பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிதி சேர்க்கை / வரி சீர்திருத்தங்கள் / GST யும் எளிதாகத் தொழில்செய்தலில் அதன் தாக்கமும்.
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

GST யும் எளிதாகத் தொழில்செய்தலில் அதன் தாக்கமும்.

GST யும் எளிதாகத் தொழில்செய்தலில் அதன் தாக்கமும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மிக முக்கியமான வரி சீர்திருத்தத்திற்கான தேசத்தின் 17 ஆண்டு காலத் தொடர்பயணத்திற்குப்பிறகு இது பற்றி நடைபெற்ற பல சுற்று விவாதங்கள், கலந்துரையாடல்கள், கூட்டங்கள், ஆலோசனைகள், கருத்துவேறுபாடுகள் ஆகியவற்றைக் கடந்து, 2017 ஜூலை 1 ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவைவரி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப்பயணம் அடல் பிஹாரி வாஜ்பாயி அரசாங்கத்தில் 2000 ஆண்டில் தொடங்கியது. ஒரு குழு அமைக்கப்பட்டு GSTக்கான மாதிரியை பரிந்துரைக்குமாறு அப்போது அக்குழுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன் பிறகு, 2003இல் விஜய்கேல்கர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன்பிறகு எந்தவிதமான பின்வாங்கலுமின்றி மத்திய அரசானது மாநில அரசுடன் இணைந்து முரண்களின்றி இதற்காக உழைத்து வந்தது. GSTயை விரைவில் அறிமுகம் செய்யவேண்டும் என்பது நோக்கமாக இருந்தது.

GSTயை செயல்படுத்தி இருப்பதால் இந்தியா 160க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் அணியில் சேர்ந்துள்ளது. ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, தென்கொரியா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகள் GSTயை அறிமுகம் செய்துள்ளன. GSTயை அறிமுகப்படுத்திய முதல் நாடு பிரான்சு. வரி ஏய்ப்புகளைத்தடுப்பதற்காக 1954இல் இங்கு GST அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் GSTஇன் அறிமுகம் எளிதில் தொழில் செய்யும் நிலையைக் கொண்டுவருவதில் ஒரு பெரிய முன்னெடுப்பாகும். உலக வங்கி வெளியிட்டுள்ள 'தொழில் செய்தல்' பற்றிய 2017ஆம் ஆண்டின் அறிக்கையில் உலகின் 190 நாடுகளில் இந்தியா தற்போது 130வது இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GSTயைப் புரிந்து கொள்ளுதல்

உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோருக்கு வரக்கூடிய பொருள்கள், சேவைகள் ஆகியவற்றிற்கு நுகர்வு நடைபெறும் ஒற்றை இடத்தை மட்டும் குறிவைத்து விதிக்கப்படும் வரி விதிப்புதான் ஜிஎஸ்டி. மத்திய மாநில அரசுகள் இதுவரை விதித்து வந்த பலதரப்பட்ட மறைமுக வரிகள் நீக்கப்பட்டு ஜிஎஸ்டி என்ற ஒரே வரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசத்தை ஒற்றைச் சந்தையாக மாற்றமுடியும். மற்ற ஆதாயங்களோடு சேர்த்து, எளிதாக தொழில் செய்வதை மேம்படுத்தக்கூடிய ஒன்றாக ஜிஎஸ்டி அமையும். வரி செலுத்துவதில் இணக்கம், வரியின் மீது வரி என்ற நிலை நீங்குவதால் வரிச்சுமைக் குறைப்பு, வரி நிர்வாக மேம்பாடு, விரிவாக்கம் செய்தல், செலவினங்களுக்கான வருவாயைப்பெருக்குதல் ஆகியவற்றிற்கும் ஜி.எஸ்.டி வழி வகுக்கும். தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களுக்கு முன்பு செலுத்தப்பட்டு வந்த 25-28% வரையிலான வரியை ஜிஎஸ்டி இப்போது 18% ஆக குறைத்துள்ளது.

