்பத்திக் காரணிகளால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடு (பண்டங்கள் + பணிகள்)களின் மொத்த மதிப்பைக் குறிக்கும். (உற்பத்தி காரணிகள் அந்நாட்டு குடிமகனுக்கோ அல்லது அயல்நாட்டுகாரருக்கோ சொந்தமாக இருக்கலாம்)

மொத்த உள்நாட்டு உற்பத்தி = மொத்த நாட்டு உற்பத்தி - வெளிநாட்டிலிருந்து ஈட்டப்பட்ட நிகர வருமானம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி, உற்பத்திக் காரணிகள் யாருக்கு சொந்தம் என்பதைவிட எங்கிருந்து வருமானம் ஈட்டப்பட்டது என்பதைக் குறிக்கும்.

நிகர நாட்டு உற்பத்தி (NNP)

மொத்த நாட்டு உற்பத்தியிலிருந்து தேய்மானம் (Depreciation) போன்ற சிலவற்றை நீக்கிய பின் கிடைக்கும் பண மதிப்பு நிகர நாட்டு உற்பத்தியாகும். மொத்த நாட்டு உற்பத்தி என்பது, அந்நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் ஈட்டிய வருமானம் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பைக் குறிக்கும். ஒரு வருட காலத்தில் உற்பத்தி அமைப்பு (Plant) மற்றும் இயந்திரங்கள் (முதல்) பழுதுபட்டிருக்கும். இவ்வாறு குறைவுபட்ட மூலதன சொத்துக்களின் (Capital depreciation) மதிப்பை மூலதனத்தின் தேய்மானம் என்கிறோம். எனவே மொத்த நாட்டு உற்பத்தியிலிருந்து மூலதனத் தேய்மானத்தைக் கழிப்பதன் மூலம் நிகர நாட்டு உற்பத்தி கிடைக்கும்.

நிகர நாட்டு உற்பத்தி NNP = மொத்த நாட்டு உற்பத்தி - தேய்மானம் ஆகும். நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து தேய்மானம் போன்ற சிலவற்றை நீக்கிய பின் கிடைக்கும் பணமதிப்பு நிகர உள்நாட்டு உற்பத்தியாகும் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து தேய்மானத்தைக் கழித்து பின் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தியாகும்.

நிகர உள்நாட்டு உற்பத்தி = மொத்த உள்நாட்டு உற்பத்தி - தேய்மானம் தலா வருமானம் அல்லது தனி நபரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per head) தலா வருமானம் என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும். உண்மையான தலா வருமானம் உயர்ந்தால் மக்களின் பொதுவான வாழ்க்கைத் தரம் உயர்ந்ததாகக் கருதப்படும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலவற்றை சரிசெய்வதன் மூலம் இது பெறப்படுகிறது. தலா வருமானம் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியை மொத்த மக்கள் தொகையால் வகுக்க கிடைப்பதாகும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு நாட்டின் உற்பத்தித் திறனை குறிப்பதாகும். மொத்த நாட்டு உற்பத்தி மக்களின் வாழ்க்கை தரத்தைக் சுட்டி காட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் மொத்த நாட்டு உற்பத்திக்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாடு அந்நாட்டின் இயல்பைப் பொறுத்து அமையும். (உம்) ஒரு நாடு அயல்நாட்டில் வாழும் மக்களின் வருமானம் மற்றும் குறிப்பிடத்தக்க அளவு பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தியையும் பெற்றிருப்பின் (புறக்காரணிகளால் ஏற்படும் உற்பத்தி) அந்நாட்டின் மொத்த நாட்டு உற்பதி, மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக இருக்கும். இவ்வாறு இல்லையெனில், இரண்டுக்கும் உள்ள வேறுபாடு முக்கியத்துவம் பெறாது.

பல நாடுகள் வெளிநாட்டு நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் சென்னையில் உள்ள அமெரிக்க போர்டு மோட்டார் தொழிற்சாலையின் வருமானம், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு கணக்கிடப்படுமே அல்லாமல் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு அல்ல. ஆனால் அந்நிறுவனத்தின் லாபம், அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு, அமெரிக்காவின் மொத்த நாட்டு உற்பத்தியோடு கணக்கிடப்படும். அதே போல் அயல்நாட்டிலிருந்து ஈட்டப்படும் நிகர காரணி வருமானத்தை நம்முடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு சேர்த்து மொத்த நாட்டு உற்பத்தி கணக்கிடப்படுகிறது.

இக்காரணி உள்ளீடுகள் இந்தியாவிற்கு சொந்தமானவை. அதாவது வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வருமானம் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு சேர்த்து (GDP), மொத்த நாட்டு உற்பத்தி (GNP) கணக்கிடப்படுகிறது. அன்றாட விலை மற்றும் நிலையான விலையில் நாட்டு வருமானம்

நாட்டு வருமானத்தை அன்றாட விலையிலும் நிலையான விலையிலும் கணக்கிடலாம். அன்றாட விலையில் நாட்டு வருமானம் என்பது, வெளியீடு பண்டங்களின் மதிப்பை அன்றைய அங்காடி விலையில் கணக்கிடப்படுவதாகும். அன்றாட விலையானது உண்மை மதிப்பைவிட, வரி, பணவீக்கம் (அல்லது விலை உயர்வு) போன்றவற்றால் உயர்வாக இருக்க வாய்ப்புகள் உண்டு. ஆகவே அன்றாட விலையில் கணக்கிடப்படும் நாட்டு வருமானத்தில் பணவீக்கம், வரிகள் போன்றவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

எல்லா சமுதாயத்திலும் பணவீக்கம் ஒரு பொதுவான இயல்பாக காணப்படுவதால், அதன் தாக்கத்திலிருந்து உற்பத்தி மற்றும் வருமானத்தின் உயர்வை கழித்து நாட்டு வருமானத்தை கணக்கிடுதல் அவசியமாகிறது. எனவே நிலையான விலையில் நாட்டு வருமானத்தை கணக்கிடுதல் மூலம் சில தேவையான மாற்றங்களை செய்து பணவீக்கத்தின் தாக்கத்தை நீக்கலாம்.

நிலையான விலையில் நாட்டு வருமானம், வருமானத்தின் வாங்கும் சக்தியின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால் இது உண்மையான நாட்டு வருமானம் எனப்படுகிறது.

ஓர் ஆண்டு காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பை அடிப்படை ஆண்டில் நிலவிய விலையைக் கொண்டு கணக்கீடு செய்தால் கிடைக்கப் பெறும் மதிப்பு, நிலையான விலையில் கணக்கிடப்பட்ட நாட்டு வருமானம் எனப்படும். நிலையான விலை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படை ஆண்டில் நிலவும் விலையாகும்.

நாட்டு வருமானத்தை படிப்பதின் அவசியம்

 • நாட்டு வருமான கணக்கீடு சமுதாயம் உற்பத்தி, வாணிபம், நுகர்வு, கொள்கையை உருவாக்குதல் போன்ற பல காரணங்களுக்கு அவசியமாகிறது.
 • பொருளாதார நிலையை அளவிடவும், நாட்டின் பொருளாதார செயல்பாடுகளை கணக்கிடவும் நாட்டு வருமானம் பயன்படுகிறது.
 • பல நாடுகள், மற்றும் பல காலங்களில் பொருளாதார வளர்ச்சியின் வேகம் மற்றும் போக்கை அளவிட நாட்டு வருமானம் அவசியமாகிறது.
 • அளவு (Structure), பொருளாதார உற்பத்தி அமைப்பு முறைகளையும் துறை வாரியான பங்களிப்பு பற்றியும் அறிந்து கொள்ள நாட்டு வருமானம் பயன்படுகிறது.
 • பொருளாதார முன்னேற்றத்தின் எதிர்கால போக்கை அறிந்து கொள்ள பயன்படுகிறது.
 • வளர்ச்சிவிகிதத்தை அதிகரிக்க தகுந்த பொருளாதார திட்டங்களையும் கொள்கைகளையும் வகுக்க அரசுக்கு உதவுகிறது.
 • பல துறைகளில் முன் செயல்பாடுகளைப் பொறுத்து முன்னேற்ற இலக்குகளை நிர்ணயிக்க பயன்படுகிறது.
 • பண்டங்களின் எதிர்காலத் தேவையை முன்கூட்டியே அறிந்து கொள்ள நிறுவனங்களுக்கு உதவுகிறது.
 • மக்களின் வாழ்க்கைத் தரத்தை மற்ற நாடுகளோடு ஒப்பிட்டு அறிந்து கொள்ளபயன்படுகிறது.

வருமான ஓட்டம் (Flow of Income)

நாட்டு வருமான கணக்கீட்டை ஆராய்வதற்கு முன் வருமான ஓட்டத்தைப் பற்றி அறிவது மிக அவசியமான ஒன்றாகும். வருமான ஓட்டத்தை மிக எளிய முறையில், நிறுவனம் அல்லது உற்பத்தியாளர் மற்றும் இல்லங்கள் அல்லது நுகர்வோர் மூலம் விளக்கலாம். உற்பத்தி சாதனங்களை (நிலம், உழைப்பு, மூலதனம், தொழில் அமைப்பு) மக்கள் பெற்றிருக்கிறார்கள். பண்டங்களையும் பணிகளையும் உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்கள் உற்பத்தி காரணிகளை பயன்படுத்துகிறார்கள். அப்பண்டங்களும் பணிகளும் மக்களால் வாங்கப்படுகின்றன.

மக்கள் உற்பத்திக் காரணிகளை பெற்றிருக்கிறார்கள். அதை உற்பத்தியாளர்களுக்கு அளிக்கிறார்கள். இவ்வுற்பத்திக் காரணிகளைப் பயன்படுத்தி நிறுவனங்கள் பண்டங்களையும் மற்றும் பணிகளையும் உற்பத்தி செய்கின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களும் மற்றும் பணிகளும் நுகர்வோரால் (மக்கள்) வாங்கப்படுகின்றன. உற்பத்திக் காரணிகளின் பணிகளைப் பயன்படுத்தியதற்காக மக்கள் காரணி வருமானத்தை வாரம் (நிலம்), கூலி (உழைப்பு) மற்றும் வட்டி (முதல்) என்ற வடிவத்தில் பெறுகிறார்கள். இந்த வருமானம் மீண்டும் உற்பத்தியாளர்களுக்கு நுகர்வுச் செலவு மூலமாக போய்ச் சேருகிறது. இவ்வாறு வருமானம் உற்பத்தியாளரிடமிருந்து மக்களுக்கும், மக்களிடமிருந்து உற்பத்தியாளருக்கும் சென்று கொண்டே இருப்பதற்கு வருமான ஓட்டம் என்று பெயர். இவ்வருமான ஓட்டம், பண வருமான ஓட்டம் மற்றும் உண்மை வருமான ஓட்டம் என்ற இரு பகுதிகளைக் கொண்டது. உள் சூழல் ஒட்டம் உள்ளீடுகள் (காரணிகள்) மற்றும் வெளியீடுகளை (பண்டங்கள் மற்றும் பணிகள்) குறிப்பதால் உண்மை வருமான ஓட்டம் என்று அழைக்கப்படுகிறது.

மக்கள் காரணி வருமானத்தைப் பணமாகப் பெறுகிறார்கள். அவ்வருமானம் உற்பத்தியாளர்களுக்கு நுகர்வுச் செலவு மூலமாகச் செல்கிறது. இதை வெளி ஓட்டம் காட்டுகிறது. வருமானம் பெறுவதும், செலவு செய்வதும் பணத்தின் மூலமாக நடைபெறுவதை இவ் ஓட்டம் காட்டுகிறது. இதற்கு பணப் பொருளாதாரம் அல்லது பண ஒட்டம் எனப் பெயர். நாட்டு வருமானத்தை கணக்கிடுவதில் கவனிக்க வேண்டிய முக்கிய கருத்து, மக்கள் பெறும் வருமானம் (Y) அவர்கள் செய்யும் நுகர்வுச் செலவிற்கு (C) சமமாக இருக்கும் Y= C இந்த எளிய வருமான ஓட்டம், நாட்டு வருமானத்தின் கூறுகளான சேமிப்பு (S), முதலீடு (I), அரசின் செலவு (G), நிகர இறக்குமதி மீதான செலவு (X-M) ஆகியவற்றைச் சேர்க்காமல் விளக்கப்பட்டுள்ளது. இவைகளனைத்தையும் சேர்த்தால் Y= C என்பது Y= C + + G + (X-M) என்றாகும்.

