பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / ஊரக வளர்ச்சி / மத்திய அரசுத் திட்டங்கள் / மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட புள்ளி விவரங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட புள்ளி விவரங்கள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட புள்ளி விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 02.02.2006ல் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு நிதியாண்டிலும் ஊரகப் பகுதிகளில் திறன் சாரா, உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்களுக்கு குறையாமல் வேலை வாய்ப்பினை அளிக்க இச்சட்டம் உறுதி செய்கிறது. ஊரகப்பகுதியில் வாழும் ஏழைமக்களுக்கு அடிப்படை உரிமையான 'சமத்துவ உரிமையை உணர்ந்து கொள்ளும் விதமாக இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இத்திட்டம் மட்டுமே வேலை செய்யும் உரிமையை'' உறுதிப்படுத்தும் சட்டப்பூர்வ பாதுகாப்பு கொண்ட ஒரே வறுமை ஒழிப்பு திட்டமாகும்

இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்கள்

அ) ஒவ்வொரு நிதியாண்டிலும், ஊரகப் பகுதிகளில் திறன்சாரா, உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்களுக்குக் குறையாமல் வேலை வாய்ப்பினை அளிப்பதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட தரமான மற்றும் நிலையான சொத்துக்களை உருவாக்குதல்.

ஆ) ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் அடிப்படை வளத்தை உருவாக்குதல்.

இ) சமூகப் பங்களிப்பை உறுதி செய்ய திறம்பட செயலாற்றுதல்.

ஈ) ஊராட்சி அமைப்பு முறையை வலுப்படுத்துதல்.

தமிழ்நாட்டில், முதலில் இத்திட்டம் 6 மாவட்டங்களில் 2.2.2006ல் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

முக்கியச் சட்ட உரிமைகள்

 1. வேலை அட்டை (Job card) உரிமை
 2. வேலை கோரிய பதினைந்து தினங்களுக்குள் வேலை பெறுதலுக்கான உரிமை
 3. வேலைவாய்ப்பில்லா படி பெறுவதற்கான உரிமை
 4. 5 கி.மீக்குள் வேலை பெறுதலுக்கான உரிமை
 5. பணிதளத்தில் அத்தியாவசிய தேவைகள் பெறுவதற்கான உரிமை
 6. அறிவிக்கப்பட்ட ஊதியம் பெறுவதற்கான உரிமை
 7. பதினைந்து தினங்களுக்குள் ஊதியம் பெறுவதற்கான உரிமை

வழிமுறைகள்

 • திறன்சாரா உடல் உழைப்பு மேற்கொள்ள விருப்பம் உள்ள வயது வந்தோர், திறன்சாரா வேலையினை மேற்கொள்வதற்கான விருப்பத்தினை வாய் மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ, கிராம் ஊராட்சிக்கு தெரிவித்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.
 • ஊரக பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் வேலைக்கு விண்ணப்பித்து அவ்வேலையினை பெறும் பொருட்டு வேலை அட்டையினை பெற உரிமை பெற்றுள்ளது. ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒருமுறை புதிய வேலை அட்டை வழங்கப்படுகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் தினசரி வருகைப்பட்டியல் இருப்பு பதிவேடு மற்றும் வேலை அட்டை வழங்கும் இருப்பு பதிவேடு ஆகிய 2 பதிவேடுகள் உட்பட, 9 புதிய பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
 • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வேலை ஆரம்பித்து அடுத்த புதன்கிழமை வேலை முடிகிறது.
 • வேலை நடைபெறும் இடம் கிராமத்திலிருந்து 5 கி.மீ. தூரத்திற்கு மேல் இருக்கும் பட்சத்தில், போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரத் தொகையாக ஊதியத்தில் விழுக்காடு கூடுதலாக வழங்கப்படும். இருப்பினும் தமிழ்நாட்டில் வேலை நடைபெறும் இடம் 2 கி.மீ சுற்றளவிற்குள் இருக்குமாறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன

விலைப்பட்டியல்

திறன்சாரா தொழிலாளர்களுக்கான ஊதியம் ஊரக விலைப் பட்டியலின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின்படி திறன்சாரா தொழிலாளர்களுக்கான விலைப் பட்டியலின்படியான ஊதியமானது ஓர் வயது வந்த நபர் 1 மணி நேர உணவு இடைவேளையுடன் கூடிய 8 மணி நேர பணியில் பெறக்கூடிய (அதாவது 7 மணி நேர வேலை) ஊதியத்திற்கு சமமாக நிர்ணயிக்கப்படுகிறது.

 • மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு ஊரக விலைப்புள்ளி பட்டியல் தயாரித்து அரசாணை வெளியிடப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு நடவடிக்கைகள் அல்லது சிறப்பு விதிகள் மண் வேலை தொடர்பான பணிகளில் இருக்கவேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு கூடுதலாக வேலை வழங்கும் பொருட்டு, கிராம ஊராட்சியில் உள்ள குக்கிராமங்களை ஒரு தொகுப்பாக உருவாக்கி, கூடுதலாக பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
 • ஆண்கள் மற்றும் பெண்களுக்குச் சம அளவிலான ஊதியம் வழங்கப்படும்.
 • 2016-17ஆம் ஆண்டிற்கான அறிவிக்கப்பட்ட ஊதியம் நாளொன்றுக்கு ரூ.203 ஆகும். 2017-18 ஆம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்ட ஊதியம் 01.04.2017 லிருந்து ரூ.205 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • பணித்தளத்தில் குடிநீர், முதலுதவிப்பெட்டி, நிழற் கூடங்கள் போன்ற வசதிகள் செய்து தரப்படுகிறது.
 • வேலை நடைபெறும் அனைத்து இடங்களிலும் வேலையின் பெயர், அனுமதிக்கப்பட்ட தொகை, பணி நடைபெற்ற காலம் போன்ற விவரங்களுடன் குடிமக்களுக்கான தகவல் பலகை (Citizen Information Board) வைக்கப்படும்.
 • கிராம சபா கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அந்த கிராம ஊராட்சிகளில் எடுத்து செய்ய இருக்கும் பணிகளின் தொகுப்பு மற்றும் முன்னுரிமை அடிப்படையில் பணிகளை தேர்வு செய்வதற்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உரிமை உள்ளது.
 • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சமூகத் தணிக்கையினை, அதற்காக அமைக்கப்பட்டுள்ள "கிராம் சமூகத் தணிக்கையாளர்கள்” மூலம் கிராம் சபை மேற்கொள்கின்றது.
 • குறைகளை தீர்க்கும் வகையில் குறை தீர்க்கும் அமைப்பின் ஒரு பகுதியாக கட்டணம் இல்லாத் தொலைபேசி சேவை (Toll free Helpline) "1299” ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுகிறது.

அனுமதிக்கப்பட்ட பணிகள்

மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனுமதிக்கப்பட்ட பணிகளின் விவரம் பின்வருமாறு:

 • பொது உட்கட்டமைப்பு தொடர்புடைய பொதுப்பணிகள்
 • தேசிய பொது சொத்துக்களை ஊரக வாழ்வாதாரமாக உருவாக்குதல்.
 • நீராதாரங்களைப் பாதுகாத்தல்
 • கிணறுகள், தேசிய ஊரக மற்றும் நீர் சேகரிப்பு பண்ணைக் குட்டைகள், இதர நீராதாரப் இயக்கத்திற்கு இணக்கமான பணிகள்,
 • நீர் மேலாண்மைப் பணிகள்
 • நீர்ப்பாசனப் பணிகள்
 • மரக்கன்றுகள் நடுதல்
 • பயனற்ற நிலங்களை மேம்படுத்தி விவசாய நிலங்களாக மாற்றுதல் / சீரமைத்தல்
 • பொது இடங்களில் நில மேம்பாட்டு பணிகள்
 • மாநில அல்லது மத்திய அரசு திட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட வீடுகள் கட்டுவதற்கான திறன்சாரா பணிகள்
 • மாட்டுக் கொட்டகை, ஆட்டுக் கொட்டகை, கோழிக் கொட்டகை, பன்றிக் கொட்டகை, அமைத்தல், கால்நடைத் தீவனத் தொட்டிகளை அமைத்தல்.
 • ஊரக சுகாதார பணிகள்
 • சாலை வசதி இல்லாத ஊரகப் பகுதிகளில் இணைப்புச் சாலைகள் ஏற்படுத்துதல்
 • விளையாட்டு மைதானம் அமைத்தல்
 • பேரழிவினை தடுக்கும் ஆயத்தப்பணிகள்,
 • சாலைகளை சீரமைத்தல்
 • வெள்ளக்கட்டுப்பாடு மற்றும் தடுப்புபணிகள்
 • கிராம் ஊராட்சிக் கட்டிடங்கள் கட்டுதல், மகளிர் சுய உதவிக் குழு மற்றும் கூட்டமைப்பிற்கான கட்டிடங்கள் கட்டுதல், புயல் நிவாரணக் கூடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், கிராமங்களில் இடுகாடு மற்றும் சுடுகாட்டு கொட்டகைகளை ஊராட்சி மற்றும் வட்டார அளவில் கட்டுதல், உணவு சேமிப்பு கட்டிடங்கள் கட்டுதல் போன்ற பணிகள்

2016-17 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வறட்சியால் வறட்சி தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரக குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக வேலை நாட்கள் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்பட்டது.

2011-12 முதல் 2016-17 வரை உள்ள சாதனைகள்

2011-12 முதல் 2016-17 வரை இந்த அரசால் 211.85 கோடி மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டு நிதியளவில் ரூ.24006.33 கோடி ஊதியமாகவும் வழங்கப்பட்டுள்ளன.

பண்ணைக் குட்டைகள் அமைத்தல்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில், 8 டெல்டா மாவட்டங்களில், 15,000 பண்ணைக் குட்டைப் பணிகள் தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர், சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. இதன் முன்னேற்றத்தின் அடிப்படையில் டெல்டா மாவட்டங்களில் டெல்டா அல்லாத பகுதிகளிலும், டெல்டா அல்லாத 23 பிற மாவட்டங்களிலும், 50,000 பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிற துறைகளுடன் ஒருமுகப்படுத்துதல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை பிற துறைகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம் பல்வேறு வகையான சேவைகளை பெற இயலும். நில மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தனி நபர்கள் பண்ணைக் குட்டைகள் அமைத்தல், பட்டு வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் பட்டுப் பண்ணைகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்தல், மல்பெரி செடி வளர்த்தல் உள்ளிட்ட பணிகள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது.

குடியிருப்புகளுக்கான பிரத்யேக மரம் வளர்க்கும் திட்டத்தின் மூலம் 54,000 இந்திரா நினைவு குடியிருப்பு திட்டப் பயனாளிகள் மற்றும் 60,000 முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டப் பயனாளிகளின் வீடுகளில் ஒரு வீட்டிற்கு 4 மரக்கன்றுகள் வீதம் மொத்தம் 4.56 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஊரக விலைப்புள்ளி பட்டியல் (Rural Schedule of Rates)

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்படி தொழிலாளர்களுக்கான ஊதியம் அவர்கள் செய்கின்ற பணி அளவின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் எனில் ஒவ்வொரு ஆண்டும் மாநில வேலை உறுதி மன்றத்தினை கலந்தாலோசித்து பல்வேறு பணிகளுக்கு ஊரக விலைப் புள்ளி பட்டியல் நிர்ணயம் செய்து மாநில அரசு ஊதியம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஊரக விலைப் புள்ளி பட்டியல் சிறப்பு வகை வேலைகளுடன் நிர்ணயிக்கப்பட்டுள்ளதை பெரும்பாலான மற்ற மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன மற்றும் மத்திய அரசால் மாற்று திறனாளிகளுக்கு தனியாக ஊரக விலை புள்ளி பட்டியல் கொண்டுவரப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 83% தொழிலாளர்கள் பெண்கள் என்பதால், மண் எடுக்கும் உயரம் மற்றும் கொட்டும் தூரம் ஆகியவற்றினை கருத்தில் கொண்டும் புதிய ஊரக விலைப்புள்ளி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடின மண் உள்ள இடங்களில் செய்ய வேண்டிய மண் வேலையின் அளவு 57 கன அடியிலிருந்து 42 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, அரசாணையின்படி, ஒரு பணியாளர் 37 கன அடி மண் வேலை செய்தாலே முழு ஊதியம் பெற இயலும்.

