অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கிராமாலயா - தூய்மைத் தமிழ்நாடு திட்டம்

கிராமாலயா - தூய்மைத் தமிழ்நாடு திட்டம்

அறிமுகம்

சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரம், நலவாழ்வு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை எவ்வித பாலின பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே கிராமாலயாவின் தொலைநோக்குப் பார்வை ஆகும்.

நவீன (ஸ்மார்ட்) தனிநபர் கழிப்பறை

நவீன (SMART) கழிப்பறை என்றால்

 • Safe and Sustainable –சுகாதாரமான மற்றும் நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தக்கூடியது.
 • Maintanable - எளிதில் பராமரிக்கக்கூடியது
 • Affordable - எல்லோரும் கட்டிப் பயன்படுத்தக்கூடியது.
 • Recyclable- கழிவுகளை மறுசுழற்சி செய்து உரமாகப்பயன்படுகிறது
 • Technically Perfect- சரியான தொழில் நுட்ப வசதியுடன் கூடியது

நவீன கழிப்பறையின் முக்கிய அம்சங்களாவன

 • குளியலறையுடன் கூடிய கழிப்பறையை குடும்ப உறுப்பினர்கள் எல்லா சுகாதார செயல்பாடுகளுக்கும் குறிப்பாக தன் சுத்தம் பேணுவதற்கும், பயன்படுத்துவதற்கும் எளிது.
 • கழிப்பறையாகப் பயன்படுத்தலாம்.
 • சோப்புடன் கூடிய கை கழுவும் வசதிகள் இருக்கும்.
 • கழிப்பறைக்குள் சுகாதாரம் சம்மந்தப்பட்ட பற்பசை, பிரஷ், சோப், ஷாம்பு போன்ற எல்லா பொருட்களும் இருக்கும்..
 • சுத்தம் செய்வதற்குத் தேவையான தண்ணீர் தொட்டி வசதி உள்ளே அமைக்கப்பட்டிருக்கும்.
 • நல்ல காற்றோட்ட வசதி இருக்கும்.
 • சானிட்டரி நாப்கின்களை (மாதவிடாய் துணி) முறையாக அப்புறப்படுத்த தேவையான எரியூட்டி வசதி இருக்கும்.
 • கழிப்பறைக்குள் போதிய மின் விளக்கு, வெளிச்சம் இருக்கும்..
 • மழை மற்றும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க நல்ல மேற்கூறை அமைக்கப்பட்டிருக்கும்.
 • நன்கு பராமரிக்கவும் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த இருமலக்குழிகளுடன் கழிப்பறை வசதி இருக்கும்.
 • கழிவுகளை மறுசுழற்சி செய்து உரமாகப் பயன்படுத்த இயலும்.
 • உபயோகிப்பாளரின் வசதிக்கேற்ப கழிப்பறை அமைக்கப்பட்டிருக்கும்.

தற்சமயம் கிராமாலயா திருச்சிராப்பள்ளி, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களிலும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி குடிசைப்பகுதிகளிலும் பணிசெய்து வருகிறது. கிராமப்புறங்களில் சுகாதாரம் குறித்த நலக்கல்வி, மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அமைத்தல், கிராமம், நகரம் மற்றும் மலைப்பிரதேசங்களில் குறைந்த செலவிலான நவீன (ஸ்மார்ட்) தனிநபர் கழிப்பறைகள் கட்டுதல், வீட்டுக் குடிநீர் இணைப்பு பெறுதல், ஆகியவற்றிற்கு கார்டியன் சிறுகடன் நிறுவனம் மூலம் கழிப்பறைக்கு கடன் வழங்கச்செய்து, தொழில் நுட்ப ஆலோசனை வழங்குகிறது.

