பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு - 2018 - 2019

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு வழங்குவதில் அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த இலக்கை அடைய அரசு அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தினை பொருளாதார வேற்றுமை உணர்வு இன்றி அனைத்து குடும்பங்களும் பயன்பெறுமாறு நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்திட்டம் உணவுப் பாதுகாப்பை வழங்கும் சிறந்த திட்டம் என அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது.

நியாயவிலைக் கடைகளுக்கு குறித்த நேரத்தில் பொருட்களை விநியோகிக்கவும் அதனை சிறந்த முறையில் கண்காணிக்கவும் தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டம் முழு கணினிமயமாக்கப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிப்பதற்கு ஏதுவாக அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது போலி குடும்ப அட்டைகள் மற்றும் போலிப்பட்டியல்கள் களைவதற்கும் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் அரிசி மற்றும் இதர பொருட்களை முறைப்படுத்தவும் உதவியாக உள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் நவீன வசதிகளுடன் கூடிய சேமிப்பு வசதிகளை விவசாயிகள் மற்றும் இதர வியாபார நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக தோற்றுவிக்கப்பட்டது. இந்நிறுவனம் பொருட்களின் சேமிப்பு இழப்பினை கட்டுப்படுத்தவும் பொருட்களின் சேமிப்புத் திறனை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, சேமிப்புக் கிடங்குகளைக் கட்டியும், இயக்கியும் வருகிறது.

நுகர்வோர் பாதுகாப்பு என்பது இத்துறையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக விளங்குவதால் அதனை செயல்படுத்தும் வகையில் தகுதி வாய்ந்த நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் அமைக்கப்பட்டு அதற்கு போதுமான அளவு அதிகாரம் வழங்கப்பட்டு இதன்மூலம் நுகர்வோர் குறைகள் முடிக்கப்பட்டு நுகர்வோர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு விலைக் கண்காணிப்புக் குழு ஒன்றை மாநில அளவில் அமைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினை கண்காணித்து கட்டுப்படுத்த அவ்வப்பொழுது கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அத்தியாவசியப் பொருட்களின் பதுக்கல் மற்றும் கடத்தலை தடுக்க குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறையின் அமலாக்கப்பிரிவு செயல்பட்டுவருகிறது.

பொது விநியோகத் திட்டம்

தமிழ்நாடு, பொருளாதார வேற்றுமை இன்றி பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை அனைத்துக் குடும்பங்களுக்கும் விரிவுபடுத்தி, அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் எக்காரணத்தினாலும், எவரும் விடுபட்டுவிடாமல், அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு அளிப்பதில் பயனுள்ள கருவியாக சிறப்புடன் செயல்பட்டு வருவதாக அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 01.11.2016 முதல் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) -2013 அமல்படுத்தப்பட்டது. இதன்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட அளவின் அடிப்படையில் அரிசி வழங்கப்படுவதுடன் ஏற்கனவே குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அரிசியின் அளவை குறைவு செய்யாமலும்,

அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் தன்மை மாறாமலும் இத்திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 01.06.2011 முதல் விலையின்றி அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

பொது விநியோகத் திட்டம் முழு கணினிமயமாக்கல் பணியானது அத்தியாவசியப் பொருட்கள் ஒதுக்கீடு, நகர்வு மற்றும் விற்பனை ஆகியவற்றை கண்காணிப்பதும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பினை உறுதி செய்வதற்கும் உதவியாக உள்ளது. இத்துறை பொது மக்களுக்கு அளித்து வரும் சேவையினை எளிதில் பெறுவதற்கும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் உள்ளது. நடைமுறையில் இருந்த பழைய காகித வடிவிலான குடும்ப அட்டைகள் முற்றிலுமாக மாற்றப்பட்டு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் பங்கு

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை பொது விநியோகத் திட்டத்தினை ஒழுங்கு முறைப்படுத்துவது குறித்த அரசின் கொள்கைகளை அமல்படுத்தியும், மேலும், அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம் 1955ன் பிரிவுகளையும் அதன் கீழ் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

மேற்காணும் நடவடிக்கைகளுடன், இத்துறை நுகர்வோர் நலன் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கியமான பங்கு வகிக்கிறது. பொதுமக்கள் மற்றும் பள்ளி/கல்லூரி மாணவர்களிடையே நுகர்வோர் உரிமைகள் மற்றும் நுகர்வோர் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் (த.நு.அ) மற்றும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் (கு.நும்) மூலமாக இத்துறை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பங்கு

தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனமான தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இந்திய உணவுக் கழகத்திலிருந்து அத்தியாவசியப் பொருட்களான அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றை கொள்முதல் செய்து அவற்றை சேமித்து பொது விநியோகத் திட்டத்திற்கு விநியோகம் செய்து வருகிறது. இதே போன்று சர்க்கரையை தமிழ்நாடு சர்க்கரை கூட்டமைப்பால் கண்டறியப்பட்டுள்ள சர்க்கரை ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்து குறிப்பிட்டுள்ள கிடங்குகளுக்கு வழங்கியும், தேவைப்படும்போது வெளிச்சந்தையின் மூலமாக கொள்முதல் செய்தும், சிறப்பு பொது விநியோகத் திட்டத்திற்கு தேவையான இதர அத்தியாவசியப் பொருட்களையும் நேரடியாக வெளிச் சந்தையில் ஒப்பந்தப்புள்ளிகளின் மூலமாக கொள்முதல் செய்தும் வருகிறது.

நியாய விலைக்கடைகள்

பெரும்பாலான நியாய விலைக் கடைகள் கூட்டுறவுச் சங்கங்களாலும், குறைந்த எண்ணிக்கையிலான நியாய விலைக் கடைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தாலும் நடத்தப்படுகின்றன. தனியார் எவரும் நியாய விலைக் கடையை நடத்த அனுமதிக்கப்படுவதில்லை என்பது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பொது விநியோகத் திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.

பொது விநியோகத் திட்டத்தினை முழு கணினிமயமாக்கும் நடவடிக்கையின் கீழ் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்கப்பட்டு அதன்மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது நியாயவிலைக் கடைகளில் அனைத்து நடவடிக்கைகளும் கணினிமயமாக்கப்பட்டதன் பயனாக, பொது விநியோகத் திட்டத்திற்கான அத்தியாவசியப் பொருட்களின் ஒதுக்கீட்டினை இணையவழி (Online) மூலம் மேற்கொள்ளுதல், அத்தியாவசியப் பொருட்களின் நகர்வினை நிகழ் நேரத்தில் கண்காணித்தல், கிடங்குகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றை கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகள் எளிதாக மேற்கொள்ளப்படுகிறது.

31.05.2018 நிலவரப்படி, தமிழ்நாட்டில் 35,169 நியாய விலைக் கடைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் 25,589 முழு நேரக் கடைகளும், 9580 பகுதி நேரக் கடைகளும் ஆகும். இதன் விபரம்

பின்வருமாறு :

வ எண்

நிறுவனம்

 

முழு நேரக் கடைகள்

பகுதி நேரக்கடைகள்

மொத்தம்

1

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

1,178

277

1,455

2

கூட்டுறவுச் சங்கங்கள் (கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் இயங்குபவை)

23,727

9,100

32,827

3

இதர கூட்டுறவுச் சங்கங்கள்

314

102

476

4

மகளிர் சுய உதவிக் குழுக்கள் நடத்தும் நியாய விலைக் கடைகள்

370

41

411

 

மொத்தம்

25,589

9,580

35,169

மக்கள் எளிதில் சென்று வர முடியாத பகுதிகள், மலைப்பகுதிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவும் வகையில், குடும்ப அட்டைதாரர்கள் வசதியாக சென்று வர புதிய நியாய விலைக் கடைகள் திறக்க அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. அதனால், அவர்கள் இருப்பிடத்திலிருந்து 15 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்று பொருட்களை வாங்கும் நிலை இல்லை. குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளின்படி, நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேவைப்படும் போது தளர்த்தி புதிய நியாய விலைக் கடைகள் திறக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மின்னணு குடும்ப அட்டைகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டம் 01.04.2017 அன்று துவக்கி வைக்கப்பட்டது. 31.05.2018 நிலவரப்படி 1,96,16,093 மின்னணு குடும்ப அட்டைகள் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளன.