கட்டிட பணிகள்

2015-16ம் ஆண்டில் 3890 கிராம ஊராட்சி சேவை மையங்கள், 7.50 லட்சம் தனி நபர் இல்லக் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 2016-17 ஆம் ஆண்டில் 7.50 இலட்சம் தனி நபர் இல்லக் கழிப்பறைகள், 1000 அங்கன்வாடி கட்டங்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்துடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை ஒருங்கிணைத்தல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்களாக ஈடுபடுத்தப்பட்டு 150 குடும்பங்களுக்கு ஒரு தூய்மைக் காவலர் வீதம் 100 நாட்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்படுவர். தூய்மைக் காவலர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்தல், பிரித்தல் மற்றும் கிடங்கில் சென்று கொட்டுதல் போன்ற திட கழிவு மேலாண்மை பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

2016-17ல் மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகள்

கிணறுகள்

விவசாயம் சார்ந்த பணிகளை ஊக்குவிக்க, தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர், சிறு மற்றும் குறு விவசாயிகளின் நிலங்களில் 250 தனிநபர் கிணறுகள் மற்றும் அரசு / பொது நிலங்களில் 250 குழு கிணறுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மண்புழு உர அலகு அமைத்தல்

மண்புழு உரம், உயிரி உரத்தினை உருவாக்கும் ஒரு முறையாகும். இந்த உயிர் உரம் பெருமளவு மரம் வளர்க்கும் திட்டத்திலும், ஊராட்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் மண்புழு உரம் தமிழக ஊரக வாழ்வாதார இயக்கத்தில் செயல்படும் மாவட்ட விநியோகம் மற்றும் விற்பனை சங்கத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாய் கிராம ஊராட்சி கணக்கில் வரவு வைக்கப்படும். மண்புழு உரமானது விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 2016-17ம் ஆண்டில் ஒரு வட்டாரத்திற்கு ஒன்று வீதம் 385 மண்புழு உர அலகுகள் அமைக்கப்பட்டுள்ளன.

வங்கிகள் மூலம் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குதல் / பொது நிதி மேலாண்மை மூலம் ஊதியம் வழங்குதல்

வங்கிகள் மூலம் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படாமலிருப்பதற்காக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு 01.04.2014 முதல் மின்னணு நிதி மேலாண்மை முறையின் கீழ் மட்டுமே வழங்கப்படுகிறது.

10.4.2015 முதல் வங்கி பரிமாற்றம் ஒற்றைக் கணக்கு முறையில் மாற்றம் செய்யப்பட்டு பொது நிதி மேலாண்மை முறை (PFMS) மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது. 07.11.2016 முதல் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பயனாளிகளுக்கு, தேசிய மின்னணு நிதி மேலாண்மை முறை (Ne-FMS) மூலம் நேரடியாக மத்திய அரசால் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ஊதியத்தொகை வரவு வைக்கப்படுகிறது.

தொழிலாளர்களின் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைத்தல்

ஆதார் எண்களை இணைப்பதன் மூலம் மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தகவல்தளம் சீராவதோடு தொழிலாளர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யப்படுவதை விரைவானதாகவும், வெளிப்படையானதாகவும் ஆக்குகிறது. இதுவரை மொத்தம் உள்ள 84.80 இலட்சம் தொழிலாளர்களில், 82.29 (97%) இலட்சம் தொழிலாளர்களின் ஆதார் எண்கள் வலைதளத்தில் இணைக்கப்பட்டு 56.10 இலட்சம் (66%) தொழிலாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த ஊதியம் செலுத்தும் முறையில் (Aadhar Based Payment System) ஊதியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சொத்துக்களுக்கு புவிக் குறியிடுதல் (Geo tagging) :

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் புவிசார் (Geo MGNREGA) குறிக்கோளானது, புவிசார் தகவல் மைய தீர்வை உருவாக்கி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துகளின் தகவல்களை காட்சிப்படுத்தி ஆராய்வதேயாகும். இதன் மூலம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இந்தியா "ஒருங்கிணைத்தல் மூலம் நிலைத்த வாழ்வாதாரத்தை ஏற்படுத்துதல்" என்கிற முயற்சிக்காக 2014-15 ம் ஆண்டில் தமிழ்நாடு தேசிய விருது பெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை செயல்படுத்துவதில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான முயற்சிகள் குறித்து நடத்தப்பட்ட கண்காட்சிக்கான தேசிய விருது தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட்டது.

மாவட்டம் மற்றும் கிராம ஊராட்சிகளுக்கான தேசிய விருதுகள்

ஒவ்வொரு ஆண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தேசிய அளவில் நன்றாக செயல்படும் மாவட்டங்கள் மற்றும் கிராம ஊராட்சிகள் மத்திய அரசால் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

மாவட்ட நீர்பாசன திட்டம் (District Irrigation Plan)

இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தின் முழுமையான பாசன வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும். மாவட்டத்தில் தற்போது முன்மொழியப்பட்ட நீர் வள, நீர் ஆதார் கட்டமைப்பு முறைகளை முழுமையாக உள்ளடக்கியதாகும்.

நீர் வள பாதுகாப்பு இயக்க வழிகாட்டுதலின்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வருடாந்திர திட்டம் / தொழிலாளர் வரவு செலவு ஒதுக்கீட்டை முறையாக மாவட்ட நீர்பாசன திட்டத்துடன் இணைத்து குறைந்தபட்சம் 65% மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இயற்கை வள மேலாண்மை பணிகளை (Natural Resources Management) அதிகமாக நீர் உறிஞ்சப்பட்ட மற்றும் மிக அதிகமாக நீராதாரம் உறிஞ்சப்பட்ட (Over exploited and critical) நிலையிலுள்ள 200 ஊராட்சி ஒன்றியங்களில் செலவினம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்படி 153 வகையான பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் 100 இயற்கை வள மேலாண்மை பணிகளில் 71 பணிகள் நீர் சம்மந்தப்பட்ட பணிகளாகும். மாவட்ட திட்டமிடல் குழு பொதுப்பணித்துறை, மத்திய நிலத்தடி நீர் வாரியம், விவசாயம், விவசாய பொறியியல் துறை, இந்திய தொழில் நுட்ப கல்லூரி, தமிழ்நாடு நீர் வடிகால் மேம்பாட்டு முகமை, விவசாய கல்லூரி (ம) பிற தொழில்நுட்ப கல்லூரிகள் (ம) மாவட்ட நீர் வள் பாசன முகமை உள்ளடங்கிய உறுப்பினர்களுடன் கலந்து ஆலாசனை செய்து அந்தந்த பகுதிக்கு தேவையான முன்னுரிமை பணிகளை தயாரித்துள்ளது.

