பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சட்டத் துறை

சட்டத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னுரை

சட்டத்தின் நோக்கங்கள் இரண்டு விதமானவை. முதலாவதாக, சமூகத்தில், மக்கள் அமைதியான, நிலையான மற்றும் முறையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்கிறது. இரண்டாவதாக, சமூக மாற்றத்தின் தேவைகளுக்கேற்ப சட்டம் தன்னை மாற்றிக் கொள்வதன் மூலம் சமூக மாற்றத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. எனவே சட்டம் சமூகத்தை உரிய முறையில் கட்டுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய முகவாண்மையாகவும் சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாகவும் இருக்கிறது. மக்கள் தங்களுடைய கடமைகள் மற்றும் கடப்பாடுகளை உணர்ந்து செயல்படுவதற்கும் சட்டம் உறுதுணையாக இருக்கிறது.

சட்டம் ஒரு வளமான சமூகத்தை உருவாக்குவதற்காகத் தேவைப்படும் மேலும் பிற நோக்கங்களுடன் செயல்பட்டு, பொது நன்மையை உயர்த்துவதுடன், நீதி நெறியுடனான பழக்க வழக்கம், தவறு செய்பவர்களுக்கு தண்டனை அளித்தல் மற்றும் பூசல்களைத் தீர்த்து வைத்தல் போன்றவற்றை உள்ளடக்கியது. சட்டத்தின் ஆளுமை என்பது நம்முடைய ஜனநாயகத்தின் உறுதியான அடித்தளமாக விளங்குகிறது. மாநில சட்டமன்றம், அரசமைப்பின் ஏழாம் இணைப்புப்பட்டியலில் உள்ள மாநிலப் பட்டியலிலும் ஒருங்கியல் பட்டியலிலும் குறித்துரைக்கப்பட்ட பொருள் எதனையும் குறித்து சட்டமியற்றுகிறது. ஆனால் ஒருங்கியல் பட்டியலின் கீழ்வரும் பொருளைப் பொறுத்தவரை, சட்ட மன்றத்தினால் இயற்றப்படும் சட்டம், அது குடியரசுத்தலைவரால் இசைவளிக்கப்பட்ட பின்பு சட்டமாகிறது. சட்ட மன்றத்தினால் நேரடியாக இயற்றப்படும் சட்டமானது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முக்கிய கொள்கைகளைப் பிரதிபலிப்பதாகவுள்ளது. சட்டத்தின் செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான தொழில்நுட்ப விவரங்களும், நெறிமுறைகளும் அடங்கிய நடவடிக்கைகளை குறித்துரைக்க நிருவாக அதிகார அமைப்புகளுக்கு ஒப்படைவு செய்யப்படுகிறது. இவை அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்புகளால் வகுக்கப்படும் விதிகள் என்று வழங்கப்படும்.

அவ்வாறு வகுக்கப்படும் விதிகள் அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்புகளால் இயற்றப்பட்டிருப்பினும், அவை சட்டத்துறையினால் கூர்ந்தாய்வு செய்யப்படுகின்றன. விதிகள் வகுக்கப்படுகையில், சட்டமன்றத்தினால் அதிகாரமளிக்கப்பட்ட அதிகார அமைப்புகள் ஒப்படைவு செய்யப்பட்ட அதிகாரங்களை மீறாதிருக்கின்றனவா என்பதை உறுதி செய்யும் பொருட்டு, சட்டமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்டத்தின் வகைமுறைகளின்படி வெளியிடப்படும் விதிகள் மற்றும் அறிவிக்கைகள் அனைத்தும் சட்டமன்றத்தின் விதிகள் ஆய்வுக்குழுவினால் ஆய்வு செய்யப்படுகின்றது. அரசின் கொள்கை முடிவைச் சட்டமாக்க வேண்டும் என்று முடிவு செய்யும் பட்சத்தில், சட்டத்துறை, தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து அக்கொள்கை முடிவுகளுக்கு சட்டவடிவமளித்து சட்டமுன்வடிவுகளை உருவாக்குகிறது.

சட்டமன்றப் பேரவை சட்ட முன்வடிவிற்கு ஒப்புதல் அளித்த பின்பு, ஆளுநரின் அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பின்னர், அது சட்டமாகும் வரையில், சட்டத்துறையின் பணி தொடர்கிறது. சட்டமன்றப் பேரவை ஒத்திவைக்கப்பட்டு, அமர்வில் இல்லாத காலங்களிலும், சட்டமியற்றுவதற்கான அவசரத் தேவை ஏற்படுகிறவிடத்து, அரசமைப்பின் 213 ஆம் உறுப்பின்படி அவசரச் சட்டம் வெளியிடப்படுகிறது. சட்டத்துறையின் பணி, அவசரச் சட்டத்திற்கான முன்வரைவுகளை அதன் நோக்கத்திற்கேற்ப உருவாக்கி அதனை பிரகடனப்படுத்தி வெளியிடும் வரையில் தொடர்கிறது. மேலும், சட்டத்துறையின் முக்கியப் பணியானது, சட்டப் பேரவைச் செயலகம் உள்ளடங்கலான தலைமைச் செயலகத்தின் அனைத்துத் துறைகளுக்கும் சட்டப் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை வழங்குவதாகும். மாநில அரசு ஒரு தரப்பினராக உள்ள அனைத்து வழக்குகளிலும், உறுதிமொழி ஆவணங்களின் வரைவும், எதிர் உறுதிமொழி ஆவணங்களின் வரைவும், அவற்றிற்கான வரைவு மறுமொழிகளும் சட்டத்துறையினால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு அறுதி செய்யப்படுகின்றன. இவை தவிர, மாநில அரசு ஒரு தரப்பினராக உள்ள ஆவணங்கள் அனைத்தையும் சட்டத்துறை கூர்ந்தாய்வு செய்து அறுதி செய்கிறது. மேலும், பின்வருவன தொடர்பான நிர்வாகப் பணிகளையும் சட்டத்துறை செய்து வருகிறது:-

* சட்டக் கல்வி

* தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

* தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி

* சான்றுறுதி அலுவலர்கள்

* ஆட்சி மொழி (சட்ட) பிரிவு

* மாநில சட்ட ஆணையம்

சட்டக் கல்வி

சட்டக் கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் சட்டக் கல்வித் துறையானது தமிழ்நாட்டில் 1953ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் சட்டக் கல்வியின் தரம் அனைத்து வகைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளதோடு, மென்மேலும் முன்னேற்றமடைய இத்துறை தொடர்ந்து முயன்று வருகிறது. சென்னை , டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி 1891ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதுரையில் ஒரு அரசு சட்டக் கல்லூரி 1974ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1979-1980 ஆம் கல்வியாண்டில் திருச்சிராப்பள்ளியில் ஒன்றும், கோயமுத்தூரில் ஒன்றுமாக இரு அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

1996-1997ஆம் கல்வியாண்டில் திருநெல்வேலியில் ஒரு அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தால் செங்கல்பட்டில் நடத்தப்பட்டு வந்த சட்டக் கல்லூரி அரசு சட்டக் கல்லூரியாக டிசம்பர் 2006- இல் அறிவிக்கப்பட்டது. 2008-2009 ஆம் ஆண்டு முதல் வேலூரில் மற்றுமொரு அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது. தற்போது மாநிலத்தில் ஏழு அரசு சட்டக் கல்லூரிகள் செயற்பட்டு வருகின்றன. 2017-2018 ஆம் கல்வியாண்டு முதல் 3 ஆண்டு சட்டப் படிப்பில் 80 மாணவர்கள் மற்றும் 5 ஆண்டு சட்டப் படிப்பில் 80 மாணவர்களுடன் மூன்று அரசு சட்டக்கல்லூரிகள் விழுப்புரம், தருமபுரி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், தலா ஒன்று துவக்கிட ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்சொன்ன மூன்று புதிய அரசு சட்டக்கல்லூரிகளுக்கு தலா 10 ஆசிரியர் மற்றும் 18 ஆசிரியரல்லாப் பணியிடங்களைத் தோற்றுவித்தும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அக்கல்லூரிகளுக்கென தொடரும் மற்றும் தொடரா செலவினங்களுக்காக கல்லுாரி ஒன்றிற்கு தலா ரூ.2.27 கோடி வீதம் மூன்று அரசு சட்டக்கல்லூரிகளுக்கும் மொத்தம் ரூ.6.81 கோடி நிதி ஒப்பளிப்பும் வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழகத்தால் செங்கல்பட்டில் நடத்தப்பட்டு வந்த சட்டக் கல்லூரி அரசு சட்டக் கல்லூரியாக டிசம்பர் 2006- இல் அறிவிக்கப்பட்டது. 2008-2009 ஆம் ஆண்டு முதல் வேலூரில் மற்றுமொரு அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது. தற்போது மாநிலத்தில் ஏழு அரசு சட்டக் கல்லூரிகள் செயற்பட்டு வருகின்றன. 2017-2018 ஆம் கல்வியாண்டு முதல் 3 ஆண்டு சட்டப் படிப்பில் 80 மாணவர்கள் மற்றும் 5 ஆண்டு சட்டப் படிப்பில் 80 மாணவர்களுடன் மூன்று அரசு சட்டக்கல்லூரிகள் விழுப்புரம், தருமபுரி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், தலா ஒன்று துவக்கிட ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

2016-2017ஆவது கல்வியாண்டில் அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளில் ஒப்பளிக்கப்பட்ட மொத்த இடங்களின் எண்ணிக்கை 9366. அவைகளில், கல்லூரி வாரியாக ஒப்பளிக்கப்பட்ட மொத்த இடங்களின் எண்ணிக்கை கீழே தரப்பட்டுள்ளன:-

வ. எண்

 

கல்லூரியின் பெயர்

மொத்தம் ஒப்பளிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை

1

டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை -104. (மூன்றாண்டுகள் மற்றும் ஐந்தாண்டுகள் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள்)

2328

2

அரசு சட்டக் கல்லூரி, மதுரை (மூன்றாண்டுகள் மற்றும்

ஐந்தாண்டுகள் இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகள்)

1438

3

அரசு சட்டக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி (மூன்றாண்டுகள் மற்றும் ஐந்தாண்டுகள் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள்)

1440

4

அரசு சட்டக் கல்லூரி, கோயமுத்தூர். (மூன்றாண்டுகள் மற்றும் ஐந்தாண்டுகள் இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகள்)

1440

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், ஹாங்காங் மற்றும் வியன்னாவில் நடைபெறும் பன்னாட்டு நீதி மன்றப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக ஆண்டுதோறும் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் சார்பாக 7 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அம்மாணவர்களுக்கு தலா ரூ.75,000/- வீதம் மொத்தம் ரூ.5,25,000/- நிதி உதவியினை தமிழக அரசு வழங்கி வருகிறது. சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மற்றும் மதுரை அரசு சட்டக்கல்லூரியில் தமிழ் மொழி வாயிலாக மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு சட்டப்படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.400/- வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயமுத்தூர் மற்றும் திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரிகளில் மாணவர்களின் நலனுக்காக புத்தக வங்கி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்

சட்டக் கல்வியின் தரத்தினை மேம்படுத்துவதன் மூலமாக சட்டம் பயிலும் மாணவர்கள் இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில் வேரூன்றி நிற்பதற்காக தமிழ்நாட்டில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், மாநில சட்டத்தின் மூலம் தோற்றுவிக்கப்பட்டது. மேலும், தெற்காசிய நாடுகளில் சட்டக் கல்விக்கென தோற்றுவிக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகமாக இது திகழ்கின்றது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு சட்டக்கல்லூரிகளையும் தன்னகத்தே ஒருங்கிணைத்து செயற்பட்டு வருவதால் சட்டக் கல்வியின் தரம் மேம்பட்டு வருகிறது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தற்போது பெருங்குடி, கொட்டிவாக்கம் கிராமத்தில், தரமணி இருப்புப்பாதை நிலையத்திற்கு மிக அருகில் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 15 ஏக்கர் நிலத்தில், ரூ.61.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும் இப்பல்கலைக்கழக விரிவாக்க பணிகளுக்காக கூடுதலாக 10 ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் 2002-2003ஆம் கல்வியாண்டிலிருந்து சட்டக்கல்வி பயிற்றுவிக்கும் பணியை, சீர்மிகு சட்டப்பள்ளி வாயிலாக துவங்கி, மூன்றாண்டு எல்.எல்.பி (சீர்மிகு) சட்டப்படிப்பு மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி.ஏ., எல்.எல்.பி (சீர்மிகு), பி.காம்., எல்.எல்.பி (சீர்மிகு), பி.பி.ஏ.,எல்.எல்.பி (சீர்மிகு) மற்றும் பி.சி.ஏ.,எல்.எல்.பி (சீர்மிகு) ஆகிய சட்டப்படிப்புகளை பயிற்றுவித்து வருகிறது. இத்தகைய புதிய சட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதாலும் மற்றும் ஏற்கெனவே பயிற்றுவிக்கப்பட்டு வந்த சட்டப்படிப்புகளில் இருக்கைகள் அதிகரிக்கப்பட்டதாலும், சீர்மிகு சட்டப்பள்ளியில் 2015-2016 ஆம் கல்வியாண்டிலிருந்து இளநிலை சட்டப்படிப்பு இடங்கள் 320 இல் இருந்து 780 ஆக உயர்த்தப்பட்டது. மேலும் இப்பல்கலைக்கழகம் முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி செயல்பாடுகளையும் பயிற்றுவித்து வருகிறது. தொலைதுாரக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பல்வேறு முதுநிலை பட்டயப்படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.

அனைத்து வகையிலும் ஒரு முன்னுதாரணமாகத் திகழும் இப்பல்கலைக்கழகம் அதன் சீர்மிகு சட்டப்பள்ளி மூலம் இதுவரை 63 ஆராய்ச்சி மாணவர்களுக்கு சட்ட முனைவர் பட்டத்தினை வழங்கியுள்ளது. 2016-2017ஆம் கல்வியாண்டில் மட்டும் மொத்தம் 61 மாணவர்களை ஆராய்ச்சி படிப்பில் சேர்க்கைக்கு அனுமதித்துள்ளது. தற்போது 189 மாணவர்கள் முனைவர் ஆராய்ச்சி படிப்பினை இப்பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகின்றனர். சட்டம் மற்றும் சட்டத்தோடு மிக நெருங்கிய தொடர்புடைய பாடங்களில் புதிதாக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தென்னிந்தியாவில் தரம் வாய்ந்த பயிற்சி மையம் இல்லாத நிலையில், பணிமேம்பாட்டுத் திட்டத்தின் பலனை பெறுவதற்குத் தேவையான செயலாக்க மற்றும் புத்தாக்கப் பயிற்சிகளில் புதிய ஆசிரியர்கள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திலேயே ஆசிரியர் பயிற்றுவிப்பு கல்லூரி அமைப்பதற்கான கருத்துரு புதுடெல்லி, பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு சட்ட அறிவினை ஏற்படுத்துவதற்காக, முறையான உட்கட்டமைப்புடன் கூடிய சட்ட அறிவு செயல் முறை மையம் ஒன்றினை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நிறுவியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசானது ரூ.30 இலட்சம் நிதி ஒப்பளிப்பு அளித்துள்ளது. குற்றவியல் சட்டப் பாடம் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் தடயவியல் ஆய்வுக்கூடம் ஒன்றினை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நிறுவ தமிழக அரசு ரூ.10 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் தேசிய மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களுடனும், நிறுவனங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, கல்வி, பயிற்சி, சட்டம், நீதி, சமூக முன்னேற்றம் மற்றும் அவைகளோடு தொடர்புடைய பாடங்களில் ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் பரிவர்த்தனை போன்றவைகளில் மற்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதன் மூலமாக தன்னுடைய செயல்பாடுகளை விரிவாக்கம் செய்கிறது.

தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி

தமிழ்நாட்டில் தேசிய அளவிலான மிகச் சிறந்த சட்டக் கல்வி வழங்கும் பொருட்டு 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி, மாநிலச் சட்டம் மூலம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி உலகளாவிய காட்சியில் ஏற்பட்டு வரும் சூழ்நிலை மாற்றத்திற்கேற்ப, அதற்கு ஈடுகொடுத்து இணைந்து செல்லும் வகையில், சட்டத்தைக் கற்றல், சட்ட அறிவு பெறுதல், சட்ட வழிமுறைகளை அறிந்து கொள்ளுதல், வழக்காடும் திறமை, நீதி நிருவாகத்தில் திறமையைப் பளிச்சிடச் செய்தல் ஆகியவற்றைச் சட்டக்கல்வியின் மூலம் மேம்படுத்திப் பரப்புவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் 25 ஏக்கர் வளாகத்தில், 79.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி நிறுவப்பட்டது. மேலும் 2015-2016 ஆம் நிதியாண்டில் இப்பள்ளிக்கு அறைகலன்கள், விளையாட்டு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்காக ரூ.7.17 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியில் ஐந்தாண்டு பி.ஏ., எல்.எல்.பி (சீர்மிகு) மற்றும் ஐந்தாண்டு பி.காம்., எல்.எல்.பி (சீர்மிகு சட்டப்படிப்புகள் ஒரு சட்டப்படிப்புக்கு 55 இடங்கள் வீதம் பயிற்றுவிக்கப்படுகின்றன. மாணவர்கள் சேர்க்கையானது ஒரே பொது சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு (CLAT) மூலம் நடைபெறுகிறது.

2016-2017வது கல்வியாண்டில் மேற்சொன்ன சட்டப்படிப்புகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு :-

வ. எண்.

படிப்பு

சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை

1

பி.ஏ., எல்.எல்.பி

(சீர்மிகு)

 

தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்கள்

26

அகில இந்திய அடிப்படையில்

28

அயல்நாடு வாழ் இந்தியர்கள்

01

மொத்தம்

55

2

பி.காம்., எல்.எல்.பி

(சீர்மிகு)

 

தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்கள்

25

அகில இந்திய அடிப்படையில்

29

அயல்நாடு வாழ் இந்தியர்கள்

1

மொத்தம்

55


இப்பள்ளியில் தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்படும் இடங்கள் தமிழ்நாடு மாநில இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி நிரப்பப்படுகின்றன. 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஹாங்காங்கில் நடைபெற்ற சர்வதேச மாதிரி நீதிமன்றப் போட்டியில் கலந்து கொண்டதற்கான செலவினத்திற்காக தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியின் இரு மாணவர்களுக்கு தலா ரூ.76,205/- வீதம் மொத்தம் ரூ.1,52,410/- தமிழக அரசால் நிதி மீள் ஒப்பளிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி கீழ்க்காணும் பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது:-

* தேசிய சட்டப் பல்கலைக்கழகம், புதுடெல்லி

* இந்திய தேசிய சட்டப்பல்கலைக்கழகம், பெங்களூரு

* இன்ஸ்டிடியூட் ஆப் இந்திய கம்பெனி செகரட்டரீஸ் அமைப்பு, புதுடெல்லி.

சான்றுறுதி அலுவலர்கள்

1952 ஆம் ஆண்டு சான்றுறுதி அலுவலர்கள் சட்டத்தின்படி (மையச்சட்டம் எண் 53/1952) பொதுவான வணிக நடைமுறையில் முறையாவணங்களைக் குறித்தல், சான்றிடுதல் நோக்கத்திற்காகவும் மற்றும் சான்றுறுதி அலுவலரின் ஏற்பளிக்கப்பட்ட செயல்களுக்காகவும் சான்றுறுதி அலுவலர் அமர்த்தப்படுவர். 25.01.2017 அன்று உள்ளபடி இந்த அரசால் சான்றுறுதி அலுவலர்களாக அமர்த்தப்பட்டு இம்மாநிலத்தில் செயல்படுபவர்களின் எண்ணிக்கை 1460 ஆகும்.

ஆட்சி மொழி (சட்ட) பிரிவு

1965 ஆம் ஆண்டில் மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம், சட்டச் சொற்களை உருவாக்கி சட்டச் சொல் அகராதியை வெளியிடுவதற்காகவும், மையச் சட்டங்களையும், மாநிலச் சட்டங்களையும், அவசரச் சட்டங்களையும் அவற்றின்படி செய்யப்படும் விதிகள் மற்றும் அறிவிக்கைகள் ஆகிய அனைத்தையும் தமிழில் மொழி பெயர்ப்பதற்காகவும், அரசால் அவ்வப்போது ஒப்படைக்கப்படலாகும் பிற பணி எதனையும் மேற்கொள்வதற்காகவும் அமைத்துருவாக்கப்பட்டது.

மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையம், சட்டத்துறையின் ஒரு பிரிவாக 1992 ஆம் ஆண்டு சட்டத்துறையுடன் சேர்க்கப்பட்டு, சட்டத்துறை கூடுதல் செயலாளரின் தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. இத்துறையின் கீழ் இயங்கி வந்த மற்றொரு பிரிவான, தமிழ்ப்பிரிவானது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் சட்டமுன்வடிவுகள், சட்டங்கள் மற்றும் அவசரச் சட்டங்களை மொழிபெயர்க்கும் பணியினை மேற்கொண்டு வந்துள்ளது. சட்ட ஆட்சிமொழிப் பிரிவு மற்றும் தமிழ்ப் பிரிவால் மேற்கொள்ளப்படும் பணிகள் ஒரே தன்மையுடையதாய் இருப்பதாலும், அதிக அளவிலான பணித்திறனை பெறும் நோக்குடனும், நல்லமுறையில் மொழிபெயர்க்கும் பணியினை அதிக அளவில் செய்யவும், மொழிபெயர்ப்புப் பணியினை மேற்கொள்ளும் மொழிபெயர்ப்பு அலுவலர்களின் மீது சிறந்த கட்டாளுகையை செலுத்துவதற்காகவும், இத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்ப் பிரிவினை மேற்சொன்ன சட்ட ஆட்சிமொழிப் பிரிவுடன் இணைப்பதென்று முடிவு செய்யப்பட்டு, அவ்வாறே தமிழ்ப்பிரிவில் பணியாற்றி வரும் அலுவலர்களை சட்ட ஆட்சிமொழிப் பிரிவில் பணியாற்றி வரும் அலுவலர்களுடன் இணைத்து, சட்ட ஆட்சிமொழிப் பிரிவு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவு சட்டத்துறைச் செயலாளரின் ஒட்டுமொத்த மேற்பார்வையிலும் மற்றும் கட்டுப்பாட்டின் கீழும் இயங்கி வருகிறது. இது மையச் சட்டங்களையும், சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்படும் சட்டமுன்வடிவுகள், சட்டங்கள் மற்றும் அவசரச் சட்டங்கள் உள்ளடங்கலாக மாநிலச் சட்டங்களையும் தமிழில் மொழிபெயர்த்து வருகிறது. மையச் சட்டங்களை மொழி பெயர்த்து புத்தக வடிவில் அச்சிடுவதற்கான செலவினை, மைய அரசு ஏற்றுக்கொள்கிறது. மாநிலச் சட்டங்களை மொழிபெயர்த்து அச்சிடும் செலவினை மாநில அரசு ஏற்றுக்கொள்கிறது. மையச் சட்டங்களை மறுபதிப்பு மற்றும் மறுவெளியீடு செய்யும் இனங்களில், விற்பனையின் வாயிலாகக் கிடைக்கும் வருவாய் மாநில அரசுக்குச் சேர்வதால் அச்சிடும் செலவினை, மாநில அரசே ஏற்கவேண்டும் என மைய அரசினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநில சட்ட ஆணையம்

மாநில சட்ட ஆணையம், தமிழ்நாடு, ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி, மாண்புமிகு நீதியரசர் திரு. என்.தினகர் அவர்களை ஆணையத்தின் தலைவராகவும், இரண்டு முழு நேர உறுப்பினர்கள், இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள் மற்றும் ஒரு முழு நேர உறுப்பினர் - செயலாளர் ஆகியோரைக் கொண்டு 27.01.2014 அன்று திருத்தியமைக்கப்பட்டது. மாண்புமிகு நீதியரசர் திரு. என்.தினகர் அவர்கள் 10.02.2014 அன்று ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றார். ஆணையத்தின் பதவிக் காலம் தலைவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து மூன்று வருடங்கள் ஆகும். அதன்படி, 09.02.2017 அன்றுடன் ஆணையத்தின் பதவிக்காலம் முடிவுற்றது.

மாநில சட்ட ஆணையத்தின் செயற்பணிகளானது ஆங்கிலேய ஆட்சியின் போது இயற்றப்பட்ட ஒவ்வொரு சட்டத்தையும் மற்றும் அதற்குப் பின்பு இயற்றப்பட்ட சட்டங்களையும் ஆய்வு செய்வதாகும் மற்றும் ஆணையத்தால் ஆய்வு செய்யப்பட்ட அந்தச் சட்டங்கள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்தத்தக்கனவாக உள்ளதா அல்லது இல்லையா என்பது பற்றியும் தனது கருத்தினை அளிக்கும். மேலும், அந்தச் சட்டங்களுக்கு இணங்கிய வகையில் மாற்றமைவுகளை அல்லது திருத்தங்களைச் செய்வதற்கான ஆலோசனையை அரசுக்கு வழங்கும். உச்சநீதிமன்றத்தின் மற்றும் உயர்நீதிமன்றத்தின் பல்வேறு முடிவுகளுடன் மேற்சொன்ன சட்டங்கள் உடன்பட்டிருக்கிறதா என்பது பற்றியும் சட்ட ஆணையம் ஆய்வு செய்யும் மற்றும் அந்தச் சட்டங்களில் செய்ய வேண்டிய மாற்றங்களைப் பற்றியும் அரசுக்கு அறிவுறுத்தும். சட்ட ஆணையம் மேலும்,

(அ) தற்போதுள்ள சட்டங்களில் உள்ள குறைகளை நீக்குவதற்கு பொருந்தத்தக்க மாற்றமைவுகளை அல்லது திருத்தங்களைச் செய்வதற்கான ஆலோசனையை வழங்கும்;

(ஆ)பொருந்தத்தக்கதாகவுள்ள சமூக, பொருளாதார, சட்ட நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனையை வழங்கும்;

இ) மாநிலங்களுக்கிடையேயான உறவுகளை மற்றும் மைய-மாநில உறவுகளுக்கான வழிவகைகள் பற்றிய ஆலோசனையை வழங்கும்;

ஈ) நீதி நிருவாகச் சீர்திருத்தங்கள் அடிப்படையிலான சிறந்த மற்றும் உகந்த நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை வழங்கி பரிந்துரைகளைச் செய்யும்;மற்றும்

உ) மாநில சட்டங்களுக்கு மட்டுமல்லாமல், இந்த மாநிலத்திற்கு பொருந்தும் வகையிலிருக்கும் மையச் சட்டங்களுக்கும் மாற்றமைவுகளை அல்லது திருத்தங்களைச் செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கும்.

திருத்தியமைக்கப்பட்ட மாநில சட்ட ஆணையம் அதன் மூன்று அறிக்கைகளை அரசிற்கு சமர்ப்பித்துள்ளது. 04.09.2014 அன்று அரசிற்கு சமர்ப்பித்துள்ள தனது முதல் அறிக்கையில் (எட்டாவது அறிக்கையாக) குற்றவியல் நடைமுறைச்சட்டம் மற்றும் உரிமையியல் நடைமுறைச் சட்டம் ஆகிய சட்டங்களின் சில பிரிவுகளுக்கு அது தமிழ்நாடு மாநிலத்திற்குப் பொருந்துவதைப் பொறுத்த அளவிலும் மற்றும் வரைவு 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு முத்திரைத்தாள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட திருத்தங்களையும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது அறிக்கைகள் (ஒன்பதாவது மற்றும் பத்தாவது அறிக்கைகளாக) 01.09.2016 அன்று அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆணையத்தின் இரண்டாவது அறிக்கையில் 1925 ஆம் ஆண்டு தமிழ்நாடு இளங்குற்றவாளிகள் சீர்திருத்த பள்ளிகள் சட்டத்தில் சில சட்டப்பிரிவுகளுக்கு திருத்தங்களையும் மேலும் சென்னை உயர்நீதி மன்றம் (அதிகார வரம்பு எல்லைகள்) நீட்டிப்பு சட்டம் என்ற புதிய சட்டம் இயற்றவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

ஆணையம் தனது மூன்றாவது அறிக்கையில் (பத்தாவது அறிக்கையாக) 1921 ஆம் ஆண்டு சென்னை மாநகர குடியிருப்போர்கள் பாதுகாப்புச் (தமிழ்நாடு சட்டம் III/1922) சட்டத்தினை நீக்கறவு செய்வதற்காகவும் மற்றும் 1960 ஆம்ஆண்டு தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை கட்டுப்பாடு) சட்டத்திற்க்கான (தமிழ்நாடு சட்டம் 18/1960) திருத்தம் செய்வதற்கும், குற்றவியல் நடைமுறைச்சட்டம், உரிமையியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1947 ஆம் ஆண்டு தொழில்துறைப் பூசல்கள் சட்டம் ஆகிய சட்டங்களின் சில பிரிவுகளுக்கு அது தமிழ்நாடு மாநிலத்திற்குப் பொருந்துவதைப் பொறுத்த அளவிலும் திருத்தங்களை மேற்கொள்ளவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மாநில சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள், தலைமைச் செயலகத்தின் உரிய துறைகளின் பரிசீலனையில் உள்ளது. உச்சநீதிமன்றத்தின் ஒய்வு பெற்ற நீதிபதி மாண்புமிகு நீதியரசர் திரு. சொக்கலிங்கம் நாகப்பன் அவர்களைத் தலைவராகக் கொண்டு மாநில சட்ட ஆணையமானது, தமிழ்நாடு அரசால் 15-06-2017 அன்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது. மாநில சட்ட ஆணையத்தின் பதவிக்காலம் தலைவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து மூன்று வருடங்கள் ஆகும்.

ஆதாரம் : சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை

2.98684210526
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top