பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிதி சேர்க்கை / வரி சீர்திருத்தங்கள் / பொருளாதாரத்தின் மீதும், சாதாரண மனிதனின் மீதும் GST ஏற்படுத்தும் தாக்கம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பொருளாதாரத்தின் மீதும், சாதாரண மனிதனின் மீதும் GST ஏற்படுத்தும் தாக்கம்

பொருளாதாரத்தின் மீதும், சாதாரண மனிதனின் மீதும் GST ஏற்படுத்தும் தாக்கம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

அரசியல் சட்டத் திருத்த மசோதாவும், மாதிரி சட்டங்களும் நாடாளுமன்றத்தில் ஏற்கப்பட்டிருப்பது GSTயை அமலாக்க அரசாங்கம் கொண்டிருக்கும் உறுதியை வெளிப்படுத்துகிறது. இந்தியாவை ஒரு உற்பத்தி மையமாக ஆக்கும் வகையில், இந்தியாவில் உற்பத்தி என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசாங்கம் முன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகும். வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் தொழில் செய்வதற்கு உகந்த நிலை இருப்பது இங்கு உறுதி செய்யப்படும். இலகுவாக தொழில் செய்வற்கு உள்ள மிகப்பெரிய தடைகளுள் ஒன்று நிச்சயமற்ற, யூகிக்க இயலாத மறைமுக வரிவிதிப்பு சாம்ராஜ்யமாகும்.

தற்போதுள்ள வரிவிதிப்புமுறை பல அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது. மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் தனித்தனியாக வரி செலுத்த வேண்டி உள்ளது. வரி செலுத்துவதில் அலையலையான விளைவுகளை இது ஏற்படுத்துகிறது. பலமுனைகளில் பலவிதமான விகிதங்களில் வரிகள் விதிக்கப்படுகின்றன. வருமானவரி, சேவைவரி, மத்திய விற்பனை வரி, சுங்கவரி, பாதுகாப்பு வரி போன்றவற்றை மத்திய அரசும், மதிப்புக் கூட்டுவரி (VAT) அல்லது விற்பனைவரி, ஆக்ட்ராய், மாநில சுங்கவரி, சொத்துவரி, நுழைவு வரி, வேளாண் வரி போன்றவற்றை மாநில அரசுகளும் விதிக்கின்றன. இதன் காரணமாக வரிச்சுமை அதிகரித்து இந்தியப் பொருள்களின் விலையையும், விற்பனையையும் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

இதனை சரி செய்வதற்காக சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் (GST) இந்தியக் குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சிக்கல்கள் நிறைந்த மிகப்பெரிய கூட்டாட்சி அமைப்பு இந்தியா, பலகட்சி ஜனநாயகம் செயல்பட்டுவரும் இந்த தேசத்தில் 29 மாநிலங்களும் 2 யூனியன் பிரதேசங்களும் பல்வேறுபட்ட ஆர்வத்தளங்களில் செயல்பட்டுவரும் இடத்தில் பெருத்த கருத்தொற்றுமை தேவைப்படுகிற ஒரு அரசியல் சட்டதிருத்தத்தின் மூலம் ஒரு புதிய சட்டத்தை உருவாக்கி, 7.5 மில்லியன் வரி செலுத்தும் அமைப்புகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரிவசூல் திறனை மேம்படுத்தி செயல்படுத்துவது என்பது நவீன உலக வரலாற்றில் முன்னுதாரணம் ஏதுமில்லாத மூர்ச்சை அடையச் செய்யும் முயற்சியே ஆகும்.

GST கொண்டுவருவதை நமது தேசம் எப்படி சாதித்தது என்பதைப் பற்றி போதுமான அளவுக்கு நாம் அறிந்து போற்றுவதில்லை. இதற்கான பெருமை அனைத்தும் இதற்காக உழைத்த மத்திய, மாநில அரசுகளையே சாரும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்கான தருணம் முதிர்ந்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்தை GST சிறப்புற மாற்றியமைக்கும்.

