பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிதி சேர்க்கை / பொருளாதாரம் / பொருளாதார வளர்ச்சியும் முன்னேற்றமும்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பொருளாதார வளர்ச்சியும் முன்னேற்றமும்

பொருளாதார வளர்ச்சியும் முன்னேற்றமும் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

பொருளாதாரச் சிந்தனைகள், பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றின் தன்மை, பொருள் பற்றியும், வளர்ந்து வரும் நாடுகளின் அடிப்படை இயல்புகள் பற்றியும், பொருளாதார முன்னேற்றத்தில் அரசின் பங்கு பற்றியும், ரோஸ்டோவின் (Rostow) பொருளாதார வளர்ச்சி நிலைகள் பற்றியும் காண்போம்.

பொருளாதாரச் சிந்தனைகளின் தோற்றம்

பொருளாதாரக் கருத்துகளின் தோற்றம், வளர்ச்சி, அவற்றிற்கிடையேயான தொடர்புகள் பற்றி பொருளாதாரச் சிந்தனைகளின் வரலாறு விவரிக்கிறது. பழங்காலத்தில் வாழ்ந்த ஹீப்ரூஸ், இந்தியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் இடைக்கால அறிஞர்களின் படைப்புகளில் பொருளியல் கருத்துகள் காணப்படுகின்றன.

"2500 ஆண்டுகளுக்கு முன்பு பொருளியல் அறிஞர்களால் விட்டுச் செல்லப்பட்ட பாரம்பரியமே பொருளாதாரச் சிந்தனையாகும். மனித அறிவின் அனைத்து நிலைகளையும் இதன் மூலம் எளிதாக அறிய முடியும்" என்று பேராசிரியர் பெல் (Prof. Bell) கூறுகின்றார். பழங்கால பொருளியல் சிந்தனைகளைப் படித்தால், பொருளியல் கோட்பாடுகள் மற்றும் நிறுவனங்களின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

ஹீப்ரூஸ் பொருளியல் சிந்தனைகள்

உலகிலேயே மிகப்பழமையான நாகரீகத்தை கொண்டவர்கள் ஹீப்ரூஸ். இவர்களுடைய காலம் 2500 B.C.க்கு முற்பட்டது. இவர்கள் பொருளியல் பிரச்சனைகள் பற்றி தனித்து பார்க்கவில்லை. மதத்திற்கும், ஒழுக்கநெறிகளுக்குமே இவர்கள் மிக முன்னுரிமை கொடுத்தார்கள். வேளாண்மைக்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.  வட்டி, விலை, சொத்துரிமை மற்றும் முற்றுரிமை ஆகியவற்றைப் பற்றிய தெளிவான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். சகோதர ஹீப்ரூக்களுக்கு வட்டிக்கு பணத்தை கடன் கொடுப்பதை ஏற்கவில்லை. ஆனால் வெளிமனிதர்களுக்கு கடன் கொடுத்து வட்டி பெறலாம் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். அக்காலத்தில் ஏழை மக்கள் நுகர்வுக்காக கடன் பெற்றதால் அதிக வட்டி வசூலிப்பது நெறியற்றது என்று கருதினார்கள். வட்டி பற்றிய ஹீப்ரூஸின் சிந்தனைகளும், பழங்கால இந்திய மக்களின் வட்டி பற்றிய சிந்தனைகளும் ஒன்றேயாகும். தவறான எடைகள், கலப்படம் போன்றவற்றிற்கு எதிராக நிறைய சட்டங்களைக் கொண்டிருந்தனர். வியாபாரிகள் சரியான விலையையே வசூலிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். மேலும் இலாபத்திற்கு உச்சவரம்பை நிர்ணயித்திருந்தார்கள். உழைப்பின் மதிப்பை ஹீப்ரூஸ் அறிந்திருந்தனர். ஹீப்ரூஸ் நாகரீகம் வேளாண்மையைச் சார்ந்த ஊரகப் பின்னணியைச் சார்ந்தது. "உழவுத் தொழிலைச் செய்பவன் மிகையான உணவைப் பெறுவான்” என்பது இவர்களது பழமொழியாகும். ஏழாவது வருடம் நிலத்தை சாகுபடி செய்யமாட்டார்கள். அவர்கள் தரிசு நிலமாக விட்டுவிடுவர். நிலத்தின் செழுமையைப் மீளப்பெறவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

“ஜூப்ளி வருடம்” என்பது ஹீப்ருஸ் சிந்தனைகளின் சிறந்த கருத்து ஆகும். ஜூப்ளி வருடம் என்பது 50-வது வருடமாகும். 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலத்தை வாங்கியவர்கள் நிலச் சொந்தக்காரருக்கே கொடுத்துவிட வேண்டும் என்பது ஜூப்ளி வருடத்தின் கருத்தாகும். ஹீப்ரூஸ் காலத்தில் பணம் பயன்படுத்தப்பட்டது. பலவகைப் பணங்கள் பற்றிய குறிப்புகள் பழைய வேதநூல்களில் காணப்படுகிறது.

சேபத் (The Sabbath)

'சேபத்' என்பது வாராந்திர விடுமுறை, ஒய்வு மற்றும் மகிழ்ச்சி நிறைந்த நாளாகும். வார இறுதி நாள் என்பது சமூக கண்டுபிடிப்பாகும். இதற்கு இணையானது கிரேக்க, ரோமானிய, பண்டைய பண்பாடுகளின் நாகரீகங்களில்கூட காணப்படவில்லை என்று ஸ்பெக்சல் கூறியுள்ளார். சுருக்கமாக மதம், அறம், சட்டம், பொருளியல், தத்துவ இயல் ஆகிய அனைத்தும் இணைந்து விடுவதைக் காணலாம். பண்டைய ஹீப்ரூக்களின் பொருளாதார கருத்துக்கள் நவீன பொருளியல் அறிஞர்களின் கருத்துக்களோடு ஒப்பிடும்பொழுது பழமையாகத் தோன்றினாலும், மனிதர்கள் மனத்தில் (profound influence) ஆழ்ந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

ரோமானிய சட்டமும், கிறித்தவ மதமும், ஐரோப்பியர்களின் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளதாக கிரேக்கர்கள் எண்ணினார்கள்.

