பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஜி. எஸ்.டி – புதுயுகத்தின் விடியல்

ஜி. எஸ்.டி -இன் இயல்புகளும் ஆதாயங்களும் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

ஜூன் 30, 2017 நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் ஒலித்த மணியின் ஓசை இந்தியாவின் அரசியல் முதிர்ச்சி, ஓட்டுறவு ஆகியவற்றை உலகம் முழுவதும் எக்காலமிட்டு எதிரொலித்தது. மறைமுக வரிவிதிப்பை அதன் சிக்கலான அராஜக நிலையிலிருந்து மாற்றி அமைத்து சிறப்பான ஒற்றை வரி விதிப்பை நாடு முழுவதற்கும் அறிமுகம் செய்தபோது அது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது. இந்திய அரசியல்வாதிகளுக்கு GST வெற்றிக்கோட்டையாக அமைந்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்தை அநேகவிதமான கொடுங்கோன்மைகளிலிருந்தும், சிக்கலான வழிகளில் சிக்கித் தவித்துவந்த நிலையிலிருந்து வணிகம், தொழில், பொதுமக்கள் ஆகியோரை காப்பாற்றிய மீட்பராக GST கருதப்படுகிறது.

அரசியல் ரீதியாக இந்தியா என்பது மாநிலங்கள் சேர்ந்த ஒன்றியம். 1947 முதல் நாம் ஒரே தேசமாக இருந்து வருகிறோம். ஆனால், நாம் பொருளாதார ஒன்றியமாக இருக்கிறோமா? தமிழ் நாட்டில் உட்கார்ந்து கொண்டு ஒரு வணிகர் தனது பொருள்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வரிவிகிதங்கள் பற்றிய கவலைகள் ஏதுமின்றி இமாச்சலப் பிரதேசத்திற்கு விற்க முடியுமா? ஜம்முகாஷ்மீரிலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு புறப்படும் ஒரு வாகனம் கன்னியாகுமரி வரை பயணிக்கும் போது ஒவ்வொரு மாநில எல்லையிலும் உள்ள சோதனைச்சாவடிகளில் நிறுத்தப்படாமல் செல்லமுடியுமா? இத்தகைய தங்கு தடைகளை நீக்கும் வல்லமை கொண்டதாக, இந்தியாவை ஒற்றைப்பொருளாதார நாடாக அல்லது ஒரேதேசிய சந்தையாக மாற்றியமைக்கும் திறனுடையதாக GST இருக்கிறது. நாட்டின் எந்த மாநிலத்திலும் எந்தவித அச்சமும் தயவும் இன்றி ஒரு தேசியப் பொதுச்சந்தையில் வணிகம் செய்யமுடியும்.

GST என்பது என்ன என்பது பற்றிய பொதுவான முரண்டு பிடித்தல் இப்போது இல்லை. தேசமெங்கும் விழிப்புணர்வு பரவி இருக்கிறது. ஜிஎஸ்டி என்பது சரக்கு மற்றும் சேவை வரியைக் குறிக்கிறது என்று குழந்தைகள் கூட அறிவார்கள். இது போலியான வாதமன்று. ஆகப்பெரிய இத்தகைய சீர்திருத்தத்திற்குக் கட்டியம் கூற வேண்டிய தேவை என்ன? என்பதைத்தான் அவர்கள் அறியவேண்டி இருக்கும். புதிய சகாப்தம் பிறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆனது ஏன்? நம்முடைய வரிவிதிப்பு முறையின் வரலாற்றுப் பின்புலத்தில் இதற்கு சரியான பதில் இருக்கிறது. காலகாலமாக, மத்திய அரசுதான் உற்பத்திப் பொருள்களின் மீது சுங்கவரியை விதித்துவந்திருக்கிறது. சேவைகளுக்கு சேவை வரியை விதித்திருக்கிறது. மாநிலங்களுக்கிடைய பொருள் விற்பனை நடக்கும் போது மத்திய அரசு CST வரியை விதித்துவந்தது. ஆனால் இந்த வரி மாநில அரசுகளால் வசூலிக்கப்பட்டு எடுத்துக்கொள்ளப்படும். இவை தவிர மாநில அரசுகள் சில்லறை விற்பனைக்கு மதிப்புக்கூட்டு வரியை (VAT) விதித்தன. மாநிலத்திற்குள் பொருள்கள் கொண்டுவரப்படும்போது நுழைவுவரி போடப்பட்டது.

