பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிதி சேர்க்கை / வரி சீர்திருத்தங்கள் / ஜி.எஸ்.டியை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஜி.எஸ்.டியை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்

நெறியற்ற முறையில் இலாபம் ஈட்டுதல் – ஜி.எஸ்.டியை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

பதினேழு மத்திய, மாநில வரிகளைப் பதிலீடு செய்கின்ற வகையிலும் $2.3 டிரில்லியன் மதிப்புள்ள ஒற்றைச் சந்தையை உருவாக்குவதிலும், மாநிலத் தடைகளை நீக்குகின்ற முறையிலும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) முறைக்கு இந்தியா மாறுவது என்பது வர்த்தகர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அவர்களது வாழ்வை நிச்சயம் எளிதாக்கும் என்று கூறலாம். ஆனால் கொள்கையை உருவாக்குபவர்களின் மிகப்பெரிய அக்கறை எதுவென்றால் புதிய மறைமுக வரி முறையானது சரக்கு மற்றும் சேவைகளின் மீதான வரிச்சுமையைக் குறைப்பதால் கிடைக்கும் பலன்கள் நுகர்வோருக்குக் கிடைப்பதை உறுதி செய்வதே ஆகும். வர்த்தகர்களும் வியாபாரிகளும் பலன்களை நுகர்வோருக்கு மாற்றித் தருவதை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன - கொள்ளை இலாபம் ஈட்டுதலைத் தடுக்கும் ஆணையத்தை உருவாக்குதல், வியாபாரிகளுக்கும், நுகர்வோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியன இதில் உள்ளடங்கும். மலேஷியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஜி.எஸ்.டிக்கு மாறியபோது கொள்ளை இலாபம் ஈட்டும் செயல்கள் நடைபெற்றதாகப் புகார்கள் செய்யப்பட்டன என்று அறியும் போது நம் நாட்டில் அதற்கு எதிரான நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகின்றன.

வரி விதிப்பு முறைகள்

 • பல படிநிலைகளிலான வரிகள் மற்றும் இரகசியமான மறைமுக வரி விதிப்பு முறை போன்று இல்லாமல், ஜி.எஸ்.டியானது வெளிப்படையானதாக உள்ளது. தான் வாங்கும் சரக்கு அல்லது பெறும் சேவை மீது விதிக்கப்படும் உண்மையான வரியை இறுதிநிலை வாடிக்கையாளர் தெரிந்து கொள்ள முடிகிறது. ஜி.எஸ்.டி-யால் வரி விகிதமானது அதிகரித்துள்ளது என்ற பொதுவான அபிப்பிராயமானது உருவாகி உள்ள நிலையில் வரிவிதிப்பு முறையை நுகர்வோர் தாங்களாகவே பரிசீலித்துப் பார்த்துக்கொள்ளலாம்.
 • முந்தைய வரி விதிப்பு முறையில் மாநிலங்கள் சில்லறை விற்பனையில் வசூலித்த மதிப்புக் கூட்டுவரியை (வாட்) மட்டுமே நுகர்வோர் தெரிந்து கொள்ள முடிந்தது. அல்லது மத்திய அரசு விதித்த சேவை வரி குறித்து மட்டுமே தெரிந்து கொள்ள முடிந்தது. உற்பத்தியின் அல்லது விநியோகத்தின் முந்தைய கட்டங்களில் ஒரு சரக்கு அல்லது சேவையில் படிப்படியாகச் சேர்ந்த வரிகள் என்னவென்று நுகர்வோர் தெரிந்து கொள்ள முடியாது. உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு தொழிற்சாலையின் வாசலில் விதிக்கப்படும் கலால் வரி அல்லது தான் பயன்படுத்தும் உபகரணத்தின் மீது தொலைத்தொடர்பு நிறுவனம் செலுத்திய ஆயத் தீர்வை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்த வரிவிகிதத்தை நுகர்வோர் தெரிந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. வியாபாரிகள் நுகர்வோரைத் திசை திருப்பி அதிக விலை வைத்து ஏமாற்றுவதை அதிகாரிகள் விரும்பவில்லை . இதற்கு அதிக அளவிலான வெளிப்படைத் தன்மையைக் காரணமாகக் காட்டுவதையும் அவர்கள் விரும்பவில்லை.
 • முந்தைய காலகட்டங்களில் தாங்கள் செலுத்திய வரிகளுக்காக ஈட்டிய கிரெடிட்டைப் பயன்படுத்தி தங்களது சரக்கு அல்லது சேவைக்கு அவர்கள் வரி செலுத்துவதில் இருந்து தற்போது சலுகைகளைப் பெறலாம். இதற்கு முந்தைய வரிவிதிப்பு முறையில் அனுமதிக்கப்பட்டதைவிட இது அதிகமாகும். எனவே தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் ஒரு நிறு வனம் தான் உபயோகப்படுத்தும் உபகரணத்திற்காகச் செலுத்திய வரிகள் மீது கிடைத்த கிரெடிட்டைப் பயன்படுத்தி தான் வழங்கும் சேவைக்காக நுகர்வோர் செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டியில் சலுகை தரலாம். தற்போதைய ஜி.எஸ்.டி வரிவிகிதமானது முந்தைய வரிவிதிப்பு முறையைவிட சற்றே கூடுதலாக இருந்தாலும்கூட இந்த வகையில் சரக்கு அல்லது சேவை மீதான உண்மையான வரிச்சுமையைக் குறைக்க முடியும்.
 • கடந்த ஜூன் 11ஆம் தேதி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டம் முடிந்த பிறகு நிதியமைச்சர் அருண் ஜேட்லி மேலும் கூடுதலாக வரி விதிப்புச் சுமையைக் குறைக்கும் அறிவிப்பை வெளியிட்டார். அதாவது முந்தைய வரிவிதிப்பு முறையின் கீழ் விதிக்கப்பட்ட வரியின் அளவைவிட குறைவான வரி விகிதங்களை அவர் பல பொருட்களுக்கு அறிவித்தார். இந்த வரிக்குறைப்பானது நுகர்வு முறைகள் மற்றும் பொருளாதார எதார்த்தங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு மேற்கொள்ளப்பட்டது. மே மாதம் ஸ்ரீநகரில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட வரிவிதிப்பு அளவைவிட ஜூன் 11இல் நடைபெற்ற கூட்டத்தில் 66 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரிவிகிதத்தை கவுன்சில் குறைத்துள்ளது.

