பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம்

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் 18 - 19 கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் நவீன வசதிகளுடன் கூடிய சேமிப்பு வசதிகளை விவசாயிகள் மற்றும் இதர வியாபார நிறுவனங்களுக்கு வழங்குவதற்காகவும் விவசாயிகள் மற்றும் வியாபார நிறுவனங்களின் பொருட்களுக்கு தகுந்த பாதுகாப்பு வசதிகள் வழங்குவதை உறுதி செய்வதற்காகவும் தோற்றுவிக்கப்பட்டது. இது வேளாண் உற்பத்தி (மேம்பாடு மற்றும் சேமிப்பு கிடங்கு) நிறுவனச் சட்டம், 1956-ன்படி 1958ல் தோற்றுவிக்கப்பட்டது.

செயல்பாடுகள்

இந்நிறுவனம் பொருட்களின் சேமிப்பு இழப்பினை கட்டுப்படுத்தவும், பொருட்களின் சேமிப்புத் திறனை மேம்படுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு, சேமிப்புக் கிடங்குகளைக் கட்டியும், இயக்கியும் வருகிறது. மேலும், சந்தை வாய்ப்புகளை ஆய்வு செய்து மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள விவசாயிகள் மற்றும் இதர வியாபார நிறுவனங்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களை சேமிப்பதற்காக, சேமிப்புக் கிடங்குகள் மாநிலம் முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளன. மே 2018 வரை இந்நிறுவனத்திற்கு மாநிலம் முழுவதும் 57 இடங்களில் 270 கிடங்குகள் உள்ளன.

நிறுவனத்தின் அமைப்பு

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம் மேட்டுப்பாளையம், சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ஆகிய 7 மண்டலங்களில் செயல்பட்டுவருகின்றன. இம் மண்டல அலுவலகங்கள் முதுநிலை மண்டல மேலாளர் / மண்டல மேலாளர் கட்டுபாட்டிலும் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் அனைத்தும் கிடங்கு மேலாளர்களாலும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த மேலாண்மை மற்றும் கண்காணிப்பு தலைவர் உள்ளடக்கிய 11 இயக்குநர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. குழுமத் தலைவர் மற்றும் 5 இயக்குநர்கள் மாநில அரசாலும், 5 இயக்குநர்கள் மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பாகவும் நியமனம் செய்யப்படுகின்றனர்.

சேமிப்புக்கொள்ளளவு

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் மொத்த சேமிப்புக் கொள்ளளவு 7.32 இலட்சம் மெட்ரிக் டன் ஆகும். இவற்றில் 7.28 இலட்சம் மெட்ரிக் டன் சொந்த சேமிப்புக் கிடங்குகளிலும் 0.04 இலட்சம் மெட்ரிக் டன் வாடகை வளாகங்களிலும் செயல்படுகின்றன.

பயன்பாடு

இந்நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்குகள் முக்கியமாக இந்திய உணவுக் கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், ஆவின், தமிழ்நாடு மாநில விற்பனைக் கழகம், சர்க்கரை ஆலைகள், உர உற்பத்தி நிறுவனங்கள், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், இந்திய புகையிலை நிறுவனம், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், தேசிய கூட்டுறவு விற்பனை இணையம், தனியார் வியாபார நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் 2017-2018-ஆம் நிதியாண்டில் மொத்தக் கொள்ளளவில் 79சதவிகித பயனீட்டு அளவை தொடர்ந்து எய்தியுள்ளது.

சேமிப்பு கிடங்கினை பயன்படுத்துபவர்கள் மற்றும் இருப்புவைப்புக் கட்டணத்தில் தள்ளுபடி

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் அரசு/ பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுக்கு இருப்பு வைப்புக் கட்டணத்தில் கீழ்க்கண்டவாறு தள்ளுபடி அளித்து வருகிறது.

வ. எண்

சேமிப்பு கிடங்கினை பயன்படுத்துபவர்கள்

பொருள்

தள்ளுபடி விழுக்காட்டில்

1

விவசாயிகள்

உணவு தானியங்கள்

30

2

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்

உணவு தானியங்கள்

30

3

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்

நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பாடப் புத்தகங்கள்

25

4

வருவாய்த்துறை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

20

5

கூட்டுறவு சர்க்கரை ஆலைகள்

சர்க்கரை

20

6

ஆவின்

பால் பொருட்கள்

20

7

MFL, IFFCO, மற்றும் உரம் FACT, KRIBHCO போன்ற பொதுத் துறை உர உற்பத்தி நிறுவனங்கள்

உரம்

10

8

கைத்தறி கூட்டுறவு வேட்டி, சங்கங்கள்/ தமிழ்நாடு சேலைகள் மாநில விற்பனை விவசாயப் இணையம், தேசிய கூட்டுறவு விற்பனை இணையம் முதலியன.

வேட்டி சேலைகள் விவசாயப் பொருட்களான கொப்பரை, சோளம் முதலியன

10

9

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்

இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானம்

10

10

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம்

காகித தயாரிப்புகள்

30

11

இந்திய புகையிலை நிறுவனம் (ITC)

கோதுமை

22

12

இந்திய உணவுக் கழகம்

மத்திய அரசு நிர்ணயிக்கும் சேமிப்புக்கட்டணம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது

சேமிப்புக் கொள்ளளவை மேம்படுத்தவும், எடைமேடை நிறுவவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

பொருட்களின் சேமிப்பு இழப்பு குறைந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் சேமிப்புக் கிடங்கின் கொள்ளளவுத் திறன் உயர்ந்துள்ளது. புதியதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள கிடங்குகளின் விபரம்:

வ.எண்

அமைவிடம்

கிடங்குகளின் எண்ணிகை

கொள்ளளவு

(மெ.டன்)

மதிப்பீட்டுத் தொகை

(ரூ.கோடியில்)

1

நல்லம்பள்ளி கிராமம், தருமபுரி மாவட்டம்

3புதியது)

15,000

17.00

2

கோபிச்செட்டிப் பாளையம் கிராமம், பாப்பிரெட்டிபட்டி தாலுகா, தருமபுரி மாவட்டம்

1(புதியது)

5000

6.00

3

அருப்புக் கோட்டை கிடங்கு வளாகம் விருதுநகர் மாவட்டம்

1(கூடுதல்)

3,500

3.20

4

கிருஷ்ணகிரி கிடங்கு வளாகம் கிருஷ்ணகிரி மாவட்டம்

1(கூடுதல்)

5,000

4.90

5

நாஞ்சிக்கோட்டை கிடங்கு வளாகம் தஞ்சாவூர் மாவட்டம்

2(கூடுதல்)

7,000

6.40

 

மொத்தம்

8

35,500

37.50

சேமிப்புக் கிடங்கின் நிலையினை மேம்படுத்துவதற்கான முயற்சிகள்

மின்னணு எடைமேடைநிறுவுதல்

மானா மதுரை மற்றும் இராஜபாளையம் ஆகிய சேமிப்புக் கிடங்கு வளாகங்கள் ஒவ்வொன்றிலும் தலா 60 மெட்ரிக் டன் கொள்ளளவில் ரூபாய் 38 இலட்சம் மதிப்பீட்டில் குழியில்லாத மின்னணு லாரி எடை மேடைகள் (Pitless type Electronic Lorry Weigh bridge) 2017-2018 ஆம் நிதியாண்டில் நிறுவப்பட்டுள்ளது.

புறஊதா ஒளிப்பொறிகள் வாங்குதல்

சட்டமன்றத்தில் 2017-2018 ஆம் ஆண்டு மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களது அறிவிப்பிற்கிணங்க, ரூ15 இலட்சம் செலவில் 239 புறஊதா ஒளிப்பொறிகள் (Ultraviolet Light Traps-Pest Control Machine) 26சேமிப்புக் கிடங்குகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நடவடிக்கை மூலம் இந்திய உணவுக் கழகத்தின் உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்களில் பூச்சித் தாக்குதல் இன்றி உணவு தானியங்களின் இருப்பு பராமரிக்கப்பட்டு வருகிறது.

