অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பெண்கள் பாதுகாப்புச் சட்டம்

பெண்கள் பாதுகாப்புச் சட்டம்

வன்முறை

இவ்வுலகிலே சீரும், சிறப்பும் வாய்ந்தவர்கள் யாரென்று கேட்டால், அனைவருமே நம்மைப் பெற்றெடுத்த தாய்மார்களைத்தான் கூறுவோம். தாய்மை என்பது பெண்களுக்கே உரிய தனிச்சிறப்பு. மனித குலத்தின் ஆரம்பக் காலக்கட்டத்தில் சமூகத்தை வழிநடத்தியவர்கள் பெண்கள்தான். அந்த பெண்வழி சமூகத்தில்தான் இன்றைய பெண்கடவுள்கள் தோன்றின.

கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதரின் வெற்றிக்குப் பின்புலத்திலும்  பெண்ணின் பங்கு உண்டு என்பது உலகறிந்த உண்மை. சமூகத்திலே பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கு வித்திடுபவர்கள் பெண்கள் என்பதற்கு எவ்வித ஐயமுமில்லை. இவ்வாறு வளர்ச்சிப் பாதையில் சமுதாயத்தை இட்டுச் செல்லும் பெண்கள் பாதுகாப்போடு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

ஆனால், நடைமுறையில் நாம் காண்பதோ நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. சீரும், சிறப்போடும் நடத்தப்பட வேண்டிய பெண்கள் பல்வேறு வகையான வன்முறைகளுக்கு இலக்காவது கொடுமையானது. ஆணாதிக்க சமூக கட்டமைப்புகளில் சிக்கி, ஆண்களின் ஆதிக்க சூழ்ச்சிகளால் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள். இவ்வுலகிலே ஏற்படும் எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண் களும், குழந்தைகளுமே. பெண்களின் நிலையை சற்று ஆராய்ந்து பார்த்தால் எந்த அளவுக்கு அவர்கள் சமுதாயத்திலே பல வகையான வன்முறைகளால் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரியும். 15 முதல் 45 வயதான பெண்களுள் மூன்றில் ஒரு பங்கினர் ஏதாவது ஒரு வகையான வன்முறைக்கு ஆளாகுகின்றனர். ஒட்டு மொத்த பெண்களில் 35% பேர் உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர். திருமணமான பெண்களில் 46% பேர் பல்வேறு வகையான வன்முறைகளால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வைத் தொடருகின்றனர்.

ஆணாதிக்கம்

பெண்கள் கல்வி கற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும், அந்த துறைகளில் உள்ள பெண்கள் பாதுகாப்போடு பணி செய்ய முடிகிறதா என்றால்  அது ஒரு பெரிய கேள்விக்குறிதான். பெரும் பாலான துறைகள் ஆண்களால் நடத்தப் படுவதாலும் பெரும்பான்மையான உயர் அதிகாரிகள் ஆண்களாக இருப்பதாலும் பெண்கள் எவ்வளவுதான் கல்வி கற்றிருந்தவர்களாக இருந்தாலும் அந்த துறைகளில் ஆணாதிக்கத்தின் கீழ் அடிமைகளாகவே உள்ளனர்.

நகர்புறங்களில் பல கம்பெனிகளிலும், தொழிற்சாலைகளிலும், தொலைக்காட்சி நிறுவனங்களிலும், ஊடகங்களிலும் பணி புரியும் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் பல வகையான பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் கிராமப் புறங்களில் வாழும் பெண்கள் பாதுகாப்பின்றி அதிகளவில் வாழ்க்கையை தொடருகின்றனர்.

பெண்கள் பாதுகாப்புச் சட்டம்

இவ்வாறு பாதுகாப்பின்றி வாழ்க் கையைத் தொடரும் பெண்களின் வாழ்வில் பாதுகாப்பு கிடைக்குமா? என்று எத்தனையோ பெண்களும், பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஆர்வாளர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.  அவர்களின் பல ஆண்டுகள் கனவை நிறைவேற்ற பெண்கள் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது. இந்திய அரசியல்  அமைப்புச்சட்டப் பிரிவுகள் 14 மற்றும் 15 இரண்டும், எல்லா வகையான வேறுபாடுகளையும் களைந்து, சமத்துவத்தோடும் சகோதரத்துவத்தோடும் வாழ்வதற்கான உரிமையை வலியுறுத்திக் கூறுகிறது. பிரிவு 21-ல் பெண்கள் எவ்வாறு மாண்போடும், சமமான வகையில் பொது இடங்களிலும் பணியிடங்களிலும் மதித்து நடத்தப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஆனால் நடைமுறையில் நாம் காண்பதோ பெண்களின் பாதுகாப்பற்ற நிலை. இந்நிலை இந்தியாவில் மிகவும் உயர்ந்துள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாக கண்டித்து பெண்கள் பாதுகாப்பினை வலியுறுத்தியது.