நாட்டு வருமானம் என்பது, நுகர்வோர் (C) முதலீட்டாளர் (1) அரசு (G) மற்றும் அயல்நாட்டு வாணிபம் (X-M) ஏற்றுமதி - (X) - இறக்குமதி - (M) ஆகிய நான்கு கூறுகளின் வருமானங்கள் அல்லது செலவினங்களின் கூட்டுத் தொகையாகும். நாட்டு வருமான கணக்கீட்டு முறைகள்

நாட்டு வருமானத்தை மூன்று வழிகளில் கணக்கிடலாம். அவையாவன:

 1. உற்பத்தி முறை
 2. வருமான முறை
 3. செலவின முறை

GDP என்பது நாட்டின் மொத்த உற்பத்தியாகும். நாட்டின் மொத்த செலவு அல்லது மொத்த வருமானம் ஆகியவற்றை அளக்கும் அளவாகும்.

மக்களால் பெறப்படும் காரணி வருமானமானது பண்டங்களையும் பணிகளையும் வாங்குவதற்காக அவர்கள் மேற்கொள்ளும் செலவினங்களை தெளிவாகக் காட்டுகிறது. எனவே வருமானம் செலவிற்கு சமம். செலவானது மொத்த உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் மதிப்பிற்கு சமம் வருமானம் செலவு உற்பத்தி = E = 0 மேற்கூறிய வருமான ஓட்டமானது நாட்டு வருமானத்தின் மற்ற கூறுகளான முதலீடு (1), அரசு (G), அயல்நாட்டு வாணிபம் (X-M) ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் விரிவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விரிவாக்கப்பட்ட ஒட்டத்திலிருந்து மக்களின் சேமிப்பு, வரிகள், இறக்குமதி மீதான செலுத்துகை முதலியவற்றை கழிக்க வேண்டும். எனவே இவை வருமான ஓட்டத்தில் ஏற்படும் கசிவுகளாகும். அதேபோல முதலீட்டுச் செலவு, அரசு செலவு, வாணிபத்தின் மீதான நிகர செலவு ஆகியவற்றை வருமான ஓட்டத்தில் சேர்க்க வேண்டும். இவைகள் உட்செலுத்துகை என அழைக்கப்படுகின்றன. ஒரு வருடத்தில் எனினும் ஒரு ஆண்டின் அனைத்து கசிவுகளையும் (leakages) மற்றும் உட்செலுத்துகைகளையும் சேர்த்தால் கிடைக்கும் பொருளாதார மொத்த வருமானக் கூறுகளின் கூட்டுத் தொகையானது, மொத்த செலவு அல்லது மொத்த உற்பத்திக்குச் சமமாகும். ஆகவே இம்மூன்று முறைகளும் ஒரே மாதிரியான முடிவைத் தரும்.

உற்பத்தி முறை (Output or Product Method)

ஓராண்டு காலத்தில் அனைத்து தொழில் நிறுவனங்களும் உற்பத்தி செய்த வெளியீடுகளின் (பண்டங்கள் மற்றும் பணிகளின்) மொத்த மதிப்பின் கூட்டுத் தொகையே, மொத்த உள்நாட்டு உற்பத்தியாகும். இருமுறை கணக்கிடுதல் இம்முறையில் உள்ள மிகப்பெரிய சிக்கலாகும்.

பல நிறுவனங்களின் வெளியீடு பண்டம், சில நிறுவனங்களுக்கு உள்ளீடு பண்டமாகிறது. (உ.ம்.) டயர் தொழிற்சாலையின் வெளியீடு பண்டமாகிய டயர் இருசக்கர வாகன தொழிற்சாலைக்கு உள்ளீடு பண்டமாகும். இரு நிறுவனங்களின் மொத்த உற்பத்தியை கணக்கிடும் பொழுது, டயரின் மதிப்பு இருமுறை கணக்கிடப்படுகிறது. உற்பத்தியின் ஒவ்வொரு நிலையிலும் பண்டங்களின் கூட்டப்பட்ட மதிப்பை தொகுப்பதன் மூலமாக இச்சிக்கலைத் தவிர்க்கலாம். அல்லது இறுதிப்பண்டத்தின் (முழுமையடைந்த) மதிப்பை கூட்டுவதன் மூலமாக நாட்டு வருமானத்தைப் பெறலாம்.

வருமான முறை (Income Method)

உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உற்பத்தி காரணிகள் பெறும் வருமானத்தை கூட்டுவதன் மூலமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கணக்கிடப்படுகிறது.

 1. கூலி, மற்றும் சம்பளம்
 2. சுய தொழில் புரிவோரின் வருமானம்
 3. தொழில் துறைகளின் இலாபம் மற்றும் ஈவு (Profit & Dividend)
 4. வட்டி
 5. வாரம்
 6. அரசு நிறுவனங்களின் வருமானம்
 7. அயல்நாட்டு வாணிபத்தின் மூலம் ஈட்டிய நிகர வருமானம்

ஆகிய வருமானங்கள் கூட்டுத் தொகையே மொத்த நாட்டு வருமானமாகும். இவை அனைத்தும் காரணி வருமானம் எனப்படும். சில உற்பத்தித் துறைகளில் உள்ளீடுகளாகப் பயன்படுத்தப்பட்டு வெளியீடுகளை பெற்றமைக்காக கொடுக்கப்படும் வருமானம் காரணி வருமானமாகும்.

செலவின் முறை (Expenditure Method)

செலவின முறையில் நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து செலவுகளின் கூட்டுத் தொகையே மொத்த உள்நாட்டு உற்பத்தியாக (GDP) கணக்கிடப்படுகிறது.

நாட்டின் முக்கிய செலவுகளின் கூறுகள்

ஏற்றுமதி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகள் M - இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகள் NR - வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களின் நிகர வருமானம் மேற்கண்ட ஒட்டுமொத்த செலவுகளின் கூட்டுத் தொகையே நாட்டு வருமானம் ஆகும்.

மேற்கூறிய மூன்று முறைகளும் ஒரே மாதிரியான முடிவையே தருகிறது. நடைமுறையில், இயந்திர நிலையில் (Inventory Level) ஏற்படும் மாற்றம், கால நிலையில் ஏற்படும் மாற்றங்களினாலும் சிறு வேறுபாடுகள் தோன்றும்.

நாட்டு வருமானத்தின் சில கருத்துக்கள்

(Net National Product) NNP = GNP - தேய்மானம் (Net National Income) NNI = NNP – மறைமுகவரிகள் PI = NNI - நிறுத்தி வைக்கப்பட்ட நிகர வருமானம், நிறுவனங்களின் வரி, பொதுக்கடனுக்கு செலுத்தப்படும் வட்டி. PDI = PI- தனி வரி இங்கு GNP - என்பது மொத்த நாட்டு உற்பத்தி NNP = நிகர நாட்டு உற்பத்தி NNI = நிகர நாட்டு வருமானம் PI = தனி மனித வருமானம் PDI = செலவிடத் தகுதியான தனிமனித வருமானம் நாட்டு வருமானத்தை கணக்கிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் ஆகும்.

நாட்டு வருமானத்தை கணக்கிடுவதில் பல பிரச்சனைகள் உள்ளன. இருமுறை கணக்கிடுதல் ஒரு முக்கியமான பிரச்சனையாகும். நாட்டு வருமானத்தை கணக்கிட சீரிய முறைகள் பல இருப்பினும், இருமுறை கணக்கிடுதலை தவிர்த்தல் கடினமானது. இப்பிரச்சனைகளில் சிலவற்றை இங்கு காண்போம்.