17விதமான மறைமுக வரிகளை ஜிஎஸ்டி நீக்குகிறது. 8 மத்திய வரிகளும், 9 மாநில வரிகளும் இதில் அடங்கும். மத்திய மாநில அரசுகளின் 23 வகை செஸ் வரிகளையும் இது நீக்குகிறது. பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகளை பொருத்தமான அளவில் மாற்றி அமைத்திருக்கிறது. GSTயில் மத்திய GST, மாநில GST ஆகிய இரு வகைகள் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் ஏற்கனவே விதித்து வந்த பலவிதமான வரிகள் இதில் உள்ளடக்கப்பட்டுவிட்டன. முந்தைய வரி பரிபாலன முறையில் வரி மீது வரி விதிக்கப்பட்டு பெரும் பிரச்னையைத் தோற்றுவித்தது. இதனால் உற்பத்திச் செலவு அதிகரித்தது. உதாரணமாக, ஒரு உற்பத்தியாளர் 100 ரூபாய் மதிப்புள்ள சட்டைக்கு 12 ரூபாய் சுங்கவரி செலுத்துவார். மாநில அரசு அடுத்தகட்டமாக இந்த 112 ரூபாய்க்கு 15% மதிப்புக்கூட்டு வரியை விதிக்கும். வரி மேல் வரி விதிக்கப்படுவதால் பொருளின் விலை அதிகரிக்கும்.

மாநிலங்களின் எல்லைகளின் ஊடாக பொருள்களும், சேவைகளும் இசைவான வழியில் செல்ல அனுமதிப்பதற்காக மாநிலங்களுக்கு இடையேயான வரிவிதிப்பு போன்ற தடைகளை நீக்கிவிட்டு மத்திய அரசு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியை விதிக்கிறது. இதனால் பலமுறை வரி செலுத்தவேண்டிய அவசியம் இருக்காது. மாநிலங்களின் எல்லைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்துக்கிடக்க வேண்டியதில்லை. இதனால் பொருள்களை இடம் விட்டு இடம் கொண்டுசெல்லும் போது ஏற்படும் காலதாமதம் 60% அளவுக்குக் குறையும்.

ஜிஎஸ்டி நான்கு அடுக்கு வரிவிதிப்பாகும். 5, 12, 18, 28% வரிகள் விதிக்கப்படும். அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருள்களுக்கு குறைந்தபட்சவரியும், ஆடம்பரப்பொருள்களுக்கு அதிகபட்சவரியும் விதிக்கப்படும். அதோடு கூடுதல் செஸ்வரியும் இருக்கும். மறைமுக வரிவருவாயில் ஏதேனும் இழப்பு நேரிட்டால் அதை சரிசெய்துகொள்வதற்கு அதிகபட்ச வரியுடன் சேர்த்து விதிக்கப்படும் செஸ் வரி உதவும். நுகர்வோர் விலைக்குறியீட்டுப்பட்டியலில் இருக்கும் 30 முதல் 35% பொருள்கள் வரிவிலக்கு பெற்றவையாக இருக்கின்றன. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயராமல் தடுக்கப்படும். ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கும், சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு இருக்காது. மத்திய, மாநில அரசுகளின் வரி வசூல் மோசமான பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏறத்தாழ 60% பொருள்கள் 18 அல்லது 28% ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு உள்ளாகின்றன. 20% பொருள்கள் 28% வரிவிதிப்பைப்பெறும். ஆடம்பரப்பொருள்கள், வேண்டாத பொருள்கள், சாக்லெட், சூயிங்கம், ஷாம்பூ, வாசனை திரவியங்கள், பெயின்ட் போன்றவை 28% வரிவிதிப்பில் அடங்கும். மின்சார வரி, பத்திரப்பதிவுக்கட்டணம், சுங்கவரி, ஆல்கஹால், பெட்ரோலியப்பொருள்கள் மீதான மதிப்புக்கூட்டு வரி போன்றவை இப்போதைக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு உட்படாதவை. வரிவிதிப்பற்ற பொருள்களின் வணிகம், மாநிலங்களுக்கிடையில் ரூ.20 இலட்சத்திற்கும் குறைவாக உள்ள வணிகம் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி வரிக்கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி பெரும்பாலும் விலைவாசி ஏற்றத்தில் சொற்பமான தாக்கத்தையே ஏற்படுத்தும். (நீண்ட காலம் உழைக்கக்கூடிய நுகர்பொருள்கள், கட்டுமானப்பொருள்கள், அதிகமாக விற்பனையாகும் நுகர் பொருள்கள் போன்றவை) இத்தகைய பொருள்களுக்கு இதற்கு முன்பிருந்த வரி விகித அளவை ஒட்டியே ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டுள்ளது. அதிகம் விற்பனையாகும் நுகர்பொருள்களின் மீதான தாக்கம் அந்தந்த மாநிலங்கள் இதற்கு முன்பு அந்தப்பொருள்களுக்கு விதித்துவந்த மதிப்புக்கூடுவரியைப் பொறுத்து மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். ஒரு மாநிலத்தை விட்டு இன்னொரு மாநிலத்திற்குச் செல்வதால் அதிக அளவில் வணிகவரி (CST) செலுத்திவந்த வணிகப்பொருள்கள் 2% அளவுக்கு ஆதாயத்தை அடையும். வாகனப்போக்குவரத்துத் துறையில் இதற்கு முன் செலுத்தப்பட்டுவந்த 50% வரியிலிருந்து 43% (28% ஜிஎஸ்டி + 15% செஸ்) ஆக தற்போது வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் இத்துறையில் வரி சேமிப்பு அதிகமாக இருக்கும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, வாகனங்களும், அதிகம் விற்பனையாகும் நுகர்பொருள்களும் ஜிஎஸ்டிக்குப்பிறகு விலைகுறையும்.

எளிதாக வணிகம் செய்வதற்கு ஜிஎஸ்டியின் துணை

மறைமுக வரி செலுத்துவதில் எந்தெந்த வகைகளில் இடையூறுகள் இருக்கின்றன இவை இந்தியாவில் தொழில் செய்வதற்கு எப்படி பாதகமாக இருக்கின்றன என்பது பற்றி இந்தியத் தொழில் கூட்டமைப்பு 2014ஆம் ஆண்டு ஒரு கணக்கெடுப்பு (CII - KPMG 2014) நடத்தியது. மதிப்புக்கூட்டுவரி, சுங்கவரி, கலால்வரி, சேவைவரி ஆகியவற்றை செலுத்துவதற்காகப் பதிவுசெய்யும் போதும், பொருள்போக்குவரத்திலும், வரி அதிகாரிகளுடனும், வரி தாவாக்களைத் தீர்த்துக்கொள்வதிலும் வரி செலுத்தியதற்கான ஊக்கத்தொகையைப் பெறுவதிலும் மிகப்பெரிய பிரச்னைகளை கம்பெனிகள் சந்தித்து வருவதாக இதிலிருந்து தெரியவந்தது. முந்தைய வரிபரிபாலன முறையில் மாநிலங்கள் விதவிதமான வரி விகிதங்களை விதித்து வந்தன. வரி அதிகம் வசூலிக்கப்படும் மாநிலங்களில் இருந்து இன்னொரு மாநிலத்திற்குப் பொருள்களை அனுப்பும்போது இரு மாநிலங்களுக்கும் வரி செலுத்தவேண்டி இருந்தது.

வரிகளில் சீர்மை இல்லாத நிலை குழப்பத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தி வந்தது. பொருள் உற்பத்தியின் பலநிலைகளிலும் செலுத்தப்பட்ட வரிகளை சமன் செய்யும் வழிமுறை முந்தைய வரிவிதிப்பில் இல்லை. இதனால் வரிக்கு மேல் வரி என்ற நிலை ஏற்பட்டு தொடர் விளைவுகள் ஏற்பட்டன.

ஜிஎஸ்டியைத் திறம்பட செயல்படுத்துவதால் இது போன்ற சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும். வரி செலுத்துவது உறுதிப்படுத்தப்படுவதன் மூலமும், மாநிலங்களுக்கிடையே பொருள்கள் தடையின்றி செல்வதாலும், வரிச்சுமைகள் குறைவதாலும், கூடுதலாக செலுத்தப்பட்ட வரிப்பணம் உடனுக்குடன் திரும்பப் பெறப்படுவதாலும் இன்னும் பல சிக்கல்களுக்குத் தீர்வு உண்டாகும். இதன் விளைவாக, வரிசெலுத்துவதில் உலக அரங்கில் இந்தியாவின் தர வரிசை நிலை உயரும். உலகவங்கியின் 'தொழில் செய்தல்' அறிக்கையின்படி தற்போது வரி செலுத்துவதில் இந்தியா 190 நாடுகளில் 172வது இடத்தில் இருக்கிறது.

