பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிதி சேர்க்கை / வரி சீர்திருத்தங்கள் / ஜி.எஸ்.டி- யும் நுகர்வோர்கள் அதைப் புரிந்து கொள்ளுதலும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஜி.எஸ்.டி- யும் நுகர்வோர்கள் அதைப் புரிந்து கொள்ளுதலும்

ஜி.எஸ்.டி- யும் நுகர்வோர்கள் அதைப் புரிந்து கொள்ளுதலும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

ஜி.எஸ்.டி என்றால் என்ன?

வரி யார் கட்டுகிறார்கள், வரி எப்படி வசூலிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து வரிகள் நேரடி வரி, மறைமுக வரி என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. பொதுவாக வருமானம், இலாபம் அல்லது சொத்துகளின் மீது வரிகள் விதிக்கப்படுகிறது. நேரடி வரிகளுக்கு உதாரணங்களாக வருமான வரி, நகராட்சி வரி, சொத்து வரி மற்றும் செல்வவரி போன்றவற்றைக் கூறலாம். இதற்கு மாறாக சரக்குகள் அல்லது சேவைகள் மீது விதிக்கப்படும் வரிகள் மறைமுக வரிகள் ஆகும். இவை விற்பனையாளரால் அல்லது வாங்குபவரால் செலுத்தப்படுகின்றன. ஆனால், பெரும்பாலும் இந்த வரியை பொருட்களை விற்கும் விற்பனையாளர்கள் பொருளை வாங்குபவர்கள் மீதே சுமத்திவிடுகின்றனர். மறைமுக வரிகளுக்கு உதாரணங்களாக பொருள்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் சுங்கவரி, வர்த்தக நிறுவனம் வழங்கும் சேவை மீது விதிக்கப்படும் சேவை வரி, உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படும் கலால் வரி, விற்பனை செய்யப்படும் பொருள் மீதான விற்பனை வரி போன்றவற்றைக் கூறலாம். சரக்குகள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) என்பது ஒரு மறைமுக வரியாகும். மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் பெரும்பான்மையான மறைமுக வரிகளுக்கு மாற்றீடாக இந்த ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவில் இந்த ஜி.எஸ்.டி வரியானது ஜூலை 1, 2017 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஜி.எஸ்.டி யின் முக்கிய இரண்டு அம்சங்கள்

  1. ஒவ்வொரு உற்பத்திப்பொருளுக்கும், சேவைக்கும் ஒரே வரிதான் விதிக்கப்படும்.
  2. இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த வரியானது மாறாமல் ஒன்று போலவே இருக்கும்.

அதே சமயம் தற்காலிகமாக பெட்ரோலியம், மது மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியன ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு கீழ் வராது எனச் சொல்லப்படுகிறது. இவை முந்தைய வரி விதிப்பு முறைக்குக் கீழேயே தொடர்ந்து இருக்கும். சுங்க வரிகள் தொடரும். ஆனால் அவை ஜி.எஸ்.டியுடன் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும். அதே போன்று நகராட்சி, கிராமப்பஞ்சாயத்து போன்ற உள்ளாட்சி அமைப்புகள் விதிக்கும் வரிகளுக்கும் ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சில விலக்குகள் தவிர, இதற்கு முன்பு நடைமுறையில் இருந்து வரும் மறைமுகவரிகள் அனைத்தும் ஜி.எஸ்.டியால் பதிலீடு செய்யப்பட உள்ளன. ஜி.எஸ்.டி யின் கீழ் உள்ளடக்கப்படக்கூடிய முக்கியமான மறைமுக வரிகளாவன: கலால் வரி, சேவை வரி, சிறப்புக் கூடுதல் சுங்கவரி, மாநில வாட் வரி, மாநில விற்பனை வரி, கேளிக்கை வரி, நுழைவு வரி மற்றும் சொகுசு வரி போன்றவை ஆகும். ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்படுவதால் பாதிப்பு அடையக் கூடிய மூன்று முக்கிய பங்குதாரர்கள் யார் யார் என்றால்;

  1. நுகர்வோர்
  2. அரசாங்கங்கள்
  3. வர்த்தகர்கள்

இந்தக் கட்டுரை முந்தைய வரி அமைப்பில் இருந்து ஜி.எஸ்.டி எவ்வாறு வித்தியாசப்படுகின்றது என ஒப்பிட்டுக் காட்டுவதுடன் நுகர்வோர் மீது ஜி.எஸ்.டி ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தும் பேசுகின்றது.

முந்தைய வரி அமைப்பில் இருந்து ஜி.எஸ்.டி எவ்வாறு வித்தியாசப்படுகின்றது?

ஒரு நுகர்வோர் தனது சொந்தப் பயன்பாட்டுக்காக ஒரு குறிப்பிட்ட சரக்கு சேவையை வாங்குவதற்கு முன்பு, அந்தச் சரக்கானது உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பல படிநிலைகளைக் கடந்து வருகின்றது. அந்தப் பயணத்தில் அந்தச் சரக்கு மீது பல படிநிலைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மறைமுக வரிகள் விதிக்கப்படுகின்றன. இதில் சில வரிகளை மத்திய அரசானது விதிக்கின்றது. சில வரிகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் வசூலிக்கின்றன. உதாரணமாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒரு டி.வி. பெட்டிக்கு அது தொழிற்சாலையை விட்டு வெளியில் போகும் போது கலால் வரி விதிக்கப்படுகிறது. இந்த டி.வி.யைத் தயாரிப்பதில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உபரி பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தால் அந்தப் பாகங்கள் மீது சுங்க வரி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். உற்பத்தியாளரிடம் இருந்து மொத்த விற்பனையாளருக்கு டி.வி பெட்டி செல்லும் அடுத்தகட்டப் பயணத்தில் விற்பனை வரியானது வருகின்றது. பிறகு கடைசியாக மொத்த விற்பனையாளரிடம் இருந்து சில்லறை விற்பனையாளருக்கு டி.வி பெட்டி போகும் போது வாட் வரியானது வசூலிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பு நிலைமை சரக்குகள் மாநிலம் விட்டு மாநிலம் போகும் போது மேலும் சிக்கலாகின்றது. இவ்வாறு வேறு மாநிலத்துக்குச் செல்லும் போது மத்திய விற்பனை வரி வசூலிக்கப்படுகின்றது. அதே சமயம் மாநிலத்துக்கு மாநிலம் வரி விகிதமும் வேறுபடுகின்றது. உதாரணமாக ஜி.எஸ்.டிக்கு முன்பு மஹாராஷ்டிராவில் மதிப்பு கூட்டப்பட்ட வரி (வாட் வரி) 12.5% என இருந்தது. இதே வரி குஜராத்தில் 15% என இருந்தது. பல தருணங்களில், குறிப்பிட்ட சில பொருட்கள்/சேவைகளை மேம்படுத்த அல்லது ஊக்கத்தொகையைக் குறைக்க சில வரிகள் விதிக்கப்படுகின்றன. சொகுசு வரி அல்லது போதை தரும் பொருள்கள் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இவ்வாறு பல படிநிலைகளில் விதிக்கப்படும் வரிகள் மற்றும் வரி விதிக்கப்படும் பல படிநிலைகள் இரண்டும் சேர்ந்து இரு பிரச்சனைகளை உருவாக்குகின்றன - முதலாவது, வரி செலுத்துபவர்கள் வரி விதிப்புக்கு ஏற்ப இசைந்து நடப்பதை சிரமத்துக்கு உள்ளாக்குவதோடு, வரி ஏய்ப்புக்கான வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.

புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையின்படி, ஒரு குறிப்பிட்ட சரக்கு/சேவை என்பது ஒரே ஒரு வரி விதிப்பு விகிதத்தை மட்டுமே பெற்றிருக்கும். அதுவும் இந்த வரி விகிதம் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விதமாகவே இருக்கும். மேலும் ஒவ்வொரு உற்பத்தியாளர் / விற்பனையாளர் / வர்த்தக நிறுவனமும் உள்ளீட்டு வரி கிரெடிட் (ஐ.டிசி.) என்றழைக்கப்படும் திட்டத்தின் பலன்களைப் பெற முடியும்.

ஜிஎஸ்டி அமைப்பிலுள்ள சில சவால்கள்

தகவல் தொழில்நுட்பத் தயார் நிலை மற்றும் உள் கட்டமைப்பு வசதிகள் - ஜிஎஸ்டி என்பது, தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் சட்டமாகும். ஆகவே, எல்லா மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் இதற்குத் தேவையான உள் கட்டமைப்பு வசதிகளும் போதிய மனித வளமும் இருக்கும் என்று எடுத்துக்கொள்ள முடியாது. கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்கள் கணினிசார் நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்தியிருப்பதைப் போல மற்ற மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் செயல்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. பல மாநிலங்களில் இன்றும் மதிப்புக் கூட்டு வரி கையாலேயே தயாரிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட மாநிலங்களையும் நாம் கைகோர்த்து அழைத்துச் செல்ல வேண்டும்.