கருப்பு பணம் (Black Money)

சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள், தொழில்கள், லஞ்ச லாவண்யம் போன்றவை அதிகமாகக் காணப்படும் நாடுகளில் கருப்புப் பணத்தின் புழக்கம் 'இணைப் பொருளாதாரம் என்று கூறும் அளவிற்கு விரிவடைந்துள்ளது. இக்கருப்புப்பண ஆதிக்கமானது, அதிகார பூர்வமான பொருளாதாரத்திற்கு இணையாக உள்ளது. கருப்புப்பணம் கணக்கில் வராததால், மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த இணைப் பொருளாதாரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இந்தியாவில் கருப்புப் பணமானது எல்லா நிலைகளிலும் ஊடுறுவி இருப்பதால் சமுதாயத்தை மட்டுமல்லாது மக்களின் அன்றாட வாழ்க்கை நிலையையும் பாதிக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கறுப்புப் பணமானது 1950க்கிடையே 3 சதவிகிதமாக இருந்தது. 199596ல் 40 சதவிகிதமாக வளர்ந்துவிட்டது.

கிராமப் பகுதிகளில் பெரும்பாலான பரிமாற்றங்கள் முறையற்று நடப்பதால் அப்பொருளாதாரம் பணம் சாரா பொருளாதாரம் (Non-monetized economy) என்று அழைக்கப்படுகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் காணப்படும் இத்தகைய பொருளாதாரம் உள்நாட்டு உற்பத்தியின் அளவை இதனுடைய உண்மை நிலையைவிட குறைவாகக் காட்டுகிறது.

வளரும் பணிகளின் துறை (Growing Service Sectors)

தற்காலத்தில் பணிகள் துறையானது, வேளாண்மை மற்றும் தொழில் துறையைவிட வேகமாக வளர்ந்து வருகிறது. பல புதிய பணிகளான வெளித்திறன் நடவடிக்கைகள் (Business Process outsourcing (BPO) வேகமாக வளர்ந்து வருகின்றது. சட்ட ஆலோசனை, மருத்துவப்பணி, நிதி உதவி, வணிக பணிகள் மற்றும் பணித்துறைகளின் கூடுதல் மதிப்பு முழுவதுமாக துல்லியமாக கணக்கிடப்படாததால் நாட்டு வருமானம் குறைத்து மதிப்பிடப்படுகிறது.

இல்லத்தரசிகளின் பணிகள்

வீட்டு வேலைகள், வீட்டை பராமரித்தல், சமூகப் பணிகளின் மதிப்பை நாட்டு வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. நாட்டு வருமான மதிப்பீட்டில் நம் நாட்டு பெண்கள் வீட்டில் செய்யும் மதிப்பு மிக்க பணிகளை மதிப்பற்ற பணிகளாக கருதப்படுகிறது.

சமூகப் பணிகள்

தானே முன் வந்து செய்பவர்களின் பணிகள் மற்றும் ஊதியமில்லாத சமூகப் பணிகளின் மதிப்பையும் புறக்கணித்துவிட்டது. பல்லாயிரக்கணக்கான ஏழைகள், ஆதரவற்றோர்கள், அனாதைகள், நோயாளிகள் ஆகியோர்களுக்கு அன்னை தெரசாவின் பணி, மதிப்புமிக்கது. ஆனால் அது மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டில் (GDP) சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

சுற்றுச்சூழல் மதிப்பு (Environmental Cost)

நாட்டு வருமான கணக்கீடு, சுற்றுச்சூழலை பாதிக்கும் தொழிற்சாலைகள் என்றும், சுற்றுச்சூழலை பாதிக்காத தொழில்கள் என்றும் வேறுபடுத்தவில்லை. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளின் செலவினம் (Cost) நாட்டு வருமானக் கணக்கீட்டில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்தியாவில் நாட்டு வருமானத்தின் புள்ளி விவரங்கள் (National Income Statistics in India)

