பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பழங்குடியினர் நலன் சார்ந்த கொள்கைகள்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னுரை

பழங்குடியினரின் நலனைப் பேணிக்காப்பதற்கென பழங்குடியினர் நல இயக்குநரகம் 01.04.2000-இல் தோற்றுவிக்கப்பட்டு இயங்கி வருகிறது. சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், தர்மபுரி, நாமக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கடலூர், மதுரை, அரியலூர், திருநெல்வேலி, சென்னை ஆகிய 18 மாவட்டங்களில் பழங்குடியினர் மக்கள் தொகை 10,000-இக்கும் கூடுதலாக உள்ளது. ஏழ்மைச் சூழ்நிலையில் வாழும் நிலை, மலைப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறைவு, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு, குறைந்த எழுத்துப்படிப்பு வீதம், வன வளங்கள் அழிக்கப்படுவதால் மக்கள் இடம் பெயர்தல் ஆகிய அம்சங்களில் இவ்வரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றது.

ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டப்பகுதிகள் (ITDP)

மொத்த மக்கள் தொகையில் 50 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் பழங்குடியினர் வாழும் 10 ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டப் பகுதிகளைக் கொண்ட சேலம் (ஏற்காடு, பச்சமலை, அருநூத்துமலை மற்றும் கல்ராயன்மலை), நாமக்கல் (கொல்லிமலை), விழுப்புரம் (கல்ராயன்மலை), திருவண்ணாமலை (ஜவ்வாதுமலை), திருச்சிராப்பள்ளி (பச்சமலை), தர்மபுரி (சித்தேரி மலை) மற்றும் வேலூர் (ஜவ்வாது மற்றும் ஏலகிரிமலை) ஆகிய 7 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு திட்டப்பகுதிகளில், பழங்குடியினர் மக்களுக்கான நலத் திட்டப் பணிகளை செயல்படுத்திட 7மாவட்டங்களில் திட்ட அலுவலகங்களை திறந்து செயல்பட, அரசாணை (நிலை) எண்.34 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, (ஆதிந-1) துறை, நாள்.25.04.2017-இல் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அழிவின் விளிம்பிலுள்ள பண்டைய பழங்குடியினர் இனம் (PVTG)

மக்கள் தொகை அடிப்படையில் பழங்குடியினரை இருவகையாகப் பிரிக்கலாம். மக்கள் ஒரே இடத்தில் அதிகமாக காணப்படும்போது, அவர்களைப் பழங்குடியினர் குழுவாகவும், மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாகக் காணப்படும் ஏனைய பழங்குடியினர், பரவி வாழும் பழங்குடியினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மாநிலத்திலுள்ள 36 வகையான பழங்குடியினரில் 6 வகை பழங்குடியினர், அதாவது தோடா, கோத்தா, குரும்பாஸ், இருளர், பணியன் மற்றும் காட்டுநாயகன் இனத்தவரின் மக்கள் தொகை குறைந்து கொண்டோ அல்லது அதிகரிக்காமல் நிலையாகவோ உள்ளது. எனவே, இவ்வினத்தவர், அழிவின் விளிம்பிலுள்ள பண்டைய பழங்குடியினராகக் கண்டறியப்பட்டுள்ளனர்.

மைய அரசின் உதவித் தொகை

மைய அரசு

(i) பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் சிறப்பு மத்திய உதவி

(ii) இந்திய அரசியலமைப்புச் சட்டக்கூறு 275(1) இன் கீழ் ஒதுக்கீடு மற்றும்

(iii) அழிவின் விளிம்பிலுள்ள பண்டைய பழங்குடியினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு

ஆகிய மூன்று திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு வழங்கி வருகிறது.

(அ) பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கான சிறப்பு மைய நிதியுதவி