கிராமாலயாவின் சுகாதாரத்திட்டங்கள்

 • நகர மேம்பாட்டு சுகாதாரத்திட்டம்.
 • மழைநீர் சேகரிப்பு திட்டம்.
 • வாழை ஆராய்ச்சி (வாழை உபபொருள்கள் தயாரித்தல்).
 • இந்தியாவின் முதல் திறந்த வெளியில் மலம் கழிக்க தடை செய்யப்பட்ட கிராமம் - தாண்டவம்பட்டி போன்ற முன்மாதிரி கிராமங்களை உருவாக்குதல்.
 • மக்களால் பராமரிக்கப்படும் பொது கழிப்பறைகள்.
 • சுற்றுச்சூழல் மேம்பாட்டு கழிப்பறை திட்டம்.
 • திடக்கழிவு மேலாண்மை திட்டம்.
 • மக்கள் அமைப்புக்களான அலைகள் கூட்டமைப்பு (WAVE)
 • உலக கழிப்பறை தினம், உலக தண்ணீர் தினம், உலக கை கழுவும் தினம் அனுசரிப்பு.
 • குடிநீர் மற்றும் சுகாதார நலக்குழு
 • தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் உள்ள அரசுத்துறை அதிகாரிகளுக்கு சுகாதாரப்பயிற்சி.

இத்திட்டத்தில் இணையதளத்தின் பயன்பாடு

 • தன்னார்வலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2500 பஞ்சாயத்து தலைவர்களும், www.thebigcleanupindia.org என்ற இணையதளத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்படுவார்கள். மேற்கூறிய இணையதளம் தமிழில் www.thooimaitamilnadu.org என்ற இணையதளம் வழியாக செய்திகள் மற்றும் தொழில்நுட்ப விபரங்களுடன் செயல்படும்.
 • இத்திட்டத்தினை செயல்படுத்த ஆர்வமாக உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் மேற்கண்ட இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தின் மூலம் தங்கள் விருப்பத்தினை கிராமாலயாவிற்கு தெரிவிக்கலாம்..
 • இந்த இணையதளத்தில் ஊராட்சி தலைவரின்பெயர், புகைப்படத்துடன் கூடிய விவரங்கள், ஊராட்சியில் உள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை மற்றும் கழிப்பறை உள்ள வீடுகளின் எண்ணிக்கை ஆகியவை பதிவு செய்யப்படும்.
 • ஓவ்வொரு பஞ்சாயத்திற்கும் ஒரு படிவத்தை உருவாக்கி, அதற்கான கடவுசொல் (Password)) பஞ்சாயத்து தலைவர்களிடம் கொடுக்கப்படும்.
 • இந்த படிவத்தில் மாதந்தோறும் அந்தந்த பஞ்சாயத்தில் கட்டப்படும் கழிப்பறைகளின் விவரங்கள் ஊராட்சி உதவியுடன் பதிவு செய்யப்படும்..
 • இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, மாவட்ட வாரியாக அனைத்து பஞ்சாயத்துகளின் செயல்பாடுகளும் ஒரே பட்டியலில் இடம் பெறும் வகையில் அமைக்கப்படும்.
 • இத்திட்டத்தில் அதிக அளவில் கழிப்பறைகள் கட்டிய பஞ்சாயத்து தலைவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களின் புகைப்படங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றை கிராமாலயா இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, இதனை அனைவரும் பார்வையிடவும், இத்திட்டத்தில் தன்னார்வலர்கள் பங்கேற்கவும் வழிவகை செய்யப்படும்.
 • இத்திட்டத்தில் பங்கேற்கும் பஞ்சாயத்து தலைவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், வருடந்தோறும் நடைபெறும் உலக கழிப்பறை தினவிழாவில் (நவம்பர்’19) சுகாதார திட்டத்தில் முன்மாதிரியாக செயல்படும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படும்..
 • விருதுபெற்ற பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பத்திரிகையில் இடம் பெறுவது மட்டுமல்லாமல், மற்ற தலைவர்களையும் ஊக்கப்படுத்தி இத்திட்டத்தில் பங்கேற்க செய்வார்கள்.
 • விருது பெற்ற சிறந்த பஞ்சாயத்து தலைவர்களின் புகைப்படத்துடன் கூடிய பெயர்பட்டியல் கிராமாலயா - இணையதளத்தில் வெளியிடப்பட்டு கௌரவிக்கப்படும்.