நாட்டு விடுதலைக்குப் பிறகு, முறையான நாட்டு வருமான கணக்கீட்டு அமைப்பு 1960-களில் ஏற்படுத்தப்பட்டது. இந்திய, நாட்டு வருமான கணக்கீட்டு புள்ளியியல் (NAS) அமெரிக்காவின் நாட்டு வருமான கணக்கீட்டு அமைப்பை (1968) பின்பற்றியது. நாட்டு வருமான கணக்கீட்டு குழுவின் பரிந்துரையின்படி (1954) மத்திய புள்ளியியல் அமைப்பு, புள்ளி விவரங்களின் தரத்தை உயர்த்த தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டது. அடிப்படை ஆண்டை அண்மைகால வரிசைக்கு மாற்றியது அதன் முயற்சிகளில் ஒன்றாகும். மத்திய புள்ளியியல் அமைப்பு, 1970-71ற்கு அடிப்படை ஆண்டை மாற்றி நாட்டு வருமான கணக்கீட்டை மேற்கொண்டது.

மேலும், உயர்த்தப்பட்ட புள்ளி விவரங்கள் மற்றும் விரிவாக்கம் மூலம் - CSO அடிப்படை ஆண்டை 1980 - 80க்கும் மேலும் 1993 - 94 மாற்றியமைத்தது. தற்போது, ஆறு வருடத்திற்குள் அடிப்படை ஆண்டை 1999 - 2000க்கு மாற்றியமைத்தது.

நாட்டு வருமானத்தின் போக்கு நாட்டு வருமானம் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் அதன் செயல்பாடுகளையும் அளக்கும் ஒரு கருவியாகும். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை நாட்டு வருமானத்தின் அளவு, வளர்ச்சி, மற்ற துறைகளின் பங்களிப்பு மூலம் தெரிந்து கொள்ள முடியும். பட்டியல் 4.1ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் போக்கை 1950லிருந்து 2005 வரை காட்டப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் நிலையான விலையின் அடிப்படையில் நாட்டு வருமானம் 15% உயர்ந்துள்ளது. நாட்டு வருமானத்தின் வளர்ச்சி, விகிதம் 1950-80ல் 3.5 சதவிகிதத்திலிருந்து, 1980-2005ல் 5.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

தலாவருமானத்தின் போக்கு

நிலையான விலையின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட தலா வருமானம், 1950 to 2005 க்குள் 5 மடங்கு அதிகரித்துள்ளது. தலாவருமான வளர்ச்சி விகிதமானது அதே கால கட்டத்தில் 1.4 சதவிகிதத்திலிருந்து 3.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தலா வருமானம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை துல்லியமாக அளவிடும் கருவியல்ல. மக்களின் உண்மையான வருமானம் தலா வருமானத்தைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். வறுமை, வருமான ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் நடவடிக்கைகள் நாட்டின் உண்மையான வருமானப் பகிர்வை அறிந்து கொள்ள உதவுகிறது.

துறை வாரியான நாட்டு வருமானம்

நாட்டு வருமானம் பல துறைகளின் மூலம் பெறப்படுகிறது. பொதுவாக இவற்றை மூன்று முக்கியத் துறைகளாக, முதன்மைத் துறை (வேளாண்மை ) இரண்டாம் துறை (தொழில்) பணிகள் (அ) சார்புத்துறை என்று பிரிக்கலாம். பொருளாதார முன்னேற்றத்தின் தொடக்க காலத்தில் நாட்டு வருமானத்தில் முதன்மைத் துறையின் பங்களிப்பு அதிகம். பொருளாதாரம் முன்னேற்றம் அடைய ஆரம்பித்தவுடன் வேளாண்மையின் பங்கு குறைந்தது. தொழிற்சாலைகளின் பங்கு அதிகரிக்க ஆரம்பித்தது. பொருளாதாரம் அதிக அளவில் முன்னேற்றமடைந்த பிறகு, பணிகள் துறையின் பங்களிப்பு நாட்டு வருமானத்தில் உயர்ந்தது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.

Filed under:
3.0701754386
Ponrasu Aug 18, 2019 04:56 PM

Helpful

கணேசன் l Jun 20, 2019 11:56 AM

மிக அருமையான நுட்ப்பமான தகவல் நன்றி

லலிதா p Jul 01, 2018 12:39 PM

மிகவும் உதவிகரமாக உள்ளது. மிக்க நன்றி .

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top