பழங்குடியினர் வாழும் பகுதிகளில் 60 விழுக்காடு நிதி, வருவாய் ஈட்டும் திட்டங்களுக்காகவும், 30 விழுக்காடு நிதி அதே பகுதியில் வருவாய் ஈட்டும் தொழில்களுக்குண்டான உட்கட்டமைப்புப் பணிகளைச் செய்வதற்காகவும் செலவிடப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பழங்குடியின குழுக்களுக்கு கறவை மாடுகள் வழங்கப்படுவதுடன், சில பொருளாதார திட்டங்களுக்காகவும், இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. 10 விழுக்காடு நிதி வேலைவாய்ப்பு பெறுவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழங்குடியின மக்களுக்கு பயன் தரும் வகையில் "பாக்கு பலவிதம்" பயிற்சி சேலம் மாவட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2017-இல், சேலம் மாவட்டம் கருமந்துறையில் 5 அலகுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் கறவை மாடுகளை பராமரிக்கவும், பேணிக்காக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் ஒருங்கிணைந்த பழங்குடியினர் நல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (ITDA) மாவட்டங்களில் "பசு பராமரிப்பு", "பாரம்பரிய சமையல்", "மூங்கில் மூலதனம்” ஆகிய பயிற்சிகள் நடப்பு ஆண்டில் நடத்தப்பட உள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில், "அப்துல்கலாம்புரம்" என புதியதாக வினைத்திறமிக்க நகரம் (Smart City) அமைக்கப்பட்டு அக்டோபர் 2016 முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிக்காக அரசு ரூ.1.59 கோடி விடுவித்துள்ளது. உதகை மாவட்டம் கூடலூர் மற்றும் குன்னூர் ஆகிய இடங்களில் பழங்குடியினர் நல திட்டங்களை செயல்படுத்துவதற்காக தனி வட்டாட்சியர் அலுவலகங்கள் புதியதாக துவங்கப்பட்டுள்ளன.

(ஆ) இந்திய அரசியலமைப்புச் சட்டக்கூறு 275(1)

இந்திய அரசியலமைப்புச் சட்டக்கூறு 275(1) இன் கீழ், மைய அரசால் வழங்கப்பட்ட நிதியுதவியிலிருந்து பழங்குடியினர் பகுதிகளில் உட்கட்டமைப்புப் பணிகள், அதாவது நடைமேம்பாலம், இணைப்புச் சாலைகள், மின் இணைப்பு, தடுப்பணை ஆகிய திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், சேலம் மாவட்டத்தில் அபிநவம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிமலை ஆகிய இடங்களிலுள்ள ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகளைப் பராமரிப்பதற்கு இந்நிதி பயன்படுத்தப்படுகிறது. வனங்களில் குடியிருப்போர் சட்டம் 2006 ஆம் ஆண்டு அமலுக்கு வந்ததைச் செயல்படுத்துவதற்கும் இந்நிதி பயன்படுத்தப்படுகிறது. ஏற்கனவே இயங்கிவரும் விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமலை, சேலம் மாவட்டம் அபிநவம் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கும், 2016-2017-இல் துவங்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் அத்திப்பட்டு மற்றும் நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு ஆகிய இடங்களில் இயங்கி வரும் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப்பள்ளிகளின் தொடர் செலவினத்திற்கும் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது.

நஞ்சநாடு மற்றும் அத்திப்பட்டு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகள் தற்காலிகக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன. நஞ்சநாடு உண்டி உறைவிடப் பள்ளி மற்றும் விடுதிக்கு உதகை பழங்குடியினர் ஆராய்ச்சி மைய வளாகத்தில் 20 ஏக்கர் நிலத்தில் நிரந்தர கட்டடம் கட்டிட பூர்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி முன்னேற்றத்தில் உள்ளது. முதன் முறையாக இத்துறையில், நஞ்சநாடு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளியில் தேசிய மாணவர் படை (NCC) பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் அறிவுத்திறன் வினைத்திறன் வகுப்புகள் (Smart Classes) துவங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் நீராவி கொதிகலன், மழை மேலங்கி, தட்டு, டம்ளர் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கிட படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

(இ) அழிவின் விளிம்பிலுள்ள பண்டைய பழங்குடியினர் மேம்பாடு

அழிவின் விளிம்பிலுள்ள பண்டைய பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக, மைய அரசு ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மைய அரசு 2013-2014 ஆம் ஆண்டு முதல் ரூ.20 கோடி தொகையினை வருடந்தோறும் வழங்கி வருகிறது. பாரம்பரிய வீடுகள் கட்டுதல், கறவை மாடுகள் வழங்குதல், குடிநீர் வசதி மற்றும் தெருவிளக்குகள் போன்ற வசதிகள் இந்நிதியின் வாயிலாக செய்யப்படுகின்றன.

பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக வனங்களில் குடியிருப்போர் (வன உரிமைகள் அங்கீகரித்தல்) 2006 சட்டத்தைச் செயல்படுத்துதல்

மைய அரசு, 2006 ஆம் ஆண்டு பழங்குடியினர் மற்றும் பிற மரபு வழியாக வனங்களில் குடியிருப்போர் (வன உரிமைகள் அங்கீகரித்தல்) சட்டத்தை இயற்றியுள்ளது. இச்சட்டம் 29.12.2006 முதல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின்படி, 13.12.2005 ஆம் நாளுக்கு முன்பே வனங்களில் குடியிருந்து வரும் பழங்குடியினருக்கும், 13.12.2005 ஆம் தேதிக்கு முன்பு மூன்று தலைமுறைகளாக அதாவது 75 ஆண்டுகளாக வனங்களில் குடியிருக்கும் பிற மரபு வழியினருக்கும் வன உரிமைப் பட்டா வழங்குவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் செயல்பாடு பின்வரும் குழுக்களால் கண்காணிக்கப்படுகிறது :

(i) தலைமைச் செயலரைத் தலைவராகக் கொண்ட மாநில அளவிலான கண்காணிப்புக் குழு

(Ii) மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட மாவட்ட அளவிலான குழு

(iii) வருவாய் கோட்ட அலுவலரைத் தலைவராகக் கொண்ட உட்கோட்ட அளவிலான குழு

வன உரிமைப் பட்டா வழங்குவதற்கு எதிராக, திரு. வி. சாம்பசிவம், இ.வ.ப. (ஓய்வு) என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிலுவையில் இருந்த வழக்கு எண்.4533/2008-இன் மீதான தடையாணையை விலக்க 2015ஆம் ஆண்டில் பழங்குடியினர் நல இயக்குநரால் உச்சநீதிமன்றத்தில் ஊடுபிணைப்பு மனு (Interlocutory Application) தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் மேற்படி வழக்கில் 02.02.2016 அன்று உயர்நீதிமன்றத் தடையாணையினை நீக்கி தீர்ப்பாணை வழங்கியது. பயனாளிகள் குடியிருக்கும் வன நிலங்களை குறிப்பிட்ட பூகோள தரவின் அடிப்படையில் 2620 (தனி நபர் உரிமை - 2551, சமூக உரிமை - 69) பயனாளிகளுக்கு தனிநபர் உரிமை மற்றும் சமூக உரிமை வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வுரிமைகளை 12 மாவட்டங்களில் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டம்

விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்திற்காக 2017-2018 ஆம் ஆண்டு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், பழங்குடியினர் நல மேம்பாட்டு பணிகள், கூரை வீடுகளைச் சீரமைப்பு செய்தல், சாலைப் பணிகள், அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளை மேம்படுத்துதல், குடிநீர் வசதி, பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் தாட்கோ மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றைத் தவிர இத்திட்டத்தின் கீழ் 5 தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் விடுதிகளுக்கு கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் மற்றும் பழங்குடியினர் அருங்காட்சியகம்

பழங்குடியினர் பற்றிய விவரங்களைச் சேகரிக்கவும், பழங்குடியினர் வாழ்க்கை முறை, கலாச்சாரம், மொழி, சமூக-பொருளாதாரம் மற்றும் கல்வி நிலை முதலியவற்றை ஆராய்ச்சி செய்வதற்காகவும், மைய அரசின் நிதியுதவியுடன் 1983 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில், முத்தோரை பாலாடா என்ற இடத்தில் "பழங்குடியினர் ஆராய்ச்சி மையம்” ஒன்று அமைக்கப்பட்டது. இம்மையம், மானுடவியல் நிபுணத்துவம் வாய்ந்த இயக்குநர் ஒருவரின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இங்கு நூலகம் மற்றும் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளன. பழங்குடியினரின் வாழ்க்கை முறை குறித்த புகைப்படங்கள் மற்றும் கலைப் பொருட்கள் ஆகியவை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது பழங்குடியின மக்களின் கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஒரு விற்பனைக் கூடமும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.

தொழில்நெறி வழிகாட்டும் மையம்

பழங்குடியின் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில், தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஒன்று நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் இயங்கி வருகிறது.

தொழிற்பயிற்சி மையங்கள் (ITIs)

பழங்குடியினருக்கென தொழிற்பயிற்சி மையங்கள் சேலம் மாவட்டம் கருமந்துரை, நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை, திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரதூர், கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைக்கட்டி, நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றன.

சாதிச் சான்றிதழ்கள்

(i) பழங்குடியினர்களுக்கான சாதிச் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் வருவாய்க் கோட்டாட்சியர் அல்லது சார் ஆட்சியர் மற்றும் சென்னையில், சென்னை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினர்களுக்கு சாதிச்சான்று வழங்க மறுக்கும்பட்சத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம். பழங்குடியினர் சாதிச்சான்று வழங்க மாநில அளவிலான கூர்நோக்குக் குழுவில் இறுதி மேல்முறையீடு செய்யலாம்.

