தமிழகத்தில் பின்தங்கிய 5 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட தேசிய வளர்ச்சி மற்றும் புனரமைப்புத் திட்டம் மத்திய திட்டக் குழுவிலிருந்து
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு 2006-07 முதல் மாற்றப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் இத்திட்டத்தைப் பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான மானிய நிதி என மாற்றியமைத்தது.
•இத்திட்டம், தற்போது தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.
•உள்ளாட்சி அமைப்புகளின் திட்டமிடல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றை மேம்படுத்துதல், அவைகளுக்கு ஒப்படைக்கப்பட்ட முக்கியக் கடமைகளை நிறைவேற்றுதலில் திறனை மேம்படுத்த உதவுதல் மற்றும் வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வுகளைக் களைதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
•தற்போதுள்ள திட்டங்களின் செயல்பாடுகளால் வளர்ச்சியில் முழுமை பெறாத பகுதிகளுக்கு ஏற்றவாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
1.தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்களுக்குப் பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படையான தன்மையை ஏற்படுத்தும் வகையில் திட்டமிடல், செயலாக்கம், கண்காணித்தல், கணக்குகளைப் பராமரித்தல் ஆகியவற்றிற்கான திறனை மேம்படுத்தப் பயிற்சி அளித்தல்.
2.ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், தங்கள் பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகளில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளைக் களையும் விதமாக ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் வரையறுக்கப்படாத மானியத்தை வழங்குதல்.
திட்டம் தயாரித்தல் : ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒதுக்கீட்டிற்கேற்ப திட்டப் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்கிறது. மாவட்ட அளவில் மொத்த ஒதுக்கீட்டுக்கான திட்டங்களுக்கு மாவட்ட திட்டக்குழு பரிந்துரை செய்கிறது.
கண்காணிப்பு : மாவட்டத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, இத்திட்டத்தினைக் கண்காணிக்கும் அமைப்பாகும்.
திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்
மாநில அளவில் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15.
மாவட்ட அளவில் : மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
வட்டார அளவில் : வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி)
ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்