மத்திய அரசின் பதிமூன்றாம் நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் மேம்படுத்துவதற்காக நிதி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பழுதடைந்த நிலையில் உள்ள தார்சாலைகள் மாவட்ட அளவில் எடுக்கப்பட்டு பராமரிப்பு செய்யப்படுகின்றன.
அரசு ஆணைப்படி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளுக்கு இடையே, 2:1 என்ற விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
13வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட வகையிலான ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தார்ச் சாலைகள் எடுக்கப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன.
1.பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு 5 வருட கால முடிந்த நிலையில் உள்ள சாலைகள் இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன.
2.பேருந்து செல்லும் தார்ச் சாலைகள்
3.முக்கிய இணைப்புச் சாலைகள்.
இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட சாலைகளுக்கு மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது. பின்னர், இந்த திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட பணிகளுக்கு தொழில் நுட்ப அனுமதி பெறப்பட்டு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு, வட்டார அளவில் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் சாலைகளின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாவும் பயன்பெறும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள்.
திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்
மாநில அளவில் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15.
மாவட்ட அளவில் : மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
வட்டார அளவில் : வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி)
ஊராட்சி நிர்வாகம் மற்றும் திட்ட செயல்பாடு தொடர்பான கருத்துக்கள் மற்றும் குறைகளை, வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரிடமோ தெரிவிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவரிடம், திங்கள்கிழமைதோறும் நடத்தப்படும் குறைகேட்பு கூட்டத்திலோ அல்லது குறிப்பிட்ட தேதிகளில் தெரிவு செய்யப்பட்ட கிராமத்தில் நடத்தப்படும் மக்கள் தொடர்பு முகாம்களிலோ தங்களுடைய கருத்துக்கள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம்.
ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்