எளிதாகத் தொழில் செய்வதில் ஏற்படக்கூடிய சில பெரிய ஆதாயங்கள்

முந்தைய வரி முறையில் பலவிதமான வரிகளுக்கு பல விதமான கணக்குகளை அளிக்கவேண்டி இருந்தது. பல மட்டங்களிலும் பணிபுரியும் வரி அதிகாரிகளை எதிர்கொள்ள வேண்டிஇருந்தது. மறைமுக வரிகளைக் கணக்கிடுவதில் அதிகார மட்டத்தில் தாமதங்கள் ஏற்பட்டன. அனைத்து வகையான மறைமுக வரிகளையும் ஒன்றிணைத்து ஜிஎஸ்டி என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதால் இணக்கமான முறையில் வரிகள் செலுத்தப்படும். ஜிஎஸ்டிஎன் கட்டமைப்பு என்ற தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பைப் பயன்படுத்துவதால் மத்திய, மாநில அரசுகளுடன் நம்பகமான, விரைவான தகவல் பரிமாற்றம் சாத்தியப்படும். வரி செலுத்துபவர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் இணையத்தின் வழியாகப் பதிவு செய்து கொள்ளவும் கணக்கு சமர்ப்பிக்கவும், பணம் செலுத்தவும், மிகைப்பணத்தைத் திரும்பப்பெறவும் முடியும். வரி அதிகாரிகளை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் வரி செலுத்துவதில் இணக்கம் அதிகரித்து, வெளிப்படைத்தன்மையும், வேகமும் கூடும். காகிதம் இல்லாத மின்னணுப்பரிமாற்றம் உற்பத்தியையும் தொழில்களையும் முன்னெடுத்துச் செல்வதில் திறமையை அதிகரிக்கும்.

மாநிலங்களுக்கிடையேயான பொருள் போக்குவரத்து

பொருள்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் முன்பு மட்டுமீறிய தாமதத்திற்கு உள்ளாகி வந்தன. மாநில எல்லைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அவை காத்துக்கிடக்க நேரிட்டன. நுழைவுவரி, ஆக்ட்ராய் வரி உள்ளிட்ட அனைத்து வகையான மறைமுக வரிகளையும் உள்ளடக்கியதாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு இருப்பதால் இந்த நிலை ஒழியும். இதனால் பணவிரயமும், காலவிரயமும் தவிர்க்கப்படும். வணிகர்களுக்கும், நுகர்வோருக்கும் இதனால் ஆதாயம் கிட்டும். சுங்கச்சாவடிகள் ஒழிக்கப்படுவதால் சரக்கு வாகனப் போக்குவரத்து விரிவடையும்.

அனைவருக்குமான ஒரே இடைமுகப்பு

வரி செலுத்துவோர், வரித் துறையினர் ஆகியோருக்கு ஒரே இடைமுகப்பாக இருந்து GSTN கட்டமைப்பு பூசல்களைத் தீர்த்துவைக்கும். பொருள் வழங்குபவர், வாங்குபவர், வரி அதிகாரிகள் ஆகியோர் தேவைப்படும் தகவல்களை இந்த முகப்பின் வழியே பெறமுடியும். இதனால் விலைப்பட்டியலை ஒப்பிட்டுப்பார்த்து வரிக்கணக்கை அறியமுடியும். மூலப்பொருள்களுக்கு செலுத்தப்பட்ட வரியைக் கணக்கிட்டு கழித்துக்கொள்வதற்கு அனைத்து விலைப்பட்டியல்களும் தேவைப்படும். இதனால் விநியோகஸ்தர்கள், வரிக்கணக்குகளை சரியாக சமர்ப்பித்து சரியான நேரத்தில் வரி செலுத்துவதற்கு சில்லறை விற்பனையாளர்கள் அழுத்தம் தருவார்கள்.

வரிச்சுமை குறைப்பு

முந்தைய விதிமுறைகளைப் போலன்றி, மூலப்பொருள்களுக்கும், உள்ளீட்டுப் பொருள்களுக்கும் முந்தைய நிலைகளில் விதிக்கப்பட்ட வரிகளை கணக்கிட்டு அதை ஜிஎஸ்டி சமன் செய்துதரும். இதனால் உற்பத்தியாளர்கள் உற்பத்திப்பொருள்களின் ஒட்டு மொத்த மதிப்பிற்கும் வரி செலுத்த வேண்டியதில்லை.