பண்டைய இந்தியர்களின் வாழ்க்கை, வேலைநிலை, சிந்தனைகள் உண்மைவாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. பிற உலகப் (பந்தங்களை) பற்றை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஜவஹர்லால் நேருவின் கூற்றுப்படி, “இம்மக்களிடம் உருவ வழிபாடு காணப்படவில்லை . கடவுள்களுக்கு கோவில்கள் இல்லை”.

இவர்களது வாழ்க்கையில் உயிர் நிலையான வாய்மையே ஊடுறுவியிருப்பது சிறப்பாக கருதப்படுகிறது. பழங்கால சமுதாயத்தில் ஜாதி அமைப்பு முக்கியமானதாகக் கருதப்பட்டது. ஜாதி தொழிலை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிறப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல. பிற்காலத்தில் ஜாதி அமைப்பு கடுமையாக பின்பற்றப்பட்டு பல குறைபாடுகளுக்கு வழிவகுத்தது.

கூட்டுக்குடும்ப முறை பழங்கால இந்திய அமைப்பின் முக்கியமானதாகக் கருதப்பட்டது. வேளாண்மை இவர்களது முக்கியமான தொழிலாகும். உழவுத் தொழில் மிக உயர்வாகக் கருதப்பட்டது. முடியாட்சிதான் இவர்களது புகழ்பெற்ற அரசாகும். காலப் போக்கில் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டது உம். கிராம பஞ்சாயத்து முழு அதிகாரம் பெற்ற அமைப்பாக செயல்பட்டது. வட்டி விகிதம் முறைப்படுத்தப்பட்டது. அளவு, எடை ஆகியவை ஒழுங்குபடுத்தப்பட்டது. பழங்கால், அரசியல், சமூக பொருளாதார, இராணுவ அமைப்பு ஆகியவற்றைப் பற்றி கெளடில்யரின் 'அர்த்த சாஸ்திரம்’ தெளிவாக கூறுகிறது. அறநெறி நூலான திருவள்ளுவரின் திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைப் பற்றி கூறுகிறது. வள்ளுவரின் திருக்குறளின் இரண்டாவது பகுதியான பொருட்பாலின் பொருளியல் கருத்தான செல்வத்தைப் பற்றிக் கூறுகிறது.

கெளடில்யர் அர்த்தசாஸ்திரத்தில் கூறியுள்ள அனைத்து கருத்துகளும் பொருட்பாலில் காணப்படுகிறது. பசியிலிருந்து விடுதலை பெறுவதே உண்மையான சுதந்திரம் என்று வள்ளுவர் கூறுகின்றார். இரத்தலை (begging) அவர் வெறுக்கிறார். தொழிலை உண்மையான செல்வம் என்றும், உழைப்பை உயர்ந்தவளம் என்றும் கருதுகின்றார். இவரின் கருத்துப்படி வேளாண்மையே மிக முக்கிய அடிப்படைத் தொழிலாகும். உழுபவனே, நிலத்தின் சுதந்திர மனிதனாவான், அவனை பின்பற்றி செல்பவர்கள் அனைவரும் அடிமைகளாகக் கருதப்படுபவர். (குறள் 1032) (Bible). இடைக் கடைக்கால நல்ல நெறிகளே! உயர்ந்த பொருளியலாகும் என்று வள்ளுவர் கூறுகின்றார்.

இடைக்கால பொருளாதார சிந்தனைகள்

ரோம் அரசு வீழ்ச்சியடைந்த காலத்திலிருந்து (476 AD) துருக்கியர்கள் கான்ஸ்டான்டி நோபிலை கைப்பற்றிய (1453 AD) காலம் வரை இடைக்காலமாக கருதப்பட்டது. இடைக்கால சமுதாயம் நிலப் பண்ணை முறை (Feudal System) யைச் சார்ந்தது. இடைக்கால மக்கள் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தனர். மக்கள் சிறிய தன்னிறைவு பெற்ற குழுக்களாக வாழ்ந்தனர். தேவாலயம், வேதநூல் (Bible) மற்றும் அரிஸ்டாட்டில் இடைக்கால மக்களின் வாழ்க்கையாலும் சிந்தனையிலும் ஆதிக்கம் செலுத்தின.

வணிகவாதம் (Mercantilism)

15-ம் நூற்றாண்டிலிருந்து 18-ம் நூற்றாண்டுவரை ஐரோப்பிய அரசால் பின்பற்றப்பட்ட பொருளாதாரக் கருத்துக்களும் கொள்கைகளும் வணிக வாதம் எனப்பட்டது. வாணிபத்தின் மூலம் நாட்டின் செல்வத்தை உயர்த்த முடியும் என்று நம்பினர். அதிக செல்வத்தைப் பெற தங்கம், வெள்ளி ஆகியவற்றின் கையிருப்பை உயர்த்த வேண்டும் என்று விரும்பினர்.

நிலப்பண்ணை முறை முடிவுக்கு வந்த பிறகு இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மன், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வலுவான அரசு தோன்றியது. ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளை அதனுடைய ஆற்றல் வாய்ந்த போட்டியாளராகக் கருதியது. வலிமையான அதிகாரமிக்க (Powerful and Strong) அரசை உருவாக்க நாட்டின் பொருளியல் நடவடிக்கைகளை வணிகவாதத்தினர் ஒழுங்குபடுத்தினார்கள். வணிகவாதம் என்பது பொருளியல் மூலம் வலுவான அரசை உருவாக்குவதேயாகும்.