சமூக தணிக்கை

சமூக தணிக்கை என்பது சமூக தணிக்கை அலுவலர்களின் வழிகாட்டுதலுடன் மக்களாலேயே செய்யப்படும் ஒரு முழுமையான தணிக்கை ஆகும். நிதி செலவினம் மட்டுமல்லாது, திட்டத்தின் செயல்முறை மற்றும் சமூக அம்சங்கள் பணித்திறன் ஆகிய கோணங்களிலிருந்தும் சமூக தணிக்கையின் போது ஆய்வு செய்யப்படுகிறது. சமூக தணிக்கை தகவல் தொடர்பு மற்றும் கல்விக்கான கருவியாக இருப்பதுடன் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமையை அமல்படுத்த உதவுகிறது. சமூக தணிக்கை வளர்ச்சித் திட்டங்களில் எல்லா நிலைகளிலும் (திட்டமிடுதல், வடிவமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல்) மக்களின் பங்கேற்பை அதிகப்படுத்த உதவும். சமூக தணிக்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஆறு மாதத்திற்கொருமுறை சமூக தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்

மேலும், மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்ட தணிக்கை விதிகள் 2011 மூலம் சமூக தணிக்கை நடைமுறைகளை நிர்ணயித்துள்ளது.

நிர்வாகம்: ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த கூடுதல் இயக்குநர் பதவி நிலையிலான இயக்குநர் அவர்களைக் கொண்டு சார்பற்ற தன்மையுடன் சமூக தணிக்கை அலகு ஒன்று 2013-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இயக்குநரது பணிகளில் உதவும் வகையில் ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த இரு இணை இயக்குநர்கள் மற்றும் ஒரு உதவி இயக்குநருடன் அலுவலகப் பணியாளரும் பணிபுரிகின்றனர். தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975-ன் கீழ் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி தமிழ்நாடு சமூக தணிக்கைச் சங்கம் பதிவு செய்யப்பட்டது.

திறன் வளர்த்தல்

தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கம், சமூக தணிக்கையின் முக்கியத்துவம், அவசியம் மற்றும் நடைமுறை ஆகியவை அனைத்தையும் உள்ளடக்கிய பயிற்சியினை இத்துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் மூன்று அடுக்குகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு அளித்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டு திட்டத்தின் பங்கேற்பாளர்கள் 24,874 நபர்களுக்கும் 2014-15 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் 92,109 நபர்களுக்கும், 5 கட்டங்களாக சமூக தணிக்கை பயிற்சி அளிக்கப்பட்டது. ஆக மொத்தம் 1,16,983 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி கையேடுகள்

சமூக தணிக்கை சங்கத்தின் மூலம் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி கையேடுகள் 2, கிராம ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சி கையேடு 1, கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான பயிற்சி கையேடு 1, கிராம் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான பயிற்சி கையேடு 1 மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களுக்கான பயிற்சி கையேடு 1 ஆகிய 6 வகையான பயிற்சி கையேடுகள் வெளியிடப்பட்டது. சமூக தணிக்கை குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

வள அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல்

வள அலுவலர்களின் திறமையினை மேம்படுத்தும் பொருட்டு 02.11.2016 முதல் நான்கு கட்டங்களாக சமூக பொறுப்புடைமை மற்றும் சமூக தணிக்கை தொடர்பாக 30 நாட்கள் பயிற்சி மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் மறைமலை நகர் மற்றும் மண்டல ஊரக வளர்ச்சி ஊராட்சி நிறுவனங்கள் எஸ்.வி.நகரம், பவானிசாகர், பட்டுக்கோட்டை மற்றும் தே.கல்லுப்பட்டி ஆகிய ஐந்து மையங்களில் 29 மாவட்ட வன அலுவலர்கள், 22 உதவி பணியாளர்கள் மற்றும் 647 வட்டார வள அலுவலர்கள் என மொத்தமாக 698 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சமூக தணிக்கை செயல்பாடுகள்

புதியதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட வள அலுவலர்கள் மற்றும் வட்டார வள அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக 24.01.2015 முதல் 07.03.2015 வரையிலான காலத்தில் 1,140 கிராம ஊராட்சிகளில் மாதிரி சமூக தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிறப்பு கிராம சபையிலேயே சமூக தணிக்கையில் கண்டறியப்படும் குறைபாடுகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுகிறது. மேலும் வட்டார அளவில் மற்றும் ஊராட்சி அளவில் பராமரிக்கப்படும் பதிவேடுகளின் பதிவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதோடு முக்கியத்துவத்தினையும் உணர வைக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்)

மத்திய அரசின் வீட்டு வசதி திட்டமான இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், 2016-2017 ஆம் ஆண்டு முதல் சீரமைக்கப்பட்டு பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொருத்தமான மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பயனாளிகளால் தரமான மற்றும் பேரிடர்களைத் தாங்கக் கூடிய வீடுகள் கட்டுவதை நோக்கமாகக் கொண்ட திட்டம் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்) ஆகும். சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியல் 2011-ன் அடிப்படையில் கிராம சபை மூலம் பயனாளிகளைக் கண்டறிந்து, பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் (ஊரகம்) கீழ் மொத்த ஒதுக்கீட்டில் 60 விழுக்காடு ஆதிதிராவிடர்கள் / பழங்குடியினர் வகுப்பினருக்கும், 40 விழுக்காடு இதர வகுப்பினருக்கும் (சிறுபான்மையின் வகுப்பினர் உட்பட) ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மேற்கண்ட இரு இனங்களில் 3 விழுக்காடானது, மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு வீடும் 269 சதுர அடி பரப்பளவில் கட்டப்படுகிறது.

ஒரு வீட்டிற்கான மத்திய அரசின் அலகுத் தொகை ரூ.1.20 இலட்சம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி பங்கீடு 60:40 என்ற விகிதத்தில் உள்ளது (மத்திய அரசு ரூ.72,000 மற்றும் மாநில அரசு ரூ.48,000). தமிழக அரசு, கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்காக அலகுத் தொகையை விட ரூ.50,000 கூடுதல் நிதியாக மாநில நிதியிலிருந்து வழங்குகிறது. எனவே தமிழ்நாட்டில் 2016-17 ஆம் ஆண்டிற்கு பிரதம மந்திரி குடியிருப்புத் திட்ட (ஊரகம்) த்தின் கீழ் ஒரு வீட்டின் மொத்த அலகுத் தொகை ரூ.1.70 இலட்சம் ஆகும். அலகுத் தொகையுடன் கூடுதலாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளிக்கும் தினக்கூலி அடிப்படையில் வீடு கட்டுவதற்காக 90 மனித நாட்களுக்கான ஊதியம் அளிக்கப்படுகிறது.

