பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு (2017-18) இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கொள்கை விளக்கம்

கிராமப் புறங்களில் வசிக்கும் மக்களின் நலன் மற்றும் வளர்ச்சியே சமூகப் பொருளாதார கொள்கைகளை உருவாக்கி, அக்கொள்கைகளை நிறைவேற்ற பல்வேறு ஊரக வளர்ச்சித் திட்டங்களை வடிவமைக்க, இந்த அரசின் உந்து சக்தியாக திகழ்கிறது. நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை ஊரகப் பகுதிகளில் வழங்குவதன் மூலம் வறுமையை ஒழிப்பதே, பல்வேறு ஊரக வளர்ச்சித் திட்டங்களின் முதன்மை நோக்கங்களாகும்.

திட்டங்களின் முயற்சிகள்

 • முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் இந்த அரசின் சிறப்புமிக்க முயற்சிகளில் ஒன்றாகும். இத்திட்டம், கிராமப்புறங்களில் வீட்டு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • இது இந்த வகையில் நாட்டிலேயே செயல்படுத்தப்படும் முதல் திட்டமாகும்.
 • கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி பரப்பளவுடன் கட்டப்பட்டு, சோலார் விளக்குகளும் பொருத்தப்படுகின்றன. இத்திட்டம், 2016-17 ஆம் ஆண்டு முதல் மேலும் ஐந்தாண்டுகளுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது.

சமூகப் பொருளாதார வளர்ச்சி

 • ஊரகப் பகுதிகளின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் ஊரகச் சாலைகள் முக்கிய பங்காற்றுகின்றன. சாலைகள், ஊரகப் பகுதிகளுக்கு பல்வேறு சமூகப் பொருளாதார பலன்களை அளிப்பதன் வாயிலாக, வேளாண்மை சார்ந்த ஊரகப் பொருளாதாரத்தினை வலுவடையச் செய்கிறது. தமிழ்நாட்டில் 1.48 இலட்சம் கி.மீ. நீளமுள்ள ஊரகச் சாலைகள் உள்ளன.
 • இந்த ஊரகச் சாலைகள் தொகுப்பின் மேம்பாட்டிற்கு, சீரான இடைவெளியிலும், உரிய நேரத்திலும் நிதி அளிப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது.
 • பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து 2015-16ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (TNRRIS) மற்றும் இந்த அரசால் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு ஊரகச் சாலைகள் பராமரிப்புக் கொள்கை ஆகியன இந்த சவாலுக்கு தீர்வாக அமைந்துள்ளது.
 • 2011-12 ஆம் ஆண்டு குக்கிராமங்களை அலகாகக் கொண்டு தமிழக அரசால் தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் (தாய்) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
 • வள ஆதாரங்களை விகிதாச்சார முறையில் பகிர்ந்தளித்ததன் மூலம் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் தாய் திட்டம் சமமான வாய்ப்பினை அளித்தது.
 • தாய் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள், சாலைகள், சுடுகாடு / இடுகாடு, சுடுகாடு / இடுகாட்டிற்கு சாலை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளும், அங்கன்வாடி மையம், பொது விநியோகக் கடை, சுய உதவிக்குழு கட்டிடம், கதிரடிக்கும் களம், விளையாட்டு மைதானம் மற்றும் இதர அத்தியாவசிய பணிகளும் எடுக்கப்பட்டுள்ளன.
 • அனைத்து குக்கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் பெரும்பாலான அளவில் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஊரகப்பகுதி மக்களின் தேவைக்கேற்ப 2016-17ம் ஆண்டில் தாய் திட்டத்தின் முன்னுரிமைகள் மாற்றம் பெற்றன. அதற்கிணங்க, சிறுபாசன ஏரிகளை புனரமைத்தல், ஊரக, சாலைகளை மேம்படுத்துதல், குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள், தெருக்கள் மேம்பாடு செய்தல் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு பணிகள் எடுக்கப்பட்டுள்ளன.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்

 • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை சிறந்த முறையில் செயல்படுத்த இந்த அரசு பல முயற்சிகளை எடுத்ததன் மூலம், தமிழ்நாடு, தேசிய அளவில், இத்திட்ட செயலாக்கத்தில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
 • உடல் மற்றும் மன அளவிலான மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக, தனித்துவம் வாய்ந்த ஒரு முயற்சியாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளில் அவர்கள் பங்கேற்றிட ஏதுவாக சிறப்பு விலை விகித அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டது.
 • இந்த முயற்சிக்காக, 2012-13ம் ஆண்டு 'சமூக உள்ளாக்கம்' என்ற தலைப்பின் கீழ் சிறந்த மாநிலத்திற்கான தேசிய அளவிலான விருது தமிழ்நாட்டிற்கு கிடைக்கப்பெற்றது.

திடக்கழிவு மேளாண்மை பணிகள்

திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களை "தூய்மைக் காவலர்களாக" நியமனம் செய்து, தினசரி திடக்கழிவுகளை ஊரக குடியிருப்புகளிலிருந்து அகற்ற பயன்படுத்துவது இந்த அரசின் மற்றுமொரு தனித்துவம் வாய்ந்த முன் முயற்சியாகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் உரக்குழிகளை அமைத்து, சேகரிக்கப்படும் கழிவுகள், மக்கும் மற்றும் மக்காத கழிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அவைகள் முறையே உரமாகவும், மறுசுழற்சிக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

சுற்றுச்சூழல் சீர்கேட்டின் தீய விளைவுகளைத் தடுக்க, பசுமைப் பரப்பை இந்த அரசு தொடர்ந்து  அதிகரித்து வருகிறது. புவி வெப்ப மயமாதல், மண் அரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும், உயிர் பன்முகத்தன்மையைக் காத்து உயிரியல் சமநிலையை பேணும் நோக்கத்திலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மிக அதிக அளவில் காடு வளர்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய காடு வளர்ப்புப் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தனியாகவும், வனத்துறையோடு ஒருங்கிணைந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. ஊராட்சி/ வருவாய்த்துறைக்கு சொந்தமான மற்றும் பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் நிழல் தரும் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சமூக, பொருளாதார மற்றும் உடல் நலம் சார்ந்த குறியீடுகளுக்கும் சுகாதார வசதிகளுக்கும் இடையே நேரடி தொடர்பு இருப்பதையும், ஊரக மக்களின் நல வாழ்விற்கு சுகாதாரம் அடித்தளமாக உள்ளது என்பதையும் இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. எனவே, தமிழ்நாட்டிலுள்ள வலுவான சமூக மூலதனமாகத் திகழும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராம அளவில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சுகாதார நலனில் தொடர்புடைய துறைகளான சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், பள்ளி, கல்வி மற்றும் சமூக நலம் ஆகிய துறைகளின் களப்பணியாளர்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு மற்றும் மனமாற்ற நடவடிக்கைகளில் தீவிரமாக  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஊரக சுகாதார நிலை

இத்தகைய முன்முயற்சிகள் காரணமாக ஊரக சுகாதார நிலை கடந்த ஓராண்டில் 62 விழுக்காட்டிலிருந்து 73 விழுக்காடாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்துடன் இணைந்து தூய்மை காவலர்களை ஈடுபடுத்தி செயல்படுத்தப்படும் புதுமையான மாதிரி திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்திற்கு சிறந்த நடைமுறைக்கான நல் ஆளுமை விருது 15.8.2016 அன்று வழங்கப்பட்டது. இத்திட்டம் தேசிய அளவில் பாராட்டுதல்களை பெற்றதுடன், மத்திய அரசு இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்களை பிற மாநில அரசுகளுக்கு அனுப்பி இதனை முன்மாதிரியாக கொண்டு செயல்படுத்த அறிவுரை வழங்கியுள்ளது. மேற்கண்ட முன்முயற்சிகள் நமது மாநிலத்தை “முழு சுகாதார தமிழகம் - முன்னோடி தமிழகம்” என்ற இலக்கினை நோக்கி விரைந்து செல்வதற்கு வழிவகை செய்துள்ளது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மகளிருக்கு நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்கு உதவி அளிப்பதின் மூலம் அவர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தி மகளிரை அதிகாரப்படுத்துவதற்காக 1983ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு சேமிப்பு பழக்கம் ஏற்படுத்துதல், அடிப்படை பயிற்சியை வழங்குதல், அவர்களுக்குள் உட்கடன் பழக்கம் ஏற்படுத்துதல், வங்கிக்கடன் இணைப்பு தருதல், தொழில் வாய்ப்பு உருவாக்குதல் என பல்வேறு வழிகளில் துணை நின்று தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மகளிர் சுய உதவிக் குழுவினரிடையே சேமிப்புப் பழக்கத்தினை ஏற்படுத்தி, அவர்கள் கடன் சுமையில் விழாமல் பாதுகாக்கிறது. மேலும் அவர்கள் வங்கிக்கடன் பெற்று வருமானம் ஈட்டக்கூடிய தொழில்கள் தொடங்கி, தங்கள் வாழ்வாதாரத்திற்கான வருவாயினை ஈட்டவும் ஊக்குவிக்கிறது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் விடுபட்ட ஏழைமக்கள் குறிப்பாக விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், சமூகத்தில் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் ஆகியோரை சுய உதவிக் குழுக்கள் இயக்கத்திற்கு கொண்டு வந்து அவர்களின் வறுமையை முற்றிலுமாக நீக்கவும் இதற்கு துணை புரிகின்ற சமுதாய நிறுவனங்களை ஏற்படுத்தி அவைகளை வலுப்படுத்தியும், சமூக மூலதனம் மற்றும் நிதி உள்ளாக்கம் உள்ளிட்ட பல்வேறு நீடித்த வாழ்வாதார வாய்ப்புகளை ஏழைமக்களுக்கு உருவாக்கி அவர்களின் திறமையை வளர்த்து முழுமையாக வறுமையை ஒழிப்பதும் இதன் தலையாய நோக்கமாகும். இத்திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 265 ஊராட்சி ஒன்றியங்களில் 3 கட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அடித்தட்டு அளவில் ஏழைகளுக்கான வலுவான நிறுவன அமைப்புகளை உருவாக்கித் தருவதன் மூலம் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் ஏழ்மை மற்றும் நலிவுற்ற தன்மையினைக் குறைத்து, இலாபம் தரக்கூடிய சுய வேலைவாய்ப்பு மற்றும் திறன் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தர வழிவகை செய்து, அதன் பயனாக தொடர் வாழ்வாதார மேம்பாட்டினை உறுதி செய்வதே தீன் தயாள் அந்தியோதய யோஜனா - தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NULM) நோக்கமாகும். இத்திட்டம் 2014-15 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசுத் திட்டமான தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் 2015-16ஆம் ஆண்டு முதல் மத்திய மற்றும் மாநில அரசுகளால் 60:40 என்ற நிதி விகிதாச்சார அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2005 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் துவக்கப்பட்ட தமிழ்நாடு புது வாழ்வு திட்டம் மாநிலத்தின் 26 மாவட்டங்களில் உள்ள 120 பின்தங்கிய வட்டாரங்களில் 4,174 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமுதாயம் முன்னெடுத்துச் செல்லும் வளர்ச்சி அணுகுமுறை மூலம் மகளிரை ஆற்றல்படுத்துவதும், கிராமப்புற வறுமையை திட்டப் பகுதியில் குறைப்பதும் உலக வங்கி நிதியுதவியுடன் கூடிய இத்திட்டத்தின் நோக்கமாகும். சமுதாய அமைப்புகளை கட்டமைத்தல், அவைகளைத் தகுதிப்படுத்துதல், வங்கிகளின் வாயிலாக நிதி ஆதாரங்களுக்கு வழி காட்டுதல் மற்றும் வருமானம் ஈட்டக்கூடிய தொழில்களை ஊக்கப்படுத்தி ஏழைகளின் வாழ்வு நிலையை உயர்த்துதல் ஆகியன இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களாகும். மிகவும் ஏழை, ஏழை, நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற இலக்கு மக்களைக் கண்டறியவும், உதவி செய்யவும் புது வாழ்வு திட்டத்தின் சிறந்த செயல்பாடுகளில் ஒன்றாக மக்கள் நிலை ஆய்வு திகழ்கிறது. இத்திட்டத்தின் கீழ் சமுதாய அமைப்புகளான சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், ஒத்த தொழில் குழுக்கள், ஒத்த தொழில் கூட்டமைப்புகள், மக்கள் கற்றல் மையங்கள் போன்றன ஆற்றலளிப்பு மற்றும் வறுமை நீக்கும் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

3.02298850575
ஈசநத்தம் செல்வராஜ் ஆர் Nov 20, 2018 03:21 AM

100 நாள் வேலை திட்ட பணிகளில் விவசாயத்திற்கான வேலைகளையும் செய்ய மத்திய மாநில அரசு ஆவன செய்ய வேண்டும், 100 நாள் வேலையால், விவசாய பணிகளுக்கு ஆள் கிடைக்காமல் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வேளியேரும் நிலைமைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர் இந்நிலைமையினையும் அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top