பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / கொள்கை விளக்கக் குறிப்பு / ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் திட்டங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் திட்டங்கள்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள் மற்றும் பிற திட்டங்கள் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

அண்மைக்கால கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7.21 கோடியாகும். அதில் ஆதி திராவிடர் இன மக்கள் 1.44 கோடியும் (20.01%) பழங்குடியினர் மக்கள் 7.95 இலட்சமும் (1.10%) இருக்கின்றனர். இவ்வின மக்கள் சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தினபடி கருதப்படுகிறார்கள். எல்லா வகையிலும், இவ்வின மக்களை மேம்படுத்துவதே இத்துறையின் குறிக்கோளாகும். தமிழ்நாடு அரசின் முற்போக்கான கொள்கைகளாகிய சமுதாய முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, கல்வி அறிவை உயர்த்துதல் மற்றும் மனித வளத்தை மேம்படுத்துதல் போன்றவற்றை செயல்படுத்தி அவற்றை அடையும் வகையில் கொள்கைகளை வகுத்தல், திட்டங்களை தீட்டுதல் மற்றும் ஒருங்கிணைத்து செம்மையாக செயல்படுத்துதல் போன்றவை இத்துறையின் பொறுப்பாகும். இதன் மூலம் இவ்வின மக்களை சமூகத்தில் உயர்ந்தவர்களாகவும் அவர்களுக்கு நிரந்தர மேம்பாட்டை உறுதி செய்கின்ற வகையில், இத்துறை செயல்படுகிறது.

கல்வி

தமிழ்நாட்டில் அண்மைக்கால மக்கள் தொகையின்படி இவ்வின மக்களில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் விவரம் (விழுக்காடு)

விவரம்

ஆண்கள்

பெண்கள்

மொத்தம்

மொத்த மக்கள்

86.77

73.44

80.09

ஆதி திராவிடர்

80.94

65.64

73.26

பழங்குடியினர்

61.81

46.80

54.34

இத்துறை பள்ளிகள் மற்றும் மாணாக்கர்களின் விவரம்

வ. எண்.

விவரம்

எண்ணிக்கை

மாணாக்கர்களின் எண்ணிக்கை

1

ஆதி திராவிடர் நலப் பள்ளிகள்

1,134

1,06,390

2

அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள்

314

27,652

மொத்தம்

1,448

1,34,042

ஆதி திராவிடர் நலன் - கல்வி உதவித்தொகைகள்

(அ) போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை

இத்துறையின் வாயிலாக கல்வி உதவித்தொகை பெறும் மாணாக்கர்கள் பதினொன்றாம் வகுப்பு முதல் உயர் படிப்பினை தொடர்ந்து படித்தால், மேற்கண்ட கல்வி உதவித்தொகை அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வருட வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மேற்படாமல் இருப்பின் வழங்கப்படுகிறது. வெளியில் தங்கி கல்வி நிலையங்களில் படிக்கின்றவர்களுக்கு மாதம் தோறும் குறைந்தபட்சம் ரூ.230/- உம் அதிக பட்சம் ரூ.550/- உம் வழங்கப்படுகிறது. விடுதியில் தங்கி கல்வி நிலையங்களில் படிப்போர்க்கு குறைந்த பட்சம் மாதம் ரூ.380/- உம் அதிக பட்சமாக ரூ.1200/-உம் அவர்களின் பாடத்திட்டத்திற்கு ஏற்ப பராமரிப்புப்படி மாணாக்கர்களின் கணக்கில் அரசால் வரவு வைக்கப்படுகிறது.

மேலும், மேற்கண்ட மாணாக்கர்களுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய மற்றும் திரும்ப வழங்கப்படாத கட்டணங்கள் உதவித்தொகையாக நிறுவனங்களின் கணக்கில் அரசால் வரவு வைக்கப்படுகின்றன. சுயநிதி கல்வி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்களுக்கும் உதவித்தொகை அவர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. மேலும், கல்விக் கட்டணம் கல்வி நிலையங்களின் கணக்குகளில் அரசால் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. பராமரிப்புப்படி மாணாக்கர்களின் பாடப்பிரிவிற்கு தகுந்தார்போல் அவர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. தொழிற்பயிற்சி கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணாக்கர்களுக்கும் இந்த கல்வி உதவித்தொகை அவர்களின் கணக்குகளிலும், நிறுவனங்களின் கணக்குகளிலும் நேரடியாக இயக்குநரால் செலுத்தப்படுகிறது.

(ஆ) மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை

மதம் மாறிய கிறித்துவ மாணாக்கர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வருட வருமானம் ரூ.2 இலட்சத்திற்கு மிகாமல் இருப்பின், அவர்களின் வங்கி கணக்குகளிலும், கல்வி நிலையங்களின் கணக்குகளிலும், இயக்குநரால் விடுவிக்கப்படுகிறது. வெளியில் தங்கி படிக்கின்ற மாணாக்கர்களுக்கு மாதம் ரூ.100/- முதல் ரூ.175/- வரையிலும் செலுத்தப்படுகிறது. விடுதியில் தங்கிப் படிக்கும் மாணாக்கர்களுக்கு ரூ.175/- முதல் ரூ.350/- வரையிலும், அவர்களின் பாடப்பிரிவுக்கு ஏற்றார் போல் பராமரிப்புப்படியாக செலுத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் படிப்பைத் தொடரும் மாணாக்கர்கள் செலுத்த வேண்டிய மற்றும் திரும்பப் பெறப்படாத கட்டணங்கள் கல்வி நிலையங்களின் கணக்குகளில் இயக்குநரால் செலுத்தப்படுகிறது. சுயநிதி கல்லுாரிகளுக்கும் மேற்கண்டவாறு பராமரிப்புப்படி மாணாக்கர்களின் வங்கிக் கணக்கிற்கும், கல்லூரி கல்லுாரி கட்டணம் நிறுவனங்களின் கணக்கிற்கும் அனுப்பப்படுகின்றன.

(இ) மைய அரசின் ப்ரிமெட்ரிக் உதவித்தொகை

(i) மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிவோரின் குழந்தைகள் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பல்வேறு வகையான பள்ளிகளில் சேர்ந்து படிப்பவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதர பணிகளாகிய தோல் பதனிடுதல், தோல் உரித்தல், கழிவு பொருட்களிலிருந்து தரமான பொருட்களை பிரித்து சேகரிப்பவர்கள், கழிவு நீரை அகற்றுவோர்கள், ஆகியோரின் குழந்தைகளும் இந்த கல்வி உதவித்தொகையை கல்வி நிலையங்களின் வாயிலாக பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவர்.

உதவித்தொகை

  • வெளியில் தங்கி படிக்கும் மாணாக்கர்களுக்கு மாதம் ரூ.110/-உம்
  • விடுதியில் தங்கி படிப்போர்களுக்கு மாதம் ரூ.700/-உம் மாணாக்கர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது.

தனி மானியம்

  • வெளியில் தங்கி படிப்போர்களுக்கு வருடம் தோறும் ரூ.750/- உம்
  • விடுதியில் தங்கி படிப்போர்க்கு வருடம் தோறும் ரூ.1000/-உம்

மாணாக்கர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது

(ii) அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.2 இலட்சத்திற்கு மிகாமல் இருப்பின், கீழ்க்கண்டவாறு உதவித்தொகை அவர்களின் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.

உதவித்தொகை

வெளியிலிருந்து பயில்பவர்கள்

(ரூ.)

விடுதியில்தங்கிப் பயில்பவர்கள்

(ரூ.)

பராமரிப்புப் படி

1500

3500

தனி மானியம்

750

1000

2250

4500

(ஈ) மாநில அரசின் உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை

கல்வி நிலையங்களுக்கு சொந்தமான விடுதிகளில் தங்கி இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பல்தொழில் நுட்பப்படிப்பு படிக்கும் மாணாக்கர்களுக்கு வருடம் தோறும் ரூ.7500/- உம் தொழில் படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு ரூ.8000/- உம் சிறப்பு உதவித்தொகை அவர்களின் கணக்குகளில் செலுத்தப்படுகிறது. பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வருட வருமானம் ரூ.2 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

(உ) வெளிநாட்டில் Ph.D. படிப்பதற்கு உதவித்தொகை

வெளிநாடுகளில், பொறியியல், தொழில்நுட்பவியல் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில், Ph.D. ஆராய்ச்சி படிப்பை படிக்க விரும்பும் மாணாக்கர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வருட வருமானம் ரூ.3 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

(ஊ) முனைவர் ஆராய்ச்சி படிப்பிற்கு நிதியுதவி

மத்திய அரசு மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் முழுநேர முனைவர் ஆராய்ச்சி படிப்பை படிக்கின்ற மாணாக்கர்களுக்கு வருடம் தோறும் ரூ.50,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு (வருடத்திற்கு 700 நபர்கள் வீதம்) அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு இயக்குநரால் அனுப்பப்படுகிறது. பயனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வருட வருமானம் ரூ. 2 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வி கட்டணச் சலுகைகள்

(அ) கற்பிப்புக் கட்டணச் சலுகை

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பயில்கின்ற இத்துறையைச் சார்ந்த மாணாக்கர்களும் மற்றும் மதம் மாறிய கிறித்துவ மாணாக்கர்களும் வருமான வரம்பின்றி கற்பிப்புப் கட்டணம் கல்வி நிலையங்களுக்கு செலுத்துவதிலிருந்து மாநில அரசால் முழுமையாக விலக்களிக்கப்படுகின்றனர்.

(ஆ) இளங்கலை மாணாக்கர்களுக்கு சலுகைகள்

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் இத்துறையைச் சார்ந்த மாணாக்கர்களுக்கும், மதம் மாறிய கிறித்துவ மாணாக்கர்களுக்கும் சிறப்பு கட்டணம் மற்றும் தேர்வு கட்டணச் சலுகைகள் வருமான வரம்பின்றி அவர்கள் செலுத்துவதிலிருந்து மாநில அரசால் விலக்களிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

(இ) முதுகலை மாணவியருக்கு சலுகைகள்

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் இத்துறையைச் சார்ந்த மாணவியர்களும் மற்றும் மதம் மாறிய கிறித்துவ மாணவியர்களும் வருமான வரம்பின்றி சிறப்பு கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து மாநில அரசால் விலக்களிக்கப்படுகின்றனர்.

(ஈ) சிறப்பு கட்டணச் சலுகை

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் இத்துறையைச் சார்ந்த அனைத்து மாணாக்கர்களும், மதம் மாறிய கிறித்துவ மாணாக்கர்களும் சிறப்பு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு இந்த கட்டணம் கல்வி நிலையங்களுக்கு நேரடியாக விடுவிக்கப்படுகின்றது.

(உ) கட்டணச் சலுகைகள்

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் இத்துறையைச் சார்ந்த மாணாக்கர்களும், கிறித்துவ மதம் மாறிய மாணாக்கர்களும் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு மாநில அரசால் பள்ளிகளுக்கு இக்கட்டணம் நேரடியாக விடுவிக்கப்படுகின்றது. ஆங்கில வழியில் பயிலும் மாணாக்கர்களின் தேர்வு கட்டணம் அரசு தேர்வுகள் இயக்குநரகத்துக்கு நேரடியாக அரசால் விடுவிக்கப்படுகின்றது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை மற்றும் தொழிற் கல்விகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் விலக்களிக்கப்பட்டு கல்வி நிலையங்களுக்கு அரசால் நேரடியாக இக்கட்டணங்கள் விடுவிக்கப்படுகின்றன.

மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத் தொகைத் திட்டம்

சமுதாய முன்னேற்றத்திற்கு கல்வி மிகவும் முக்கியமான காரணியாக விளங்குகிறது. இத்துறையைச் சார்ந்த மாணவியர்களின் இடை நிற்றலை தடுப்பதற்கும் அவர்களின் கல்வி தரத்தை மென்மேலும் உயர்த்துவதற்கும் 100 விழுக்காடு பள்ளியில் சேர்வதை உறுதி செய்வதற்கும் மாணவியர்களுக்கான கல்வி ஊக்கத் தொகைத் திட்டம் மாநில அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்துறையைச் சார்ந்த மாணவியர் 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படித்தால் அவர்களுக்கு வருடந்தோறும் ரூ.500 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. 2011-2012 ஆம் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் இத்துறையைச் சார்ந்த மாணவிகள் பயன் பெறும் வகையில் ஊக்கத் தொகைத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்துறையைச் சார்ந்த மாணவிகள் 6 ஆம் வகுப்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்து படித்தால் அவர்களுக்கு வருடந்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் இத்துறையைச் சார்ந்த மாணவியர்களுக்கு வருடந்தோறும் ரூ.1500 வீதம் 2013-2014 ஆம் கல்வி ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.

பரிசுத் தொகை

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று மாநில அளவில் இத்துறையைச் சார்ந்த மூன்று சிறந்த மாணாக்கர்களுக்கும், மாவட்ட அளவில் மூன்று சிறந்த மாணாக்கர்களுக்கும், மதம் மாறிய கிறித்துவ மாணாக்கர்களுக்கும் மாநில அரசால் இந்தப் பரிசுத் தொகைகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பரிசைப் பெறுவதற்கு வருமான வரம்பு கிடையாது.

(அ) மாநில அளவிலான பரிசுகள்

அனைத்து வகையான பள்ளிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் படித்து மாநில அளவில் மூன்று சிறந்த மாணாக்கர்களுக்கு இந்த பரிசுத்தொகை கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது.

எண்

வகுப்பு

மாணாக்கர்கள் விவரம்

தகுதி

ரூபாய்

1

பன்னிரெண்டாம் வகுப்ப

இத்துறையைச் சார்ந்த மாணாக்கர்களுக்கும், மதம் மாறிய கிறித்துவர் ஆகிய ஒவ்வோர் இனத்திலும் மூன்று சிறந்த மாணாக்கர்களில் ஒரு சிறந்த மாணவன் மற்றும் ஒரு சிறந்த மாணவி.

2X3X3=18 (மாணாக்கர்கள்)

முதல் மூன்று சிறந்த மாணாக்கர்கள்

50,000

30,000

20,000

2

பத்தாம் வகுப்பு

இத்துறையைச் சார்ந்த மாணாக்கர்களுக்கும், மதம் மாறிய கிறித்துவர் ஆகிய ஒவ்வோர் இனத்திலும் மூன்று சிறந்த மாணாக்கர்களில் ஒரு சிறந்த மாணவன் மற்றும் ஒரு சிறந்த மாணவிக்கு.

(2X3X3=18 மாணாக்கர்கள்)

முதல் மூன்று சிறந்த மாணாக்கர்கள்

25,000

20,000

15,000

3

பன்னி ரெண்டாம் வகுப்பு (25 சிறந்த மாணாக்கர்கள்)

சிறந்த இத்துறையைச் சார்ந்த மாணாக்கர்களுக்கும், மதம் மாறிய கிறித்துவர் ஆகிய ஒவ்வோர் இனத்திலும் ஒரு சிறந்த மாணவன் அல்லது ஒரு சிறந்த மாணவிக்கு

(1X25X3=75 மாணாக்கர்கள்)

சிறந்த மாணாக்கர் ஒருவருக்கு

2,000

4

பத்தாம் வகுப்பு (ஐந்து சிறந்த மாணாக்கர்கள்)

சிறந்த இத்துறையைச் சார்ந்த மாணாக்கர் களுக்கும், மதம் மாறிய கிறித்துவர் ஆகிய ஒவ்வோர் இனத்திலும் ஒரு சிறந்த மாணவன் அல்லது ஒரு சிறந்த மாணவிக்கு.

(1X5X3=15 மாணாக்கர்கள்)

சிறந்த மாணாக்கர் ஒருவருக்கு

1,000

ஒவ்வோர் ஆண்டும் இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 126 மாணாக்கர்கள் பயன் பெறுகின்றனர்.

