பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் 2018 - 19

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை 2018 - 19 கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தோட்டக்கலைப் பிரிவானது சமீப காலங்களில் இந்திய விவசாயத்தில் முக்கிய மற்றும் துடிப்பான ஒரு அங்கமாக உள்ளது. நாட்டின் ஊட்டச்சத்து பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கத்தில் தோட்டக்கலை பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இப்பிரிவு விவசாயிகளுக்கு மாற்று பயிர் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பினையும் பண்ணை நிலங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளையும் வழங்குவதோடு, பெருமளவிலான புதிய வேலை வாய்ப்புகளை அளிக்கும் வேளாண் தொழிற்சாலைகள் நீடித்து இயங்கும் வாய்ப்பினை அளித்து வருகிறது. தோட்டக்கலைப் பயிரானது மாற்றுப்பயிர் சாகுபடிக்கு உகந்ததாகவும், இயற்கை வளத்தினை சிறந்த வகையில் பயன்படுத்தி கிராமப்புற மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு திறன் சார்ந்த வேலைவாய்ப்பினை வழங்குவதாகவும் அமைந்துள்ளது எனவும் கண்டறியப் பட்டுள்ளது.

தோட்டக்கலை விளைபொருட்களின் தேவை அதிகரிப்புக்கு ஏற்ப, இப்பயிர்களின் பரப்பு மற்றும் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு மாற்று பயிர் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பினை தோட்டக்கலை வழங்குவது மட்டுமல்லாமல், சமீபத்திய தொழில்நுட்பங்களை கொண்டு உணவு பாதுகாப்பை பாதிக்காமல் வருமானத்தை அதிகரிக்க ஒரு மிகப்பெரிய வாய்ப்பினையும் அளிக்கிறது. கடந்த ஆண்டுகளில் தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவு ஒரு ஆண்டிற்கு 2.7 சதவீதத்திலும் மற்றும் ஆண்டு உற்பத்தி 7.0 சதவீதத்திலும் உயர்ந்துள்ளது.

தேசிய அளவில் தோட்டக்கலைப் பயிர்களில் தமிழகத்தின் நிலை

மத்திய அரசின் 2017ஆம் ஆண்டிற்கான தோட்டக்கலை புள்ளிவிவரப்படி தேசிய அளவில் தமிழ்நாடு தோட்டக்கலை துறையில் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கின்றது. தேசிய அளவில் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியில் தமிழகம் 5.88 சதவீதமும், பரப்பளவில் 5.4 சதவீதமும் பங்களிக்கிறது. நாட்டின் பழங்கள் சாகுபடி பரப்பில் 4.8 சதவீதத்தினையும் காய்கறிகள் சாகுபடி பரப்பில் 2.5 சதவீதத்தினையும் தமிழகம் கொண்டுள்ளது. தேசிய அளவிலான பழங்கள் உற்பத்தியில் 6.5 சதவீதமும், காய்கறிகள் உற்பத்தியில் 3.6 சதவீதமும் மற்றும் பூக்கள் உற்பத்தியில் 19 சதவீதத்திற்கும் தமிழகம் பங்களிப்பு செய்கிறது. வளர்ந்து வரும் மக்கள் தொகையின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 5.68 இலட்சம் எக்டர் பரப்பில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. தமிழகம் உதிரிப்பூக்கள் உற்பத்தியில் தேசிய அளவில் முன்னிலை வகிப்பதுடன் நாட்டின் மொத்த உதிரிப் பூக்கள் உற்பத்தியில் 19 சதவீத பங்களிப்பினையும் ஆற்றுகின்றது.

தமிழகத்தில் தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பளவு, உற்பத்தி, மற்றும் உற்பத்தித்திறன் (2017-18 மற்றும் 2018-19)

பரப்பு: (இலட்சம் எக்டர்,

உற்பத்தி :இலட்சம் மெட்ரிக் டன்,

உற்பத்தி திறன்: மெட்ரிக் டன் /எக்டர்)

எண்

பயிர்

2017-18 (மதிப்பீடு)

2018-19 திட்டமிடப்பட்டது

பரப்பு:

உற்பத்தி

உற்பத்தி திறன்

பரப்பு:

உற்பத்தி:

உற்பத்தி திறன்

1

பழங்கள்

3.03

61.75

20.38

3.33

69.23

20.79

2

காய்கறிகள்

2.28

54.67

23.98

2.74

67.02

24.46

3

சுவை தாளிதப் பயிர்கள்

1.06

2.41

2.27

1.24

2.86

2.31

4

மலைப் பயிர்கள்

7.03

56.59

8.05

7:12

58.46

8.21

5

மூலிகை, வாசனை திரவியப் பயிர்கள்

0.14

1.78

12.69

0.15

1.94

12.94

6

மலர்கள்

0.35

4.83

13.80

0.38

5.35

14.07

மொத்தம்

13.89

182.03

13.11

14.96

204.86

13.69

தமிழக அரசின் முக்கிய கொள்கை வேளாண் உற்பத்தியை இருமடங்காக்கி, விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்காக பெருக்குவதே ஆகும்" உயர்ரக தொழில்நுட்பங்கள் மூலம் தோட்டக்கலை விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே ஆகும்.

தோட்டக்கலைப் பயிர்கள் பரப்பு விரிவாக்கத்திற்கு, தரமான சான்றளிக்கபட்ட இரகங்கள் / வீரிய ரக விதைகள் மற்றும் தரமான நடவுச் செடிகளைப் பயன்படுத்துதல், அடர் நடவு சாகுபடி, பாதுகாக்கப்பட்ட சூழலில் அதிக மதிப்புள்ள தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடியை ஊக்குவித்தல், பாசன நீரின் உபயோகத்தை அதிகப்படுத்த நுண்ணீர் பாசனம், தேனீ வளர்ப்பின் மூலம் மகரந்த சேர்க்கையை ஊக்குவித்து உற்பத்தியை அதிகரித்தல், கிளை மேலாண்மை, பழைய தோட்டங்களை புதுப்பித்தல், மானாவாரிப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை பின்பற்றுதல், வலிமையான உட்கட்டமைப்பின் மூலம் மாநில தோட்டக்கலைப் பண்ணைகளில் தரமான பாரம்பரிய நடவுச் செடிகள் மற்றும் காய்கறி விதைகள் உற்பத்தி செய்தல், பண்ணை இயந்திரமயமாக்கல் மற்றும் மேம்படுத்தப்பட்ட அறுவடை பின்செய் நேர்த்தியை பின்பற்றுதல் ஆகியவை தோட்டக்கலைத்துறையின் உத்திகளாகும்.

தமிழகத்தில் தோட்டக்கலைப் பயிர்களின் நிலை

தேசிய அளவில், நமது மாநிலத்தில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, தோட்டக்கலைப் பயிர் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.

பழப்பயிர்கள்

தமிழகத்தின் முக்கிய பழப்பயிர் உற்பத்தியில் மா மற்றும் வாழை மட்டுமே மொத்த பழ உற்பத்தியில் 81 சதவீதத்திற்கும் மேல் உற்பத்தி செய்யப்படுகின்றன. பழப்பயிருக்கான மொத்த பரப்பில் 53 சதவீதம் மா பெற்றுள்ளதற்கு முக்கிய காரணமாக விளங்கும் மாவட்டங்கள் திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவள்ளூர் மற்றும் சேலம் முதலானவையாகும். ஆண்டு முழுவதும் திராட்சைப்பழ உற்பத்தி மற்றும் பருவமல்லா காலங்களிலும் மாம்பழ உற்பத்தி ஆகியவை தமிழகத்தின் தனித்தன்மையாகும்.

தமிழகமானது வாழை சாகுபடி பரப்பில் (94,990 எக்டர்) கர்நாடகாவிற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும் வாழை (36.41 இலட்சம் மெட்ரிக்டன்), சப்போட்டா (2.14 இலட்சம் மெட்ரிக்டன்), நெல்லி (1.64 இலட்சம் மெட்ரிக்டன்), திராட்சை (0.31 இலட்சம் மெட்ரிக்டன்) ஆகிய பழப் பயிர்களின் உற்பத்தியில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. மொத்த பழ உற்பத்தியில் 2016-17ஆம் ஆண்டில் தமிழகம் 3.11 இலட்சம் எக்டர் பரப்பில் பழப்பயிர்களை பயிரிட்டு 60.80 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்து தேசிய அளவில் ஆறாவது இடத்தில் உள்ளது.