மேலும், பயனாளிக்கு தனி நபர் இல்லக் கழிப்பறை கட்ட ரூ.12,000 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துடன் ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது. 2015-16 ஆம் ஆண்டு முதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை பொது நிதி மேலாண்மை முறையின் (PEMS) மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படுகிறது. பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் (ஊரகம்) கீழ் பயனாளிகளிடமிருந்து பெறப்படும் புகார்களை பரிசீலனை செய்து, பயனாளிகளின் பெயர்களை பயனாளிகள் பட்டியலில் சேர்க்கவும் நீக்கவும் மற்றும் தீர்வு செய்யவும் ஒரு குறை தீர்க்கும் அமைப்பாக மேல்முறையீட்டு, குழு மாவட்ட அளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் (ஊரகம்) கீழ் 2016-17 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு மத்திய அரசால் 1,31,831 வீடுகள் கட்ட முதலில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் 45,507 வீடுகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே, 2016-17-ஆம் ஆண்டிற்கு 1,76,338 வீடுகள் என ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு, ரூ.2,997.75 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டன. 2017-18 ஆம் நிதியாண்டில், 1,30,214 வீடுகள், ரூ.2213.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளன.

பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம்

பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம், 500-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இணைப்புச்சாலை வசதி இல்லாத குக்கிராமங்களுக்கு அனைத்துப் பருவகாலங்களிலும் பயன்படுத்தத் தக்க வகையில் சாலை இணைப்பு வசதியினை ஏற்படுத்தித் தருவதற்காக 2000-ம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. 2015-16-ம் ஆண்டு முதல் பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் 60% மத்திய அரசு நிதி மற்றும் 40% மாநில அரசு நிதி பங்களிப்பின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம்

ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதில் உள்ள இடைவெளியினை நிரப்புதல் என்பதே இதன் நோக்கமாகும். இத்திட்டத்திற்கான நிதியை 2011-12-ம் ஆண்டு முதல் ரூ.5 கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தமிழ்நாட்டில், இத்திட்ட செயலாக்கத்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையே தொடர்பு துறை ஆகும். மாவட்ட ஆட்சித் தலைவர் பணிகளுக்கான நிர்வாக அனுமதி வழங்குவார். இத்திட்டத்தின் கீழ் எடுத்துச் செய்யக்கூடிய பணிகள் குறித்த விளக்கப் பட்டியலும், தடை செய்யப்பட்ட பணிகள் குறித்தும் வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து வகையான பராமரிப்பு பணிகளும் தடை செய்யப்பட்டுள்ளன. குளங்கள், குட்டைகள், ஆறுகள், வாய்க்கால் தூர் வாருதல் போன்ற பணிகள் பராமரிப்பு பணிகளாக கருதப்பட்டு இத்திட்டத்தின் கீழ் எடுத்து செய்ய இயலாது.

2016-17ம் ஆண்டில், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 295 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் கீழ்க்காணும் விவரப்படி செயல்படுத்தப்பட்டுள்ளன.

பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் பகுதி VIII முதல் X வரை (2012-13 முதல் 2016-17 வரை)

கடந்த 2012-13-ம் ஆண்டிற்குப் பிறகு, மொத்தம் 5,409.17 கி.மீ. நீளமுள்ள கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள், இதர மாவட்ட சாலைகள் மற்றும் 73 பாலங்கள் ரூ.2241.81 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்ய எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் ரூ.755.89 கோடி மாநில அரசின் பங்குத் தொகையும் அடங்கும்.

பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் II

மத்திய அரசு, பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் - II-ஐ 2013ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி, விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம்-II, தற்போதுள்ள ஊரகச் சாலைகள் தொகுப்பினை வலுப்படுத்துவதன் வாயிலாக, பொதுமக்கள், சரக்கு மற்றும் சேவைகளுக்கான போக்குவரத்து வசதி அளிப்பதில் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்த வழிவகுக்கிறது.

பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் - II-ன் குறிக்கோள், முக்கிய வழித்தடங்கள் (Through Routes) மற்றும் பிரதான ஊரக இணைப்புகள் (Major Rural Links) ஆகியவற்றினை, அவற்றின் பயன்பாட்டின் அடிப்படையிலும், ஊரகச் சந்தைகள் மற்றும் ஊரக மையங்களின் வளர்ச்சியில் அவை ஆற்றும் பங்கின் அடிப்படையிலும் மேம்பாடு செய்ய எடுத்துக் கொள்வதே ஆகும்.

பிரதம மந்திரி கிராம் சாலைத் திட்டம் -II-ன் வழிகாட்டி நெறிமுறைகளின்படி, பிரதம மந்திரி கிராம் சாலைத் திட்டம் - 1-ல் இணைப்புச் சாலைகள் 100%-மும் மற்றும் சாலை மேம்பாடு பணிகள் 75%-மும் மேற்கொண்ட மாநிலங்கள் பிரதம மந்திரி கிராம் சாலைத் திட்டம் - II-ற்கு தகுதி பெறுகின்றன. மேற்குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்ததன் காரணமாக தமிழ்நாடு பிரதம மந்திரி கிராம் சாலைத் திட்டம்-II-ன்கீழ் சாலைப் பணிகள் மேற்கொள்ள தகுதி பெற்றுள்ளது.

பிரதம மந்திரி கிராம் சாலைத் திட்டம் -II-ன் வழிகாட்டி நெறிமுறைகளின் படி, இத்திட்டத்தின் கீழ் முன்மொழிவுகள் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மாவட்ட ஊரகச் சாலைகள் திட்டத்தின் (DRRP) மூலமாகவே மேற்கொள்ளவேண்டும். அதற்கிணங்க, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்ட ஊரகச் சாலைகள் (DRRP) திட்டம், விரிவான மேம்பாடு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட முன்னுரிமைப் பட்டியல் (CUCPL) ஆகியவற்றை, தமிழ்நாடு அரசு, தயாரித்துள்ளது. இந்த DRRP மற்றும் CUCPL-க்கு மாநில அளவிலான நிலைக்குழுவினால் (SLSC) 13.3.2017ல் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாடு மற்றும் பாலங்கள் கட்டும் பணிகளுக்கு பிரேரணை மத்திய அரசிற்கு சமர்ப்பித்துள்ளது.