குடும்ப அட்டைகளின் வகைகள்

தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் தேவை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் தங்களுக்கான குடும்ப அட்டை வகையினை தேர்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் தகுதியான அளவு ஆகியவற்றின் அடிப்படையில் குடும்ப அட்டைகள் ஐந்து வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 31.05.2018-ன்படி பல்வேறு வகையான குடும்ப அட்டைகளின் விபரம் மற்றும் அவற்றிற்கு பெறத் தகுதியான அத்தியாவசியப் பொருட்கள் அளவு மற்றும் எண்ணிக்கை விபரம்

பின்வருமாறு:

வ எண்

குடும்ப அட்டையின் வகை

தகுதியான அத்தியாவசியப் பொருட்கள் விபரம்

குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை

1

முன்னுரிமை குடும்ப அட்டைகள் (PHH)

அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும்

76,99,940

2

முன்னுரிமை குடும்ப அட்டைகள் - அந்தியோதயா அன்னயோசனா) (PHH-AAY)

35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும்

18,64,600

3

முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் (NPHH)

அரிசிஉள்ளிட்ட அனைத்துப் பொருட்களும்

90,08,842

4

முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள். சர்க்கரை (NPHH-S)

சர்க்கரை விருப்பகுடும்ப அட்டைகள் (அரிசி தவிர பிற அத்தியாவசியப் பொருட்கள்)

10,01,605

 

5

முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் - எப்பொருளும் இல்லாதவை

(NPHH-NC)

எப்பொருளும் இல்லாதவை

41,106

 

மொத்தம்

1,96,16,093

அந்தியோதயா அன்னயோசனா திட்ட குடும்ப அட்டைகள்

மாவட்ட ஆட்சித் தலைவர்களால் அவ்வப்போது புலத்தணிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் வாயிலாக, வறியவர்களில் மிகவும் வறியவர்கள் கண்டறியப்பட்டு அவர்களது குடும்ப அட்டைக்கு அந்தியோதயா அன்னயோசனா திட்ட முத்திரையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பயனாளிகளின் எண்ணிக்கை மைய அரசின் அறிவுரைகளின்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில் இருந்து மிக வறிய நிலையிலுள்ள தகுதி படைத்த பயனாளிகள் கண்டறியப்பட்டு இத்திட்டம் அவ்வப்போது விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. நம் மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அந்தியோதயா அன்னயோசனா திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கை 18,64,600 ஆகும்.

அந்தியோதயா அன்னயோசனா திட்டப் பயனாளிகளுக்கு 01.06.2011 முதல் 35 கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நம்மாநிலத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு முழுவதுமாக உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகள்

திருநங்கைகள் சமூகத்தில் ஒரு அங்கமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது. 31.05.2018 முடிய தமிழ்நாட்டில், 2,293 குடும்ப அட்டைகள் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

காவல் துறை / சிறைத் துறை / வனத் துறை பணியாளர்களுக்கான குடும்ப அட்டைகள்

மின்னணு குடும்ப அட்டைகள் ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், காவல் துறை பணியாளர்களில் இரண்டாம் நிலை காவலர் முதல் காவல் ஆய்வாளர் வரையிலும், வனத்துறை பணியாளர்களில் காவடி முதல் வனச் சரகர் வரையிலும் மற்றும் சிறைத்துறை பணியாளர்களில் இரண்டாம் நிலை காவலர் முதல் துணை சிறைக் காவலர் வரையிலும் உள்ள சீருடைப் பணியாளர்களுக்கு, முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் (NPHH) வழங்கப்பட்டு நியாய விலைக் கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரங்களில் காவலர் அட்டை' எனக் குறிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சீருடைப் பணியாளர்களின் நலன் கருதி, நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களான பருப்பு, சர்க்கரை மற்றும் பாமாயில் ஆகியவை கீழ்க்கண்ட விவரப்படி பாதி விலையில் வழங்கப்படுகிறது:

சர்க்கரை - ரூ.12.50

பருப்பு - ரூ.15.00

பாமாயில் - ரூ.12.50

31.05.2018 நிலவரப்படி 64,450 குடும்ப அட்டைகள் நடைமுறையில் உள்ளன.

முதியோர் உதவித் தொகை பெறுவோருக்கான அட்டை (OAP Cards)

தற்போது அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ள 1,96,16,093 மின்னணு குடும்ப அட்டைகளைத் தவிர 4,31,475 முதியோர் உதவித் தொகை பெறுவோருக்கான அட்டைகளும் உள்ளன. இந்த அட்டைகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ விலையில்லா அரிசி மட்டும் வழங்கப்படுகிறது.