பழங்கள் உற்பத்தி திறனை பொறுத்தவரையில் பப்பாளி (229.74 மெட்ரிக் டன் / எக்டர்), சப்போட்டா (31.56 மெட்ரிக் டன் / எக்டர்) மற்றும் மாதுளை (27,43 மெட்ரிக் டன் / எக்டர்) ஆகியவற்றில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. மேலும், உற்பத்தி திறனில் நெல்லி (19.59 மெட்ரிக் டன்/எக்டர்) மற்றும் அன்னாசி (33.46 மெட்ரிக் டன்/எக்டர்) ஆகிய பயிர்களில் முறையே ஆந்திர மாநிலம் மற்றும் கர்நாடகத்தை அடுத்து தமிழகம் இரண்டாம் நிலையில் உள்ளது.

2018-19ஆம் ஆண்டில், அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் தரமான நடவு பெருட்கள் உற்பத்தி, அடர் நடவு மற்றும் குறிப்பாக வாழை மற்றும் பழப்பயிர்களில் சொட்டுநீர் பாசனம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பழங்கள் அதிகளவில் பயிர் செய்யும் மாவட்டங்கள்

வ. எண்.

பயிர்களின் விபரம்

பரப்பு (எக்டர்)

அதிகளவில் பயிர்செய்யும் மாவட்டங்கள்

1

மா

1,76,417

திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மற்றும் திருவள்ளுர்.

2

வாழை

94,977

ஈரோடு, தூத்துக்குடி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி.

3

எலுமிச்சை

11,741

திண்டுக்கல், திருநெல்வேலி, தேனி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர்.

4

கொய்யா

10,786

திண்டுக்கல், மதுரை, வேலூர், விருதுநகர் மற்றும் கடலூர்.

5

நெல்லி

8,874

திண்டுக்கல், திருநெல்வேலி, திருப்பூர், சிவகங்கை மற்றும் தேனி.

6

சப்போட்டா

7,830

திண்டுக்கல், வேலூர், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தேனி

7

ஆரஞ்சு

3,950

திண்டுக்கல், தருமபுரி, தேனி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர்.

8

பலா

3,017

. கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, நாமக்கல் மற்றும் புதுக்கோட்டை.

9

திராட்சை

2,487

தேனி, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர்

10

பப்பாளி

1,899

தருமபுரி, ஈரோடு மற்றும் வேலூர்.

காய்கறிகள்

அகில இந்திய அளவில் தமிழகம் மரவள்ளிப் பயிரை 0.82 இலட்சம் எக்டர் பரப்பில் சாகுபடி செய்து கேரள மாநிலத்திற்கு அடுத்து இரண்டாம் நிலையில் உள்ளது.

2016-17ஆம் ஆண்டு, மரவள்ளி உற்பத்தியில் (26.03 இலட்சம் மெட்ரிக் டன்) தமிழகமானது தேசிய அளவில் முன்னிலை வகிக்க விழுப்புரம், நாமக்கல், தருமபுரி, சேலம், மற்றும் ஈரோடு முதலான மாவட்டங்கள் முக்கிய காரணமாக திகழ்கின்றன.

உற்பத்தி திறனை பொருத்தவரை மரவள்ளி (31.72 மெட்ரிக் டன் / எக்டர்), பீன்ஸ் (21.08 மெட்ரிக் டன் / எக்டர்) கோஸ் (54.25 மெட்ரிக் டன் / எக்டர்) ஆகிய காய்கறி பயிர்களில் தமிழகம் முதலிடத்திலும், காலிபிளவர் பயிரில் (25.62 மெட்ரிக் டன் / எக்டர்) இரண்டாம் இடத்தையும் வகிக்கிறது.

தமிழகத்தில் 63.05 இலட்சம் மெட்ரிக் டன் காய்கறிகள் 2016-17ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மரவள்ளி, வெங்காயம், தக்காளி, கத்தரி, வெண்டை முதலான காய்கறிகள், மொத்த காய்கறி சாகுபடி பரப்பில் 70 சதவீதம் சாகுபடி செய்யப்பட்டு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. காய்கறி சாகுபடி பரப்பு அதிகரிக்க சாகுபடி செலவினத்திற்கு மானியம் அளித்து வீரிய ஒட்டுரக காய்கறிகள் சாகுபடி ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில், வீரிய ஒட்டுரக காய்கறி நாற்றுக்களை குழித்தட்டுகளில் வளர்த்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.

2018-19ஆம் ஆண்டில், அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கறிகளில் சான்றளிக்கப்பட்ட விதைகளை உற்பத்தி செய்து தமிழ்நாட்டில் காய்கறி சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், வீட்டுத்தோட்டங்களில் காய்கறி சாகுபடி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

காய்கறி பயிர்களை அதிகளவில் பயிர் செய்யும் மாவட்டங்கள்

வ.எண்

பயிர்களின் விபரம்

பரப்பு (எக்டர்)

அதிகளவில் பயிர் செய்யும் மாவட்டங்கள்

1

மரவள்ளி

82,070

விழுப்புரம், நாமக்கல், தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு

2

வெங்காயம்

35,579

பெரம்பலூர், திண்டுக்கல், திருச்சி, நாமக்கல் மற்றும் திருநெல்வேலி

3

தக்காளி

26,342

தருமபுரி, சேலம், கிருஷ்ண கிரி, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர்.

4

கத்தரி

13,971

தருமபுரி, சேலம், திண்டுக்கல், வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி,

5

வெண்டை

11,077

தருமபுரி, சேலம், திண்டுக்கல், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை

6

பீன்ஸ்

7,100

திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், தேனி மற்றும் ஈரோடு

7

உருளைக் கிழங்கு

6,447

திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர்

8

பாகற்காய்

2,568

தருமபுரி, கோயம்புத்தூர், சேலம், திண்டுக்கல் மற்றும் கடலூர்

9

கேரட்

2,745

திண்டுக்கல், நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி

10

கீரைகள்

2,345

சேலம், திருவள்ளூர் மற்றும் தருமபுரி

மலர்கள்

உதிரி மலர்கள் உற்பத்தியில் 2016-17ஆம் ஆண்டில் தமிழகம் 4.09 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்து தொடர்ந்து தேசிய அளவில் முதலிடத்தை வகிக்கிறது. மலர்களின் சாகுபடியை 32,290 எக்டர் பரப்பில் மேற்கொண்டு தேசிய அளவில் மூன்றாவது இடத்தை தமிழகம் பெறுவதற்கு தருமபுரி கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. உதிரிமலர்கள், கிழங்குவகை மலர்கள் மற்றும் கொய்மலர்கள் பயிரிடுவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மலர்கள் பயிரிடுவதை ஊக்குவிக்க அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் தரமான நாற்றுகள் உற்பத்தி செய்து மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

2018-19ஆம் ஆண்டில், 38,316 எக்டரில் மலர்கள் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மலர்கள் அதிகளவில் பயிர் செய்யும் மாவட்டங்கள்

வ.எண்

பயிர்களின் விபரம்

பரப்பு (எக்டர்)

அதிகளவில் பயிர் செய்யும் மாவட்டங்கள்

1

மல்லிகை

13,720

மதுரை திண்டுக்கல், ஈரோடு, திருவள்ளூர் மற்றும் திருநெல்வேலி

2

செவ்வந்தி

5,371

தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை

3

சம்பங்கி

3,134

தருமபுரி, மதுரை சேலம், திருவள்ளூர் மற்றும் திண்டுக்கல்

4

ரோஜா

2,157

தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தஞ்சாவூர் மற்றும் திருவள்ளூர்

5

சாமந்தி

1,903

கிருஷ்ணகிரி, தருமபுரி, திருச்சிராப்பள்ளி மற்றும் கடலூர்.

சுவை தாளிதப் பயிர்கள்

தமிழ்நாட்டில் மிளகாய், மஞ்சள், புளி, கொத்தமல்லி, மிளகு, ஏலக்காய், வெற்றிலை போன்ற முக்கிய சுவைதாளிதப் பயிர்கள் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. தமிழகத்தின் முக்கிய சுவைதாளிதப் பயிரான மஞ்சள் 35,975 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு தேசிய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

தமிழகமானது புளி உற்பத்தியிலும் (48,100 மெட்ரிக் டன்) கர்நாடகாவை அடுத்து இரண்டாம் நிலையில் உள்ளது. மேலும், ஒட்டுமொத்த சுவைதாளிதப் பயிர்கள் உற்பத்தியில் தமிழகம் 2016-17ஆம் ஆண்டில் 1.49 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்து அகில இந்திய அளவில் நான்காம் இடத்தை வகிப்பதற்கு ஈரோடு, தருமபுரி, சேலம், நாமக்கல், மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் முக்கியமானவை.

மிளகாய் உற்பத்தியில் முக்கிய பங்களிப்பு வழங்கும் மாவட்டங்களாக இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, வேலூர் மற்றும் திண்டுக்கல் ஆகியவை உள்ளன. உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் முண்டு மிளகாயை விட சம்பா மிளகாய் பரப்பை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சம்பா மிளகாய்களில் அதிக அளவு ஒலியோரசின் உள்ளதன் காரணமாக விவசாயிகள் அதிக விலைப் பெற்று அந்த பகுதியில் மதிப்பு கூட்டு தொழிற்சாலைகள் நிறுவ வழிவகுக்கும்.

சுவைதாளிதப்பயிர்கள் அதிகளவில் பயிர் செய்யும் மாவட்டங்கள்

வ.எண்.

பயிர்களின் விபரம்

பரப்பு (எக்டர்)

அதிகளவில் பயிர் செய்யும் மாவட்டங்கள்

1

மிளகாய்

44,561

இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை , விருதுநகர் மற்றும் வேலூர்

2

மஞ்சள்

35,975

ஈரோடு, தருமபுரி, சேலம், நாமக்கல் மற்றும் விழுப்புரம்

3

புளி

16,224

திண்டுக்கல், தேனி, தருமபுரி, மதுரை மற்றும் கன்னியாகுமரி

4

கொத்தமல்லி

9,212

தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர் மற்றும் திருப்பூர்

5

மிளகு

5,112

நாமக்கல், சேலம், திண்டுக்கல், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி

6

ஏலக்காய்

2,423

நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர், சேலம் மற்றும் நாமக்கல்

7

வெற்றிலை

997

நாமக்கல், கரூர், மதுரை, கடலூர் மற்றும் சேலம்

மலைப்பயிர்கள்

தமிழகம் 2016-17ஆம் ஆண்டில் 41.76 இலட்சம் / மெட்ரிக் டன் உற்பத்தி செய்து கேரளத்திற்கு அடுத்ததாக தேசிய அளவில் இரண்டாம் நிலையில் உள்ளது. மேலும், உற்பத்தி திறனை பொறுத்தவரை 6.73 மெட்ரிக் டன்/ எக்டர் உற்பத்தி திறனுடன் ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு அடுத்து மூன்றாம் நிலையை வகிக்கிறது. தமிழகம் 2016-17ஆம் ஆண்டில் 6.21 இலட்சம்/ எக்டர் பரப்பு சாகுபடி செய்து மலைப்பயிர் பரப்பில் மூன்றாம் நிலையில் உள்ளது.

முந்திரியில் பரப்பு விரிவாக்கம் / பழைய தோட்டங்களை புதுப்பித்தல் ஆகியவை ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2016-17ஆம் ஆண்டு முதல் தேயிலைத் தோட்டங்களுக்கு நுண்ணீர்பாசனம் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

2018-19ஆம் ஆண்டில், காபி வாரியத்துடன் ஒருங்கிணைந்த காபி வளர்ப்பு பகுதியில் உள்ள பழங்குடியினருக்கு, மத்திய அரசின் திட்டங்களின் பயன்களை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

மலைப்பயிர்களை அதிகளவில் பயிர் செய்யும் மாவட்டங்கள்

வ.எண்.

பயிர்களின் விபரம்

பரப்பு (எக்டர்)

அதிகளவில் பயிர் செய்யும் மாவட்டங்கள்

1

முந்திரி

90,958

அரியலூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை மற்றும் தேனி

2

தேயிலை

69,026

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி

3

காப்பி

33,055

திண்டுக்கல், நீலகிரி, சேலம், தேனி மற்றும் கோயம்புத்தூர்

4

பாக்கு

7,262

சேலம், கோயம்புத்தூர், நாமக்கல், ஈரோடு மற்றும் நீலகிரி

5

கோகோ

2,651

தருமபுரி, சேலம், திண்டுக்கல்,கன்னியாகுமரி மற்றும் ஈரோடு

தோட்டக்கலை துறையின் செயல்பாடுகள்

"துளி நீரில் அதிகப்பயிர்" - பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம்

(Pradhan Mantri Krishi Sinchayee Yojana - PMKSY)

விவசாயத்தில் பாசன நீர் அனைத்து விதங்களிலும் முக்கிய இடுபொருளாக திகழ்கிறது. பாசன நீரின் அளவு, நீர் பாய்ச்சும் நேரம் மற்றும் பாசன முறை ஆகியவை, பயிர்களின் மகசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நுண்ணீர் பாசன தொழில்நுட்பம் தேவையான நீரை, தேவையான இடத்தில் வழங்குவதற்கு உதவுகிறது.

நுண்ணீர் பாசன தொழில்நுட்பம் பாசன நீர் பற்றாக்குறைக்கு நல்ல தீர்வாக விளங்குகிறது. இத்தொழில் நுட்பம் பாரம்பரிய நீர்பாசன முறைகளை விட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வழி செய்கிறது. சீரான கால இடைவெளியில் அளவாக நீர் பாய்ச்சப்படுவதால் உற்பத்தி திறன் மற்றும் நீர் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பதுடன் பணி ஆட்களின் செலவை கணிசமாக குறைத்து, களை வளர்ச்சியினை கட்டுப்படுத்துகிறது. நுண்ணீர் பாசனத்தின் மூலம் நீர் வழி உரமிடுவதால் உரப்பயன்பாட்டு திறன் அதிகரிப்பதோடு தரமான விளைபொருளும் கிடைக்கிறது. தமிழகம் ஒரு தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாக இருப்பதால் நுண்ணீர் பாசன திட்டத்தினை, அதிக தண்ணீர் தேவைப்படும் விவசாய மற்றும் தோட்டக்கலை பயிர்களான கரும்பு மற்றும் வாழை பயிர்களில் தீவிரமாக செயல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துகிறது.

நுண்ணீர் பாசன திட்டம் "துளி நீரில் அதிக பயிர்" என்ற பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தின் உட்பிரிவின் கீழ் மத்திய மாநில அரசுகளுக்கிடையே 60:40 என்ற மானிய பங்களிப்பில் செயல்படுத்தப்படுகிறது. அகில இந்திய அளவில் தமிழகத்தில் மட்டுமே, சிறுகுறு விவசாயிகளுக்கு 100% சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 75% சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. 2017-18ஆம் ஆண்டில் விவசாயிகளின் பொருளாதார சுமையை குறைக்க வேண்டி மாநில அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகள் எடுத்து நுண்ணீர் பாசன கருவிகளின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியினை அரசே ஏற்றுக் கொண்டுள்ளது.

2011-12 முதல் 2016-17 வரையிலான ஆறு வருட காலத்தில் ரூ.1170.88 கோடி நிதி செலவினத்தில், 4,72,027 ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, 1,52,459 சிறு/குறு விவசாயிகளும், 53,514 இதர விவசாயிகளும், மொத்தமாக 2,05,973 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். 2017-18ஆம் ஆண்டில், தமிழக அரசு மேற்கொண்டுள்ள தொடர் முயற்சிகளினால் இத்திட்டம் 3,01,661 ஏக்கர் பரப்பளவில், ரூ.692.26 கோடி நிதியில் செயல்படுத்தபட்டு வருகிறது.

நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்துவதற்காக 2017-18ஆம் ஆண்டு முதல் "நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு" என்ற புதிய மென்பொருள் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உபயோகிக்க எளிதாக இருப்பதால் விவசாயிகள் தாங்களாகவே பொது சேவை மையத்தில் இம்மென்பொருளின் மூலம் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம். இந்த மென்பொருளானது விவசாயிகள் எளிதாக தகவல்களை புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்தும் அலுவலர்களும், பயனாளிகள் பதிவு முதல் இறுதியாக மானியம் விடுவிக்கப்படும் வரை கண்காணிக்கலாம். நுண்ணீர் பாசனத் திட்டத்தினை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த இம்மென்பொருள் உதவுகிறது.

நுண்ணீர் பாசனம் - 2017-18ஆம் ஆண்டு செயல் திட்ட விபரம்

வ.

எண்

பயிர் விபரம்

பொருள் பரப்பு ஏக்கரில்

நிதி (ரூ.கோடியில்)

மத்திய அரசு பங்கு

மாநில அரசு பங்கு

மொத்தம்

1

தோட்டக்கலை பயிர்கள்

1,41,136

112.84

223.40

336.24

2

வேளாண் பயிர்கள்

160,525

112.84

223.39

336.23

3

நிர்வாக நிதி

--

11.87

7.92

19.79

 

மொத்தம்

3,01,661

237.55

454.71

69226

2018-19ஆம் ஆண்டில் நுண்ணீர் பாசனத்தை 3,57,945 ஏக்கர் பரப்பைக் கொண்டுவருவதற்கு ரூ.982.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய தோட்டக்கலை இயக்கம் (National Horticulture Mission (NHM))

தமிழகத்தில், தேசிய தோட்டக்கலை இயக்கமானது தோட்டக்கலையில் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 2005-06ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தோட்டக்கலை பயிர்களில் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க, வீரிய ஒட்டுரகங்களை ஊக்குவித்தல், பாரம்பரிய பயிர் சாகுபடி முறைகளில் இருந்து, உயர் தொழில்நுட்ப பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் சாகுபடி செய்தல், அடர் நடவு முறைகள், உற்பத்திறன் குறைந்த பழைய தோட்டங்களை புதுப்பித்தல், தரமான நடவு பொருட்களை வழங்குதல், தேனீ வளர்த்தல் மூலம் மகரந்த சேர்க்கையை ஊக்குவித்தல், அறுவடை பின்செய் மேலாண்மைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், குறிப்பிட்ட பயிருக்கான திட்டங்கள் மற்றும் பொருத்தமான விஞ்ஞான தொழில்நுட்பங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு தோட்டக்கலை விரிவாக்க பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் அரியலூர், கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை , தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 22 மாவட்டங்களிலும், கொடைக்கானல் வட்டாரத்திலும் 2015-16ஆம் ஆண்டிலிருந்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே 60:40 நிதி பங்களிப்புடன், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கத்தின் துணைத் திட்டமாக, தேசிய தோட்டக்கலை இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2016-17 மற்றும் 2017-18ஆம் ஆண்டில், முறையே ரூ.77.43 கோடி நிதியிலும் ரூ.108.108 கோடி நிதியிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2017-18ம் ஆண்டில் சில குறிப்பிடத்தக்க இனங்களாகிய தோட்டக்கலை பயிர்களில் புதிய பரப்பு விரிவாக்கம் (31,000 ஏக்கர் பரப்பில்), பசுமை குடில், நிழல் வலை குடில் மற்றும் மூடாக்கு மூலம் பாதுகாக்கப்பட்ட சூழலில் சாகுபடி(4,650 ஏக்கர் பரப்பில்), தேனீ வளர்ப்புக்கான உபகரணங்கள் (1,18,940 எண்கள்), அரசு தோட்டக்கலை பண்ணை, பேச்சிப்பாறை, கன்னியாகுமரியில் தேனீ வளர்ப்புக்கான மகத்துவ மையம் அமைத்தல் மற்றும் முருங்கை இலை உற்பத்தியில் மதிப்பு கூட்டுதல் சங்கிலியை ஊக்குவிக்கும் இனத்தில் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் 500 ஏக்கர் பரப்பளவில் மிக அதிகமான அடர் நடவு முறை மூலம் மூன்று வருடங்களுக்கு பயிரிட நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.

தமிழகத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்திய காரணத்தினால் கடந்த ஆண்டைவிட 2018-19ஆம் ஆண்டில் 51% கூடுதல் நிதி மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல் படுத்துவதற்காக ரூ.163.333 கோடி நிதியில் புதிய இனங்களில் சிறப்பு கவனம் செலுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

மகத்துவ மையங்களை உருவாக்குதல் (Centres of Excellence)

தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், இரண்டு மகத்துவ மையங்கள் இஸ்ரேல் தொழில்நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் கொய்மலர்களுக்கான மகத்துவ மையம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தில் காய்கறி பயிர்களுக்கான மகத்துவ மையமும் முறையே ரூ.8.80 கோடி மற்றும் ரூ.10.18 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன. கொய் மலர்களுக்கான மகத்துவ மையம், கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் 06 டிசம்பர், 2017 அன்று கொய் மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்காக தொடங்கிவைக்கப்பட்டது.

ரூ.14.50 கோடி நிதியில் (மலைக்காய்கறிகளுக்கான மகத்துவ மையம், நஞ்சநாடு, நீலகிரி மாவட்டம், வெப்பமண்டல பழங்களுக்கான மகத்துவ மையம், திருச்சி, தேனீ வளர்ப்புக்கான மகத்துவ மையம், அரசு தோட்டக்கலை பண்ணை, கன்னியாகுமரி மற்றும் பாரம்பரிய மலர்பயிர்கள் மகத்துவ மையம், மதுரை மாவட்டம்) ஆகிய இடங்களில் புதிதாக நான்கு மகத்துவ மையங்கள் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (National Agricultural Development Programme (NADP))

முக்கிய பயிர்களின் உற்பத்தி திறனை உரிய தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டமானது, 60:40 என்ற விகிதத்தில் மத்திய, மாநில அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும்.

2011 -2012 முதல் 2017-18 வரை, ரூ.296.61 கோடி நிதி செலவில், 44,152.40 எக்டர் பரப்பில் தோட்டக்கலைப் பயிர்களில் புதிய பரப்பு விரிவாக்கம், 10,994 எக்டர் பரப்பில் துல்லிய பண்ணையம், 1,647 எக்டரில் பந்தல் சாகுபடி, 41.80 எக்டரில் பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் சாகுபடி, 1,500 எக்டருக்கு வாழைத்தார் உறை, 88 எண்கள் மஞ்சள் வேகவைக்கும் இயந்திரம், 8,688 மரவள்ளி கரணை வெட்டும் கருவி, 1,267 எண்கள் அலுமினியம் ஏணி, 5,029 பிளாஸ்டிக் கூடைகள், 699 ஐந்து அடுக்கு விரித்தாள், 7,50,000 எண்கள் வீட்டுத்தோட்ட காய்கறி விதைத் தளைகள், மூலிகைச் செடி தளைகள் மற்றும் 96,364 எண்களில் அங்கன்வாடி மற்றும் மதிய உணவு மையங்களுக்கு முருங்கை மற்றும் பப்பாளி நடவு செடிகள், 8,390 மெ.டன் கொள்ளளவு கொண்ட குறைந்த விலையில் வெங்காய சேமிப்புக் கிடங்குகள், 38,338 எக்டருக்கு விளக்குப்பொறிகள், இனக்கவர்ச்சி பொறிகள் மற்றும் மஞ்சள் வண்ண ஒட்டுபொறிகள் வழங்குதல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.

பெருநகர காய்கறி தொகுப்பு வளர்ச்சித் திட்டம்

(Perimetro Vegetable Cluster Development ProgrammePerimetro)

பெருநகர காய்கறி வளர்ச்சித் திட்டம், 2011-12ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 2015-16ஆம் ஆண்டு வரை ரூ.56.02 கோடி நிதி ஒதுக்கீட்டில், விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களுக்கு இடையிலான இடைவெளியினை குறைக்கவும், நகர்புற மக்களுக்கு தரமான காய்கறிகள் குறைந்த விலையில் கிடைக்கவும், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க செய்யும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் பரப்பு விரிவாக்கம், பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் சாகுபடி, இயற்கை வேளாண்மை மற்றும் விவசாயிகள் பயிற்சி ஆகியவை செயல்படுத்தப்பட்டு ரூ.35.30 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டது.

2018-19ஆம் ஆண்டில் மீதமுள்ள தொகை ரூ.20.72 கோடியில் செலவில் பரப்பு விரிவாக்கம், பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் சாகுபடி, இயற்கை வேளாண்மை மற்றும் விவசாயிகள் பயிற்சி ஆகியன செயல்படுத்தப்படும்.

இத்திட்டம் 28 மாவட்டங்களில் 6 பெருநகரங்களான சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் கிழக்கு கடலோர மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

பெருநகர வாரியாக நிதி ஒதுக்கீடு

வ.எண்

பெருநகரம்

மாவட்டம்

நிதிஒதுக்கீடு (ரூ.கோடியில்)

1

சென்னை

காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை

6.21

2

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர்

5.07

3

திருச்சி

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல்

5.11

4

மதுரை,

மதுரை தேனி, சிவகங்கை , விருதுநகர், இராமநாதபுரம்

0.99

5

சேலம்

சேலம், கிருஷ்ண தருமபுரி, நாமக்கல்

0.75

7

கிழக்கு கடலோர மாவட்டங்கள்

கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி

2.59

மொத்தம்

20.72

ஆதாரம் -  தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை

3.18181818182
K.சிவானந்தன் Aug 12, 2019 06:58 AM

ஈரோடு மாவட்டம்,சென்னிமலை.
எங்களுக்கு ஒட்டு ரக பலா கன்றுகள் எங்கு என்ன நிலையில் கிடைக்கும்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top