ஆடம்பரவரி, கொள்முதல் வரி போன்றவையும் விதிக்கப்பட்டு வந்தன. இத்தகைய வரிகளின் எண்ணிக்கை தலை சுற்றக்கூடிய வகையில் இருந்ததோடு மட்டுமின்றி, இத்தகைய வரிகளை வசூலிக்கும் நடைமுறைகள் வரி செலுத்துவோருக்கு சிம்ம சொப்பனமாக இருந்துவந்தன. இத்தகைய வரிகள் தனித் தனி குழிகளை களைப்போல இருந்ததுதான் மேலும் சிக்கல்களை உண்டாக்கியது. மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசுகளுக்கோ செலுத்தப்படும் வரிகளில் எந்தவிதமான கழிவும் கிடையாது. இதன் விளைவாக வரிவிதிப்பின் தொடர்ச்சியான விளைவுகள் தெரியத்தொடங்கின. மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலங்களுக்கு உள்ளேயும் நடைபெறும் விற்பனைகளில் நேர்மையற்ற மனிதர்கள் சிலர் இத்தகைய தடைகளைப் பயன்படுத்திகொண்டு ஆதாயம் பெற்று வந்தனர். மெத்தனம், திறமையற்ற நடைமுறைகள் இவற்றோடு சேர்ந்திருந்த சிக்கலான வரிவிதிப்பு நடைமுறைகள் இந்தியாவில் வணிகத்தை துயர்மிகுந்த செயலாக மாற்றி இருந்தன.

இத்தகைய இடர்மிகுந்த அனுபவங்கள் ஒரு கெட்ட கனவாக மறக்கப்பட இருக்கின்றன. இனி நாம் பார்க்கப்போவது திறன்மிகு நிர்வாகம். இதன் முக்கிய பண்புகளான தார்மீகத்தன்மை, பரிவுடன் மறுமொழி கூறுகிற வெளிப்படையான போக்கு ஆகியவை இதில் இருக்கும். ஜிஎஸ்டியுடன் பல்வேறு வரிகள் ஒன்றிணைக்கப்பட்டு பொருள்கள், சேவைகளின் மீது விதிக்கப்படும் ஒற்றைவரியாக அது இருக்கும். உற்பத்தியாளர் அல்லது இறக்குமதியாளரிலிருந்து தொடங்கி கடைசியாக இருக்கும் சில்லறை வணிகர்கள் வரை உள்ள ஒவ்வோர் நிலையிலும் பொருள்களுக்கும் சேவைக்கும் இது விதிக்கப்படும். மத்திய, மாநில அரசுகளுக்கு வரி விதிக்கும் தனித்தனி அதிகாரங்கள் உள்ள கூட்டாட்சியாக இந்தியா ஆகியிருக்கிறது. இந்தியாவில் ஜிஎஸ்டி இருவிதமாக வசூலிக்கப்படும். மத்திய சரக்கு மற்றும் சேவைவரி (CGST), சரக்கு மற்றும் சேவைக்கான மாநில வரி (SGST) என இது விதிக்கப்படும். மாநிலங்களுக்கிடையே பொருள்களும் சேவைகளும் வழங்கப்படும் போது மத்திய அரசு ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவைவரியையும் (IGST) விதிக்கும். இது தவிர யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவைவரி (UTGST) சட்டசபைகள் இல்லாத யூனியன் பிரதேசப்பகுதிகளுக்கிடையே பொருள், சேவை பரிமாற்றம் நிகழும் போது விதிக்கப்படும். அதோடு கூட, ஜிஎஸ்டி அறிமுகம் செய்ய்யப்படுவதால் மாநிலங்களுக்கு ஏதேனும் வருவாய் இழப்பு ஏற்பட்டால் அதை ஈடு செய்வதற்கான நிதிக்காக ஜி எஸ் டி இழப்பீட்டு வரி சில குறிப்பிட்ட ஆடம்பரப்பொருள்கள், சேவைகளுக்கு விதிக்கப்படும்.

ஜிஎஸ்டிஇன் முக்கியமான இயல்புகள்

ஜிஎஸ்டியைப்பற்றி புரிந்துகொள்வதற்கு பின்வரும் விவரங்கள் உதவும்:

 • ஜம்மு காஷ்மீர் உள்பட இந்திய நிலப்பரப்பு முழுவதற்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு பொருந்தும்.
 • பொருள்கள், சேவைகள் வழங்கலுக்கு அவை வழங்கப்படும் இடத்தில் மட்டும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு செய்ய்யப்படும். இதுவரை பொருள் உற்பத்திக்கும், விற்பனைக்கும், சேவை வழங்களுக்கும் தனித்தனியே வரி விதிப்பு செய்யப்பட்டு வந்தது.
 • இலக்கு நோக்கி விதிக்கப்படும் வரி என்பது இதன் தாத்பரியமாகும். பொருள் உற்பத்தியாகும் இடத்தில் வரியை விதிக்காமல் பொருள்கள் நுகரப்படும் இடத்தில் விதிக்கப்படும் வரியாகும் இது.
 • இறக்குமதியாகும் பொருள்கள் மாநிலங்களுக்கிடையில் நடைபெறும் பொருள்வழங்கலைப்போலக் கருதப்படும். அவற்றிற்கு விதிக்கப்படும் சுங்க வரிகளோடு சேர்த்து IGST வரியும் விதிக்கப்படும்.
 • வேறு நாடுகளிலிருந்து வழங்கப்படும் சேவைகள் மாநிலங்களுக்கு இடையிலான சேவையைப்போலவே கருதப்பட்டு IGST வரி விதிப்புக்கு உட்படுத்தப்படும்.
 • மத்திய ஜிஎஸ்டி வரி, மாநில ஜிஎஸ்டி வரி, யூனியன் பிரதேச ஜிஎஸ்டிவரி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டிவரி ஆகியவை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஜிஎஸ்டி குழுமத்திடம் பரஸ்பரம் ஒப்புக்கொண்ட அளவில் விதிக்கப்படும். 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு இருக்கும். மதிப்புமிக்க உலோகங்களுக்கு 3% ஜிஎஸ்டி விதிக்கப்படும். குறிப்பிட்ட சில பொருள்களுக்கும் சேவைகளுக்கும் விதிவிலக்கு தரப்பட்டுள்ளது. அனைத்துவிதமான சரக்குகள், சேவைகளையும் உள்ளடக்கியதாக ஜிஎஸ்டி அமைகிறது.
 • மனிதர்களின் பயன்பாட்டிற்காகத் தயாரிக்கப்படும் ஆல்கஹால் அரசியல் சட்டப்படி ஜிஎஸ்டியின் கீழ் வராது. ஆல்கஹால் தவிர பெட்ரோலியப் பொருள்கள் (கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், ATF, இயற்கை எரிவாயு) போன்றவை தற்போது ஜிஎஸ்டியில் வரவில்லை. ஆனால், இவைகளை ஜிஎஸ்டி குழுமத்தின் பரிந்துரையின் பேரில் எந்த நேரத்திலும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரமுடியும். ரூ.20இலட்சம் வரையிலும் ஒரு பொதுவான ஆரம்பநிலை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 • அரசியல் சட்டப்பிரிவு 279A இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தனிவகை மாநிலங்களுக்கு இந்த விலக்கு ரூ.10இலட்சமாகும். (ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்த விலக்கில் இடம்பெறாது). மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி, யூனியன் பிரதேச ஜிஎஸ்டி ஆகிய மூன்றுக்கும் இந்த விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
