மனிதவளத்தின் இன்றியமையாமையை பற்றி அறிந்து கொள்ளுதலே பொருளாதார நலமாகும். மனித இனம், உற்பத்தி கருவியாக மாத்திரமல்லாமல், அவைகளுக்குள்ளே முடிவடைகிறதாக உள்ளது. ஆகவே, மக்கள் தொகையை பற்றி அறிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமானது. இது பொருளாதார முன்னேற்றத்தை தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாகும்.
மக்கள் தொகை என்பது, ஒரு நாட்டில் (அ) பகுதியில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் எண்ணிக்கையாகும்.
மக்கள் தொகையை தீர்மானிக்கும். அடிப்படை காரணிகளாவன
மக்கள் தொகை பெருக்கத்தில் பிறப்பு வீதம் ஒரு நேரடியான மாறுதலை உண்டுபண்ணும். பிறப்பு வீத அதிகரிப்பால், மக்கள் தொகையிலும் அதிகமான பெருக்கத்தையே காணமுடியும். பிறப்பு வீதம் கீழ்காணும் காரணிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது.
அறியாமை, இள வயது திருமணம், அதிகமான குழந்தை பிறப்புகள், பழைய சமூக பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், பரவலாக நிலவும் படிப்பறிவு இல்லா நிலை அதிகரிப்பு மற்றும் பிறப்பு கட்டுப்பாடு முறைகளின் அறியாமை அதிகரிப்பு, ஆகியவற்றின் மூலமாக பிறப்பு வீதம் உயர்ந்து, மக்கள் தொகையானது பெருமளவுக்கு அதிகரிக்கிறது.
சமூக விழிப்புணர்வு மற்றும் மக்களிடையே பரவிக் காணப்படும் கல்வி அறிவானது, திருமண வயதை அதிகரிக்க உதவுகிறது. குடும்ப கட்டுபாடுகள் பற்றிய அறிவு பெருக்கம், குடும்ப நலத்திற்காக பிறப்பு வீதம் குறைவு மற்றும் குழந்தை பிறப்பு அதிகரிப்பு குறைவு, போன்றவை மூலமாக பிறப்பு வீதம் குறைகின்றது.
மக்கள்தொகை பெருக்கத்திற்கு மற்றொரு காரணம் குறைவான இறப்பு வீதமேயாகும். பசி, பட்டினி, சத்துள்ள உணவு கிடைக்காமை, தொற்று நோய், போதிய மருத்துவ, சுகாதார வசதி குறைவு போன்ற காரணங்களால் இறப்பு வீதம் அதிகரிக்கிறது. மறுபுறமாக நோக்கும்போது, சத்துள்ள உணவு, தூய குடிநீர், மேம்பட்ட மருத்துவ வசதிகள், துப்புரவு வசதிகள், தொற்று நோய் ஒழிப்பு போன்றவற்றின் விரிவாக்கத்தால் இறப்பு வீதமானது குறைவடைகிறது.
இடப்பெயர்ச்சி இருவகைப்படும். அவையாவன:
a. வெளிநாட்டில் குடியேறுதல் (வெளிக்குடிப்பெயர்ச்சி)
b. நம் நாட்டில் குடிபுகுதல் (உள்குடிப் பெயர்ச்சி)
வெளி குடிப் பெயர்ச்சியானது மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்கின்றது. உள் குடிப் பெயர்ச்சியானது மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்கின்றது.
குடிப்பெயர்ச்சி, மக்கள்தொகை வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைவதில்லை. ஏனெனில் வெவ்வேறு நாடுகள், குடியுரிமை இடப்பெயர்வில் பலவித கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. எனவே மக்கள்தொகை மாற்றம் அடைய இரண்டு முக்கியக் காரணிகள் பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதமே ஆகும்.
மக்கள்தொகை வளர்ச்சியானது, பொருளாதார வளர்ச்சிக்கு கிளர்ச்சியூட்டுதலாகவும், ஒரு தடையாகவும் இருக்கக்கூடும்.
மக்கள்தொகை வெடிப்பானது, அச்சுறுத்தக்கூடிய, அதிவேகமான மக்கள்தொகையின் வளர்ச்சி வீதத்தையே குறிக்கும். வெடிப்பிற்கான காரணங்கள் :
அதிக பிறப்பு வீதமானது மக்கள்தொகை பெருக்கத்திற்கு மிகமுக்கியமான பொறுப்புள்ள காரணமாகும். இந்தியாவில் 1891-1900-ல் 1000 பேருக்கு 45.8 வீதமும் மற்றும் 2001-ல் 1000 பேருக்கு 25.8 சதவீதமுமாக குறைந்திருந்தாலும் இன்னும் மக்கள்தொகை அதிகரித்தே காணப்படுகிறது. இவைகள் மூலம் பிறப்பு வீதம் குறையவில்லை என்பதையே காட்டுகிறது. குடும்ப நலம் பற்றிய விளம்பரங்கள், குடும்ப நலவாழ்வு திட்டங்கள், மக்கள்தொகை பற்றிய கருத்தரங்குகள் மூலமே இப்பிறப்பு வீதத்தை குறைக்க முடியும்.
சமீப காலங்களில், இறப்பு வீதக் குறைவு மக்கள் தொகை வளர்ச்சியினை பெருக்குவதற்கு முக்கிய காரணமாய் உள்ளது. 2001-ல் இந்தியாவில் இறப்பு வீதமானது 1,000 பேருக்கு 8.5 சதவீதமாக இருந்தது. மருத்துவ துறையில் ஏற்பட்ட முன்னேற்றமும், ஆட்கொள்ளி நோய்களாகிய, அம்மை, பிளேக், டைபாய்டு ஆகிய நீண்டகால நோய்கள் ஒழிந்துவிட்ட நிலையும் மக்கள்தொகை பெருகக் காரணங்களாகும். சுத்தம், சுகாதார வசதிகள், குழந்தை பிறப்புக்கு முன், குழந்தை பிறப்புக்கு பின் உள்ள பராமரிப்புக்கள், குழந்தைகளின் இறப்பு வீதத்தை குறைக்கின்றது.
இந்தியாவில் இள வயதிலேயே திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்திய பெண்களின் திருமண வயது 18 ஆக உள்ளது. இது பிற நாடுகளோடு ஒப்பிடும்போது மிக குறைவானதே. மற்ற நாடுகளின் திருமண வயதானது 23 முதல் 25 ஆகும். இதனால் மகப்பேறு காலம் அதிகரிக்கிறது. பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
இந்தியாவில் ஒவ்வொரு தனி மனிதனும் கட்டாயம் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது ஒரு இன்றியமையாத சமூக கடமையாகும். கூட்டுக் குடும்பத்தில் தனிநபரின் பொறுப்புக்கள் உணரப்படவில்லை மாறாக மொத்த நபர்களின் சமநிலையான நுகர்வுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அநேக மக்களின் “ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண் குழந்தை” என்ற எதிர்பார்ப்பினால் குடும்பத்தின் அளவானது அதிகரித்துச் செல்கிறது.
வறுமையும், மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஒரு காரணமாக உள்ளது. குழந்தைகள், ஒவ்வொரு குடும்பத்திலும், வருமானம் ஈட்டக்கூடிய பெற்றோர்களுக்காக வேலைகளுக்குச் சென்று உதவி செய்ய வேண்டியுள்ளது. பள்ளிக்கு செல்லும் வயதில் வேலைக்குச் சென்று பொருள் ஈட்டுவதால் குழந்தைகள் குடும்பத்தின் சொத்தாகக் கருதப்படுகிறார்கள். கூடுதலாக பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைகளும் வருமானம் ஈட்டும் உறுப்பினர்களாவர். இது அவர்களின் குடும்ப வருமாமனத்திற்கு துணை புரியும்.
மக்களின் வாழ்க்கைத் தரம் குறைவானது, அதிக குழந்தைகள் பிறக்க வழிவகுக்கிறது. ஏனெனில் குடும்பத்தில் ஒரு கூடுதல் குழந்தை பெருஞ் சொத்தாக கருதப்படுகிறதேயன்றி, அது ஒரு பெரும் பொறுப்பு என்கின்ற எண்ணம் இல்லை. மக்கள் தொகையில் பெரும்பாலானோர் கல்வி அறிவு அற்றவர்களாக இருப்பதனால் குடும்ப கட்டுப்பாட்டின் அவசியத்தை அவர்கள் புரிந்துக்கொள்ள இயலவில்லை. சிறிய அளவான குடும்பம் நல்ல வாழ்க்கை தரத்தை அனுபவிக்க உதவுகிறது என்பது அவர்களுக்கு தெரியாததொன்றாகும்.
இந்திய மக்கள்தொகையில் (60%) பெரும்பாலானோர் கல்வியறிவு அற்றவர்களாகவும் (அ) குறைகல்வி பெற்றவர்களாகவும் உள்ளனர். இதனால் அவர்கள் குறைவான வேலையை ஏற்றுக்கொண்டு, தாங்களைத் தாங்களே ஆதரித்துக் கொள்ள இயலாத நிலையில் வாழ்கின்றனர். வேலையின்மையும், குறைவேலை உடைமையும் வறுமைக்கு வழிவகுக்கிறது. கல்வியறிவின்மை அதிக விகிதத்தில் நிலவி வருவதால், மக்கள் பேரளவு அறியாமையில் இருந்துக்கொண்டு மூட சமூக, பழக்க வழக்கங்களிலும் மற்றும் இளவயதில் திருமணம், ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற மோகங்களினால் நிறைந்துள்ளார்கள். இதன் விளைவாக மக்கள் தொகை பெருக்கம் உயர்ந்த வீதத்தில் இருக்கிறது.
இந்தியாவில் மக்கள்தொகை வெடித்து, பெருகி காணப்படுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு உழைப்பின் அளிப்பு அதிகமாக தேவைப்பட்டாலும் நமது மக்கள்தொகை தொடர்ந்து வளர்வதால் பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகிறது. கீழ்க்கண்ட வழிகளில் மக்கள்தொகை பெருக்கம் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கின்றது.
இந்திய மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அதற்கேற்ற விவசாய உற்பத்தியில் சமவிகித வளர்ச்சி இல்லையெனில் கடுமையான உணவுப் பற்றாக்குறை பிரச்சினையை சந்திக்க வேண்டி நேரிடும்.