அலுவலர்களுக்கான பயிற்சி

எந்தவொரு புதிய சட்டத்தை செயல்படுத்தும் போதும் பழைய சட்டம் பற்றியும், புதிய நடைமுறை பற்றியும் மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். பழைய சட்டத்தை மறந்து புதிய சட்டத்தின் ஷரத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டும். மதிப்புக்கூட்டு வரி, சேவைகள் வரி, கலால் அல்லது சுங்க வரி இவைகளை செயல்படுத்தி வந்த அனைத்து மத்திய, மாநில அரசு அதிகாரிகளும் ஜி எஸ் டி ஷரத்துக்களையும் தற்போதுள்ள வரி நிலைமையில் அவைகளின் தாக்கத்தையும் புரிந்து கொள்ளவேண்டும்.

வரி விகிதங்களை முடிவு செய்வது

வரி விகிதங்களை நிர்ணயிப்பது மூன்று அடிப்படை நோக்கங்களை கொண்டிருந்ததால், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு மிகவும் சிக்கலாக இருந்தது. முதலாவது, ஏழைகளும் பாதிப்புக்குள்ளான மக்களும் பயன்படுத்தும் மற்றும் பெருமளவிலான அடிப்படைத் தேவைப் பொருட்களின் மீதான வரி மக்களின் ஏற்புத்தன்மைக்கு ஏற்றவாறு அமைய வேண்டும். இரண்டாவதாக, மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் ஒட்டுமொத்த வருவாய் குறையக்கூடாது. மூன்றாவதாக, பொருட்கள் மற்றும் சேவைகளின் மீது தற்போதுள்ள வரி அளவு பெருமளவு உயரவோ, குறையவோ கூடாது. இப்படிப்பட்ட எல்லா அடிப்படைத் தன்மைகளின் அடிப்படையில், நடத்தப்பட்ட நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, ஜிஎஸ்டி கவுன்சில் 5%, 12%, 18% மற்றும் 28% என்ற நான்கு அடுக்கு வரிகளை முடிவு செய்தது. இது அல்லாமல், வரி விலக்கப்பட்ட பொருட்களும், சேவைகளும் உள்ளன.

நடுத்தர, சிறு தொழில்களுக்கு ஆதரவு

இந்த புதிய ஜிஎஸ்டி அமைப்பில் மத்திய மற்றும் சிறு தொழில்களின் பிரச்னைகள் சார்ந்த ஷரத்துக்கள் உள்ளன. இதன் அடிப்படையில் ஒரு நிதி ஆண்டில் ரூ.20 இலட்சத்திற்கும் குறைவான மொத்த விற்பனை உள்ள சில சிறப்புத் தகுதி மாநிலங்களில் ரூ.10 இலட்சம் உள்ள வியாபார நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்படிப்பட்ட தொழில்கள் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியதில்லை.

இது அல்லாமல், பதிவு செய்யப்பட்ட ஒருவர், முந்தைய நிதியாண்டில், ரூ.75 இலட்சத்திற்கு மேற்படாத விற்பனை உள்ளவர் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுருக்கமான அறிக்கைப் படிவத்தை சமர்ப்பித்தால் போதும். இந்தத் திட்டத்தின்கீழ், பொருள்களை விற்பனை செய்வோரும், உற்பத்தி செய்வோரும், உணவு விடுதிகள் சார்ந்த வரி செலுத்துவேரும் பயன் பெறுவர். இந்தத் திட்டத்தின்கீழ் உற்பத்தியாளர்கள் 1% வரியும், உணவு விடுதிகள் 2.5 சதவிகிதமும், வியாபாரிகள் 0.5% வரியும் மொத்த விற்பனை அளவில் கொடுப்பார்கள். அளவில் கொடுப்பார்கள். ஆனால், இந்தத் திட்டம் மாநிலங்களுக்கிடையே சேவைகளை வழங்குபவர்களுக்கும், வலைதளங்கள் மூலம் விற்பனை செய்பவர்களுக்கும் பொருந்தாது. உதாரணமாக x என்ற சரக்கு உற்பத்தி செய்யப்பட்டு நுகர்வோருக்கு நேரடியாக விற்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். முந்தைய வரி விதிப்பு முறைப்படி இறுதிநிலை விற்பனைக்கு முன்பு விதிக்கப்படும் வரிகள் என கலால் வரி, மாநில வாட் வரி, நுழைவு வரி இவற்றைச் சுட்டிக்காட்டலாம். இந்த வரிகள் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக 15% இருப்பதாக எடுத்துக் கொள்வோம்.

