பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பள்ளிக் கல்வித் துறை பாகம் - 1

பள்ளிக் கல்வித் துறையின் நலத்திட்டங்கள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

கொள்கை

தமிழகத்தின் கலை இலக்கிய தத்துவ வரலாற்றுப் போக்கில் 'கல்வி' என்ற பதம் குறித்த தேடலை மேற்கொள்ளும் போது புலமை சார்ந்த பல்வேறு படைப்பாளர்களின் அடுக்கடுக்கான படைப்பு வெளிகளில் அது முகம் காட்டுவதை அறிய முடியும். இந்தப் பின்னனியில் தமிழகக் கல்வியின் பரிணாம வளர்ச்சி பதிவு செய்யத் தகுதியானதாகிறது. தமிழ்ச் சமூகத்தில் காலந்தோறும் கல்வியின் அவசியத்திற்கு அளித்த முக்கியத்துவம் மிகைப்படுத்திய ஒரு கூற்று அன்று. பண்டைய இலக்கியங்களிலும் தொல்லியல் சான்றுகளிலும் கல்வி குறித்து ஏராளமான மேற்கோள்கள் பொதிந்து கிடப்பது இந்த உண்மையை உணர்த்தும்.

சமுதாயத்தை சீரமைக்கும் உந்து சக்தியாக கல்வி மட்டுமே விளங்கும் என்பதை தங்கள் தொலைநோக்குப் பார்வையில் தமிழ்க் கவிஞர்கள் கண்டு மொழிந்தனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்தில் கல்வி மிக உன்னத நிலையில் பார்க்கப்பட்டதையும், கற்றவர்கள் அனைவராலும் போற்றப்பட்டு உயர்ந்த நிலையில் இருந்ததையும் காண முடிந்தது. தமிழகத்தை ஆண்ட பல்வேறு மன்னர்கள் கல்வியை நிறுவனப்படுத்தவும், கற்றலைப் போற்றவும் செய்தனர். கல்வியின் மேன்மை மற்றும் பரவல் குறித்த கருத்துக்கள் மன்னர்களின் கட்டளைகளாக பதிவு பெற்றன.

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே'

(புறநானுாறு - 183)

என்ற புகழ் பெற்ற புறநானுாற்று பாடலில் "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்” என்னும் சங்க காலப் படைப்பாளன் கற்றலின் உன்னதத்தையும் கற்றுணர்ந்தவரின் முக்கியத்துவத்தையும் பேசுவது அக்காலக்கட்டத்தில் கல்விக்கு அளிக்கப்பட்ட உயர் மதிப்பைக் காட்டுகிறது.

தத்துவக் கவிஞானி திருவள்ளுவர், கல்வி பற்றி பேசும்போது

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை.

(திருக்குறள் - 400) என்று பதிவு செய்கிறார்.

ஒரு சமுதாயம், நிறைந்த கல்வி கட்டமைப்பால் மட்டுமே நிலையானதாகவும், பாதுகாப்பானதாகவும், முன்னேறியதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும், நாகரிகம் அடைந்ததாகவும் திகழ முடியும் என்பதை பண்டைத் தமிழ்ச் சமுதாயம் அறிந்து வைத்திருந்தது.

இந்தியாவில் ஆங்கிலக் காலனி ஆதிக்கம் வந்த பிறகு, மேற்கத்தியக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கல்வி முறை, அமைப்பு ரீதியாக நிறுவப்பட்டு, முறைப்படுத்தப்பட்டதுடன் சான்றளிக்கும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டது. அறிவியல் மற்றும் கணிதப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவற்றை உள்ளூர் மொழிகளில் கற்றுத் தருவதற்கும் கலைத்திட்டம் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் ஏற்கனவே, கல்விக்கான சாதகமான சூழ்நிலை நிலவியதால் கல்வி நிறுவனங்களை உருவாக்குவது எளிதானது.

இந்திய விடுதலைக்குப் பிறகு, கல்வி முறையை மறுகட்டமைப்பு செய்வது அவசியமானது. கல்வித் துறையில் இந்திய சமூகம் விழித்துக் கொண்டு முன்னேற்றத்திற்கான பாதையில் செல்வதற்கு தமிழகம் தலைசிறந்த முன்னோடியாக விளங்கியது. தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்களின் பெருமுயற்சியால் தமிழகத்தில் அனைவருக்குமான கல்விச் சேவைகளுக்கான உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டது. தமிழகத்தின் உன்னதத் தலைவர்கள் கல்வியை இல்லந்தோறும் கொண்டு செல்ல உணர்வுப் பூர்வமாக எடுத்த பல முயற்சிகளால் பெரும் பயன்கள் விழைந்துள்ளன.

தற்கால அறிவுசார் மற்றும் தகவல் நுட்ப யுகம், கல்வி மேலாண்மையில் பல புதிய பார்வைகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் தனிநபர் பொருளாதார முன்னேற்றத்திலும் கல்வியினுடைய தாக்கத்தை அனைவராலும் உணர முடிகிறது. மாறிவரும் தேவைகளுக்கேற்ப புதிய கருத்துக்களையும், கருது கோள்களையும் கல்வியில் உள்வாங்கும் நிலைமையைத் தற்போது அரசின் கொள்கை வகுப்பாளர்கள் உணர்ந்துள்ளனர். கல்வியின் இயல்பான அடுத்த நகர்வு குழந்தைகளை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும் என்பதை கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். சமூக, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்கு யாவருக்கும் தரமான கல்வி அளித்தல் என்பது கொள்கை வகுப்பாளர்களின் வலுவான நோக்கமாக அமைந்துள்ளது.

பெண் குழந்தைகளை முறையான கல்வி நீரோட்டத்தில் கொண்டு வந்தது அவர்களுக்கான அதிகாரப் பகிர்வினை பெருமளவில் அளித்துள்ளது. கல்வியால், கல்வி வளர்ச்சியால் சமுதாயத்தில் காணப்பட்ட சாதி, மத, பாலின, சமூக வேறுபாட்டு ஒடுக்கு முறைகள் படிப்படியாக உடைத்து எறியப்பட்டு வருகின்றன. சமுதாயத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கல்வி மேம்பாடு நீக்கி வருகிறது. கல்வி, நீண்ட காலமாக காணப்பட்ட அடிமை நிலைகளிலிருந்து மக்களை விடுவித்ததுடன் சமுதாயத்தில் சில குறிப்பிட்ட பகுதியினருக்கு எதிரான தீமைகளை முற்றிலும் நீக்கி உள்ளது. வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியால் மாணவர் சமுதாயம் சிறகடித்து பறந்து சாதனை புரிய வழிவகை செய்கிறது. இத்தகைய சூழலில் மாணவர்களின் திறமையை வளர்ந்து வரும் தேவைக்கேற்ப ஒத்திசைக்க வேண்டியது அவசியமாகிறது. அரசு எடுத்துக் கொண்ட முயற்சிகளினால் இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு வசதிகள் உருவாகி அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் கல்வி மற்றும் கல்வி சார்ந்த வசதிகளும் உட்கட்டமைப்பு வசதிகளும் பெருமளவில் மேம்படுத்தப் பட்டுள்ளன. கல்வி வசதியின் பரவல் அனைவருக்கும் சென்றடைந்த நிலையில், தரமான கல்வியை அளிப்பது என்ற அணுகுமுறை அடிநாதமாகியுள்ளது. உயர்தரமான கல்வி அளிக்க வேண்டும் என்பதும் கல்விச் சேவையை மிக உன்னதமான வகையில் முழுமையாக அளிக்க வேண்டும் என்பதும் அரசின் முக்கியப் பணியாக மாறியுள்ளது. பள்ளிப் படிப்பு முடிந்த நிலையில் மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர உயர் கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனை மையங்களை ஏற்படுத்தி அவர்களின் உள்ளார்ந்த திறன்களை மேம்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக தேசிய மற்றும் உலக அளவில் தமிழகம் பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது. தமிழகத்தின் கல்வி கொள்கையை வகுப்பதில் பங்காளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து ஆலோசிக்கப் பட்டுள்ளனர். ஆக்கப்பூர்வமான கருத்துக்களும் ஆலோசனைகளும் அரசின் புதிய முயற்சிகளுக்கு வலுவூட்டுவதாக அமையும். இந்தக் கொள்கை முன்னெடுப்புகள் அனைத்தும் தமிழகத்தின் பெருமைமிகு வரலாற்று அடித்தளத்தையும் தத்துவப் பரிமாணங்களையும் உள்வாங்கியுள்ளன. தமிழ்நாடு “தொலைநோக்கு 2023"இன் அடிப்படையில், கடந்த கால அனுபவங்களையும், நிகழ்கால சவால்களையும் கருத்தில் கொண்டு கல்வித் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

மாறிவரும் சூழ்நிலைகளுக்கேற்ப தற்காலத்தில் மாற்றங்களை உருவாக்குவதற்கு அவை இணக்கமாக அமைகின்றன. எதிர்நோக்கிய விழைவை தரும் என்ற நம்பிக்கையில் கல்வியின் பரிணாம வளர்ச்சியில் முன்னேற்றத்தை நோக்கிய ஒரு பெரும் உயரத்தை எட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பும் படைக்கப்படுகிறது.

கொள்கை மற்றும் திட்டங்கள்

தமிழ்நாட்டிலுள்ள குழந்தைகள் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் தங்கள் பள்ளிப்படிப்பை தடையின்றி நிறைவு செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கீழ்க்காணும் முன்னோடி நலத்திட்டங்களை இவ்வரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

மடிக்கணினி

2011-12 ஆம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது.

சிறப்பு ஊக்கத் தொகை

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ /மாணவியர்கள் இடைநிலைக் கல்வியில் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 2011-12 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.1500, 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.1500, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.2000 என சிறப்பு ஊக்கத் தொகை தமிழ்நாடு மின் விசை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு மேல்நிலைக் கல்வி முடிவடைந்தவுடன் வழங்கப்படுகிறது.

நான்கு இணைச் சீருடைகள்

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு உண்ணும் மாணவர்கள் அனைவருக்கும் 4 இணைச் சீருடைகள் வழங்கப்படுகின்றன.

கம்பளிச் சட்டை

மலைப் பகுதியில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2013-14 ஆம் கல்வி ஆண்டு முதல் விலையில்லா கம்பளிச் சட்டை வழங்கப்படுகிறது.

பாடப்புத்தகங்கள்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. 2012-13 முதல் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு மற்றும் முப்பருவமுறை அறிமுகப்படுத்தப் பட்டதையடுத்து, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பருவம் 1, பருவம் II, பருவம் III என முப்பருவ முறையிலும் மற்றும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் முழு ஆண்டுக்குமான பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு இப்புத்தகங்கள் ஒவ்வொரு கல்வி ஆண்டும் / பருவமும் பள்ளி தொடங்கும் முதல் நாளிலே வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பேடுகள்

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2012-13 ஆம் கல்வி ஆண்டு முதல் குறிப்பேடுகள் வழங்கப்பட்டு வருகிறது.

கல்வி உபகரணப் பொருட்கள்

விலையில்லா புவியியல் வரைபடம்

2012-13 ஆம் கல்வியாண்டு முதல் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா புவியியல் வரைபடம் வழங்கப்படுகிறது.

புத்தகப்பை

2012-13 ஆம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகப்பை வழங்கப்படுகிறது.

கிரையான் மற்றம் வண்ணபென்சில்

2012-13 ஆம் கல்வியாண்டு முதல் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா கிரையான்கள் மற்றும் 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வண்ணபென்சில்கள் வழங்கப்படுகிறது.

கணித உபகரணப்பெட்டிகள்

அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2012-13 ஆம் கல்வி ஆண்டு முதல் விலையில்லாக் கணித உபகரணப் பெட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

காலணி

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 2012-13 ஆம் கல்வியாண்டு முதல் காலணி வழங்கப் படுகிறது.

மிதிவண்டிகள் வழங்குதல்

ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் பிற்பட்டோர் நலத் துறை வாயிலாக பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் ஆதிதிராவிட நலத் துறை வாயிலாக பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை வாயிலாக பொதுப் பிரிவு மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் சத்துணவுத் திட்டம்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ், 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுவருகிறது. இத்திட்டம் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் மூலம் செயல் படுத்தப்படுகிறது.

பேருந்து பயண அட்டை

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தாங்கள் பயிலும் பள்ளிக்கு எளிதில் வந்து செல்வதற்கு வசதியாக பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் போக்குவரத்து துறை மூலம் செயல் படுத்தப்படுகிறது.

வருவாய் ஈட்டும் தாய்/ தந்தையை இழந்த மாணவர்களுக்கான துயர் துடைப்பு நிதி உதவி

மரணமடைந்த அல்லது விபத்து காரணமாக நிரந்தர முடக்கம் அடைந்ததன் காரணமாக வருவாய் ஈட்டும் பெற்றோரை (தாய் / தந்தை) இழக்க நேரிடும் மாணவர்களுக்கான துயர் துடைப்பு நிதியுதவித் திட்டமாகும்.

இவ்வாறான எதிர்பாராத சூழ்நிலையினால் குழந்தைகளின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கக் கூடாது என்பதில் அரசு தீவிரமாக உள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவியாக அளிக்கப்பட்டு வந்தது. 2014-15 ஆம் ஆண்டு முதல் இந்நிதியுதவித் தொகை ரூ.50,000 யிலிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தொகையானது மாணவர்களின் பெயரில் பொதுத் துறை நிறுவனத்தில் வைப்பு நிதியாக செலுத்தப்படுகிறது.

வேலை வாய்ப்பிற்கான பதிவு

2011-12 ஆம் ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்து செல்லும் மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து அவர்களின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு பதிவு அட்டையையும் சேர்த்து பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இப்பதிவு முறையினால் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள் 100 சதவீதம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்படுவது உறுதி செய்யப்படுகின்றது.

சாதி, இருப்பிட மற்றும் வருமானச் சான்று வழங்குதல்

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் மூலமாக சார்ந்த வருவாய் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியரிடமிருந்து சாதி, இருப்பிட மற்றும் வருமானச் சான்றுகள் பெற்று வழங்கப் படுகின்றன. 2013-14 ஆம் ஆண்டு முதல் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 2015 - 16 ஆம் கல்வியாண்டு முதல் இணைய வழியில் விண்ணப்பம் பெறப்பட்டு இச்சான்றிதழ்கள் வழங்கப்படுவது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

மழைக்கால ஆடை, உறைகாலணி மற்றும் காலுறை

மலைப்பிரதேசங்களில் வாழும் மாணாக்கர்கள் மழைக் காலங்களிலும் எவ்வித சிரமமுமின்றி பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்னும் குறிக்கோளுடன் மழைக்கால ஆடை, உறைகாலணி, மற்றும் காலுறைகள் வழங்கும் என இவ்வரசு அறிவித்திருந்தது.

ஆதாரம் : பள்ளிக் கல்வித் துறை

2.95652173913
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top