திட்டச் செயல்பாட்டு வழிகாட்டு நெறி முறைகள்

ஊராட்சி மன்றத் தலைவர்கள் எவ்வாறு இந்தத் திட்டத்தில் பங்கேற்பது

 • 2015-2019 ஆண்டுகளில் கிராமாலயா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்களின் நேரடி செயல்பாட்டில் ஒரு கோடி நவீன தனிநபர் கழிப்பறைகள் இந்தியாவில் 10 முன்னுரிமை மாநிலங்களில் (SMART TOILET) உருவாக்கப்படும்.
 • தமிழ்நாட்டில் மட்டும் வரும் ஐந்து ஆண்டுகளில் (2015 முதல் - 2019 க்குள்) 25 இலட்சம் நவீன தனிநபர் கழிப்பிடங்கள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, ஆர்வமுள்ள ஊராட்சித் தலைவர்களின் நேரடி செயல்பாட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
 • இத்திட்டத்தில் ஆர்வமும், அனுபவமும் உள்ள 5 லிருந்து 10 தொண்டு நிறுவனங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்வு செய்யப்படும்.
 • இந்த சுகாதார திட்டத்தில் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகடன் நிறுவனம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கிராமாலயாவின் வழிகாட்டுதலுடன் இணைந்து செயல்படும்.
 • ஒரு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும், 5 முதல் 10 ஊராட்சித் தலைவர்கள் தன்னார்வலராகத் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த மாவட்டத்தில் பயிற்சியளிக்கப்பட்டத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுகாதாரத்தூதுவர்கள் உதவியின் மூலம் தனிநபர் இல்லங்களில் நவீன கழிப்பறைகள் கட்டுவதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள்.
 • இதுபோன்று தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆர்வமுள்ள 100 பஞ்சாயத்து தலைவர்கள் வீதம் 25 மாவட்டத்திற்கு 2500 பஞ்சாயத்து தலைவர்கள் இத்திட்டத்தில் தன்னார்வலர்களாக பங்கேற்க ஊக்குவிக்கப்படுவார்கள்.
 • தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு சுகாதாரப்பயிற்சி, கழிப்பறைகட்டுமான தொழில்நுட்ப பயிற்சி, பட்டறிவு பயணம் போன்றவை ஏற்பாடு செய்யப்படும்.
 • ஓவ்வொரு பஞ்சாயத்து தலைவருக்கும் “வழிகாட்டும் நெறிமுறைகள் மற்றும் கழிப்பறை தொழில்நுட்பத் தகவல்கள்” அடங்கிய கையேடு வழங்கப்படும். இக்கையேட்டில் கழிப்பறைத் தொழில் நுட்பம் பற்றிய செய்திகள், பல்வேறு நவீன தனிநபர் கழிப்பறை மாதிரிகள் மற்றும் வரைபடங்கள், உத்தேச கட்டுமானத்தொகை, எவ்வாறு தனிநபர் வீடுகளில் அரசுத் திட்டத்தில் கழிப்பிடங்கள் கட்டுவதற்கு செயல்பட வேண்டும் போன்ற விபரங்கள் ஒவ்வொருவரும் தாங்களே படித்துப் புரிந்து கொண்டு நேரடியாக செயல்பட விளக்க வழிமுறைகள் இருக்கும்.
 • ஓவ்வொரு பஞ்சாயத்து தலைவரும் வருடத்திற்கு 200 முதல் 500 தனிநபர் கழிப்பிடங்களை அந்தந்த ஊரட்சிகளில் உள்ள நிதி ஆதாரத்திற்கு ஏற்றவாறு கட்டுவதற்கு ஊக்குவிக்கப் படுவார்கள்.
 • தேவைப்படும் ஊராட்சிகளுக்கு தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கு தேவையான நிதி உதவியை வங்கிகள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனாக வழங்கவும், குழுக்கள் மற்றும் பஞ்சாயத்து அளவிலான குழுக்கூட்டமைப்பு சேமிப்பு நிதியிலிருந்து உள்கடன் வழங்கவும், சிறுகடன் நிறுவனங்களிலிருந்து கடனுதவியும் வழங்கச் செய்து அவரவர் வீடுகளில் தனிநபர் கழிப்பறைகள் முழுமையாக கட்டி பயன்படுத்த வழிகாட்டுதல் செய்யப்படும்.
 • அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறும், இடவசதி மற்றும் பொருளாதார வசதிக்கு ஏற்றவாறும் குளியலறையுடன்கூடிய நவீன தனிநபர் கழிப்பறை கட்டுவதற்கு ஆலோசனை வழங்கப்படும்.
 • முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள கழிப்பறை உள்ள வீடுகளின், புகைப்படத்துடன் கூடிய பயனாளிகளின் பெயர்பட்டியல் பஞ்சாயத்து தலைவர் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்
 • தூய்மை இந்தியா திட்டத்தின் அலுவலர்கள் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறைகளை பார்வையிட்ட பின்னர், தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஊராட்சிகளின் மூலம் மானிய உதவி வழங்கப்படும்.
 • மானிய உதவி இல்லாத வீடுகளுக்கு சுலப மாத தவணையில் சிறுகடனுதவி வழங்கப்பட்டு கழிப்பிடம் கட்டுவதற்கு உதவி செய்யப்படும்.
 • உத்தேச மதிப்பீட்டுப் பட்டியலுடன் கூடிய கழிப்பிட மாதிரி வடிவமைப்புகள் அடங்கிய விளக்க அட்டைகள் வழங்கப்படும்..
 • நீர்ப்பாங்கான பகுதி, வறண்ட பகுதி, மலைப்பிரதேச பகுதி மற்றும் கடலோர பகுதிகளுக்கு ஏற்றவாறு கழிப்பிடம் கட்டுவதற்கு தொழில் நுட்ப ஆலோசனை வழங்கப்படும்..
 • மேற்கூறிய வழிகாட்டுதலின் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 ஊராட்சிகளில் ஆர்வமுள்ள ஊராட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்டத்திற்கு 20000 முதல் 25000 கழிப்பிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் வருடத்திற்கு 5 லட்சம் கழிப்பிடங்கள் கட்டுவதற்கு வழிவகை செய்யப்படும்.
 • ஓவ்வொரு மாவட்டத்திலும் கிராமாலயா நிறுவனத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட, சுகாதாரத் திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட தொண்டு நிறுவன பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
 • கிராமாலயாவுடன் இணைந்து பணியாற்றும் தொண்டு நிறுவனப்பணியாளர்கள் அந்தந்த ஊராட்சிகளில் உள்ள மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கும், பஞ்சாயத்து அளவிலான குழுக்கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும், அரசால் நியமிக்கப்பட்ட சுகாதார தூதுவர்களுக்கும் கழிப்பிடம் கட்டுவதற்கான தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவார்கள்..
 • மேற்கூறிய தொண்டு நிறுவன பணியாளர்கள் அந்தந்த மாவட்டத்திற்கு நேரடியாக சென்று, கட்டப்படும் கழிப்பறைகளை பார்வையிட்டு தரமாகவும், சரியான தொழில்நுட்பத்துடனும் கட்டுவதை உறுதிசெய்வார்கள்.
 • மேற்கூறிய தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களின் விவரங்கள், அந்தந்த பஞ்சாயத்து தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, இணையதளம் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்டு, கழிப்பிடம் கட்டுவதற்கு உதவிகள் செய்யப்படும்.