ஒரு நாடு சுரங்கங்களைப் பெற்றிருந்தால் தங்கத்தையும், வெள்ளியையும் பெற முடியும். இல்லையெனில் வாணிபத்தில் மூலமாக மட்டுமே தங்கத்தையும், வெள்ளியையும் பெற முடியும். அயல் நாட்டு வாணிபத்தின் சாதகமான (favourable balance) நிலையை விரும்பினர். அதாவது ஏற்றுமதி, இறக்குமதியை விட அதிகமாக இருக்க வேண்டும். அலெக்ஸாண்டர் கிரேயின் கூற்றுப்படி, “வணிகவாதத்தினரின் அடிப்படைக் கொள்கையானது ஏற்றுமதியை அதிகரித்தலும், இறக்குமதியை குறைத்தலும் ஆகும்.”

வணிகவாதத்தினரின் கூற்றுப்படி, வாணிபமே மிக முக்கியமான தொழிலாகும். தொழில், உற்பத்தித் துறைகள் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வேளாண்மை மிகக் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

வணிக வாதத்தில் அரசின் பங்கு மிக முக்கியமானதாகும். பல பொருளியல் கொள்கைகளின் மூலம் ஏற்றுமதியை ஊக்கப்படுத்தி, இறக்குமதி குறைந்தது. வணிக வாதத்தினர், செல்வம், பணம் இரண்டுக்குமிடையே உள்ள தொடர்பில் குழப்பமடைந்தனர். அதிக பணம், வாணிபத்தை விரிவடையச் செய்யும் என்ற அவர்களது கருத்தை கீன்சு பாராட்டினார். ஒவ்வொரு நாடும் அதிகமாக ஏற்றுமதியை மட்டுமே விரும்பினால், இறக்குமதி செய்வது யார்? எளிதாக கூறுவதானால், வணிகவாதம் என்பது அதிகாரத்தின் கொள்கையாகும்.

இயற்கைவாதம் (Physiocrates)

18ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டில் உருவாக்கப்பட்ட பொருளாதாரக் கோட்பாட்டிற்கு இயற்கைவாதம் என்று பெயர். பொருளியலின் தந்தையான ஆடம் சுமித் இயற்கை வாதத்தினரால் பெரிதும் கவரப்பட்டார். இயற்கைவாதம் என்றால் “இயற்கையின் விதி” என்று பொருள். இயற்கைவாதம் என்பது வணிகவாதத்திற்கு எதிரான பிரான்சு மக்களால் ஏற்பட்ட புரட்சியாகும்.

இயற்கைவாதத்தினர் இயற்கை நியதியை உருவாக்கினர். இயற்கை நியதி என்பது கடவுளால் கொடுக்கப்பட்ட இலட்சியக் கொள்கை (Ideal Order) என்று கருதினர். தனி மனித விருப்பம் சமுதாய விருப்பத்தோடு ஒத்திருப்பதாக கருதினர். தலையிடாக் கொள்கையை இவர்கள் ஆதரித்தனர். அதனதன் வழியில் விட்டுவிடல் (Let things alone)

"ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பும் வழியே செல்லலாம்" என்று பொருள். இக்கொள்கையின்படி, அரசின் பங்கு மிகக் குறைவேயாகும். மக்களின் வாழ்க்கை , சுதந்திரம், சொத்துக்களை பாதுகாப்பதே அரசின் முக்கியப் பணியாகும். வேளாண்மையையே உற்பத்தியை செய்யும் தொழிலாக கருதினர். இது மட்டுமே நிகர உற்பத்தியை உருவாக்கும். மற்ற தொழில்கள் அனைத்தும் வீணானவையே என்று கருதினார்கள்.

சமுதாயத்தில் செல்வம், உழைக்கும் பிரிவினர் (விவசாயி), முதலாளிப்பிரிவு; பயனற்ற பிரிவு (வணிகர்கள், வீட்டு வேலைகாரர்கள்) இவர்களிடையே எவ்வாறு சுழற்சி அடைகிறது என்று தமது பொருளியல் பட்டியலில் (Tableau Economique) குஸ்நே (Quesday) இயற்கைவாதப் பள்ளியின் முதன்மை பிரதிநிதியான விளக்கியுள்ளார்.

தனிமனித சொத்துரிமையில் இயற்கை வாதத்தினர் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்கள் தடையில்லா வாணிபத்தை ஆதரித்தனர். தொன்மைப் பொருளாதார அறிஞர்களின் கருத்து ஆடம் சுமித், டேவிட் ரிகார்டோ,  ராபர்ட் மால்தஸ், J.S. மில் ஆகியோர், தொன்மை பொருளியல் அறிஞர்களில் முதன்மையானவர்களாவார்கள். இயற்கை வாதத்தினரைப் போன்றே தலையாயக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தனர். சந்தைப் பொருளாதாரம், தடையில்லா வாணிபத்தைச் சார்ந்தே இயங்குகிறது.

நாடுகளின் செல்வமும், அவற்றின் இயல்புகள் பற்றியும் ஆடம் சுமித் அக்கரை கொண்டிருந்தார். அவரை முதல் பொருளாதார முன்னேற்ற அறிஞர் என்று அழைக்கிறோம். டேவிட் ரிகார்டோ, பொருளாதார பங்கீட்டின் பிரச்சனைகளில் ஆர்வம் கொண்டிருந்தார். மக்கள் தொகைக் கோட்பாட்டை உருவாக்கியமால்தஸ், சில நாடுகள் ஒரு நேரத்தில் செழுமையாகவும், மறு நேரத்தில் வறுமையிலும் இருக்க காரணம் என்ன? என்பதை அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தார். நாடுகளின் செழுமை பற்றியும் வறுமை பற்றியும் அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தார். J.S. மில், தனித்தன்மையிலும், சமதர்மத்திலும் நம்பிக்கை கொண்டிருந்தார். இவர் பொருளாதார பங்கீட்டில் சமூக சீர்திருத்தத்தை ஆதரித்தார். ஏனெனில் பகிர்வு கோட்பாடு உற்பத்திக் கோட்பாட்டிலிருந்து வேறுபட்டது ஆகும்.

வரலாற்றுக்கால அறிஞர்கள்

 • 19-ம் நூற்றாண்டின் இறுதியில் வரலாற்று அறிஞர்களின் ஆதிக்கம் ஜெர்மனியில் மிகுந்திருந்தது. தொன்மைப் பொருளியல் அறிஞர்களுக்கு எதிராக உருவான புரட்சி இதுவாகும். தொன்மைப் பொருளியல் அறிஞர்கள், பொருளியல் விதிகள் எல்லாவற்றிற்கும் பொதுவானதாகும் என்று கருதினர். ஆனால் வரலாற்று அறிஞர்கள் பொருளியல் விதிகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்று கருதினர்.
 • ஆனால், தொன்மைப் பொருளியலாளர்கள் தடையிலா வாணிகத்தையும், வரலாற்றாளர்கள் காப்பு வரிமூலம் புதிய தொழில்களை பாதுகாக்கவும் அறிவுறுத்தினர்.

மார்க்கினிய கொள்கை (Karl Marx)

கார்ல் மார்க்ஸ் (1818-1883) அறிவியல் சமதர்மத்தை தோற்றுவித்தார். முதலாளித்துவத்தை குறை கூறியவர்களில் இவர் முதன்மையானவர். முதலாளித்துவம் சுரண்டல் பண்புகளை உடையது. முதலாளித்துவம் சமதர்மத்திற்கு வழிவகுக்கும் என்று முன்னறிவிப்பு செய்தார். வர்க்கப் போராட்டமே வரலாறு ஆகும் என்று கார்ல் மார்க்ஸ் கருதுகின்றார். ரஷ்யாவிலும், சீனாவிலும், சமதர்ம அரசு உருவாக மார்க்ஸின் அறிவுரைகளே காரணமாகும். திட்டமிடுதல் ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா உலகுக்கு அறிந்த நன்கொடையாகும். இது சமதர்ம தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.

இறுதி புரட்சி (The Marginal Revolution)

இது 19-ம் நூற்றாண்டின் இறுதி காலத்தில் தோன்றியது. இப்புரட்சி மதிப்புக் கோட்பாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மனித வள மேம்பாடு பற்றி இப்பொழுது நாம் பேசுகிறோம். மனிதன் மையக் கருவாக ஆக்கப்பட்டான். ஒரு பக்கம் செல்வத்தை பற்றியும் மறுபக்கம் மிக முக்கியமாக மனிதனைப் பற்றியும் பொருளியல் ஆராய்கிறது என்று ஆல்பிரட் மார்ஷல் கூறியுள்ளார்.

நிறுவனங்கள் (The Institutional School)

இது 20-ம் நூற்றாண்டின் கருத்தாகும். இக்கருத்து அமெரிக்காவில் தோன்றியதாகும். பொருளியல் வாழ்க்கையில் நிறுவனங்களின் பங்குபற்றி இது கூறுகின்றது. நிறுவனங்கள் என்பது வழக்கங்கள், சமூக பழக்கவழக்கங்கள், விதிகள், வாழும் வழிமுறைகள், சிந்தனைகளின் வழிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. (உம்) அடிமை (Slavery) என்பது ஒரு நிறுவனம் ஆகும். சில நாட்களை பண்டிகை நாட்களாக கொண்டாடுகிறோம். அதுவும் ஒரு நிறுவனமாகும். பொருளியல் வாழ்க்கை என்பது மாற்றமும் முன்னேற்றமும் கொண்ட ஒன்று என்று J.A. சும்பீட்டர் (1883-1993) கருதுகின்றார். பொருளாதார முன்னேற்றத்தில், புத்தாக்கத்தை புனையும் தொழில் முனைவோன் முக்கியப் பங்கு வகுப்பதாகக் கருதுகின்றார்.

கீன்சின் புரட்சி (The Keynesian Revolution)

J.M. கீன்சு புதிய பொருளாதாரத்தின் தந்தையாக கருதப்படுகின்றார். 1920 மற்றும் 1930ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார பெருமந்தத்தால் முதலாளித்துவ நாடுகள் பாதிக்கப்பட்டன. சாதகமற்ற வாணிபத்திலும் வேலையில்லாத் திண்டாட்டத்தாலும் இப்பெருமந்தம் தோன்றியதாகும். இந்நெருக்கடியில் இருந்து மீள, அரசின் பங்கு அதிகமாக இருக்கவேண்டும் என்றும், துணிகரமான நிதிக் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்று எடுத்துக் கூறினார். அமெரிக்காவின் புதிய கொள்கை கீன்சின் கொள்கை அடிப்படையிலேயே தோன்றியதாகும். 1950 லிருந்து பொருளியில் சிந்தனைகள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டமைந்தது. பொருளாதார வளர்ச்சியும், முன்னேற்றமும் (Economic growth and Development) பொருளாதார வளர்ச்சியை ஆர்தர் லூயிஸ் என்பவர் “மக்கள் தொகையின் தலா உற்பத்தியின் வளர்ச்சி” என்று வரையறுக்கிறார்.

பொருளாதார வளர்ச்சி என்பது நாட்டு வருமானத்தில் தனி நபரது பங்கு அதிகரிப்பதேயாகும். இதனுடைய கருப்பொருளானது வளர்ச்சியே தவிர, பகிர்வு அல்ல. (எ.கா) இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் போது, அந்நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. ஆனால் உழைப்பாளிகளின் வாழ்க்கை தரத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. காரணம் அவர்கள் சுரண்டப்பட்டு, குறைந்த ஊதியத்தில் அதிக மணி நேரம் உழைக்கும்படி வற்புறுத்தப்பட்டனர்.

பேராசிரியர் ஆர்தர் லூயிஸ் என்பவரது கருத்துப்படி பொருளாதார வளர்ச்சியானது மூன்று விதமான காரணிகளால் கட்டுப்படுத்தப்படும். அவை:

 • பொருளாதார நடவடிக்கை
 • அறிவுத் திறன் வளர்ச்சி
 • மூலதனத்தின் வளர்ச்சி

வேறுவகையாக கூறின், இம் மூன்று காரணிகளும் உழைப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மூலதனத்தை குறிக்கும். இதனோடு நிலம் அல்லது வளங்களை சேர்த்துக் கொள்ளலாம்.

20ம் நூற்றாண்டில் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அதிகமான கவனம் செலுத்தப்பட்டது. ஒரு பொருளாதாரத்தில் அனைத்து துறைகளிலும் சமமான வளர்ச்சி காணப்படவேண்டும். வேளாண்துறை, தொழில்துறை மற்றும் பணித்துறைகள் சீராக வளர வேண்டும். இவ்விதமான வளர்ச்சி அனைத்து துறை சார்ந்த மக்களுக்கும் நலன் பயக்கும். அதோடு மட்டும்மல்லாமல் பொருளாதார வளர்ச்சி உற்பத்தியின் அளவை மட்டும் கூட்டுவதாக இன்றி, உற்பத்திக் காரணிகளுக்கிடையே வாரம், கூலி, வட்டி மற்றும் இலாபம் எவ்வாறாக பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதையும் குறிக்கும்.

கடந்த காலங்களில் வளர்ச்சியும், முன்னேற்றமும் ஒரே பொருள் கொண்டவையாக கருதப்பட்டது. (எ.கா) தலா வருமானத்தின் வளர்ச்சி வீதம் (அ) நாட்டின் மொத்த உற்பத்தியில் தலா வருமானத்தின் பங்கினை பொருளாதார முன்னேற்றத்தின் குறியீடாக கருதப்பட்டது. மேலும் அவர்கள் தலா வருமானம், மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தை விட கூடுதலாக வளர்ந்துள்ளதா என கணக்கிட்டும் பார்த்தனர். மேலும் மக்களின் நல்வாழ்வானது உண்மை தலா மொத்த நாட்டு உற்பத்தியை சார்ந்தது. உண்மை தலா வீத நாட்டு உற்பத்தி (Real Per Capita Group) என்பது மொத்த நாட்டு உற்பத்தியின் பண மதிப்பிலிருந்து பணவீக்க வீதத்தை கழிக்க கிடைப்பதேயாகும்.

பொதுவாக கூறின், ஏழ்மை நிலை, வேலையில்லா பிரச்சினை, ஏற்றத் தாழ்வுகள் போன்றவற்றை குறைப்பதால் மட்டுமே ஒரு நாடானது முன்னேற்றம் அடைவதாக கருதப்படும். இல்லை எனில், தலா வருமானம் இரண்டு மடங்கு அதிகரித்தாலும் பொருளாதாரம் வளர்ந்தது என கூறமுடியாது.

ஆகவே வளர்ச்சி என்பது வாழ்க்கை தரத்தின் உயர்வு சார்ந்ததாகும். அதாவது மக்கள் அதிக வருமானம், நல்ல கல்வி ஆரோக்கியமான வாழ்க்கை, சத்துள்ள உணவு, வறுமையற்ற நிலை, சமவாய்ப்பு நிலை ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும். மைக்கேல் P. தோடரோ மற்றும் ஸ்டீஃபன். C. ஸ்மித் என்போரின் வாக்குப்படி முன்னேற்றம் என்பது “பல பரிமாண முறைகளில் ஏற்படும் பெரும் மாற்றங்கள் சமுதாய அமைப்புகளிலும் மக்களது மற்றும் நாட்டு நிறுவனங்களின் இயல்புகளில் ஏற்படும் மாற்றங்கள், பொருளாதார வளர்ச்சி வேகம், ஏற்றத்தாழ்வின் வீழ்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றை குறிக்கும்.

பின்தங்கிய நாடுகளின் சிறப்பியல்புகள் (Characteristics of Under Developed Countries)

'வளர்ச்சி குன்றிய', 'குறைவான வளர்ச்சி அடைந்த', 'பின்தங்கிய', 'ஏழ்மையான மற்றும் வளர்ந்து வரும்' என்ற சொற்கள் பொதுவாக குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளைக் குறிக்கும். எந்த நாடுகளில் தலா வருமானம் குறைவாக இருப்பதால் வாழ்க்கைத் தரம் குறைவாக இருக்கிறதோ அந்த நாடுகள் வளர்ச்சி குறைந்த நாடுகள் எனப்படும்.

தலா வருமானத்தின் அடிப்படையில் நாடுகள் வளர்ந்த நாடுகள் என்றும் வளர்ச்சி குறைந்த நாடுகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. (எ.கா) 1949ல் உலக மக்கள் தொகையில் 18 விழுக்காடு கொண்ட அதிக வருமானமுடைய நாடுகள் உலக வருமானத்தில் 67 விழுக்காடு பெற்றிருந்தன. ஆனால் உலக மக்கள் தொகையில் 67 விழுக்காட்டை கொண்ட குறைந்த வருமானமுடைய நாடுகள் உலக வருமானத்தில் 15 விழுக்காட்டை பெற்றிருந்தன.

ஐக்கிய நாடுகள், கனடா, மேற்கு ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பணக்கார நாடுகளாகும். ஏழை நாடுகள் பரவலாக ஆசிய, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் அமைந்துள்ளன. உலக வருமானத்தில் 18% பெறும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகள், 15% சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ளன.

எ.கா. அர்ஜன்டீனா, தெற்கு ஆப்பிரிக்கா, இஸ்ரேல் மற்றும் முந்தய சோவியத் ரஷ்யா போன்றவை - ஏழை நாடுகளை ஒட்டுமொத்தமாக மூன்றாம் உலகம்' (Third World) எனக் குறிப்பிடப்படுகின்றன.

1973ம் ஆண்டிலும், இந்த மூன்றாம் உலகம் 77 % மக்கள் தொகையை உலக வருமானத்தில் 22% த்தைக் கொண்டே பிழைப்பூட்டி வந்துள்ளது. இந்த மிகச் சொற்ப வருமானமும் கூட இத்தகைய நாடுகளில் முறையாக பகிர்ந்தளிக்கப்படாமல், இப்பெருத்த மக்கள் தொகையை இழிவான வறுமைக்குள் வாழ்கின்றனர். மேயர் மற்றும் பால்டுவின் அவர்களின் வாக்குப்படி, வளர்ச்சி குன்றிய நாடுகளில் கீழ்காணும் 6 வகையான அடிப்படை பண்புகள் காணப்படுகின்றன.

அவை பின்வருமாறு

முதன்மைத் துறை உற்பத்தி

வளர்ச்சிக் குறைந்த நாடுகளில் பொதுவாக, கச்சாப் பொருள்களும், உணவுப் பொருள்களும் உற்பத்தி செய்கின்றனர். பெரும்பாலான மக்கள் வேளாண்மையை தங்கள் முக்கியத் தொழிலாக கொண்டுள்ளனர். சில ஏழை நாடுகள் விவசாயத்தை சாராத முதன்மை துறையையே சார்ந்துள்ளது (எ.கா. தாதுப் பொருள்களாகிய டின், செம்பு, அலுமினியம் மற்றும் பெட்ரோலியம்). மேலும் விவசாய உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் கிராமப்புற வருமானம் குறைவாக உள்ளது. நிலத்தின் மீது மக்கள் தொகை அழுத்தம் அதிகமாகவே உள்ளது.

மக்கள்தொகை அழுத்தம்

பொதுவாக, பெரும்பாலான ஏழை நாடுகளில் மக்கள் தொகை அழுத்தம் பெருகிக் காணப்படுகிறது. மக்கள்தொகை அழுத்தமானது பல வடிவங்களை எடுக்கிறது. (எ.கா.) கிராமப்புறங்களில் குறைந்த வேலை வாய்ப்புகள் உள்ளன. அவைகள் சில நேரங்களில் மறைமுக வேலையின்மை என குறிப்பிடப்படுகிறது.

தேவைக்கும் அதிகமான மக்கள் விவசாயத்தில், வேலைகளில் அமர்த்தப்படுவார்கள். இவர்களின் இறுதி நிலை உற்பத்தி திறனானது பூஜ்ஜியமாக அமையும். இரண்டாவதாக, அதிக பிறப்பு வீதத்தினால், சார்ந்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமானதாக உருவாகும். கடைசியாக இறப்பு வீதம் குறைவினாலும் பிறப்பு வீதம் அதிகரிப்பினாலும், மக்கள் தொகை பெருமளவில் அதிகரிக்கும்.

இயற்கை வளங்கள் சரியாக பயன்படுத்தாமை

ஏழைநாடுகளில் இயற்கை வளங்கள் குறைவாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்நாடுகளில் இயற்கை வளங்கள் பயன்படுத்தப்படாமலோ, குறைவாக பயன்படுத்தியோ, தவறான முறையில் பயன்படுத்தியோ வீண் அடிக்கக் கூடும்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள்

ஏழை நாடுகளில் வாழும் மக்களின், பின் தங்கிய பொருளாதார நிலையானது உழைப்பு குறைந்த நிலை, உற்பத்திக் காரணிகளின் இடம்பெயராமை தொழில் முனைவோன் அற்ற நிலை, பொருளாதார அறியாமை போன்ற பிறவற்றில் பிரதிபலிக்கும். அம்மக்கள் பாராம்பரிய பழக்கவழக்கத்தினால் அரசாளப்படுகிறார்கள். இம்மக்களுக்கு போதிய பொருளாதார ஊக்கம் அளிக்கப்படவில்லை. வரி விதிப்பு முறையில், வரி வசூலிப்பதில் திறனற்ற நிலையும் வரி ஏய்ப்புகளும் காணப்படுகிறது. இத்தகைய நாடுகளில் அரசு, நலிவானதாகவும், திறமை அற்றதாகவும் மேலும் ஊழல் நிறைந்ததாகவும் காணப்படுகிறது.

மூலதன திரட்சிக் குறைவு

 • குறைவான மூலதன திறட்சி ஏழைநாடுகளில் காணப்படுகின்ற ஒரு முக்கியமான பண்பாகும். மூலதன ஆக்கம் (அ) முதலீடு இந்நாடுகளில் மிகவும் குறைவாக உள்ளது. இத்தகைய நாடுகளில் பேராசிரியர் ராக்னர் நர்கஸ் என்பவர் இந்த குறைவான மூலதன ஆக்கமே வறுமைக்கு அடிப்படையான காரணம் என்கிறார். குறைவான மூலதன ஆக்கம் உற்பத்திக் குறைவுக்கு வழிவகுக்கிறது.
 • குறைந்த உற்பத்தி, குறைவான வருமானத்திற்கும், குறைந்த வருமானம் குறைந்த சேமிப்புக்கும், குறைவான சேமிப்பு குறைந்த முதலீட்டுக்கும் வழிவகுக்கிறது. இந் நிகழ்வு மூலம் வறுமை கொடும் சுழல் (Vicious Circle of Poverty) ஏற்படுகிறது.

அயல்நாட்டு வாணிபத்தை சார்ந்த நிலை

சில ஏழைநாடுகள் அயல்நாட்டு வாணிபத்தை பெருமளவில் சார்ந்துள்ளன. (எ.கா.) 1952ல் எகிப்து நாட்டில் 90ரூ அந்நிய செலவானது பருத்தி மூலம் கிடைத்தது. இந்த அயல்நாட்டு வாணிபத்தில் உள்ள இடர்பாடு யாதெனில் இறக்குமதி செய்யும் நாட்டிலோ (அ) நாடுகளிலோ தீவிர பொருளாதார சிக்கல் ஏற்பட்டால் ஒன்று அல்லது இரண்டு பண்டங்களின் ஏற்றுமதியை நம்பி இருக்கும். நாடுகளின் பொருளாதார நிலையானது மிகவும் பாதிக்கப்படும். வளர்ச்சியின் தொடக்க நிலையில் இத்தகைய நாடுகள் இறக்குமதியையே சார்ந்திருந்தன.

இந்தியா ஒரு வளர்ச்சிக் குறைந்த நாடு

வளர்ச்சி குறைந்த நாடுகளின் அனைத்து விதமான பண்புகளும், இந்தியாவில் காணப்படுகின்றன. 65-70 சதவீத மக்கள் விவசாயத்தையே சார்ந்துள்ளனர். இதனால் விவசாய உற்பத்தி திறன் மிக குறைவாகவே உள்ளது. இங்கே மக்கள் தொகை அழுத்தம் காணப்படுகிறது. இங்கே இயற்கை வளங்கள் குறைவாகப் பயன்படுத்தப்படுதலும் பொருளாதார பின்தங்கிய நிலையும் நிலவுகிறது. சமீபகாலம் வரை மூலதன பற்றாக்குறை இருந்து வந்தது. இதன் காரணமாக இந்தியாவை வெளிநாடுகளிலிருந்தும், உலக வங்கி, அயல்நாட்டு நிதி நிறுவனங்களாகிய பன்னாட்டு நிதி நிறுவனம் போன்றவற்றிலிருந்து பெரும் அளவு மூலதனத்தை கடனாக பெற வேண்டியுள்ளது. ஆகவே இந்தியாவை ஒரு வளர்ச்சிக் குறைந்த நாட்டிற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். ஆனால் இன்றைய நாட்களில் இந்தியாவை ஒரு வளர்ந்து வரும் நாடு என அழைக்கிறார்கள்.

பொருளாதார முன்னேற்றத்தில் அரசின் பங்கு

ஒரு அரசானது, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறப்பான பங்கு ஆற்றுகின்றது. 1870க்கு பின் ஜப்பானும், முதலாம் உலகப் போருக்குப்பின் சோவியத் நாடும் சிறந்த உதாரணமாகும். ஆனால் இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சியும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியும் அங்காடிப் பொருளாதார அமைப்பு முறை மற்றும் தலையிடாக் கொள்கையின் அடிப்படையினாலும் முன்னேற்றம் அடைந்தது. வளர்ச்சிக் குறைந்த நாடுகளுக்கு இந்த அரசியல் கட்டுபாடற்ற வாணிக கோட்பாடு (Laissez-Faire Policy) ஒரு விரும்பத்தக்க பொருளாகும். வளர்ச்சி குறைந்த நாடுகளில், ஒரு அரசாங்கம், தொழில் முனைவோராக செயல்பட வேண்டியுள்ளது. தற்காலங்களில் இத்தகைய நாடுகளில் உள்ள அரசுகள் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, பொருளாதார முன்னேற்றத்தை அடைய பெறும் பங்கு வகிக்க வேண்டும். இத்தகைய ஏழை நாடுகளில் அரசானது ஒரு உற்பத்தி காரணியாக கருதப்படுகிறது. (உ.ம்.) இந்தியா ஒரு கலப்பு பொருளாதாரம். இதில் பொதுத் துறையும் மற்றும் தனியார் துறையும் இயங்கி வருகிறது. சமீப காலங்களில் பொதுத் துறையானது பொருளாதார திட்டத்தில் பெறும் பங்கு வகிக்கிறது.

ஐந்தாண்டு திட்டங்களின் மூலமாக அரசு தனது பொருளாதார வளர்ச்சி நோக்கங்களை நிறைவுச் செய்வதில் முயற்சிகள் மேற்கொள்கின்றன. மேலும் அதிகப்படியான பொருளாதார வளர்ச்சியையும், வேகமான தொழில் மயமாக்குதலையும், வேலை வாய்ப்புக்களை விரிவாக்கவும், செல்வம் மற்றும் வருமான ஏற்றத் தாழ்வுகளை குறைக்கவும் ஐந்தாண்டு திட்டங்களை அரசு பயன்படுத்துகிறது.

சமூக சேவைகளாகிய கல்வி, உடல் நலம் ஆகியவற்றில் அரசு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி மற்றும் உடல்நலத்திற்கான மூலதனம், பருப்பொருள் மூலதனத்தை போன்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது மனித மூலதன ஆதிக்கத்தை அதிகரிக்கிறது. கல்வியும், சுகாதார வசதியும் உழைப்பின் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது.

இன்றைய நாட்கள், உலக மயமாதல், தாராளமயமாதல் மற்றும் தனியார் மயமாக்கும் நாட்களாகும். நாம் வெளிநாட்டு மூலதனத்தை பெருமளவில் வரவேற்கிறோம். ஆனால் அவர்களுக்கு நல்ல அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சிறந்த போக்குவரத்து, தபால் மற்றும் தொலைத் தொடர்புகள், மின்சார வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் போன்றவை பெருமளவில் தேவைப்படுகிறது. இவற்றிற்கான செலவுகள் அனைத்தும் சமூக மேல் மூலதனமாக (Social overhead capital) கருதப்படும். அரசு பெருமளவு முதலீட்டை இவற்றிற்காக செலவிட வேண்டும். இது மட்டுமல்லாது தொழில் முனைவோர்கள் இந்நாடுகளில் - குறைவாக இருப்பதால் அரசு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க வேண்டும்.

வளர்ச்சிக் குறைந்த நாடுகளில் அந்நிய செலாவணி மிகக் குறைவாக உள்ளது. ஆகவே அரசாங்கம் தக்க நடவடிக்கைகள் எடுத்து ஏற்றுமதிகளை முன்னேற்றவும், முதலீடு செய்யவும் வெளிநாட்டவரை கவர்ச்சிக்கவும் தக்க நிதியியல் கருவிகளை கைக்கொள்ள வேண்டும்.

பொருளாதார முன்னேற்றத்தை அங்காடி சக்திகளிடம் விட்டுவிட்டால் அங்கு வட்டார சமநிலை வளர்ச்சி ஏற்படாது. எனவே அரசு சமநிலை வட்டார வளர்ச்சிக்கான கொள்கைகளையும், திட்டங்களை வகுக்க வழிவகைச் செய்ய வேண்டும். மேலும் இவ்வரச்கள் முற்றுறிமையாளர்களை சரிபடுத்தி, கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசு பெரும் பங்கு ஆற்ற வேண்டும்.

ரோஸ்டோவ்வின் 5 கட்ட நிலைகள் (Rostow's 5 Stages)

W.W. ரோஸ்டோவ் என்பவர் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பொருளியல் மற்றும் வரலாற்று அறிஞர் ஆவார். ஒவ்வொரு நாடும் முன்னேற்றம் குறைந்த நிலையிலிருந்து பொருளாதார வளர்ச்சி நிலைக்கு முன்னேற 5 வகையான கட்டங்களை விளக்கியுள்ளார். அனைத்து நாடுகளும் இந்த ஐந்து கட்டங்களை கடந்தாக வேண்டும். அவையாவன:

 • பழமையான சமுதாய அமைப்பு முறை
 • மாறும் நிலையில் உள்ள சமுதாயம்
 • பொருளாதார மேலெழு நிலை
 • பொருளாதார முதிர்ச்சிக்கான செயலக்கம்

பொதுமக்களின் பேரளவு நுகர்ச்சிக் காலம் பழமையான சமுதாய அமைப்பு முறையானது பாரம்பரிய மற்றும் பழக்கவழக்கங்களினால் கட்டப்பட்டது. இங்கு பொருளாதார பின்தங்கிய நிலை நிலவும். ஏழ்மையான நாடுகள் இதற்கு சிறந்த உதாரணம் ஆகும். சுருங்க கூறின் பொருளாதார வளர்ச்சிக்கு சம்மந்தமான அவசியமான பொருளாதார காரணிகள் இத்தகைய நாடுகளில் காணப்படாமல் இருக்கின்றது.

மாறும் நிலையில் உள்ள சமுதாய அமைப்பில் பொருளாதார மேலெழு நிலை உருவாக்கப்படும். இந்நிலையில் பாரம்பரிய பழக்கவழக்கங்களின் சக்திகள் குறைந்து செல்லும். ஆனால் பொருளாதார ஊக்குவிப்பு இருக்கும்.

சமூக கட்டமைப்புக்களிலும், உருவங்களிலும் அடிப்படை வசதிகளிலும் முன்னேற்றம் ஏற்படும். இந்த மேலெழு நிலை அடைந்தவுடன், நிலையான சுயவளர்ச்சி சமுதாயத்தில் ஏற்படும்.

சமுதாய மேலெழு நிலை என்பது ஒரு சமுதாயம் வேளாண்மையை தலையாய தொழிலாக இருப்பதை விட்டுவிட்டு அதற்கு மாறாக தொழில்களை தலையாய வேலை வாய்ப்பாக மாற்றிக் கொள்ளுதலை குறிக்கும். ஒரு பொருளாதாரமானது இத்தகைய சமுதாய மேலெழு நிலை அடைய தனது சுய சேமிப்பிலிருந்து 20 முதல் 25 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) க்கு சமமான முதலீட்டை செய்ய வேண்டும். இத்தகைய மேலெழு நிலையை சில நாடுகளில் இரயில்வே துறை மற்றும் பாதுகாப்பு துறைகளின் வாயிலாக பெற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த மேலெழு நிலைக்குப் பின் பொருளாதாரமானது தன் நிறைவு அடைந்து முழு வளர்ச்சி நிலையை எட்டுகிறது. இந்த நிலையில் அரசு சில அடிப்படை தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது. உற்பத்தி வளங்கள் நிறைவாகவும், பொருள்களின் உற்பத்தி அதிகமாகவும் இருப்பதனால் அந்நாட்டு அரசு, நாட்டினை வலுப்படுத்த (அ) பாதுகாக்க அவற்றை பயன்படுத்துவதா (அ) மக்களின் நலன்களை உயர்த்த பயன்படுத்துவதா என முடிவெடுக்க வேண்டும்.

கடைசி நிலையானது, மக்களின் பெரும் அளவு நுகர்ச்சி நிலை எனப்படும். இந்நிலையில் பொதுமக்கள் அனைத்து வகைப் பொருள்களையும், குறிப்பாக அழியாப் பண்டங்களான கார் போன்ற வசதிப் பண்டங்களையும் ஆடம்பர பண்டங்களையும் பெரும் அளவில் நுகரத் தொடங்குவார்கள். ரோஸ்டோவின் வளர்ச்சிக் கட்டங்கள் அனைத்தும் பொதுப்படையான உண்மை நிலையாக உள்ளது. ஆனால் அனைத்து நாடுகளும் இந்நிலைகளின் வழியாக வளர்ச்சி நிலையை அடையவில்லை.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top