மக்கள்தொகை எவ்வளவு அதிகரிக்கிறதோ, குழந்தைகளும், முதியோரின் எண்ணிக்கையும் அவ்வளவாக உயர்கிறது. குழந்தைகளும் முதியோரும் உற்பத்தியில் ஒரு பங்கினையும் வகிக்காமல், பொருள்களை மட்டும் நுகர்கிறார்கள். இவ்வாறாக குழந்தைகள் மற்றும் முதியோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது சத்துணவு, மருத்துவ வசதி, பொது சுகாதாரம் மற்றும் கல்விப் போன்ற அடிப்படை தேவைகள் கவனம் செலுத்தப்படாமலேயே பெருமளவில் கிடக்கின்றன.
அதிகவேகமாக வளரும் மக்கள்தொகை தலா வருமானம் மற்றும் நாட்டு வருமானத்தின் சராசரி வளர்ச்சி வீதத்தை தடைச் செய்கிறது. நாட்டு வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பை நிலையாக வளர்ந்து வரும் மக்கள்தொகை நுகர்ந்துவிடுகிறது.
அதிவேக மக்கள்தொகை வளர்ச்சி சேமிப்பையும் மற்றும் முதலீட்டின் திறனையும் குறைக்கிறது என்பது மிக ஆபத்தான விளைவாகும். நாட்டு வருமானம் மற்றும் தலா வருமானம் இந்தியாவில் குறைவாக உள்ள இந்நிலையில் சேமிப்பிற்கு என்று பணத்தை ஒதுக்க வாய்ப்பில்லை. இதன் விளைவாக உறுதித் தேவை குறைந்து, மக்களின் வாங்கும் சக்தியும் குறைகிறது. இந்த மக்கள் தொகையின் விரிவான வளர்ச்சி, உச்ச உற்பத்தி திறனையும், நாட்டின் வருமானத்தையும் தீர்மானிக்கும் காரணியான சேமிப்பு வளர்ச்சி வீதத்தை பாதிக்கிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது மூலதன ஆக்கம் ஆகும். அதிலும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு மூலதன ஆக்கம் மிக மிக முக்கியம். மூலதன ஆக்கம், சேமிப்பு மற்றும் முதலீட்டை சார்ந்துள்ளது. அதிகவேக மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும்போது, இம் மூலதன ஆக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. இதன் விளைவாக வேலையின்மையும், குறைவேலை வாய்ப்பும் அதிகரிக்கிறது. இவ்வாறாக அதிவேக மக்கள் தொகை வளர்ச்சி அந்நாட்டின் மூலதன ஆக்கத்தை மிக மோசமான பாதிப்புக்குள்ளாக்குகிறது.
வளரும் மக்கள் தொகை வேலையில்லா திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கிறது. மக்கள் தொகை வளரும்போது, உழைப்பும் அதிகரிக்கிறது. இந்த அதிகரிக்கும் உழைப்பு சக்தியை நிலவும் பற்றாக்குறையான வேலை வாய்ப்புக்கள் முழுமையாக ஈர்த்துக் கொள்ள இயலவில்லை. இதன் விளைவாக நிறைய மக்கள் வேலையில் அமர்த்தப்படாமலும், குறைவான வேலையில் அமர்த்தப்பட்டும் இருக்கிறார்கள்.
அடிக்கடி குழந்தை பெறுவதால், நீண்ட காலத்தில், உற்பத்தி நடவடிக்கைகளில் பெருமளவு மகளிரால் வேலை செய்ய இயலவில்லை. இதனால் மனிதவளம் வீணாகிறது. மேலும் பொருளாதார வளர்ச்சிக் குன்றுகிறது.
மக்கள்தொகை பெருக்கமானது நாட்டு வருமானம் மற்றும் தனி நபர் வருமானத்தை பெருமளவில் பாதிக்கின்றது. இதன் காரணமாக மக்களின் வாழ்க்கைத் தரமானது குறைகிறது. இது உற்பத்தித் திறனை குறையச் செய்கிறது. இத்தடைகள் பொருளாதார வளர்ச்சியை பாதிப்படையச் செய்கிறது.
மக்கள்தொகை அதிகரிப்பானது, குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதன் காரணமாக மருத்துவ பராமரிப்பு, பொது சுகாதாரம், குடும்ப நலன், கல்வி, வீட்டுவசதி போன்ற சமூக செலவுகளின் தேவையானது அதிகரிக்கிறது.
இந்தியாவில் மக்கள்தொகை வளர்ச்சியானது, சிக்கனமற்ற முறையாகிய நிலம் மற்றும் வீடுகள் துண்டு துண்டுகளாக பிரிக்கப்படுகின்ற நிலையை உருவாக்குகிறது. நிலங்கள் மிகச் சிறிய அளவானதாக இருப்பதால் இயந்திரமயமாக்கப்பட்ட உழவு முறையை கையாள இயலவில்லை. ஐந்தாண்டு திட்டங்கள் மூலமாக வேளாண்மையில் பல வெற்றிகரமான முன்னேற்றங்களை செய்திருந்தாலும் விவசாய உற்பத்தியானது, மக்கள்தொகை வளர்ச்சியோடு ஒப்பிடும்போது மிக குறைவான நிலையிலேயே இருந்து வருகிறது.
மக்கள்தொகை வளர்ச்சி வேகம், தொழில் துறை வளர்ச்சியை அதிகமாக பாதிக்கின்றது. இதன் காரணமாக குடிசை மற்றும் சிறுத்தொழில்களும் மேலும் பெரும் தொழில்களும் போதுமான அளவில் வளர்ச்சி அடையவில்லை. பெரும் மற்றும் சிறிய தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலதனம் பெருமளவில் தேவைப்படும் போது இந்திய மூலதன ஆக்க வீதமோ மிகக் குறைவாக உள்ளது. நம் நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்ய பொது முதலீடு போதுமானதாக இல்லை.
அதிவேக மக்கள்தொகை அதிகரிப்பு, நிதிச் சுமையாக அரசுக்கு அமைகிறது. சமூக நலத் திட்டங்களுக்காகவும், வறுமையை அகற்றுவதற்காகவும் வளங்களைத் திரட்டி வறுமையை அகற்றுவதற்கு நிதியாக்கம் செய்ய வேண்டியுள்ளது. தூய்மையான குடிநீர் வழங்குவதற்கும், குடியிருப்பு வசதி ஏற்படுத்தி தருவதற்கும் நல்ல சுகாதார சூழ்நிலையை உருவாக்குவதற்கும், மருத்துவ வசதி செய்துதருவதற்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பெரும் பொருள் செலவை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டால் அரசு அதிக உற்பத்தி நோக்கங்களுக்காக செலவு செய்யக் கூடும். இதன் வாயிலாக நாட்டு மற்றும் தலா வருமானம் உயரவும், வாழ்க்கை தரம் உயரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
மேற்குறிப்பிடப்பட்ட காரணிகளின் விளக்கங்கள் இந்தியாவின் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. மக்கள் தொகையின் அதிவேக வளர்ச்சி வீதம், பொருளாதார முன்னேற்றத்தை மிகவும் மோசமான அளவு பாதிக்கிறது. எனவே ஒரே இடத்தில் நிற்பதற்கு நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது என்று சில நேரங்களில் சொல்லப்படுகிறது.
இந்த வீதத்தை அதிகரிப்பதினால், குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை கையாளும் தம்பதிகளின் விகிதம் அதிகரிக்க வேண்டும்.
இவ்வீதம் மேலும் குறைக்கப்பட வேண்டும். ஏனெனில் குழந்தைகள் குறைந்த எண்ணிக்கையில் இறக்கும்போது, பொதுமக்கள் சிறு குடும்ப நெறியினை பின்பற்ற ஊக்கமளிக்கும்.
நிலத்தை சார்ந்திருக்கும் மக்கள்தொகை அழுத்தத்தை குறைக்க வேண்டும். கிராமப் புறங்களில் குடிசை மற்றும் சிறு தொழில்களை, அதிகபட்ச மக்களுக்கு வேலை வாய்ப்பளிப்பதற்காக, வளரச் செய்தல் வேண்டும். இதன் வாயிலாக மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்போது அது மக்கள் தொகையை கட்டுப்படுத்தும்.
கல்வி கற்ற மக்கள் தங்களுடைய குடும்ப அளவினைப் பற்றி அதிக பொறுப்பு வாய்ந்த கண்ணோட்டத்தைப் பெற்றுள்ளனர். அவர்கள் சிறு குடும்பத்தின் நன்மைகளைப் பற்றியும், குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை பயன்படுத்துவதின் வாயிலாகவும் குடும்ப அளவினை குறைக்க முடியும் என்ற கருத்துக்களை புரிந்து கொண்டு செயல்படுவார்கள். இது பிறப்பு வீதத்தைக் குறைக்கும்.
காலம் தாழ்த்தி திருமணம் செய்வதற்கு ஊக்கமளிக்க வேண்டும். அதே நேரத்தில் முன்கூட்டியே திருமணம் செய்வதை கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஆண்களின் திருமண வயது 21 மற்றும் பெண்களின் வயது 18 என்ற வயது வரம்பை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்.
குழந்தைத் திருமணத்தையும் ஒரே சமயத்தில், ஒருவர் பல பெண்களை திருமணம் செய்துக் கொள்ளுதலையும் (polygamy) தடைசெய்ய சட்டங்களை இயற்றி அவற்றை அமுலுக்குக் கொண்டு வரவேண்டும்.
மக்கள் தொகையின் அதிவேக வளர்ச்சியைக் கட்டுப்படுத்த இது ஒரு முக்கியமான வழிமுறையாகும். குடும்ப நலத்திட்டமிடுதல் என்பது குடும்பத்தின் அளவைக் கட்டுப்படுத்தலாகும். இத்திட்டம் ஒரு தேசிய இயக்கமாக உருவெடுக்க வேண்டும். குடும்ப நலத்திட்டத்தைப் பற்றிய கல்வியை அனைவரும் பெறச் செய்தல் வேண்டும். பிறப்பைக் கட்டுப்படுத்தும், வெவ்வேறு வழிமுறைகளை பொதுமக்கள் அறியச் செய்தல் வேண்டும்.
