பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வறுமை மற்றும் வேலையின்மை

வறுமை மற்றும் வேலையின்மை (Poverty and Unemployment) தொடர்பான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

உலகில் வளர்ந்துவரும் நாடுகள் சந்திக்கும் இருபெரும் பிரச்சனைகள், கொடிய வறுமையும், பெருமளவு வேலையின்மையும். இவைகள் ஒன்றோடொன்று தொடர்புடையன. மக்களுக்கு வேலையின்மை காரணத்தினால், வருமானம் ஈட்ட முடியாமல் ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்துவருகின்றனர். வேறுசிலர் வேலை செய்தும் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர். பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் வறுமைநிலை நிலவி வருகிறது. ஐந்தாண்டு திட்ட காலங்களில் வறுமை குறைப்பு முக்கியமான இலக்குகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த ஏழை, எளிய மக்களைப் பற்றியும், அவர்களது சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைகளைப் பற்றியும் நாம் அறிந்திருத்தல் வேண்டும். அப்பொழுது தான் அரசு திறமையான வறுமை ஒழிப்பு கொள்கைகளை மேற்கொள்ள முடியும்.

வறுமையானது பல வழிகளில் வரையறுக்கப்படுகிறது. 1990-ம் ஆண்டில் உலக வங்கியானது வறுமையை கீழ்க்கண்டவாறு வரையரைச் செய்கிறது. “வறுமை என்பது குறைந்தபட்ச வாழ்க்கை தரத்தை அடைய முடியாத, திறனற்ற நிலையை குறிக்கிறது.” பேராசிரியர் டண்டேகர் என்பவரின் கூற்றுப்படி (1981) “எப்படியாயினும் வறுமை என்பது போதுமான வருமானத்தின் தேவையேயாகும்” இவ்வாறாக, வாழ்க்கையின் மிக குறைந்தபட்ச அடிப்படை பொருள்களின் கூட வாங்கக்கூடிய போதிய வருமானம் இல்லாத நிலை வறுமையின் இலக்கணங்களின் முக்கிய கூறாகும்.

வறுமையின் வகைகள்

முழு வறுமை

மக்களுக்கு போதுமான உணவு, உடை, உறைவிடம் இல்லாத நிலையை முழுவறுமை நிலை என்கிறோம்.

ஒப்பீட்டு வறுமை

'ஒப்பீட்டு வறுமை' என்பது மக்களின் பல்வேறு குழுக்களிடையே (உயர்தர, நடுத்தர, குறைவான வருமானம் பெறுபவர்கள்) காணப்படும் வேறுபாடுகளையோ (அ) ஒரே குழுவினரிடையே காணப்படும் வேறுபாடுகளையோ (அ) பல நாடுகளில் வாழும் மக்களிடையே காணப்படும் வேறுபாடுகளை குறிப்பதாகும். மக்கள் தொகையைப் பல்வேறு பிரிவினராக பிரித்துப் பார்க்கையில், அதாவது, உயர்வருமானம் பெறும் 20 சதவீதத்தினரை குறைவான வருமானம் பெறும் 20 சதவீதத்தினரோடு ஒப்பு நோக்குதலை 'ஒப்பீட்டு வறுமையை நாம் படிக்கிறோம் எனக் கொள்ளலாம்.

தற்காலிக வறுமை (அ) முற்றிய வறுமை (Temporary or Chronic Poverty)

இந்தியா போன்ற நாடுகளில் பருவமழை குறையும்போது, விவசாயம் பொய்த்து, அதனால் உழவர்கள் தற்காலிகமான ஏழ்மை நிலையில் உழல்கிறார்கள். அதே நிலையில் அவர்கள் நீண்டகாலமாக வாழும்போது அந்நிலையை முற்றிய வறுமை (அ) அமைப்பு சார்ந்த வறுமை என அழைக்கப்படுகிறது. (எ.கா) பல ஏழைநாடுகளில் உழவர்கள் பருவ மழையையே சார்ந்து இருப்பதாலும் - குறைந்த உற்பத்தித் திறன் விவசாயத்தில் காணப்படுவதாலும் இவ் உழவர்கள் முற்றிய வறுமை நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என கருதுகின்றோம்.

