பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிதி சேர்க்கை / வரி சீர்திருத்தங்கள் / ஜி. எஸ். டி – இந்திய வரலாற்றில் வரிவிதிப்பு முறை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஜி. எஸ். டி – இந்திய வரலாற்றில் வரிவிதிப்பு முறை

ஜி. எஸ். டி வரி பற்றிய தகவல்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

புதிய வரி விதிப்பு முறையை பொதுமக்கள் புரிந்து கொள்வதற்கு சற்று காலம் ஆகலாம். தினசரி பயன்பாட்டுக்கான பொருட்களின் மீதான குறைந்த வரி விதிப்பு விகிதங்களுக்கும் எப்போதாவது பயன்படுத்தும் பொருட்களின் மீதான அதிகமான வரிவிதிப்பு விகிதங்களுக்கும் இடையிலான சம நிலையைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு நுகர்வோருக்கு நாள்களாகும். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமைப்பை உருவாக்க முற்பட்டவை என்று எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியையும் குறிப்பிட முடியாது. இதை நடைமுறைப்படுத்தும் முறைமையில் அவைகள் வேறுபட்டே இருக்கின்றன. முந்தைய பிரதமமந்தரி நரசிம்மராவின் கீழ் பணிபுரிந்த பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கான சிற்பியும் முன்னாள் பிரதமமந்திரியுமான டாக்டர் மன்மோகன்சிங்குக்கே ஜி.எஸ்.டி உருவாக்கப்பட்டதற்கான அங்கீகாரத்தைத் தரலாம். முந்தைய அரசுகள் இரண்டும் மற்றும் தற்போதைய அரசும் சில ஷரத்துகள் மீது மாறுபட்ட கருத்துகளைக் கொண்டு உள்ளன. ஜி.எஸ்.டி வரலாற்றை இப்போது நாம் பார்ப்போம்.

ஜி.எஸ்.டியை அமல்படுத்துவதற்காக நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள்

 1. மத்திய ஜி.எஸ்.டி மசோதா, 2017
 2. ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி மசோதா, 2017
 3. ஜி.எஸ்.டி (மாநிலங்களுக்கான இழப்பீடு) மசோதா, 2017
 4. யூனியன் பிரதேச ஜி.எஸ்.டி மசோதா, 2017

சரக்குகள் மற்றும் சேவைகள் வரியானது (ஜி.எஸ்.டி) பிரதானமாக மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் பல்வேறு விதிகளுக்கு மாற்றாக அமைகின்றது. அரசியலமைப்பு 122வது திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அரசியலமைப்பு (நூற்றி இருபத்து இரண்டாவது திருத்தம்) சட்டம், 2016 இயற்றப்பட்டது. இதன் மூலமாகவே ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டியை ஜி.எஸ்.டி கவுன்சில் நிர்வகிக்கும். இந்தக் கவுன்சிலின் தலைவராக மத்திய நிதி அமைச்சர் இருப்பார். ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் கீழ் சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு 0.25%, 5%, 12%, 18%, 28% என்ற விகிதத்தின்படி வரி விதிக்கப்படும். பட்டை தீட்டிய மற்றும் ஓரளவு பட்டை தீட்டப்பட்ட விலைமதிப்புள்ள கற்களுக்கு விசேஷ வரி விகிதமாக 0.25% வரி விதிக்கப்பட்டுள்ளது. தங்கத்திற்கு வரி விகிதம் 3% என விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வர்த்தக நடவடிக்கைகளிலும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும். அதாவது விற்பனை, பரிமாற்றம், கொள்முதல், குத்தகை அல்லது சரக்குகள் மற்றும்/அல்லது சேவைகள் இறக்குமதி என அனைத்துக்கும் வரி உண்டு. இந்தியா இரட்டை ஜி.எஸ்.டி வரி விதிப்பு மாதிரியை கடைபிடிக்கும். இதன் அர்த்தம் என்னவென்றால், மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டுமே வரியை விதிக்கும்; பரிமாற்றம் நிகழும் மாநிலத்தில் உள்ள அரசு மாநில ஜி.எஸ்.டி வரியை விதிக்கும். மாநிலங்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள், சரக்குகள் அல்லது சேவைகளை இறக்குமதி செய்தல் ஆகியவற்றுக்கு மத்திய அரசு ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி வரியை (ஐ.ஜி.எஸ்.டி) விதிக்கும்.