மக்கள்தொகைப் பற்றிய கோட்பாடுகள்
பொருளியலில், மால்தசின் மக்கள் தொகைக் கோட்பாடு என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். பொருளியலறிஞர் மால்தசு அவர்கள், மக்கள் தொகையின் வளர்ச்சிப் பெருக்கம், உணவு உற்பத்திப் பெருக்கத்தைவிட தாண்டி விஞ்சிச் செல்லக் கூடும் என்கிறார். இத்தகைய அதிவேக பெருக்கம் பொருளாதாரத்தின் வளர்ச்சியை தடை செய்து மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டிக் காட்டுகிறார். இக்கோட்பாட்டை கீழ்காணும் மூன்று கூற்றுகளில் விளக்கலாம்
மக்கள்தொகையின் அளவு, உணவு உற்பத்தியின் கிடைப்பளவால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை முதல் கூற்று குறிப்பிடுகிறது. அதாவது பெருமளவு உணவு உற்பத்தியால் அதிக மக்கட் தொகையை பராமரிக்க இயலும். மக்கட் தொகை வளர்ச்சி வேகத்திற்குச் சமமாக உணவு உற்பத்தி அதிகரிக்காவிடில் அது ஏழ்மைக்கு வழிவகுக்கும். உணவின்மையால் மக்கள் இறந்துவிடுவர். உணவிற்கான தேவை, இறப்பை ஏற்படுத்தி மக்கள்தொகையை தானாக நிலைபெறச் செய்யும். உணவு உற்பத்தி அதிகரிக்கும்போது மக்கள் தங்கள் குடும்பத்தில் அதிக உறுப்பினர்களை ஏற்றுக் கொள்ள முற்படுவர். இதன் விளைவாக உணவிற்கு அதிகத் தேவை ஏற்படும். எனவே தனி மனிதனுக்குக் கிடைக்கும் உணவின் அளவு குறையும். வாழ்க்கைத் தரம் குறைவடையும்
இரண்டாவது கூற்றுப்படி மக்கள்தொகை 2, 4, 8, 16, 32 என்ற பெருக்கல் வீதத்திலும் உணவுப் பொருள் உற்பத்தி 2, 4, 6, 8, 10 என்ற கூட்டல் வீதத்திலும் அதிகரிக்கின்றன. மக்கட் தொகை அதிகரிப்பு நிலத்தின் மீது சுமையை அதிகரிக்கின்றது. நிலத்தின் அளவு வரையறுக்கப்பட்டிருப்பதால் குறைந்து செல் விளைவு விதி செயல்படும். இதனால் உற்பத்தி அளவு குறையும். தனி மனிதனுக்குக் கிடைக்கும் உணவின் அளவும் குறையும். மக்கட் தொகை வளர்ச்சிக்கும் உணவு பொருள் உற்பத்திக்கும் இடையே காணப்படும் வேறுபாட்டால் உயிர் வாழ தேவையான அளவிற்கு மட்டுமே உணவு கிடைக்கும். மக்கள் வறுமையிலும் ஏழ்மையிலும் அவதிப்பட நேரிடும்.
என இரு தடைகள் உள்ளன.
மக்கள்தொகையைக் குறைக்க மனிதன் மேற்கொள்ளும் முயற்சிகள் செயற்கைத் தடைகள் எனப்படும். காலந் தாழ்த்திய திருமணம், வாழ்க்கையில் கட்டுப்பாட்டுடன் இருத்தல், இதே போன்ற பிற குடும்ப அளவைக் கட்டுப்படுத்தும் மக்கள் கையாளும் வழிமுறைகள் செயற்கை தடைகளுள் அடங்கும்.
இத்தடைகள், இறப்பு வீதத்தை அதிகரித்து மக்கள்தொகை வளர்ச்சியை பாதிக்கிறது. இவ்வியற்கைத் தடைகள் பல உள்ளன. மனிதனின் வாழ்நாளைக் குறைக்கும் தகாத செயல்களும், வறுமையும் இயற்கைத் தடைகளுள் அடங்கும். பொதுவான வியாதிகள், பிளேக் போன்ற கொடிய நோய்கள், போர்கள், பஞ்சங்கள், மனித உடலை வருத்தும் மிகை உழைப்பு, முழுமையற்றத் தொழில்கள், தட்பவெப்ப நிலைகளுக்கு திறந்த நிலை, கடுமையான ஏழ்மைநிலை, தவறான குழந்தை வளர்ப்பு முறைகள் போன்றவை இயற்கைத் தடைகளுக்கு சில எடுத்துக்காட்டுகளாகும்.
மனித இனம், இவ்வறுமைக் கொடுமையை அகற்ற, மால்தசு இச்செயற்கைத் தடைகளை பரிந்துரைக்கின்றார். இல்லையேல் இயற்கைத் தடைகள் தாமாகச் செயல்படத் துவங்கும். இதனால் மக்கள்தொகைக்கும் உணவு உற்பத்திக்குமிடையே ஒரு சமநிலை ஏற்படும்.
இதைவிட அதிகமாக மக்கட்தொகை அதிகரித்தால் அந்நாடு மிகை மக்கட் தொகை கொண்ட நாடாகக் கருதப்படும். மேலும் தலா உற்பத்தி குறையத் தொடங்கும். வளங்களோடு ஒப்பிட அதிக தொழிலாளர்கள் இருப்பது தெரியும். கொடுக்கப்பட்ட வளங்கள் மற்றும் மூலதனப் பொருட்கள் அதிக தொழிலாளர்களிடையே பகிர்ந்து கொள்ளும் போது தனியொருவருக்கு கிடைக்கும் மூலப்பொருளின் அளவு குறையும். ஆகவே சராசரி உற்பத்தி குறையும். தலா உற்பத்தியின் அளவு குறையும்பொழுது, தலா வருமானம், மக்களின் வாழ்க்கைத் தரம் முதலியனவும் குறையும். மிகை மக்கள்தொகையானது, குறைவான வாழ்க்கைத் தரம், மறைமுக வேலையின்மை, உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றிற்கு வழி வகுக்கும். குறைவாக மக்கட் தொகை, மிகை மக்கட்தொகை இரண்டுமே குறைபாடுகளைக் கொண்டதாகும். தலா உற்பத்தி உச்ச நிலையில் உள்ள உத்தம் அளவு மக்கட்தொகையே ஒரு நாட்டிற்கு மிகச் சிறந்த மக்கட்தொகையாகும்
மக்கட்தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் அதன் விளைவாக தலா வருமானத்தில் ஏற்படும் மாற்றங்களுக்குமிடையே உள்ளத் தொடர்பினை உத்தம் அளவுக் கோட்பாடு வெளிப்படுத்துகிறது. நவீன பொருளியலறிஞர்களான சிட்விக், கேனன், டால்டன் மற்றும் ராபின்சு போன்றவர்கள் இக்கோட்பாட்டை ஆதரித்தார்கள். இயற்கை வளங்கள், மூலதனப் பொருள்களின் இருப்பு மற்றும் தொழில்நுட்ப நிலை ஆகியவற்றிற்கேற்ற சிறந்த மக்கட் தொகையே உத்தம் அளவு மக்கள்தொகை எனலாம். இந்த மக்கட்தொகை அளவில் தலா உற்பத்தி (அல்லது உண்மையான தலா வருமானம்) உச்சத்தில் இருக்கும். வேறு வகையாகக் கூறினால் தலா உற்பத்தி உச்சத்தில் இருக்கும் நிலையில் உள்ள மக்கட் தொகையே உத்தம் அளவு மக்கட்தொகை எனலாம். உத்தம் அளவைவிட மக்கட்தொகை குறைவாக இருப்பின் அது மக்கள்தொகை குறைவாக உள்ள நாடு எனவும் அதிகமாக இருந்தால், அது மிகை மக்கள் தொகை கொண்ட நாடு எனவும் அழைக்கலாம்.
ஒரு நாட்டில் இயற்கை வளங்களும், மூலதன கருவிகளும், தொழில்நுட்ப நிலை ஆகியவை மாறாமல் நிலையாக இருப்பதாகக் கொள்வோம். இவ்வளங்களோடு ஒப்பிட மக்கள்தொகை சிறியதாக இருக்கும் என்போம். மக்கட்தொகை அதிகரிக்குமானால், நாட்டில் தொழிலாளர்களும் அதிகரிப்பர். மேற்கூறிய நிலையான வளங்களுடன் கூடுதலான தொழிலாளர்கள் சேர தலா உற்பத்தி அதிகரிக்கும். ஆரம்ப கட்டத்தில், சிறப்பு தேர்ச்சி காரணமாகவும் இயற்கை வளங்களை செம்மையாகப் பயன்படுத்துவதாலும் தலா உற்பத்தி வேகமாக அதிகரிக்கும். தொடர்ந்து மக்கள் தொகை அதிகரித்தால், அனைத்து வளங்களும் முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு நிலை உருவாகும். அப்பொழுது தலா வருமானம் உச்சத்தில் இருக்கும். இந்த அளவினையே உத்தம அளவு மக்கட் தொகை என்கிறோம்.
M - பூஜ்ஜியமாக இருந்தால், மொத்த மக்கட்தொகை உத்தம் அளவு மக்கட்தொகைக்கு சமமாக இருக்கும். M - நேர் மறையாக இருந்தால், மொத்த மக்கட்தொகை உத்தம் அளவு மக்கட்தொகையைவிட அதிகமாக இருக்கும். M - எதிர்மறையாக இருந்தால், மொத்த மக்கட்தொகை உத்தம அளவு மக்கட்தொகையைவிட குறைவாக இருக்கும்.
இக்கோட்பாடு பிறப்பு வீதத்திற்கும், இறப்பு வீதத்திற்கும் உள்ள உறவை விளக்குகிறது. பிறப்பு வீதம் என்பது ஒரு வருடத்தில் 1,000 நபர்களுக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்பதைக் குறிக்கும். இறப்பு வீதம் என்பது ஒரு வருடத்தில் 1,000 நபர்களில் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்பதைக் குறிக்கும். பொருளாதார முன்னேற்றத்தின் விளைவாக இவ்விரு வீதங்களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று இக்கோட்பாடு கூறுகின்றது. மக்கட்தொகை வளர்ச்சியில் மூன்று நிலைகள் உள்ளதாக இக்கோட்பாடு கூறுகின்றது.
முதல் நிலையில், நாடு முன்னேற்றம் குறைந்து, பின்தங்கிய நிலையில் இருக்கும். வேளாண்மை மக்களின் முக்கியத் தொழிலாகும். மிகவும் பழமையான உற்பத்தி முறைகளே பயன்படுத்தப்படும். மக்களின் வாழ்க்கை தரம் குறைந்து காணப்படும். இந்த நிலையில் பிறப்பு, இறப்பு வீதங்கள் உயர்வாக இருக்கும். சத்தில்லா உணவு, சுகாதார வசதியின்மை, போதிய மருத்துவ வசதிகள் இல்லாமை ஆகியவையே அதிக இறப்பு வீதத்திற்கு காரணங்களாகும்.