(ஆ) மாவட்ட அளவிலான பரிசுகள்

அனைத்து வகையான பள்ளிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் படித்து மாவட்ட அளவில் மூன்று சிறந்த மாணாக்கர்களுக்கு இந்த பரிசுத்தொகை கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது. இந்த பரிசுகள் 2014-2015 ஆம் ஆண்டு முதல் அதிகரித்து வழங்கப்பட்டு வருகின்றன.

பத்தாம் வகுப்பிற்கு

விவரம்

ஒரு மாணாக் கருக்கு வழங்கப்படும் தொகை ரூ.

சிறந்த மாணாக்கர் களின் எண்ணிக்கை

மொத்தத் தொகை (ரூபாய் இலட்சத்தில்)

முதல் மூன்று சிறந்த மாணாக்கர்கள் இத்துறையைச் சார்ந்த மாணாக்கர்களுக்கும், மதம் மாறிய கிறித்துவர் ஆகியோரில் ஒரு மாவட்டத்தில் 1 சிறந்த மாணவன் மற்றும் 1 சிறந்த மாணவி

3000

2000

1000

64

64

64

1.92

1.28

0.64

மொத்தம்

192

3.84

பன்னிரெண்டாம் வகுப்பிற்கு

விவரம்

ஒரு மாணாக்கருக்கு வழங்கப்படும் தொகை ரூ.

பயனாளிகளின் எண்ணிக்கை

மொத்தத் தொகை (ரூபாய் இலட்சத்தில்)

முதல் மூன்று சிறந்த மாணாக்கர்கள் இத்துறையைச் சார்ந்த மாணாக்கர்களுக்கும், மதம் மாறிய கிறித்துவர் ஆகியோரில் ஒரு மாவட்டத்தில் 1 சிறந்த மாணவன் மற்றும் 1 சிறந்த மாணவி

6000

4000

2000

64

64

64

3.84

2.56

1.28

மொத்தம்

192

7.68

(இ) மாநில அளவில் இத்துறையைச் சார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள்

இத்துறையைச் சார்ந்த அரசு பள்ளிகளில் படித்த மாணாக்கர்கள் மற்றும் கிறித்துவ மதம் மாறிய மாணாக்கர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் ஒவ்வோர் இனத்திலும் மாநில அளவில் 3 சிறந்த மாணாக்கர்களுக்கு, ஒரு சிறந்த மாணவன் அல்லது ஒரு சிறந்த மாணவிக்கு, 2014-2015 ஆம் ஆண்டு முதல் பரிசுகள் அதிகரித்து வழங்கப்பட்டு வருகின்றன.

பரிசுகள்

தொகை

10 ஆம் வகுப்பு

12 ஆம் வகுப்பு

முதல் மூன்று சிறந்த மாணாக்கர்கள்

ரூ.25000

ரூ.50000

ரூ.20000

ரூ.20000

ரூ. 15000

ரூ.30000

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வோர் ஆண்டும் 18 மாணாக்கர்கள் பயன் பெறுகின்றனர்.

கல்லூரியில் சேரும் மாணாக்கர்களுக்கான பரிசுகள்

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற இத்துறை மாணாக்கர்கள் மற்றும் மதம் மாறிய கிறித்துவ மாணாக்கர்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் போது இப்பரிசுத் தொகைகள் வழங்கப்படுகின்றன.

(அ) முதலமைச்சரின் தகுதிப் பரிசுகள்

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று 12 ஆம் வகுப்பில் சிறந்த இத்துறை மாணாக்கர்கள் மற்றும் மதம் மாறிய கிறித்துவர்களில் 1000 சிறந்த மாணவர்கள் மற்றும் 1000 சிறந்த மாணவியர்களுக்கு கல்லூரிப் படிப்பினைத் தொடர்வதற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.3000 வீதம் 5 ஆண்டுகளுக்கு இப்பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

(ஆ) அண்ணல் காந்தி நினைவுப் பரிசுத் தொகை

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று 12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறந்த மாணவன் மற்றும் ஒரு சிறந்த மாணவி இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டு அண்ணல் காந்தியடிகளின் நினைவாக இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பரிசுத் தொகை முதல் வருடத்திற்கு ரூ.2000 ஆகவும், அடுத்த ஐந்து வருடங்களுக்கு ரூ.1500 வீதமும் வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் குறைந்த பட்சம் 64 புதிய மாணாக்கர்கள் பயனடைகின்றனர்.

(இ) தகுதி வழிவகைப் பரிசுத் தொகை

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று 12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மதம் மாறிய கிறித்துவ சிறந்த மாணவர் ஒருவருக்கும், சிறந்த மாணவி ஒருவருக்கும், பழங்குடியின சிறந்த மாணவர் ஒருவருக்கும், சிறந்த மாணவி ஒருவருக்கும் இத்திட்டத்தின் கீழ் மாணாக்கர் தெரிவு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பரிசுத் தொகை முதல் வருடத்திற்கு ரூ.2000 உம், அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஒவ்வோராண்டும் ரூ.1500 வீதம் வழங்கப்படுகிறது.