தகுதியற்றகுடும்ப அட்டைகளைக் களைதல்

குடும்ப அட்டை வழங்கும் அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று தீவிரத் தணிக்கையை மேற்கொள்வதன் மூலம் போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கப்படுகின்றன. அதிகபட்ச மானிய விலையில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதால், மேற்படி பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதன் பொருட்டு 01.06.2011 முதல் தலத் தணிக்கையின் மூலம் 5,47,550 குடும்ப அட்டைகள் தகுதியற்றதென கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. 2016-2017ஆம் ஆண்டில் குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண் விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின் சுமார் 10 லட்சம் தகுதியில்லா குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டதன் விளைவாக நுகர்வு 1.40 கோடி அலகுகள் குறைந்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விநியோக அளவு

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் கூடுதலாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. விநியோகிக்கப்பட்டு வரும் அத்தியாவசியப் பொருட்களின் அளவு மற்றும் அவற்றிற்கான விலை ஆகியவற்றின் விபரம்

பின்வருமாறு :

எண்

பொருட்கள்

விற்பனைவிலை (கிலோ / லிட்டர் ஒன்றிற்கு)

மாதாந்திர விநியோக

1

அரிசி

01.06.2011 முதல் அரிசி விலையின்றி வழங்கப்பட்டு வருகிறது

அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு நபருக்கும் (குழந்தை உட்பட) தலா 5 கிலோ வீதம் அல்லது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்துவதற்கு முன் வழங்கப்பட்ட அரிசியின் அளவில் எது அதிகமோ அது வழங்கப்பட்டு வருகிறது. அந்தியோதயா அன்னயோசனா திட்டத்தில் 96T6IT குடும்ப அட்டைதாரர்களுக்கு, குடும்ப அட்டை ஒன்றுக்கு தலா 35 கிலோ அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது.

2

சர்க்கரை

அந்தியோதயா அன்ன யோசனா திட்டத்தின்(AAY) கீழ் உள்ள குடும்பம் அட்டைதாரர் களுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.13.50/- மற்றும் இதர குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.25/-

மாதம் ஒன்றிற்கு ஒரு நபருக்கு 500 கிராம் வீதம் அதிகபட்ச அளவு 2 கிலோவும், சர்க்க ரை விருப்ப குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு நபருக்கு மாதமொன்றுக்கு 500 கிராம் வீதமும், கூடுதலாக மாதமொன்றுக்கு 3 கிலோ சர்க்கரையும், அதிகபட்சமாக 5 கிலோவும் வழங்கப்படுகிறது

3

கோதுமை

அரசாணை (நிலை) எண். 16, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, நாள் :02.02.17ன்படி கோதுமை விலையின்றி வழங்கப்பட்டு வருகிறது

சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு அரிசியின் அளவில் அரிசிக்கு பதிலாக 10 கிலோ கோதுமை, இதர பகுதிகளில் 5 கிலோ கோதுமை, இருப்பின் அளவைப் பொறுத்து விலையின்றி வழங்கப்படுகிறது

4

மண்ணெண்ணெய்

லிட்டர் ஒன்றுக்கு ரூ13.60 முதல் ரூ.14.20வரை

குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடம் மற்றும் பெற்றுள்ள ளிவாயு இணைப்பின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், குடும்ப அட்டைகளுக்கு மாதம் ஒன்றுக்கு 3 லிட்டர் முதல் 15 லிட்டர்வரை.

5

துவரம் பருப்பு

ஒரு கிலோ ரூ. 30/-

மாதந்தோறும் குடும்ப அட்டை ஒன்றுக்கு 1 கிலோ

6

பாமாயில்

ஒரு லிட்டர் ரூ.25/

மாதந்தோறும் குடும்ப அட்டை ஒன்றுக்கு 1லிட்டர்

அரிசி

தமிழ்நாட்டு மக்களின் பிரதான உணவாக அரிசி திகழ்கிறது. மத்திய தொகுப்பிலிருந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழகம் மூலமாக அரிசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போதைய மாதாந்திர அரிசி ஒதுக்கீடு மற்றும் இந்திய உணவுக் கழகம் நிர்ணயித்துள்ள அரிசியின் விற்பனை விலை விவரம்

