கிராமப் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் வீடு இல்லாத ஆதிதிராவிடர், பழங்குடியினர், கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் இதர மக்களுக்கு இலவச வீடுகள் கட்டித் தருதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
•மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர், கிராம ஊராட்சிவாரியாக கட்டப்பட வேண்டிய வீடுகளின் எண்ணிக்கையை முடிவு செய்வார்.
•கிராம சபையினால் ஒப்புதலளிக்கப்பட்ட, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் நபர்களின் பட்டியலிலிருந்து முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் ஒதுக்கப்படும்.
•இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டில் 60 விழுக்காட்டிற்குக் குறையாமல் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.
•அதிக பட்சமாக 40 விழுக்காடு ஒதுக்கீடு; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அல்லாத பிற வகுப்பினரைச் சார்ந்த வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
•கிராம சபையினால் அங்கீகரிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் நபர்களின் பட்டியலில் இருந்து பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களால் நில உரிமை, இடம் ஆகியவை சரிபார்க்கப்பட்டதை உறுதி செய்த பிறகு தகுதியுள்ள பயனாளிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) வேலை உத்திரவினை வழங்குவார்.
பயனாளிகள் வீடுகளைக் கட்டுவதற்கு ஒன்றிய பணி மேற்பார்வையாளர், ஒன்றிய / உதவி பொறியாளர் தேவையான தொழில்நுட்ப உதவிகளை மேற்கொள்வார்கள்.
நிதி ஆதாரம் : மத்திய, மாநில அரசுகள் 75:25 என்ற விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அலகுத் தொகை - ரூ.1,20,000/-
ஒரு வீட்டிற்கான அலகுத் தொகை ரூ.70,000/- என மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு ரூ.52,500/- (75ரூ) மற்றும் மாநில அரசு ரூ.17,500/-(25ரூ) வழங்குகிறது.
இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் அனைத்து வீடுகளுக்கும் கான்கிரீட் கூரை அமைப்பதற்காக தமிழக அரசால் கூடுதல் நிதியாக ரூ.50,000/- ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே தமிழ்நாட்டில் இத்திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடு ஒன்றிற்கான அலகுத் தொகை ரூ.1,20,000/- ஆகும்.
1.குடும்பத்தலைவியின் பெயரிலோ அல்லது கணவர் மற்றும் மனைவி ஆகியோர் பெயரிலோ வீடு ஒதுக்கீடு செய்யப்படும்.
2.வீட்டின் பரப்பளவு சுமார் 200 சதுர அடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
3.இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளே தங்கள் வீட்டைக் கட்டிக் கொள்ளவேண்டும்.
4.இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிலும் முழு சுகாதார திட்ட நிதி ஒதுக்கீட்டினை ஒருங்கிணைத்து அனைத்து வீடுகளிலும் ஒரு கழிவறை அமைக்கப்பட வேண்டும்.
5.இத்திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட அனைத்து வீடுகளிலும் திட்டத்தின் பெயர், பயனாளியின் பெயர் மற்றும் வீடு கட்டப்பட்ட ஆண்டு ஆகிய விபரங்கள் தெளிவாகத் தெரியும் வகையில் வண்ணத்தினால் எழுதப்படவேண்டும்.
6.பயனாளிகள் கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் தாங்களே ஏற்பாடு செய்துகொள்ளலாம். பயனாளிகளால் கதவுகள் மற்றும் ஜன்னல்களை ஏற்பாடு செய்ய இயலாத நிலையில், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கதவுகள் மற்றும் ஜன்னல்களை ஏற்பாடு செய்து வழங்கிவிட்டு அதற்கான தொகையினை திட்ட நிதியிலிருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம்.
திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்
மாநில அளவில் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15.
மாவட்ட அளவில் : மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
வட்டார அளவில் : வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி )
ஊராட்சி அளவில் : ஊராட்சி மன்றத் தலைவர்
ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்