பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறுபான்மையினர் மேம்பாட்டிற்கான நலப்பணிகள்

சிறுபான்மையினர் மேம்பாட்டிற்கான நலப்பணிகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதே நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை நோக்கமாகும். நாட்டு மக்கள் அனைவருக்கும், சமூக பொருளாதார அரசியல் சுதந்திரத்தை உறுதி செய்யும் நமது அரசியல் சாசனம், எளிய நிலையில் உள்ளவர்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும் வரையறுத்துள்ளது.

சிறுபான்மையினர் நலத்துறை இதன் அடிப்படையில் நமது நாட்டிலுள்ள சிறுபான்மை இனத்தவர்களின் நலன்களில் தீவிர கவனம் செலுத்துவதை உறுதி செய்யும் வகையில், சிறுபான்மையினர் நல அமைச்சகம், 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் தேதி உருவாக் கப்பட்டது. சிறுபான்மை சமூகத்தினரின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் கொள்கைகளை வகுத்தல், திட்டமிடுதல், பணிகளை ஒருங் கிணைத்தல், திட்ட செயல்பாடுகளை மதிப்பீடு செய்து, மறு ஆய்வை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை இந்த அமைச்சகம் நடைமுறைப்படுத்தி வருகிறது. சிறுபான்மை இனத்தவர்களை அதிகாரப்படுத்துவதுடன் பல்வேறு இனம், மொழி, மதம், கலாச்சாரங்களைக் கொண்ட நமது நாட்டின் பண்புகளை வலுப்படுத்துவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த அமைச்சகம் செயலாற்றி வருகிறது. இந்த குறிக்கோளை எட்டும் வகையில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளின் வாயிலாக, இந்த இனத்தவர்களின் சமூகப் பொருளாதார நிலமையை மேம்படுத்துவதுடன் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் காண்பதற்கான நடவடிக்கைகளையும் இந்த அமைச்சகம் எடுத்து வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார செயல்பாடுகள் ஆகியவற்றில் சிறுபான்மை சமுதாயத்தினருக்கு சமவாய்ப்பு கிடைக்கச் செய்வதின் வாயிலாக அவர்களுடைய மேம்பாடு உறுதி செய்யப்படுகிறது. துடிப்புடன் செயல்படும் நாட்டை உருவாக்கும் பணியில் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைப்பதற்கான வழிமுறைகளையும் இந்த அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் 1992ம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 2 (C) ன் கீழ் முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பெளத்தர்கள், ஜொரோஸ்டிரியன்கள் (பார்ஸி) ஆகியோர் சிறுபான்மை இனத்தவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அமைப்புகள்

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் 5 அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவைகள் :

1) தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி உதவிக் கழகம்.

2) மெளலானா அசாத் கல்வி அறக்கட்டளை

3) மத்ய வக்ஃப் சபை

4) சிறுபான்மையினருக்கான தேசியக் கழகம்

5) மொழிவாரி சிறுபான்மையினருக்கான ஆணையம்.

தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி உதவிக் கழகம் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள சிறுபான்மை சமூகத்தினர் வருவாய் தரக்கூடிய செயல்பாடுகளை மேற்கொள்ள உதவும் வகையில் சிறு மற்றும் குறு கடன்களை வழங்குகிறது. மேலும், கல்விக் கடன்களையும், இந்தக் கழகம் அளித்து வருகிறது. இவை தவிர, உற்பத்திப் பிரிவுகளை திறம்படவும் சரியான முறையிலும் நிர்வகிக்கத் தேவையான தொழில்நுட்ப மற்றும் தொழில் முயற்சியை மேம்படுத்தவும் தேவையான உதவிகளை வழங்குகிறது.

கல்வி

இந்த அமைச்சகம், சிறுபான்மை இனத்தவர்களின் மேம்பாட்டிற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

1) தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வியில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பை மேற்கொள்வதற்காக வருவாய் அடிப்படையிலான உதவித் தொகை.

2) மெட்ரிக் படிப்பிற்கு முந்தைய கல்விக்கு உதவி.

3) மெட்ரிக் படிப்பிற்குப் பிறகான கல்விக்கு உதவி.

4) பயிற்சி மற்றும் அதனுடன் இணைந்த திட்டங்கள்

5) சிறுபான்மையினர் அதிகமாக வாழும் மாவட்டங்களில் பல்துறை செயல்பாட்டுத் திட்டங்கள்.

மெளலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை கல்வி ரீதியாக பின் தங்கியுள்ள சிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைத் திட்டம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த உதவித் தொகையில் 30 சதவிகிதம் மாணவிகளுக்கானவை ஆகும். பல்துறை மேம்பாடு சிறுபான்மையினத்தவர்கள் அதிகமாக வாழும் மாவட்டங்கள் என 90 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பின் தங்கியுள்ள இம் மாவட்டங்களின் பல்துறை மேம்பாட்டிற்கான திட்டமொன்றிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சமூக பொருளாதாரம் மற்றும் அடிப்படைத் தேவைகளில் பின்தங்கியிருக்கும் இம்மாவட்டங்களில் கல்வி, வாழ்வாதாரம், வீட்டு வசதி, சுற்றுப் புற சுகாதார, குடிநீர் மற்றும் மின் வசதி ஆகியவற்றை மேம்படுத்த இந்தத் திட்டம் வகை செய்கிறது.

மகளிர் முன்னேற்றம்

சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மகளிரின் மேம்பாட்டிற்கு உதவும் வகையில், சிறுபான்மை மகளிர் தலைமைப் பண்பு மேம்பாட்டுத் திட்டமொன்றை அமைச்சகம் தொடங்கியுள்ளது. 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2010-11ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மகளிரை அதிகாரப்படுத்துவதுடன், அவர்களிடையே நம்பிக்கையைத் தோற்றுவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். மகளிரின் மேலாண்மை திறமை வளர்த்தல் நகரங்களிலும், கிராமங்களிலும் சிறுபான்மை இனத்தவர்கள் கணிசமாக வாழும் பகுதிகளில் உள்ள எளிய நிலை மக்களுக்கு வளர்ச்சியின் பயன்கள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகளிரிடையே தலைமைப் பண்பை வளர்க்கும் விதத்தில் பயிற்சி அளிப்பதற்கு இந்தத் திட்டம் வழிவகுக்கிறது. இதனால், மகளிர் பழமை சிந்தனையிலிருந்தும், செயல்பாடுகளிலிருந்தும் விடுபடுவதற்கு உதவும் தலைமைப் பண்புப் பயிற்சியைப் பெற்று அதன் வாயிலாக திறமையையும் வாய்ப்புகளையும் சேவைகளையும் பெற இயலும்.

சிறுபான்மை சமூகத்தினரின் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்களும் அவற்றிற்கான அணுகுமுறைகளும்

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுப் பணிகள்

சமுதாயத்தின் எளிய பிரிவுகளைச் சேர்ந்த சிறு குழந்தைகள், கருவுற்ற / பால் ஊட்டும் தாய்மார்களின் வாயிலாக, ஊட்டச்சத்து, தடுப்பூசி போடுதல், மருத்துவ பரிசோதனை, மேல் சிகிச்சை, பள்ளிக்கு முந்தைய கல்வி, முறைசாரா கல்வி போன்ற சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டங்களின் பயன்கள், சிறுபான்மை இனத்தவர்களுக்கும் உரிய அளவில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டங்களும் மற்றும் அங்கன்வாடி மையங்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதமும், இவ்வின மக்கள் கணிசமாக வாழும் வட்டாரம் / கிராமத்திற்கு ஒதுக்கப்படுகின்றன.

கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல்

அனைவருக்கும் கல்வி, கஸ்தூரிபா காந்தி திட்டங்களின் கீழ்வரும் பள்ளிகளில் குறிப்பிட்ட வித்யாலயா போன்ற அரசுத் சதவீத பள்ளிகள், சிறுபான்மை இன மக்கள் கணிசமாக இருக்கும் கிராமங்கள்/ வட்டாரங்களில் அமைக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

உருது மொழி கற்பிக்க நிதி ஆதாரம் மக்கள் தொகையில் 4ல் ஒரு பங்கினர் உருது மொழி பேசுபவர்களாக இருக்கும் பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் உயர் தொடக்கப் பள்ளிகளில் உருது மொழி கற்பிக்க இம்மொழி ஆசிரியர்களை தெரிவு செய்து, பணியில் அமர்த்த மத்திய அரசு உதவி வழங்கும்.

மதர்ஸா கல்வித் திட்டத்தை நவீனப்படுத்துதல்

கல்வியில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் அதிகமாக வாழும் இடங்களில் அடிப்படை கல்வி கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் மதர்ஸா கல்வித் திட்டத்தை நவீனப்படுத்துவதற்கான நிதி ஆதாரங்களையும் மத்திய அரசு வழங்குகிறது.

திறமை மிக்க சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மெட்ரிக் படிப்பிற்கு முந்தைய கல்விக்கும், பிந்தைய கல்விக்கும் உதவித் தொகை வழங்குவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுவருகின்றன.

மெளலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் மூலம் கல்விக் கட்டமைப்பை மேம்படுத்துதல்: இந்தக் கல்வி அறக்கட்டளையை வலுப்படுத்துவதுடன், அதன் செயல்பாடுகளைத் திறன்பட விரிவுபடுத்தும் வகையில், இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும். பொருளாதார செயல்பாடுகளிலும் வேலை வாய்ப்புகளிலும் சமபங்கு வழங்கப்படுகிறது.

சுயவேலைவாய்ப்பு மற்றும் வருவாய் அளிக்கக்கூடிய பணிகள்

ஸ்வர்ண ஜெயந்தி கிராம ஸ்வரோஜ் கார் இந்தத் திட்டத்தின் கீழ், கிராமங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள சிறுபான்மை சமுதாயத்தினருக்கு, ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ஒதுக்கப்படும்.

ஸ்வர்ண ஜெயந்தி ஷஹாரி ரோஜகரித் திட்டம்

இந்தத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் நகர்ப்புற சுயவேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் ஊதியம் தரும் வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் சிறுபான்மை சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்படுகிறது.

சம்பூர்ண கிராமின் ரோஜ்கார்

இந்தத் திட்டத்தின் கீழும் ஒரு குறிப்பிட்ட சதவீத ஒதுக்கீடு சிறுபான்மை இனத்தவர்களுக்காகச் செய்யப்படுகிறது.

தொழில்நுட்ப பயிற்சியின் வாயிலாக திறன் மேம்பாடு

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் கீழ் நிலை தொழில்நுட்ப பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கைவினைஞர்களாகவும் பணிபுரிந்துவருகிறார்கள். இவர்களுடைய திறமையை மேம்படுத்த உதவுவதுடன், வருவாய் ஈட்டும் திறனையும் அதிகரிக்கச் செய்யும் வகையில், தொழில் பயிற்சி வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கென புதியதாக வைக்கப்பட்டுள்ள ஐ.டி.ஐ. நிறுவனங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை சிறுபான்மையினர் அதிகமாக வாழும் இடங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் திறக்கப்படும்.

பொருளாதார செயல்பாடுகளுக்கு நிதியுதவி

சிறுபான்மை சமுதாயத்தினரின் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிறுபான்மையின மேம்பாட்டு நிதியுதவி தேசியக் கழகம் 1994ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தக் கழகத்தின் குறிக்கோளை முழு அளவில் எட்டும் வகையில் இதை வலுப்படுத்தத் தேவையான உதவிகளை அரசு அளிக்கும்.

(ஆ) சுய வேலைவாய்ப்பு முயற்சிகளுக்கு வங்கிக் கடன் வசதி மிகவும் அவசியமாகும். வங்கிக் கடன்களில் 40 சதவீதம் முன்னுரிமைத் துறைகளுக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேளாண் கடன்கள் சிறு தொழில் கடன்கள், சில்லறை விற்பனைக்கு உதவி, கல்விக் கடன், சுய வேலைவாய்ப்பு போன்றவை இதில் அடங்கும். இந்த முன்னுரிமைக் கடன்களில் சரியான அளவீடு சிறுபான்மை இனத்தவர்களுக்கானதாகும்

மத்திய மாநில அரசுத் துறைப் பணிகள்

  • (அ) காவல் துறைக்கு அலுவலர்கள் தெரிவு செய்யப்படும்பொழுது சிறுபான்மை இனத்தவர்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்துமாறு மாநில அரசுகளுக்கு யோசனை கூறப்பட்டுள்ளது.
  • (ஆ) மத்திய காவல் படையினர் தெரிவிலும் இதே போன்ற கவனம் செலுத்தப்படும்.
  • (இ) இரயில்வேக்கள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் பெருமளவில் பணியாளர்களை தெரிவு செய்கின்றன. எனவே இந்தத் துறைகளும், சிறுபான்மையினர் தெரிவில் சிறப்பு கவனம் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளன.
  • (ஈ) அரசு மற்றும் சிறப்பு தனியார் பயிற்சி நிலையங்களில் சிறுபான்மை சமூகத்தினருக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மை சமுதாயத்தினரின் வாழ்சூழ் நிலையை மேம்படுத்துதல்

ஊரகப்பகுதிகளில் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள எளிய மக்களுக்கு குடியிருப்பு வசதியை செய்துதர "இந்திரா வீட்டு வசதித் திட்டத்தின்" கீழ் நிதி உதவி அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகள் மற்றும் நிதியுதவித் தொகை ஊரகப் பகுதிகளில் வாழும் எளிய சிறுபான்மை சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்படுகிறது.

சிறுபான்மை சமுதாயத்தினர் வாழும் குடிசைப்பகுதி மேம்பாடு ஒருங்கிணைந்த வீட்டு வசதி மற்றும் குடிசை மேம்பாட்டுத் திட்டம், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற சீரமைப்புத் திட்டம், ஆகியவற்றின் கீழ், மத்திய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. இந்தத் திட்டங்களின் பயன்கள் சிறுபான்மை சமுதாயத் தினருக்கும் அவர்கள் பெருமளவில் இருக்கும் நகர்ப்புறங்களுக்கும் குடிசைப்பகுதிகளுக்கும் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

இனக் கலவரங்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை

அ) இனக் கலவரங்களைத் தடுத்தல்

இனக் கலவரம் ஏற்படக் கூடிய பகுதிகள் என்று கண்டறியப்பட்ட பகுதிகளில் திறமையான, பாரபட்சம் இல்லாத, மதசார்பற்ற மாவட்ட மற்றும் காவல்துறை அலுவலர்கள் உயர்நிலைப் பதவியில் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதைப் போன்ற பகுதிகளிலும் இதர இடங்களிலும், இனக் கலவரத்தைத் தடுப்பது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரின் தலையாய பணியாக இருக்க வேண்டும். இந்த மாதிரி இடங்களில் பதவியில் இருக்கும் அதிகாரிகள் செயலாற்றும் விதம், அவர்களுடைய பதவி உயர்வை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆ) இனக் கலவரங்களுக்கு காரணமானவர்கள் மீது வழக்குத் தொடுத்தல்

பதட்ட நிலைமை உருவாகக் காரணமாக இருப்பவர்கள் அல்லது வன்முறையில் பங்கேற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. குற்றங்கள் இழைப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையிலும், அவர்களைத் தண்டிக்கும் வகையிலும் இவ்வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அல்லது மன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இ) பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு உதவி

இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி வழங்கப்படுவதுடன் அவர்களின் மறுவாழ்விற்கு வசதி செய்துதர போதுமான நிதியுதவியும் அளிக்கப்பட வேண்டும் என்றும் இத்திட்டம் வலியுறுத்துகிறது. நடப்பு நிதியாண்டு வரவு செலவு திட்ட அறிக்கையில், சிறுபான்மை நலத்துறைக்கென ரூ.351 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது சென்ற ஆண்டு பட்ஜெட் மறுமதிப்பீட்டை விட 60 சதவீதம் கூடுதலாகும்.

மெளலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் கல்வி திட்டங்களை செயல்படுத்தும் முக்கிய அமைப்பாக இயங்குவதுடன் சிறுபான்மையினரின் மேம்பாட்டிற்காக பணியாற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடும் செய்து வருகிறது. இதற்கென இந்த நிறுவனத்திற்கு முதலீடாக ரூ.750 கோடி அளிக்கப்பட்டுள்ளது என்று திட்ட அறிக்கை தெரிவிக்கிறது. சமுதாயத்தில் நலிந்த பிரிவினரின் மேம்பாட்டிற்காக அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு நலத் திட்டங்களின் பயன்கள் உரியவர்களுக்கு முழு அளவில் சென்றடைவதை உறுதி செய்வது நமது அனைவரின் கடமையாகும். அப்பொழுதுதான் சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்ய இயலும்.

ஆதாரம் : திட்டம்

ஆக்கம் : கே.என். சீனிவாசன், இயக்குனர் (ஒய்வு) இந்திய தகவல் பணி

3.03636363636
சாகுல்ஹமீது Jun 22, 2017 01:43 AM

மெளலான ஆசாத் அறக்கட்டளையின் மூலம் நடந்த நலத்திட்டஉதவிகள் பற்றி அறிய முடியுமா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top