விடுதலை அடைந்தது முதற்கொண்டு இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான வரி சீர்திருத்தம் இதுவாகும். ஆசியாவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரம் இந்தியப் பொருளாதாரம். குழப்பமாக இருந்த இந்திய மறைமுக வரிகள், சுங்கத் தீர்வைகள், மிகு கட்டணம் ஆகியவற்றை GST தன்னுள் உட்படுத்திக் கொண்டு ஒற்றைவடிவ வரியாக உருப்பெற்றுள்ளது. பொருள்கள் மாநில எல்லைகளைக் கடந்து தடையின்றி செல்வதற்கும், வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கும், வரி செலுத்துவதற்கும் தாமாகவே பலரும் முன் வருவதற்கும், வருவாய்ப் பெருக்கத்திற்கும், வளர்ச்சியை விரைவுபடுத்தவும், முதலீட்டை ஊக்குவிக்கவும், முதலீடுகளைப் பெறுவதற்கும், இலகுவாக தொழில் செய்வதற்கும் GST உதவும்.

அனைத்துவிதமான பொருள்களும், சேவைகளும் வரிவிதிப்புக்குள்பட்டவை என்பதால் ஒருசிலவற்றிற்கு மட்டுமே வரிவிலக்கு இருக்கும். GST இந்தியப் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான சீர்திருத்தம். இதன்மூலம் பொதுவான, பரந்த இந்தியச் சந்தை உருவாக இருக்கிறது. GST வரிவிதிப்பின் அலை அலையான விளைவுகள் பொருள்கள், சேவைகளின் விலைமதிப்பில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கும். வரிவிதிப்புக் கட்டமைப்பு. வரி கணக்கீடு, வரி செலுத்துதல், வரி செலுத்துவதில் இணக்கம், வரி செலுத்தியது பற்றிய தகவல்கள் ஆகியவற்றில் முழுமையான ஒரு ஆய்வை GST உருவாக்கும்.

தேசத்தின் அனைத்து வகையான தொழில் செயல்பாடுகளிலும் பாரதூரமான விளைவுகளை GST உருவாக்கும். உதாரணமாக பொருள்கள் / சேவைகளின் விலைமதிப்பு, பொருள் வழங்கல் இணைப்பை சிறப்புற பயன்கொள்வது, தகவல் தொழில்நுட்பம், கணக்குகள், வரி செலுத்தும் வழி முறைகள் போன்றவற்றில் இதன் தாக்கம் வெளிப்படும். இதன் காரணமாகவே, GST மசோதா சுதந்திர இந்தியா இதுவரை கண்டிராத மிகப்பெரிய சீர்திருத்த முயற்சி என்று போற்றப்படுகிறது.

மாநிலத்துக்கு மாநிலம் வரிவிகிதம் தற்போது மாறுபடுகிறது. GST இதில் ஒரு சீரமைப்பைக் கொண்டுவரும். இதனால் நுகர்வோருக்கும் பயன் கிடைக்கும். விலைகள் குறையும்.

GSTயின் முக்கியமான பயன்கள்

 • GST இந்தியப் பொருளாதாரத்தை நிச்சயமாக அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும். தேசத்தின் வளர்ச்சிக்கு உதவும் வரிவிதிப்புக்கான அடித்தளம் பெருகுவதால் மத்திய, மாநில அரசுகளுக்கு வரிவருவாய் மிகும். இதன் காரணமாக வளர்ச்சி அதிகரிக்கும். உத்திரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் போன்ற மிக அதிக நுகர்வுள்ள மாநிலங்களின் வளங்களும் அதிகரிக்கும்.
 • இந்தியாவின் GST முன்னோக்கிய ஒரு பாய்ச்சலாக அமையும். பொதுவான ஒரு அடித்தளம், பொதுவான ஒரே வரிவிகிதம் ஆகியவை நிர்வாகத்தை இலகுவாக்கி, வரி வசூலை அதிகப்படுத்தி, மாநிலங்களுக்கு இடையேயான விற்பனையில் வருவாயைப் பெருக்கி வரிவசூலை திறம்பட நிர்வகிக்க வகை செய்யும். அதே சமயத்தில் GSTயில் சில விதிவிலக்குகளும் உள்ளன. தனிவகைப்பட்ட சில பொருள்களுக்கு (பெட்ரோல், புகையிலை) மத்திய அரசும், பெட்ரோலியப் பொருள்கள், மதுபானங்களுக்கு மாநில அரசுகளும் கூடுதல் சுங்கவரியை வசூலித்தும் கொள்வதற்கு அனுமதி தரப்படும். இதன்மூலம், கூடுதல் நிதி சுதந்திரம் கிடைக்கும்.
 • தற்போதைய வரி விதிப்புமுறைகள் இந்தியச்சந்தையை சிதைவுறச் செய்துள்ளன. தற்போதுள்ள நடைமுறையில் காணப்படும் முன்று தன்மைகளின் காரணமாக இத்தகைய நிலைமை உருவாகி இருக்கிறது. 1. மாநிலங்களுக்கு இடையேயான விற்பனையில் மத்திய அரசின் விற்பனை வரி விதிப்பு (CST). 2. மாநிலங்களுக்கிடையேயான பலவிதப்பட்ட வரிவிதிப்புகள். 3. இறக்குமதிப் பொருட்களுக்கு கிடைக்கக்கூடிய சுங்கத் தீர்வை சலுகைகளால் உள்நாட்டு உற்பத்திப் பொருள்களின் விற்பனையில் ஏற்படும் பாதிப்புகள். இந்த விதமான திரிபுகள் அனைத்தையும் GST சரி செய்யும். மத்திய அரசின் விற்பனை வரி (CST) நீக்கப்படும். பலவிதமான பிற வரிகள் அனைத்தும் GST என்பதனுள் அடங்கிவிடும். இறக்குமதிக்கு சாதகமான பாதுகாப்பு அம்சங்கள் நீங்கிவிடும். உள்நாட்டு உற்பத்திக்குப் பாதகம் செய்யும் கூறுகளும் அகன்றுவிடும்.
 • வரி நிர்வாகத்தை GST இரண்டு விதங்களில் மேம்படுத்தும் என்பது மிக முக்கியமான இன்னொரு ஆதாயமாகும். முதலாவதாக, ஒரு பொருளை விற்பனை செய்பவர் அந்தப் பொருளை விற்பனைக்கு வழங்கக்கூடிய வணிகரிடம் ஆவணங்களைப் பெற்று Input Tax Credit வசதியைப் பெறமுடியும். விதி விலக்குகளின் காரணமாக இந்த விற்பனை சங்கிலித்தொடர் விடுபடாமல் இருக்கும் பட்சத்தில், GST சுய காவல் செய்துகொள்ளும் ஒன்றாக செயல் படமுடியும். இரண்டாவதாக, GST-யின் இரட்டை எச்சரிக்கை அமைப்பு. இதில் ஒன்று மாநிலங்கள், மற்றது மத்திய அரசு. இந்த இரட்டை எச்சரிக்கை அமைப்பின் இரண்டு இடங்களிலிருந்தும் தொல்லைகள் வருவதற்கு வழி பிறக்கும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இதை நாம் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு என்ற வகையில் தான் பார்க்கவேண்டும். வரி ஏய்ப்பை ஒரு அமைப்பு கவனிக்கத் தவறினாலும் இன்னொரு அமைப்பு அதனை கண்டுபிடித்துவிடும் வாய்ப்பு உள்ளது.