கல்வியறிவு இன்மை, குடும்ப நலத்திட்டங்கள் பற்றிய அறியாமை, இளவயது திருமணம், சமுதாய நம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவை பிறப்பு வீதம் அதிகமாக இருப்பதற்கான காரணங்களாகும். இந்தக் கட்டத்தில், அதிக பிறப்பு வீதம், அதிக இறப்பு வீதத்தை சரிக்கட்டுவதால், மக்கள் தொகை வளர்ச்சி அதிகமாக இல்லை. தேக்க முற்று காணப்படுகின்றது.
நாடு முன்னேறும் போது, தொழில் நடவடிக்கைகள் அதிகரித்து, அதிக வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. இதனால் நாட்டு வருமானமும், தலா வருமானமும் அதிகரித்து, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்கிறது. நாடானது, உயர்ந்த பிறப்பு வீதமும், குறைந்த இறப்பு வீதமும் கொண்ட இரண்டாம் நிலையை அடைகிறது. உயர்ந்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக போதிய மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெறுகின்றன.
தொற்று நோய்கள், உயிர் கொள்ளி நோய்கள் முதலியன ஒழிக்கப்படுகின்றன. நல்ல சுகாதார வசதிகள் பெருகுகின்றன. அதனால் நோய் பரவும் வேகம் குறைந்து, இறப்பு வீதமும் குறைகின்றது. மாற்றத்திற்கான தயக்கம் காரணமாகவும், நீண்ட நாளைய பழக்க வழக்கங்களாலும், பிறப்பு வீதம் உயர்ந்தே காணப்படுகிறது. எனவே உயர்ந்த பிறப்பு வீதம், குறைந்த இறப்பு வீதத்திற்கிடையே வேறுபாடு தோன்றுகிறது. இதுவே மக்கள்தொகை வளர்ச்சி வீதம் அதிகமாகக் காரணமாகிறது.
பொருளாதார முன்னேற்றம் காரணமாக சமுதாய அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. வேளாண்மை சார்ந்த நாடு தொழில் மயமாவதில் முனைப்பு ஏற்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மக்கள் ஊரகப் பகுதியிலிருந்து நகர்புறத்திற்கு இடம் பெயருகிறார்கள்.
மக்களின் மனப்பான்மை மாற்றமடைகிறது. கல்வியறிவு காரணமாக, உயர்ந்த வாழ்க்கைத் தரத்திற்கு, சிறு குடும்பமே உகந்தது என்று உணருகிறார்கள். எனவே பிறப்பு வீதம் கணிசமாகக் குறைகிறது. சிறந்த மருத்துவ வசதிகள், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல், நல்ல சுகாதார வசதிகள் ஆகியவற்றை செயல்படுத்துவதால் இறப்பு வீதம் குறைகிறது. இந்நிலையில் பிறப்பு, இறப்பு வீதங்கள் குறைவாக இருப்பதால், மக்கள் தொகை வளர்ச்சி நிலையாக இருக்கும். உலக நாடுகள் அனைத்தும் இம்மூன்று நிலைகளையும் கடக்க வேண்டும் என்பது மரபாகும்.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டிலுள்ள அல்லது வரையறுக்கப்பட்ட ஒரு பகுதியிலுள்ள அனைத்து மக்களின் பொருளாதார, சமூக மற்றும் மரபியல் தொடர்பான புள்ளி விவரங்களைத் திரட்டுவது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எனப்படும். திரட்டப்பட்ட விவரங்கள் தொகுக்கப்படும். பின் அவை பகுத்தாய்வு செய்யப்பட்டு மதிப்பீடு செய்யப்படும். இந்தியாவில் மக்கள்தொகை, 1872ஆம் ஆண்டு கணக்கெடுக்கப்பட்டது. அதன் பின்னர் 1881ல் கணக்கெடுக்கப்பட்டது. அப்போது முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் வளர்ச்சி வீதத்தையும், பகுதி வாரியாக மக்கள்தொகைப் பரவலில் காணப்படும் மாற்றத்தை அறியவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியமாகிறது. பொருளாதார திட்டமிடுதலுக்கும், சமூக நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பயன்படுகிறது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பால், இந்திய மக்களின் இயல்பினை அறிய முடியும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பினால் கீழ்க்காணும் விவரங்களை அறிய முடிகிறது.
உலக மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீத பரப்பளவு மட்டுமே இந்தியா கொண்டுள்ளது. ஆனால் உலக மக்கள் தொகையில் 16.84 சதவீதத்தை வாழ வைக்க வேண்டியுள்ளது. இந்திய மக்கள் தொகையானது 1901ல் 238.5 மில்லியனாக இருந்தது 2001ல் 1,027 மில்லியனாக அதிகரித்துள்ளது. ஒரு நூற்றாண்டில் இந்திய மக்கள்தொகையானது 788.5 மில்லியனாக அதிகரித்துள்ளது. உண்மையிலேயே இந்த அதிகரிப்பு இந்தியாவின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை அச்சுறுத்துவதாக உள்ளது.