பின்வருமாறு :

வ எண்

வகை

மாத ஒதுக்கீடு (மெ.டன்னில்)

இந்திய உணவுக் கழக விற்பனை விலை (கிலோ ஒன்றுக்கு)

1

அந்தியோதயா அன்னயோசனா (AAY)

57,437

ரூ.3.00

2

முன்னுரிமை குடும்பங்கள் (Priority House Holds)

1,35,784

ரூ.3.00

3

ஈடுசெய் ஒதுக்கீடு (Tide Over)

99,773

ரூ.8.30

மொத்தம்

2,92,994

அரிசியின் சராசரி மாதாந்திர நுகர்வு 3,17 இலட்சம் மெட்ரிக் டன்.

சர்க்கரை

சர்க்கரை ஆலைகளுக்கு லெவி கட்டுப்பாடுகளை ஜூன் 2013 முதல் மத்திய அரசு நீக்கியதன் விளைவாக மாநில அரசுகள் பொது விநியோகத் திட்ட சர்க்கரை விநியோகத்திற்கு மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், நியாயவிலைக் கடைகளில் பொது விநியோகத் திட்ட சர்க்கரையினை கிலோ ஒன்றிற்கு ரூ 13.50 எனத் தொடர்ந்து விற்பனை செய்து வரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு பொது விநியோகத் திட்ட சர்க்கரை ஒதுக்கீடுகளுக்கு கிலோ ஒன்றிற்கு ரூ18.50 மானியம் வழங்க உறுதியளித்திருந்தது. இதன் மூலம் மாதம் ஒன்றிற்கு வரையறுக்கப்பட்ட 10,820 மெடன் சர்க்கரைக்கு மட்டும் மானியம் வழங்கப்பட்டு வந்தது. எனினும், 01.06.2017 முதல் மத்திய அரசு மாதம் ஒன்றிற்கு வழங்கி வந்த இந்த அளவினை குறைத்து அந்தியோதயா அன்னயோசனா (AAY) குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.18.50 என்கிற மானிய விலையில் 1,864 மெடன்னுக்கான மானியத்தை மட்டும் வழங்கி வருகிறது. இது மாநிலத்தின் மானிய சுமையை அதிகரித்துள்ளது. இந்த செலவினங்களை கட்டுப்படுத்த மாநில அரசு சர்க்கரை விலையினை மாற்றம் செய்து அந்தியோதயா அன்னயோசனா (AAY) அல்லாத இதர குடும்ப அட்டைகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.25/- என்ற விலையில் 01.11.2017 முதல் வழங்க அரசாணை (நிலை) எண். 149, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, நாள் 27.10.2017ன் படி உத்தரவிடப்பட்டுள்ளது.

கோதுமை

மத்திய அரசு உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன்படி நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் 13,485 மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்கீடு செய்து வருகிறது. 02.02.2017 முதல் சென்னை மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு 10 கிலோ வீதமும், ஏனைய பகுதிகளில் குடும்ப அட்டை ஒன்றுக்கு 5 கிலோ வீதமும் நியாயவிலைக் கடைகளில் உள்ள இருப்பின் அளவைப் பொறுத்து அரிசிக்கு பதிலாக கோதுமை விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

மண்ணெண்ணெய்

மண்ணெண்ணெய் ஒதுக்கீடு

தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் ஒதுக்கீடு மத்திய அரசால் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது மாநிலத்தின் மாதாந்திர தேவையில் 38 சதவிகிதம் மட்டுமே அதாவது அக்டோபர் 2017 முதல் 16148 கி.லி மாத ஒதுக்கீடாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் மண்ணெண்ணெய் பெற தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு சீராக மண்ணெண்ணெய் வழங்க மாத ஒதுக்கீடாக 42668 கி.லி மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் மண்ணெண்ணெய் பெறத் தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சீரான அளவில் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்ற நோக்கில், மாநிலத்தின் மண்ணெண்ணெய் முழுத் தேவையினையும் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசினை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் மத்திய அரசு 01.07.2016 முதல் மண்ணெண்ணெய்க்கான கிடங்கு முன் இருப்பு விலையினை இதர காரணிகளை உள்ளடக்கி லிட்டர் ஒன்றிற்கு ரூ. 8.62 என்று இதுவரை இல்லாத அளவில் உயர்த்தியதற்கு மாநில அரசின் எதிர்ப்பினை பதிவு செய்ததுடன், இவ்விலை உயர்வினை முழுவதுமாக திரும்பப் பெற மத்திய அரசினை வலியுறுத்தியுள்ளது. 01.08.2011 முதல் மண்ணெண்ணெய் பெறத் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.13.60 முதல் ரூ.14.20 வரையிலான சில்லறை விற்பனை விலையில் பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மண்ணெண்ணெய் வழங்கும் நிலையம்