 • பலவிதமான வரிவிதிப்புகளின் காரணமாக பொருள்களின் விலை அதிகரித்து அதன் சுமை சாதாரண மனிதனின் மீது விழுகிறது. இதனை GST சரிசெய்கிறது. அடிப்படையில் மூன்று விதமான வரிகளைக் கொண்டிருப்பது GST - மத்திய வரி, மாநில வரி, ஒருங்கிணைந்த வரி ஆகியவை இவை. இவற்றில் ஒருங்கிணைந்த வரி என்பது மாநிலங்களுக்கு இடையே பரிவர்த்தனை நடைபெறும் போது விதிக்கப்படுவது. தற்போதைய GST சீர்திருத்தங்களின்படி பொருள் இடமாற்றம், பண்டமாற்று, பரிமாற்றம், வாடகைக்குத்தருதல் போன்ற எல்லா வகையான பொருள் வழங்கலுக்கும் மத்திய, மாநில அரசுகளின் சேவை வரிகள் உண்டு.
 • பலவிதமான மத்திய, மாநில வரிகள் ஒன்றிணைத்து ஒரே வரியாக ஆக்கி இருப்பது இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பதற்கும், தேசம் முழுவதுமாக ஒரு பொதுச் சந்தையை உருவாக்குவதற்கும் உதவக் கூடியதாகும். நுகர்வோர் பார்வையின்படி, தற்போது 25% முதல் 30% ஆக இருக்கும் வரிச்சுமை குறையும். இதுவே இதன் சாதகமான அம்சம்.
 • விலைகுறைப்பு: உற்பத்தியாளர்களோ அல்லது வணிகர்களோ உற்பத்திச் செலவில் வரிகளையும் சேர்த்து கணக்கு காட்ட முடியாது இதன் காரணமாக விலைகள் குறையும்.
 • குறைவான நடைமுறை செலவினங்கள்: வரி செலுத்துகிறார்களா என்பதை கண்காணிப்பதில் சிரமம் குறையும். CGST, SGST, IGST ஆகிய மூன்று விதமான வரிவிதிப்புகளுக்கு தனித் தனியாக பதிவேடுகளை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஒழியும்.
 • GST சிறப்புற நடைமுறைப்படுத்தப்பட்டால் அது அந்நிய முதலீட்டாளர்களுக்கு வலுவான சமிக்ஞையை அனுப்பும். இந்தியாவில் இலகுவாக தொழில் செய்யமுடியும் என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
 • உற்பத்தியாளர்கள் மீதான வரிச்சுமையை GST குறைத்துவிடும். வளர்ச்சியை ஊக்குவிக்கும். உற்பத்தியைப் பெருக்கும். இரட்டை வரிவிதிப்பின் காரணமாக உற்பத்தியாளர்கள் முழுத்திறன் அளவிற்கு உற்பத்தியை மேற்கொள்வதில்லை. இந்தப் பிரச்னையை GST தீர்த்து வைக்கும்.
 • சோதனைச் சாவடிகள், சுங்கச்சாவடிகள் போன்றவை வேகமான பொருள் போக்குவரத்தைத் தடுக்கின்றன. விரைவில் அழுகக் கூடிய பொருள்களை எடுத்துச் செல்லும்போது இவை பாதிப்பை ஏற்படுத்தும். இத்தகைய தடைகளை GST தகர்த்துவிடும்.
 • ஒரே விதமான வரிவிதிப்பின் காரணமாக உற்பத்தியாளர்கள் குறைந்தபட்ச விற்பனை விலையில் நுகர்வோருக்கு பொருள்களை வழங்க முடியும். இதனால் சாதாரண மனிதனின் சுமை குறையும். எந்த அடிப்படையில் எவ்வளவு வரி விதிக்கப்பட்டுள்ளது என்பதை நுகர்வோர் அறியமுடியும்.
 • உற்பத்தியாளர் வரி செலுத்துவதற்கு கடன் வசதி செய்துதர முடியும். இதனால், மூலப் பொருள்களை வாங்குவதில் அதிக முதலீடு செய்து உற்பத்தியை அதிகரித்து, மேலும் அதிக அளவிலான வணிகர்களை நியமித்து, விற்பனையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வழிசெய்து வரிவருவாய் பெருகுவதற்கு உதவ முடியும். ஏற்றுமதிக்கு விதிக்கப்படும் சுங்க வரியையும் GST நீக்கியுள்ளது. இதனால் வெளிநாட்டு சந்தைகளில் நமது போட்டித் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

பொருளாதாரப் பிரிவுகளில் GSTயின் தாக்கம்

கட்டுமானப் பிரிவு

 • இந்தியாவில் கட்டுமானம் விவசாயத்திற்கு அடுத்த நிலையில் அதிகமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் இரண்டாவது நிலையில் இருந்து வருகிறது. உள்நாட்டு மொத்த உற்பத்தியில் இது கணிசமானதாக இருக்கிறது.
 • தற்போது நடப்பில் இருக்கும் சட்டத்தின்படி பலவிதமான வரிவிதிப்புகள் உள்ளன. சேவை வரி, மதிப்புக்கூட்டு வரி (VAT), முத்திரைத்தாள் கட்டணம், கட்டட வரி போன்றவை கட்டுமானம் தொடங்குவது மூலம் கட்டடம் விற்கப்படும் வரை தொடர்கின்றன. இவை தவிர, பொருள்கள் வாங்கும்போது சுங்கவரி, மத்திய விற்பனை வரி போன்ற பலவிதமான வரிகளும் விதிக்கப்படுகின்றன.
 • ஆக, கட்டப்படும் வீடுகள் விற்பனைக்கு வருவதற்கு முன்பாக பலவிதமான வரிகளும் தீர்வைகளும் விதிக்கப்படுகின்றன. இதனால் விலை அதிகரித்து வாங்குவோருக்கு பாதகம் ஏற்படுகிறது.
 • இப்போது முன்மொழியப்பட்டிருக்கும் GST வரிவிதிப்பு மறைமுகவரிகளை ஒத்திசைவாக்கி, எளிமைப்படுத்தி மாற்றியமைக்க இருக்கிறது. சரக்குகள், சேவைகள் ஆகிய இரண்டுக்குமே GST விதிக்கப்படும். முத்திரைத்தாள் கட்டணம் போன்ற சிலவற்றைத் தவிர மற்ற அனைத்து வரியும் GSTயின் உள்ளாகவே அடங்கி விடும்.
 • கட்டுமானத்துறையில் GST வெளிப்படைத் தன்மையை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. வரி எய்ப்பு கணிசமாகக் குறையும். பரிமாற்றங்களைக் கண்டுபிடிக்கும் திறமையான முறைகளின் மூலமும், மேம்பட்ட நடவடிக்கைகளின் மூலமும் வரி எய்ப்பு பெருமளவு குறைக்கப்படும். ஒற்றை மதிப்பின் மீது மட்டுமே GST விதிக்கப்படுவதால் வரிக்குவரி என்று விதிக்கப்படும் தற்போதைய நடைமுறை நீங்கிவிடும்.
 • கட்டுமானத் தொழில் செய்பவர்கள் தற்போது பொருள்கள் வாங்குவதால் பலவித வரிகளை செலுத்துகின்றனர். GST வரிவிதிப்பு முறை இதனை மாற்றி அமைக்கும்.

உடல்நலம்

 • உள் நாட்டு உற்பத்தியை இது பெரிதும் பாதிக்கிறது. இந்த வரியினால் இரு பொருள்களின் செலவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக இந்தத் துறையில் முதலீடு குறைகிறது. இந்த வரிவிதிப்பு முறையை GST நீக்கிவிடும். எனவே GST இந்தத் துறைக்கு வரமாகவும், வளர்ச்சி ஊக்கியாகவும் அமையும்.
 • தற்போதைய வரி கட்டமைப்பு, எந்திரங்களை இறக்குமதி செய்யும்போது பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. GST இதற்காகும் செலவுகளைக் குறைக்கும். மருந்துத் துறையிலும் சாதகமான விளைவுகளை GST உருவாக்கும். தற்போது எட்டு விதமான வெவ்வேறு வரிகள் மருந்துகளின் மீது விதிக்கப்படுகின்றன. இவை அனைத்தையும் ஒன்றாக்குவது தொழிலை இலகுவாக்கும். ஒரு பொருளின் மீது வரிகள் ஏற்படுத்தக்கூடிய தொடர் விளைவுகளை மட்டுப்படுத்தும்.
 • இதுதவிர, உற்பத்திப் பொருளின் வழங்கல் சங்கிலித் தொடரை GST வலுப்படுத்தும். இந்திய மருந்துகளின் சந்தை விரிவுபடும். மருந்து கம்பெனிகள் தங்களின் வழங்கல் அமைப்பை சீர் செய்யவும் GST துணை புரியும். எல்லா மருந்து கம்பெனிகளுக்கும் சமதளத்திலான சந்தையை GST உருவாக்கும். தங்கு தடையற்ற வகையில் Tax Credit கிடைப்பதற்கு உதவிடும்.
 • மத்திய விற்பனை வரி கைவிடப்படுவதால் தொழில் நடத்தும் செலவு வெகுவாகக் குறையும் என்பது இந்த கம்பெனிகளுக்கு கிடைக்கப் போகும் மிகப்பெரிய ஆதாயம். உற்பத்தி செலவை GST குறைக்கும். உற்பத்தி, செலவுகளை 2% அளவுக்கு குறைத்து 20% லாபத்தை உருவாக்கித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. GST வரிவிகிதம் தற்போதைய வரிகள் அனைத்தையும் விட குறைவாக இருக்குமானால் நுகர்வோருக்கு உதவியாக அது அமைந்து உடல்நலச்சேவை, மருந்துகள் போன்றவை ஏற்றுக்கொள்ளக்கூடிய செலவில் கிடைக்க வழி பிறக்கும். இதுதான் இந்திய அரசின் நோக்கமாகவும் இருந்து வருகிறது.
 • இந்தப் பிரிவுக்கு பலவிதமான வரிவிலக்குகளும், ஆதாயங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் GST அமலாக்கத்திற்குப் பிறகும் தொடருமா என்று தெரியவில்லை.
 • சுகாதாரக்காப்பீடு, நோயறிதல் மையங்கள் போன்றவை சேவைத்துறை சார்ந்தவை. அதிக வரிவிகிதப் பகுதிக்குள் இவை வந்து அமையக்கூடும். அப்படி அமைந்துவிட்டால் இத்தகைய சேவைகள் நுகர்வோருக்கு அதிக செலவு வைக்கக்கூடியதாக அமைந்து விடும்.