பொதுச்சந்தை உருவாக்கம்

ஜிஎஸ்டி அமலாவதால் இந்தியா ஒரு மாபெரும் ஒற்றைச்சந்தையாக மாறும். இதனால், மூலப்பொருள்களை எங்கிருந்து வாங்குவது? எப்படி  உற்பத்தி செய்வது? எங்கே கிடங்கு அமைப்பது? விற்பனை முனையத்தை எங்கே வைப்பது? ஆகியவை பற்றி அறிவுக்குப்பொருத்தமான முடிவுகளை உற்பத்தியாளர்கள் எடுக்கமுடியும். ஒரே இடத்தில் பதிவு செய்து கொள்ளலாம், ஒரே மாதிரி வழிமுறைகளைப் பின்பற்றலாம் எனும் நிலை வரும் போது நாடு முழுவதும் வணிகம் மிக எளிதாகிவிடும்.

ஏற்றுமதிப் போட்டியை அதிகரித்தல்

முந்தைய வரிவிதிப்பில் இரட்டை வரிவிதிப்பின் காரணமாக ஏற்றுமதியோடு ஒரு பகுதி வரியையும் சேர்த்து நாம் ஏற்றுமதி செய்து வந்தோம். இதனால் இந்தியா உலகச்சந்தையில் போட்டிபோட இயலாத நிலை ஏற்பட்டது. இத்தகைய நிலையை ஜிஎஸ்டி மாற்றியமைக்கும். ஏற்றுமதியை அது பெருக்கும். நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏற்பட்டதைப்போலவே இங்கும் ஏற்றுமதி பெருகும். நியூசிலாந்தின் ஏற்றுமதி 1986இல் அந்த நாட்டில் ஜிஎஸ்டி அறிமுகம் செய்ய்யப்பட்ட ஒரு ஆண்டிலேயே 22% அதிகரித்தது.

வளங்களைப்பங்கிடுவதில் ஒரு சார்பு

வணிக நிறுவனங்கள் தங்களுக்கு எந்த மாநிலத்தில் குறைவான வரிவிதிப்பு உள்ளதோ, எந்தத் தொழில் பிரிவில் சாதகம் உள்ளதோ அங்கே அதிகமான வளங்களைக் கொண்டுசெல்லும்போக்கு இருக்கிறது. இதனால் வளங்களைப்பங்கிடுவதிலும், பொருள் வழங்குவதிலும் திரிபுகள் நேரிடுகின்றன. அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த போட்டித்தன்மையை அது பாதித்துவிடுகிறது. நாட்டில் எந்த இடத்தில் தொழில் செய்தாலும் ஒரேவிதமான வரிதான் என்ற நிலை ஏற்படும் போது நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் தொழிலும் வணிகமும் தழைக்க வழிபிறக்கும்.

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுடன் எளிதாகத் தொழில் செய்யும் நிலை

முந்தைய வரி முறையில் ஆண்டுக்கு ரூ.5 இலட்சம் வரவு செலவு செய்யும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மதிப்புக் கூட்டு வரி செலுத்துவதற்குப் பதிவு செய்துகொள்ளவேண்டும் என்ற நிலை இருந்தது. பல மாநிலங்களில் தொழில் செய்யும்போது நிறுவனங்கள் பலவிதமான வரிகளை செலுத்தவேண்டி இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் விதிமுறைகளும், வழிமுறைகளும் வெகுவாக வேறுபட்டு இருந்தன. இதனால் MSMEகளுக்கு மிகப்பெரும் சுமை ஏற்பட்டது.

வரி செலுத்துவதற்கு தொழில்முறை விற்பன்னர்களின் உதவியை நாட வேண்டி இருந்தது. ஜிஎஸ்டி ஒரே சீரான, விரைவான, வெளிப்படையான, இணைய வழி வரி நிர்வாகத்தை அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவருவதால் வரி செலுத்துவது சுலபமாவதுடன் பணமும் மிச்சமாகிறது. மூலப்பொருள்களுக்கு செலுத்தப்பட்ட வரி சமன் செய்யப்படும் நிலை இருப்பதால் MSMEக்கள் போட்டியிட்டு தொழில் செய்யமுடியும்.

முன்னிருக்கும் வழி

தொழில் செய்வதை எளிதாக்குவதற்கும், உற்பத்தியாளர், நுகர்வோர் இருவருக்குமே வரிச்சுமையைக் குறைப்பதற்கும், அரசின் வரி வருவாயைப் பெருக்குவதற்கும் ஜிஎஸ்டி உறுதி அளித்திருக்கிறது. பொருளாதாரத்தின் முக்கியமான மூன்று பங்குதாரர்களான நுகர்வோர், உற்பத்தியாளர், அரசாங்கம் ஆகியவற்றை இந்த சீர்திருத்தம் தொட்டிருக்கிறது. கூட்டுறவுக்கூட்டாட்சி என்ற முன்னுதாரணமான மன நிலையின் அடிப்படையில் அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களையும் ஜிஎஸ்டி உள்ளடக்கியுள்ளது.

ஜிஎஸ்டி அமலாக்கத்தால் எளிதாகத் தொழில் செய்வதற்கு சாதகமான தாக்கங்கள் உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது. வணிகங்களுக்கு கிடைக்கும் நேரடியான ஆதாயங்கள், வரி செலுத்துவதற்கு ஆகும் குறைவான செலவு, வரிச்சுமை, மாநிலங்களுக்கிடையே சுலபமான பொருள் போக்குவரத்து என இன்னும் பல ஆதாயங்கள் கிடைக்கும். இத்தகையதொரு விரிவான சீர்திருத்தத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய பிறகு ஜிஎஸ்டியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவரை இருந்து வந்த பலவிதமான வரிகள், விதிவிலக்குகள் போன்றவற்றை நீக்கி ஒரு தேசம் ஒரே வரி என்பதைக் கொண்டுவந்துள்ளோம். இந்த எதிபார்ப்பை நிறைவேற்றும் விதமாக நம்முடைய முயற்சிகள் அமையவேண்டும்.

தொழிற்சாலைகள், ஜிஎஸ்டியுடன் தொடர்புடையவர்கள் ஆகியோரின் கருத்துக்களை தொடர்ச்சியாகப் பெறுவதற்கு வழிவகை செய்திடவேண்டும். ஜிஎஸ்டியின் பயனை சிறப்பாக அனுபவிப்பதற்கு மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் மறைமுக வரிகளைக் கூடுதலாக விதிக்காமல் இருக்கவேண்டும். ஜிஎஸ்டி வலைக்குள் வரக்கூடியதாக இன்னும் பல பொருள்களையும் சேவைகளையும் கொண்டு வருவதும், அமைப்புசாராத தொழில் பிரிவினரையும் இந்த மேடையில் சேருவதற்கு ஊக்குவிப்பதும் முக்கியமான மற்ற இலக்குகள் ஆகும்.

சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் ஜிஎஸ்டி முறையே 7%, 6% என்ற ஒற்றை வரிவிகிதத்திலேயே இருக்கிறது. இப்படி ஒரு குறைவான ஒற்றை ஜிஎஸ்டி வரிவிதிப்பை நோக்கி இந்தியா விரைவாக நகரவேண்டும். இயன்றவரை மிகக் குறைவான விதிவிலக்குகள் மட்டுமே இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். வெவ்வேறு மாநிலங்களில் வணிகம் மேற்கொள்ளும் நிறுவனங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் பதிவு செய்துகொள்ள வேண்டியிருப்பதையும் ஒவ்வொரு மாநிலத்திலும் வரிக்கணக்கு சமர்ப்பிப்பதையும் தவிர்த்து முன் செல்ல வேண்டியது அவசியம். இந்தியாவில் தொழில் செய்வதை எளிதாக்கவும், உலக அரங்கில் இந்தியாவின் போட்டியிடும் திறமையை மேம்படுத்தவும், இந்தியாவில் உற்பத்தி என்பதை வெற்றிகரமானதாக ஆக்கிக்காட்டவும் இதுபோன்ற முன்முயற்சிகள் அவசியம். ஜிஎஸ்டியை அமலாக்கம் செய்வதற்கு நீண்ட பயணத்தை மேற்கொண்ட நாம் ஜிஎஸ்டியை உலகநாடுகளுக்கு நிகராக திறம்பட செயல்படுத்துவதற்கு விரைவான பயணத்தை இனி மேற்கொண்டாக வேண்டும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
3.16666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top