ஈ) கல்லூரியில் 60 விழுக்காடு மதிப்பெண் பெறும் மாணாக்கர்களுக்கு பரிசுகள்

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில் நுட்ப படிப்பு ஆகிய படிப்புகளில் சிறந்து விளங்கும் இத்துறை மாணாக்கர்கள் மற்றும் கிறித்துவ மதம் மாறிய மாணாக்கர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பிற்கு ரூ.3000-உம் முதுகலைப் பட்டப்படிப்பிற்கு ரூ.5000-உம், தொழிற்கல்வி படிப்பிற்கு ரூ.6000-உம் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

(உ) சிறந்த திறம் மிக்க மாணாக்கர்களுக்கான பரிசு (Bright Students)

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பில் சிறந்து விளங்கும் இத்துறை சிறந்த மாணாக்கர்கள் இருவரும் மற்றும் மதம் மாறிய கிறித்துவ சிறந்த மாணாக்கர் இருவரும் இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டு இப்பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பரிசுத் தொகை முதல் வருடத்திற்கு ரூ.1600 ஆகவும், அடுத்த ஐந்து வருடங்களுக்கு வருடந்தோறும் ரூ.2000 - உம் வழங்கப்படுகிறது.

விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வழங்குதல்

இத்துறையைச் சார்ந்த பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு பாடப் புத்தகங்களும், 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு குறிப்பேடுகளும் பள்ளிக் கல்வித் துறையால் வழங்கப்படுகின்றன

சீருடைகள் வழங்குதல்

ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை இத்துறைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு சமூக நலத்துறையால் சீருடைகள் தைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக வழங்கப்படுகின்றன. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை இதே பள்ளியில் படிக்கின்ற மாணாக்கர்களுக்கு தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் அளவு எடுக்கப்பட்டு சீருடைகள் தைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக வழங்கப்படுகின்றன. இத்துறை விடுதிகளில் தங்கி பல்வேறு பள்ளிகளில் படிக்கின்ற மாணாக்கர்களுக்கு தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் அளவு எடுக்கப்பட்டு சீருடைகள் தைத்து விடுதி காப்பாளர் அல்லது காப்பாளினி வழியாக வழங்கப்படுகின்றன.

புத்தகங்கள் வழங்குதல்

புதிதாக தொடங்கப்படும் பள்ளி விடுதிகளுக்கு அங்கு தங்கிப் படிக்கின்ற மாணாக்கர்களின் பயன்பாட்டிற்காக அனைத்து வகையான புத்தகங்கள் வாங்கி வழங்கப்படுகின்றன. புதிய கல்லூரி விடுதிகளுக்கு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து வகையான புத்தகங்கள் வாங்கி வழங்கப்படுகின்றன.

மிதிவண்டிகள் வழங்குதல்

அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் இத்துறையைச் சார்ந்த மாணாக்கர்களுக்கும், மதம் மாறிய கிறித்துவ மாணாக்கர்களுக்கும், 11 ஆம் வகுப்பில் விடுபட்ட மாணாக்கர்களுக்கும் மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.

சிறந்த தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பில் மாணாக்கர்களை சேர்த்தல்

அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து மாவட்ட அளவில் 10 ஆம் வகுப்பில் சிறந்து விளங்கும் இத்துறையைச் சார்ந்த மாணாக்கர்கள் மற்றும் கிறித்துவ மதம் மாறிய மாணாக்கர்கள் இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டு சிறந்த தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர். அரசு ஆண்டு தோறும் ஒரு மாணாக்கருக்கு ரூ.28000 செலவிடுகிறது.

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இணையதளத்தின் வாயிலாகவும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடத்திலும் இத்துறையைச் சார்ந்த 10 சிறந்த மாணாக்கர்களின் பட்டியலைப் பெற்று விவரங்களை தெரிவு செய்து அதே மாவட்டத்திலுள்ள அல்லது அருகில் உள்ள மாவட்டங்களில் சிறந்த தனியார் பள்ளிகளில் சேர்ப்பித்து அதற்கான கல்வி உதவித் தொகை அந்தக் கல்வி நிலையங்களுக்கு விடுவிக்கப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும், தமிழ்நாடு முழுவதும் 320 மாணாக்கர்கள் இத்திட்டத்தின் வாயிலாக பயன் பெறுகிறார்கள். வருட வருமானம் ரூ.1 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சிறந்த தனியார் பள்ளிகளில் மாணாக்கர்களை 6 ஆம் வகுப்பில் சேர்த்தல்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் இத்துறையைச் சார்ந்த மாணாக்கர்களுக்கும் மற்றும் கிறித்துவ மதம் மாறிய மாணாக்கர்களுக்கும் 5 ஆம் வகுப்பு முடிக்கின்ற போது பள்ளிக் கல்வித் துறையால் தேர்வு நடத்தப்பட்டு, தெரிவு செய்யப்படுகின்றனர்.

தெரிவு செய்யப்பட்ட மாணாக்கர்கள் அதே மாவட்டத்தில் உள்ள அல்லது அருகில் உள்ள மாவட்டத்தில் இருக்கின்ற சிறந்த தனியார் பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களால் 6 ஆம் வகுப்பில் சேர்ப்பிக்கப்படுகின்றனர். ஒரு வளர்ச்சி வட்டாரத்திற்கு ஒரு மாணாக்கர் தெரிவு செய்யப்பட்டு சிறந்த பள்ளியில் சேர்ப்பிக்கப்படுகிறார். அந்த தனியார் பள்ளி நிர்வகிக்கும் விடுதியில் சேர்ந்து படிப்பதற்கு உதவித் தொகை இத்துறையால் விடுவிக்கப்படுகிறது. உதவித் தொகை 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தொடர்ந்து படிப்பதற்கு வழங்கப்படுகிறது.