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)

சுகாதாரம் மற்றும் சுத்தமான சுற்றுச் சூழல் ஆகியவை வளர்ச்சிக்கு உதவும் முக்கிய குறியீடாக கருதப்படுவதால், முழு சுகாதார திட்டம் 1999ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 2012க்குள் அனைத்து வீடுகளுக்கும் தனிநபர் இல்லக் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளினை அடைய இத்திட்டம் 2004க்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.

இத்திட்டமானது, 1.4.2012 முதல், 'நிர்மல் பாரத் அபியான்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டு மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டுவதற்காக வழங்கப்படும் ஊக்கத் தொகை, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்கள் மட்டுமல்லாமல் வறுமைக்கோட்டிற்கு மேலுள்ள குடும்பங்களில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறு மற்றும் குறு விவசாயிகள், வீடு உள்ள ஆனால் நிலமற்ற விவசாய உழைப்பாளிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் தலைமையில் செயல்படும் குடும்பங்களுக்கு மட்டும் விரிவுபடுத்தப்பட்டது.

மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளில் அவருக்குப் பொருத்தமான அஞ்சலி செய்யும் வகையில் மத்திய அரசால் 2014ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2ம் நாள் முதல், "தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)” தொடங்கப்பட்டு, அனைவருக்குமான சுகாதார வசதிகள் முழுமையாக அடைவதன் மூலம் 2019 ஆம் ஆண்டிற்குள்ளாக தூய்மை பாரதம் என்ற நிலையை எய்தும் வகையில் அனைத்து முயற்சிகளும் முடுக்கிவிடப்பட்டது.

தூய்மை பாரத இயக்கத்தின் (ஊரகம்) முக்கிய நோக்கங்கள்

 • திறந்த வெளியில் மலம் கழித்தலை ஒழித்து, ஊரகப்பகுதிகளில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தி, பொதுவான வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றம் அடைய செய்தல்.
 • சுகாதார கல்வி மற்றும் விழிப்புணர்வு மூலம் ஊராட்சி அமைப்புகள் மற்றும் சமூகங்களுக்கிடையே ஆர்வத்தை தூண்டி, சுகாதார வசதிகள் மற்றும் நிலையான சுகாதாரப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்திட செய்தல்.
 • நிலையான சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான வகையில், சிக்கனமான மற்றும் பொருத்தமான தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல்.
 • ஊரகப் பகுதியில் ஒட்டுமொத்த சுகாதாரத்தினை ஏற்படுத்த அறிவியல் பூர்வமான திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை முறைகளை, தேவையான இடங்களில் சமூகத்தால் நிர்வகிக்கப்படும் வகையில் ஏற்படுத்துதல்.

தூய்மை பாரத இயக்கத்தின் (ஊரகம்) கூறுகள்

தனிநபர் இல்லக் கழிப்பறை, சமூக சுகாதார வளாகம், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைத் திட்டம் ஆகியவை தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் முக்கிய கூறுகளாகும். தனி நபர் இல்லக் கழிப்பறை முறையாக முடிக்கப்பட்ட தனிநபர் இல்ல சுகாதார கழிப்பறையானது, அடித்தள கட்டுமானம், மேல்தளக் கட்டுமானம் மற்றும் தண்ணீர் வசதி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். அனைத்து ஊரக குடும்பங்களும் கழிப்பறை வசதி பெறுவதை உறுதி செய்வதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும்.

தூய்மை பாரத இயக்கத்தின் (ஊரகம்) கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு தனி நபர் இல்லக் கழிப்பறை கட்ட ரூ. 12,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்த தொகை 2015-16 ஆண்டு முதல் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்குத் தொகையினை 60:40 என்ற விகிதத்தில் அதாவது மத்திய அரசு ரூ. 7,200 மற்றும் மாநில அரசு ரூ. 4,800 ஆக மாற்றியமைத்துள்ளது.

2013-14 முதல் 2016-17ம் ஆண்டு வரை, 27.48 இலட்சம் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இத்திட்டம் 2017-18ம் ஆண்டில், தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழும், தனிநபர் இல்லக் கழிப்பறைப் பணிகள், 2017-18ம் ஆண்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை

தூய்மை பாரத இயக்கத்தின் (ஊரகம்) கீழ், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைத் திட்ட செயலாக்கத்திற்கான மொத்த உதவித் தொகை ஒவ்வொரு கிராம ஊராட்சியின் மொத்த தனிநபர் இல்லங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கணக்கிடப்படும்.

சமூக சுகாதார வளாகங்கள்

போதிய எண்ணிக்கையிலான கழிப்பறைகள், குளியலறைகள், துணி துவைக்கும் மேடைகள், கை கழுவுவதற்கான வசதி மற்றும் இதர வசதிகளை உள்ளடக்கிய சமூக சுகாதார வளாகங்கள் கிராம மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய மற்றும் எளிதில் அணுகக் கூடிய இடத்தில் இத்திட்டத்தின் கீழ் அமைக்கலாம். ஒவ்வொரு சமூக சுகாதார வளாகம் அமைப்பதற்கு நிதி உதவி அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை, மத்திய அரசு, மாநில அரசு மற்றும் சமுதாயப் பங்குத் தொகை 60:30:10 என்ற விகிதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

தேசிய ரூர்பன் இயக்கம் (National Rurban Mission)

கிராமத் தொகுப்புகளை உருவாக்கி, அதில் பொருளாதார, சமூக மற்றும் அடிப்படை வசதிகளையும், நகர்புறங்களுக்கு இணையான வளர்ச்சியையும் ஏற்படுத்த "தேசிய ரூர்பன் இயக்கம்" (National Rurban Mission) என்ற திட்டம் மத்திய அரசால் 16.09.2015 அன்று துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கிராமங்களில் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தி சமூக, பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி சரியான திட்ட வடிவமைப்புடன் கூடிய "ரூர்பன் தொகுப்பினை உருவாக்குவதாகும்.