முதல்நிலை வறுமை மற்றும் இரண்டாம் நிலை வறுமை

ரவுண்டிரி Rowntree (1901) என்பவர் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை வறுமைகளுக்கு இடையே உள்ள வேற்றுமைகளை விளக்குகிறார். அவரது கூற்றுப்படி முதல்நிலை வறுமை என்பது “குடும்பங்களில் வாழ்க்கை நடத்த மொத்த சம்பாத்தியங்களைக் கொண்டு குறைந்தபட்ச, அத்தியாவசிய, பொருள்களைக் கூட வாங்கமுடியாத, பற்றாக்குறையான நிலையை குறிக்கும்”.

இரண்டாம் நிலை வறுமை என்பது குடும்பங்களின் சம்பாத்தியம், வாழ்க்கை நடத்த போதுமானதாக இருக்கும். ஆனால் அதன் ஒரு பகுதியானது உபயோகமான (அ) உபயோகமற்ற செலவுகளுக்காக ஈர்க்கப்படும். குறிப்பாக மது அருந்துதல், சூதாட்டம் மற்றும் திறமையற்ற குடும்ப நிர்வாகம் போன்றவைகள் வீணாண செலவுகளுள் சிலவாகும். ரவுண்டிரி Rowntree அவர்களின் கருத்துப்படி முதலாம் நிலை வறுமையை இரண்டாம் நிலை வறுமையானது பல மக்களை தங்களது மனித தேவையின் அளவினை அடைவதை தடைச் செய்கிறது. இந்த நிலை வருமானம் பற்றாக்குறையாக உள்ள முதல்நிலை வறுமையை காட்டிலும் மிகவும் மோசமான நிலை என குறிப்பிடுகிறார்.

கிராமப்புற ஏழ்மை மற்றும் நகர்புற ஏழ்மை

கிராமங்களில் வாழும் பெரும்பான்மையான ஏழை மக்கள் நிலங்களை சொந்தமாக பெற்றிராமல், விவசாய தினக்கூலிகளாகவே வேலைச் செய்கிறார்கள். அவர்கள் கூலியும் மிக குறைவே, ஆண்டில் ஒரு சில மாதங்களே அவர்கள் வேலை வாய்ப்பைப் பெறுகின்றார்கள். ஆனால் நகர்புறங்களில் வாழும் ஏழை மக்கள் நீண்ட நேரம் உழைத்து, மிக குறைவான வருமானத்தையே பெறுகிறார்கள். பெரும்பாலானோர், அங்கீகாரம் பெறாத மற்றும் ஒழுங்குமுறைப்படி அமையாத துறைகளிலேயே வேலைக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் உப/துணை வேலையாட்கள் (Subemployed) எனப்படுவர். உபவேலையாட்கள் எனப்படுபவர்கள் மூன்று பிரிவைச் சேர்ந்தவர்கள்.

 1. முழுநேர வேலை செய்ய விருப்பம் இருந்தும், பகுதி நேர வேலையையே செய்பவர்கள்.
 2. குடும்ப தலைவர், முழு நேர வேலை செய்தும், வறுமை கோட்டிற்கு மேல் தங்களுடைய குடும்பத்தை கொண்டுவரும் அளவிற்கு போதுமான வருமானம் ஈட்டவில்லை.
 3. சோர்வுற்ற பணியாட்கள், வேலை தேடிச் செல்லாதவர்கள்.

வறுமையின் பிறக்கோணங்கள்

வருமானத்தின் அடிப்படையாலும், பொருளாதார ரீதியாலும் விளக்கப்படும் வறுமைக்கு, வேறுபிற பரிமாணங்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஒருவர் வீட்டுவசதியில் ஏழ்மையாகவும், சுகாதார வசதியில் ஏழ்மையாகவும், கல்வியில் ஏழ்மையாகவும் விரும்பத்தக்க உடல் மற்றும் மன இயல்புப் பண்புகளைக் கொண்டிருத்தலில் ஏழ்மையாகவும் இருக்கக்கூடும். இவை ஏழ்மையின் பல தரப்பட்ட பரிமாணங்களாக இருக்கின்றன.

ஏழை குடித்தனங்களின் பண்புகள் (Characteristics of Poor Households)

 1. பொதுவாக குறைந்த தலா வருமானம் ஈட்டும் குடும்பங்கள், அநேக குழந்தைகளை பெற்று பெரிய குடும்பமாக இருப்பதுடன் இவர்கள் பொருளாதார ரீதியில் மற்றவர்களையே சார்ந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட ஆண்டில், தங்களது வருமானம் அனைத்தையும் ஏழை, எளிய மக்கள் நுகர்வுக்காகவே செலவிடுகின்றனர். இதில் பாதி அளவு உணவாகும்.
 2. பொதுவாக ஏழைக் குடும்பங்கள் பெண்பிள்ளைகளைவிட ஆண்பிள்ளைகளுக்கு கல்வியில் முதலீடு செய்கின்றனர். ஏழைமக்கள் அரசியலில் குறைவாகவே பங்கேற்கின்றனர். ஒருவகையில், இவர்களுக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தவிர்ப்புகளும் உண்டு.
 3. பல நாடுகளில் வறுமையானது, சாதி மற்றும் இன வழியோடும் (race) தொடர்புடையது. இந்தியாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரும், அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கருப்பினத்தவர்களும் சிறந்த உதாரணங்களாகும்.
 4. குற்றங்கள், உடல் நலக்குறைவு, ஏழை மக்களோடு கொண்டுள்ள தொடர்பின்மை ஆகியவையும் வறுமையோடுக்கூட தொடர்புடையவையாகும்.
 5. ஒரு நாட்டின் ஏழ்மைநிலை இரண்டு காரணிகளை பொறுத்தது.
 6. நாட்டு வருமானத்தின் சராசரி நிலை - நாட்டு வருமான பகிர்வில் உள்ள ஏற்றத்தாழ்வின் அளவு / நிலை, வறுமைக் கோடு (Poverty Line) - வறுமைக்கோடு என்பது குறைந்தபட்ச வருமானம், நுகர்வு அல்லது பொதுவாக, பண்டங்கள் மற்றும் பணியினை ஒரு தனிநபர் பெறும் வழியினைக் குறிக்கும். வறுமையில் தவிக்கும் ஏழைகளுக்குள்ளும், வறுமையின் நிலையானது வேறுபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அரசு கொள்கைகளை உருவாக்கும் பொழுது ஏழ்மையிலும், "ஏழ்மையில் உள்ளவர்களையுமே” கருத்தில் கொள்ள வேண்டும். சத்துணவு அடிப்படையான வறுமைக் கோடு அநேக நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய அரசு

 

இந்திய அரசு தற்பொழுது ஏழ்மை அல்லது வறுமைக்கோடு என்பதை நகர்ப்புறங்களுக்கு ரூ. 296/- ஆகவும் கிராமப்புறங்களுக்கு ரூ. 276/- ஆகவும் வரையறுத்துள்ளது. நாளொன்றுக்கு ரூ. 10/-க்கு குறைவாக ஊதியம் பெறும் மக்கள் அனைவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக கருதப்படுகிறார்கள். இந்திய அரசின் கூற்றின்படி மருத்துவ ரீதியாக இத்தொகையானது நாளொன்றுக்கு 2,200 கலோரிகள் அளவிற்கு உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு போதுமானதாகும். இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு இவ்வளவு ஊதியம் பெறுவது கூட பெறும் சவாலாக உள்ளது. வளர்ச்சியிலும், ஒரு மிகப்பெரும் துயரம் என்னவெனில் இந்தியாவில் 260 மில்லியன் மக்கள் இன்னும் நாளொன்றுக்கு ரூ. 10/- கூட ஊதியம் பெறாத நிலையில் உள்ளனர்.

இந்தியாவில் கிராமப்புற ஏழ்மைக்கான காரணங்கள்

 1. வேலையின்மையும் வேலைக் குறைவும்: நல்ல மழை சில ஆண்டுகளில் இருந்தாலும் கூட விவசாயத் தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் வேலை பெறுவதில்லை.
 2. மக்கள் தொகை அழுத்தம் : மக்கள் தொகை அழுத்தத்தின் காரணமாக ஊதியம் ஈட்டும் ஒவ்வொரு நபருக்கும் அவரைச் சார்ந்து பலர் இருப்பதால் அங்கு மறைமுக வேலையின்மை பிரச்சினை நிலவுகிறது. ஒரு பண்ணையில் நான்கு நபருக்கு மட்டுமே வேலை இருக்கும். ஆனால் அப்பண்ணையில் ஆறு அல்லது ஏழு நபர்கள் வேலை செய்வார்கள். இங்கு கூடுதல் வேலையாட்களின் இறுதி நிலை உற்பத்தித்திறன் ஏறத்தாழ 'பூஜ்யம்' ஆகும்.
 3. இந்திய வேளாண்மையில் உற்பத்தித் திறன் மிகமிகக் குறைவே ஆகும். எனவே வேளாண்மையைச் சார்ந்துள்ளோரில் பெரும்பாலானவர்கள் ஏழ்மை நிலையிலேயே உலவுகின்றனர்.
 4. கிராமப்புற மக்களில் பெரும்பாலானவர்கள் போதிய அளவு சொத்துக்களை பெற்றிருக்கவில்லை. குறிப்பாக நிலம். இதற்கு முக்கிய காரணம் நிலம் ஒரு சில குடும்பங்கள் வசமே உள்ளது எனலாம்.