ஜி.எஸ்.டியின் கீழ் இந்தச் சரக்கானது 18% வரி விகிதத்தின் கீழ் வரும். அப்படியென்றால் இது செலவு மிகுந்த சரக்காக இருக்கும். என்றாலும் இது 12% அல்லது 5% வரி விகித அளவிலேயே நிர்ணயிக்கப்படுகின்றது. அப்போதுதான் இது விலை குறைவான சரக்காக இருக்க முடியும். மாநிலங்களுக்கு இடையில் உருவாகும் முக்கியமான வித்தியாசத்தின் காரணமாக ஒரு குறிப்பிட்ட சரக்கு சேவை ஒரு மாநிலத்தில் விலை மலிவானதாக இருக்கும். ஆனால் வேறொரு மாநிலத்தில் அதிகமாக இருக்கக் கூடும்.

ஜி.எஸ்.டியின் கீழ் உணவு தானியங்கள், பருப்புகள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் போன்ற விவசாய, உணவுப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று கல்விக்கும் சுகாதாரப் பராமரிப்புக்கும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இவை எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் இதற்கு முன்பு இவற்றுக்காக ஒரு குடும்பம் தனது மொத்த செலவில் 40 முதல் 45% செலவழித்திருப்பது தெரியவரும். இது நுகர்வோர் விலை குறியீட்டு எண் மூலமாகக் கணக்கிடப்பட்டு உள்ளது. அடுத்ததாக இதர இன்றியமையாதப் பொருள்களான நிலக்கரி, சர்க்கரை, சமையல் எண்ணெய், காஃபி போன்ற பொருள்களுக்கு வரி விகிதமானது 5% என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனினும் சேவைகளுக்கான நிலையான விகிதமாக 18% என்று வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்கு முன்பு இருந்த 14, 15% என்ற விகிதத்தோடு ஒப்பிட இது அதிகம்தான். ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு முன்பான காலகட்டத்தில் பலமுறை வரி விதிப்பதும் பல இடங்களில் வரி விதிப்பும் இருந்த காரணத்தால் ஒவ்வொரு தனிப்பட்ட சரக்கு/சேவைக்கு தகுதியான வரி விகிதத்தைக் கணக்கிட்டு மாற்றுவது என்பது கடினமானதாகவே உள்ளது. இருந்த போதிலும் சில பொருளாதார நிபுணர்கள் 50% பொருட்கள் மீதான புதிய வரி விகிதமானது முந்தைய வரி விகித அளவிலேயே இருக்கும் எனக் கணக்கிட்டுக் கூறுகிறார்கள். மேலும் 30% பொருட்களுக்கான வரி விகிதம் குறைவாகவே இருக்கும் என்றும் உண்மையில் 20% பொருட்களுக்கான வரி மட்டுமே அதிகரிக்கும் என்றும் அந்த நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மற்றொரு வகையில் பார்த்தால், தகுதியான வரி விதிப்பு விகிதம் மாறுபடக் காரணமாக உள்ளீட்டு வரி கிரெடிட் முறையைக் கூறலாம். இதற்கு முன்பு விளக்கிச் சொல்லியவாறு, இந்த வழிமுறையானது தகுதியான மொத்த வரி விதிப்பைக் குறைப்பதன் மூலம் உற்பத்தியாளர்கள்/விற்பனையாளர்களின் ஒட்டுமொத்த செலவுகளைக் குறைக்கிறது. செலவில் ஏற்படும் இந்த செலவுக் குறைப்பானது நுகர்வோர் செலுத்தும் இறுதி நிலை விலையைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செலவைக் குறைப்பதன் பலன்கள் நுகர்வோர்ருக்கு கிடைக்காமல் போவதைக் கவனத்தில் கொண்டு அத்தகைய நிறுவனங்களைக் கையாள அரசு ஜி.எஸ்.டி மசோதாவில் ஒரு ஷரத்தை அறிமுகப்படுத்தியது. அந்த ஷரத்து “அநியாய இலாபம் ஈட்டுவதற்கு எதிரான விதிகள்” என்பதாகும். உள்ளீட்டு வரி கிரெடிட் மூலமாகக் கிடைக்கும் செலவுக் குறைப்பின் பலனை நிறுவனங்கள்/ வர்த்தகர்கள் நுகர்வோர்ருக்கு கிடைக்கச் செய்வதை இந்த விதிகள் கட்டாயமானதாக்கி உள்ளன. அதாவது நிறுவனங்கள்/வர்த்தகர்கள் பொருள்களின் விலைகளைக் குறைத்தாக வேண்டும். அப்போதுதான் நுகர்வோர்ருக்குப் பலன் கிடைக்கும். எவ்வாறு இருந்தாலும், விலைகள் குறைகின்றனவா என்பதை உறுதிப்படுத்துவது சிரமமான காரியமாகவே இருக்கும். அதாவது உடனடியாக குறுகிய காலத்திற்கு இந்தச் சிரமம் தொடரும். பொருட்களின் மீது அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலை (எம்.ஆர்.பி) போன்றவையே சவால்களாக உள்ளன.