ரூர்பன் தொகுப்பினை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்

தேசிய ரூர்பன் இயக்க வழிக்காட்டுதலின்படி "ரூர்பன் தொகுப்பு” என்பது பூகோள அடிப்படையில் தொடர்ச்சியான நிலப்பரப்பில் உள்ள ஊராட்சிகளில் 25000 முதல் 50000 வரை மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளின் தொகுப்பாகும்.

தேசிய ரூர்பன் இயக்க திட்டத்தின்படி பழங்குடியினர் தொகுப்பு மற்றும் பழங்குடியினர் அல்லாத தொகுப்பு என இரண்டு பிரிவுகளில் ரூர்பன் தொகுப்புகள் உள்ளன. தமிழ் நாட்டிற்கு பழங்குடியினர் அல்லாத தொகுப்புகளை தேர்வு செய்ய புதுடெல்லி, ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் ரூர்பன் தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய அரசு முதற்கட்டமாக 5 தொகுப்புகளை (Cluster) உருவாக்கிட அனுமதி வழங்கி உள்ளது. அவைகள் திருவள்ளூர் மாவட்டம் (குத்தம்பாக்கம்), சிவகங்கை மாவட்டம் (வாணியன்குடி), திருப்பூர் மாவட்டம் (வேலாயுதம்பாளையம்), கோயம்புத்தூர் மாவட்டம் (மதுக்கரை) மற்றும் திருநெல்வேலி மாவட்டம் (சுத்தமல்லி) ஆகும். மேலும் தேசிய ரூர்பன் இயக்கம் இரண்டாம் கட்டமாக, தமிழ்நாட்டிற்கு காஞ்சிபுரம் மாவட்டம் (சிங்கபெருமாள் கோவில்), மதுரை மாவட்டம் (கோவில்பாப்பாக்குடி) மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் (திருமலை சமுத்திரம்) என மூன்று தொகுப்புகளுக்கு மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாநில அளவிலான அதிகாரக் குழு அமைத்தல்

மத்திய அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி மாநில அளவிலான அதிகாரக் குழு அமைக்கப்பட்டு அரசாணை எண் 14 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ம.அ.தி -2) துறை நாள் 30.01.2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலான குழு அமைத்தல்

ரூர்பன் இயக்க திட்ட செயல்பாடுகளை செயல்படுத்த மாவட்ட திட்ட நிர்வாக அலகு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராக கொண்ட மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான குழு திருவள்ளூர், சிவகங்கை, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி தேசிய ரூர்பன் இயக்க மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது, திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் முக்கிய மாவட்ட அளவிலான அலுவலர்களை உள்ளடக்கியதாகும்.

ஒருங்கிணைந்த தொகுப்பு செயல் திட்டம்

இத்திட்டத்திற்கான இடைநிரவல் நிரப்பு நிதி (Critical Gap Fund) மற்றும் மத்திய, மாநில அரசு திட்டங்களின் நிதியினை ஒருமுகப்படுத்தி (Convergence) ஒருங்கிணைந்த தொகுப்பு செயல்திட்டத்திற்கு (ICAP) திருவள்ளூர், சிவகங்கை, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களால் ஒப்புதளிக்கப்பட்டுள்ளது. 27.09.2016 அன்று நடைபெற்ற தேசிய அளவிலான அதிகாரக் குழு கூட்டத்தில் 5 ஒருங்கிணைந்த தொகுப்பு செயல் திட்டத்திற்கு மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டது. மேலும், மாநில அளவிலான அதிகாரக் குழு, ஒருங்கிணைந்த தொகுப்பு செயல் திட்டம் மற்றும் விரிவான திட்ட அறிக்கை ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

நிதி செயல்பாடு

ஒரு தொகுப்பிற்கு தேவையான நிதிகள், மாநில மற்றும் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மூலம் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளவும், மீதமுள்ள பணிகளை நிறைவேற்றிட இடைநிரவல் நிரப்பு நிதியினை மத்திய அரசு வழங்குகிறது. இடைநிரவல் நிரப்பு நிதி திட்ட மதிப்பீடு செலவில் 30 சதவீதம் அல்லது ரூபாய் 30 கோடி இவற்றில் எது குறைவோ அத்தொகை ஒவ்வொரு தொகுப்புகளுக்கும் வழங்கப்படுகிறது.