ஏழ்மை நிலையில் வட்டார வேறுபாடுகளும் அதிக அளவில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக 1987-88ல் இந்தியாவில் ஏழை மக்களில் 58 சதவீதத்தினர் 5 மாநிலங்களில் வசித்து வந்தனர். அவையாவன: உத்திரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் மத்தியப்பிரதேசம்.

நகர்ப்புறங்களில் வேலை செய்யும் பலர் ‘உப-வேலை வாய்ப்பினால் அல்லலுறுகின்றனர். அவர்கள் (உபவேலை நிலையில் உள்ளவர்கள்) ஏழ்மையில் உள்ள வேலையாட்கள் மற்றும் கிராமப்புறங்களிலிருந்து நகர்புறங்களுக்கு குடிப்பெயரும் மக்களும் ஆவார்கள். இது நகர்ப்புறங்களில் ஏழ்மை நிலவக்காரணமாக இருக்கிறது.

வறுமை ஒழிப்புத் திட்டங்கள் (Poverty Alleviation Programme)

குறைந்த நிலை வேலைவாய்ப்பின் உற்பத்தி திறனை அதிகரிப்பதும், வேலைவாய்ப்பை அளிப்பதும் வறுமை ஒழிப்பு திட்டத்தின் முக்கிய பிரச்சனையாகும். நம் நாட்டு வறுமையை ஒழித்துக்கட்ட அரசு கீழ்க்காணும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

நிலச் சீர்திருத்தங்கள்

மாநில அரசுகள் நிலசீர்திருத்த சட்டங்களை இயற்றுவதன் மூலமாக நிலமற்ற விவசாயிகளின் பொருளாதார நிலைமைகளை மேம்படச் செய்ய வழிவகுத்தன. (உ.ம்) ஜமின்தார் முறை ஒழிக்கப்பட்டதினால், சுரண்டல் முறைகள் சமுதாயத்தை விட்டு நீக்கப்பட்டன. பல மாநிலங்களில் குத்தகை சட்டங்கள் இயற்றப்பட்டன. இதன் மூலம் குத்தகைகாரர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டன. மேலும் அவர்கள் பயிர் செய்த நிலங்களை, அவர்களே உரிமையாக்கிக் கொள்ள இச்சட்டம் உதவியது. மேலும் ஒவ்வொரு மாநிலங்களிலும் அவசியமான சட்டம் இயற்றப்பட்டு, நில உடைமை வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட்டன. இதன் வாயிலாக ஒரு நபர் உடைமையாக்கிக் கொள்ளக்கூடிய உச்ச அளவு நிலம் சட்டபூர்வமாக தீர்மானிக்கப்பட்டது. இச்சட்டத்தின் வாயிலாக பெறப்பட்ட உபரி நிலங்களை நிலமற்றோருக்கும், சிறுவிவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஜவகர் கிராம வேலைவாய்ப்பு திட்டம் (Jawahar Grama Sannidhi Yojana - JGSY)

இத்திட்டம் 1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்காகும் செலவினை மத்திய மற்றும் மாநிலங்களைக்கிடையே 75 : 25 என்ற முறையில் பிரித்துக் கொள்ளப்பட்டது.

நாட்டு சமூக உதவித் திட்டம் (National Social Assistance Programme - NSAP)

இத்திட்டம் ஆகஸ்டு 15ம் நாள் 1995-ம் ஆண்டு துவங்கப்பட்டது. நூறு சதவீதம் இத்திட்டத்தை மைய அரசே ஏற்று நடத்தும். இத்திட்டத்தின் மூலமாக ஏழைக் குடும்பத்தினர், வயது முதிர்ந்தோர், வருமானம் ஈட்டும் குடும்பத் தலைவனை இழந்த குடும்பத்தினர் மற்றும் மகப்பேறு கால உதவி பெறுவோர், அதிக நலன்கள் பெறுவர்.

வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் (Employment Assurance Scheme-EAS)

இத்திட்டம் 1993, அக்டோபர் 2 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. நாட்டிலுள்ள வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் வாழக்கூடிய பாலைவனங்கள், பழங்குடியிருப்புகள் மற்றும் மலைப் பகுதிகளாகிய 1778 பிற்பட்ட தொகுப்புக்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டமானது விரிவாக்கப்பட்டு 5488 கிராமப்புற தொகுப்புகள் பயனடைந்தனர். வேலையில்லா கிராமப்புற மக்களுக்கு கூலி வேலையை ஏற்படுத்தித் தந்தது. புதிய சம்பூரண கிராம் வேலைவாய்ப்பு திட்டத்துடன், வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் ஜவகர் கிராம் வேலைவாய்ப்பு திட்டமும் செப்டம்பர் 2001ல் இணைக்கப்பட்டது.

பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் (Pradhan Mantri Gramodaya Yojana - PMGY)

இத்திட்டமானது 2000-2001 நிதிநிலை அறிக்கையின்போது அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்கீழ் ரூ.5000 கோடி பணம் ஒதுக்கீடுச் செய்யப்பட்டது. இத்திட்டம் சுகாதாரம், அடிப்படைக் கல்வி, குடிநீர், வீட்டு வசதி மற்றும் கிராமப்புறங்களில் சாலை அமைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

பொன்விழா ஆண்டு ஊரக தன் வேலை வாய்ப்புத் திட்டம் (Swarna Jayanti Shahari Rozgar Yojana-SJSRY).

நகர்புற சுயவேலைவாய்ப்பையும், மற்றும் நகர்ப்புற கூலி வேலை ஆகிய இவ்விரண்டும் சிறப்பு திட்டங்களாகும். 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நகர்ப்புற வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ் செயல்பட்டு வந்த முந்தைய திட்டங்களை இத்திட்டமானது மாற்றி அமைத்தது. மத்திய-மாநில அரசுகளும் 75 : 25 என்ற விகிதத்தில் திட்டத்திற்கு தேவையான செலவை மேற்கொள்கின்றனர். இத்திட்டத்திற்கான செலவு ரூ. 45.5 கோடியாகும். 2001-2002-ல் ரூ. 39.21 கோடி மற்றும் 2002-2003 ல் ஒதுக்கீடானது ரூ.105 கோடியாக ஒதுக்கீடுச் செய்யப்பட்டது. (Euromil Survey, 2002-03, P.217)

கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் (Integrated Rural Development Programme - IRDP)

1976-77-ம் ஆண்டில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் முதன் முதலாக முன்மொழியப்பட்டது. இத்திட்டம் கிராம மக்களுக்கு உதவிச் செய்யவும், பொருளாதார வளர்ச்சி நலன்களை, கிராமப்புற பகுதிகள் பெற்று பயனடைவதையே நோக்கமாக கொண்டது. 1978-79ல் இத்திட்டமானது மாற்றியமைக்கப்பட்டு அதன் அளவு விரிவாக்கப்பட்டது. துவக்கத்தில் 2,300 தொகுப்புகளில் அதில் 2,000 தொகுப்புக்களில் SFDA, DPAP மற்றும் CADP இத்திட்டங்கள் செயல்பட்டன. 1979-80ல் கூடுதலாக 300 தொகுப்புக்கள் இத்திட்டங்களுடன் இணைக்கப்பட்டன. 1980 அக்டோபர் 2-ல் நாட்டின் எல்லா தொகுப்புகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கப்பட்டது. சிறிய மற்றும் எல்லைநிலை விவசாயிகள் மட்டுமில்லாமல் இத்திட்டம் குறிப்பாக விவசாய தொழிலாளர் மற்றும் நிலமற்ற உழைப்பாளர்கள் இவர்களோடும்கூட கிராமப்புற கைவினைஞர்களையும் உள்ளடக்கி உள்ளது. இது தனி நபரைக் காட்டிலும், குடும்ப நலத்திற்கே முக்கியத்துவம் அளிக்கிறது.

