অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

உழைக்கும் மகளிருக்கான சட்டங்கள்

உழைக்கும் மகளிருக்கான சட்டங்கள்

பெண்கள் இல்லாத துறை  என்பதே அரிதாகிக் கொண்டிருக்கிற காலகட்டம் இது. ஆனாலும், வேலை என்று வீட்டை விட்டு வெளியே வரும் பெண்கள், பணியிடத்துச் சூழலில் பாதுகாப்பை உணர்கிறார்களா?

இந்திய அரசியல் அமைப்பு சாசனம், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறினாலும் அதன் 15(3) சரத்தின் கீழ் பெண்களுக்கும்  குழந்தைகளுக்குமான தனிச்சட்டங்கள் இயற்ற வழிவகை செய்துள்ளது. அதன் அடிப்படையிலேயே பல நலச் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில்  உள்ளன.

மகப்பேறு நல சட்டம், 1961 (மெட்டர்னிட்டி பெனிஃபிட் ஆக்ட் 1961)

ஒரு பெண்ணுக்கு  மிகுந்த மகிழ்ச்சியையும் சிரமத்தையும் ஒரே நேரத்தில் கொடுக்கும் காலம்தான் அவளது தாய்மைப் பருவம். தாய்மையடைந்த  நிலையில் வேலைக்குச் செல்லும் போது அவளுக்கு சட்டம் கொடுக்கும் பாதுகாப்பு மற்றும் சலுகைகள்  பற்றி மகப்பேறு நல சட்டம் 1961  விளக்குகிறது. தாய்மை யடைந்துள்ள ஒரு பெண் மற்றும் அவள் ஈன்றெடுக்கும் அந்தப் புது வரவின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும்  குழந்தைப்பேற்றுக்கு சில நாள்கள் முன்பும், பின்பும் சராசரி பணி செய்ய இயலாத தாய்க்கும், சேய்க்கும் தேவையான விடுப்புடன் கூடிய பொருளாதார  சலுகை மற்றும் இதர சலுகைகள் அளிப்பது என்ற நோக்கிலேயே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் பொருந்தும் இடங்கள்

தனியார் அல்லது அரசுக்குச் சொந்தமான தொழிற் சாலை, சுரங்கம், தேயிலைத் தோட்டம் ஆகியவற்றில் நேரடியாகவோ அல்லது காண்டிராக்டர்  மூலமாகவோ பணி செய்யும் பெண்கள், குதிரையேற்றம், சர்க்கஸ் போன்று உடலால் செய்யும் வித்தைகள் மற்றும் அதை ஒத்த வித்தைகள், கடை,  அங்காடி போன்றவற்றில் 10-க்கும் அதிக பெண்கள் - சென்ற 12 மாதங்களில் பணி புரியும் பட்சத்திலும், அரசு, தொழில், வர்த்தகம், விவசாய ரீதியான  பணியில் ஈடுபடுவோருக்கும் 2 மாத அறிவிப்பினைத் தொடர்ந்து அரசாங்கப் பதிவேட்டில் அறிவித்து இச்சட்டத்தை அவர்களுக்கும் அமல்படுத்தச் செய்யலாம்.

சட்டத்தின் சலுகைகள்

  • பிரசவத்துக்கு முன் 6 வார காலத்துக்கான ஊதியத்துடன் கூடிய விடுப்பு, பிரசவத்துக்குப் பின் 6 வார காலத்துக்கான ஊதியத்துடன் கூடிய விடுப்பு  (இந்த 12 வார விடுப்பினை எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம்).
  • நிர்வாகத் தரப்பு இலவச மருத்துவ பாதுகாப்பு தர இயலாத பட்சத்தில் குறைந்தது 1,000 ரூபாய்க்கான மருத்துவ போனஸ். பேறுகாலம், பிரசவம்  அல்லது கருக்கலைப்பின் போது ஏற்படும் உடல்நலக் குறைவுக்கான சான்றாவணம் சமர்ப்பிக்கும் பொருட்டு மேலும் ஒரு மாதத்துக்கான ஊதியத்துடன்  கூடிய விடுப்பு.
  • கருக்கலைப்பு ஏற்படின் 6 வாரம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு.
  • குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தால் 2 வாரம் ஊதியத்துடன்  கூடிய விடுப்பு.
  • பிரசவத்துக்கு 6 வாரம் முன்பும் அதற்கு முன் ஒரு மாதமும் ஆக மொத்தம் 10 வாரங்கள் வரை எளிமையான பணி கோர கருவுற்ற  பெண்ணுக்கு உரிமை உண்டு.  அந்த உரிமை கோரும் நேரத்தில் கருவுற்றதற்கு ஆதாரமாக மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
  • பிரசவத்துக்குப் பின் பணியில் சேர்ந்த பிறகு எப்போதும் கிடைக்கும் பிரேக் பீரியட் உடன் மேலும் 2 முறை 15 நிமிட கால அவகாசம் கொண்ட  (குழந்தைக்கு பாலூட்டுவதற்கு) இடைவெளி கொடுப்பது அவசியம். பேறுகாலத்தின் போது பெண்ணின் பணிமுறையை உடல்நிலைக்கு குந்தகம்  ஏற்படும்படி மாற்றம் செய்யக்கூடாது. பேறு காலத்தில் ஒரு பெண்ணை பணி நீக்கம் செய்யக் கூடாது. அவ்வாறு பணி நீக்கம் செய்யும் பட்சத்தில்  பேறுகால சலுகையைப் பெற அவர்களுக்கு உரிமை உண்டு. (ஒருவேளை தண்டனைக்குரிய குற்றச் செயலுக்காக வேலையிலிருந்து நீக்கும் பட்சத்தில்  இச்சட்டத்தின் கீழ் சலுகை மறுக்கப்படலாம்).
  • சம ஊதிய சட்டம் 1976 இந்தச் சட்டம் நம் அரசியல் அமைப்பு சாசனத்தின் சரத்து 39இன் கீழ் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதைக்  குறிப்பிடுகிறது.  அதன் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டம் இது.  இச்சட்டத்தின் கீழ் பாலின அடிப்படையில் ஒரு பெண்ணுக்கு வேலையில்  சேரும்போதோ, பணி தொடர்பான விஷயங்களிலோ - உதாரணமாக பணி உயர்வின் போதோ - பெண் என்ற ஒரே காரணத்துக்காக பங்கம் விளைவிக்கக்  கூடாது.  இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியான வேலைக்கு வேறு வேறு ஊதியம்  தருவதைத் தவிர்த்து ஒரே மாதிரியான ஊதியமே தரவேண்டும்.  இந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே பணிக்காக வேறு வேறு ஊதியம் கொடுத்துக்கொண்டிருப்பின் அந்தப் பணிக்கு  கொடுக்கப்படும் அதிகபட்ச ஊதியமே பெண்களுக்கும் தொடர்ந்து தரப்பட வேண்டும். ஊதிய உடன்படிக்கையின் மூலம் குறைந்த கூலி கொடுத்துவரும்  பட்சத்தில் இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பின் அது செல்லாததாகக் கருதப்படும்.  அதே போன்று எந்தவொரு பணிக்கு பணியாளரை நியமிக்கும் போதும்,  பயிற்சியின் போதும், இடமாற்றத்தின் போதும், பணி உயர்வின் போதும் பெண் என்ற காரணத்துக்காக பாகுபாடு பார்க்கக் கூடாது.

ஆதாரம் : பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate