பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 2018 - 19 கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன

முன்னுரை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1972 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்நிறுவனம் 1956 ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டம் பிரிவு 33ன் கீழ் பதிவு செய்யப்பட்ட தமிழக அரசின் வரையறுக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமாகும். பின்னர் இந்நிறுவனம் கம்பெனிகள் சட்டம் 1956 பிரிவு 25ன் கீழ் 01.04.2010 முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் என பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கழகம், பொது விநியோகத் திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டம் மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மதியசத்துணவு திட்டத்திற்கான அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் வழங்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறது.

நிறுவனக் கட்டமைப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களை குழுமத் தலைவராகக் கொண்டு இயங்கிவருகிறது.

இக்கழகம் முதுநிலை மண்டல மேலாளர்/மண்டல மேலாளர் தலைமையில் 33 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. இக்கழகத்தில் தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்கள், கிடங்குகள், நவீன அரிசி ஆலைகள், நியாயவிலை கடைகள் மற்றும் மாநிலம் முழுவதிலும் உள்ள பல்பொருள் அங்காடிகள் ஆகியவைகளில் 7261 நிரந்தரப் பணியாளர்கள் 4024 பருவகால பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இது தவிர, 6029 சுமைதூக்கும் தொழிலாளர்கள், 8726 பருவகால சுமைதூக்கும் பணியாளர்கள் கழக கிடங்குகள் மற்றும் நவீன அரிசி ஆலைகளில் பணிபுரிகின்றனர்.

செயல்பாடுகள் மற்றும் சேவைகள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பொது விநியோகத் திட்டத்திற்குத் தேவையான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு கனடா மஞ்சள் பருப்பு, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய அத்தியாவசியப் பொருட்களைக் கொள்முதல் செய்து சேமித்து வைத்து பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கும் பணியினை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பின்வரும் உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது.

* 12.28 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 284 கிடங்குகள்

* 1,455 நியாய விலைக் கடைகள் (முழு நேரக் கடைகள் 1178 மற்றும் பகுதிநேரக்கடைகள் 277)

* 21 நவீன அரிசி ஆலைகள்

* 30 மாவட்டங்களில் 72 அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள்

* 22 அமுதம் பல்பொருள் அங்காடிகள் சென்னை மற்றும் கடலூர்)

* 3 பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள்

* 36 மண்ணெண்ணெய் விற்பனை நிலையங்கள்

* 5 சமையல் எரிவாயு விநியோக முகமைகள்

* நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் (நடப்பு ஆண்டில்1447)

பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள்

அரிசி

பொது விநியோகத்திட்டத்திற்குத் தேவைப்படும் அரிசியின் அளவில் ஒரு பகுதியை தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013ன் படி இந்திய உணவுக் கழகத்தின் மூலம் மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டிலிருந்தும், மீதியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செய்யும் நெல் அரவை மூலமும் பெறப்படுகிறது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி 2.93 லட்சம் மெ.டன் அரிசியை மாதாந்திர ஒதுக்கீடாக மத்திய அரசு வழங்குகிறது. இந்திய உணவுக் கழகத்தால் பல்வேறு வகையினருக்கு வழங்கப்படும் அரிசியின் தற்போதைய விலை விவரம் பின்வருமாறு:

வ.எண்

வகை

மாதாந்திர ஒதுக்கீடு (மெடன்)

விலை(ரூபாய் கிலோ)

1

அந்தியோதயா அன்னயோசனா

57437.202

3.00

2

முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள்

135783.900

3.00

3

ஈடுசெய் ஒதுக்கீடு

99773.138

8.30

 

மொத்தம்

292994.240

 

மாநிலத்தின் பொது விநியோகத் திட்டம் மற்றும் இதர நலத் திட்டங்களுக்கு தேவைப்படும் மாதாந்திர அரிசி 3.20 இலட்சம் மெடன் ஆகும். அந்தியோதயா அன்னயோசனா, முன்னுரிமைப் பிரிவு மற்றும் ஈடு செய் பிரிவுகளின் கீழ் பெறப்படும் மாதாந்திர ஒதுக்கீடான 2.93 லட்சம் மெடன் அரிசியை மாநில அரசு முழுமையாக பயன்படுத்துகிறது. பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மைய அரசின் சார்பாக கொள்முதல் செய்யும் நெல் முழுவதையும் அரவை செய்தும், அதனை மைய அரசு வழங்கும் மத்திய தொகுப்பு அரிசி ஒதுக்கீட்டில் ஈடு செய்தும் மாநிலத்தின் பொது விநியோகத் திட்டத்திற்காக பயன்படுத்தி வருகிறது. தற்போதைய பொது விநியோகத் திட்டத்தின் மாதாந்திர அரிசி நுகர்வு 3.17 இலட்சம் மெ.டன் ஆக இருப்பதால், மைய அரசின் ஒதுக்கீட்டிற்கும், மாதாந்திர பொது விநியோகத் திட்ட நுகர்விற்கும் இடையேயான பற்றாக்குறை இடைவெளியானது மைய அரசின் வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின் மூலமாகவும் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலமாகவும், தேவையான அளவு அரிசியை கொள்முதல் செய்து ஈடு செய்யப்படுகிறது.

பொது விநியோகத் திட்டத்திற்கான அரிசி இயக்கம்

இந்திய உணவுக் கழகக் கிடங்குகளிலிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மாதந்தோறும் 2.93 இலட்சம் மெடன் அரிசியினை நகர்வு செய்கிறது. இந்திய உணவுக் கழகத்தில் 31.05.2018 அன்றைய நிலவரப்படி 46 கிடங்குகளில் 9.64 இலட்சம் மெ.டன் அரிசி உபரி இருப்பு உள்ளது.

சர்க்கரை

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு, இதர பொருட்களை வழங்குவதைப் போன்று சர்க்கரையும் வழங்கப் படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்களால் நுகர்வு செய்யப்படும் சர்க்கரையின் அளவு மாதம் ஒன்றுக்கு தோராயமாக 32,000 மெடன் ஆகும். பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சர்க்கரை கிலோ ஒன்றுக்கு ரூ.25/- எனவும், அந்தியோதயா அன்னயோசனா குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.13.50/- எனவும், மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அரசினால் கொள்முதல் செய்யப்படும் சர்க்கரையின் சராசரி வெளிச்சந்தை விலைக்கும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மானிய விலைக்கும் உள்ள வித்தியாசத் தொகையானது தமிழ்நாடு அரசினால் ஈடுகட்டப்படுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரையினை வழங்குவதால் ஒரு வருடத்திற்கு ஏற்படும் கூடுதல் செலவினம் ரூ.578.40 கோடி மாநில அரசின் உணவு மானியத்தின் மூலம் ஈடுகட்டப்படுகிறது.

கோதுமை

மத்திய அரசு, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013ன் படி தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் 13,485 மெடன் கோதுமையினை நவம்பர் 2016 முதல் ஒதுக்கீடு செய்து வருகிறது. அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களது விருப்பத்திற்கேற்ப நியாயவிலைக் கடைகளில் அரிசிக்கு பதிலாக கோதுமை இருப்பின் அடிப்படையில் விலையில்லாமல் வழங்கப்படுகிறது.

சிறப்பு பொது விநியோகத் திட்டம்

வெளிச் சந்தையில் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினை கட்டுப்படுத்தும் பொருட்டு, பருப்பு மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட பாமாயில் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய சிறப்பு பொது விநியோக திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. செறிவூட்டப்பட்ட பாமாயில் ஒவ்வொரு கிராமிலும், வைட்டமின் 'ஏ' 25 IU மற்றும் வைட்டமின் டி - 2 IU கொண்டுள்ளது. சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 20,000 மெ.டன் துவரம் பருப்பு/ கனடா மஞ்சள் பருப்பு மற்றும் 1,56,00,000 லிட்டர் (பாக்கெட்டுகள்) செறிவூட்டப்பட்ட பாமாயில் கொள்முதல் செய்யப்படுகிறது.

நியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை இயக்கம் செய்தல்

பொதுவாக நியாய விலை கடைகளுக்கான மாதாந்திர ஒதுக்கீட்டில், 60 சதவிகித பொருட்கள் முந்தைய மாதம் 25-ம் தேதியிலிருந்து நடப்பு மாதம் 5ம் தேதிக்குள் முன் நகர்வு செய்யப்படுகின்றது. மீதமுள்ள 40 சதவிகித ஒதுக்கீடு நடப்பு மாதம் 20 ஆம் தேதிக்குள் நகர்வு செய்யப்படுகின்றது. இந் நடைமுறையை எளிதாக்குவதற்காக வாலாய நகர்வு முடிவுற்ற அடுத்த நாளிலிருந்தே வரும் மாதத்திற்கான முன்நகர்வினை ஆரம்பிக்கலாம் என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இது பொது விநியோகத் திட்ட பொருட்களை கிடங்கிலிருந்து நியாய விலைக் கடைகளுக்கு உரிய காலத்தில் நகர்வு செய்து முடிப்பதை உறுதிப்படுத்தும்.

விவசாயிகளிடமிருந்து நெல் கொள் முதல் செய்தல்

2002-03 ஆம் ஆண்டு கரீப் கொள்முதல் பருவத்திலிருந்து, பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இந்திய உணவு கழகத்தின் முகமையாக இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசின் அனுமதியின்படி செயல்பட்டு வருகிறது. மேலும், காவிரி பாசன மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் (NCCF) ஆகியவையும் நெல் கொள்முதல் செய்ய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. கரீப் 2017-2018 கொள்முதல் பருவத்தில், மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் தமிழ்நாடு அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை விவரங்கள் பின்வருமாறு:

ரகம்

மத்திய அரசு வழங்கும் குறைந்த பட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு (ரூபாயில்)

தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத் தொகை குவிண்டால் ஒன்றுக்கு (ரூபாயில்)

விவசாயி களுக்கு வழங்கப்படும் விலை குவிண்டால் ஒன்றுக்கு (ரூபாயில்)

சன்னரகம் (Grade A)

1590/-

70/-

1660/-

சாதாரண ரகம் (Common)

1550/-

50/-

1600/-

கரீப் பருவம் 2017-2018 ஆண்டிற்கு மின் வர்த்தனை மூலம் விடுவிக்கப்பட்டத் தொகை ரூ.1907.29 கோடி ஆகும்.

கொள்முதல் விவரங்கள் 2017-2018:

தமிழ்நாடுநுகர்பொருள்வாணிபக்கழகம்: 11,22,692 தேசியகூட்டுறவுநுகர்வோர்இணையம் : 27,195

கூட்டுறவுத்துறை                      4585

மொத்தநெல் கொள்முதல்             11,54,472

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை : ரூ.77,76,85,800

கண்டு முதல் அரிசி

விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக 21 நவீன அரிசி ஆலைகளிலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் பதிவு செய்துள்ள 368 தனியார் அரவை முகவர்களின் ஆலைகள் மூலமும் தரமான அரிசியாக தயாரிக்கப்படுகிறது. மாநிலத்தின் மாதாந்திர பொது விநியோகத் திட்டத் தேவையில், அரவையின் மூலம் பெறப்படும் அரிசி போக, எஞ்சிய தேவை அரிசியை மாநிலத்திற்குரிய மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டின்படி இந்திய உணவு கழகத்திலிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இயக்கம் செய்கிறது. நெல் கொள்முதல் செய்வதிலிருந்து அரிசியாக மாற்றப்படுவது வரை ஆகும் செலவின தொகையை மத்திய அரசு நிர்ணயித்துள்ள பொருளாதார விலையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு மானியமாக பெறப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் உட்கட்டமைப்பு

சேமிப்புக் கிடங்கின் கொள்ளளவு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் மொத்தம் 284 எண்ணிக்கையிலான சேமிப்புக் கிடங்குகள் 12.28 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவில் செயல்பட்டு வருகிறது. இவைகளில் 10.84 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 234 கிடங்குகள் கழகத்திற்கு சொந்தமானதாகும். மீதமுள்ள 1.44 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 50 கிடங்குகள் வாடகை அடிப்படையில் பயன்படுகின்றன. பொது விநியோகத் திட்டப் பொருட்களை பாதுகாப்பாக சேமித்து வைப்பதை உறுதிப்படுத்தவும், அதன் சேமிப்பு கொள்ளளவினை மேம்படுத்தவும் அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதன்படி அரசு கடந்த ஏழு ஆண்டுகளில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.852.57 கோடி மதிப்பீட்டில் 201 இடங்களில் மொத்தமாக 7.46 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு திறனுடன் கிடங்குகள் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை 4.77 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 125 கிடங்குகள் ரூ.467.20 கோடி   மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

சைலோநெல்சேமிப்பு கொள்கலன் அமைத்தல்

நாகப்பட்டினம் மாவட்டம், எருக்கூர் கிராமத்தில் 50,000 மெடன் கொள்ளளவு கொண்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நெல் சேமிப்பு கொள்கலன் (சைலோ) திருத்திய திட்ட மதிப்பு ரூ.64.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இவ்வகை நவீன கொள்கலன்களில் சேமிக்கப்படும் நெல்நீண்ட நாட்களுக்கு தரமாக எடை குறையாமலும் பேரிடர் கால இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாப்பாகவும் குறைந்த பராமரிப்பு செலவிலும் இருப்பு வைக்க பயன்படுகிறது.

நியாயவிலைக் கடைகள் கட்டுதல்

தமிழ்நாட்டில் உள்ள 35,169 மொத்த நியாயவிலைக் கடைகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் மொத்தம் 1455 நியாய விலைக்கடைகள், 26 மண்டலங்களில் செயல்பட்டு வருகின்றன. இதில் 124 கடைகள் சொந்தக் கட்டிடத்திலும், 1115 கடைகள் வாடகைக் கட்டிடத்திலும் மற்றும் 216 கடைகள் வாடகையின்றி பிற அரசுத் துறை கட்டிடங்களிலும் இயங்கி வருகின்றன. 125 நியாயவிலைக் கடைகளுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசால் அறிவிக்கப்பட்டு இதுவரை 88 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டுதல்

விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்வதற்கு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன. ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையமும் சுமார் 33 சென்ட் பரப்பளவில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவுசேமிப்பு வசதி, உலர்களம், நெல் தூற்றும் இயந்திரம், மின்னணு தராசு, ஈரப்பதமானி ஆகிய வசதிகளை கொண்டுள்ளன. விவசாயிகளின் கோரிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மாநிலம் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

விவசாயிகளின் நலனில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மிக முக்கிய பங்கு வகிப்பதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதில் அரசு உறுதி பூண்டுள்ளது. எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்டித்தரும் நடவடிக்கை படிப்படியாக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு வரை 311 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் சொந்தக் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. மேலும் கடந்த 2011-2012 முதல் 2017-2018 ஆம் ஆண்டு வரை 335 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்ட அரசால் அறிவிக்கப்பட்டு, அவற்றில் 210 இடங்களில் ரூ.63.80 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

நெல்உலர்களம் அமைத்தல்

அரசு வரையறுத்துள்ள நெல்லின் ஈரப்பத அளவிற்கு நெல்லினை உலர்த்துவதற்கும், நெல்லினை சுத்தப்படுத்தி தரம் பிரிப்பதனால் ஏற்படும் இழப்பினைத் தவிர்க்கும் பொருட்டும், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 335 நெல் உலர் களங்கள் அமைக்க அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி இதுவரை 285 பணிகள் ரூ.21.42கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன.

நவீன அரிசி ஆலைகள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 21 நவீன அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மாதாந்திர அரவைத்திறன் 52500 மெட்ரிக் டன் ஆகும். 15 ஆலைகளில் புழுங்கல் அரிசியும், இதர 6 ஆலைகளில் பச்சரிசியும் அரவை செய்யப்படுகிறது. இவ்வாலைகளின் அரவைத் திறனை மேம்படுத்தவும், அரிசியின் தரத்தை உயர்த்தவும், இவற்றை படிப்படியாக நவீனப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, 7 நவீன அரிசி ஆலைகள் ரூ.26.27 கோடி மதிப்பீட்டிலும் இரண்டாம் கட்டமாக, 7 நவீன அரிசி ஆலைகள் ரூ.32.60 கோடி செலவிலும் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாம் கட்டமாக 2015-16 ஆம் ஆண்டில் மீதமுள்ள 7 நவீன அரிசி ஆலைகள் ரூ.36 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளின் செயல்பாடுகளை இயந்திரமயமாக்குதல்

தற்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 10.84 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 234 சொந்த கிடங்குகள் செயல்பாட்டில் உள்ளன. பொது விநியோக திட்ட அத்தியாவசிய பொருள்களை ஏற்றுதல், இறக்குதல், நகர்வு செய்தல் மற்றும் தேவையான உயரத்திற்கு அட்டியிடுதல் ஆகிய பணிகள் தற்பொழுது, சுமை தூக்குவோரால் கையாளப்படுகின்றன. பொது விநியோகத் திட்ட பொருட்கள் தவிர சிமெண்ட் மூட்டைகள் போன்றவற்றையும் இவர்கள் கையாளுகின்றனர். மேலும் இச்சுமை தூக்குவோர், பொது விநியோக திட்டத்திற்காக, கொள்முதல் செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களை கிடங்குகளில் இறக்குதல் மற்றும் சமச்சீர் செய்து சிப்பம் இடுதல் போன்ற இதரப் பணிகளையும் மேற்கொள்கின்றனர். இவர்களின் பணிகளை எளிதாக்கும் வகையில் தற்பொழுது கட்டப்பட்டு வரும் அதிக கொள்ளளவு கொண்ட கிடங்குகளில் தானியங்கி இழுவை இயந்திரங்கள் (Conveyors), சுமையினை ஏற்றி இறக்கி அட்டியிடும் இயந்திரங்கள் (Stackers), தானியங்கி சுமைதூக்கி (Fork Lift) மற்றும் மின்னாக்கிகள் (Generators) போன்றவற்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பழமையான கிடங்குகள் மற்றும் நவீன அரிசி ஆலைகளில் சிறப்பு மராமத்து மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 234 சொந்தக்கிடங்குகள் 10.84 இலட்சம் மெ.டன் கொள்ளளவில் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 68 கிடங்குகள் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை ஆகும். இப்பழமையான கிடங்குகளில் பழுதடைந்த மேற்கூரை, கிடங்கின் சுற்றுசுவர், தரைதளம், சுமை ஏற்றி இறக்கும் நடைமேடை மற்றும் சாலை வசதி ஆகியவற்றை சீரமைக்க வேண்டியது அவசியமாகிறது. இப்பணிகளை படிப்படியாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு வளாகச் சாலைகள் மற்றும் சுற்றுச் சுவர்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு வளாகச் சாலைகள் மற்றும் சுற்றுச்சுவர் பழுதடைந்த நிலையில் உள்ளதால் பொது விநியோக திட்ட பொருள்களை மழைக்காலங்களில் நகர்வு செய்வது சிரமமாக உள்ளது. நகர்வு செய்யும் பொழுது ஏற்படும் இடர்பாடு மற்றும் கிடங்கு பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, சென்னை மாவட்டம் திருவான்மியூர் கிடங்கின் வளாகச் சாலை மேம்பாட்டு பணி ரூ.74.50 இலட்சம் மதிப்பீட்டிலும், கோவை மாவட்டம் சேனாபதிபாளையம் கிடங்கின் வளாகச் சாலை மேம்பாட்டு பணி ரூ.52 இலட்சம் மதிப்பீட்டிலும், நீலகிரி மாவட்டம் உதகை கிடங்கின் வளாகச் சாலை மற்றும் இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.49.50 இலட்சம் மதிப்பீட்டிலும், தஞ்சாவூர் மாவட்டம் நீலகிரி தெற்கு தோட்டம் கிடங்கில் சுற்றுச் சுவர் கட்டுமானப் பணி ரூ.24 இலட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ. 2.00 கோடி மதிப்பீட்டில் கிடங்குவளாகச் சாலைகள் மற்றும் சுற்றுச் சுவர் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் வழங்கப்படும் இதர சேவைகள்

அமுதம் பல்பொருள் அங்காடிகள்

அமுதம் பல்பொருள் அங்காடிகளின் முதன்மையான நோக்கம் வெளிச்சந்தையில் விற்கப்படும் பருப்பு, தானிய வகைகள் மற்றும் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களை நியாயமான விலையில் அமுதம் அங்காடிகளில் விற்பனை செய்வதன் மூலம் வெளிச்சந்தையில் இவற்றின் விலை உயர்வினை கட்டுப்படுத்த உதவுவதாகும். இதனால் வெளிச்சந்தையில் பொருட்களின் விலை ஏற்றம் திறம்பட கட்டுப்படுத்தப்படுகிறது. சென்னை மாநகரில் 19 அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 3 அமுதம் பல்பொருள் அங்காடிகள் சேர்த்து மொத்தம் 22 அமுதம் பல்பொருள் அங்காடிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்திவருகிறது.

அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் 30 மாவட்டங்களில் 72 அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டிற்கான விற்று முதல் ரூ.3,12 கோடியாகும்.

பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்கள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நெய்வேலி, திருப்பத்தூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டுக்கான நிகர லாபம் ரூ.1.03கோடி ஆகும்.

சமையல் எரிவாயு விநியோக நிலையங்கள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருச்சி, திருவண்ணாமலை, நீலகிரி, இராமநாதபுரம் மற்றும் மண்டபம் ஆகிய இடங்களில் சமையல் எரிவாயு விநியோக முகவராக செயல்படுகிறது. 2017-2018 ஆம் ஆண்டுக்கான நிகரலாபம் ரூ. 1,80கோடி ஆகும்.

மண்ணெண்ணெய் விற்பனை நிலையங்கள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் மண்டலங்களில் 36 மண்ணெண்ணெய் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றுள் 28 சில்லரை விற்பனை நிலையங்களாகவும், 7 சில்லரை மற்றும் மொத்த விற்பனை நிலையங்களாகவும், ஒன்றுமட்டும் மொத்த விற்பனை நிலையமாகவும் செயல்படுகின்றன.

பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள்

பொது மக்களுக்கு நியாயமான விலையில் காய்கறிகளை விற்பனை செய்வதற்காக பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி திட்டத்தினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சென்னையில் 14 பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகளை நடத்தி வருகிறது. ஜூன் 2013 முதல் மே 2018 வரையில் ரூ.2.69 கோடி மதிப்பிலான காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதர சேவைகள்

அம்மா சிமெண்ட்விநியோகத்திட்டம்

அம்மா சிமெண்ட் விநியோகத்திட்டத்தின் கீழ் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் 50 கிலோ சிமெண்ட் மூட்டை ஒன்று ரூபாய் 190/க்கு (வரிகள் உட்பட) விற்பனை செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக தகுதியுள்ள பயனாளிகள் தங்களது கட்டுமான மற்றும் பழுது பார்க்கும் பணிகளுக்கு கீழ்கண்ட அடிப்படையில் சிமெண்ட் மூட்டைகள் பெற தகுதிபெறுகின்றனர்:

ஆதார ஆவணம்

 

அங்கீகரிக்கப்பட்ட வீடுகட்டும் திட்டத்தின் வரைபடம் அல்லது கிராம் நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர்/ ஒன்றிய மேற்பார்வையாளர்/ ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாலை ஆய்வாளரின் சான்று

கட்டிடம் பழுதுபார்க்க

குறைந்த பட்சம் 10 மூட்டைகள் முதல் அதிகபட்சம் 100 மூட்டைகள் வரை

வீடுகட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட அளவு அதிகபட்சம்1500 சதுர அடி வரை ஒவ்வொரு100 சதுர அடிக்கும்50 மூட்டைகள் வீதம்

500 சதுர அடி வரையில் 250 மூட்டைகள்

501-1000 சதுர அடி வரை- 500 மூட்டைகள்

1001-1500 சதுர அடி வரை- 750  மூட்டைகள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் சிமெண்ட் மூட்டைகளை வழங்குவதற்கான பொறுப்பினை தமிழ்நாடு சிமெண்ட் கழகம் ஏற்றுள்ளது.

அம்மா சிமெண்ட் விற்பனை மற்றும் இருப்பு விவரம் ஏப்ரல் 2017 முதல் மே 2018 வரை

ஆரம்ப இருப்பு (மூட்டைகள்)

வரவு (மூட்டைகள்)

மொத்தம் (மூட்டைகள்)

மொத்த விற்பனை (மூட்டைகள்)

இறுதி இருப்பு

மூட்டை ஒன்றிற்கு ரூ.3.50 வீதம் விற்பனை வரவு (ரூபாய்)

14805

9588054

9602859

9561965

40894

3346687750

அம்மா உப்பு விற்பனை

மக்களின் அயோடின் குறைபாடுகளை களையும் வண்ணம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த தூள் உப்பு, இருமடங்கு செறிவூட்டப்பட்ட உப்பு மற்றும் குறைந்த அளவு சோடியம் உப்பு ஆகிய மூன்று விதமான உப்புகள் தமிழ்நாடு உப்பு நிறுவனம் மூலம் பெறப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அமுதம் பல்பொருள் அங்காடிகள் மற்றும் நியாய விலைக் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இக்கடைகளின் மூலம் மாதந்தோறும் சராசரியாக 254மெடன் உப்பு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

ஊட்டி தேயிலை

ஊட்டி தேயிலை தூள் பாக்கெட்டுகளை பொது மக்களுக்கு பொது விநியோகத் திட்ட சில்லறை அங்காடிகளின் மூலம் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சில்லறை விற்பனை அங்காடிகள் மற்றும் அமுதம் பல்பொருள் அங்காடிகள் மூலம் ஊட்டி தேயிலை தூள் 100 கிராம் ரூ.19/- என விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அரசு TANTEA-யினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அமுதம் சில்லறை அங்காடிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலமும் விற்பனை செய்ய ஆணையிட்டுள்ளது. TANTEA தூள் 100 கிராம் பாக்கெட் ஒன்றுக்கு ரூ.21/- என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தகவல்தொழில்நுட்பம்

முழுகணினிமயமாக்குதல் திட்டம்

முழுக்கணினிமயமாக்குதல் திட்டம் பொது விநியோகத் திட்டத்திற்கான பொருட்களை கணினி மூலம் ஒதுக்கீடு செய்வதையும், நிகழ் நேர நிலவரப்படியான கொள்முதல் மற்றும் நகர்வு பணி கண்காணிப்பையும் கிடங்கு மற்றும் நியாயவிலைக் கடைகளில் தேவையான அளவு பொருட்கள் இருப்பிலுள்ளதையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய அளவில் விநியோகம் செய்யப்படுவதை கண்காணிப்பு செய்வதையும், சாத்தியமாக்குகிறது. மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இயங்கி வரும் பகுதி நேர மற்றும் முழு நேர நியாயவிலைக் கடைகளில் விற்பனை இயந்திரத்தின் (Ps Machine) மூலம் பொது விநியோகப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கிடங்கு கணினிமயமாக்குதல்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இயங்கும் கிடங்கு பணிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. மேலும், கிடங்குகளின் அறிக்கைகள் கழக இணையத்தளங்களில் உடனுக்குடன் பதிவு செய்யப்படுகிறது.

தரக்கட்டுப்பாடு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகம் நன்றாக வடிவமைக்கப்பட்ட தரக்கட்டுப்பாட்டுத்துறை செயல்பாட்டினால் ஒவ்வொரு வட்ட செயல்முறை கிடங்கிலும் அத்தியாவசியப் பொருட்கள் அறிவியல் முறைப்படி செம்மையாக சேமித்து வைக்கப்படுகிறது. அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகைகள் மற்றும் பாமாயில் போன்ற உணவுப்பொருட்களின் தரம் தொடர்ச்சியாக அளவிடப்படுகிறது. அவ்வப்போது உணவுப்பொருட்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டு தரம் உறுதி செய்யப்படுகிறது. விஞ்ஞான முறையில் கிடங்குகள் அமைக்கப்பட்டு முறையாக காலமுறைப்படி பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டும், புகை மூட்டம் செய்யப்பட்டும், தரத்தினை பாதுகாக்கவும் சேமிப்பு இழப்பைத் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், உணவுப்பொருட்களின் ஈரப்பதம் அளவினை அறிய ஈரப்பதமானி, பகுப்பாய்வு செய்வதற்கான ஆய்வக உபகரணங்கள், புகை மூட்டம் செய்யகருப்பு பாலிதீன் உறைகள், அட்டி அமைக்க இரும்பு மற்றும் பாலி பெல்லட் அட்டி கட்டைகள், புற ஊதா விளக்குப்பொறி மற்றும் மருந்து தெளிப்பான் போன்ற உபகரணங்களைக் கொண்டு பூச்சிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தியும் உணவு தானியங்களின் தரம் நூறு சதவிகிதம் உறுதி செய்யப்படுகிறது. இதே மாதிரியான தரக்கட்டுப்பாடு நடவடிக்கைகள், நவீன அரிசி ஆலைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

நிதி நிலை

இந்நிறுவனத்தின் தற்போதைய அனுமதிக்கப்பட்ட மற்றும் செலுத்தப்பட்ட மூலதனம் முறையே ரூ.100 கோடி மற்றும் ரூ.71.73கோடியாக உள்ளது. 2013-2014 முதல் 2016-2017 ஆண்டு வரை இக்கழகத்தின் விற்றுமுதல் கீழ்க்கண்டவாறு உள்ளது.

வருடம் ரூபாய் (கோடியில்)

2013-2014  - ரூ.8936.58 கோடி

2014-2015  - ரூ8422.55 கோடி

2015-2016  - ரூ10153.42கோடி

2016-2017  -ரூ.9739.99 கோடி (தோராயமாக)

2018-2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு ரூபாய் 6000 கோடி உணவு மானியமாக தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


50,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன நெல் சேமிப்பு சைலோ கொள்கலன் எருக்கூர் கிராமம், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.

ஆதாரம் - கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை

3.01851851852
அரிமா.ப.பொன்மொழி Mar 25, 2020 09:04 PM

அரசு மானிய விலையில் பொருட்களை மக்களுக்கு நல்ல நோக்கத்துடன் அளித்தாலும் ரேஷன் கடைகளில் மற்ற பொருட்களை வாங்கவேண்டும் என்க்கட்டாயப்படித்தியும் விலை அதிகமாகவும் விற்கின்றனர், அதற்கு ரசீது கொடுப்பதில்லை எதனை அரசு கவனத்தில்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுகிறேன்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top