வேலையின்மை

பொருள் : வேலையின்மை என்பது, தொழிலாளர்கள் வேலை செய்யும் தகுதியும் விருப்பமும் இருந்தும், வேலை கிடைக்காமல் இருப்பது ஆகும்.

வேலையின்மை அளவீடுகள்

ஒரு நபர் ஒரு நாளைக்கு 8 மணி நேரங்கள் போன்று ஒரு வருடத்திற்கு 73 நாட்களுக்கு வேலையில் நியமனம் செய்யப்படுவதையே குறிப்பது ஆகும். என்எஸ்எஸ்-ல் 27வது சுற்றின்படி, வேலையின்மை அளவீடுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

பொதுவான முதன்மை நிலை வேலையின்மை

 1. வருடத்தில் பாதி நாட்களுக்கு மேல் அதிகமான நபர்கள் வேலையில்லாத நிலையில் இருப்பதையே இது குறிக்கும். தகுதிக்கு ஏற்ப தொடர் வேலையை தேடுபவருக்கு இது பொருந்தும். (எ.கா) படித்தவர்கள், தொழில் வல்லுனர்கள் சாதாரண வேலையை ஏற்றுக் கொள்ளார். இதற்கு வெளிப்படையான வேலையின்மை என்று பொருள்.
 2. வாராந்திர நிலை வேலையின்மை : வாரத்திற்கு ஒரு மணி நேரம் கூட அதிகமான நபர்களுக்கு வேலை கிடைக்காமையை குறிக்கும்.
 3. தினமும் வேலையின்மை நிலை : வாரத்தில் ஒரு நாள், சில நாட்கள் அதிகமான நபர்களுக்கு வேலையில்லாமையை குறிக்கும்.

வேலையின்மைக்கான காரணங்கள்

அதிக மக்கள்தொகை வளர்ச்சி

கடந்த வருடங்களில் நம்முடைய மக்கள் தொகை அதிகமான அளவு உயர்ந்து உள்ளதால், வேலையின்மைக்குரிய சிக்கல்களை மேலும் அதிகரித்து உள்ளது. நம்முடைய நாட்டில் மக்கள்தொகை பெருக்கம் அதிகமாவதால் வேலையின்மையின் அளவு அதிகமாகி கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

போதுமான பொருளாதார வளர்ச்சி வீதம் இன்மை

இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடாக இருந்தபோதும், பொருளாதார வளர்ச்சி வீதம் மிகவும் குறைவாகவே உள்ளது. காரணம் மொத்த உழைப்பின் வலிமைகளும் பயன்படா நிலையே காரணம். இந்தியாவில் வேலைவாய்ப்புக்கள் போதுமான அளவில் இல்லை. இதனால் கூடுதலான உழைப்பு சக்திகளை பயன்படுத்தப்படவில்லை. இதற்கு காரணம் மக்கள் தொகையின் வளர்ச்சியே ஆகும்.

வேளாண்மை தவிர பிற துறைகளில் வேலை வாய்ப்பு குறைவு

இந்தியாவில் விவசாயத் துறையில் மட்டுமே போதுமான வேலைவாய்ப்பு உண்டு. மற்ற துறைகளில் போதுமான அளவுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் குறைந்து காணப்படுகிறது. இதனால் நிலத்தின் அழுத்தம் மிகவும் அதிகமாக உள்ளதனால் 2/3 பகுதி உழைப்பு சக்திகள் விவசாயத் துறையிலேயே பயன்படுத்தப்படுகின்றனர். நிலமானது அதிகமான மக்கள் வாழ்வதற்கு பயன்படுவதால் மிகவும் அதிகமான மக்கள் சக்தியானது வேலையில்லா நிலையிலேயே உள்ளனர். இதற்கு மறைமுக வேலையின்மை என்று பெயர்.

பருவகால வேலை வாய்ப்பு

இந்தியாவில் விவசாயத்தில் பருவகால வேலையின்மை நிலவுகிறது. பருவகாலம் இல்லாத நேரத்தில் விவசாயத் தொழிலாளர்கள் வேலையில்லா நிலையில் காணப்படுகின்றனர்.

கூட்டுக் குடும்ப அமைப்பு

இந்தியாவில் கூட்டுக்குடும்ப முறை இருப்பதால் மறைமுக வேலையின்மை அதிகமுள்ளது. குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்களுடைய குடும்ப தொழிலில் ஈடுபட்டனர். தேவைக்கு அதிகமாக தொழிலாளர்கள் தங்களுடைய குடும்ப தொழிலில் அமர்த்தப்படுகிறார்கள்.

இந்தியப் பல்கலைக்கழகத்திலிருந்து பெருகிவரும் மாணவர்கள்

கடந்த பத்தாண்டுகளாக இந்தியப் பல்கலைக்கழகத்திலிருந்து உருவாக்கப்படும் பெருவாரியான பட்டதாரிகள் கூடுதலாக இருப்பதால் படித்தவர்களுக்கு வேலையின்மை அதிகரித்துக் கொண்டுள்ளது. இந்திய கல்வி முறையில் அதிகமாக பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பாடங்களுக்கு, கலைத்துறை சார்ந்த பாடங்களைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் தொழில்துறையின் பட்டதாரிகளுக்கு இடையே வேலையின்மை நிலவுகிறது. மேலும் நமது நாட்டில் தொழில் கல்வியும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

குறைவான தொழில் வளர்ச்சி

நமது நாட்டில் தொழில்துறை போதுமான அளவு வளர்ச்சியடையவில்லை. தொழில்களிலும், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் மிகவும் குறைவே. வேளாண்துறையில் உபரியாக உள்ள தொழிலாளர்களை, தொழில்துறைகளில் வேலைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் விவசாயத்தில் மறைமுக வேலையின்மை ஏற்படுகின்றது.

இந்தியாவில் வேலையின்மை பிரச்சனைகளுக்கு தீர்வு

ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டங்களிலும் வேலைவாய்ப்பை பெருக்குவதே பொருளாதார வளர்ச்சியின் முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது. ஐந்தாண்டு திட்டங்கள் நடந்துக் கொண்டிருக்கும்போதுகூட வேலையின்மையின் தேக்கம் அதிகரித்துக் கொண்டேயுள்ளது. இதற்கு காரணம், ஒவ்வொரு திட்டத்திலும் புதிதான உழைப்பு சக்திகளை பயன்படுத்தாமையே ஆகும்.

கீழ்க்காணும் வழிமுறைகள் மூலம் வேலையின்மை பிரச்சனைகளை தீர்வுகாண முடியும்.

முதலீட்டு முறைகளில் மாற்றம் செய்தல்

ஆரம்ப கால கட்டத்தில் திட்ட செயல்முறைப்படி அதிக முதலீடு உழைப்பு விகிதம் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆகவே நுகர்வுப் பண்டங்களை உற்பத்திச் செய்யும் தொழிற் சாலைகளை அதிகரிக்கும்போது வேலையில்லா தொழிலாளர்களை அதிகப்படியாக வேலைக்கு அமர்த்துதல் சாத்தியமாகும். நுகர்வுப் பண்டங்களின் அளிப்பு அதிகரிப்பதனால் பண்டங்களின் விலையேற்றமானது கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் மக்களின் பொருளாதார நலனானது அதிகரிக்கிறது.

பெரிய நிறுவனங்களுக்கு எதிராக சிறிய நிறுவனங்களை ஊக்குவித்தல்

பெரிய தொழில் நிறுவனங்களைக் காட்டிலும் சிறிய நிறுவனங்களுக்கு நேரடியான அதிக முதலீடு செய்யப்படும்போது வேலைவாய்ப்பு நோக்கமும் உற்பத்தியின் நோக்கமும் நிறைவுச் செய்யப்படும். தற்போது அரசாங்கமானது வளர்ச்சியின் பணிகளை பகிர்ந்தளிக்கும்போது சிறுத் தொழில் நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் அத்தொழில்களுக்கு அதிக கடன் வசதி, உரிமம், முறையான கச்சாப் பொருள்கள் பகிர்வு மற்றும் இதரக் கொள்கைகள் வழங்கப்படுவதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி கணிசமான அளவில் ஒரே சீராக அதிகரிக்கக்கூடும்.