 • இது தவிர, தொகுப்புத்திட்டத்தின் கீழ் வரியை செலுத்தும் விருப்பத்தேர்வும் இருக்கிறது (அதாவது நிர்ணயிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகையை வரியாக செலுத்துவது). ஆண்டுக்கு 75 இலட்சத்துக்கு வரவுசெலவு மேற்கொள்ளும் சிறிய அளவிலான வரிகட்டுவோருக்கு இது பொருந்தும். இந்த விருப்ப வரிவிதிப்புக்கான உச்சவரம்பு அரசியல் சட்டப்பிரிவு 279Aஇன் கீழ் வரும் தனிவகை மாநிலங்களுக்கு (ஜம்மு காஷ்மீர் தவிர) ரூ.50லட்சம். சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு பொருள் வழங்குவதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் ஜிஎஸ்டி வரி கிடையாது.
 • மூலதனப் பொருள்களுக்கு செலுத்தப்பட்ட மத்திய ஜிஎஸ்டி, விற்பனைப் பொருளுக்கான மத்திய ஜிஎஸ்டியுடனும், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மூலதனப் பொருள்களுக்கு செலுத்தப்பட்ட வரி மாநில, யூனியன் பிரதேச விற்பனை வரியுடனும் நேர் செய்துகொள்ளப்படலாம். இவற்றை வேறுவிதமாக நேர் செய்து கொள்ளமுடியாது.
 • IGST செலுத்தப்பட்ட சில குறிப்பிட்ட நேர்வுகளில் சில குறிப்பிட்ட வழி முறைகளின் படி வரிகளை நேர் செய்துகொள்ளமுடியும். வரிக்கணக்குகளை மின் பதிவு மூலம் சமர்ப்பிக்கலாம்.
 • இணையவழி வங்கிச்சேவை, பற்று அட்டை, கடன் அட்டை, தேசிய மின்னணுப் பணப்பரிமாற்றம் (NEFT) உடனடி பெருந்தொகைப்பரிமாற்றம் (RTGS) போன்ற பலவிதமான வழிமுறைகள் உள்ளன.
 • கூடுதலாக செலுத்தப்பட்ட வரிப்பணத்தைத் திரும்பப்பெறுவதற்கு வரி செலுத்துபவர் இரண்டு ஆண்டுகளுக்குள் கோரிக்கை சமர்ப்பிக்கலாம்.
 • பதிவுசெய்து கொண்டுள்ள நபர் தாமாகவே கணக்கிட்டு வரி செலுத்துவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 • வரி விஷயங்களில் கட்டுப்பாடுகள் தெளிவாக இருக்கவேண்டும் என்று வரி செலுத்துபவர் அதற்குரிய மாநில அதிகார அமைப்பை நாடலாம். மாநில அதிகார அமைப்புகளின் யோசனைகளை CGST சட்டத்தின் கீழ் மத்திய அரசு பின்பற்றும்.
 • பொருள்களிலும், சேவையிலும் குறைக்கப்பட்டுள்ள வரியை நுகர்வோர் பயன்பெறும்படி வணிக அமைப்புகள் வழி செய்யவேண்டும்.
 • வணிக அமைப்புகள் ஆதாயம் அடைவதற்கு எதிரான சட்டக்கூறுகள் ஜிஎஸ்டி சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
 • தற்போது வேறு வகைகளில் வரி செலுத்தி வருபவர்கள் ஜிஎஸ்டி வரி முறைக்கு இடரின்றி மாறுவதற்கு விரிவான இடைக்கால ஏற்பாடுகள் பல செய்யப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டியினால் டைக்கக்கூடிய ஆதாயங்கள்

இந்தியாவில் உற்பத்தி

இந்தியாவிற்கு ஒன்றுபட்ட ஒரு பொதுச் சந்தையை உருவாக்க உதவுகிறது. அந்நிய முதலீடுகள் அதிகரிக்கவும், இந்தியாவில் உற்பத்தி பெருகவும் உதவும். மூலப்பொருள்களுக்கு செலுத்தப்படும் வரியை கழித்துக்கொள்வதன் மூலம் பொருள்கள், சேவைகளில் ஒவ்வொரு படிநிலையிலும் ஏற்படக்கூடிய தொடர் விளைவுகளை மட்டுப்படுத்தும்.