பூச்சித் தடுப்பு நடவடிக்கைகள்

இந்நிறுவனம் அரசுத் துறைகள், அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு பூச்சித் தடுப்பு பணிகளை செய்து வருகிறது. இந்நடவடிக்கை மூலம் 2017 - 2018 ஆம் ஆண்டில் ரூ.58.00 இலட்சம் வருவாய் ஈட்டியுள்ளது.

நிதிச் செயலாக்கம்

கடந்து நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நிதிச்செயலாக்க நடவடிக்கைகள் பின்வருமாறு:

விபரம்

2014-15

2015-16

2016-17

2017-18

தோராயமாக

(ரூபாய் கோடியில்)

செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் (மாநில அரசு மற்றும் மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனம் தலா 50%)

7.61

7.61

7.61

7.61

மொத்த வருமானம்

57.71

60.30

64.64

80.00

செலவு

30.69

35.80

34.74

48.29

மொத்த லாபம்

27.22

24.50

31.18

32.29

ஆதாயப் பங்கு

2016-2017 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் ஈட்டிய நிகர லாபமான ரூ19.69 கோடியிலிருந்து முன்மொழியப்பட்ட 30% ஆதாய பலனான ரூ.5.91 கோடியினை (பங்கு ஆதாய வரி உட்பட) தனது பங்கு முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது.

மாற்றத்தக்க சேமிப்புக் கிடங்கு ரசீதுகளின் மீது கடன் வசதிகள்

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தால் 36 சேமிப்பு கிடங்குகள் சேமிப்புக் கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம், 2007-ன்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. சேமிப்புக் கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை ஆணையம் (WDRA), இந்நிறுவனத்தின் கிடங்கு வசதியைப் பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் தனியார் சரக்கு வைப்பாளர்கள், வங்கிகள் மூலம் கடன் பெற ஏதுவாக மாற்றத்தக்க சேமிப்புக் கிடங்கு ரசீதுகளை (Negotiable Warehouse Receipts) வழங்குகின்றது. விவசாயிகள்/சரக்கு வைப்பவர்கள், தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து மாற்றத்தக்க சேமிப்புக் கிடங்கு ரசீதுகளை அடமானம் வைப்பதன் மூலம் தங்களது சரக்கிருப்பின் மதிப்பில் 60% முதல் 80% வரை கடன் பெற்று வருகின்றனர். 2017-2018 ஆம் ஆண்டில் 1,481 மாற்றத்தக்க சேமிப்புக் கிடங்கு ரசீதுகள் வழங்கப்பட்டு அவற்றின் மீது ரூ.119.17 கோடி கடன் பெறப்பட்டுள்ளது.

அமலாக்கம்

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை, அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம் 1955, கள்ளச் சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசியப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980-இன் கீழ் மத்திய அரசாலும், மாநில அரசாலும் வெளியிடப்பட்ட பல கட்டுப்பாட்டு ஆணைகளை அமல்படுத்துகிறது. இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் வாயிலாக கைது, கைப்பற்றுதல், பறிமுதல் செய்தல் பறிப்பிழக்க விசாரணை மற்றும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. கடத்தல்காரர்களை முன்னெச்சரிக்கையாக 6 மாதம் வரைதடுப்புக் காவலில் வைக்க கள்ளச் சந்தை தடுப்புச்சட்டம் அனுமதிக்கிறது.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அமைப்பும் அதன் செயல்பாடுகளும்

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை, கூடுதல் காவல்துறை இயக்குநர் தலைமையில் ஒரு காவல் துறைத் தலைவர், 2 காவல் கண்காணிப்பாளர்கள் (சென்னை மற்றும் மதுரை மண்டலம்) மற்றும் நான்கு துணைக் கண்காணிப்பாளர்களை (சென்னை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் மதுரை) கொண்டு செயல்பட்டுவருகிறது. இந்தத் துறையில் உள்ள 33 அலகுகளில், 22 அலகுகள் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலும் மற்றும் 11 அலகுகள் காவல் உதவி ஆய்வாளர்கள் தலைமையிலும் செயல்பட்டு வருகின்றன. இதைத் தவிர எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, கோயம்புத்துார், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி மற்றும் வேலுார் ஆகிய இடங்களில் ஐந்து சிறப்பு ரோந்துப் படைகள் இயங்கி வருகின்றன.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் சாதனைகள்

01.01.2017 முதல் 31.05.2018 வரை 8,232 வழக்குகள் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட அத்தியாவசியப் பொருட்கள் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

* ரூ.1,12,00,960 மதிப்பிலான 19,824.71 குவிண்டால்

பொது விநியோகத் திட்ட அரிசி

* ரூ.4,96,410 மதிப்பிலான 33,094 லிட்டர் பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெய்

* ரூ.3,36,100 மதிப்பிலான 379 எண்ணிக்கை எரிவாயு உருளைகள்

இது தவிர ரூ.2,91,853 மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களான பருப்பு, பெட்ரோல், டீசல், கலப்பட எண்ணெய் போன்ற பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ1,23,25,323 ஆகும். 6801 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1727 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தென் மாநிலங்களில் துடிப்புடன் செயல்பட்டு வந்த கடத்தல்காரர்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இரயில், கப்பல் மற்றும் பெரிய லாரிகள் வாயிலாக கடத்தப்பட்ட அரிசி பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சந்தை தடுப்புக் காவல்

01.01.2017 முதல் 31.05.2018 வரை கள்ளச் சந்தை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 120 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2017 - 2018 ஆம் ஆண்டில் புதிய முயற்சி

2017-ஆம் ஆண்டு கடைசி காலாண்டில், புதிய முயற்சியாக பொது விநியோகத் திட்டம் தொடர்புடைய அனைத்து தரப்பினர் அடங்கிய குழு (Stakeholders Committee) ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவில் அனைத்து தரப்பு மக்கள், குடும்ப அட்டைதாரர்கள், வாகன ஒப்பந்ததாரர்கள், வாகன ஓட்டுநர்கள், கிடங்கு அலுவலர்கள், சுமைதுாக்கும் தொழிலாளர்கள், குடிமைப் பொருள் வழங்கல் துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் உட்பட பலர் அடங்குவர். இக்குழுவின் கூட்டம் அவ்வப்போது மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலானாய்வுத் துறை அதிகாரிகளால் நடத்தப்படுகிறது. இதுவரையிலும் 5000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற 350 கூட்டங்கள் நடத்தப்பட்டு சுமார் 400 பேர்கள் காவல்துறை நண்பர்கள் இயக்கத்தில் (Friends of Police) உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர். இக்கூட்டங்களின் வாயிலாகப் பெறப்படும் முக்கியத் தரவுகள் அமலாக்கப்பணி மற்றும் நுண்ணறிவுத் தகவல் சேகரிப்பிற்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இக்குழு உறுப்பினர்கள் கூட்ட நடவடிக்கைகளின் போது மிகவும் பயனுள்ள கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இவர்கள் தெரிவிக்கும் குறைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டு நூற்றுக்கணக்கான குறைகள் நிவர்த்தி செய்யப் பட்டுள்ளன. இத்தகையக் கூட்ட நடவடிக்கைகள் பொது மக்களின் மன நிறைவு நிலையை உயர்த்தியுள்ளது.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை "உங்கள் குற்றவாளியைத் தெரிந்து கொள்" (Know Your Criminal) என்ற புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. “உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்” (Know Your Customer) என்ற கருத்தின் நவீன வடிவமாக உங்கள் குற்றவாளியைத் தெரிந்து கொள்” என்ற கருத்து அனைத்து அலகு ஆய்வாளர்களுக்கும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. இம் முயற்சியானது கடந்த காலங்களில் மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களது நடவடிக்கைகளைத் தெரிந்து அவர்கள் அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் செயல்களில் இனியும் வருங்காலங்களில் ஈடுபடாமல் தடுக்கும் நடவடிக்கையாகும்.

இக்குழு உறுப்பினர்கள் மூலம் பெறப்படும் தகவல்களால் முக்கிய கடத்தல் வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில வழக்குகள் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட முறைகேடு மற்றும் கள்ளத்தனமாக மாற்று இடத்திற்கு பொது விநியோகத் திட்ட அரிசியை கடத்திச் செல்லுதல் போன்ற குறிப்பிடத்தக்க வழக்குகள் ஆகும். இவ்வாறு புதிய யுக்தியில் கண்டுபிடிக்கப்பட்ட வழக்குகள் கடத்தல் காரர்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்திருப்பதோடு, இனி பொது விநியோகத் திட்ட உணவுப் பொருட்களை கடத்த எத்தனிக்கும் முயற்சியையும் தடுக்கும் விதமாக அமைந்துள்ளது.

பொது விநியோகத் திட்ட அரிசி கடத்தலைக் தடுக்க முக்கிய சோதனைச் சாவடிகளில் இரவு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அத்தியாவசியப் பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிற மாநிலங்களுக்கு அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகள் மாநில எல்லைப் பகுதியில் திடீர் சோதனை நடத்த அனுப்பப்பட்டுள்ளனர். அரிசி கடத்தும் முக்கியக் குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்வதற்கு ஏதுவாக குற்றவாளிகளின் புகைப்படங்கள் எல்லையோரப் பகுதிகளில் ஒட்டப்பட்டன.

தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவிற்கு இருப்புப்பாதை தொடர் வண்டிகள் முலம் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க அவ்வப்போது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 1975 ஆம் ஆண்டிலிருந்து 2012 - ஆம் ஆண்டு வரை அத்தியாவசியப் பொருட்கள் சட்டப்பிரிவு 6 (அல் விவரிக்கப்பட்டுள்ள பறிப்பிழக்கம் மற்றும் பறிப்பிழக்கத்திற்கு பதிலாக அபராதம் விதிக்கும் முறை தவறுதலாகப் புரியப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்ததால், அமலாக்கப் பணி பலவீனமடைந்தது. பிரிவு 6 (அன்படி பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தின் சந்தை மதிப்பிற்கு மிகாமல் விதிக்கப்பட்ட அபாரதத் தொகையை வாகன உரிமையாளரிடம் வசூல் செய்த பின்புதான் வாகனத்தை விடுவிக்க வேண்டும். ஆனால் 1975 முதல் 2012 வரை பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தில் கடத்தி வரப்பட்ட அத்தியாவசியப் பொருளின் மதிப்பிற்கான அபராதத் தொகை மதிப்பீடு செய்யப்பட்டு, வசூலிக்கப்பட்டு வந்தது. 2012ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி மேற்கண்ட நடைமுறை பிறழ்வுகள் சரிசெய்யப்பட்டு பெரிய அளவிலான அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு முக்கிய கடத்தல்காரர்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன.

குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வலைப்பின்னல்முறை அமல்படுத்துதல்

கடத்தல்காரர்கள் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளைத் திறம்படக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் வலைப்பின்னல் முறை அமல்படுத்துதல் (Crime and Criminal Tracking Network and Systems - CCTNS) குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையில் அமல்படுத்துவதற்கு இடம் தேர்ந்தெடுத்தல் மற்றும் கணிணிகள் வழங்குதல் மாநில குற்ற ஆவணக் காப்பகம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. குற்ற வழக்கு விவரங்களை சிப்ரஸ் (CIPRUS) மென்பொருளில் பதிவேற்றம் செய்வதற்கு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பணியாளர்களுக்கு மிகை நேரபணி ஊதியம் வழங்குதல்

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் மிகை நேரப் பணி ஊதியம் (Extra Time Remuneration) ரூ800/-ஒப்பளிப்பு செய்யப்பட்டு, 2014 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இணைய வழித் தொடர்பு

அனைத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அலகுகளுக்கும் அகண்ட அலைவரிசை இணைய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மைய அரசின் பாராட்டுக்கள்

பொது விநியோகத் திட்டப் பொருட்களை கடத்துபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென்பது தமிழ்நாடு அரசின் கொள்கையாக உள்ளது. குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை இரவு பகல் என பாராது திறம்பட செயலாற்றி கடத்தல்காரர்களை பெருமளவு ஒடுக்கி சாதனை புரிந்துள்ளது. இப்பணியை உணவுத் துறை அமைச்சர்களுடன் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் கள்ளச் சந்தை தடுப்புக் காவல் சட்டத்தை முறையாக அமல்படுத்தி கடத்தலை தடுத்து முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என மைய அரசு பாராட்டியுள்ளது.

மைய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத்திட்ட அமைச்சகம் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், மாநில காவல் துறை தலைமை இயக்குநர்கள் இடையேயான கலந்தாய்வுக் கூட்டத்தில் மற்ற இனங்கள் தொடர்பான விவாதங்களில், சிறப்பு இனமாக, தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் மெச்சத்தகுந்த பணியினை வெகுவாக கீழ்க்கண்டவாறு மைய அரசு தனது 07.05.2015 நாளிட்ட கடிதத்தில் பாராட்டியுள்ளது.

“தமிழ்நாடு மாநிலம்' குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை என்ற சிறப்புப் பிரிவினைக் கொண்டு பொது விநியோகத் திட்டப் பொருட்கள் கடத்தலை தடுக்கும் பணியினைத் திறம்பட செய்து வருகிறது. மற்ற மாநிலங்களும், தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை பொது விநியோகத் திட்டப் பொருட்கள் கடத்தலைத் தடுக்கும் சிறந்த புலனாய்வு நுணுக்கங்களை செயல்படுத்தி கள்ளச் சந்தைக்காரர்களை ஒடுக்கி அரசின் திட்டங்களை முழுமையாக பயனாளிகளுக்கு நேரடியாக சென்றுசேர உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ''

புதிய கட்டிடம் கட்டுதல்

தமிழக உணவுத் துறையின் பெருமை என்று சொல்லக்கூடிய குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் செயல்பாடுகளை மேலும் முடுக்கிவிடவும், செம்மையாக்கிடவும், இதுகாறும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த இதன் தலைமை அலுவலக கட்டிடத்தை ரூபாய் 3.69 கோடி மதிப்பீட்டில் கட்ட தமிழக அரசு ஆணையிட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

முடிவுரை

அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தொடர்ந்து பெரும் முயற்சி மேற்கொள்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை குறித்த நேரத்தில் வழங்குவதற்காக விநியோக முறைகளை சீராக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய பரந்த அளவிலான பொதுவிநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்திடவும் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையினைக் கட்டுக்குள் வைத்திடவும் அரசு தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

நுகர்வோர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமானது என அரசு ஏற்றுக்கொள்கிறது. இது தவிர நுகர்வோர்களின் குறைகளைக் களைந்திட வலுவான கட்டமைப்பு மற்றும் நுகர்வோர்களுக்கான உரிமைகள் மற்றும் கடமைகளை தெரிந்துகொள்ள விழிப்புணர்வினை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆதாரம் - கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை

2.98214285714
mohan kumar May 03, 2019 09:33 AM

கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் மதுக்கரையில் தனியார் பங்களிப்புடன் சேமிப்பு கிடங்கு அமைக்க உங்கள் ஆலோசனை தேவை.
98946 99950 மோகன் குமார் Vao Retd

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top