ஜி.எஸ்.டி-யின் நோக்கம்

 • நெறி முறையற்ற முறையில் இலாபம் ஈட்டுவதைத் தடுக்கும் ஷரத்துடன் ஜி.எஸ்.டியை அறிமுகப்படுத்தியதன் உள்நோக்கம் வரிக்குறைப்பின் பலாபலன்கள் நுகர்வோருக்குக் கிடைக்க வழி செய்யாமல் வர்த்தகர்களும் வியாபாரிகளும் தங்களுக்கானதாக மட்டுமே வைத்துக் கொள்ளும் சாத்தியப்பாட்டைத் தடுப்பதே ஆகும். அதாவது நுகர்வோருக்குப் பலன்கள் கிடைக்காமல் செய்யும் செயல்பாட்டை இன்றைய அரசாங்கம் எதிர்க்கிறது.
 • மத்திய ஜி.எஸ்.டி சட்டமானது “எந்த ஒரு சரக்கு அல்லது சேவைகள் விநியோகத்திலும் செய்யப்படும் எந்த ஒரு வரி விகிதக் குறைப்பும் அல்லது உள்ளீட்டு வரிக்கான கிரெடிட் பலனும் சேவையை அல்லது பொருளைப் பெறுபவருக்குச் சென்று சேர வேண்டும் அதாவது விலைகள் குறைக்கப்பட்டு போய்ச் சேர வேண்டும்” என்று குறிப்பிடுகிறது.
 • உருவாக்கப்பட உள்ள செயலாளர் நிலையில் ஒரு அதிகாரி தலைமை வகிக்க இருக்கின்ற, நெறிமுறையற்ற முறையில் இலாபம் ஈட்டுவதைத் தடுக்கும் ஆணையமானது இந்த ஷரத்தை அமல்படுத்தும். இந்த ஆணையம் நெறிமுறையற்ற முறையில் இலாபம் ஈட்டுகின்றனர் எனச் சந்தேகிக்கப்படும் வழக்குகளை டைரக்டர் ஜெனரல் ஆஃப் சேஃப்கார்ட்ஸ்க்கு பரிந்துரை செய்து அனுப்பும். இந்த அமைப்பானது மத்திய கலால் மற்றும் சுங்க வரிகள் வாரியத்தின் (சி.பி.இ.சி) கீழ் விரிவான புலனாய்வு அமைப்பாகச் செயல்படும்.
 • சரக்குகள் அல்லது சேவைகளை வழங்குகின்ற ஒரு விநியோகஸ்தருக்கு ஆணையமானது விலைகளைக் குறைக்குமாறு ஆணை இடலாம் அல்லது ஜி.எஸ்.டி வரிவிதிப்பு அமைப்பின் கீழ் வரி விதிப்புச் சுமை குறைப்பினால் கட்டாயமாக்கப்படாத வரிக்குச் சமமான தொகையை வாங்கியவருக்குத் திருப்பித் தருமாறு ஆணையிடலாம். நெறிமுறையற்ற முறையில் இலாபம் ஈட்டியதாகக் கண்டறியப்பட்டால், ஒரு வர்த்தகர் அல்லது வியாபாரி நுகர்வோருக்கு அளிக்காத வரிக்குறைப்பு அளவின் மீது 18% வட்டி யைச் செலுத்த வேண்டியிருக்கும்.
 • குறைக்கப்பட்ட வரிச்சுமைக்கான பலன்களை ஒரு வாடிக்கையாளர் கேட்காதபட்சத்தில் ஆணையம் அவற்றை விநியோகஸ்தரிடம் இருந்து திரும்ப வசூலிக்க முடியும். நெறிமுறையற்ற முறையில் இலாபம் ஈட்டினால் அபராதமும் விதிக்கப்படும். மேலும் வர்த்தகரின் பதிவும் இரத்து செய்யப்படலாம். இது ஒரு கடுமையான ஷரத்தாகத் தெரிந்தாலும்கூட, அரசின் நோக்கம் என்பது முன்தடுப்பில்தான் உள்ளது. கட்டற்ற சந்தைப் பொருளாதாரத்தின் விலைகளை நிர்வகிக்கும் நுண்மேலாண்மை செயல்களில் ஈடுபடுவதைவிட ஒரு தொழிலில் அல்லது ஒரு சரக்கில் பெருமளவு மேற்கொள்ளப்படும் நெறிமுறையற்ற முறையில் இலாபம் ஈட்டும் செயலின் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க இந்த ஷரத்தைப் பயன்படுத்த வேண்டும் என அரசு நினைக்கிறது. இந்த நெறிமுறையற்ற முறையில் இலாபம் ஈட்டுதலைத் தடுக்கும் ஷரத்தானது புதிய மறைமுக வரி விதிப்பு அமலாகும் இடைப்பட்ட காலகட்டத்தில் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.
 • இதுவரை வரி விதிப்பு முறை மாற்றமானது சிக்கல் இல்லாமல் நடை பெற்று வருகிறது. வர்த்தகர்களும் பலன்கள் நுகர்வோருக்கு விரைவில் கிடைக்க உதவுகிறார்கள். சில வர்த்தகர்கள் ஜூலை 1ஆம் தேதி நள்ளிரவு முதலே இவ்வாறு செயல்படத் தொடங்கி விட்டார்கள். அந்த நேரத்தில்தான் நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜியும் பிரதமர் நரேந்திர மோடியும் ஜி.எஸ்.டி அமலாக்கத்தை அறிவித்தார்கள்.
 • ஜி.எஸ்.டி அறிவிக்கப்பட்ட சனிக்கிழமை நள்ளிரவு முதல் அதைத் தொடர்ந்து வந்த வார இறுதி நாளில் ஆப்பிள் நிறுவனமானது ஐபோன்கள், ஐபேடுகள், மேக்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றின் சில்லறை விலைகளைத் தனது இந்திய நுகர்வோர்களுக்காகக் குறைத்தது. அதேபோன்று நுகர்வோர் பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்யும் நிறுவனமான இந்துஸ்தான் லீவர் லிமிடெட் கம்பெனி தனது டிடர்ஜென்ட் மற்றும் சோப்புகள் சிலவற்றின் விலைகளைக் குறைத்தது. இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவன மான ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட் தனது மாடல்களின் விலையை ரூ.400 முதல் ரூ.1,800 வரை குறைத்தது.
 • சரக்குகள் மற்றும் சேவைகள் மீதான வரிச்சுமையைக் குறைப்பதன் பலன் நுகர்வோருக்குக் கிடைப்பதை உறுதி செய்தல் என்பது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் மறைமுக வரிகள் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் பொருந்தும். ஆனால் வருமான வரி என்பது மக்கள் தொகையில் வரி செலுத்தக்கூடிய தகுதிநிலையைப் பொறுத்தே அமைகின்றது. வருமான நிலைகள் உயர உயர வருமான வரி விகிதங்களும் உயருகின்றன.
 • நெறி முறையற்ற முறையில் இலாபம் ஈட்டுதலைத் தடுக்கும் நடவடிக்கைகள் மீது கவுன்சில் காட்டும் கவனம் என்பது தற்போது குறைக்கப்படும் வரிச்சுமையான து சில்லறை விற்பனையில் ஏற்படக்கூடிய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அமைந்துள்ளது. அதாவது வரிச்சுமைக் குறைப்பு என்பது விலைகளைக் குறைக்க உதவுவதாக இருக்க வேண்டும். இந்த விலைவாசிக் கட்டுப்பாடு என்பது நுகர்வோர்களின் தேவையை அதிகரிக்கச் செய்வதோடு, பொருளாதார வளர்ச்சியோடு வரி வருவாயையும் அதிகரிக்கும்.
 • அதிக வரி வருவாய் என்பது மத்திய மற்றும் மாநில அரசுகள் நல்வாழ்வுத் திட்டங்களில் கூடுதலாகச் செலவழிக்கவும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் செயல்களில் அதிகமாக முதலீடு செய்யவும் உதவும். அதேசமயம், சந்தையில் போட்டி நிலவுவதும் வர்த்தகர்கள் எந்த ஒரு பலனையும் நுகர்வோருக்குக் கிடைக்கச் செய்வார்கள் என்பதையும் உறுதிப்படுத்தும். ஏனெனில் எந்த ஒரு நிறுவனமும் சந்தையில் தனக்கான பங்கினை இழக்க விரும்பாது.
 • ஜி.எஸ்.டி ஏழை மக்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதற்கு நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் செயல்படும் இந்திய ஒன்றியத்தின் மறைமுக வரி விதிப்பு அமைப்பான ஜி.எஸ்.டி கவுன்சில் சரக்குகளுக்கும் சேவைகளுக்கும் நாடு முழுவதிலும் ஒரே வரி விகிதம் இருக்க வேண்டும் என்ற ஜி . எஸ் . டி யின் கருத்தாக்கத்தையும் தாண்டி நான்கு வேறுபட்ட வரி விதிப்பு நிலைகளை அறிவித்துள்ளது. அதாவது 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய விகிதங்களில் வரியானது விதிக்கப்படும். இந்த முறையானது மக்கள் பெருமளவில் பயன்படுத்தும் பொருட்களுக்கு குறைந்த சதவிகித அளவு வரி விதிக்க உதவும். சொகுசுப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்க வழி ஏற்படுத்தும்.