1921 வரை மக்கள்தொகை வளர்ச்சியானது குறைவான வீதத்தில் இருந்தது. ஆனால் அதன் பிறகு மக்கள் தொகை மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. எனவே தான் 1921ம் ஆண்டு “பெரும்பிரிவினை ஆண்டு' எனப்படுகிறது. 1921ம் ஆண்டிற்கு பிறகு இந்தியா, மக்கள் தொகை வளர்ச்சிக் கட்டத்தின் எல்லா நிலைகளையும் வெற்றிகரமாக கடந்த, தற்போது “மிகக் குறைவான செழுமைக்காலமாக” கருதப்படும் ஐந்தாவது நிலையில் உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி வீதமானது. பிறப்பு, வீதம், இறப்பு வீதம் ஆகிய இரு காரணிகளைப் பொருத்து அமையும். இந்திய மக்கள்தொகை அதிகரிப்பு பிறப்பு மற்றும் இறப்பு வீதங்களுக்கிடையேன வேறுபாட்டைப் பொருத்தது. இந்தியாவில் 1901ல் ஆயிரத்துக்கு 49.2 ஆக இருந்த பிறப்புவீதம் 2001ல் 25.8 ஆக குறைந்துள்ளது. அதே காலக்கட்டத்தில் ஆயிரத்துக்கு 42.6 ஆக இருந்த இறப்பு வீதம் 8.5 ஆக குறைந்துள்ளது.
இயல்பான வளர்ச்சி வீதமானது (குறிப்பிட்ட காலத்தில் பிறப்பு வீதம் - இறப்பு வீதம்) 1901-1911ல் 6.6 ஆக இருந்தது. 1991-2001ல் 17.3 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள குறைவானது பிறப்பு வீதத்தில் ஏற்பட்டு குறைவைவிட அதிகமாக உள்ளதாக இயல்பான வளர்ச்சி வீதம் விளக்குகிறது. மருத்துவ வசதிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தொற்று நோய்கள் மற்றும் கொள்ளை நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டதும் இறப்பு வீதம் குறைந்ததற்கான காரணமாகும். இது முன்னேற்றத்திற்கான ஒரு நல்ல அறிகுறியாகும். குடும்ப நலதிட்டங்கள் கிராமப்புறத்தை நல்ல முறையில் சென்று அடைய வேண்டும். அப்பொழுது தான் பிறப்பு வீதம் இன்னும் குறையும் என்று மக்கள்தொகை கணக்கெடுப்பின் பிறப்பு வீதம் காட்டுகிறது.
உறுதியான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு நிலையான மக்கள்தொகையை 2045க்குள் அடைவதையே நீண்டகால நோக்கமாகக் கொண்டு சமீபத்தில் இந்திய அரசால் தேசிய மக்கள்தொகை (National Population Policy) கொள்கை (2000) நடைமுறைப்படுத்தப்பட்டது.
வளரும் நாடுகளுள், மக்கள் தொகைக் கொள்கையை செயல்படுத்திய முதல் நாடு இந்தியாவாகும். மேலும் இது 1952ல் நாடு தழுவிய அளவில் குடும்ப நலதிட்டத்தையும், அறிமுகப்படுத்தியது. இறப்பு, பிறப்பு வீதங்களின் குறைப்பில் ஒரு குறிப்பிடத் தக்க வேறுபாடு இருத்தல் வேண்டும் என்பதே மக்கள் தொகை கொள்கையின் முக்கிய நோக்கமாகும். எந்த ஒரு அரசும் மக்கள் தொகை அமைப்பில் மாற்றத்தையும், கட்டுப்படுத்துவதற்குரிய முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் தொகை கொள்கை கூறுகிறது.
"தேவையான கருத்தடை சாதனங்கள் வழங்கியும், சுகாதார கட்டமைப்பு வசதிகள், சுகாதார பணியாளர்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பணிகள் மூலம் குழந்தை பராமரிப்பை மேம்படுத்துதலே தேசிய மக்கள்தொகை கொள்கை (2000)யின் உடனடி நோக்கமாகும்.
மேலும் இது, மொத்த செழுமை காலத்தை 2010க்குள் மாற்றி அமைப்பதில் முக்கிய கவனம் செலுத்தியது. மொத்த செழுமைக் காலம் 21 என்பது செழுமைகாலத்தை மாற்றி அமைத்தல் என்பதாகும். 2045ம் ஆண்டிற்குள் மக்கள்தொகையை நிலைப்படுத்துதலே இக்கொள்கையின் நீண்டகால நோக்கமாகும்.
தேசிய மக்கள் தொகை குழுவானது, பிரதம மந்திரி, எல்லா மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களால் தலைமை தாங்கி தொடங்கப்பட்டு பின் மறுபரிசீலனை செய்யப்பட்டது. தேசிய மக்கள் தொகை குழு போன்று, மாநில அளவிலான குழு, மாநில முதலமைச்சர்களால் தலைமை தாங்கி துவக்கப்பட்டு அதே நோக்கங்களை நடைமுறைப்படுத்தியது.
ஒரு நிலையான மக்கள் தொகையை 2045க்குள் அடைய கீழ்க்கண்ட முறைகளை தேசிய மக்கள்தொகை கொள்கை கூறுகிறது :
இத்திட்டத்தின் நடைமுறைச் செயல்கள்
2045க்குள் நிலைப்படுத்தப்பட்ட மக்கள்தொகையை அடைய முடியுமென அரசு நம்புகிறது.
ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.