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குதலை ஒழுங்குபடுத்த மண்ணெண்ணெய் வழங்கு நிலையங்கள் அமைக்கப்பட்டு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மண்ணெண்ணெய் வழங்கு நிலையத்தில் 5,000 முதல் 15,000 வரை குடும்ப அட்டைதாரர்கள் மண்ணெண்ணெய் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் வழங்கும் நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படுவதால் மாதம் முழுவதற்கும் தேவையான இருப்பு மற்றும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சரியான அளவில் மண்ணெண்ணெய் வழங்குவது உறுதி செய்யப்படுகிறது. தற்போது கூட்டுறவுத் துறையின் கீழ் 255 மண்ணெண்ணெய் வழங்கு நிலையங்களும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 36 மண்ணெண்ணெய் வழங்கு நிலையங்களும், ஆக மொத்தம் 291 மண்ணெண்ணெய் வழங்கு நிலையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து மண்ணெண்ணெய் வழங்கு நிலையங்களுக்கும் விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிறப்புப்பொது விநியோகத் திட்டம்

வெளிச்சந்தையில் துவரம்பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் விலையேற்றத்தினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு துவரம்பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 20,000 மெட்ரிக் டன் துவரம்பருப்பு மற்றும் 1,50,00,000 லிட்டர் (பாக்கெட்டுகள்) செறிவூட்டப்பட்ட பாமாயில் ஆகியவை மாதந்தோறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அரசாணை (நிலை) எண்.14, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, நாள் 29.01.2018-ன்படி, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகம் பிப்ரவரி 2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தில் சிறுபான்மையினருக்கு அரிசி வழங்குதல்

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு பள்ளிவாசல்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் பச்சரிசி ஆண்டுதோறும் அரசினால் வழங்கப்பட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டு 5284.28 மெட்ரிக் டன் பச்சரிசி கிலோ ரூ.1/- என்ற விலையில் 2927 பள்ளிவாசல்களுக்கு ரமலான் நோன்பிற்காக மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டது. இதற்கென ரூ.5284,289 மாநில அரசு ஒதுக்கியது.

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத் துண்டுடன் தலா 20 கிராம் முந்திரி, உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு 2018-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தினை தமிழ்நாடு அரசு 2016 நவம்பர் 1ம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது. இச்சட்டத்தின்படி நபர் ஒருவருக்கு மாதந்தோறும் 5கிலோ அரிசி என்ற அளவில் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். எனினும், இச்சட்டத்தினை செயல்படுத்தும் போது அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் ஏற்கனவே பெற்று வந்த அரிசியின் அளவு அல்லது நபர் ஒருவருக்கு மாதமொன்றுக்கு 5 கிலோ அரிசி என்ற அளவு இவற்றில் எது அதிகமோ அந்த அளவில் அரிசியினை விலையின்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவருக்குமான பொது விநியோகத்திட்டத்தின் தன்மை மாறாமல், இத்திட்டத்தை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டு அவ்வாறே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முன்னுரிமையுள்ள மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கான மாதாந்திர வழங்கல் அளவில் வித்தியாசம் இல்லாவிட்டாலும், முன்னுரிமை பயனாளிகளை கண்டறிவது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி அவசியமானதாகும். அதன்படி மத்திய அரசு நிர்ணயித்துள்ள நகரப் பகுதியில் 37.79% மற்றும் கிராமப் பகுதியில் 62.55% என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் முன்னுரிமை பயனாளிகளை கண்டறியும் பொருட்டு 27.10.2016 அன்று அரசால் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டது. முன்னுரிமை பயனாளிகள் மற்றும் முன்னுரிமையற்ற பயனாளிகளின் இறுதிப் பட்டியல் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கண்காணிப்புக் குழுக்கள்

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள் 2017-ன் கீழ், பொது விநியோகத் திட்டத்தின் பயன்கள் உரியவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்திட, மாநிலம் / மாவட்டம் / வட்டம் மற்றும் நியாயவிலைக் கடை வாரியாக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநில/ மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் காலாண்டிற்கு குறைந்தது ஒரு முறையேனும், வட்டம்/ மண்டலம் மற்றும் நியாயவிலைக் கடை அளவிலான குழுக்கள் மாதத்திற்கு ஒரு முறையேனும் கூட்டப்பட வேண்டும்.

குறைதீர் அமைப்பு

பொது மக்களின் குறைகளை தீர்வு செய்யும் பொருட்டு, மாவட்ட வருவாய் அலுவலர்கள் மாவட்ட குறை தீர் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகரைப் பொறுத்த வரையில், துணை ஆணையர் வடக்கு தெற்கு ஆகியோர் மாவட்ட குறைதீர் அலுவலர்களாக செயல்பட்டு வருகிறார்கள். குறைதீர் அலுவலர்களின் தொடர்பு விவரங்கள் பொது விநியோகத் திட்ட வலைதளம் மற்றும் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குடும்ப அட்டைதாரர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் வலுவான குறைதீர்க்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக கட்டணமில்லா தொலைபேசி எண் 1967 மற்றும் 1800 425 5901 தற்போது பயன்பாட்டில் உள்ளது.

மாநில உணவு ஆணையம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ஐ நடைமுறைபடுத்தும் விதமாக 16.02.2018 அன்று மாநில உணவு ஆணையம் தமிழ்நாடு அரசினால் அமைக்கப்பட்டு, அதற்கு தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநில உணவு ஆணையம் 28.02.2018 முதல் செயல்பட்டு வருகிறது.

பொது விநியோகத் திட்டத்தினை கணினிமயமாக்கல் மற்றும் மின்னணு குடும்ப அட்டை (Smart family Card) வழங்குதல்

தமிழ்நாட்டில் ஒரு திட்ட ஒருங்கிணைப்பாளர் மூலமாக பொது விநியோகத் திட்டத்தினை முழு கணினிமயமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிப்பதற்கு ஏதுவாக அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொது விநியோகத் திட்டத்தினை முழுமையாக கணினிமயமாக்கியதன் மூலமாக, பொது விநியோகத் திட்டத்திற்கான அத்தியாவசியப் பொருட்களின் ஒதுக்கீட்டினை இணையவழி மூலம் மேற்கொள்ளுதல்,

அதன் நகர்வினை நிகழ் நேரத்தில் கண்காணித்தல், கிடங்குகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் தேவையான அளவு அத்தியாவசியப் பொருட்கள் இருப்பை உறுதிசெய்தல் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களின் உரிம அளவு சரியான முறையில் விநியோகிக்கப்படுவதை கண்காணித்தல் போன்றவற்றோடு தகுதியற்ற குடும்ப அட்டைகள் மற்றும் முறைகேடாக பட்டியலிடுதல் ஆகியவற்றை களைய உதவி செய்கிறது. மேலும், பொதுமக்கள் இணையம் மூலமாக புதிய குடும்ப அட்டைகள் பெற விண்ணப்பம் செய்வதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் போன்றவற்றை மேற்கொள்வதற்கும் மின்னணு குடும்ப அட்டை தொடர்பான விண்ணப்பங்களின் நிலையை அறிந்து கொள்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு பொது மக்கள் செல்லும் நேரம் சேமிக்கப்படுகிறது.

உணவு மானியம்

பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் அதிக மானியத்திற்குட்பட்ட விலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரிசி விலையின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. 2018-2019ஆம் நிதியாண்டிற்கு ரூ.6,000 கோடியினை அரசு உணவுமானியமாக ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆதாரம் - கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை

3.075
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
ச.பாரதிராஜா Aug 07, 2019 11:56 AM

ரேசன் கடைகளில் சீரகம் கடுகு பெருங்காயடப்பா விற்பனை செய்ய அரசு ரேசன் கடைகளுக்கு அனுமதிஅளித்துள்ளதா? ????

Raja Jul 22, 2019 07:11 PM

அரசு ரேசன் கடைகளில் ரின் சோப் போன்ற பொருட்களை விற்பனை செய்ய அனுமதி உள்ளதா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top