சில பொருளாதார நிபுணர்களும் விமர்சகர்களும் குறைவான வரி விகிதம் அல்லது அதே அளவான வரி விகிதம் ஆகியவை இருந்தாலும்கூட, எதிர்வரும் காலத்தில் இது உடனடியாக பணவீக்கத்தை அதிகரிக்கவே செய்யும் என தெரிவிக்கின்றனர். இந்த கருத்துக் கணிப்புக்கு பின்னணியில் இரண்டு சாத்தியமான காரணங்கள் உள்ளன. ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளின் அனுபவங்கள் ஒரு காரணமாகும். இந்த நாடுகளில் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பணவீக்கம் அதிகரித்து இருந்தது. எனவே அது போன்ற நிலைமை இந்தியாவிலும் உருவாகக் கூடும். மற்றொரு காரணம் ஒத்திசைவுச் செலவு அதிகரிப்பதனால் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள விலை உயர்வு ஆகும். குறிப்பாக சிறு, நடுத்தர நிறுவனங்களில் இந்த விலை உயர்வு நிகழக்கூடும்.

ஜி.எஸ்.டி-யின் நுகர்வோர் மீதான தாக்கம்

உற்பத்தி, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலித் தொடர் செயல்முறைகளில் தாக்கம் ஏற்படுத்துவதால் ஜி.எஸ்.டியானது எவ்வாறு நுகர்வோரைப் பாதிக்கிறது என்பது முக்கியமான விவாதப்பொருளாகின்றது.

ஜி.எஸ்.டியின் அம்சங்களில் மிகவும் பரவலாக விவாதிக்கப்பட்ட அம்சம் எதுவென்றால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மீதான தாக்கமே ஆகும். தற்போது இந்தியாவில் அதிக அளவிலான வர்த்தக நிறுவனங்கள் முறைசாரா பொருளாதாரத்தின் கீழ்தான் செயல்பட்டு வருகின்றன. இதன் அடிப்படை அர்த்தம் என்னவென்றால், அவை நெறிமுறை மற்றும் வரி செலுத்தும் கடமையில் இருந்து தப்பிவிடுகின்றன என்பதே ஆகும். இந்தத் தப்பித்தல் அல்லது வரி ஏய்ப்பு சில நிறுவனங்களின் ஒட்டுமொத்த செலவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க சில சமயங்களில் உதவுகின்றன. இருந்தாலும், உள்ளீட்டு வரி கிரெடிட் அமைப்பின் கீழ் ஒரு நிறுவனம் இந்த கிரெடிட் பலன்களை ஜி.எஸ்.டி நெட்ஒர்க்கில் பதிவு செய்துள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து பொருட்களை வாங்கி இருந்தால்தான் பெற முடியும். மேலும் கிரெடிட் பலன்களைப் பெற அந்த நிறுவனம் வரிகளை முறைப்படி செலுத்தி இருக்க வேண்டும்.

இந்த ஷரத்து இருப்பதனால் கொள்முதல் செய்பவர் ஜி.எஸ்.டிக்கு இசைந்து நடக்கும் விற்பனையாளரிடம் இருந்து மட்டுமே பொருட்களை வாங்குவார் என்ற சாத்தியப்பாடு அதிக அளவில் உள்ளது. இதனால் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தை மீறி பதிவு செய்யாமல் செயல்பட்டு வந்த பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் தற்போது பதிவு செய்ய முன்வரும் வாய்ப்பும் உள்ளது. எனவே அவை, சம்பந்தப்பட்ட நெறிமுறைகளைக் கடைபிடிக்கவும் வரிச்செலவை ஏற்கவும் செய்யும். தற்போது நடைமுறையில் உள்ள நெறிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட்டு வரும் நிறுவனங்களில்கூட அவை ஜி.எஸ்.டி நெட்ஒர்க்குக்கு மாறும் போது செலவு அதிகரிக்கக் கூடும். குறிப்பாக தொடக்கக் கால கட்டத்திலாவது செலவு அதிகமாகும். மேல்மட்டத்தில் பார்த்தால் அரசுக்கு வரி வருவாயை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு இதில் உள்ளுறைந்து இருப்பது புலனாகும். மேலும் தொடர்புடைய ஒட்டுமொத்த செலவு அமைப்பில் இது எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்து விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

இறுதியாகச் சொல்வதென்றால், ஜி.எஸ்.டியின் மற்றொரு முக்கியமான தாக்கம் என்பது சரக்குகளை எடுத்துச் செல்லும் போக்குவரத்து அம்சம் மீதே இருக்கும். அதிலும் குறிப்பாக மாநிலங்களுக்கு இடையிலான பரிவர்த்தனையில் தாக்கம் ஏற்படக் கூடும். தற்போது மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகனங்கள் அனுமதிக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதைப் பார்ப்பது என்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. வரி விகிதங்கள் மாநிலங்கள் அனைத்துக்கும் ஒரே சீராக இருக்குமாறு ஜி.எஸ்.டி செய்துள்ளதால், இந்தக் காத்திருப்பு வரிசையானது காணாமல் போய்விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் தடை இல்லாமல் சரக்குகள் எடுத்துச் செல்லப்படும் அம்சமானது சரக்குக் கட்டணத்தைக் குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கக்கூடும். அதே போன்று காத்திருக்கும் நேரமும் குறையும். இவை இரண்டும் ஒன்று சேரும் போது ஒட்டுமொத்தச் செலவும் குறையும்.

நிறைவுக் கருத்துகள்

சுதந்திர இந்தியாவில் மிகப்பெரும் வரிச் சீர்திருத்தமாக ஜி.எஸ்.டி பார்க்கப்படுகிறது. இது நிறைய விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பதற்கு பல சாதகமான காரணங்களும் உள்ளன. ஒரு நுகர்வோரின் பார்வையில் பார்க்கும் போது ஒட்டுமொத்த விலை நிலையில் ஜி.எஸ்.டி மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதில் சில நிச்சயமற்ற கூறுகள் உள்ளன. விலை குறைவது அதே சமயம் அதிகரிப்பது என இரு பக்கமும் செயல்படக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளன. அதிக எண்ணிக்கையிலான சரக்குகளுக்கு குறைவான தகுதிநிலை வரி, உள்ளீட்டு வரி, கிரெடிட் மற்றும் விநியோகச் சங்கிலித் தொடரில் மேம்பாடு ஆகியன விலையைக் கட்டாயம் குறைக்கச் செய்யும் கூறுகள் ஆகும். இதற்கு மாறாக, சேவைகளுக்கான அதிகமான தகுதிநிலை வரி, ஒத்திசைந்து நடப்பதற்கு ஆகும் செலவு அதிகரித்தல் ஆகியன விலையை அதிகரிக்கும் வாய்ப்பைக் கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஒத்திசைந்து நடப்பதற்கான செலவு அதிகமாகவே இருக்கும். இரண்டு பக்கங்களிலும் இருக்கின்ற கூறுகள் உடனடியாக எதிர்காலத்தில் விலை எவ்வாறு இருக்கும் என்பதை முன்கூட்டியே சொல்வதற்கு சவாலாக உள்ளன. நமக்கு முன்பே ஜி.எஸ்.டியை நடைமுறைப்படுத்தி உள்ள பிற நாடுகளோடு நம் நாட்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் உந்துதல் இருக்கும் அதே வேளையில் வேறு எந்த நாடும் இந்தியாவைப் போன்று பன்மைத் தன்மையையும் பல அடுக்குகளையும் கொண்டவையாக இல்லை என்பதும் தெளிவாகின்றது. ஜி.எஸ்.டி பதிலீடு செய்யும் முந்தைய வரி விதிப்பு அமைப்பும் சிக்கலானது ஆகும். இந்தப் பின்னணியில், சொல்லப்பட்டுள்ள கூறுகள் அனைத்தும் எவ்வாறு இணைந்து செயல்படப்போகின்றன; நுகர்வோரை ஜி.எஸ்.டி எந்த அளவில் பாதிக்கப்போகிறது என்பனவற்றைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top