ஜி.எஸ்.டி என்பது நுகர்வு அடிப்படையிலான வரியாகும். எனவே சரக்குகள் அல்லது சேவைகள் எந்த மாநிலத்தில் நுகர்வோரால் பயன்படுத்தப்படுகின்றதோ அந்த மாநிலத்துக்கு வரிகள் செலுத்தப்படும். அந்தப் பொருட்கள் உற்பத்தி ஆகும் மாநிலத்திற்கு வரிகள் கிடைக்காது. ஐ.ஜி.எஸ்.டி வரி வசூலிப்பதில் மாநில அரசுக்கு உரிமை இல்லை. மத்திய அரசு தாம் நேரடியாக வசூலித்த வரியில் இருந்து மாநிலங்களுக்கு உரிய பங்கினை அளித்து விடும். முந்தைய வரிவிதிப்பு முறையின் கீழ் ஒரு மாநிலமானது ஒற்றை அரசாங்க முறையில் வரி வருவாயை வசூலித்து வந்தது.

ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படுவதால் ஏற்படக்கூடிய பாதிப்பால் மாநிலங்களுக்கு உருவாகக்கூடிய வருவாய் இழப்பை ஈடு செய்ய வழி வகைகள் உள்ளன. பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் மீது ஜி.எஸ்.டி விதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் இது சாத்தியமாகும். ஜி.எஸ்.டி அமல் செய்யப்பட்ட நாளில் இருந்து ஐந்து ஆண்டு காலகட்டத்துக்குள் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏதாவது ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. ஜி.எஸ்.டி-யின் முதன்மை தாக்கத்தில் ஒன்றாக இந்தியாவில் டீசல், பெட்ரோல் விலைகள் தினமும் அறிவிக்கப்படுகின்றன.

முன்மொழியப்பட்டுள்ள ஜி.எஸ்.டி சட்டத்தை நிர்வகிப்பதற்காக 21 நபர் கொண்ட தேர்வுக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் யூனியன் பிரதேச ஜி.எஸ்.டி சட்டங்கள் ஜம்முகாஷ்மீர் நீங்கலாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இயற்றப்பட்டுள்ளன. ஜூலை 1, 2017 முதல் வரிவிதிப்பு முறையானது சிரமம் இன்றி செயல்பட இந்த நடவடிக்கைகள் வழி வகுத்துள்ளன.

பத்திரங்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படமாட்டாது. அவை வழக்கம்போல் பத்திரங்கள் பரிமாற்ற வரிக்கு (எஸ்.டி.டி) உட்பட்டே இருக்கும்.

இணையான செயல்பாடாக 'சரக்குகள் மற்றும் சேவைகள் வரி” நெட்வொர்க் (ஜி.எஸ்.டி.என்) உருவாக்கப்பட்டுள்ளது. இது இலாபம் கருதாத அமைப்பாகச் செயல்படும். பங்குதாரர்கள், அரசு, வரி செலுத்துவோர் என தொடர்புடைய அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் ஒரு ஒற்றை போர்ட்டலாக இந்த மேடை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தப் போர்ட்டலை மத்திய அரசு அணுகிப் பயன்படுத்த முடியும். ஒவ்வொரு பரிமாற்றத்தையும் அதன் இறுதிநிலை வரை அரசால் தடம் அறிய முடியும். வரி செலுத்துவோர் வருமான வரித்தாக்கல் செய்ய இது ஏதுவாக இருக்கும். ஆவணங்களைப் பராமரிக்கவும் உதவும். ஐ.டி. நெட்வொர்க்கைத் தனியார் நிறுவனங்கள் வளர்த்தெடுக்கும். இது பிறகு மத்திய அரசுடன் இணைக்கப்படும். இதற்கான பங்கும் ஈவும் முறைப்படித் தரப்படும். இதில் மத்திய அரசு 24.5% பங்குகளை வைத்திருக்கும். மாநில அரசு 24.5% பங்குகளை வைத்திருக்கும். மீதியுள்ள பங்குகள் தனியார் வங்கி நிறுவனங்கள் பெற்றிருக்கும்.

ஜி.எஸ்.டி சட்டத்தின்படி இது செப்டம்பர் 2, 2017க்குள் அமலாக்கப்பட வேண்டும். கருணைக்கால எல்லையான செப்டம்பர் 12, 2017க்குப் பிறகு முந்தைய வரிகள் அனைத்தும் இரத்தாகிவிடும். அதனால் மத்திய அரசு ஜி.எஸ்.டியை ஜூலை 1, 2017இல் அறிமுகப்படுத்த விரும்பியது. அனைத்து மறைமுக வரிகளும் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஒரே சீரான ஒற்றை வரி விதிக்கப்படும். எனவேதான் நள்ளிரவு வெளிச்சத்தை அரசு ஏற்படுத்தியது. ஜூலை 1, 2017இல் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்படும் என்ற உறுதிமொழியையும் அரசு நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் சிறப்பு நள்ளிரவு அமர்வு நடைபெற்றது. உலகமே இந்த வரலாற்று நிகழ்வைப் பார்த்தது.

சில வரிவிதிப்பு விகிதங்கள் குறித்து மாற்றுக் கருத்துகள் உள்ளன. அதேபோன்று மிக விரைவாக ஜி . எஸ் . டி யை அமல் படுத்தியது குறித்தும் விமர்சனங்கள் உள்ளன. புதிய வரி விதிப்பு முறையை உள்வாங்கி தனது செயல்முறைகளை மறுவடிவமைப்பு செய்ய இன்னமும் தாங்கள் தயாராகவில்லை என்பதைத் தொழில் உலகம் தெரிந்து வைத்திருந்தது.

எந்த ஒரு புதிய சட்டமும் தொடக்கத்தில் சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தவே செய்யும். ஒட்டுமொத்த தேசமும் ஜி.எஸ்.டி-யை இந்த முறையிலேயே எதிர்கொண்டது. குடிமக்கள் திடீரென தங்கள் பில்களின் தொகையானது அதிகரித்துள்ளதைப் பார்த்தார்கள். பயன்படுத்தப்படும் இடத்தை மையமாகக் கொண்ட வரிவிதிப்புக்கு நாடு தற்போது மாறி உள்ளது என்பதை குடிமக்கள் இப்பொழுது வரையிலும் புரிந்து கொள்ளவில்லை. இது ஒரு நுகர்வை மையப்படுத்திய வரியாகும். நுகர்வு எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கு வரி விதிக்கப்படுகின்றது. தமிழ் நாடு அல்லது மகாராஷ்டிரம் அல்லது ஆந்திரப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு சரக்கு உதாரணமாக தில்லியில் வாங்கி பயன்படுத்தப்பட்டால், சண்டிகரில் அல்லது ஜெய்ப்பூரில் அல்லது லக்னெளவில் வாங்கி பயன்படுத்தப்பட்டால் அங்குதான் அந்தச் சரக்குக்கு வரி விதிக்கப்படும்.

நவம்பர் 8, 2016இல் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்கம் தேசத்துக்கு முதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்றால், ஜூலை 1, 2017இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) மக்களுக்கு ஆச்சரியத்தோடு அதிர்ச்சியையும் அளித்துள்ளது. ஆனால் அரசாங்கத்தின் நோக்கங்கள் நியாயமாகவும் தெளிவாகவும் உள்ளன. ''ஒரே தேசம் ஒரே வரி” என்பதே அரசின் நோக்கமாகும். சந்தைகளை ஒருங்கிணைத்தல், சர்வதேசத் தரக்கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப உயர்தல் ஆகியவற்றின் மூலம் உலகளாவிய சந்தைகளில் இந்தியா திறம்பட போட்டியைச் சமாளிக்க முடியும்.