விடுதிகள்

இத்துறையைச் சார்ந்த மாணாக்கர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் இத்துறையைச் சார்ந்த விடுதிகளில் தங்கிப் பயில்வதற்கு இத்துறையால் விடுதிகள் நிர்வகிக்கப்படுகின்றன. மாணாக்கர்களின் உபயோகத்திற்காக பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகளும் அவற்றில் ஒப்பளிக்கப்பட்டுள்ள மாணாக்கர்களின் எண்ணிக்கையும் கீழ்வருமாறு:-

வ. எண்.

விடுதிகளின் வகைப்பாடு

விடுதிகள் எண்ணிக்கை

மாணவர் எண்ணிக்கை

1

ஆதி திராவிடர் நல விடுதிகள்

1,324

98,539

2

பழங்குடியினர் நல விடுதிகள்

42

2,782

3

அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள்

314

27,652

 

மொத்தம்

1,680

1,28,973

தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பள்ளி மற்றும் விடுதிகளுக்கு நிதியுதவி

இத்துறையின் கீழ் இயங்கும் 36 தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் விடுதிகளில் 4977 ஆதி திராவிடர் மாணாக்கர்களும், 827 பழங்குடியின மாணாக்கர்களும் பயன் பெறும் வகையில் உணவுக் கட்டணம் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், அரசு விடுதி மாணாக்கர்களுக்கு வழங்கப்படுவது போல தொண்டு நிறுவன விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணாக்கர்களுக்கும் பல்வகை செலவினம் மற்றும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.

(i) முத்துக்கருப்பன் நினைவு கல்வி அறக்கட்டளை பள்ளிகள்:

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் முத்துக்கருப்பன் நினைவு கல்வி அறக்கட்டளை பள்ளியில், ஆதி திராவிடர் மாணாக்கர்கள், 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மொத்தம் 4044 பேர் பயில்கின்றனர். இந்த அறக்கட்டளைக்கு 2006 ஆம் ஆண்டு முதல் சம்பளம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

விடுதிகள்:

இதே அறக்கட்டளை விடுதியில் 3500 மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். 2014-2015 ஆம் நிதியாண்டு முதல், காப்பாளர், சமையலர், காவலர் மற்றும் துப்புரவாளர் என 32 பணியாளர்களுக்கு சம்பளம் தோராயமாக ஆண்டுக்கு ரூ.1.39 கோடி விடுதிப்பணியாளர் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

(ii) எஸ்.எப்.ஆர்.டி (S.F.R.D) தொண்டு நிறுவனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு எஸ்.எப்.ஆர்.டி (S.FR.D) தொண்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொண்டு நிறுவனத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மொத்தம் 2159 மாணாக்கர்கள் பயில்கின்றனர். 2005 ஆம் ஆண்டு முதல் சம்பளம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குதல்

இத்திட்டத்தின் கீழ் வீடற்ற இத்துறையைச் சார்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. இதற்கான நிலங்கள் தனியார் பேச்சுவார்த்தை மூலமாகவோ அல்லது ஆதி திராவிடர் நல திட்டங்களுக்கான நில எடுப்புச் சட்டம் 1978 (தமிழ்நாடு சட்டம் 31/1978)-இன்படியோ நில எடுப்பு செய்யப்பட்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற பயனாளியின் வருட வருமானம் ரூ.72,000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மயானங்கள் மற்றும் மயானப் பாதை வசதி

ஆதி திராவிடர் குடியிருப்புகளுக்கு மயான வசதி மற்றும் மயானப் பாதைகள் அமைத்துக் கொடுக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருவதுடன் நிலத்தினை வாங்குவதற்கும், கையகப்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளும் தங்களுடைய சொந்த நிதியிலிருந்து ஆதி திராவிடர் குடியிருப்புகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருகின்றன. குடிநீர் வசதிக்கு 15 விழுக்காடும் இணைப்புச்சாலை வசதிக்கு 10 விழுக்காடு செலவினத்தையும் இத்துறை ஏற்கிறது.

ஈமச்சடங்கு உதவித்தொகை

இத்துறையைச் சார்ந்தோர் மற்றும் கிறித்துவ மதம் மாறியோர் குடும்பத்தில் இறப்பு ஏற்பட்டால் ஈமச் சடங்கிற்கான செலவினை மேற்கொள்ள நிதி உதவியாக ரூ.2,500/- வழங்கப்படுகிறது.

ஆதி திராவிடர் துணைத் திட்டத்திற்கான மைய அரசின் சிறப்பு நிதியுதவித் திட்டம்

ஆதி திராவிடர் துணைத் திட்டத்திற்கான மைய அரசின் சிறப்பு நிதியுதவித் திட்டங்களை, மேலும் பயனுள்ளதாக்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், குடும்ப வருவாய் ஈட்டக்கூடிய திட்டங்களில் உள்ள தடைகளைக் களையவும், ஊக்குவிக்கவும் மாநில அரசின் ஆதி திராவிடர் துணைத்திட்டத்திற்கு கூடுதலாக வலுசேர்க்கும் வகையில் இத்திட்டத்திற்கு மைய அரசு 100 விழுக்காடு மானியம் வழங்குகிறது.

ஆதி திராவிடர் மக்களின் உற்பத்தித்திறன் மற்றும் வருவாயை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த நிதியில் 80 விழுக்காடு, ஆதி திராவிடர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்காக நிதி உதவி வழங்கப்படுகிறது. வேலையில்லா ஆதி திராவிடர் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிக்க 10 விழுக்காடு நிதி உபயோகப்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 10 விழுக்காடு நிதி, ஆதி திராவிடர்கள் 50 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் வசிக்கும் இடங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ஆதி திராவிடர் நலத்துறைக்கு வழங்கப்படுகிறது.

சாதிச் சான்றிதழ்கள்

(i)ஆதி திராவிடர்களுக்கான சாதிச்சான்றிதழ்கள் வழங்கும் அதிகாரம் வட்டாட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர்களுக்கு சாதிச்சான்று வழங்க மறுக்கும் பட்சத்தில் வருவாய் கோட்டாட்சியர் அல்லது சார் ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

(ii)ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட சாதிச்சான்றிதழ்களின் மெய்த்தன்மையினை அறிய மாவட்ட அளவிலான விழிப்புணர்வுக் குழு கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டுள்ளது:-

மாவட்ட அளவிலான விழிப்புணர்வுக் குழு

1

மாவட்ட ஆட்சியர்

தலைவர்

 

ஆதி திராவிடர் என வழங்கப்பட்ட சான்றிதழ்களின் மெய்த்தன்மையினைக் கூர்ந்தாய்வு செய்து இறுதி ஆணை பிறப்பிக்கலாம். இந்த ஆணையினை ஏற்கவில்லையெனில் இந்திய அரசியல் சட்டக்கூறு 226-இன்படி உயர் நீதிமன்றத்திலும், கூறு 136-இன்படி உச்ச நீதி மன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம்.

2

மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்

உறுப்பினர் செயலர்

3

மானுடவியல் வல்லுநர்

உறுப்பினர்

குடிமையியல் பாதுகாப்புச் சட்டம் 1955, SC மற்றும் ST (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம், 1989 மற்றும் திருத்தச் சட்டம், 2015

(அ) தீண்டாமை ஒழிப்பு

SC மற்றும் ST மக்களுக்கு எதிராக நிகழும் தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளைத் தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதற்காக, 1955 ஆம் ஆண்டு குடிமையியல் பாதுகாப்புச் சட்டம், 1989 ஆம் ஆண்டு SC மற்றும் ST (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் மற்றும் திருத்தச் சட்டம் 2015, வன்கொடுமைகள் தடுப்பு விதிகள் 1995 மற்றும் திருத்த விதிகள் 2016 போன்றவை மைய அரசால் இயற்றப்பட்டு, மாநில அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேற்கண்ட திருத்தச் சட்டம் 2015 மற்றும் திருத்த விதிகள் 2016 ஆகியவை முறையே 01.01.2016 மற்றும் 14.04.2016 ஆகிய தேதிகளில் அமலுக்கு வந்துள்ளன. மேற்படி சட்டத்தை அமல்படுத்துவற்கென கூடுதல் காவல்துறைத் தலைவர், தலைமையின் கீழ் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஒன்று சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

இந்த இரு சட்டங்களின் கீழ்

(i) வழக்குகளைப் பதிவு செய்தல், விசாரணை செய்தல், வழக்குத் தொடுத்தல் ஆகியவற்றை மேற்பார்வை செய்வதும், (ii) SC மற்றும் ST மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவதுமே சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் பணிகளாகும்.

சிறப்பு நீதிமன்றங்கள்

SC மற்றும் ST (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் மற்றும் குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 6 சிறப்பு நீதிமன்றங்களை அரசு அமைத்துள்ளது. இதர மாவட்டங்களில், தற்போதுள்ள குற்றவியல் அமர்வு நீதிமன்றங்களுக்கு, இவ்வழக்குகளை விசாரணை செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 38 நடமாடும் காவல் குழுக்கள், ஒவ்வொன்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கீழ் ஒரு காவல் துணை கண்காணிப்பாளருடனும் அல்லது மாநகர காவல் ஆணையரின் கீழ் ஒரு காவல் உதவி ஆணையருடனும் இதர பணியாளர்களுடன் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் செயல்பட்டு வருகின்றன.

1995 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட SC மற்றும் ST மக்களுக்கான வன்கொடுமைத் தடுப்பு விதிகளில் விதி எண்.17(1) இன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அலுவல் சார்ந்த மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு ஒன்றினை அரசு அமைத்துள்ளது. SC மற்றும் ST மக்களின் பிரச்சனைகளை அறிந்த நல்ல நோக்கம் கொண்டவர்களை உறுப்பினராக நியமனம் செய்வதற்கு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடி இச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவது பற்றியும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீருதவி மற்றும் மறுவாழ்வு அளிப்பது குறித்தும், இச்சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிலை பற்றியும் ஆய்வு செய்கிறது.