 • சமான விதியின் அடிப்படையில் ஜி.எஸ்.டி வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதாவது சரக்குகள் மற்றும் சேவைகள் மீதான தற்போதைய வரிகளுக்கு சற்றேறக்குறைய நெருக்கமான அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தொழிலகத்தின் சில பிரிவுகள் அதாவது ஜவுளி போன்ற பிரிவுகள் ஜி . எஸ் . டி - யில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டியனவாகும். இத்தகைய நடவடிக்கையானது நன்மை செய்வதற்குப் பதிலாக தீமையையே உருவாக்கும். ஒரு சரக்குக்கு ஜி.எஸ்.டி-யில் இருந்து விலக்கு அளித்து விட்டால், விற்பவர் உற்பத்திக்கு முந்தைய பல நிலைகளில் மூலப்பொருட்களுக்காக செலுத்திய வரிகளுக்கு கிரெடிட்டுகளைப் பெற முடியாமல் போகும். எனவே இவை பொருளின் விலையிலேயே சேர்ந்து விடும். தொழிலதிபர்கள் கவலைப்படும் ஒரு விஷயம் எதுவென்றால் சில குறிப்பிட்ட சேவைகள் மீது வரிச்சுமை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதே ஆகும்.
 • சர்வதேச அளவில் கடைபிக்கப்பட்டு வரும் சரக்குகள் மீதான வரிவிதிப்பு வழிமுறைகளையே ஜி.எஸ்.டி கவுன்சிலானது சேவைகளுக்கும் கடைபிடித்துள்ளது. உதாரணமாக தொலைத்தொடர்பு சேவைகளுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதம் என்பது முந்தைய 15% சேவை வரி விகிதத்தில் இருந்து 18% என்று அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே தொலைதொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்கள் இதனால் தொலைபேசிக் கட்டணங்கள் உயரக்கூடும் என்ற அச்சத்தில் உள்ளன. அரசு இது குறித்து மே 26ஆம் தேதி விளக்கம் அளித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் கட்டணம் செலுத்திய போது கட்டிய சேவை வரிக்கான கிரெடிட்டுகள் நிறுவனங்களுக்கு கிடைக்கும். மேலும் உபகரண இறக்குமதிக்காகச் செலுத்திய வரிகளுக்கும் கிரெடிட் கிடைக்கும். இவை எல்லாம் சேர்ந்து வரிவிகித உயர்வை நேர் செய்துவிடும் என அரசு தெளிவுபடுத்தி உள்ளது. “இவை எல்லாம் (வரி கிரெடிட்டுகள்) தொலைபேசி நிறுவனங்கள் ஜி.எஸ்.டிக்கு பணமாகச் செலுத்த வேண்டிய தொகையைக் குறைத்துவிடும். கடந்த நிதியாண்டில் செலுத்தியதைவிட 87% அளவுக்குச் செலுத்தினால் போதும் என்ற நிலைக்குக் கொண்டுவந்து விடும்” என்று அரசு விளக்கியுள்ளது. ஆனால் இதற்கு மாறாக நிறுவனங்கள் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்திய பிறகு முதல் சுற்று நிறைவடையட்டும் என்று காத்திருக்கின்றன. அப்போதுதான் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் செலவை ஜி.எஸ்.டி அதிகரிக்குமா அல்லது குறைக்குமா என்ற முடிவுக்கு வர முடியம் என்கின்றன நிறுவனங்கள்.
 • சரக்குகள் மற்றும் சேவைகள் மீது வரி விகிதங்களை ஜி.எஸ்.டி கவுன்சில் நிர்ணயம் செய்த பிறகு மே மாதத்தில் கேரள மாநிலத்தின் நிதி அமைச்சர் தாமஸ்ஐசக் மற்றும் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் நிதி அமைச்சர் ஹசீப் தீராது இருவரும் வரிக் குறைப்பினால் ஏற்படும் பலன்களை நுகர்வோருக்குக் கிடைக்கச் செய்வதாக இந்த வரி சீர்திருத்த அமலாக்கமானது இருக்க வேண்டியது அவசியம் என்று கூறி உள்ளனர்.