1993-ல் வியான்னாவில் நடந்த ""உலக மனித உரிமை மாநாட்டில்'' பெண்களின் உரிமைகளை மீறுதல் மிகக் கொடிய மனித உரிமை மீறல் என்பதைச் சுட்டிக்காட்டப்பட்டது. 1993-லிருந்து இந்திய அரசானது பல நிலைகளில் பெண்கள் பாதுகாப்பிற்கு முயற்சிகளை எடுத்த வண்ணமாக இருக்கின்றது. இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு 2010-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ""பணி இடங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2010''. இந்திய         அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பெண்களுக்கான முழுமையான பாதுகாப்பினை வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை. இச்சட்டத்தின் முக்கிய நோக்கமே, பணி இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருவதே ஆகும். அரசின் இந்த அரிய சட்ட முயற்சி பெண்கள் முன்னேற்றத்திற்கு மிகுந்த பயனளிக்கும்.

இச்சட்டம் எல்லா இடங்களிலும் பணி செய்யும் பெண்களுக்கு பொருத்தமானதாக உள்ளது. அரசுத்துறையாகவோ, தனியார் துறையாகவோ, வேறு எந்த நிறுவனங்களாக இருந்தாலோ அங்கு பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்பட்டால் இச்சட்டம் மூலம் நீதி பெறலாம். மேலும், பாலியல் வன்முறைக் குத் தூண்டிய அதிகாரிகளையோ, ஏனைய ஆண்களையோ, சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து தண்டிக்கலாம். வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பட்டால், பெண்கள் பல பணிகளில் பங்கெடுத்து நாட்டின் ஒட்டு மொத்த சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை செய்யலாம். இந்த பாதுகாப்புச் சட்டம் "பாலியல் வன்முறை' என்றால் என்ன என்ற தெளிவான விளக்கத்தையும் வழங்குகிறது. "பெண்கள் பணி செய்ய உகந்த சூழலை ஏற்படுத்தி தராத நிலையே பாலியல் வன்முறை, என்பதை வலியுறுத்தி, அத்தகைய செயல்களை அறவே தடைசெய்ய முயற்சிக்கிறது. பலதுறைகளில் பணி செய்யும் பெண்களுக்கு மட்டுமல்ல இச்சட்டம். ஒரு நிறுவனத்திற்கு வந்துபோகும் பெண்களாக இருந்தாலும், படிக்கின்ற பெண்கள், பள்ளி, கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி செய்வோர், மருத்துவமனைகளில் நோயுற்றிருப்போர் முழுமை யான பாதுகாப்பினை வழங்க முற்படுகிறது. இச் சட்டத்தின் கீழ் ஒவ்வோர் அமைப்பிலும் உள்ளார்ந்த புகார் குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் புகார் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இச்சட்டத்திற்கு கீழ்ப்படியாத அதிகாரிகள் சிறைத் தண்டனையும், 50,000/- க்கும் அதிகமான அபராதத்தையும் சந்திக்க நேரிடும். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்த 90 நாட்களில் விசாரணையை முடித்து நடவடிக்கையை எடுக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது.  இச்சட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வருவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பு. பெண்களின் பாதுகாப்பு கருதி, அவர்களின் பணி இடங்களில் தேவையற்ற வன்முறைச் செயல்களை ஒழிக்கும் முயற்சியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இச்சட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது.

பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை மீறல்கள் அனைத்தும் மனித உரிமை மீறல்களே. அத்தகைய மனித உரிமை மீறலை செய்யும் நபர் யாராக இருந்தாலும் எந்த பதவியிலிருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கு மிகவும் உதவி செய்திடும் வகையில் இச்சட்டம் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. சரியான வகைகளில் தாமதமின்றி இச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால், கண்டிப்பாக தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். நாட்டின் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமெனில் வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.

ஆதாரம் : பெண்கள் நல வாரியம்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate