பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உயர் கல்வித் துறை - பாகம் 2 - பல்கலைக்கழகங்கள்

உயர் கல்வித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு (2017 - 2018) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

உயர்கல்வித்துறையின் ஆளுகையின் கீழ் பின்வரும் பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன:

சென்னைப் பல்கலைக்கழகம்

சென்னைப் பல்கலைக்கழகம் 1857-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம், 1923 - ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகச் சட்டத்தின்படி நிர்வகிக்கப்படுகிறது. தற்பொழுது இப்பல்கலைக்கழகத்திற்கு சேப்பாக்கம், மெரினா, கிண்டி, தரமணி, சேத்துப்பட்டு மற்றும் மதுரவாயல் (கள ஆய்வகம்) ஆகிய இடங்களில் ஆறு வளாகங்கள் உள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப் பட்டமையால், தற்போது இப்பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பில் சென்னை , காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் உள்ளன. கலை மற்றும் அறிவியல் கல்வி புலங்களில் போற்றத்தக்க பல்கலைக்கழகமாக விளங்கும் இப்பல்கலைக்கழகமானது, 87 கற்பித்தல் மற்றும் ஆய்வுத்துறைகள் மற்றும் 116 இணைவுக் கல்லுாரிகளைப் பெற்றுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம், தேசிய தரமதிப்பீட்டுக் குழுவின் (NAAC) உயர் மதிப்பீட்டினைத் தொடர்ந்து பெற்று வருகிறது. மேலும், இப்பல்கலைக்கழகம், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவினால் 'ஆற்றல்சால் கல்லூரிகள்' "(University with Potential for Excellence)" என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் 2017 (National Institutional Ranking Framework 2017) இன் படி இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் வரிசையில், இப்பல்கலைக்கழகம் 41 வது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும், இப்பல்கலைக்கழகம், 2016 ஆம் ஆண்டிற்கான QS BRICS தரவரிசைப் பட்டியலில் 47.7 புள்ளிகள் பெற்று தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் 89 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. தன்னாட்சிக் கல்லுாரி என்ற முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை சென்னைப் பல்கலைக் கழகத்தையே சாரும். தற்போது, தன்னாட்சித் தகுதி பெற்ற 23 கல்லுாரிகள் சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுள்ளன. அவற்றில் சில கல்லூரிகள், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் 'ஆற்றல்சால் கல்லூரிகள்' "(Colleges with Potential for Excellence)" என்ற அங்கீகாரத்தைப் பெற்ற கல்லூரிகளாக விளங்குகின்றன. இப்பல்கலைக்கழகம், உயர் கல்வி அனைவரையும் சென்றடையும் நோக்குடன், 1981 ஆம் ஆண்டு தொலைதுாரக் கல்வி நிறுவனத்தை தொடங்கியது. இத்தொலைதூரக் கல்வி நிறுவனம், 27 இளங்கலைப் படிப்புகளையும், 22 முதுகலைப் படிப்புகளையும், 18 தொழிற் படிப்புகளையும், 30 ஏனைய படிப்புகளையும் வழங்கி வருகிறது.

மேலும், தொலைதுாரக் கல்வி நிறுவனம் தனது ஆப்பிரிக்கா மின்னணு வளைதள திட்டம் (e-network Pan African Project) மூலம் M.Sc (IT), B.B.A. ஆகிய படிப்புகளை ஆப்பிரிக்க மாணாக்கர்களுக்கு வழங்கி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில், 2,681 மாணாக்கர்கள் (மாணவர் -1,186, மாணவியர் - 1,495) பயின்று வருகின்றனர். இப்பல்கலைக்கழகத்தின் நெம்மேலி மற்றும் திருவொற்றியூரிலுள்ள உறுப்புக் கல்லூரிகளில் 1,599 மாணாக்கர்கள் (மாணவர் - 619, மாணவியர் - 980) பயின்று வருகின்றனர். தொலைதுார கல்வி பாடத் திட்டத்தில் 93,164 மாணாக்கர்கள் (மாணவர் - 40,804, மாணவியர் -52,360) பயின்று வருகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், இப்பல்கலைக்கழகம் 12 புதிய மையங்களை நிறுவியுள்ளது. மேலும் மகளிர் கல்வி ஆய்வு, சமுதாயப் பணி, கணினி வலையமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம், பொருள் அறிவியல், உயிரி தகவலியல், ஆலோசனை உளவியல் ஆகிய 6 புதிய துறைகளையும் நிறுவியுள்ளது. இப்பல்கலைக்கழகம், காணொலிக் காட்சி வசதிகளுடன் கூடிய நவீன வகுப்பறைகள், அயல் மொழி ஆய்வுக் கூடங்கள், தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு மையம், பாடத்திட்ட மேம்பாட்டு மையம், மாற்றுத் திறனாளிகளுக்காகப் பல்வடிவக் கருவிகள் தயாரிக்கும் மையம், சுவாமி விவேகானந்தர் உயர் ஆய்வு மற்றும் கல்வி மையம், உயர் தொழில்நுட்பம் கொண்ட முதுகலை ஆய்வகம், தொழில்நுட்பம் மற்றும் கல்வி தொடர்பான எழுதுப் பயிற்சி மையம், பல்கலைக்கழக தொழில் கூட்டிணைவு மையம், அடைகாப்பு மற்றும் தொழில்நுட்ப மாற்று மையம் ஆகியவற்றை நிர்மானித்துள்ளது.

இப்பல்கலைக்கழகம், மாணாக்கர் நலனைக் கருத்தில் கொண்டு, தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் ஒற்றைச் சாளர முறையில் மாணாக்கர் சேர்க்கை, பல்கலைக்கழகம் மற்றும் கல்லுாரிகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலவசக் கல்வித் திட்டம், மாணவர் காப்பீட்டுத் திட்டம், பார்வை குறைவுள்ள மாணாக்கர்களுக்கு பேசும் நுாலகம், Wi-Fi மற்றும் இணையதளத்துடன் கூடிய விளையாட்டு மற்றும் மாணவர் நலன் சார்ந்த வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது. இப்பல்கலைக்கழகம், 2016 - 17 ஆம் ஆண்டு முதல், இணையவழி (Online) மூலம் பல்கலைக்கழக துறைகளுக்கான மாணாக்கர் சேர்க்கையை நடைமுறைப்படுத்தி வருகிறது.

2017 - 18 ஆம் ஆண்டில் மேற்கொள்ளவிருக்கும் செயல்பாடுகள் / திட்டங்கள்

(i) தேசிய உயர்கல்வி திட்டத்தின் (RUSA) கீழ் பெறப்பட்ட ரூ.1 கோடி நிதியுதவியுடன், தானியங்கி நிர்வாகம் (Automated Administration) மூலம் தாள்கள் இல்லா நிர்வாகத்தை மேற்கோள்ள இப்பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

(ii) இப்பல்கலைக்கழக மாணாக்கர்களிடம் இருந்து பல்கலைக்கழக துறை சார்ந்த ஆசிரியர்கள் குறித்த கருத்து படிவத்தை இணையவழி (Online) முறையில் பெற திட்டமிட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

1929-ம் ஆண்டில் துவங்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகமானது ஒரு ஒருங்கிணைந்த, பல்துறை, உறைவிட பல்கலைக்கழகமாக தோற்றுவிக்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழக சட்டம் 2013-இன்படி இப்பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு முறையாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தர கட்டமைப்பு (National Institute Ranking Framework) 2017-ஆம் ஆண்டின் தரவரிசைப்படி இப்பல்கலைக்கழகம் இந்திய அளவில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 56-வது இடத்தையும், இந்திய அளவில் சிறந்த 100 மருந்தகக் கல்லூரிகளில் 13-வது இடத்தையும் பெற்றுள்ளது. கலை, அறிவியல், கடல்சார் அறிவியல், இந்திய மொழிகள், கல்வியியல், நுண்கலை, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், விவசாயம், மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய புலங்களின் கீழ் இயங்கும் 50 துறைகள் மூலம், நேரடி கல்வி முறையில் முனைவர், ஆய்வியல் நிறைஞர், முதுநிலை இளநிலை பட்டம் மற்றும் முதுநிலைப் பட்டயம் மற்றும் பட்டயம் உள்ளிட்ட படிப்புகளை வழங்குகிறது.

இத்துறைகளுடன், ஊரக வளர்ச்சி, பேரிடர் மேலாண்மை, திறன்மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை தொடர்பான படிப்புகளை வழங்குவதற்கென இப்பல்கலைக்கழகத்தில் பல்வேறு சிறப்பு மையங்கள் உள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் உள்ள இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, இராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி, இராஜா முத்தையா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியன மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் செவிலியர் பயிற்சி ஆகியவை தொடர்பான முதுநிலைப் பட்டம், இளநிலைப் பட்டம் / முதுநிலை பட்டயம் மற்றும் பட்டய படிப்புகளை வழங்கி வருகின்றன. இம்மருத்துவக் கல்லூரியில் 1,260 படுக்கை வசதிகொண்ட மருத்துவமனை உள்ளது. 2016-17 ஆம் கல்வியாண்டில் இப்பல்கலைக் கழகத்தில் 21,256 மாணாக்கர்கள் (மாணவர். 11,068, மாணவியர்: 10,188) சேர்க்கை பெற்றுள்ளனர். இவர்களில் 27 அயல் நாடுகளைச் சேர்ந்த 126 மாணாக்கர்களும் அடங்குவர். மேலும், தொலைதூரக்கல்வி இயக்ககத்தின் மாணாக்கர்களின் சேர்க்கை எண்ணிக்கை 2,14,903 ஆகும்.

தேசிய தரநிர்ணய மற்றும் மதிப்பீட்டுக் குழு 2014-ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு "A" தரநிலையை வழங்கியுள்ளது. கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் நிறுவனங்களுடனான ஒப்பந்தம் ஆகியவை தொடர்பான சர்வ தேச ஒத்துழைப்பில் (International Collaboration) ஈடுபட்டுள்ள முதன்மையான இந்திய நிறுவனங்களில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 11-வது இடத்தைப் பெற்றுள்ளது என ஸ்ப்ரிங்கர் நேச்சர் அறிக்கை (Springer Nature Report) தெரிவிக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் 2,630 மாணாக்கர்கள் முனைவர் பட்டமும், 1,248 மாணாக்கர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளனர். 2014 ஆம் ஆண்டிலிருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் ஒரு திருக்குறள் இருக்கை, திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட செம்மொழி தமிழ் இலக்கணத்தை பரப்புவதை நோக்கமாக கொண்டுள்ளது. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளைப் பரப்புவதற்கும், கல்வி, மனித உரிமை மற்றும் இந்திய புலம் பெயர்ந்தோரின் சமூக பொருளாதார நிலைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கும் டாக்டர் அம்பேத்கர் இருக்கை 2016-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இப்பல்கலைக்கழகத்தில் சீர்மிகு அறிவியல் மற்றும் பல்கலைக்கழக ஆராய்ச்சி மேம்பாடு பகுதி - I திட்டத்தின் கீழ், அறிவியல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ. 15 கோடி நிதியொப்பளிப்பு செய்துள்ளது.

ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா, ஸ்காட்லாண்டு, தாய்லாந்து, சிங்கப்பூர், இலங்கை மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் விவசாயம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் மருத்துவம், கலை, அறிவியல் மற்றும் கடல்சார் அறிவியல் ஆகிய துறைகள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) இப்பல்கலைக்கழகத்தால் செய்யப்பட்டுள்ளன. சுரங்கத்தொழில் சார்ந்த மூன்றாண்டு பட்டயப்படிப்பு நடத்துவதற்கு மத்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தொழில் நிறுவனம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைந்த செயல்பாட்டு திட்டத்தின் கீழ், இப்பல்கலைக்கழக பொறியியல் புலத்தில், முதுநிலை உலோக இணைப்பு (ME Welding) பாடப்பிரிவினை 2016-17 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் ஆதரவுடன் 24 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.

தொலைதூரக் கல்வி மூலம், 2015-16- ஆம் கல்வியாண்டில் 9 புதிய பாடப்பிரிவுகள் (5 முதுநிலை பட்டயம், 2 பட்டயம் மற்றும் 2 சான்றிதழ்) துவங்கப்பட்டதுடன், 2016-17ஆம் கல்வியாண்டில் 44 புதிய பாடப்பிரிவுகள் (10 முதுநிலை, 2 இளநிலை, 12 முதுநிலை பட்டயம், 19 பட்டயம் மற்றும் ஒரு சான்றிதழ்) துவங்கப்பட்டன. “தேசிய உயர்கல்வித் திட்டத்தின் மூலம் இப்பல்கலைக்கழகத்திற்கு ரூ. 20 கோடி பல்வேறு உள்கட்டமைப்பு தேவைகளுக்காக நிதியொப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு உள்கட்டமைப்பு தேவைகளுக்காக, ரூ. 11.56 கோடிக்கு நிர்வாக ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. சீர்மிகு அறிவியல் மற்றும் பல்கலைக்கழக ஆராய்ச்சி மேம்பாடு (PURSE Programme) பகுதி-II திட்டத்தின் கீழ், அறிவியல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, ரூ. 34 கோடி நிதி ஒப்பளிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

2017 - 18 - ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள செயல்பாடுகள் திட்டங்கள்

i) பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் நிதி உதவியுடன் சமூக விழிப்புணர்வு குறித்த சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் கொள்கைகளை பரப்புவதற்காக சுவாமி தயானந்த சரஸ்வதி இருக்கை ஒன்று இப்பல்கலைக்கழகத்தில் நிறுவப்படவுள்ளது.

ii) மத்திய, மாநில அரசு நிறுவனங்களின் நிதி உதவியுடன், அமைப்பு சாரா நிறுவன பணியாளர்களுக்கு, குறிப்பாக நலிவடைந்த பிரிவினர் முக்கியத்துவம் பெறுகின்ற வகையில், இப்பல்கலைக்கழகத்தின் திறன் மேம்பாட்டு மையம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அப்பல்கலைக்கழக சட்டத்தின்படி 1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம், 745 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்த வளாகத்தை தன்னகத்தே கொண்டு, 20 புலங்களின் கீழ் 7 துறைகளைக் கொண்டு இயங்கி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரவரம்பிற்குட்பட்ட மதுரை, தேனி, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இயங்கிவரும் 82 இணைவு பெற்ற கல்லூரிகள், 4 மாலை நேரக் கல்லூரிகள், 6 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 11 அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். மேலும், இப்பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தின் மூலம் சுமார் 1.25 இலட்சம் மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். பல்கலைக்கழக மானியக்குழு, புதுதில்லி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு 'ஆற்றல்சால் பல்கலைக்கழகம்' (University with Potential for Excellence) எனும் தகுதியினை வழங்கி இருக்கிறது.

2016 - ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க இராமன் உதவித் தொகையினை பெற்றுள்ள 6 ஆசிரியர்களை கொண்ட பல்கலைக்கழகமாக இது திகழ்கிறது. திரைப்படம் மற்றும் மின்னணு ஊடகப் படிப்பு மையத்தின் மூலம் ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால முதுகலை திரைப்பட மற்றும் மின்னணு ஊடகப்படிப்பை வழங்கி வரும் ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமையை இப்பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகமானது, பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் உதவியோடு, உயிரி அறிவியல் துறையில் வளைதள வள மையம் (NRCBS) ஒன்றை நிறுவியுள்ளது. மேலும், இப்பல்கலைக்கழகம், சுவாமி விவேகானந்தர் பெயரிலான உயர் ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம் மற்றும் ஆங்கிலம், பிரெஞ்சு, சீனம் மற்றும் ஜெர்மன் மொழிகளை கற்பிப்பதற்கான அயல் மொழி ஆய்வகத்தினை பெற்றுள்ளது. மேலும், இப்பல்கலைக்கழகத்தின் தொழில் கூட்டிணைவு மையமானது, தொழிலகங்களில் பணியாற்றுவதற்கு தகுதிபடுத்தும் நோக்குடன் புதுமைகளை கற்பதற்கான பாடத் திட்டங்களை வழங்கும் பொருட்டு, பெரும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MOU) மேற்கொண்டுவருகிறது.

2017 - 18 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் செயல்பாடுகள் திட்டங்கள்

i) பல்கலைக்கழகத்தின் திரைப்படம் மற்றும் மின்னணு ஊடகப் படிப்பு மையம், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் ரூ. 10 கோடி மதிப்பில் " வடிவமைப்பு புதுமை மையத்தை” உருவாக்க விழைந்துள்ளது.

i) தேசிய உயர் கல்வி திட்டத்தின் (RUSA) நிதியுதவியுடன், வளாக கம்பியில்லா தகவல் பரிமாற்றம் (WiFi), மின்னாளுகை, நவீன தானியங்கி நூலகம், பல்நோக்கு மருத்துவமனை, நவீனமயமாக்கப்பட்ட விடுதி சமையலறைகள், சூரியஒளி விளக்கு, மழைநீர் சேகரிப்பு மற்றும் நவீன உடற்பயிற்சி மையம் ஆகியவை 2017 - 18 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்படும்.

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகமானது, 1978 ஆம் ஆண்டு, கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, சென்னை தொழில்நுட்ப நிறுவனம், கட்டடக்கலை மற்றும் திட்டமிடுதல் புலம் ஆகிய நான்கு தொழில்நுட்ப பயிலகங்களையும் தன்னகத்தே உள்ளடக்கி ஒருமைவகை பல்கலைக்கழகமாக உருவாகியது. 2001 ஆம் ஆண்டில், அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு இணைவு பல்கலைக்கழகமாக மாறியது. மீண்டும் 2010 ஆம் ஆண்டு ஒருமை வகை பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. பின்னர், தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியை அனைவருக்கும் ஒரே சீராக வழங்கிட ஏதுவாக 2012 ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் இப்பல்கலைக்கழகம் அனைத்து பொறியியல் கல்லுாரிகளையும் தன்னுடன் இணைத்து, ஓர் இணைவு தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக இயங்கி வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகம் 4 வளாகங்கள் (சென்னை ), 13 உறுப்புக் கல்லூரிகள், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் 4 மண்டல வளாகங்கள் மற்றும் 593 இணைவு பயிலகங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துறைகளின் மூலமாக 29 இளநிலை பட்டப்படிப்புகள், 90 முதுநிலை பட்டப்படிப்புகளும், 16,000 மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கல்லூரிகளின் மூலமாக 41 இளநிலை மற்றும் 57 முதுநிலை பட்டப்படிப்புகள் 7,21,276 மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில், 12,706 மாணாக்கர்கள் முனைவர் பட்ட படிப்பில் சேர்க்கை பெற்றுள்ளனர். இதில், 41.28 சதவிகிதம் பேர் மாணவியர் ஆவர்.

தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினால் (NAAC), அண்ணா பல்கலைக்கழகத்திற்கு 'A' தர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டிற்கான QS யின் (Quacquareli Symonds) உலக பல்கலைக்கழக வரிசையில், வேதி பொறியியல் பிரிவில் அண்ணா பல்கலைக்கழகம் 201 ஆம் இடத்தில் உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களால் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அடிப்படையில், 'h' குறியீடு என்று அழைக்கப்படும் ஆராய்ச்சித் தடத்தில் அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் 2 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. இயந்திரவியல், வானூர்தி பொறியியல் மற்றும் உற்பத்தி பொறியியல் துறையில் அண்ணா பல்கலைக்கழகம் உலக அளவில் 151லிருந்து 200வது இடத்திற்குள்ளும், தேசிய அளவில் 7 வது இடத்திலும் உள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் (2011 - 17), அண்ணா பல்கலைக்கழகம் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடனும், 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தேசிய அளவில் உள்ள உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுடனும் கையெழுத்திட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ. 96.18 கோடி நிதியுதவியுடன் 323 ஆராய்ச்சி திட்டப்பணிகளும், ரூ. 129.33 கோடிக்கு 5014 ஆலோசனை சேவைகளும் மற்றும் ரூ. 3.08 கோடிக்கு 8,157 பரிசோதனை பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆறு ஆண்டுகளில் (2011-17), அண்ணா பல்கலைக்கழகத்தால் 54 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யப்பட்டு, அதில், இதுவரை 6 தேசிய காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன. 2014 ல் இருந்து 2019 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு, ரூ. 10.44 கோடி மதிப்பீட்டில் "DBT-Anna University Interdisciplinary Life Science Programme for Advance Research and Education" எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத் துறைகளின் 10,115 மாணாக்கர்கள் கடந்த 6 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

2017 இன் தேசிய கல்வி நிறுவனங்களின் தர வரிசைப்படுத்தும் கட்டமைப்பு (NIRF 2017) 03.04.2017 அன்று மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. அதில், பங்கெடுத்துக்கொண்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிலகங்களுக்கிடையே, அண்ணா பல்கலைக்கழகம் பல்வேறு நிலைகளில் கீழ்காணும் தகுதி நிலைகளை பெற்றுள்ளது:

  • தேசிய அளவில் உள்ள பல்கலைக்கழகங்களின் தர வரிசையில் ஆறாமிடத்தில் உள்ளது.
  • தொழில் கல்வி பயிற்றுவிக்கும் நிறுவனங்களின் பட்டியலில் 8-ஆம் இடத்தை பெற்றுள்ளது.

2017-2018 இல் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் / திட்டங்கள்:

i) தேசிய உயர்கல்வி திட்டத்தின் (RUSA) கீழ் ரூ. 10 கோடி செலவில், மாணவியர்கள் தங்கும் புதிய விடுதி ஒன்று கட்டுவதற்கும், சூரிய சக்தி மற்றும் உயிரி வாயுக்களை உற்பத்தி செய்யும் அமைப்பு, கணினி மற்றும் பரிமாற்றி, புத்தகங்கள் மற்றும் இதழ்கள் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

i) தமிழக அரசின் மூலமாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கும், அதை சேமிப்பதற்கும் திறம்பட நிலையான ஆற்றல் தொழில்நுட்பம் (Sustainable Energy Technology) என்ற ஆராய்ச்சி திட்டத்தினை தேசிய உயர்கல்வி திட்டத்தின் (RUSA) கீழ் ரூ. 6.5 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

iii) அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ. 260 கோடி செலவில் மேகக் கணினி மையம், மோட்டார் வாகன தொழில் நுட்ப மையம், சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். ரூ. 50 கோடி செலவில் சுமார் 5,000 நபர்கள் அமரக்கூடிய மிகப்பெரிய அரங்கம் கட்டப்படும்.

பாரதியார் பல்கலைக்கழகம்

பாரதியார் பல்கலைக்கழகம், 1982 ஆம் ஆண்டு , பிப்ரவரி திங்கள், 9 துறைகளுடன் துவங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இப்பல்கலைக்கழகம், 10 அரசு கல்லூரிகள், 3 உறுப்புக் கல்லூரிகள் (வால்பாறை, கூடலூர் மற்றும் மொடக்குறிச்சி), 16 உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 86 சுயநிதி கல்லூரிகளையும் உள்ளடக்கிய 115 இணைவு கல்லூரிகளை கொண்டுள்ளது. இவற்றில் 23 தன்னாட்சிக் கல்லூரிகள் ஆகும்.

இப்பல்கலைக்கழகத்தில், 13 புலங்களைச் சார்ந்த 39 துறைகளின் மூலம் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட படிப்புகளுடன் (M.Phil & Ph.D.) 54 முதுகலை பாடப்பிரிவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2016 - 17 ஆம் கல்வியாண்டில், 1209 முதுகலை பட்ட மாணாக்கர்களும், 145 ஆய்வியல் நிறைஞர்களும் மற்றும் 219 முனைவர் பட்ட ஆய்வாளர்களும் சேர்க்கை பெற்றுள்ளனர். மேலும், தொலைதூரக் கல்வி திட்டத்தின்கீழ் வழங்கும் பல்வேறு பாடத்திட்டங்களில், 38,319 மாணாக்கர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். தற்போது, இப்பல்கலைக்கழக துறைகள், இணைவு கல்லூரிகள் மற்றும் தொலைதூரக்கல்வி நிறுவனம் ஆகியவற்றில் இளங்கலை, முதுகலை, பட்டயம் மற்றும் ஆராய்ச்சி பிரிவுகளில் 1,69,510 மாணாக்கர்கள் (75,636 மாணாக்கர்கள் முறைசார் கல்வி மற்றும் 93,874 மாணாக்கர்கள் தொலைதூரக் கல்வி பயின்று வருகின்றனர்.

2016-17 ஆம் ஆண்டிற்கான உலக அளவிலான பல்கலைக்கழக தர வரிசையில் கல்வி செயல்திறனை அடிப்படையாக கொண்டு, பாரதியார் பல்கலைக்கழகம் இந்திய அளவில் 18வது இடத்தை பெற்றுள்ளது. தேசிய மதிப்பீடு மற்றும் தர நிர்ணய குழுமத்தால் (NAAC) கடந்த மார்ச் 2016 இல், மூன்றாவது முறையாக மறு மதிப்பீட்டின் மூலம் மீண்டும் 'A'தரமதிப்பீடு இப்பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 2016-17 ஆம் ஆண்டில், மத்திய அரசின் மனித வளமேம்பாட்டுத் துறையின் கீழ் உள்ள தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை கட்டமைப்பு (NIRF) இப்பல்கலைக்கழகத்தை இந்திய அளவில் 28வது இடத்திலும், மாநில அளவில் 6வது இடத்திலும் தர நிர்ணயம் செய்து அங்கீகரித்துள்ளது. பாரதியார் பல்கலைக்கழகம், ஸ்கோபஸ் தகவலின்படி அதிகபட்சமாக 38 புள்ளிகளுடன் உயர்தரமான "h" வரிசை எண்ணுடன், 11,749 மேற்கோள்களையும் மற்றும் 2011 வெளியீடுகளையும் பெற்று சிறந்து விளங்குகிறது. மேலும் இந்திய அரசின் டிஜிட்டல் நிதி கல்வியறிவு திட்டத்தினை (VISAKA) சிறப்பாக நடைமுறைப்படுத்திய பல்கலைக்கழகங்களில், இப்பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

2017 - 18 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் படவுள்ள செயல்பாடுகள் / திட்டங்கள்

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கான மேலாண்மை அமைப்பினை வடிவமைத்து, மேம்படுத்தி அதனை ரூ. 117 இலட்சம் செலவில் நடைமுறைப்படுத்த இப்பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இவ்வமைப்பானது, புள்ளி விபரங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் துல்லியமான தகவல்களை குறித்த நேரத்தில் அளித்து தெளிவான முடிவுகளை மேற்கொள்ள வழிவகுக்கும்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

பாரதிதாசன் பல்கலைக்கழகம் 1982 ஆம் ஆண்டு நிறுவப் பெற்றது. இப்பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர மதிப்பீட்டு குழுவின் 'A' தரச் சான்றிதழ் மற்றும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் 12 (B) அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்திலுள்ள 21 புலங்கள், 40 துறைகள் மற்றும் 23 சிறப்பு மையங்கள் மூலம் 100க்கும் மேற்பட்ட பாடத் திட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவை தவிர, இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 3 மாதிரி கல்லூரிகள், 6 உறுப்புக் கல்லூரிகள், 1 மாதிரி உறுப்புக் கல்லூரி, 1 முதுகலைப்பட்ட விரிவாக்க மையம், 19 அரசுக் கல்லூரிகள், 19 அரசு உதவிபெறும் கல்லூரிகள், 78 சுயநிதி கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 22 கல்லூரிகள் தன்னாட்சிக் கல்லூரிகள் ஆகும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், இப்பல்கலைக்கழக ஆசிரியர்களால் ஏறத்தாழ 2100 ஆய்வுக் கட்டுரைகள் உலகத்தரம் வாய்ந்த ஆய்வு இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளதுடன், பல்வேறு துறைகளில் உயர்தரமிக்க ஆய்வுகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இப்பல்கலைக்கழகத்தின் h-index தரநிலை 72 ஆகும். இப்பல்கலைக்கழகம், கற்றல் வசதிகளை நவீனப்படுத்தி, வழக்கமான வகுப்பறைகளை தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நவீன வகுப்பறைகளாக மாற்றியுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் நூலகம், தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) அடிப்படையிலான மேம்படுத்தப்பட்ட தகவல் சேவைகளுடன் நவீனப்படுத்தப் பட்டுள்ளது. இதன்மூலம் ஆற்றல் மிக்க நூலக வலைதளத்தின் வழியாக டிஜிட்டல் நூலகத்தை அணுகி, மின் நூல்கள், மின் இதழ்கள், பாடத்திட்டங்கள், மின் ஆய்வுக் கட்டுரைகள், பகுப்பாய்வு மென்பொருள் முதலிய வசதிகளை பல்கலைக்கழகத் துறைகள், உறுப்பு / மாதிரி மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகள் எளிதாக பெற இயலும். அறிவியல் கல்வியில் பல்கலைக்கழக ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் (PURSE) பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் முதலீட்டு சொத்துருவாக்கத்தின் பொருட்டு ரூ. 17.35 கோடியும், கால்நடை அறிவியல், உயிரிவேதியியல், உயிரிமருத்துவ அறிவியல், வேதியியல், கணிதம், நுண்ணுயிரியல், இயற்பியல் மற்றும் தாவர அறிவியல் ஆகிய துறைகளுக்கு அறிவியல் தொழில் நுட்பத்துறையின் அறிவியல் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2.90 கோடியும் மற்றும் மாற்றுவழி விலங்குப் பரிசோதனை தேசியமையத்திற்கு, UGC தனது தனிச்சிறப்பு புலங்களில் சிறப்புத் திறன் கொண்ட மையம் (CPEPA) என்ற திட்டத்தின் கீழ் ஆராய்ச்சியினை மேற்கொள்வதற்கு ரூ. 5 கோடியும் பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் பன்னிரண்டாம் திட்டத்தின் மூலம் ரூ. 17.06 கோடி பெறப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகம், தமிழக அரசின் நிதியுதவியின் மூலம், தொலை உணர்வு மைய ஆய்வகத்தினை தரம் உயர்த்தியுள்ளதுடன், மாற்றுத் திறனாளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் செயலாக்கப்படும் பயிற்சி மையத்தையும் நிறுவியுள்ளது.

இப்பல்கலைக்கழகம் 10 பாடப்பிரிவுகளுக்கான பாடத் திட்டங்களை உலகத்தரத்திற்கு உயர்த்தும் பொருட்டு, உலகத் தரம் வாய்ந்த பாடத்திட்டப் பிரிவுகளை நிறுவியுள்ளது. பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் பகுதியளவு நிதியுதவியுடன் ரூ. 44 இலட்சம் செலவில் ஓர் உள் விளையாட்டு அரங்கமும், ரூ. 36 இலட்சம் செலவில் இரண்டு செயற்கை டென்னிஸ் ஆடுகளங்களும் நிறுவப்பட்டுள்ளன. இப்பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் சுய வேலை

மேம்பாட்டு நிறுவனத்தால் (IECD), பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் தீன்- தயாள் உபாத்யாய அறிவு சேகரம் மற்றும் திறன்மிகு மனித செயல்பாடுகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 3.5 கோடி பெறப்பட்டு, தீன்- தயாள் உபாத்யாய கௌஷல் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழத்தின் வணிக மேம்பாட்டு மையமானது, சான்றிதழ், பட்டய மற்றும் முதுகலைப் பட்ட படிப்புகளை வழங்கும் பொருட்டு, சிறப்பு நிறுவனங்கள், முகமைகள் மற்றும் மருத்துவமனைகளுடன் 17 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இப்பல்கலைக்கழகம், புரட்சிகரத் தலைவர்கள் மற்றும் சமூக சிந்தனையாளர்கள் புலம் ஒன்றினை நிறுவியுள்ளது. 2016 - 17 ஆம் ஆண்டு, பாரதிதாசன் மேலாண்மை புலத்தால் முதுகலை வணிக நிர்வாக பாடப்பிரிவு தொடங்கப்பட்டு, அதற்கான மாணவர் சேர்க்கை தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு மூலம் நடைபெற்றது.

2017 -18ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் படவுள்ள செயல்பாடுகள் / திட்டங்கள்

i) பொது ஆய்வக கருவிகள் வசதிக்கான கட்டடம் அமைத்தல்

ii) பல்கலைக்கழக முதன்மை வளாகத்தில் பன்னாட்டு மாணவர்களுக்கான விடுதி கட்டடம் அமைத்தல்

iii) ஓலைச் சுவடிகள் மற்றும் பண்டைய புத்தகங்களை மின் அச்சுப்படுத்துவதற்கான வசதிகளை உருவாக்குதல்.

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

கொடைக்கானலில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் 1984 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. "சமநிலையை நோக்கி” என்பது பல்கலைக்கழகத்தின் பொன்மொழி ஆகும். இப்பல்கலைக்கழகம் உயர்கல்வி மூலம் மகளிர்க்கு அதிகாரமளிப்பதன் வழியாக சமநிலையை அடையக் கருதுகிறது. பல்கலைக்கழக உருவாக்கச் சட்டத்தில் குறிப்பிட்டபடி

(1) மாநிலத்தில் மகளிர் கல்வியை எல்லா நிலைகளிலும் செயல் படுத்துதல்

(2) மகளிருக்கான ஆராய்ச்சி வசதிகளைப் பெருக்குதல்

(3) ஆலோசனை சேவைகளை நல்குவதன் மூலம் சமூகப் பொறுப்புகளை நிறைவு செய்தல் ஆகியவற்றை பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது.

இப்பல்கலைக்கழகத்தில், பதினேழு துறைகளும், சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்துார் ஆகிய இடங்களில் மூன்று ஆய்வு மற்றும் விரிவாக்க மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இப்பல்கலைக்கழகத்துடன் 2 உறுப்பு கல்லுாரிகள், 5 சுயநிதி கல்லுாரிகள், 2 அரசுக் கல்லுாரிகள், 2 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 8 சமுதாயக் கல்லுாரிகள் இணைவு பெற்றுள்ளன. 2016 - 17ஆம் ஆண்டில் பல்கலைக்கழகம் மற்றும் 2 உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் 1,143 மாணவியர் பயின்று வருகின்றனர்.

2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கோயம்புத்துாரில் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் தோற்றுவிக்கப்பட்டது. இம்மையத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவால் வழங்கப்பட்ட புதிய பாடப்பிரிவான தொழில் அறவியல் ( Professional Ethics) என்ற முதுகலை பட்டயப்படிப்பினை ரூ. 24 இலட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய உயர் கல்வி திட்டத்தின் (RUSA) கீழ் வழங்கப்பட்ட ரூ. 2.50 கோடியிலிருந்து இம்மையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

2010, 2011, 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளின் சிறந்த ஆய்வுக்கட்டுரை விருது, 2013 ஆம் ஆண்டில் சிறந்த கல்வியாளர் விருது மற்றும் சிறந்த ஆய்வேட்டிற்கான விருது, 2014 ஆம் ஆண்டிற்கான இளம் விஞ்ஞானி விருது, 2015 ஆம் ஆண்டில் டாக்டர் அப்துல் கலாம் வாழ்நாள் சாதனையாளர் தேசிய விருது, 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருது, 2016 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் பெருமைக்குரியவர் சர்வதேச விருது, 2016 ஆம் ஆண்டிற்கான தேசிய பெருமையாளர் விருது, 2016 ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியலாளர் விருது மற்றும் 2016 ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிஞருக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது ஆகிய விருதுகளை இப்பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

இப்பல்கலைக்கழகம் விளையாட்டு முன்னேற்றத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. 2013 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கிடையில் தேசிய மற்றும் மாநில அளவில் ரூ. 2.88 இலட்சம் பணப்பரிசுகளையும் மற்றும் 274 பதக்கங்களையும் இப்பல்கலைக்கழக விளையாட்டு வீராங்கனைகள் பெற்றுள்ளனர். இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5 விளையாட்டு வீராங்கனைகள் இரயில்வே துறையிலும், 10 விளையாட்டு வீராங்கனைகள் மாநில காவல்துறையிலும் மற்றும் 12 விளையாட்டு வீராங்கனைகள் காவல் பயிற்சிக்கான துணை ஆய்வாளர்களாகவும் உள்ளனர்.

அழகப்பா பல்கலைக்கழகம்

1985-ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. தேசிய தர நிர்ணயக் குழுமத்தின் மூன்றாம் சுற்று மதிப்பீட்டில், 'A+' தரத்தினை 3.64 தரப்புள்ளிகளுடன் பெற்றுள்ளது. அழகப்பா பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் இத்தகைய தரத்தினைப் பெற்றுள்ள முதல் பல்கலைக்கழகமாகும். அழகப்பா பல்கலைக்கழகம், இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்பினராகவும், காமன்வெல்த் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்பினராகவும் இருக்கிறது. இப்பல்கலைக்கழகத்தின் அதிகாரவரம்பிற்குள் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் உள்ளன. அழகப்பா பல்கலைக்கழகத்தில், 34 துறைகளை உள்ளடக்கிய 5 புலங்கள், 9 இயக்குநரகங்கள் / மையங்கள் மற்றும் 2 கல்வியியல்/உடற்கல்வியியல் உறுப்பு கல்லூரிகள் உள்ளன. மேலும், இப்பல்கலைக்கழகத்தின்கீழ், 33 இணைப்புக் கல்லுாரிகளும், 6 மாலை நேரக் கல்லூரிகளும், பரமக்குடியில் ஒரு பல்கலைக்கழக மாதிரி உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியும் செயல்பட்டு வருகின்றன.

பல்கலைக்கழகத் துறைகளில் 151 பாடப்பிரிவுகளும், இணைப்புக் கல்லுாரிகளில் 117 பாடப்பிரிவுகளும், தொலைநிலைக் கல்வியில் 58 பாடப்பிரிவுகளும் மற்றும் இணைவுக் கல்வித்திட்டத்தின் வாயிலாக 83 பாடப்பிரிவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தரமான கல்வியினை உறுதி செய்யும் வகையில் பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளின் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் பருவ முறை நடைமுறையை பின்பற்றி தொடர் உள் மதிப்பீடு முறையும், விருப்பத்தின் அடிப்படையிலான பாடத்தெரிவு முறையும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழகத் துறைகளில் 4,730 மாணாக்கர்கள், பல்கலைக்கழகத்தின் இணைவுக் கல்லூரிகளில் 44,881 மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இப்பல்கலைக்கழகத்தில், தற்பொழுது, 226 ஆசிரியர்களும், 222 நிர்வாக / தொழில்நுட்ப பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்குநரகத்தின் மூலம் 130 படிப்பு மையங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. தொலைநிலைக் கல்வியில் சுமார் 54,000 மாணாக்கர்கள் பதிவு செய்துள்ளனர். பல்கலைக்கழகத் துறைகளில் 151 பாடப்பிரிவுகளும், இணைப்புக் கல்லுாரிகளில் 117 பாடப்பிரிவுகளும், தொலைநிலைக் கல்வியில் 58 பாடப்பிரிவுகளும் மற்றும் இணைவுக் கல்வித்திட்டத்தின் வாயிலாக 83 பாடப்பிரிவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

தரமான கல்வியினை உறுதி செய்யும் வகையில் பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளின் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் பருவ முறை நடைமுறையை பின்பற்றி தொடர் உள் மதிப்பீடு முறையும், விருப்பத்தின் அடிப்படையிலான பாடத்தெரிவு முறையும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழகத் துறைகளில் 4,730 மாணாக்கர்கள், பல்கலைக்கழகத்தின் இணைவுக் கல்லூரிகளில் 44,881 மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இப்பல்கலைக்கழகத்தில், தற்பொழுது, 226 ஆசிரியர்களும், 222 நிர்வாக / தொழில்நுட்ப பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்குநரகத்தின் மூலம் 130 படிப்பு மையங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. தொலைநிலைக் கல்வியில் சுமார் 54,000 மாணாக்கர்கள் பதிவு செய்துள்ளனர். இப்பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக மானியக்குழுவின் நிதிநல்கை குழுமத்தின் சிறப்பு உதவித் திட்டத்தின்கீழ் (UGC-Special Assistance Programme) ஆறு துறைகளும், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வசதிகள் மேம்பாட்டிற்கான திட்டத்தின் (DST - FIST) நான்கு துறைகளும் செயல்பட்டு வருகின்றன.

கடந்த ஆறு ஆண்டுகளில், பல்கலைக்கழகத்தில், ஆற்றல் அறிவியல், வரலாறு, தாவரவியல், நுண் உயிரியியல், சிறப்புக் கல்வியியல் மற்றும் புணர்வாழ்வு அறிவியல், நுண்கலைகள், உணவக அறிவியல் மற்றும் விடுதி மேலாண்மை , திறன் மேம்பாடு, சமூகப்பணியியல், இடப்பெயர்வு மேலாண்மை, கணினி அறிவியல், பன்னாட்டு வணிகம் போன்ற 12 புதிய துறைகள் துவங்கப்பட்டுள்ளன. அழகப்பா பல்கலைக்கழகம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், இத்தாலி, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, பின்லாந்து, செக் குடியரசு மற்றும் கொரியா ஆகிய நாடுகளைச் சார்ந்த 24 பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுடன் கூட்டு ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் புதுமைப் பாடத் திட்டத்தின் கீழ், அதன் நிதியுதவியுடன், இளநிலை கல்வியில் “சிறப்புக் கல்வியியல்” (Special Education), முதுநிலைப் பட்டயப்படிப்பில் “மதிப்புக்கூட்டு வரி மற்றும் சேவை வரி” (PG Diploma in VAT and Service Tax), “பார்மோகோஜெனாமிக்ஸ்” (PG Diploma in Structural Pharmacogenomics) மற்றும் முதுநிலை இடப்பெயர்வு மேலாண்மை “MBA (Logistics Management)” படிப்புகளும், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அழகப்பா பல்கலைக்கழகம், தரமான உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு ISO 9001 : 2015 தரச் சான்றிதழைப் பெற்றுள்ளது. மேலும், தேசிய தூய்மைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NICER), புதுதில்லி, அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு “உலகத் தூய்மை மற்றும் பசுமையான பல்கலைக்கழக வளாக விருது ” (2016) மற்றும் உலகச் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார விருதினை (2017) வழங்கி சிறப்பித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், பல்கலைக்கழகத்தின் "h" index என்பது 22 லிருந்து 53 ஆக உயர்ந்துள்ளது. அழகப்பா பல்கலைக்கழகம், புதுமை முயற்சிகளையும், தொழில்நுட்பக் காப்புரிமைகளையும் ஊக்கப்படுத்துகிறது. கடந்த 5 ஆண்டுகளில், அழகப்பா பல்கலைக்கழகத்தின் உயிரித் தொழில்நுட்பத்துறை, தொழிலக வேதியியல் துறை, இயற்பியல் துறை மற்றும் கடலியல் மற்றும் கடலோரவியல் துறை பேராசிரியர்களின் மூலமாக 22 காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு காப்புரிமைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ரூ. 65 இலட்சம் செலவில் தொடங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மையத்தில் தகுந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அழகப்பா பல்கலைக்கழக மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மையத்திலிருந்து பயிற்சி பெற்ற 20 வீரர்கள், 17 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலப் பரிசுகளை, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பெற்றுள்ளனர். ஆகஸ்டு, 4-13, 2017 இல் கனடாவில் நடைபெற உள்ள உலக குள்ளர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள பாரா விளையாட்டு மையத்தின் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2016 - 17 ஆம் ஆண்டில், இப்பல்கலைக்கழகத்தின் மையநூலகத்தில் மாணவர்கள் துரிதமாக நூல்களின் இடத்தை அறிந்து கொள்ள, வசதியான முழுமையான தானியங்கி முறையிலான RFID வசதி உட்பட அனைத்து பன்னாட்டு உறவுகள் மையத்தின் வழியாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

ii) பல்கலைக்கழக முன்னாள் மாணாக்கர்களின் துணையுடன் பல்கலைக்கழக மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளுக்கான உரிய பயிற்சி அளிக்கவும் தக்க முயற்சி மேற்கொள்ளுதல்.

iii) பல்கலைக்கழகம் மற்றும் தொழில் நிறுவனங்களின் உறவுகளை மேம்படுத்தி, தொழில் நிறுவனங்களுக்கான தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் உரிய திட்டங்களை வகுத்தல்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

புகழ் பெற்ற தமிழறிஞரும் தத்துவ ஆசிரியருமான சுந்தரம்பிள்ளை (1855-1897) அவர்களின் பெயரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 1990இல் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று தென்கோடி மாவட்ட மக்களின் உயர்க்கல்வித் தேவையை நிறைவு செய்யும் வகையில் இயங்கி வருகின்றது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், 4 உறுப்புக் கல்லூரிகள், 6 பல்கலைக்கழக கல்லூரிகள், நாகர்கோவிலில் ஒரு முதுநிலை விரிவாக்க மையம், 73 இணைவுக் கல்லூரிகள், (4 அரசு கல்லூரிகள், 25 அரசு உதவி பெறும் கல்லூரிகள் 7 உதவி பெறும் தன்னாட்சி கல்லூரிகள் மற்றும் 37 சுயநிதி கல்லூரிகள்) ஆகியவற்றை உள்ளடக்கியது. இப்பல்கலைக்கழகத்தில் 26 துறைகள் மையங்கள், 22 சமுதாயக் கல்லூரிகள், 67 கல்வி விரிவாக்க மையங்கள் உள்ளன. பல்கலைக்கழக துறைகளில் உள்ள மாணாக்கர்களின் எண்ணிக்கை 1,372 (மாணவர்கள் : 366 மாணவிகள் : 1, 006). உறுப்பு / பல்கலைக்கழக கல்லூரிகளின் மாணாக்கர்களின் எண்ணிக்கை 6,484 (மாணவர்கள் : 1,794, மாணவிகள் : 4,690). 95,322 மாணாக்கர்கள் இணைவு கல்லூரிகளில் பயில்கின்றனர் (மாணவர்கள் : 38,129 மாணவிகள் : 57,193). இப்பல்கலைக்கழகம் 48 பாடப்பிரிவுகளை வழங்கும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தைக் கொண்டுள்ளது. இவ்வியக்ககத்தின் வழியாக 17,966 மாணாக்கர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.

2017 - 18 ஆம் ஆண்டுக்கான செயல்பாடுகள் திட்டங்கள்

i) 2017 - 18 ஆம் கல்வியாண்டில் இணைய பாதுகாப்பு மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகிய இரு முதுநிலை பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

ii) அனைத்து பாடப்பிரிவுகளிலும் சேருகின்ற திருநங்கைகளுக்கு, இலவசமாகக் கல்வி வழங்கப்பட உள்ளது. கல்வியில் சிறந்த திருநங்கைகளுக்கு படிப்புதவித்தொகையாக மாதம் ரூ. 3,000 வீதம் வழங்கப்படும்.

iii) கீழ்காணும் பணிகள் இப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகின்றன :-

1) ரூபாய் 138 இலட்சம் மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கம் கட்டுதல்.

2) ரூபாய் 60 இலட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சிக் கூடம் கட்டுதல்.

3) பல்கலைக்கழக முதன்மை வளாகத்தில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் பெண்கள் விடுதி கட்டுதல்.

4) ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் வாயிற்கதவு, புல்வெளி அமைத்தல், வடிகால் வசதி, சாலைப் பராமரிப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளுதல்.

5) நாகலாபுரம், கன்னியாகுமரி மற்றும் கடையநல்லூரில் உள்ள பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கென புதிய கட்டடங்கள் தலா ரூபாய் 7.25 கோடி மதிப்பீட்டில் கட்டுதல்.

6) ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் பணியாளர்கள் குடியிருப்புக் கட்டடம் கட்டுதல்.

7) கன்னியாகுமரி மாவட்டம், இராஜாக்கமங்கலம் கடல்சார் அறிவியல் மையத்தில் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் பெண்கள் விடுதிக் கட்டுதல்.

8) சங்கரன்கோவில், பணகுடி, புளியங்குடி மற்றும் திசையன்விளை ஆகிய இடங்களில் உள்ள பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் சொந்தக் கட்டடங்கள் கட்டுதல்.

9) பல்கலைக்கழக வளாகத்தில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் 500KVA மின்மாற்றி அமைத்தல்.

பெரியார் பல்கலைக்கழகம்

பெரியார் பல்கலைக்கழகம் 1997 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் 2(), 12(B) அங்கீகாரத்தை இப்பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. CGPA இன் 3.15 புள்ளிகளை பெற்று இப்பல்கலைக்கழகம் தேசிய தர மதிப்பீட்டு குழுமத்தின் (NAAC) 'A' தரச்சான்றினை பெற்றுள்ளது. மனிதவள மேம்பாட்டுத் துறையின் NIRFன் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவில் உள்ள 724 பல்கலைக்கழகங்களில் 85வது இடத்தினை இப்பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகம் 27 துறைகள் அடங்கிய 5 அறிவியல் புலங்கள், 3 கலைப் புலங்கள் கொண்டதாக வளர்ந்துள்ளது. இத்துறைகளின் வாயிலாக, 29 முதுநிலைப் பாடப்பிரிவுகளும், 28 ஆராய்ச்சிப் பாடப்பிரிவுகளும் நடத்தப்படுகின்றன. இப்பல்கலைக் கழகத்தின் பல்வேறு துறைகளில் தற்போது 164 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மேட்டூர், பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் எடப்பாடி ஆகிய 5 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 28 ஆசிரியர்களும் மற்றும் தர்மபுரியில் உள்ள முதுநிலை பட்ட மையத்தில் 20 ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர். தற்போது சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 96 கல்லுாரிகள் இப்பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்று 2 இலட்சம் மாணாக்கர்களின் எண்ணிக்கையுடன் இயங்கி வருகின்றன.

கடந்த ஆறு வருடங்களில், இப்பல்கலைக்கழகத்தில் 7 புதிய துறைகளும், 9 புதிய பாடப்பிரிவுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 5 துறைகள் DST - FIST என்ற தகுதி நிலையினையும் மற்ற 3 துறைகள் UGC- SAP என்ற தகுதி நிலையினையும் பெற்றுள்ளன. இப்பல்கலைக்கழக உறுப்புக் கல்லுாரிகளுக்கு ரூ. 29.75 கோடி செலவில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இப்பல்கலைக்கழக வளாகத்தில் ரூ. 16 கோடி செலவில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. புதியதாக 11 பாடப்பிரிவுகளுக்கு இணைவு அளிக்கப்பட்டுள்ளன. இப்பல்கலைக்கழகம் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுடன் 25 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறையானது, ரூ. 1.67 கோடி செலவில் அயல்நாட்டு கூட்டிணைவு கல்விக்காக (Foreign collaboration Programme) இங்கிலாந்து நாட்டுடன் இணைந்துள்ளது. 27 பல்கலைக்கழகத் துறைகள் 8 புலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. உணவு பாதுகாப்பு பயிற்சி மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்காக இப்பல்கலைக்கழகம் Food Safety and Standards Authority of India (FSSAI) உடன் கூட்டிணைவினை மேற்கொண்டுள்ளது.

2016-17 ஆம் ஆண்டில் ரூ. 4.92 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நிதிநிறுவனங்களின் உதவியுடன் 53 ஆராய்ச்சி திட்டங்கள் இப்பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்டது. இப்பல்கலைக்கழகம் அனைத்து பாடப்பிரிவுகளுக்கான பாடத்திட்டத்தினை சீரமைத்துள்ளது. வளாக நேர்காணல் மூலம் இந்தியாவில் உள்ள 28 பல்வேறு வணிக நிறுவனங்களில் 4,510 மாணாக்கர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இப்பல்கலைக்கழகம் அனைத்து மாணாக்கர்களுக்காக, விபத்தின்போது நிதியுதவி கோருவதற்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பல்கலைக்கழகத்தால் யோகா மற்றும் தியான ஆராய்ச்சி மையம், கிராமப்புற வளர்ச்சிக்கான மையம், நலிவுற்றப் பிரிவினரை உயர்த்துவதற்கான மையம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. ரூ. 15.75 கோடி மதிப்பீட்டிலான கட்டடப்பணிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

2017 - 18 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள செயல்பாடுகள் / திட்டங்கள்:

i) இப்பல்கலைக்கழகம், 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 18- 22-இல் சமூக அறிவியல் ஆராய்ச்சிக்கான இந்திய குழுமத்தின் காங்கிரஸை (ICSSR) கூட்டத்தை நடத்தவுள்ளது.

ii) தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கூட்டிணைந்து ஆராய்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

iii) ஒரு மெகாவாட் மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் பெறுவதற்கான கருவிகள் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது.

iv) 2018ஆம் ஆண்டில் NIRF-ன் தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் இடம் பெறுவதற்கு முயற்சி எடுக்கவுள்ளது.

v) மேக கணினி மற்றும் மின் ஆளுமையை பல்கலைகழக வளாகத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசால் 2002 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. தமிழக அளவில் திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்விமுறையை மேம்படுத்துவதும், அதன் தரத்தினை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்துவதும் இப்பல்கலைக் கழகத்தின் முதன்மை நோக்கமாகும். மிகக் குறைந்த செலவில் சமூகத்திற்கு தேவையான படிப்புகளை தொலைநிலைக் கல்வி மூலம் வழங்குவதே முக்கிய இலக்காகும். குறிப்பாக, இதுவரை கல்வி வாய்ப்புகள் கிடைக்கப்பெறாத பின்தங்கிய கிராமப்புறப் பகுதிகளில் வாழும் மக்கள், வேலைக்கு செல்லும் மக்கள், இல்லத்தரசிகள், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஆகியோருக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் நிறைவான, தரமான படிப்புகளை இப்பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. தற்போது, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 13 கல்விப் புலங்கள் வாயிலாக 148 பாடப்பிரிவுகளை வழங்கி வருகிறது. இப்பல்கலைக்கழகம் தமிழகம் முழுவதும் 419 படிப்பு மையங்களுடன் இயங்கி வருகிறது.

இப்பல்கலைக்கழகத்தில் ஆண்டு முழுவதும் மாணவர் சேர்க்கை இரண்டு சுழற்சிகளில் நடைபெற்று வருகிறது. நாட்காட்டி ஆண்டு சேர்க்கை ஜனவரி முதல் ஜூன் வரையிலும், கல்வி ஆண்டு சேர்க்கை ஜூலை முதல் டிசம்பர் வரையிலும் நடைபெறுகிறது. 2016-17ஆம் கல்வியாண்டில் 26,361 மாணாக்கர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களுள் 13,279 பேர் மாணவிகள் ஆவர். தற்பொழுது முனைவர் ஆய்வு பட்டப்படிப்பில் 78 ஆராய்ச்சி மாணாக்கர்களும், ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்பில் 67 ஆராய்ச்சி மாணாக்கர்களும் முழுநேர / பகுதிநேர பிரிவில் படித்து வருகின்றனர். இப்பல்கலைக்கழகம், 2016 - ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் 12 (B) தகுதிநிலையைப் பெற்றுள்ளது. மத்திய மனித வள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இளம் மற்றும் படிப்பார்வம் மிக்கவர்களுக்கான செயல்வழி கற்றல் இணையத் திட்டத்தினை (Swayam Prabha Projects) இந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து செயல்படுத்துவதற்கும், அப்பல்கலைக்கழகத்தின் மின்னணு ஊடகத் தயாரிப்பு ஆராய்ச்சி மையத்தின் வசதியை டி.டி.எச் வசதி மூலம் மாணவர்கள் பயன்படுத்துவதற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சென்னை , கோயம்புத்தூர், தருமபுரி, மதுரை, நீலகிரி, திருச்சிராப்பள்ளி மற்றும் விழுப்புரம் ஆகிய ஏழு இடங்களில் மண்டல மையங்களையும் மற்றும் ஏழு உறுப்புச் சமுதாயக் கல்லூரிகளையும் நிறுவியுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத்தில் தமிழக அரசின் சிறப்பு நிதி உதவியுடன் காணொலிக் காட்சி வசதியுடன் கூடிய சிறப்பு வகுப்பறைகள், அயல்மொழி ஆய்வகம், தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டு மையம், பாடத்திட்டம் மேம்பாட்டு குழு ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு துறைசார் அயல்நாட்டு பேராசிரியர்களை அழைத்து சிறப்புச் சொற்பொழிவாற்றுவதற்கும் தமிழ்நாடு அரசு நிதி உதவி வழங்கியுள்ளது. 2016-17ஆம் ஆண்டில் இப்பல்கலைக் கழகத்தின் புதிய மண்டல மையங்கள் விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடங்கப்பட்டு, கல்விச் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகம் இணையவழி மாணவர் சேர்க்கை முறையை 2017 ஆம் நாட்காட்டி ஆண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.

2017-18 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள செயல்பாடுகள் / திட்டங்கள்:

i) கணினி அடிப்படைகள், அலுவலக கணினிமயமாக்கல், நிரலாக்கத் தொழில்நுட்பங்கள், கணினிப் பயன்பாடுகள், பல்லூடக முறை, முடிதிருத்துதல், தையல் கலைஞர் மற்றும் ஆடை தயாரிப்பு, தரை நுண்நய ஒப்பனை, மணப்பெண் ஒப்பனை மற்றும் மலர் அலங்காரம், புதுப்பாணி நகை தயாரிப்பு மற்றும் ஆங்கிலப் புலமை ஆகிய பிரிவுகளில் திறன் மேம்பாட்டு தொழிற்பயிற்சி அளிக்கும் வகையில் கற்றல் அளவெண் முறை இல்லாத குறுகிய கால சான்றிதழ் படிப்புகளை வழங்க இப்பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

ii) 2017 - 18 - ஆம் கல்வி ஆண்டில், 3 முதுநிலைப் படிப்புகள், 5 பட்டப் படிப்புகள், 7 முதுநிலைப் பட்டயப் படிப்புகள், 3 பட்டயப் படிப்புகள், 2 சான்றிதழ் படிப்புகள் மற்றும் 2 தொழில் பட்டயப் படிப்புகள் உட்பட 22 புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

திருவள்ளுவர் பல்கலைக்கழகம், அப்பல்கலைக்கழகச் சட்டம் 2002-ன் படி 16.10.2002 அன்று தமிழக அரசால் வேலூரில் துவங்கப்பட்டது. இப்பல்கலைக் கழகத்தில் அதிகாரவரம்பின் கீழுள்ள வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில், 10 அரசு கல்லூரிகள், 9 அரசு உதவிபெறும் கல்லூரிகள், 6 பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள், ஒரு முதுகலை மேலாண்மையியல் நிறுவனம், 89 சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 3 கீழ்திசைக் கல்லூரிகள், ஒரு முதுகலை விரிவாக்க மையம் மற்றும் 5 ஆராய்ச்சி நிறுவனங்கள் உட்பட 123 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தில், தமிழ், ஆங்கிலம், கணிதம், உயிரிதொழில்நுட்பவியல், விலங்கியல், பொருளியல் மற்றும் வேதியியல் ஆகிய 7 துறைகள் உள்ளன. இன்றைய தேதி வரை பல்கலைக்கழகத் துறைகளில் 274 மாணாக்கர்களும், இணைவுக் கல்லுாரிகளில் 47,470 மாணாக்கர்களும் சேர்ந்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவால் இப்பல்கலைக்கழகத்திற்கு 12(B) அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்திற்கு தேசிய மதிப்பீடு மற்றும் தர நிர்ண யம் (NAAC-Accreditation) குழுவின் அங்கீகாரத்தை பெறுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் பல்கலைக்கழகம், மற்ற பல்கலைக்கழகங்களான தேசிய தைவான் பெருங்கடல் பல்கலைக்கழகம், கீலுங், தைவான் மற்றும் நிம் கேர், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொள்வதற்கும் மற்றும் உலகத்தரத்திலான அனுபவத்தை பெறுவதற்கும் உதவியாக இருக்கும். மேலும், ஹாங்காங் பேப்டிஸ்ட் பல்கலைக்கழகத்துடன் விஞ்ஞானிகள், பட்டதாரி மாணவர்கள், முதுமுனைவர்கள் மற்றும் தொழிற் கல்வியாளர்களை பரிமாற்றம் செய்து கொள்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இப்பல்கலைக்கழகம் ஆராய்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவாக, ஆராய்ச்சி மாணாக்கர்களின் பதிவு 30 சதவீதத்திற்கு அதிகமாக உயர்ந்துள்ளதுடன், ஆராய்ச்சி மேற்பார்வையாளர்களின் எண்ணிக்கையும் இருமடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் கம்பியில்லா தகவல் பரிமாற்ற நுட்ப இணைப்பு மின்னணு வளங்களைப் பெற்று அமைந்துள்ளது. பல்கலைக்கழக நூலகத்தில் 6,130 புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இப்பல்கலைக்கழக நுாலகம் 342 ஆய்வியல் முனைவர் விளக்கவுரைகள் (Dissertation) மற்றும் 29 பத்திரிக்கைகளுடன் தொடர்பில் உள்ளது. இப்பல்கலைக்கழக நூலகம், INFLIBNET-லிருந்து இணையவழி தகவல் வளங்களை பெற்று விளங்குகிறது. இப்பல்கலைக்கழகம் விளையாட்டு முன்னேற்றத்திற்கு தனி முக்கியத்துவம் அளிக்கிறது. பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் உதவியுடன், 8 வழி புல் ஓடுதளத்தினை ரூ. 7 இலட்சம் செலவிலும் செயற்கை பிளாஸ்டிக் பின்பலகையுடன் கூடிய சராசரி அளவிலான கூடைப்பந்து ஆடுகளத்தினை ரூ. 5.00 இலட்சம் செலவிலும் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்

ஆசிரியர் கல்வியின் தரத்தினை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. தற்போது, 7 அரசு, 14 அரசு உதவி பெறும் மற்றும் 713 சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் உட்பட மொத்தம் 734 கல்வியியல் கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றுள்ளன. இப்பல்கலைக்கழகம், ஆறு கல்வி மற்றும் ஆய்வுத் துறைகளை கொண்டுள்ளது. 2014-ஆம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழகத் துறைகளில் எம்ஃபில் மற்றும் பி.எச்.டி ஆராய்ச்சி படிப்புகளும் மற்றும் 2016 - 17ஆம் ஆண்டிலிருந்து 4 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.எஸ்.ஸி., பி.எட் மற்றும் பி.ஏ.,பி.எட் பட்டப்படிப்புகளும் துவங்கப்பட்டுள்ளன.

இப்பல்கலைக் கழகத்தால் 2017 - 18 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் எம்.எட் பட்ட மேற்படிப்புக்கு தேசிய ஆசிரியர் கல்விக்குழுமத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகம் தனது ஆளுகையின் கீழ் உள்ள 732 கல்லூரிகள் மூலம் பி.எட் பாடப்பிரிவுகள், 141 கல்லூரிகள் மூலம் எம்.எட் மற்றும் எம்ஃபில் பாடப்பிரிவுகள், 12 கல்லூரிகள் மூலம் முனைவர் பட்டத்திற்கான பாடப்பிரிவுகளை வழங்குகிறது. 2016 - 17 ஆம் ஆண்டில் 52,280 பி.எட் மாணாக்கர்களும், 5,510 எம்.எட் மாணாக்கர்களும், 284 ஆய்வியல் நிறைஞர் மாணாக்கர்களும், 227 பி.எச்.டி மாணாக்கர்கள் இணைவுக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத் துறைகளில் 93 பி.எச்.டி மாணாக்கர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். இப்பல்கலைக்கழகம் 2016 - 17 -ஆம் கல்வியாண்டு முதல், இணையவழி சேர்க்கையின் மூலம் பி.எட்., பி.எட் (சிறப்புக்கல்வி) மற்றும் எம்.எட். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.

2017 - 18 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் / திட்டங்கள்:

(i) 2017-18 ஆம் ஆண்டில் இப்பல்கலைக்கழகம் கலையரங்கம் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளது.

(ii) ஐந்து பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆதாரம் : கல்வித்துறை, தமிழ்நாடு அரசு

2.85714285714
karthick Jul 18, 2019 03:58 PM

தகவலுக்கு நன்றி. இப்பட்டியலில் திராவிட பல்கலைக்கசகத்தை சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி ........................!

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top