தொழில்நுட்ப முறைகளில் காணப்படும் பிரச்சனைகளை தேர்ந்தெடுத்தல்

நடுத்தரமான தொழில்நுட்ப முறைகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் தொழில் மயமாகுதலின் போக்கில் புதிதாக வரும் உழைப்பு சக்திகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும். உழைப்பு சக்திகளை அதிகமாக பயன்படுத்தும் காலத்தில், தொழில்நுட்பங்களை தேர்ந்தெடுத்தலின் மூலம் வேலைவாய்ப்பின் நோக்கத்தை முழுமையாக செயல்படுத்த முடியும். இந்திய பொருளாதாரத்தின் சூழலுக்கு நடுத்தரமான தொழில்நுட்ப முறையே ஏற்றதாகும்.

சிறுநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் புதிய வளர்ச்சி மையங்களை ஊக்குவித்தல்

ஒவ்வொரு திட்டங்களின் அனுபவமும், அதிக மக்கள் தொகை உள்ள மாநகர மையங்கள் அதிகமான முதலீடுகளை பெறுகின்றன என்பதையே காட்டுகின்றது. ஆகவே சிறுநகரங்களின் வளர்ச்சியானது, புதிய வளர்ச்சி மையங்களை வருங்காலத்தில் வளர்த்திட உதவும். சிறிய தொழில்களின் கூட்டமைப்பு, நிறுவப்படுவதன் மூலம் வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார நெகிழ்வுத் தன்மையை அளித்திடும்.

வேலை வாய்ப்புக்களின் அடிப்படையில் சலுகைகள்

அரசின் சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகை திட்டங்களானது சிறிய மற்றும் பெரிய தொழில்களுக்கு உச்சமான உற்பத்தியளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது மூலதன வளங்களை அதிக அளவில் பயன்படுத்துவதற்கும் உதவுகின்றது. இவ்விதமான அரசின் சலுகை முறைகளில் மாற்றங்கள் தேவை. அதிகமான வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கு அரசின் சலுகைகள் மற்றும் அரசின் ஊக்கத் தொகைகளே அடிப்படை காரணங்களாக உள்ளன. அரசின் மொத்த அமைப்புகளிலும் ஏற்படும் மாற்றங்களானது பேரளவு உற்பத்தியிலிருந்து சிறிய அளவு உற்பத்தி ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கங்களுடன் சமத்துவம் மற்றும் சமூக நிலை அடைவதற்கு உதவுகிறது.

கல்விக் கொள்கையில் புத்தாக்கம்

நம் நாட்டின் கல்விமுறையில் தொழில்கல்வி பட்டம் பெறுவது மட்டுமே மிகப்பெரிய குறையாக உள்ளது. படித்தவர்களிடையே வேலையின்மை அதிகமாக இருப்பதால் கல்வி முறையில் புத்தாக்கம் செய்வது மிகவும் அவசியமான தேவையாக கருதப்படுகிறது. அப்படி செய்வதன் மூலம் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கமுடியும். நமது நாட்டின் கல்வி கொள்கையின் முறையில் மாற்றம் தேவைப்படுகிறது. இம்மாற்றங்கள் குறுகிய கால வாழ்க்கை கல்வி பயிற்சியை அதிகப்படுத்துவதன் மூலம் உள்நாட்டு வேலைவாய்ப்பின் தேவையை பூர்த்திச் செய்யும். தரமான கல்வியின் வளர்ச்சியானது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையானதாக உள்ளது. இவை வேலையின்மையின் மூலம் காணப்படும் பிரச்சனைகளை தீர்வு காண்பதற்கும் உதவுகிறது. ஆகவே அரசின் செலவுகளில் கல்வியின் வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

கிராமப்புறங்களின் குறை வேலையுடைமை

என்.எஸ்.எஸ். விவரங்களின்படி இந்தியாவில் குறை வேலையுடைமை சற்று அதிகமாகவே உள்ளது. இந்தியாவில் 2 கோடிக்குமேல் குறைவேலையுடைமை மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூடுதலாக வேலை செய்யவும் தயாராக உள்ளனர். கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டங்கள் உருவாக்குவது அரசின் கடமையாக உள்ளது. இத்தகைய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டங்களை உருவாக்காவிட்டால், கிராமப்புற மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை. இதன் மூலம் நிலமற்ற தொழிலாளர்கள் சிறிய மற்றும் கடைநிலை விவசாயிகள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் அத்தியாவசியமான நடவடிக்கைகள் எடுத்தால்தான் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும். இதனால் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின் மூலம் வருமானம் அதிகரிக்கும். மேலும் வறுமையின் அளவும் குறைய வாய்ப்பு உள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.

2.93617021277
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top