பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

தொடங்கிடு இந்தியா (Startup India)

தொடங்கிடு இந்தியா (Startup India) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தொடக்க இந்தியா திட்டம் - ஓர் கண்ணோட்டம்

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலைபெற்று நீடிக்கும் விதமாகவும், பெருமளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாகவும் புத்தாக்க முயற்சிகளுக்கும் தொடக்க நிலைத் தொழில் முயற்சிகளுக்கும் உகந்த வலுவான சூழலைக் கட்டமைக்கும் நோக்கில் இந்திய அரசு அறிவித்துள்ள திட்டம்தான் ‘தொடங்கிடு இந்தியா” என்னும் திட்டமாகும்.

அரசின் இந்த முயற்சியின் இலக்குகளை எட்டும் விதமாக, ‘தொடங்கிடு இந்தியா’ திட்டத்திற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்பம் முதற்கொண்டு, வேளாண்மை, உற்பத்தி, சமூகவியல்துறை, சுகாதாரம், கல்வி போன்ற அனைத்துத் துறைகள் வரை புதிய தொழில் தொடக்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். முதல்நிலை நகரங்கள் தொடங்கி, இரண்டாம்நிலை, மூன்றாம் நிலை நகரங்கள் வரையிலும், கிராமப்புறங்களிலும் கூட தொடங்கிடு இந்தியா திட்டத்தின்கீழ் புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

செயல் திட்டத்தின் சிறப்பம்சங்கள்

எளிமைப்படுத்தலும் கைப்பிடித்து உதவுதலும்

(i) விதிகளைப் பின்பற்றுவதற்கு சுய சான்றளிப்பு:

தொழில் தொடங்குவதற்குப் பின்பற்றியாக வேண்டிய தொழிலாளர் நலம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த சட்டங்களின் விதிகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றளிப்பதற்கு பதிலாக, தொழில் தொடங்குவோரே சுயமாக சான்றளிக்கும் வகையில் விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கென செல்பேசி செயலி (மொபைல் ஆப்) உருவாக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்ட விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்று மூன்று ஆண்டுகள் வரை அதிகாரிகள் நேரிடையாக ஆய்வு செய்யமாட்டார்கள். எனினும், விதி மீறல் பற்றி நம்பகமான ஆதாரங்களோடு எழுத்து மூலம் புகார் வந்தால், ஆய்வு செய்யும் அதிகாரம் பெற்ற அதிகாரியை விட ஒருபடி மேலான நிலையில் உள்ள அதிகாரி உத்தரவிட்டால், மூன்றாண்டுகளுக்குள்ளும் தொழிலாளர் சட்ட விதி மீறல் பற்றி நேரிடையாக ஆய்வு செய்யலாம். சுற்றுச்சூழல் சட்டவிதிகளைப் பொறுத்த வரையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வரையறுத்துள்ளவாறு வெள்ளை இனத்தில் வரும் தொழில்கூடங்கள் சுயசான்று அளித்தால் போதுமானது. இவ்விஷயத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

(ii) தொடங்கிடு இந்தியா மையம்:

புதிய தொழில் தொடக்கத்திற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும், அறிவு பரிமாற்றத்திற்கும், நிதி உதவி பெறுவதற்கும் என எல்லா வசதிகளையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள இத்தகைய மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

(iii) செல்பேசி செயலி மற்றம் இணையதளம்:

அரசுத் துறைகள் மற்றும் ஒழுங்காற்று அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும், தொழில் ரீதியான அனைத்துத் தேவைகளுக்கும் தகவல்களுக்கும் சம்பந்தப்பட்டவர்களோடு கருத்துப் பரிமாற்றத்திற்கு இவ்வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

(iv) சட்டரீதியான ஆதரவும், குறைந்த செலவில் துரிதமான காப்புரிமையும்:

புதிய தொழில் தொடங்கிடுவோர் விண்ணப்பிக்கின்ற காப்புரிமை, டிரேட்மார்க் உரிமை, வடிவமைப்பு உரிமை அனைத்திற்கும் அவ்வசதிகளைப் பெற்றுத்தருவோருக்கான கட்டணத்தை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும். தொழில் தொடங்குவோர், சட்டப்படியான சிறிதளவு கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். மேலும் காப்புரிமை வேண்டி விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டிய கட்டணத்தில் புதிய தொழில் தொடங்குவோருக்கு 80 சதவீதத் தள்ளுபடி உண்டு. சோதனை முறையில் இந்த வசதிகள் முதலில் ஓராண்டுக்கு  செயல்படுத்தப்படுகின்றன. இந்த வசதிகள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன என்று பார்த்த பின்னர் மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

(v) தொடங்கிடு இந்தியா நிறுவனங்களிலிருந்து அரசுக் கொள்முதலுக்கு விதிகள் தளர்வு:

புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கின்ற வகையில் உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ளவற்றில் இருந்து அரசுக்கு வேண்டிய தயாரிப்புகளைக் கொள்முதல் செய்யும்போது முன் அனுபவம் இருக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட தொகைக்கு விற்று வரவு இருக்க வேண்டும் என்ற விதிகள் தளர்த்தப்படும். எனினும் தயாரிப்புகளின் தரத்தில் எவ்வித சமரசமும் இருக்காது. தொழில்நுட்ப அளவு கோல்களிலும் தளர்வு கிடையாது. அரசுக்கு வேண்டியவற்றை நிறைவேற்றித் தரும் திறன் இருப்பதை அவை நிரூபிக்க வேண்டும் என்பதோடு, அவற்றின் உற்பத்திக் கூடங்கள் இந்தியாவில் இருக்க வேண்டும்.

(vi) துரிதமாக வெளியேறவும் வாய்ப்பு:

தொடங்கிடு இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்கள் சரிவர நடக்கவில்லை என்றாலும் அவற்றை மூடிவிட நினைத்தாலும், அதற்கான விண்ணப்பத்தை அளித்தலில் இருந்து 90 நாட்களுக்குள் நிறுவனத்தைக் கலைத்து விடலாம். அண்மையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நொடித்தல் மற்றும் திவால் ஆதல் மசோதா 2015 -ல் இதற்கு வகைசெய்யப்பட்டுள்ளது. “வரம்புற்ற பொறுப்பு” என்ற கருத்தாக்கத்தையும் இந்த ஏற்பாடு மதித்து நடக்கும்.

நிதி ஆதரவும், ஊக்க உதவிகளும்

i) ரூ 10,000 கோடி நிதியம் மூலம் நிதிஉதவி: தொடங்கிடு இந்தியா திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்குவோருக்கு நிதி உதவி அளிப்பதற்காக ஆரம்பத்தில் ரூ.2500 கோடியில் ஒரு நிதியம் ஏற்படுத்தப்படும். பின்னர் ஆண்டுதோறும் ரூ.2500 கோடி நிதிஒதுக்கி நான்கு ஆண்டுகளில் அது ரூ. 10,000 கோடி நிதியமாக மாறும். இந்நிதியத்தில் இருந்து நேரிடியாக புதிய தொழில்களில் முதலீடு செய்யப்படமாட்டாது. மாறாக, இந்தியப் பங்குச் சந்தை வாரியத்தில் பதிவு பெற்றுள்ள முனைவு நிதியங்களில் (வெஞ்சர் பண்ட்) முதலீடுசெய்யப்பட்டு, அவை மூலம் தொழில்நிறுவனங்கள் நிதி உதவிபெறும்.

ii) கடன் உத்திரவாத நிதியம்: புதிய தொழில் நிறுவனங்கள் பெறுகின்ற கடன்களுக்கு, தேசியக் கடன் உத்திரவாதப் பொறுப்புக் கம்பெனி மற்றும் இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி மூலமாக உத்திரவாதம் அளிக்கப்படும். இதற்கென ஆண்டுக்கு ரூ.500 கோடி வீதம் நான்காண்டுகளுக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும்.

iii) மூலதன ஆதாயத்திற்கு வரிவிலக்கு: புதிய தொழில் முயற்சியால் கிடைக்கும் மூலதன ஆதாயத்தை அரசு அங்கீகரித்துள்ள மூலதன நிதியில் முதலீடு செய்தால் அந்த ஆதாயத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படும். தற்போது அமலில் உள்ள புதிதாக ஏற்படுத்தப்படும் குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் முதலீடுகளுக்கு அளிக்கப்படும் மூலதனவரி விலக்குத் திட்டமும், தொடங்கிடு இந்தியத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் நிறுவனங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

iv) மூன்றாண்டு, வருமான வரி விலக்கு:

தொடங்கிடு இந்தியா திட்டத்தன்கீழ் ஆரம்பிக்கப்டும் தொழில்களில் கிடைக்கும் லாபத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு வருமானவரி கிடையாது. இந்த நிறுவனங்கள் பங்குதாரர்களுக்கு டிவிடண்ட் வழங்காமல் இருந்தால்தான் இந்த வருமான வரிச்சலுகை கிடைக்கும் .

v) நியாயமான சந்தை மதிப்புக்கு மேலான முதலீட்டுக்கும் வரிச்சலுகை:

தற்போதுள்ள வரிச் சட்டத்தின்படி, ஒரு நிறுவனம் தனது பங்குகளை நியாயமான சந்தை மதிப்பை விடவும் அதிக தொகைக்கு மற்றவர்களுக்கு வழங்கினால், நியாயமான சந்தை மதிப்பை விடவும் அதிகமாகப் பெறுகின்ற தொகை, மற்ற இனங்களில் கிடைத்த வருமானம் என்று கணக்கிட்டு வரி செலுத்த வேண்டும். ஆனால், தொடங்கிடு இந்தியா திட்டத்தில் இதுபோல் கூடுதலான தொகைக்கு வரிச்சலுகை உண்டு.

தொழில்துறை கல்வி நிறுவனக் கூட்டுறவும் அடைகாக்கும் நிலையும்

i) தொடங்கிடு இந்தியா விழாக்களை ஏற்பாடு செய்தல்: தொழில்துறையின் புத்தாக்க முயற்சிகளை பலரும் அறியச் செய்யவும், தொடர்புடைய ஏணையோருடன் இணைந்து செயல்படவும் ஏதுவாக, தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தொடங்கிடு இந்தியா விழாக்களை நடத்த இந்திய அரசு உத்தேசித்துள்ளது.

ii) அடல் புத்தாக்க இயக்கம் தொடங்குதல்: பெரிய அளவில் வளர்ச்சி பெறக்கூடிய புதிய தொழில் முயற்சிகளுக்குத் தேவைப்படுகிற சிறுசிறு மாற்றங்களைச் செய்து தருகிற 500 ஆய்வகங்களையும், ஒவ்வொரு தொழிலுக்கும் எனப் பிரத்யேகமான அடைகாத்தல் நிறுவனங்களையும் ஏற்படுத்தித்தருவதுதான், அடல் புத்தாக்க இயக்கத்தின் நோக்கமாகும். புத்தாக்க முயற்சிகளில் சிறப்பானவை தேர்ந்து எடுக்கப்பட்டு ஒவ்வொரு மாநிலத்திற்கும் யூனியன் பிரதேசத்திற்கும் தலா மூன்று புத்தாக்க விருதுகள் வழங்கப்படும். இவை தவிர தேசிய அளவில் மூன்று விருதுகளும், இந்தியாவுக்கு என்றே மிகமிகச் செலவு குறைவான தீர்வுகளைக் கண்டறிபவருக்கு மாபெரும் புத்தாக்க சவால் விருது ஒன்று வழங்கப்படும்.

iii) தனியார் துறை நிபுனத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்ளல்:

அரசாங்க ஆதரவுடன் அல்லது அரசாங்க நிதி உதவியுடன் செயல்படும் அடைகாப்பு நிறுவனங்களில் தொழில்முறை மேலாண்மையை உறுதி செய்வதற்காக, ஒரு கொள்கை உருவாக்கப்படும். அதன்படி, நாடெங்கிலும் அரசு தனியார் பங்களிப்புடன் கூடிய அடைகாப்பு நிறுவனக் கூட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.

iv) தேசிய நிறுவனங்களில் புத்தாக்க மையம் ஏற்படுத்துதல்:

புதிய தொழில்களுக்கான அடைகாப்பு அமைப்புகளையும், ஆராய்ச்சி-வளர்ச்சி முயற்சிகளையும் அதிகரிப்பதற்காக 31 புத்தாக்க மையங்களை ஏற்படுத்த அல்லது மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மையங்கள் மூலம் 1200 க்கும் மேற்பட்ட புதிய தொழில் முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கும். இவையாவும் தேசிய அளவிலான நிறுவனங்களில் ஏற்படுத்தப்படும்.

v) ஏழு புதிய ஆசாய்ச்சிப் பூங்காக்கள்:

ஒவ்வொன்றும் 100 கோடி ரூபாய் முதலீட்டில் ஏழு புதிய ஆராய்ச்சிப் பூங்காக்கள் ஏற்படுத்தப்படும். சென்னை ஐஐடி யில் உள்ள ஆராய்ச்சிப் பூங்காவை முன்மாதிரியாகக் கொண்டு இவை உருவாக்கப்படும்.

vi) உயிரித் தொழில் நுட்பத் துறையியல்:

இத்துறையில் தொடங்கிடு இந்தியா தொழில் முயற்சிகள் ஏற்படுத்துவதை ஊக்குவிக்க, ஐந்து புதிய பயோ தொகுப்புகளும், 50 புதிய பயோ அடைகாப்பான்களும், 150 தொழில் நுட்ப மாற்று அலுவலகங்களும் 20 பயோ-தொடர்பு அலுவலகங்களும் ஏற்படுத்தப்படும். இவையாவும் நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் ஏற்படுத்தப்படும். பாரத் நிதயம், இந்தியா விருப்பார்வ நிதியம் போன்ற தேசிய மற்றும் சர்வதேசிய சமவிகித நிதியங்களின் மூலம் உயிரித் தொழில்நுட்பத் தொழில் முயற்சிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படும்.

vii) மாணவர்களுக்கான புத்தாக்கத் திட்டங்கள்:

பள்ளி மாணவர்களிடையே  இருந்து புத்தாக்க யோசனைகளைப் பெறும் நோக்கில், ஐந்து லட்சம் பள்ளிகளில் இருந்து பத்து லட்சம் யோசனைகள் பெறப்படும். அவற்றில் மிகச்சிறந்த நூறு புத்தாக்க யோசனைகள் தெரிவு செய்யப்பட்டு புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் புத்தாக்கத் திருவிழாவில் காட்சிப்படுத்தப்படும். புத்தாக்க முயற்சிகளைப் பயன்படுத்தவும், மேம்படுத்தவுமான தேசியதிட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு, சிறந்த 20 புத்தாக்கங்களை உருவாக்கிய மாணவர்களுக்கு பத்து லட்சரூபாய் பரிசளிக்கப்படும். இதுதவிர ஐஐடி மாணவர்களிடையே மிகத் தரமான ஆய்வுகளை மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்காக மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், அறிவியல் தொழில் நுட்பத்துறையும் கூட்டாகச் செயல்படுத்தும் “உச்சதர் அவிஸ்கார் யோஜனா” என்ற திட்டத்திற்கு ஆண்டு தோறும் ரூ. 250 கோடியை அரசு ஒதுக்கி வருகிறது.

viii) வருடாந்திர அடைகாப்பு நிறுவன போட்டி:

முன்கூட்டியே வரையருக்கப்பட்ட முக்கிய அளவு கோள்களின் படி, புதிய தொழில் காப்புத் திட்டங்கள் பத்து தேர்ந்தெடுக்கப்படும். அவை உலகத்தரமான புத்தாக்கங்களாக உருப்பெறும் தகுதி கொண்டவையாய் இருக்கும். அவை அடைகாப்பு நிலையில் இருந்து முழுமையான தொழில் முயற்சியாய் உருப்பெறுவதற்காக ஒவ்வொன்றுக்கும் தலா ரூ. 10 கோடி நிதி உதவி அளிக்கப்படும்.

ஆதாரம் : STARTUP INDIA

Filed under:
3.02040816327
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top