கறுப்புப் பணத்தின் மீதான இரண்டாவது துல்லியமான தாக்குதலாக ஜி.எஸ்.டி இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு வர்த்தகரும் பதிவு செய்தாக வேண்டும்; ஜி.எஸ்.டி.ஐ.என் (பதிவு எண்) பெற்றாக வேண்டும். மேலும் மாதாந்திர அல்லது காலாண்டுக்கான வரி வசூல் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு வர்த்தகரின் கணக்கும் இப்போது சட்டரீதியானதாக மட்டுமல்லாமல் கட்டாயமானதாகவும் மாறி உள்ளது.

அரசு என்ன எதிர்பார்க்கிறது?

1. நாடு முழுவதும் அமலில் உள்ள சுமார் 15 முதல் 20 வரையிலான வரிகளை ஒரே ஒற்றை வரிக்குள் உள்ளடக்கும் வகையில் வரி விதிப்பதை ஜி.எஸ்.டி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியா முழுவதிலும் சந்தைகளை ஒருங்கிணைத்தல், நாடு முழுவதும் சரக்குகளுக்கு சீரான ஒரே விலை என்பதும் நோக்கங்கள் ஆகும். இதனால் சில சரக்குகள் விலை அதிகமானதாகவும் சில சரக்குகள் விலை மலிவானதாகவும் மாறும் வாய்ப்பு இருந்தபோதிலும் இவையே நோக்கங்களாகச் சொல்லப்பட்டன.

2. ஜி.எஸ்.டி ஒரு எளிமையான வரியாக இருக்கிறது. ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவது என்பது சிக்கலானதாக உள்ளது. பல்வேறு சரக்குகளுக்கு ஜி.எஸ்.டியில் ஐந்து அடுக்கு வரிவிதிப்பு முறை உள்ளது. இதனால் சொகுசுப் பொருட்கள் விலை உயர்ந்தவையாக மாறும். பெருந்திரளான மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலையானது குறைவானதாக மாறும். இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. தங்களுடைய பொருட்கள் சர்வதேசப் போட்டியை திறம்பட எதிர்கொள்ளும் வகையில் உலகில் பல நாடுகள் ஏற்கனவே இதனை நடைமுறைப்படுத்தி இருக்கின்றன.

ஒரே ஒரு விதிவிலக்கு என்னவென்றால் சொகுசுப் பொருட்களுக்கான வரி அதிகபட்ச வரிவிதிப்பு அடுக்கான 28%இல் உள்ளது. இது உலகத்திலேயே அதிகமான வரியாகும். அமெரிக்க மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளில்கூட 17%க்கு மேல் ஜி.எஸ்.டி வரி இல்லை.

ஜி. எஸ் . டி யின் கருத்துருவாக்கம் வித்தியாசமானதாகும். உற்பத்தி செய்யும் இடத்தில் வரி விதிக்கும் முறையாக இது இல்லை. இது பொருட்கள் பயன்படுத்தும் இடத்தில் வரி விதிக்கும் முறையாக உள்ளது. மேலும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் இது நுகர்வு வரியாகும். ஒரு பொருளானது தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகிறது என்றால், அப்பொருள் நாடு முழுவதும் பயணம் செய்து தில்லியை அடைகிறது. அங்கு அப்பொருளை வாங்கும் நுகர்வோர் அல்லது வாங்குபவர் அப்பொருளுக்கான வரியைச் செலுத்துகிறார். இந்த வரியின் மீது மத்திய அரசு, மாநில அரசு இரண்டுக்கும் பங்கு இருக்கிறது. ஒரு உணவகத்தில் விதிக்கப்படும் வரி 18% என்றால் அதில் 9% வரியானது சி.ஜி.எஸ்.டி மூலமாக மத்திய அரசுக்குச் செல்லும். மீதி 9% வரியானது எஸ்.ஜி.எஸ்.டி மூலமாக மாநில அரசுக்குச் செல்லும். இது நுகர்வோர் வாங்கும் பொருட்களுக்கான பில்களில் தெளிவாகக் காட்டப்படும்.