மேலும், இச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யவும், மேற்பார்வையிடவும் மாநில அளவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. SC மற்றும் ST (வன்கொடுமை தடுப்பு) விதிகள் 1995-இன் விதி 17- இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், 08.11.2013 நாளிட்ட மைய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டதன் அடிப்படையில், மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு உட்கோட்டத்திலும், உட்கோட்ட நீதிபதியின் தலைமையில் அலுவல் சார்ந்த மற்றும் அலுவல் சாராத உறுப்பினர்களைக் கொண்ட உட்கோட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு அமைக்க, அரசு ஆணை (நிலை) எண்.6, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள் 20.01.2015-இல் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இக்குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்பட்டு, உட்கோட்ட நிர்வாகத்திடமிருந்து வரப்பெற்ற இந்தச் சட்டத்தின்படியான பல்வேறு அறிக்கைகளை ஆய்வு செய்யும்.

(ஆ) தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம்

தீண்டாமையை பின்பற்றினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன. தீண்டாமை ஒழிப்புத் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறுந்திரைப் படங்கள் கிராமங்களில் திரையிடப்படுகின்றன. மனித நேய வார விழா ஒவ்வோர் ஆண்டும், அனைத்து மாவட்டங்களிலும் ஜனவரி 26 முதல் 30 ஆம் தேதி வரை, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படுகிறது. மனிதநேய வார விழா நடத்துவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.50,000/-உம், மாநில அளவில் ரூ.1,00,000/-உம் வழங்கப்படுகிறது. வில்லுப்பாட்டு கலைஞர்கள் மூலம் பொதுமக்களுக்குத் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து விளம்பரப்படுத்தப்படுகிறது. மேலும், சமபந்தி விருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26, ஆகஸ்டு 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களிலும், அந்தந்த மாவட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் விடுமுறை நாட்களிலும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சமபந்தி விருந்து ஏற்பாடு செய்ய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. தீண்டாமை ஒழிப்பு குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க 2 விளம்பரப் பிரிவுகள், ஒன்று சென்னையிலும் மற்றொன்று திருச்சிராப்பள்ளியிலும் செயல்பட்டு வருகின்றன.

(இ)சமூக நல்லிணக்கத்துடன் திகழும் சிறந்த கிராமங்களைத் தேர்ந்தெடுத்தல்

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் (சென்னையைத் தவிர) தீண்டாமையை விட்டொழித்து பொது மக்கள் நல்லிணக்கத்துடன் வாழும் ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்கிராமத்திற்கு ரூ.10 இலட்சம் நிதி அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வழங்கப்படுகிறது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கம்

கலை, கலாச்சாரம், இலக்கியம் போன்ற துறைகளில் சிறந்த படைப்புகளை உருவாக்கும் இத்துறை கலைஞர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் ஆராய்ச்சிப் பணிகளுக்கு உதவிடவும் ரூ.50 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு வைப்புக் கணக்கில் வைப்பீடு செய்யப்படுகிறது. அதிலிருந்து பெறப்படும் வட்டித்தொகை தெரிவு செய்யப்படும் சிறந்த எழுத்தாளர்களுக்கு, பரிசுத் தொகையாக வழங்க பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும், இத்துறையைச் சேர்ந்தோர், கிறித்துவ மதம் மாறியோர் 10 எழுத்தாளர்கள் மற்றும் பிற சமுதாயத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆக மொத்தம் 11 எழுத்தாளர்கள் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நூல்களை வெளியிட ரூ.40,000 பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

ஆதி திராவிடர் துணைத் திட்டம்

ஆதிதிராவிடர் துணைத் திட்டம் தமிழ்நாட்டில் 1980-1981-இலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மக்களின் சமூக-பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில், தமிழ்நாட்டின் ஆதிதிராவிடர் மக்கள் தொகைக்கு (20.01%) இணையாக மாநில மொத்த திட்ட நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்துவதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். மாநில அளவில் இத்துணைத் திட்டத்தின் கீழ் திட்டங்களை தீட்டுவதற்கும், செயல்படுத்துவதற்கும் இத்துறை ஒருங்கிணைப்புத் துறையாக (Nodal Department) விளங்குகிறது. இத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் ஒருங்கிணைப்பு அலுவலராக (Nodal Officer) அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மாவட்டங்கள் அளவில் இத்திட்டங்களைக் கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் ஆதிதிராவிடர் நல இயக்குநர் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆதிதிராவிடர்களுக்கான திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்காக, செயலாக்கத் துறைகளால் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் இத்துறையுடன் இணைந்து செயலாற்றி வருகின்றனர். 38 துறைகளை உள்ளடக்கிய 20 செயலாக்கத் துறைகள் வாயிலாக ஆதிதிராவிடர் மக்களின் மேம்பாடு மற்றும் நலனுக்காக இத்துணைத் திட்டத்தின் கீழ் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஆதாரம் : ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு அரசு

Filed under:
3.05263157895
கரு. அம்பேத் வளவன் May 24, 2020 10:44 AM

தகவல்களை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

பல மாவட்டங்களில் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெறுவதில்லை.
தமிழ்நாடு மாநிலத்தில் மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இன்னும் அமைக்கப்படவில்லை. இதில் மாநில அரசு விரைந்து நடடிக்கை எடுக்க வேண்டும்.

ஆ.விஜயன் Jan 07, 2019 09:21 PM

தங்களின் நல்ல எண்ணத்திற்கு நன்றி ஐயா அறிவழகன்

S.அறிவழகன் Nov 24, 2018 12:16 PM

அரசாங்கம் தரும் உதவிகளை நல்ல படியாக பயன்படுத்தி முன்னேற வேண்டுகிறேன்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top