பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / கொள்கை விளக்கக் குறிப்பு / தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் - 2018 - 2019
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் - 2018 - 2019

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக (2018 - 2019) கொள்கை விளக்க குறிப்பு பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

பிற மொழிகளில் இருந்து தமிழ் மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்திடவும் மற்றும் அவற்றை வெளியிடும் நோக்கத்துடன் 'தமிழ் வெளியீட்டுக்கழகம்” 1961 ஆம் வருடம் அமைக்கப்பட்டது. இவ்வமைப்பை உள்ளடக்கிய "தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்” 1970 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு பின்னர் 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாடநூல் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிறதுறை சார்ந்த பாடநூல்களை அச்சிடல், வெளியிடுதல், விற்பனை மற்றும் விநியோகம் செய்தல் ஆகியவை இக்கழகத்தின் குறிக்கோள்களாக இருந்தன. 06.09.2013 முதல் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிமாணாக்கர்களுக்கு விலையில்லா கல்வி உபகரணங்களை, இக்கழகத்தின் மூலமாகக் கொள்முதல் செய்து விநியோகம் செய்திடும் பணிகளையும் மேற்கொள்ளும் பொருட்டு, 'தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கங்கள்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அங்கீகரிக்கப்பட்ட பாடநூல்களை அச்சிட்டு வழங்குதல், விலையில்லா கல்வி உபகரணங்களைக் கொள்முதல் செய்து வழங்குதல், அரிய மற்றும் பழமையான தமிழ் நூல்களை மறுபதிப்பு செய்தல், மற்றும் தமிழ் இலக்கிய வளங்களை உருவாக்குவதில் ஈடுபடுதல் போன்ற பணிகளைச் செய்து வருகிறது. மேலும் பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் மற்றும் கால்நடை அறிவியல் போன்ற உயர்கல்வி மாணாக்கர்களுக்கு உதவிடும் வகையிலான நூல்களைத் தமிழில் அச்சிட்டு வெளியிடல், அனைத்து வெளியீடுகளையும் மின்னணு புத்தகப் பதிப்பு (ebook) வடிவில் வெளியிடல், 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணாக்கர்களுக்கு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படும் வகையில் சிறப்பு வழிகாட்டி நூல்களை அச்சிட்டு வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

உட்கட்டமைப்பு வசதிகள்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், டி.பிஐ வளாகத்தில் தனது சொந்தக் கட்டிடமாகிய10 மாடிகள் கொண்ட, ஈவெகி சம்பத் மாளிகையில் இயங்கி வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு விலையில்லாப் பாடநூல்களை விநியோகம் செய்வது மட்டுமன்றி மாநிலம் முழுவதும் பாடநூல்களை (விற்பனைப் பிரதி) விற்று வருகிறது. விநியோகம் செய்யும் பணி நடைபெறுவதற்கு ஏதுவாக இக்கழகம் சொந்தமாக 6 வட்டாரக் கிடங்குகளையும், வாடகைக்கு 16 வட்டாரக் கிடங்குகளையும் அமைத்துள்ளது.

அச்சுப்பணி

தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத் தன்மை சட்டம், 1998 மற்றும் தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத் தன்மை விதிகள், 2000 ஆகியவற்றைப் பின்பற்றி 2016-18 ஆம் ஆண்டுகளுக்கு 96 அச்சகத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்டு, விலை விகித ஒப்பந்தம் அடிப்படையில் பாடநூல்கள் அச்சிட்டு வழங்க இரண்டாண்டுகளுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி அச்சகத்தினர் ஆண்டிற்கு தோராயமாக 10 கோடி எண்ணிக்கையிலான பாடநூல்களை வருடாந்திர முறையிலும், முப்பருவ முறையிலும், செயல் வழிக் கற்றல் திறன் அட்டைகள் மற்றும் பிற துறை சார்ந்த பாடநூல்களையும் அச்சடிக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர்.

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு விலையில்லாப் பாடநூல்கள் விநியோகம்

விலையில்லாப் பாடநூல்களை அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு உரிய காலத்தில் வழங்கிடுவதை உறுதி செய்திடும் பொருட்டு அச்சகத்தார்களிடமிருந்து நேரடியாக 67 மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் 32 மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு அவை நேரடியாகக் கொண்டு சேர்க்கப்படுகின்றன.

சுயநிதிப் பள்ளிகளுக்கு விற்பனைப் பாடநூல்கள் விநியோகம்

சுயநிதிப் பள்ளிகளுக்கு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இணையதளம் பணப் பரிவர்த்தனை வாயிலாக மொத்தமாகப் பாடநூல்களை விநியோகித்து வருகிறது. மேலும் இந்திய அஞ்சல்துறை (India Post) மூலம் பள்ளிகள் தங்களது இடத்திலேயே பாடநூல்களை பெற்றுக் கொள்ளும் வகையில் கூடுதல் வசதிகளை அளித்து வருகிறது. தலைமை அலுவலகத்தில் உள்ள ஒரு விற்பனை நிலையம் மூலமாகவும், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் உள்ள மற்றொரு விற்பனை நிலையம் மூலமாகவும் பாடநூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பிற துறைகளுக்கு வழிகாட்டி நூல்கள் அச்சிட்டு விநியோகித்தல்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஒவ்வொரு வருடமும் தேவைப் பட்டியலுக்கேற்ப வழிகாட்டி நூல்களை அச்சிட்டு கீழ்க்கண்ட துறைகளுக்கு வழங்கி வருகிறது.

  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் (10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு)
  • பிற்படுத்தப்பட்டோர் நலம் (10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு)
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் (10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு)
  • சிறுபான்மையினர் நலம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகளுக்கு தமிழ்ப் பாடநூல்கள் விநியோகித்தல்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழியை இரண்டாம் மொழியாகக் கொண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு மட்டுமன்றி தமிழ்நாட்டில் உள்ள பிற மாநில வாரியங்களின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கும் தமிழ்ப் பாடநூல்கள் ஒரே தொகுதியாக (ஆண்டு பாடநூல்) அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

மின் நூல்கள்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிடும் பாடநூல்களை கழகத்தின் இணையத்தளத்தில் www.textbooksonline.tn.nic.in பார்வையிடலாம். எனவே, மாணாக்கர்கள் இந்த இணையத்தளத்தின் வாயிலாக பாடநூல்களை எளிதாகக் காணவும், அதனை இலவசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

விலையில்லா கல்வி உபகரணங்கள்

2014-15 ஆம் கல்வியாண்டு முதல் விலையில்லா கல்வி உபகரணங்களான புத்தகப்பை, காலணி, வண்ணம் தீட்டும் குச்சிகள், வண்ணப் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி, கம்பளிச் சட்டை மற்றும் புவியியல் வரைபடம் ஆகியவற்றை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்க கொள்முதல் செய்து வருகிறது. அன்றைய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, 2017-18 ஆம் கல்வியாண்டு முதல் மலைப் பிரதேசங்களில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு மேற்குறிப்பிட்ட விலையில்லா கல்வி உபகரணங்களுடன் கூடுதலாக மழைக் கால ஆடை, உறை காலணி, காலுறை போன்ற விலையில்லா உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

அரிய பழமை வாய்ந்த உயர்கல்வி நூல்களை மின்மயமாக்குதல்

உயர்கல்விக்குப் பயன்படும், அரிதான மற்றும் பழமை வாய்ந்த புத்தகங்களின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்நூல்களை தேடிக் கண்டறிந்து அச்சிட்டு அவற்றைக் கோருவோர் பயன்படுத்தும் வகையில் வெளிச் சந்தையில் கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. மேலும் அவற்றினை மின்மயமாக்கவும் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவும் நடவடிக்கைகள் நடைபெற்றுவருகிறது.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் வெளியிடப்பட்ட 1000 நூல்களில், 875 நூல்கள், 2017-18 ஆம் ஆண்டு தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் மின்மயமாக்கப்பட்டு, அவை www.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் தலா 100 பிரதிகள் POD (Print On Demand) முறையில் ஆவணப் பதிப்பாக வெளியிட முடிவு செய்யப்பட்டு, 595 நூல்களுக்கு அச்சுப்பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 341 நூல்கள் அச்சிடப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2018 இல் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் இவற்றுள் 190 நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டு, இத்தகைய அச்சிடப்பட்ட நூல்களைப் பெற விரும்பும் பேராசிரியர்கள், உயர்கல்வி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புத்தக ஆர்வலர்களிடமிருந்தும் தேவைப்பட்டியல் பெறப் பட்டுள்ளது.

பாடநூல்களைத் தமிழாக்கம் செய்தல்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மருத்துவம், சட்டம், பொறியியல், கலை, அறிவியல், ஓமியோபதி, சித்த மருத்துவம், மீன் வளம், உடற் கல்வியியல், கால்நடை அறிவியல் மற்றும் வேளாண்மை போன்ற உயர்கல்வி துறைகளின் ஆங்கிலவழிப் பாடநூல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திடமிருந்து விவசாயம் சார்ந்த 69 பாடநூல்களைத் தமிழாக்கம் செய்திட கோரிக்கை பெறப்பட்டதின் அடிப்படையில், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பியர்சன் நிறுவனம் மூலம் போட்டித் தேர்வு நூல்களின் 6 தொகுதிகளைத் தமிழில் மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலக்கிய, அறிவுசார் நூல்களை மொழிபெயர்ப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்ள ஆக்ஸ்போர்டு மற்றும் பென்குவின் நிறுவனங்கள் அணுகப்பட்டுள்ளன. பென்குவின் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆறு ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்க அந்த நிறுவனம் சம்மதித்துள்ள நிலையில் அதற்கான மொழிபெயர்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நவீன அறிவியல் தொழில்நுட்ப நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் தொடர்பான பணிகள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிதியிலிருந்து ரூ.5கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கழக நிதியிலிருந்து மேற்கொள்ளும் இதர முக்கிய பணிகள்

*மாணாக்கர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான கல்வி , குறித்த தெளிவுரைகள், ஆலோசனைகள் அளிக்கவும் வழிகாட்டியாக இருக்கவும் தகவல்களை அளிக்கவும் கட்டணமில்லா தொலைபேசி எண் வழியாக தொடர்பு கொள்ளும் வழிகாட்டி உதவி மையம் ரூ.1.98 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது

*தமிழகம் முழுவதும் அரசு அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களைத் தயார்படுத்த ஒரு ஒன்றியத்திற்கு ஒன்று வீதம் போட்டி தேர்வுகளுக்கான 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்கள் கலந்தாய்வு வகுப்புகள் நடத்திட VSAT வசதியைப் பயன்படுத்துகிறது. எல்லா மாணாக்கர்களுக்கும் இணையத் தளத்திலிருந்தும் (Online) மென்பொருள் பாடப் பொருட்கள் பெற்றிடவும் குறுந்தகடு அளிக்கப் படுகின்றன. இதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிதியிலிருந்து ரூ.19.78 கோடி செலவிட அரசு அனுமதி அளித்துள்ளது

*புதிய புத்தகங்களைப் பொது நூலகங்களுக்கு வழங்குவதற்காக அவற்றைக் கொள்முதல் செய்ய செலவினத் தொகை ரூ.5 கோடி, பொது நூலக இயக்குநருக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது

*ஒன்றிய, கல்வி மாவட்ட, மற்றும் மாநில அளவில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்குக் கலைத் திருவிழா நடத்துவதற்கு பள்ளிக் கல்வி இயக்குநருக்கு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிதியிலிருந்து ரூ4கோடி வழங்கப்பட்டுள்ளது

*கல்விக் கடன் வழங்குவதற்கான முகாம்கள் நடத்துவதற்கு பள்ளிக் கல்வி இயக்குநருக்கு ரூ3,20,000/- (ஒரு மாவட்டத்திற்கு ரூ.10,000/- வீதம்) இக்கழக நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது

*வெளிநாடுகளில் வாழும் மாணாக்கர்களுக்குத் தேவையான தமிழ் வழிக்கான நூல்களை அனுப்புவதற்கு இக்கழகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 2017-18 ஆம் கல்வியாண்டில் பிற மாநிலங்களிலும், அயல்நாடுகளிலும் தமிழ் மொழியில் பயிலும் மாணாக்கர்களுக்குத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் 7,624 தமிழ்ப் பாடநூல்களை வழங்கியுள்ளது

*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவிப்பின்படி, தகவல் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ் 3,090 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 2,939 அரசு மேல்நிலைப்பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் உருவாக்குவதற்கான, கணினிகள் மற்றும் இதர சாதனங்களை ஒப்பந்தமுறை மூலம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு ரூ.462.60 கோடி செலவினத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது

*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவிப்பின்படி 3.000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணாக்கர்களுக்குப் பாடங்களை எளிமையாகக் கற்பதற்கு ஏதுவாக ஓர் அறிவுத்திறன் வகுப்பறை ஏற்படுத்துவதற்கும் மற்றும் இதர சாதனங்களுக்கும், ஒரு பள்ளிக்கு ரூ.2 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.60கோடி மதிப்பில் ஒப்பந்தமுறை மூலம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது

*மாணவியர்கள் பயிலும் 3,334 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு, நாப்கின் எளியூட்டி இயந்திரம் வழங்குவதற்கு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிதியிலிருந்து ரூ.11.88 கோடி செலவில் கொள்முதல் செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது

*கிராமப்புறங்களில் உள்ள 7,219 நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 3.75 இலட்சம் மாணாக்கர்கள் பல்வேறு தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் பொருட்டு பாடப்பொருள் உருவாக்குதல் மற்றும் மாணாக்கர்களின் வழிகாட்டுதலுக்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிதியிலிருந்து ரூ.2.93 கோடி செலவினம் மேற்கொள்ளப்படவுள்ளது

* 123 பொது நூலகங்களுக்கு, 369 கணினிகளும், 123 ஸ்கேனர்களும் இக்கழக நிதியிலிருந்து ரூ1.84 கோடி செலவில் கொள்முதல் செய்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

*கற்றல் மேலாண்மை அமைப்பினை உருவாக்கும் திட்டத்திற்காக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநருக்கு ரூ1.62 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது

* பொது மக்களிடமிருந்து ஒரு இலட்சம் தமிழ்ப் புத்தகங்களை நன்கொடையாகப் பெற்று, யாழ்ப்பாண பொது நூலகம் மற்றும் மலேயா பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அனுப்பப்பட உள்ளது

முடிவுரை

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஆரம்ப நாளிலிருந்து பாடநூல்களை அச்சிட்டு விநியோகிக்கும் பணியினைச் செய்து கொண்டிருந்தது. தற்போது இக்கழகம் விலையில்லா கல்வி உபகரணங்களைக் கொள்முதல் செய்தல், உயர்கல்விப் படிப்புகளுக்கான பாடநூல்களை வெளியிடுதல், அதிமுக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களை மறுபதிப்பு செய்தல் மற்றும் மறுபதிப்பு புத்தகங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் போன்ற பணிகளையும் செய்து வருகிறது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமானது தரமான கல்வி உபகரணங்களைக் குறித்த காலத்தில் பள்ளிகளில் வழங்குவதன் மூலம் பாராட்டத்தக்க வகையில் சிறப்பான சேவைகளைப் புரிந்து வருகிறது.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை

2.83333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top