பயணங்கள், சுற்றுலா, விருந்தோம்பல்

 • இந்திய சுற்றுலாத்துறையும், விருந்தோம்பல் துறையும் பலவிதமான வரிகளால் சூழப்பட்டுள்ளது. உணவகங்களுக்கான வழங்கல்களுக்கு ஒரே ஒரு வரி மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 • ஒட்டல்கள், விடுதிகள், பொழுதுபோக்கிடங்கள் கட்டுவதற்கும், புதுப்பிப்பதற்கும் தேவைப்படும் உள்ளீட்டு சேவைகளுக்கு தற்போது கடன் தரப்படுவதில்லை. GST-யின் கீழ் இது மாறும். ஆராய்ச்சி மேம்பாட்டு வரி, தொழில்நுட்ப அறிதலுக்கான வரி போன்றவை GST-க்குள் அடங்கிவிடும். இதன் காரணமாக நடைமுறைகள் எளிமைப்படும்.

கல்வித்துறை

இத்துறைக்கு இப்போது பலவிதமான வரிச்சலுகைகள் இருக்கின்றன. பள்ளி,கல்லூரிகள் வழங்கும் சேவைகளுக்கு வரிகள் இல்லை. இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லாவிட்டால் இந்தத்துறைகள் முதலீட்டு சேவைக்கடன் பெறவோ, CENVAT கடன் பெறவோ முடியும். இதனாலும் இத்துறையில் விலை குறையும்.