சட்டங்கள், வழிமுறைகள், வரிவிகிதங்கள் ஆகியவற்றிற்கிடையே ஒத்திசைவு நம்முடைய பொருள்களின் ஏற்றுமதியில் வரி விதிப்பை திறன்பட சமன்படுத்துவதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதியும் அதிகரிக்கும். உற்பத்தி நிறுவனங்களின் சராசரி வரிச்சுமை குறையும். இதனால் விலை குறையும். விலை குறைவதால் நுகர்வு அதிகரிக்கும். நுகர்வு அதிகரித்தால் உற்பத்தியும் அதிகரிக்கும். இதனால் உற்பத்தி நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்.

எளிமையான வரி விதிப்பு முறை

தற்போதுள்ள பலதரப்பட்ட வரிவிதிப்பு முறைகளைக் குறைத்து எளிதாக்கி சீரான தன்மையைக் கொண்டுவருதல் - வரி செலுத்தும் வழிவகைகளில் குறைவான செலவினம் பலவிதமான பதிவேடுகளை வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை. ஆகவே இதற்கான முதலீடும், மனித ஆற்றல் தேவையும் வெகுவாகக்குறையும்.

பதிவு, வரிக்கணக்கு சமர்ப்பித்தல், பணம் திரும்பப்பெறுவது, வரி செலுத்துவது ஆகிய பல வழிமுறைகளும் எளிமையாக்கப்பட்டு தானியங்கி முறையில் செயல்படுத்தப்படுகின்றன. அனைத்துவிதமான இடைவினைகளையும் ஜிஎஸ்டி எண் நுழைவாயில் மூலமாகவே செய்து கொள்ள முடியும். எனவே வரி செலுத்துபவரும் வரி நிர்வாகத்தினரும் நேரடியாக சந்திதுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

வரி செலுத்துபவர்கள் பதிவு செய்து கொள்வதற்கும், வரிக்கணக்கு சமர்ப்பிப்பதற்கும், வரிவிகிதங்களுக்கும் எளிய நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பொருள்களும் சேவைகளும் பொதுவான விதத்தில் பகுக்கப்பட்டுள்ளன.

நுகர்வோருக்கு ஆதாயங்கள்

 • உற்பத்தியாளர், மொத்த விற்பனையாளர், சில்லறை விற்பனையாளர் ஆகியோருக்கிடையே வரிகளைச் சமன் செய்யும் இசைவான ஏற்பாடுகளின் காரணமாக பொருள்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.
 • கம்பெனிகளின் சராசரி வரிச்சுமை குறையும் வாய்ப்பிருப்பதால் பொருள்களின் விலை குறையும். விலை குறைவதால் நுகர்வு பெருகும்.

முடிவுரை

ஜிஎஸ்டி வரியை குறுகிய பார்வை கொண்டு பார்க்கும்போது, மறைமுக வரி சீர்திருத்தத்தின் சில நிழல்கள் மட்டுமே புலப்படும். இந்த நிலைமாற்ற சீர்திருத்தத்தை விசாலமான, பரந்த பார்வை கொண்டு பார்க்கும்போது, இது ஒரு வணிக மாற்றமாக, சமூக மறுஉற்பத்தியாக, பொருளாதார வளர்ச்சியின் தொய்வை நீக்கும் ஒரு புரட்சியாக, உலக மாற்றங்களினால் நமது பொருளாதாரம் பாதிப்புகளுக்கு உள்ளாகாமல் தடுக்கும் தடுப்பு சக்தியாகப் பார்க்கமுடியும். நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை உடையதாக நமது பொருளாதாரம் உயரும் என்பது திண்ணம்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
2.78571428571
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top