மது அருந்துவதும் உணவு விடுதிகளில் உண்பதும் செலவு அதிகமான ஒரு செயலாக மாறி உள்ளன. விமானத்தில் பயணம் செய்வதை தவிர்த்துவிட முடியுமா என்ற சிந்தனையானது தோன்றும் வகையில் விமானக் கட்டணம் உயர்ந்துள்ளது. ஏ.சி, குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் விலை உயர்ந்தவைகளாக மாறிவிட்டன. சுமார் 1200 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையால் 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. பொதுவான பலதரப்பட்ட நுகர்வுப்பொருள்கள் இப்பிரிவில் அடங்குகின்றன. இந்தப் பிரிவில்தான் 81% நுகர்வுப் பொருள்கள் உள்ளன.

குறைவான ஜி.எஸ்.டி வரி விகிதமானது விலைவாசியைக் குறைக்கும் என எதிர்பார்த்தாலும் குறுகிய காலத்துக்குள் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க நிலையை எட்டும் என்று கூறுவதற்கு இல்லை. ஆனால் மத்திய காலகட்டத்துக்குள் நாட்டுக்கும் அரசுக்கும் பலன்களை இது அளிக்கும் என்று நிதிசார் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையான சரக்குகளுக்கு ஜி.எஸ்.டி வரி விகிதங்கள் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதால் விலைவாசி குறையும் என பல பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். நாடு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறைக்கு மாறுவதால் உற்பத்திப்பிரிவுகளும் தொழிற்சாலைகளும் தங்களது வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிலையில் இருப்பதே தற்போது இந்தியாவுக்கான பெரும் சவாலாக உள்ளது. ஜி.எஸ்.டி. ஐ.என் மூலம் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதால், அதிக எண்ணிக்கையில் சிறிய கம்பெனிகள் கூட இந்த வரிவிதிப்பு முறைக்குள் வர வேண்டிய தேவை உள்ளது.

விலைவாசிகுறையும் என்று எதிர்பார்த்தாலும்கூட, அடுத்து வரும் கொள்கைப் பரிசீலனையில் பாரத ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் அளவிற்கு ஜி.எஸ்.டி தாக்கத்தை ஏற்படுத்தாது என பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர். முதன்மைப் பொருளாதார அதிகாரி சுனில் சின்ஹா பாரத ரிசர்வ் வங்கி மழைக்கால சூழலை மதிப்பிடும், புதிய வரி விதிப்பு முறை செயல் படும் விதமும் கவனத்தில் கொள்ளப்படும் என கூறியிருப்பதாக ஊடகங்கள் மேற்கோள் காட்டி உள்ளன.

ஜி.எஸ்.டியானது குறுகிய காலத்துக்குள் ஐந்து பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்களும் தொழில் உலகத்தினரும் கூறுகின்றனர்.

பெரும் நிறுவனங்களையும் அவர்களின் செயல்முறைகளையும்

புதிய வரி விதிப்பு முறையானது பல நிறுவனங்களையும் தங்களது செயல்முறைகளை மறுவடிவாக்கம் செய்ய நிர்ப்பந்திக்கிறது. வரி விதிப்பில் இருந்து தப்ப முடியாதவாறு ஜி.எஸ்.டி முறையானது இருப்பதால் இப்போது நிறுவனங்கள் வியாபாரிகளையும் விநியோகஸ்தர்களையும் இன்வாய்ஸ் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்துகின்றன. விநியோகச் சங்கிலித் தொடரை முறையாகப் பராமரிப்பதால் பெரிய நிறுவனங்கள் இதனால் பயன் அடையும். மேலும் செலுத்திய உள்ளீட்டு வரிகளுக்கு அவை சலுகைகளை வழங்க முடியும். ஆனால் சிறிய நிறுவனங்கள் அதிக அளவில் செலவழிக்க முடியாது. ஜி.எஸ்.டிக்கு ஏற்ப அவர்கள் செயல்படுவது என்பது அதிக அளவு செலவை உண்டாக்கும். ''கலால்வரி விலக்கு அளிக்கப்பட்ட மண்டலங்களில் இருக்கின்ற உற்பத்திப் பிரிவுகளைத் தொடர்ந்து பல நிறுவனங்களிலும் தாக்கம் பலவிதமாக இருக்கும். ஜி.எஸ்.டி-யை அமல்படுத்துவது என்பது விநியோகச் சங்கிலித் தொடரில் செலவை மிச்சப்படுத்துவதாக அமையும். மேலும் ஒருங்கிணைக்கப்படாத வர்த்தகம் இனி ஒருங்கிணைக்கப்பட்ட வர்த்தகமாக மாறும்”, என வெளிநாட்டு கம்பெனி ஜெஃப்பெரீஸ் கூறி உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வரியால் கிடைக்கும் பலன்கள்

 • நிதி அமைச்சர் தலைமையிலான ஜி.எஸ்.டி கவுன்சிலானது குறைவான வரிகளால் கிடைக்கும் பலன்களை நுகர்வோர் பெற நிறுவனங்கள் உதவுகின்றனவா என்பதை கூர் நோக்குடன் கண்காணிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. எனினும் அநியாய இலாபம் ஈட்டுவதைத் தடுக்கும் கொள்கை அமல்படுத்தப்படுவது குறித்த அபிப்பிராயத்தில் நிபுணர்கள் இரண்டு பிரிவாக உள்ளனர்.
 • ''ஜி.எஸ்.டியின் நேரடி பலன்களை பெரு நிறுவனங்கள் மக்களுக்குக் கிடைக்கச் செய்யும் அதே சமயத்தில் சரக்குக் கட்டணச் செலவில் மிச்சமாகும் தொகையில் இருந்து மறைமுக பலன்களில் ஓரளவையாவது (முழுவதுமாக இல்லா விட்டாலும் கூட) அந்நிறுவனங்கள் தங்களுக்காக நிறுத்தி வைத்துக் கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம். மேலும் அவை வர்த்தகச் செயல் முறைகளையும் மற்றும் உள்ளீட்டு கிரெடிட்களையும் சீரமைக்கும் என்றும் நம்புகிறோம்” என்று நிதிசார் சேவைகள் வழங்கும் நோமுரா நிறுவனம் கூறியுள்ளதாக மேலே உள்ள வரிகள் சுட்டிக்காட்டுகின்றன.
 • ஜி.எஸ்.டி சட்டங்கள் அநியாய இலாபம் ஈட்டுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினாலும்கூட, வரி விகிதத்தைக் குறைத்தல் மற்றும் உள்ளீட்டு கிரெடிட்டுகளின் பலன்கள் நுகர்வோர்களுக்கு அதற்கு ஈடான விலை குறைப்பால்தான் கிடைக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளை அமல்படுத்துவது சிரமமானது ஆகும். அவசரகதியில் நடைமுறைப்படுத்தினால் விலைக் கட்டுப்பாடு நடவடிக்கை போன்றே பிற்போக்கு நடவடிக்கையாக இருக்கும்
 • ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையின் கீழ் செலுத்தும் வரியில் இருந்து கிடைக்கும் சேமிப்பை நிறுவனங்கள் பயன்படுத்தலாம். ஓரளவிற்கு செலவைத் தாண்டி வரவு கிடைப்பதை மேம்படுத்தலாம். புதிய தொழில் தகுதிகளை வளர்த்தெடுக்க மீதி உள்ளவை பயன்படுத்தப்படலாம்.
 • அரசாங்கத்தின் இந்த மாபெரும் சீர்திருத்த நடவடிக்கை ஏற்படுத்தும் உண்மையான தாக்கம் குறித்து ஒரு ஆண்டு நடைமுறைப்படுத்திய பிறகே மதிப்பிட்டுச் சொல்ல முடியும் என பெரும்பான்மையான வரிவிதிப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இதனுடைய உடனடி பாதிப்பு என்பது உங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுத்துவதாக இருக்கலாம். அதேசமயம் வர்த்தகர்களைப் பொறுத்து உள்ளீட்டு வரி கிரெடிட் மூலம் அவர்களை இது அமைதிப்படுத்தும்.
 • அரசாங்கத்தின் வருவாய் மீது ஜி.எஸ்.டி ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கூற வேண்டுமென்றால், அது காத்திருந்து கண்காணித்தல் முறையில்தான் கணிக்கப்பட வேண்டும் என்று தோன்றுகிறது. வங்கிச்சேவை மற்றும் தொலைத்தொடர்பு சேவை உள்ளிட்ட சேவைகள் கூடுதல் செலவு மிக்கவையாக மாறுகின்றன. அடுக்கு மாடி வீடுகள், ஆயத்த ஆடைகள் ஆகியவற்றை வாங்குதல், மாதாந்திர மொபைல் பில்கள், கல்விக்கட்டணங்கள் ஆகியவையும் செலவு மிகுந்தவையாக மாறி உள்ளன. அடுக்கு மாடி வீடு அல்லது கடை வாங்கினால் தோராயமாக ஆறு சதவிகிதம் வரி செலுத்தினால் போதும் என்ற நிலை முன்பு இருந்தது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையில் தற்போது இது 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஜி.எஸ்.டியை வரவேற்றுள்ளனர். 23 மாநிலங்கள் தங்களது செக்போஸ்ட்டுகளையும் தடுப்பு வாயில்களையும் நீக்கி உள்ள சூழலில் இந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பொருட்களை உற்பத்தி செய்து அவற்றை சுதந்திரமாக எடுத்துச் செல்ல முடிகிறது.
 • நுகர்பொருள் விற்பனைக் குழுவும் ஹெட்ஜ் நிதிய மேலாளருமான ஜிம் ரோஜர்ஸ் முன்பு தனது பங்குகளை இந்தியக் கம்பெனிகளுக்கு விற்றுக் கொண்டு இருந்தார். முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய அரசாங்கம் தவறிவிட்டது என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி 2015 ஆம் ஆண்டின் இறுதி யில் அவர் வெளியேறிவிட்டார். இப்போது அவர் தான் மீண்டும் இந்தியாவிற்கு வரலான என யோசிக்கிறேன் என்று கூறுகின்றார். இதுவரை இல்லாத அளவு இந்திய சந்தைகள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், இந்தியாவில் அவர் தனது வாய்ப்பை தவறவிட்டுவிடக் கூடாது என நினைக்கிறார். ''ஜி.எஸ்.டியைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன், அதிர்ச்சி அடைகிறேன், செயல் மறந்து நிற்கிறேன்”, என அவர் ஒரு கலந்துரையாடலில் தெரிவித்தார். இந்தியாவில் ஒருங்கிணைந்த சந்தையை உருவாக்க முயலும் சரக்குகள் மற்றும் சேவை வரி குறித்து கூறும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 • நிறைவாகச் சொல்ல வேண்டும் என்றால், ஜி.எஸ்.டி என்பது வரி ஏய்ப்பவர்கள் மீதான இரண்டாவது துல்லியத் தாக்குதல் ஆகும். பெரும்பான்மை வர்த்தகர்களை வரி செலுத்தும் அமைப்புக்குள் அது கொண்டு வருகிறது. நாட்டிற்குள் சரக்குகளைத் தடையின்றி பயணிக்கச் செய்கிறது. ஒற்றை வரியுடன் ஒருங்கிணைந்த சந்தையுடன் இது உள்ளூர் வரிகள் , மதிப்புக் கூட்டு வரி, விற்பனை வரி வெளிநாட்டு முதலீட்டாளர்களை இழுக்கின்றது. மது அருந்துதல், உணவகங்களில் சாப்பிடுதல், பயணம் மேற்கொள்ளுதல், சொத்து வாங்குதல் முதலான நடவடிக்கைகளுக்கு அதிக அளவில் செலவழிக்க வேண்டி உள்ளதற்காக குடிமக்கள் அசௌகரியமாக கருதுவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் 81% நுகர்பொருள்கள் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரியானது இவற்றை விலை மலிவானதாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறுகிய காலத்திற்கே சிரமம்; ஆனால் நீண்ட காலத்திற்கு நன்மை. இது நாடு ஒரு புதிய வரிவிதிப்பு அமைப்புக்கு மாறுவதால் ஏற்படும் நிலையாகும். இந்நிலை இயல்பானதுதான்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
3.21052631579
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top