சாதாரண குடிமகன் மீது GST ஏற்படுத்தப் போகும் தாக்கம்

 • GST இறுதி நிலையை அடைந்திருப்பதால், வரிகள் ஒருங்கிணைக்கப்படும். இந்தியா தனது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% கூடுதல் வளர்ச்சியைப் பெறும். சேவைகளைப் பெறுவதற்கான செலவு அதிகரிக்கும். பொருள்களை செலவு குறையும் என்பதால் நுகர்வோருக்கு இரண்டும் கலந்த கலவையாகவே பயன்கள் கிட்டும்.
 • பொருள்களின்மீது இப்போது 12.5% சுங்கவரி, 5 முதல் 15% வரையான VATவரி ஆகியவை விதிக்கப்பட்டு அவை நுகர்வோரின் தலையில் வைக்கப்படுகின்றன. இந்த வரிகள் எதுவும் இல்லாமல் GST எனும் ஒரே ஒரு வரிமட்டும் 18% அளவுக்கு விதிக்கப்பட்டாலும்கூட பொருள்களின் விலை கணிசமாகக் குறையும் வாய்ப்பு இருக்கிறது. தொழில்புரிவோருக்கு கொள்முதல் விலைகுறையும் என்பதால் நுகர்வோர் பயன்பெறுவர்.
 • வீட்டிற்குத் தேவைப்படும் புத்தகங்கள், சமையல் எண்ணெய் போன்ற துணிகள், அத்தியாவசியப் பொருள்கள் விதிவிலக்குகளின் காரணமாக 5 முதல் 8% வரிக்குள் வரும். இவைகளுக்கான வரி 18% என ஆகுமானால் இவற்றின் விலை கூடிவிடும். ஒட்டுமொத்த கட்டமைப்பும் ஆட்டம் கண்டுவிடும்.
 • சேவைத்துறை முழுமைக்கும் 15 முதல் 18% வரை GST வரி இருக்கும்.
 • வெளியில் சாப்பிடுவோருக்கு செலவு குறையும். வெளி இடங்களில் சாப்பிடும் போது இப்போது சேவை வரியும், மதிப்புக் கூட்டுவரியும் (VAT) செலுத்த வேண்டி இருக்கிறது. GST என்ற ஒரே வரி மட்டுமே இனி இருக்கும்.
 • சேவை வரியை மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்பதால் தொலை பேசி கட்டணம் அதிகரிக்கும். ரயில் பயணம், வங்கிச் சேவை, விமானப் பயணம் போன்றவற்றிற்கு கூடுதல் செலவு பிடிக்கும். சிறிய ரக கார்களின் விலையும், அதிக விற்பனையாகும் நுகர்பொருள்களின் விலையும் குறையும்.
 • TV விலை குறையும். இந்தியாவில் தயாரிப்போம் எனும் முன் முயற்சியின்படி GST குறைவாக விதிக்கப்படும். இப்போது 20 ஆயிரம் கொடுத்து LED TV வாங்கும் போது 24.5% வரி கட்டுகிறோம். இதனால் TV-யின் விலை ரூ.24,900/- என்று ஆகி விடுகிறது. GST-யின் கீழ் 18% வரி விதிக்கப்பட்டால் TV-யின் விலை ரூ. 23,600 ஆக குறைந்துவிடும்.
 • பைகள், ஆன்லைனில் வாங்கும் மின் சாதனப் பொருள்கள் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கும். ஆன்லைன் வர்த்தகமும் GST வலைக்குள் கொண்டுவரப்படுகிறது. ஒவ்வொரு பொருள் விற்கப்படும் போதும் அதற்கான GSTவரி விற்பவரிடமிருந்து வசூலித்துக் கொள்ளப்படும். ஆன்லைன் வர்த்தகம் செய்யும் கம்பெனிகளின் லாபம் குறைந்துவிடும். முறையாக அவர்கள் வரி செலுத்தும்போது இலவசங்கள், தள்ளுபடிகள் போன்றவற்றை அவர்களால் தர இயலாமல் போகும்.
 • GST-யின் உண்மையான வெற்றி என்பது தனி மனிதன் மீது அது ஏற்படுத்தும் விளைவைப் பொறுத்தது. சாரம்சமாகக் கூற வேண்டுமாயின் எல்லா சரக்குகளுக்கும், மிதமான அளவில் GST வரிவிதிப்பு சேவை செய்யப்படும் என்று தெரிவிக்கலாம். ஒரு தேசம் ஒரே வரி என்பது சாதகமான மாற்றாங்களைக் கொண்டு வருவதற்கான கருவியாகலாம். தனி மனிதனுக்கு மட்டுமின்றி தேசம் முழுமைக்கும் பயனளிக்கக்கூடியதாக GST அமையும். ஒரு புதிய சட்டம் செயல்படுத்தப்படும் போது, அது சாதாரண மனிதனின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது போலவே GSTஅறிமுகமும் இருக்கும். GST சாதகமான ஒரு தாக்கத்தை உருவாக்கும். இந்தியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். இந்தியாவை ஒன்றுபட்ட ஒரே சந்தையாக மாற்றி எளிமையான வரி விதிப்புகளைக் கொண்டுவரும். இந்தியாவின் பொருளாதாரம் உயரும்போது, தனிமனிதனின் நிதி நிலையும் வளர்ச்சி பெறுவதற்கான உதவிகள் கிடைக்கும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ் நவம்பர் 2016.

3.18
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top