தேசிய ரூர்பன் இயக்கத்தின் இடைநிரவல் நிரப்பு நிதி (Critical Gap Fund) பகிர்வானது மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் பங்கு 40 சதவீதம் என்ற விகிதாச்சார அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட 5 தொகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த தொகுப்பு செயல்திட்டம் தயாரிக்க ரூபாய் 1.75 கோடியும், நிலை 2 ன் கீழ் அனுமதிக்கப்பட்ட மூன்று தொகுப்புகளுக்கு ரூபாய் 1.05 கோடியும் ஒரு தொகுப்பிற்கு ரூபாய் 35 இலட்சம் வீதம் மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேசிய ரூர்பன் இயக்கத் திட்ட செயல்பாட்டு ஆண்டான மூன்றாண்டுகளுக்கு (2016-2017, 2017-2018 மற்றும் 2018-2019) கீழ்க்கண்டவாறு நிதி விடுவிக்கப்படும். 2016-2017 ம் ஆண்டிற்கு இடைநிரவல் நிரப்பு நிதியின் கீழ் மத்திய அரசின் 60 சதவீதம் பங்குதொகையாக ரூபாய் 27 கோடி மாநில அரசுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் 40 சதவீத பங்குதொகையான ரூபாய் 18 கோடி மற்றும் மத்திய அரசின் நிதி ரூ. 27 கோடியுடன் ஆக கூடுதலாக ரூ.45 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசு திட்டங்களின் ஒருங்கிணைப்பு நிதி மற்றும் இடைநிரவல் நிரப்பு நிதியின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள், பொருளாதார மேம்பாட்டுடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி, வேளாண்மை தொடர்பான திட்டப்பணிகள், கல்வி, சுகாதாரம், குடிநீர், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, கிராம தெருக்கள் மற்றும் வடிகால், தெரு விளக்கு, சாலை வசதிகள், போக்குவரத்து, சமையல் எரிவாயு இணைப்பு, டிஜிட்டல் எழுத்தறிவு மற்றும் மக்கள் சேவை மையம் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமத் திட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமத் திட்டம் 11.10.2014ல் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் www.saanjhi.gov.in வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் கிராமங்களில் அனைத்து துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து, ஒருமுகப்படுத்தி, மாதிரி கிராமங்களில் செயல்படுத்தி அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கிராம ஊராட்சியே இத்திட்ட செயலாக்கத்தின் அடிப்படை அலகாகும். சமவெளிப்பகுதிகளில் மக்கள் தொகை 3000 முதல் 5000 வரையும், மலைப்பகுதி மற்றும் பழங்குடி கிராமங்கள் எனில் மக்கள் தொகை 1000 முதல் 3000 வரையும் உள்ள கிராம் ஊராட்சியை ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தேர்ந்தெடுக்க வேண்டும். மாவட்டங்களில் இந்த அலகு அளவுக்கு மக்கள் தொகை கிடைக்கவில்லை என்றால் ஏறக்குறைய இதே அளவுக்கு மக்கள் தொகை உள்ள கிராம் ஊராட்சிகளை தேர்வு செய்யலாம். நாடாளுமன்ற உறுப்பினர் தனது (அ) தனது மனைவியின் / கணவனின் சொந்த கிராமத்தை தவிர்த்து இதர கிராமங்களிலிருந்து மாதிரி கிராமமாக உருவாக்க வேண்டிய கிராம ஊராட்சியை தங்கள் விருப்பப்படி கண்டறியலாம். மக்களவை உறுப்பினர் தனது தொகுதிக்குள்ளும், மாநிலங்களவை உறுப்பினர் தனது மாநிலத்திற்குள்ளும், நியமன உறுப்பினர் இந்திய அளவில் எந்த ஒரு மாநிலத்திலும், ஒரு கிராமத்தை தேர்ந்தெடுக்கலாம். நகர்ப்புற தொகுதியை பொறுத்தவரையில் கிராம ஊராட்சிகள் இல்லையெனில் சம்பந்தப்பட்ட மக்களவை உறுப்பினர் அருகிலுள்ள ஊரகத் தொகுதியிலிருந்து கிராமத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் மாதிரி கிராமமாக உருவாக்க வேண்டிய ஒரு கிராம ஊராட்சியை உடனடியாகவும் மற்ற இரண்டு கிராம ஊராட்சிகளை பின்னரும் தெரிவு செய்ய வேண்டும். முக்கியமாக, 2019 மார்ச் மாதத்திற்குள் மூன்று மாதிரி கிராமங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறாக 2024-க்குள் 5 மாதிரி கிராம ஊராட்சிகளை (ஆண்டிற்கு ஒன்று வீதம்) தேர்வு செய்து மேம்படுத்த வேண்டும்.

அரசு தலைமை செயலாளரின் தலைமையிலான உறுப்பினர்கள் அடங்கிய மாநில அளவிலான அதிகாரம் அளிக்கப்பட்ட குழு அரசாணை நிலை எண்.23, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ம.அதி 2) துறை நாள் 13.02.2015ன்படி அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி கிராமங்களில் பல்வேறு துறைகளின் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு என தனியாக நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. மேலும், புதிய உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமானம் தொடர்புடைய திட்டங்களும் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து வளங்களும் ஒரே இலக்கினை நோக்கி ஒருங்கிணைந்த வகையில் அதிகபட்ச பயன்களை தரும் வகையில் உபயோகிக்கப்பட வேண்டும். மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் தொடர்புடைய அமைச்சகம், மத்திய அரசுத் துறைகள் / மத்திய அரசு நிதிப் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்களில் மாதிரி கிராங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளில் தகுந்த மாற்றங்கள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் அதிகபட்ச பலன்களை அடைய மாநில அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும்.

தேசிய கரிமவாயு மற்றும் உர மேலாண்மைத் திட்டம் (NBMMP)

மத்திய அரசினால் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் நோக்கம், இயற்கை கழிவுகளை பயன்படுத்தி, புதுப்பிக்கவல்ல எரிசக்தியாக மாற்றம் செய்து திறம்பட பயன்படுத்துவதே ஆகும்.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்

 • ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள இல்லங்களில் இயற்கை கழிவுகளை மாசற்ற எரிபொருளை உருவாக்கிட, முக்கியமாக சமையல் செய்வதற்கு கரிமவாயு எரி கலன்கள் அமைத்தல்.
 • ஊரக பகுதிகளில் உள்ள மகளிர், காடுகளுக்கு சென்று எதிர்கொள்ளும் கடினமான சுமையை குறைத்து சமூக நன்மைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்.
 • கிராமப் புற பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்திட கழிவறைகளுடன் கூடிய கரிம வாயு கலன்கள் அமைத்தல்.
 • மேம்படுத்தப்பட்ட உயிர் செரிமானம் மூலம் (திட திரவ நிலையில் மற்றும் உலர்த்தப்பட்ட) இரசாயன உரங்களை செறிவூட்டல் / அல்லது அவற்றுக்கு இணையாக இரசாயன உரங்களைப் பயன்படுத்தும் அளவினை குறைத்தல் / உயிர் செரிமானக் குழம்பினை செறிவூட்டும் அலகான மண்புழு உரம் அலகுகளுடன் இணைத்தல்.
 • திட்ட குழுவின் ஒருங்கிணைந்த ஆற்றல் கொள்கை அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு சமைப்பதற்கான உயிர்சக்தி ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்தல்.

இத்திட்டம் 100 விழுக்காடு மத்திய அரசு மானியத்துடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஆதாரம் : ஊரக மற்றும் உள்ளாட்சித்துறை, தமிழ்நாடு அரசு

2.93103448276
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
மணிவண்ணன் Aug 18, 2019 11:02 AM

இத்திட்டத்தை விவசாய பணி செய்ய ராஜஸ்தான், கேரளா போன்ற மாநிலங்கள்அரசாணை பிறப்பித்து அங்கு இத்திட்டத்தின் மூலம் விசாயமும் விவசாயியும் அதிகளவில் பயன் பெறுகின்றனர் இத்திட்டத்தை தமிழத்தில் அமுல் படுத்த அரசு மனு அளிக்க உள்ளேன் எனவே அந்த அரசாணை தாங்கள் யாராவது நெட்டில் எடுத்து கொடுத்தாலும் சரி எப்படி பெறுவது என்பதை சொன்னாலும் சரி தொடர்பு எண்-90 47 39 20 30

இராஜேஷ் Apr 22, 2019 11:00 AM

புதிய நபரை எப்படி இணைப்பது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top