பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நுகர்வோர் பாதுகாப்பு - 2018 - 19

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு - 2018 - 2019 கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

தமிழ்நாடு துடிப்பான நுகர்வோரை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதை தொடர்ந்து, இத்துறை நுகர்வோர் பாதுகாப்பிற்கு தலையாய முக்கியத்துவம் அளிக்கிறது.

நுகர்வோருக்கு சேவை / பொருள்கள் தரத்தில் சமரசமின்றி உரிய விலையில் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்வது நுகர்வோர் பாதுகாப்பின் முக்கிய நோக்கமாகும்.

நுகர்வோர் அவர்களது உரிமைகள், பொறுப்புகள் மற்றும் நுகர்வோர் குறைகளை களைவது குறித்து உள்ள வழிமுறைகள் குறித்து கற்பித்தலின் மூலம் நுகர்வோர் அளவில் விழிப்புணர்வை உருவாக்க அரசு முயன்று வருகிறது. விரைவில் தீர்வு செய்வதற்கு ஏதுவாக போதிய கட்டமைப்பைக் கொண்ட திறம்பட செயல்படக்கூடிய குறைதீர் அமைப்பை ஏற்படுத்துவதிலும் அரசு உறுதியாக உள்ளது.

நுகர்வோர் குறைகளுக்கான சட்டப்படியான தீர்வுகள்

1986ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தேசிய, மாநில மற்றும் மாவட்ட நிலைகளில் கீழ்க்கண்ட நீதிமுறைச் சார்புடைய 3 அடுக்கு குறைதீர் மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன :

1. தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்

2. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் மற்றும்

3. மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம்

இவ்வாணையம் அனைத்து மாநிலங்களிலும் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையங்களுக்கு மேல்முறையீட்டு ஆணையமாக புதுதில்லியில் செயல்படுகிறது. இவ்வாணையத்தில், ரூபாய் ஒரு கோடிக்கு மேல் மதிப்புள்ள நிவாரணங்களுக்கு நுகர்வோர் நேரடியாக வழக்கு தொடரலாம். இவ்வாணையம் அனைத்து மாநில ஆணையங்களில் முடிவுற்ற வழக்குகளின் தீர்ப்புகளின் மீதான மேல்முறையீடுகளுக்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரம் மற்றும் மாநில ஆணையங்களின் ஆணைகளைச் சீராய்வு செய்யும் அதிகாரமும் படைத்ததாகும்.

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்

ரூபாய் இருபது இலட்சத்திற்கு மேல் ரூபாய் ஒரு கோடி வரை நிவாரணம் கோரும் நுகர்வோர், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறையிடலாம். இவ்வாணையம் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை தலைவராகவும், இரண்டு நீதிசார் உறுப்பினர்களும் மற்றும் இரண்டு நீதி சாரா உறுப்பினர்களும் அவற்றில் ஒரு பெண் உறுப்பினரையும் கொண்ட அமைப்பாகும். மாநில ஆணையம் மற்றும் 31 மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் நிர்வாகத்தை கவனிக்க துறைத் தலைவராக செயல்பட பதிவாளர் உள்ளார். தென் மாவட்ட நுகர்வோர்களின் நலன் கருதி, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் கிளையானது மதுரையில் 11.8.2012 முதல் செயல்பட்டு வருகிறது.

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், சென்னை மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் மதுரை சுற்றுக் கிளை ஆகியவை அந்தந்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களின் தீர்ப்புகளின் மீதான மேல்முறையீடு மற்றும் சீராய்வு மனுக்களை தீர்வு செய்யும் அதிகாரம் கொண்டதாகும். மாநில ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட நாளிலிருந்து மே-2018 வரை 28,957 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 24,953 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. அதன் சதவிகிதம் 86.17 ஆகும்.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்கள்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986ன்படி, ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் இருக்க வேண்டும். 31 மாவட்டங்களில், நீதிமுறை சாரா மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் நுகர்வோர், ரூபாய் இருபது இலட்சம் வரையிலான நிவாரணங்களுக்கு வழக்குகள் தொடரலாம். மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றமானது ஓய்வு பெற்ற ஒரு மாவட்ட நீதிபதியை தலைவராகவும் மற்றும் இரண்டு உறுப்பினர்களை கொண்ட அமைப்பாகும். அவற்றுள் ஒருவர் பெண் உறுப்பினர். மாவட்ட மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்ட நாளிலிருந்து மே-2018 வரை 1,18,859 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அதில் 1,09,713 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. அதன் சதவிகிதம் 92.30 ஆகும்.

சமரச மையம்

நுகர்வோர் நன்மைகளைக் கருதி மாற்று முறை தீர்வுக்காக சமரச மையம் செயல்பட்டு வருகிறது. இத்தீர்வுமையமானது கட்டணம் ஏதுமின்றி பயிற்றுவிக்கப்பட்ட, நடுநிலையான மூன்றாம் நபர், நடுநிலையாளர், பேச்சுவார்த்தை மூலம் வாதி, பிரதிவாதி இருவருக்கும் இடையே தீர்வு காணும் வகையில் முன்னோடி திட்டமாக துவக்கப்பட்டு, 15:12.2011 முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டத்தை மாநில அளவில் தொடர்ந்து மாநில அரசே ஏற்று நடத்தி வருகிறது.

எதிர்கால செயல்திட்டம்

தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் 19 மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களுக்கு சொந்தக் கட்டிடம் கட்டுவதற்காக இலவசமாக, இடம் பெறுவதற்காக, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதிகளை அணுகி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது தமிழகத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களான திருவண்ணாமலை, தூத்துக்குடி மற்றும் விழுப்புரம் ஆகியவை முறையே வேலூர், திருநெல்வேலி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து பிரிக்கப்பட்டு தனித்தியங்க ஏதுவாக தமிழக அரசு அரசாணை எண் 99, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் (எச்2) துறை நாள் 18.07.2017-ல் பிறப்பித்துள்ளது. அதன்படி மேற்கண்ட மூன்று மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களும் தனித்து செயல்பட்டு வருகின்றன. மேலும், ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களான இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகியவற்றை பிரித்து தனித்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஆற்றலூட்டும் அதிகார சங்கம்

நுகர்வோர் நலன்சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில முழுமைக்கும் ஒரு குடையின்கீழ் ஒருங்கிணைக்க உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளரை தலைவராகவும், அரசு மற்றும் அரசு சாரா துறையில் உள்ளவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்படக்கூடிய வகையில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஆற்றலூட்டும் அதிகார சங்கம் எனும் அமைப்பை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், மாநில நுகர்வோர் உதவி மையத்தை செயல்படுத்தியும் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் கவசம் என்ற மாத இதழை வெளியிடுதல் மற்றும் பயிற்சி கருத்தரங்குகள் நடத்துதல் ஆகிய பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

மாநில நுகர்வோர் சேவை மையம்

மாநில நுகர்வோர் சேவை மையம் ஒரு மேலாளர் மற்றும் 4 தொலைபேசி அழைப்பாளர்களைக் கொண்டு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பு, நுகர்வோர் தொடர்பான குறைகளை தீர்க்கும் மற்றொரு அமைப்பாக செயல்பட்டு நுகர்வோர்களிடமிருந்து பெறப்படும் புகார்கள்/ சந்தேகங்கள் குறித்து உரிய தெளிவுரைகள் வழங்கப்பட்டும் மற்றும் நுகர்வோர்களால் கொடுக்கப்படும் புகார்களுக்கு தீர்வும் காணப்பட்டு வருகிறது.

மேற்கண்ட சேவை மையத்தினை கீழ்க்கண்டவாறு தொடர்பு கொள்ளலாம்:

தொலைபேசி எண்

044-28592828

மின்னஞ்சல் முகவரி

consumer@tn.gov.in

schtamilnadu@gmail.com

ஆன்லைன் பதிவுச் சேவை இணையதள முகவரி

www.consumer.tn.gov.in

குறுஞ்செய்தி அனுப்ப வேண்டிய செல்பேசி எண்

8680018002 , 8680028003

தமிழ்நாடு நுகர்வோர்கவசம் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த மாதாந்திர இதழ்

நுகர்வோர்களுக்கிடையே நுகர்வோரின் உரிமைகள், சட்டம் மற்றும் விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் "தமிழ்நாடு நுகர்வோர் கவசம்" என்ற மாதாந்திர இதழ் வெளியிடப்பட்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் பொது நூலகங்கள் ஆகியவற்றிற்கு விநியோகிக்கப்படுகிறது. இந்திய செய்தித்தாள் பதிவாளர் அமைப்பில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த மாத வெளியீட்டின் விலை ரூ.10/- மாதந்தோறும் 6000 பிரதிகள் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது.

ஆதாரம் - கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை

2.83333333333
Krishna Apr 12, 2020 07:55 PM

விலை அதிகமாக ெபாருட்கள் விற்க்கப்பட்டால் மாவட்ட அளவில் புகார் செய்வது எப்படி

இராஜாஜி சுப்பிரமணியம் Sep 20, 2019 12:10 PM

வீட்டு தலைவியின் புகைப்படம் வைக்கவேண்டும் என சொல்கிறார்கள். காரணமும் மாற்ற வழிமுறைகள் பற்றி அறிவிக்க வேண்டுகிறேன்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top