முடிவுரை

வருவாய் செயலாளர் ஹஷ்முக் ஆதியா ஜி.எஸ்.டி வரி விகிதங்கள் முடிவு செய்யப்பட்ட நாளில் இருந்தே வர்த்தகத்தில் விலை நிலவரத்தை நெறிமுறையற்ற முறையில் இலாபம் ஈட்டுவதைத் தடுக்கும் அமைப்பு கண்காணிக்க ஆரம்பிக்கும் என்று தெளிவுபடுத்தி உள்ளார். ஆனால் இந்த ஷரத்து பெரிய அளவிலான மோசடிக்கும் தொழிற்சாலை நிலையில் நெறிமுறையற்ற முறையிலான இலாபத்திற்கும் எதிராக மட்டுமே செயல்படுத்தப்படக்கூடும். சிறிய அளவிலான விலை மாற்றங்களுக்கு இது பயன்படாது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் ஜி.எஸ்.டி கவுன்சில் மற்றும் வரி விதிப்பு அதிகாரிகள் புதிய வழித் தடத் தில் வர்த்தகம் நடை பெறு தை உறுதிப்படுத்த வேண்டும். வர்த்தகர்கள் தங்கள் அளவில் அவர்களே தீர்மானித்துக் கொள்ள உதவ வேண்டும். மேலும் இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் நடைபெறும் சிறிய அளவிலான விதி மீறல்களை அதிகாரிகள் எளிதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

3.25
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top