(ii) பழங்குடியினர்களுக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களின் மெய்த்தன்மையினை அறிய மாநில அளவிலான கூர்நோக்குக் குழு கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டுள்ளது :-

மாநில அளவிலான கூர்நோக்குக் குழு

1

அரசு முதன்மைச் செயலாளர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

தலைவர்

 

 

பழங்குடியினர் என வழங்கப் பட்ட சான்றிதழ்களின் மெய்த்தன்மையினைக் கூர்ந் தாய்வு செய்து இறுதி ஆணை பிறப்பிக்கும். இந்த ஆணையினை ஏற்கவில்லையெனில் இந்திய அரசியல் சட்டக்கூறு 226-இன்படி உயர் நீதி மன்றத்திலும், கூறு 136-இன்படி உச்ச நீதி மன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம்.

2

இயக்குநர் பழங்குடியினர் நலன்

உறுப்பினர் செயலர்

3

மானுடவியல் வல்லுநர்

உறுப்பினர்

கண்காணிப்புப் பிரிவு

பழங்குடியினர்களின் சான்றிதழின் உண்மைத் தன்மையை அறிய கள ஆய்வு செய்து, வாக்குமூலங்கள், ஆவணங்களைப் பெற்று சரிபார்த்து மாநில கூர்நோக்குக் குழுவிற்கு அறிக்கை அளிக்க ஏதுவாக கீழ்க்கண்டவாறு நான்கு மண்டல கண்காணிப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன:

1. சென்னை மண்டலம்: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிச் செயல்படுகிறது.

2. சேலம் மண்டலம்: சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு சேலம், தர்மபுரி, கிருஷ்ண கிரி, நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிச் செயல்படுகிறது.

3. திருச்சிராப்பள்ளி மண்டலம்: திருச்சிராப்பள்ளியைத் தலைமையிடமாகக் கொண்டு திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிச் செயல்படுகிறது.

4. மதுரை மண்டலம்: மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிச் செயல்படுகிறது.

ஒவ்வொரு கண்காணிப்புப் பிரிவும் கீழ்க்கண்ட காவல் துறை அலுவலர்களைக் கொண்டு செயல்படுகிறது :

வஎண்

பதவியின் பெயர்

எண்ணிக்கை

1

முதுநிலை காவல் துறை துணை கண்காணிப்பாளர்

1

2

காவல் ஆய்வாளர் அல்லது சார் காவல் ஆய்வாளர்

1

3

காவலர்

1

மாநில அளவிலான கூர்நோக்குக் குழு இவ்வினங்களைச் சம்மந்தப்பட்ட கண்காணிப்புப் பிரிவுக்குச் சாதி மெய்த்தன்மை அறியும் பொருட்டு அனுப்புகின்றது.

பழங்குடியினர் துணைத் திட்டம்

பழங்குடியினர் துணைத் திட்டம் 1976-77ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகின்றது. இத்துணைத் திட்டத்தின்படி பழங்குடியினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கென மாநில ஆண்டுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் மக்கள் தொகை 1.10 விழுக்காட்டிற்கு குறையாமல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாநில அளவில் பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் திட்டங்களை வகுக்கவும், செயல்படுத்தவும் இத்துறை ஒருங்கிணைப்புத் துறையாகவும் (Nodal Department) இத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் ஒருங்கிணைப்பு அலுவலராகவும் (Nodal Officer) நியமிக்கப்பட்டுள்ளார். இத்துணைத் திட்டங்களை மாவட்ட அளவில் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் பழங்குடியினர் நல இயக்குநர் கண்காணிப்பு அலவலராக நியமிக்கப்பட்டுள்ளார். 35 துறைகளை உள்ளடக்கிய 20 செயலாக்கத் துறைகள் வாயிலாகப் பழங்குடியினர் துணைத் திட்டம், பழங்குடியினரின் மேம்பாடு மற்றும் நலனுக்காகச் செயல்படுத்தப்படுகிறது. செயலாக்கத் துறைகளால் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள் பழங்குடியினருக்கான திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்காகப் பழங்குடியினர் நலத்துறையுடன் இணைந்து செயலாற்றி வருகின்றனர்.

தமிழ் நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), 1974 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர்களுக்கு தீப்பிடிக்கா வீடுகள் கட்டுவதற்காக இந்திய நிறுவனச் சட்டம், 1956இன் கீழ் நிறுவப்பட்டது. 1980-81 ஆம் ஆண்டிலிருந்து ஆதிதிராவிடர்களின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களும் இந்நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

பங்கு மூலதனம்

இக்கழகம் ரூ.1 கோடி பங்கு மூலதனத்துடன் 1974ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கழகத்தின் தற்போது அங்கீகரிக்கப்பட்ட மற்றும் செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் முறையே ரூ.150 கோடி மற்றும் ரூ.141.53 கோடி ஆகும். 1980 ஆம் ஆண்டிலிருந்து இக்கழகத்தின் பங்கு மூலதனத்தை மாநில அரசும், மத்திய அரசும் 51 : 49 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்க வேண்டும். மைய அரசின் பங்குத் தொகை 2003-2004 ஆம் ஆண்டு முதல் 2016-2017 ஆம் ஆண்டு வரை ரூ.44.59 கோடி பெற வேண்டியுள்ளது. கடன் சுமையிலிருந்த இந்நிறுவனத்தை தமிழ்நாடு அரசு 2003-2004 ஆம் ஆண்டு முதல் 2016-2017 ஆம் ஆண்டு வரையிலான மாநில அரசின் பங்குத்தொகையாக ரூ.46.41 கோடியினை வழங்கியதன் மூலம் இக்கழகத்திற்குப் புத்துயிர் வழங்கியுள்ளது.

நோக்கம்

1. கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுதல்

2. பொருளாதார மேம்பாட்டு திட்டங்களைச் செயல்படுத்துதல்

3. திறன் வளர்க்கும் பயிற்சி அளித்தல், போட்டித் தேர்வுகள் மற்றும் உயர்கல்வி தேர்வுகளுக்குப் பயிற்சி அளித்தல்

ஆதி திராவிடர்களுக்காக தாட்கோவினால் செயற்படுத்தப்படும் பொருளாதார முன்னேற்றத் திட்டங்கள்

சமூக ஏணியில் அடித்தட்டில் மிக வறிய நிலையில் உள்ள இத்துறை மக்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்துவதற்கு அரசு பல சீரிய முயற்சிகள் மேற்கொண்டாலும், ஆதிதிராவிட மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அவர்களது வாழ்க்கைத் தரத்திற்குமிடையே உள்ள இடைவெளியானது அதிகமாகவே காணப்படுகிறது. இவ்விடைவெளியினைக் குறைக்க பல்வேறு சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் ஓர் அங்கமாக ஆதிதிராவிடர் மக்கள், பல்வேறு பொருளாதார திட்டங்களுக்காக 2011-2012 ஆம் ஆண்டு வரை தனி நபருக்கு வழங்கி வந்த மானியத் தொகை ரூ.25,000/-ஐ, ரூ.2.25 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மானியத் தொகை உயர்வானது ஆதிதிராவிடர் மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கைத் தரத்தில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

நிலம் வாங்கும் திட்டம்

ஆதிதிராவிடர் சமூகத்தின் நில உடமையினை அதிகரிக்கவும், நில உடமை மகளிரது சமூக நிலை உயர்வினை காட்டும் அளவு கோல் என்பதாலும் மகளிருக்கான சிறப்புத் திட்டமான நிலம் வாங்கும் திட்டம் 2004-2005 முதல் செயல்படுத்தப்படுகிறது.

நிலம் மேம்பாட்டுத்திட்டம்

ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற வகை செய்யப்பட்டுள்ளது. நீர்ப்பாசன வசதி ஏற்படுத்துவதன் மூலம் நில பயன்பாடு மற்றும் நிலத்தின் வழி வருவாயை பெருக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்

ஆதிதிராவிடர் மக்களின் வறிய நிலையைக் குறைக்க 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆதிதிராவிடர்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு தொழில்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற கல்வித் தகுதி வலியுறுத்தப்படவில்லை . இத்திட்டத்தின் கீழ் தனி நபர் மற்றும் குழுக்கள் பயன் பெறுகின்றனர்.

தொழில் முனைவோர் சிறப்புத் திட்டம் - பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைப்பதற்கான சிறப்புத் திட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைப்பதற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மக்கள், எண்ணெய் நிறுவனங்களின் முகவர்களாக நியமனம் செய்ய விண்ணப்பிக்கும் பொழுதே 'அ' மற்றும் 'ஆ' வகைபாட்டில் (A &B Category) பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைக்க உதவும் வகையில், தேவையான நிலம் வாங்குவதற்கும், வங்கி உத்தரவாதத்திற்குத் தேவையான வைப்புத்தொகைக்காக நிதியுதவி அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. முகவர்களாகத் தெரிவு செய்யப்பட்ட பின் இயக்க மூலதனத்திற்காக நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், எண்ணெய் நிறுவனத்தால் தெரிவு செய்யப்படும் முன்பும் அல்லது தெரிவு செய்யப்படும் பொழுதும் பயன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம்

படித்த வேலையற்ற 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட ஆதிதிராவிட இளைஞர்கள் தங்களுக்குத் தெரிந்த மற்றும் விருப்பமான தொழில் செய்ய நிதி உதவி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார் தொழில்களுக்கான சிறப்பு திட்டம்

இத்திட்டத்தின் கீழ் மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS), சித்த மருத்துவம் (BSMS), ஆயுர்வேத மருத்துவம் (BAMS) ஆகிய பட்டம் பெற்றவர்கள், சொந்தமாக மருத்துவ மையம், ஆய்வகம் மற்றும் மருந்தகம் அமைப்பதற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டம் மருத்துவம் சார் தொழிற்கல்வி பயின்ற முட நீக்கு வல்லுனர், மருந்தாளுனர், கண் கண்ணாடி விற்பவர் மற்றும் ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர் சொந்தமாக மருத்துவ மையம், ஆய்வகம் மற்றும் மருந்தகம் அமைப்பதற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பவர்கள் தகுதி வாய்ந்த ஆணையக்குழுவில் பதிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

சுய உதவிக்குழுக்களுக்கான சுழல் நிதி

குறு சிறு தொழில் நிலையங்களை உயர்த்தி வறுமை ஒழிப்பு நோக்கோடு, ஆதி திராவிடர்களை உறுப்பினர்களாகக் கொண்ட மகளிர் சுய உதவி குழுக்கள், ஆடவர் சுய உதவி குழுக்கள், மகளிர் மற்றும் ஆடவர் கலப்பு சுய உதவி குழுக்கள், திருநங்கைகள் சுய உதவி குழுக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சுய உதவி குழுக்கள் போன்ற சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் குழுக்களுக்கு ஒரு முறை மானியத் தொகையாக ரூ.25,000/- வழங்கப்படும். வங்கிகள் ரூ.50,000/- கடனுதவி வழங்கும். இத்தொகை குழுவின் கட்டமைப்பு நிதியினை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

சுய உதவிக் குழுக்களுக்கானப் பொருளாதார கடன் உதவித் திட்டம்

இத்திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களது பொருளாதார ஆளுகையை மேம்படுத்த குறைந்த வட்டியுடன் தேவையான நிதியுதவி வருமானம் ஈட்டத்தக்க தொழிலில் முதலீடு செய்ய வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர்களை உறுப்பினர்களாகக் கொண்ட மகளிர் சுய உதவி குழுக்கள், ஆடவர் சுய உதவி குழுக்கள், மகளிர் மற்றும் ஆடவர் கலப்பு சுய உதவி குழுக்கள், திருநங்கைகள் சுய உதவி குழுக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சுய உதவி குழுக்கள் போன்ற சுய உதவி குழுக்களுக்கு வருமானம் ஈட்டக்கூடிய தொழிலினை செய்வதற்காக நிதியுதவி வழங்கப்படுகிறது. குழுக்கள் திட்ட மதிப்பீட்டில் ஒவ்வொரு குழுவிற்கும் 50 விழுக்காடு திட்டத்தொகை அல்லது அதிகபட்சம் ரூ.2.50 இலட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது.

இந்திய குடிமைப் பணி முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதி உதவி

இந்திய குடிமைப் பணியில் ஆதி திராவிடர்களின் பங்களிப்பினை உயர்த்தும் வண்ணம் இந்திய குடிமைப்பணி முதல் நிலைத் தேர்வில் (Preliminary Examination) தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு ரூ.50,000/- நிதி உதவி வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு தேர்வாணையம் தொகுதி-1 முதன்மைத் தேர்வு எழுதுவதற்கு நிதியுதவி

தமிழ்நாடு தேர்வாணையம் தொகுதி - 1 மாநில அளவிலான உயர்ந்த குடிமைப் பணி தேர்வாகும். இந்தத் தேர்வு எழுதும் ஆதிதிராவிடர் இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு தலா ரூ.50,000 வீதம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இளம் சட்டப் பட்டதாரிகளுக்குச் சுயமாக தொழில் செய்வதற்காக நிதியுதவி

தமிழ்நாடு சட்டப் பல்கலைக் கழகம், நிகர் நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் சட்டப் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற சட்டக் கல்லுாரிகளில் பயின்ற, 25 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட இந்திய பார் கவுன்சில் மற்றும் மாநில பார் கவுன்சிலில் பதிவு பெற்ற சட்டப் பட்டதாரிகள் சுயமாகத் தொழில் துவங்க இத்திட்டத்தின் கீழ் ரூ.50,000/- நிதியுதவி ஒரு முறை வழங்கப்படுகிறது.

பட்டயக் கணக்கர் மற்றும் செலவுக் கணக்கர்கள் சுயமாகத் தொழில்புரிய நிதி உதவி

பட்டயக் கணக்கர் மற்றும் செலவுக் கணக்கர்களைச் சுயமாகத் தொழில் செய்வதற்கு ஊக்குவிப்பதற்காக தலா ரூ.50,000/- மானியமாக வழங்கப்படுகிறது.

தாட்கோ தலைவர் / மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி

மிகவும் நலிந்த நிலையில் உள்ள ஆதிதிராவிடர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி, ஆரம்ப கல்வி முதல் தொழிற்கல்வி வரை தொடர்வதற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி உதவிகள், சாதி கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் தகுதிவாய்ந்தவர்களுக்கு தேவைக்கேற்ற உதவி, நடைமுறை விதிகளுக்குட்பட்டு இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதி

மாற்று திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், நலிந்த கலைஞர்கள், 40 வயதிற்கு மேல் திருமணம் ஆகாத பெண்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலர் இல்லாத குழந்தைகள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்களால் தகுதியானவர்கள் என கண்டறியப்படுபவர்கள், இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமைப் பெற்று, தலா ரூ.20,000/- வரை மாவட்ட ஆட்சியர் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

தொழில் தையல் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக உள்ள ஆதிதிராவிடர் மகளிர்களுக்கு நிதியுதவி

மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கேற்ப சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட இயக்குநர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தொழில் தையல் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள ஆதிதிராவிட மகளிர்களுக்கு நவீன தையல் இயந்திரம் வழங்கிட தையல் இயந்திர விலையில் 30 விழுக்காடு மானியமும், சிறப்பு மைய நிதியுதவியிலிருந்து எஞ்சிய 70 விழுக்காடு விளிம்புக் கடனாகவும், தாட்கோ பங்கு மூலதனத்திலிருந்து 4 விழுக்காடு வட்டிக்கு வழங்கப்படுகிறது.

பழங்குடியினருக்காக தாட்கோவினால் செயல்படுத்தப்படும் பொருளாதார முன்னேற்றத் திட்டங்கள்

தனி நபர் திட்டங்களுக்கு திட்டத் தொகையில் 50 சதவீதம் குறைந்தபட்சமாக ரூ.3.75 இலட்சம் அதிகபட்சமாக ரூ.5.50 இலட்சம் தாட்கோ மூலம் மானியமாக விடுவிக்கப்படுகிறது.

நிலம் மேம்பாட்டுத் திட்டம்

நிலம் வைத்திருக்கும் பழங்குடியினர் தங்கள் நிலத்தை மேம்படுத்த இத்திட்டத்தின் வாயிலாக சிறு பாசனம், கிணறு வெட்டுதல் மற்றும் மின் மோட்டார் அமைத்து நீர் வளம் மற்றும் நில வளம் மேம்படுத்த 50% மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுகிறது.

துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் ஒரு இணைப்புக்கான கட்டணம் ரூ.75,000/- என்ற வீதத்தில் பழங்குடியின் விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்

பழங்குடியினர் மக்களை தொழிலாளர் நிலையில் இருந்து, தொழில் முனைவோராக உயர்த்தும் நோக்கில், 18 வயது முதல் 65 வயது வரை உள்ள பழங்குடியினருக்கு பல்வேறு தொழில் துவங்க நிதியுதவி வழங்கப்படுகிறது.

பழங்குடி இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட பழங்குடி இளைஞர்கள் தங்களுக்குத் தெரிந்த மற்றும் விருப்பமான தொழில் செய்யவும், ஒட்டுனர் உரிமம் வைத்துள்ள பழங்குடி இளைஞர்களுக்கு பயணியர் வாகனம் மற்றும் ஈப்பு வாங்குவதற்கும் நிதி உதவி வழங்கப்படுகிறது.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி

பழங்குடியினரை உறுப்பினர்களாகக் கொண்ட பெண்களுக்கான சுய உதவி குழு, ஆண்களுக்கான சுய உதவி குழு, இருபாலர்களுக்கான சுய உதவி குழு, திருநங்கைகளுக்கான சுய உதவி குழு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சுய உதவி குழு போன்ற சுய உதவி குழுக்களுக்கு வறுமை ஒழிப்பு நோக்கோடு சுழல் நிதி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பழங்குடியினர் குழுக்களுக்கு ரூ.25,000 மானியத் தொகையாக வழங்கப்படும்.

சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி

பழங்குடியினரை உறுப்பினர்களாகக் கொண்ட பெண்களுக்கான சுய உதவி குழு, ஆண்களுக்கான சுய உதவி குழு, இருபாலர்களுக்கான சுய உதவி குழு, திருநங்கைகளுக்கான சுய உதவி குழு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சுய உதவி குழு, மற்றும் விதவைகளுக்கான சுய உதவி குழு போன்ற சுய உதவி குழுக்களுக்கு வருமானம் ஈட்டக் கூடிய தொழிலினை செய்வதற்காக நிதியுதவி வழங்கப்படுகிறது.

திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்

ஆதிதிராவிடர் இளைஞர்களுக்குத் தகுதியான வேலை வாய்ப்பினை உருவாக்கிடவும், வேலை போட்டிகளுக்கேற்ப அவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையிலும், பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் அளிக்கப்படுகின்றன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்திட இப்பயிற்சிகள் மத்திய சிறப்பு நிதியுதவித் திட்டத்தின் 10 விழுக்காடு நிதியினைக் கொண்டும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதியின் மூலமும் வழங்கப்படுகின்றன.

தாட்கோ மூலம் நடத்தப்படும் பயிற்சிகள்

 • மல்டிமீடியா & அனிமேஷன் உதவியாளர்
 • ஆட்டோகேட் & கட்டடக் கலை மற்றும் உள்நாட்டு 2D வரைவு
 • ஃபேஷன் டெக்னாலஜி
 • ஆப்பரல் பேட்டர்ன் தயாரித்தல்
 • அழகு கலை பயிற்சி
 • முடி ஒப்பனையாளர் பயிற்சி
 • குளிர்சாதனப் பழுது மற்றும் பராமரிப்பு
 • மின் வினைஞர்
 • தையல் பயிற்சி
 • அழகு கலை வல்லுநர் & முடி ஒப்பனையாளர்
 • கணினி வன்பொருள் உதவியாளர்
 • சில்லறை விற்பனை
 • பொறியாளர் பயிற்சி
 • கட்டமைப்பு பொறியியலாளர்
 • தொலைத் தொடர்பு பயிற்சி
 • சூரிய மின் நிறுவி மற்றும் சேவை
 • சுற்றுலா ஏஜென்ட் மற்றும் போக்கு வரத்து பயிற்சி
 • கணக்கியல்
 • டிக்கெட் முன்பதிவு உதவியாளர்
 • கை எம்ப்ராய்டரி
 • பிளாஸ்டிக் செயல்முறை
 • ஊசி மோல்டிங்
 • பிளவு மோல்டிங்
 • இயந்திரம் இயக்குபவர் பயிற்சி

நிதியாண்டு 2013 - 2014 முதல் 2016-2017 வரை 21,391 இளைஞர்களுக்கு 55 நிறுவனங்கள் மூலம் ரூ.30.04 கோடி மதிப்பீட்டில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

கட்டுமானப் பிரிவு

தாட்கோ நிறுவனத்தின் கட்டுமானப் பிரிவு, இத்துறையைச் சார்ந்த மாணாக்கர்களுக்குப் பள்ளிக் கட்டடங்கள், பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள், ஆய்வுக் கூடங்கள், கழிப்பறைகள், சமுதாய நலக் கூடங்கள் கட்டுதல் மற்றும் இத்துறை மக்களின் குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகள் செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசுப் பணிகள்

இத்துறை மாணாக்கருக்கென மத்திய அரசின் உதவியுடன் பாபு ஜெகஜீவன்ராம் சத்ரவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் விடுதிக் கட்டடங்கள், ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டடங்கள் முதலிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநில அரசுப் பணிகள்

இத்துறை மாணாக்கர்களுக்கான தொழிற்பயிற்சி நிலையக் கட்டடம், தொழிற்பயிற்சி நிலைய விடுதிகள், வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள், விடுதிகள், பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகள், சுற்றுச் சுவர்கள், சமுதாய நலக்கூடங்கள், கழிப்பறைகள், தார் சாலைகள் அமைத்தல் மற்றும் புதுப்பித்தல், பழங்குடியினர் விடுதிகளின் பராமரிப்பு மற்றும் பழுது நீக்குதல் போன்ற பணிகளுக்கு மாநில அரசு அனுமதி வழங்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆதாரம் : ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு அரசு

2.88888888889
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top