இந்திய அரசின் முக்கிய வள ஆதார மைய அங்கீகாரம்

திருச்சிராப்பள்ளியில் உள்ள கிராமாலயா தொண்டு நிறுவனம், புது டில்லியல் உள்ள மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தினால் முக்கிய வள ஆதார மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதாரத்தில் பணி செய்த அனுபவத்தின் காரணமாக, கிராமாலயாவிற்கு தேசிய அளவில் பயிற்சி நிறுவனமாக அனுமதியளிக்கப்பட்டு, தென் மாநிலங்களில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, மற்றும் தமிழ்நாட்டில் அரசு அலுவலர்களுக்கு ஒரு பயிற்சி நிறுவனமாக இயங்குவதற்கு இந்திய அரசு அங்கீகாரம் செய்துள்ளது. கிராமாலயாவின் ஒரு அங்கமாக விளங்கும் நிவாஸ் என்று அழைக்கப்படும் தேசிய அளவிலான குடிநீர் மற்றும் சுகாதார பயிற்சி மையம், ஏற்கெனவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் அரசு மற்றும் தொண்டு நிறுவன பார்வையாளர்கள் கற்றுக்கொள்வதற்கும், ஆராய்ச்சிக்கும் மற்றும் பட்டறிவுப் பயணம் மேற்கொள்ளவும் உதவுகிறது. கென்யா, பங்களாதேஷ், நேபாளம், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் சுகாதாரப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்காக வருகை புரிகின்றனர்.

கிராமாலயாவின் பயிற்சி மையத்தில் குடிநீருக்கான குறித்த தொழில்நுட்பப் பூங்கா, கழிப்பறை தொழில்நுட்பப் பூங்கா ஆகியவை தனித்தனியே உள்ளது. கழிப்பறை தொழில்நுட்பப் பூங்காவில் பல்வேறு வகையான குறைந்த செலவிலான கழிப்பறைகள், உலர்கழிப்பறை, உறிஞ்சுக்குழி மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் கழிப்பறை மாதிரிகள் உள்ளன. இப்பயிற்சி மையம் குடிநீர் மற்றும் சுகாதாரத்தில் ஏராளமான நலக்கல்வி புத்தகங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

மேலும், யூனிசெஃப் (சென்னை), வாட்டர் எய்டு (யு.கே), வாட்டர்.ஆர்க் (யு.எஸ்.ஏ), ஆர்கியம் (பெங்களுர்) அகிய நிறுவனங்கள் மற்றும் மத்திய மாநில அரசின் தற்போதைய ஸ்வச்ச் பாரத் மிஷன் என அழைக்கப்படும் தூய்மை இந்தியாத் திட்டத்திலும் கிராமாலயா இணைந்து பணி செய்கிறது.

குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், அவர்களின் முக்கிய பணிகள், பொறுப்புகள் மற்றும் மனப்பாங்கு ஆகியவைகளை, இத்துறையில் சிறந்து விளங்கும் சிறப்பாளர்கள் மற்றும் வல்லுனர்களின் மூலம் சிறப்பு பயிற்சி அளித்து திறன்மேமம்பாடு அடையச் செய்வதே இந்த வள ஆதார மையத்தின் முக்கிய நோக்கம்.

இந்த வள ஆதார மையம், இத்துறையில் பணிசெய்யும் பணியாளர்களுக்கு சிறப்புப்பயிற்சி மற்றும் திறமைகளை வளர்க்கும் பயிற்சிகள் மூலம், தலைமைப்பண்பு, மேலாண்மை, நிர்வாகம், தொழில்நுட்பம், மனமாற்றம் மற்றும் சட்டம் சம்பந்தமான சவால்களை எதிர் கொள்ள தேவையான அறிவுத்திறனை அளிக்கும். மேலும் இந்த மையம், கிராம குடிநீர் வினியோகம் செய்யும் துறையிலும், திறமை மற்றும் தனிநபர் இலக்குகளை அடைய அவர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தவும் உதவி செய்யும்.

வள ஆதார மையத்தின் முக்கிய பொறுப்புகள்

பொது சுகாதாரப் பொறியியல் துறை பொறியாளர்கள், மாவட்ட அலுவலர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இயங்கும் தொலைத்தொடர்பு மற்றும் திறமைகளை வளர்க்கும் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பத்திரிக்கைத் துறையினர், திட்டப்பணியாளர்கள், தொண்டு நிறுவனப் பணியாளர்கள், சுயதொழில் செய்யும் பொறுப்பாளர்கள், கொத்தனார்கள், பள்ளி ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களுக்கு திறமைகளை வளர்க்கும் பயிற்சிகள் அளித்தல்.

மாநில அளவில் உள்ள தகவல் தொடர்பு மற்றும் திறன் வளர்ப்பு துறைக்கும் தொழில்நுட்பரீதியாக வழிகாட்டுதல், மாநில மற்றும் மாவட்ட அளவில், பல்வேறு பங்கேற்பாளர்களுக்கு, நலக்கல்வி அளிக்கும் வழிமுறைகள், திறமைகளை வளர்க்கும் பயிற்சிகள் அளித்தல்.

திட்டங்களை செயல்படுத்தி கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்து அதன் மூலம் பிரச்சனைகளை கண்டறிந்து, அதற்கான தீர்வுகளை கள ஆய்வு மூலம் வழங்குதல்

வெற்றிக்கதைகள், நல்ல மாற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆவணப்படுத்துதல். சுகாதாரத்துறை, பொறியியல்துறை பொறியாளர்கள், மாவட்ட அலுவலர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள், கிராமக் குடிநீர் மற்றும் சுகாதார நலனுக்கும், குடிநீர் குழு பொறுப்பாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மாணவர்கள், சுகாதாரப்பணியாளர்கள், மற்றும் அரசுத்துறை நிறுவனங்கள் ஆகியோர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தேவையான பயிற்சி பாடத்திட்ட கையேடுகளை உருவாக்குதல்.

ஆதாரம் : கிராமாலயா தொண்டு நிறுவனம், திருச்சி© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate