பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பள்ளிக் கல்வித் துறை பாகம் - 4

பள்ளிக் கல்வித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மெட்ரிகுலேசன் பள்ளிகள்

"கல்வி ஒரு ஆற்றல்மிகு ஆயுதம். இதனைக்கொண்டு உலகையே மாற்ற இயலும்”

- நெல்சன் மண்டேலா

அறிமுகம்

மெட்ரிகுலேசன் பள்ளிகள் முற்றிலும் சுயநிதி அடிப்படையில் இயங்கும் பள்ளிகளாகும். தொடக்கத்தில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் சென்னை மற்றும் மதுரைப் பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. மெட்ரிகுலேசன் பள்ளிகள் தமது தனித்தன்மையுடன் இவ்விரு பல்கலைக்கழகங்களுடன் இணைப்பு பெற்றிருப்பினும், நிதி சார்ந்தும், செயல்பாடுகள் சார்ந்தும் தன்னாட்சியுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டன. நிர்வாக வசதிக்காக இப்பள்ளிகள் 1978ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி இயக்ககக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.

அத்தருணத்தில் சுமார் 20 மெட்ரிகுலேசன் பள்ளிகள் மட்டுமே செயல்பட்டுவந்தன. இப்பள்ளிகள் மெட்ரிகுலேசன் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் விதித் தொகுப்பு 1978-இன் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. மெட்ரிகுலேசன் பள்ளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே இருந்ததால், மெட்ரிகுலேசன் பள்ளிகளைச் சீரிய முறையில் கண்காணிக்க 2001ஆம் ஆண்டு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் தோற்றுவிக்கப்பட்டது. தற்போது 4,268 மெட்ரிகுலேசன் பள்ளிகள் 39,18,221 குழந்தைகளுக்குக் கல்வி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

தொலைநோக்கு

மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தரமான கல்வி அளிக்கப்படுவதை உறுதி செய்யுமுகத்தான் முழுக்கல்வித் தகுதி பெற்ற ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுதல், உட்கட்டமைப்பு வசதிகள் சிறந்த முறையில் ஏற்படுத்தப்படுதல் ஆகியவை அரசால் கண்காணிக்கப்பட்டு உறுதி செய்யப் படுகிறது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள், 2011 முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவது உறுதி செய்யப் படுகிறது.

குறிக்கோள்கள்

மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்ய இவ்வியக்ககம் கீழ்க்காணும் குறிக்கோள்களுடன் செயல்படுகிறது.

 • முழுக்கல்வித்தகுதி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப் படுவதை உறுதிசெய்தல்.
 • குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அடிப்படை வசதிகள் சிறந்த முறையில் ஏற்படுத்தப்படுவதை உறுதி செய்தல்.
 • குழந்தைகள் இனிய முறையில் கற்றல் செயல் பாட்டினைப் பெறத்தக்க வகையில் கற்றல்கற்பித்தலுக்கு உகந்த சூழலை உருவாக்குதல்.
 • குழந்தைகள் பன்முக வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாடு அடையத் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்தல்.
 • புதிதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் தொடங்கவும், மெட்ரிகுலேசன் பள்ளிகளை மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தவும் அனுமதி வழங்குதல்.
 • குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள், 2011 நடைமுறைப்படுத்துவதில் மாநில முதன்மைத் தொடர்பு அலுவலராக கடமையாற்றுதல்.

தரமான கல்வி வழங்கச் சிறப்பு முயற்சிகள்

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை

2012-13ஆம் ஆண்டில் மதிப்பீடு முறையில் திருப்புமுனையாகத் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடுமுறை ஒன்று முதல் எட்டு வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, 2013-14ஆம் கல்வி ஆண்டில் இது ஒன்பதாம் வகுப்பிற்கும் விரிவுபடுத்தப்பட்டது. கல்வி சார் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளில் குழந்தைகள் முழுமையான கல்வி வளர்ச்சி பெறும் வகையில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடுக் கல்வி முறை மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பின்பற்றப்பட்டுவருகிறது.

முப்பருவக் கல்வி முறை

தரமான கல்வி என்ற அடைவையும், குழந்தைகளுக்கு அதிகப்படியான புத்தகச் சுமையைக் குறைக்கவும் ஒரு புதிய முப்பருவக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 1 முதல் 9 வரையுள்ள வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பாடக் கருத்துகளைப் புரிந்து படிப்பதை ஊக்கப்படுத்தும் முகத்தான் முப்பருவக் கல்வி முறையைப் பின்பற்றிக் கல்வி போதிக்கப்படுகிறது.

நூலக வசதி

அனைத்து மெட்ரிகுலேசன் மற்றும் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளில் நூலகம் இயங்க வேண்டுமென மாநில அரசால் வலியுறுத்தப்படுகிறது. பல்வேறு தலைப்புகளிலான நூல்கள், நாளேடுகள், வரைபடங்கள், ஆவணங்கள், குறுந்தகடுகள், மின் நூல்கள், இதர குறிப்புதவி நூல்கள் இவையனைத்தும் பள்ளி நூலகத்தில் இடம் பெற வேண்டும். பாடங்கள் தொடர்பான நூல்களை நாடிச்சென்று மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை நூலகம் ஏற்படுத்துகிறது. ஆய்வு அலுவலர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் மெட்ரிகுலேசன் பள்ளிகளைப் பார்வை மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளும்போது, மெட்ரிகுலேசன் பள்ளிகளில் குறைந்தது 1500 நூல்கள் மற்றும் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தது 3000 நூல்கள் இருப்பதை உறுதி செய்கின்றனர்.

கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள்

மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்பப் பள்ளிகளில் போதுமான எண்ணிக்கையில் சுத்தமான கழிப்பறைகளும், குடிநீர் வசதிகளும் ஏற்படுத்த வேண்டுமென அரசால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கூறிய வசதிகள் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

மாணவர்களுக்கு விலையில்லாப் பேருந்து பயண அட்டை வழங்குதல்

பள்ளி மாணவர்கள், பேருந்தில் பள்ளிக்குச் சென்றுவர விலையில்லாப் பயண அட்டைகள் வழங்கப்படுகின்றன. மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் எவ்விதச் சிரமமும் இன்றிப் பள்ளிகளுக்கு வந்து செல்ல இச்சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2016-17ஆம் கல்வி ஆண்டில் 3,23,584 மாணவர்கள் இந்த வசதியைப் பெற்றுள்ளனர்.

பள்ளி வாகனப் பயணத்தில் மாணவர்களின் பாதுகாப்பு

பள்ளி மாணவர்கள் பயணத்தின் போது அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டுத் தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (ஒழுங்குமுறை மற்றும் பள்ளிப் பேருந்துகள் கட்டுப்பாடு) சிறப்பு விதிகள், 2012 அரசால் ஏற்படுத்தப்பட்டது. விபத்துக்களின்றிப் பள்ளி வாகனங்களை இயக்குவதை உறுதி செய்ய வாகன ஓட்டுநர்களுக்கும், உதவியாளர்களுக்கும்

போக்குவரத்துத்துறை அலுவலர்களின் உதவியுடன் மாவட்ட அளவில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பாதுகாப்பாக வாகனங்களை இயக்குதல் மற்றும் குழந்தைகள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, 23,358 ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

நிர்வாகப் பொறுப்புகள்

புதிய பள்ளிகள் தொடங்க மற்றும் பள்ளிகளைத் தரம் உயர்த்த அனுமதி வழங்குதல்

அரசால் வரையறுக்கப்பட்ட விதிகளை நிறைவு செய்யும் நிலையில், புதிய மெட்ரிகுலேசன் பள்ளி தொடங்க அனுமதி மற்றும் தற்போது செயல்பட்டு வரும் மெட்ரிகுலேசன் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. 2016-17ஆம் கல்வி ஆண்டில் 94 புதிய பள்ளிகள் தொடங்கவும் 100 மெட்ரிகுலேசன் பள்ளிகள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தவும் அனுமதி வழங்கப்பட்டது.

அங்கீகாரம்

அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருப்பின் புதியதாகத் தொடங்கப்பட்ட மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு ஆரம்ப அங்கீகாரமும், மூன்று ஆண்டுகளுக்கொருமுறை தொடர் அங்கீகாரமும் வழங்கப்படுகிறது.

இவ்வியக்ககத்தின் கீழ்க் கடந்த ஐந்து ஆண்டுகளில் இயங்கும் மெட்ரிகுலேசன் / மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கீழ்வருமாறு.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 தமிழ்நாட்டில் சீரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள், 2011 தமிழக அரசால் வகுக்கப்பட்டது.

இச்சட்டத்தின் பிரிவு 12, துணைப் பிரிவு (1) (சி)யினைக் குறிப்பாக எடுத்துக்காட்ட அரசாணை வெளியிடப்பட்டது. இதில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்வது குறித்த சட்டப்பூர்வ முறையினை நடைமுறை படுத்துவது தொடர்பாக, விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீட்டின் கீழ் 2013-14ஆம் ஆண்டு முதல் சேர்க்கை செய்யப்பட்ட குழந்தைகள் விவரம் கீழ்க்கண்டவாறு உள்ளது.

ஆண்டு

மொத்த இடங்களில் 25% ஒதுக்கீடு

சேர்க்கை செய்யப்பட்ட குழந்தைகள்

விழுக்காடு

2013 - 2014

1,07,157

49,864

46.5

2014-2015

1,16,004

86,729

74.7

2015-2016

1,17,232

94,811

80.6

2016-2017

1,19043

97506

81.9

அரசால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் விளைவாக 25 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ்ச் சேர்க்கை செய்யப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது.

இச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு மத்திய மாநில அரசுகளால் கூட்டாக மேற் கொள்ளப்பட வேண்டும்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகளின் நலன் கருதி, 2013-14, 2014-15 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளில் சேர்க்கை செய்யப்பட்ட குழந்தைகளுக்கான தொகை ரூ.221.99 கோடி மாநில அரசால் பள்ளிகளுக்கு ஈடு செய்யப்பட்டுள்ளது.

இணைய வழியில் விண்ணப்பித்தல்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 சீரிய முறையில் நடைமுறைப்படுத்தப் படுவதையும், 25% இட ஒதுக்கீட்டின் கீழ் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினை சேர்ந்த தகுதியான குழந்தைகள் சேர்க்கை செய்யப்படுவதை உறுதி செய்யவும் தற்போது கூடுதல் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சேர்க்கை நடைமுறையில் வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்ய 2017-18ஆம் ஆண்டு முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு

தனியார் சுயநிதிப் பள்ளிகளில் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணங்களை முறைப்படுத்த, தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துதல்) சட்டம்,

2009 இயற்றப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற மாண்புமிகு நீதிபதி அவர்களைத் தலைவராகக் கொண்டு ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவால் அனைத்து வகைத் தனியார் சுயநிதிப் பள்ளிகளிலும் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும், கூடுதலான கட்டணம் மாணவர்களிடமிருந்து வசூல் செய்வதாகத் தனியார் சுயநிதிப் பள்ளிகள் மீது புகார் பெறப்பட்டால், அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுத் தேவையான ஆணைகள் இக்குழுவால் வழங்கப்படுகிறது.

நிதி ஒதுக்கீடு

2017-18 ஆம் ஆண்டிற்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்திற்கு ரூ.8.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

முடிவுரை

மெட்ரிகுலேசன் பள்ளிகள் சிறந்த முறையில் செயல்படுவதும், பள்ளிகளில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான கற்றல் சூழல் அமைவதும், ஒட்டுமொத்த வளர்ச்சி அடைவதும் இயக்ககத்தால் அரசின் சீரிய வழிகாட்டுதலின்படி கண்காணிக்கப்படுகிறது.

அரசுத் தேர்வுகள்

வெற்றி என்பது முடிவல்ல அது ஒரு நீண்ட பயணம்

அறிமுகம்

மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத்தேர்வுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தி வருகின்றது. மிக முக்கியமான இவ்விரண்டு தேர்வுகள் மட்டுமின்றி இதர 32 தேர்வுகளையும் நடத்தி மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கி வருகின்றது. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள் உயர்கல்வி தொடர்வதற்கும் வேலை வாய்ப்பு பெறுவதற்குமான மிக முக்கிய மற்றும் மதிப்பு வாய்ந்த ஆவணங்களாகும்.

1975 ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கிய அரசுத் தேர்வுகள் இயக்ககம், பல புதுமையான முறைகளைத் திறம்படப் புகுத்தியதன் வாயிலாகத் தேர்வுகளை மந்தணத்தன்மையுடன் நடத்துவதில் சிறப்பான முன்னேற்றம் அடைந்து உள்ளது. தேர்வுப்பணிகளில் தகவல் தொழில்நுட்பப் பயன்பாடுகளை உணர்ந்து பல புதிய முயற்சிகள் தொழில் நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது.

தொலைநோக்கு

தேர்வுகளை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்துவதை உறுதிசெய்யும் வகையில் தேர்வுப்பணிகளை அவ்வப்போது மேம்படுத்தி அவற்றின் பாதுகாப்பு, மந்தணத் தன்மை மற்றும் நம்பகத்தன்மையினை உறுதிசெய்தல்.

குறிக்கோள்கள்

தேர்வு தொடக்கம் முதல் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் வரையுள்ள அனைத்து நிலைகளிலும் புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் வாயிலாகப் பொதுத் தேர்வுகளை நேர்மையான முறையிலும், வெளிப்படையாகவும் நடத்துதல், குறித்த காலத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு மதிப்பெண் சான்றிதழ்களைத் தேர்வர்களுக்கு விநியோகித்தல்.

பொறுப்புகள்

அரசுத் தேர்வுகள் இயக்ககம் 34 வகையான தேர்வுகளை நடத்துவதற்கான பொறுப்பினை ஏற்றுள்ளது. 2016-17- ஆம் ஆண்டில் 19,59,599 மாணவர்கள் இடைநிலை மற்றும் மேல்நிலைப் பொதுத் தேர்வுகளை எழுதியுள்ளனர்.

மாநிலம் முழுவதும் செயல்படும் 7 மண்டல அலுவலகங்களில் தேர்வு மையங்களுக்குத் தேவையான எழுதுபொருட்கள், தேர்விற்கான செலவினம்செய்தல், தேர்வு முடிவுகள் வெளியிட்ட பின்னர் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் போன்ற முக்கியப் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இணையதள உருவாக்கம்

மாணவர் சமுதாயம் பயன்பெறும் வகையில் www.dge.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு அதில் தேர்வுகள், தேர்வுகளுக்கான கால அட்டவணை, விண்ணப்பப் படிவங்களின் மாதிரிப்படிவம், கட்டண விவரங்கள், சான்றிட்ட மதிப்பெண் நகல், புலப்பெயர்ச்சிச் சான்றிதழ் மற்றும் மறுபிரதி மதிப்பெண் சான்றிதழ் பெறுதலுக்கான நடைமுறைகள், பொதுத் தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாட்கள் மற்றும் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாட்கள் மற்றும் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான அறிவியல் பாடச் செய்முறை தேர்விற்கான அறிவுரைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்படி இணையதளத்தின் வாயிலாக, தேர்வுகள் எழுதவுள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களது பெயர்ப் பட்டியல் தயாரிப்பதற்குத் தேவையான விவரங்களைப் பெற்றுக் கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள்

தேர்விற்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள், விண்ணப்பிக்கும் வழிமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதில் இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவர்களின் தேவையை உணர்ந்து தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கென மாநிலம் முழுவதும் 213 சேவை மையங்கள் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வர்களுக்கு நிரந்தரப் பதிவெண் வழங்குதல்

தேர்வர்களுக்கு அவர்கள் தேர்ச்சி பெறும் வரை ஒவ்வொரு பருவத் தேர்வின் போதும் தனித்தனிப் பதிவெண்வழங்கும் முறை நடைமுறையில் இருந்து வந்தது. மார்ச் 2016 பொதுத் தேர்வுகள் முதல் தேர்வர்களுக்கு நிரந்தரப் பதிவெண் வழங்கப்பட்டு, அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறும் வரை, அப்பதிவெண்ணைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இணையத் தளம் வாயிலாக தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்தல்

தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு விநியோக மையங்களுக்கு நேரில் சென்று தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ளும் முறை நீக்கப்பட்டு, தற்போது தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளத்தில் நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகள், தங்களது அனைத்து மாணவர்களின் நுழைவுச் சீட்டுகளையும் பதிவிறக்கம் செய்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முறைகேடுகளைத் தவிர்த்திட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

ஆள்மாறாட்டத்தைத் தவிர்த்திடும் பொருட்டும் தேர்வர்கள் ஒருவரைப் பார்த்து மற்றொருவர் எழுதுவதைத் தவிர்த்திடும் பொருட்டும் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன:-

*விடைத்தாளில் தேர்வரின் புகைப்படத்துடன் கூடிய முகப்புத் தாள் அறிமுகப்படுத்துதல்

*ஒளியியல் குறியீடு வாசிப்பான் (OMR) விடைத்தாள்

• பாடங்களுக்கேற்ப முதன்மை விடைப்புத்தகங்கள் வழங்குதல்

சிறையிலேயே தனித் தேர்வு மையம் அமைத்தல்

சிறைவாசிகளும் கல்வியில் ஏற்றம் கண்டிட, சிறையிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. நடைபெற்று முடிந்த மார்ச் 2017, மேல்நிலைப் பொதுத் தேர்வினை 98 சிறைவாசிகள் திருச்சி, பாளையங்கோட்டை, வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் புழல் மத்தியச் சிறைகளில் தேர்வெழுதியுள்ளனர். மார்ச் 2017 இடைநிலை பள்ளி இறுதி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வில் 229 சிறைவாசிகள் பாளையங்கோட்டை, திருச்சி, கோயம்புத்தூர், வேலூர் மற்றும் புழல் மத்தியச் சிறைகளில் தேர்வெழுதியுள்ளனர்.

தேர்வுக் கட்டுப்பாட்டு அறை

மேல்நிலை / இடைநிலை பொதுத் தேர்வுகள் நடைபெறும் காலங்களில் பொதுத் தேர்வுகளை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடத்துவதற்கான அவசியமான தேவைகளுக்குத் தேர்வுக் காலங்களில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. இடைநிலை மற்றும் மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் தொடங்கும் நாள் முதல் தேர்வுகள் முடியும் வரை, இக்கட்டுப்பாட்டு அறை காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை செயல்படுகிறது. பெறப்படும் புகார்களின் அடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது

தமிழ்வழியில் பயிலும் மாணாக்கருக்குத் தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்களித்தல்

இடைநிலை / மேல்நிலைப் பொதுத்தேர்வினைத் தமிழ் வழியில் பயின்று தேர்வெழுதும் பள்ளி மாணாக்கருக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு வருகிறது. மார்ச் 2017, மேல்நிலைப் பொதுத் தேர்வில் 5,69,304 பள்ளி மாணாக்கரும், இடைநிலை பள்ளி இறுதி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வில் 6,19,721 பள்ளி மாணாக்கரும் பயனடைந்துள்ளனர்.

சிறப்புக் கவனம் தேவைப்படும் தேர்வர்கள் தேர்வெழுதுவதற்கு வழங்கப்படும் சலுகைகள்

இடைநிலை / மேல்நிலைப் பொதுத்தேர்வெழுதும் கற்றலில் குறைபாடுடைய தேர்வர்கள், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர் மற்றும் இதர குறைபாடுள்ள தேர்வர்கள் தேர்வெழுதுவதற்குக் கூடுதல் ஒரு மணி நேரம் வழங்கப்படுகிறது. மேலும், அனைத்துப் பாடங்களுக்கும் சொல்வதை கேட்டு எழுதுபவர் நியமனம், ஏதேனம் ஒரு மொழிப்பாட விலக்களிப்பு, கணிப்பான் பயன்படுத்த அனுமதியும் வழங்கப்படுகிறது. மார்ச் 2017, மேல்நிலைப் பொதுத் தேர்வில் 2,227 மாற்றுத்திறனாளி தேர்வர்களும், இடைநிலை பள்ளி இறுதி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வில் 4,190 சிறப்பு கவனம் தேவைப்படும் தேர்வர்களும் பயனடைந்துள்ளனர்.

விடைத்தாட்களை எடுத்துச்செல்ல வாகனங்கள் பயன்படுத்துதல்

ஒவ்வொரு தேர்வு நாளன்றும் தேர்வு முடிவுற்றவுடன் வாகனங்களைப் பயன்படுத்தி விடைத்தாள் கட்டுகளை, விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் சேர்ப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், விடைத்தாள் கட்டுகள் அனைத்தும் பாதுகாப்பாகவும் குறித்த நேரத்திலும் எடுத்துச் செல்வது உறுதி செய்யப்படுகிறது.

தேர்வு முடிவுகள் வெளியிடுதல்

மாணவர்கள் எவ்விதச் சிரமமுமின்றித் தேர்வு முடிவுகளை இணைய வழி வாயிலாகத் தெரிந்துகொள்ளப் பின்வரும் இணையத் தளங்களில் சிறப்பான வழிவகை செய்யப்பட்டுள்ள து. www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.tnresults.nic.in.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பித்திட ஏதுவாக மார்ச் 2015 தேர்வுகள் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தேர்வுகள் http://www.dge.tn.nic.in இணையதள் வாயிலாகத் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்தற்காலிகச் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லத்தக்கவையாகும்.

மேல்நிலை தேர்வில் விடைத்தாட்கள் கணினிப்பிரதி, மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்தல்

மேல்நிலைப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டப்பிறகு மாணவர்கள் விடைத்தாட்களின் நகல் பெறுவதற்கும் மறுமதிப்பீடு மற்றும் மதிப்பெண் மறுகூட்டல் வேண்டி விண்ணப்பித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்களது விடைத்தாள் கணினிப்பிரதி செய்யப்பட்டு, இணையதளம் வாயிலாகப் பதிவேற்றம் செய்யும் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகலைப் பதிவிறக்கம் செய்து, திருத்தப்பட்ட விடைத்தாட்களைச் சரிபார்த்த பின்னர் தேவைப்படின் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்திட முடியும்.

கூடுதல் பாதுகாப்புத் தன்மையுடன் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குதல்

மதிப்பெண் சான்றிதழ்களை மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புத் தன்மையுடன் வெளியிட நடவடிக்கை மேற்கொண்டதால், மதிப்பெண் சான்றிதழின் உண்மைத் தன்மையினை எளிதாகக் கண்டுபிடிக்க முடிகின்றது. மேலும் கூடுதலாக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தன்மையுடன், இருபரிமாண பட்டைக்கோடு முறையுடனும், தேர்வர்களின் புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்

பலமுறை தேர்வெழுதி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னர் ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பிற தேர்வுகள்

ஜூன் / ஜூலை மாதங்களில் சிறப்புத் துணைத் தேர்வு நடத்துதல்

மார்ச் | ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் இடைநிலை / மேல்நிலைப் பொதுத் தேர்வுகளில் தோல்வியுறும் மாணவர்கள் அக்கல்வியாண்டிலேயே அவர்தம் உயர்கல்வியினைத் தொடர்வதற்கு உதவியாக உடனடிச் சிறப்புத் துணைத்தேர்வு ஜூன்/ஜூலை மாதத்தில் நடத்தப்படுகிறது.

தொடக்கக் கல்விப் பட்டயத் தேர்வு

ஆண்டுதோறும் தொடக்கக் கல்விப் பட்டயத் தேர்வும் நடத்தப்படுகிறது. ஜூன் 2017-இல் நடைபெறவுள்ள இத்தேர்வில் 24,175 தேர்வர்கள் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வர்கள் விடைத்தாள் கணினி பிரதி பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டு, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்யவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

எட்டாம் வகுப்புத் தேர்வு

குறைந்தபட்சக் கல்வித் தகுதியினை வழங்குவதற்கும், வேலைவாய்ப்புக்காகவும், அடிப்படை நிலையில் பதவி உயர்வுக்காகவும், எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது.

அரசுத் தொழில் நுட்பத் தேர்வு

தொழில்நுட்பக் கல்வித் தகுதியை வழங்குவதற்கும், வேலைவாய்ப்புக்காகவும், ஓவியம், தையல், விவசாயம், இசை, அச்சுக்கலை, கைத்தறி, நெசவு மற்றும் பிற பாடப்பிரிவுகளில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்வுகள் கீழ்நிலை மற்றும் மேல்நிலை ஆகிய இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது. ஜூன் 2017 தேர்விற்கு 11,651 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாடு ஊரக மாணவர் திறனாய்வுத் தேர்வு

ஊரக மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு ஊரக மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் செப்டம்பரில் நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஊரக மாணவர்கள், அவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்திற்கும் மிகாமல் இருக்கும் பட்சத்தில், இத்தேர்வினை எழுத அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 மாணவியர் மற்றும் 50 மாணவர்கள் மேற்படி எழுத்துத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டு, ஆண்டொன்றுக்கு ரூ.1000/- வீதம் நான்கு ஆண்டுகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தற்போது மாணவர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்க அனுமதிக்கப் படுகின்றனர். 2016-இல் நடைபெற்ற இத்தேர்வினை 53,887 மாணவர்கள் எழுதியதில், தேர்ச்சிப் பெற்ற 3,100 மாணவர்கள் உதவித்தொகை பெற்றுள்ளனர்.

தேசிய வருவாய் வழி மற்றும் தகுதிப் படிப்பு உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு

தேசிய வருவாய் வழி மற்றும் தகுதிப் படிப்பு உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏழாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று எட்டாம் வகுப்பில் பயிலும் (பட்டியலின் மற்றும் பழங்குடியின மாணவர்கள் 50% மதிப்பெண்கள் மற்றும் ஏனையோர் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்) மாணவர்களது பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.1,50,000/-க்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில், அவர்கள் தேர்வெழுதலாம். தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6000/-(மாதந்தோறும் ரூ.500/- வீதம்) உதவித்தொகையாக ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஆண்டுதோறும் 6695 மாணவர்களுக்கு படிப்புதவித் தொகை வழங்கப்படுகிறது. 2016-இல் நடைபெற்ற இத்தேர்வினை 1,55,366 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர்.

தேசிய அளவிலான திறனறித் தேர்வு

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படும் தேசிய அளவிலான முதல்நிலைத் திறனறித் தேர்வினை தமிழகத்தில் நடத்த, அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஒருங்கிணைப்பு அமைப்பாக செயல்படுகிறது. மத்திய/மாநிலப் பள்ளி குழுமங்களில் 10-ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் அனைவரும் இத்தேர்வினை எழுத தகுதி படைத்தவர்கள் ஆவர்.

முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்டு, பின்னர் தகுதியுள்ள தேர்வர்களுக்கு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் இரண்டாம் நிலைத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் இந்நேர்காணலில் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு 11 மற்றும் 12-ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1250/-ம், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பிற்கு மாதந்தோறும் ரூ.2,000/-மும் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பல்கலைக் கழக மானியக் குழுவினால் நிர்ணயிக்கப்படும் உதவித்தொகை அதிகபட்சமாக நான்கு ஆண்டு காலத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது.

2016-இல் நடைபெற்ற இத்தேர்வினை 1,55,699 மாணவர்கள் எழுதியதில், 237 மாணவர்கள் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

இதர சான்றிதழ்கள்

புலப்பெயர்ச்சிச் சான்றிதழ்

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளில் தேர்ச்சியடைந்து பிற மாநிலங்களில் மேற்படிப்பைத் தொடர் விரும்பும் மாணவர்களுக்குப் புலப்பெயர்ச்சிச் சான்றிதழ்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட 5 தினங்களுக்குள் வழங்கப்படுகின்றது. விண்ணப்பத்தினை இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் மற்றும் மறுபிரதிச் சான்றிதழ்

மதிப்பெண் சான்றிதழ்களைத் தவறவிடும் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட மதிப்பெண் நகல் மற்றும் மறுபிரதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தினை இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை வழங்குதல்

உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் நியமன அதிகாரிகள் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத் தன்மைக் குறித்த அறிக்கையினைக் கோரும் பட்சத்தில் அவ்வறிக்கை வழங்கப்பட்டு வருகிறது.

நடுவணரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பணியாளர் தேர்வாணையக் குழுமத்தினால் நடத்தப்படும் தேர்வுகளை நடத்துதல்

ஆண்டுதோறும் நடுவணரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பணியாளர் தேர்வாணையக் குழுமத்தினால் நடத்தப்படும் பல தேர்வுகளை சென்னையில் நடத்திட, அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஒருங்கிணைப்பு மையமாக செயல்பட்டு வருகிறது.

புதிய முயற்சிகள்

தரப்பட்டியல் நடைமுறையினைக் கைவிடுதல்

இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வித் தேர்வுகளுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவிலான தரப் பட்டியல் அறிவிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வந்தது.

காலப்போக்கில் இந்தத் தரங்களைப் பெற பல்வேறு கல்வி நிறுவனங்கள் தமக்குள் ஒரு போட்டியினை வளர்த்துக் கொள்ளும் நிலையாக அது உருவெடுத்தது. இதனால் மாணவர்கள் உளவியல் ரீதியான இறுக்கத்திற்கு உள்ளானார்கள். மாணவர்களுக்கு ஏற்படும் அதீத மன அழுத்தங்களைக் குறைக்கும் வகையிலும், ஆரோக்கியமற்ற போட்டிச் சூழல்களைத் தவிர்க்கும் வகையிலும் 2016-17ஆம் கல்வி ஆண்டு முதல் தரப்பட்டியல் அறிவிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது.

மேல்நிலை முதலாமாண்டுக்கு பொதுத் தேர்வினை அறிமுகப்படுத்துதல்

1978-79-இல் தொடங்கப்பட்ட மேல்நிலைக்கல்வி முறையில் அன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு இரண்டாம் ஆண்டில் மட்டும் மாநில அளவில் அரசுப் பொதுத்தேர்வு நடத்திடலாம் என முடிவு செய்யப்பட்டு 1980-ஆம் ஆண்டு முதல் மேல்நிலை இரண்டாமாண்டில் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி வருகின்றனர்.

மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு மதிப்பெண்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாததால் உயர் கல்விக்கு அடிப்படையாக அமையும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பாடத் திட்டத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை முதலாம் ஆண்டு பாடங்களுக்குக் கொடுப்பதில்லை என்பதால் உயர்கல்வியில் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்றும் அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளைச் சந்திக்க மேல்நிலை முதலாம் ஆண்டில் பொதுத்தேர்வுகள் நடத்துவது மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றும் மேல்நிலைக் கல்வி அளவில், தான் விரும்பி எடுத்த விருப்பப் பாடங்களில் மாணவர்கள் வலுவான அடித்தளம் பெறவேண்டியது அவர்களுடைய எதிர்கால கல்விக்கு மிக அவசியமானதால் 2017-18-ஆம் கல்வியாண்டில் இருந்து மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் மாநில அளவில் அரசு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்.

தேர்வுக்கால அட்டவணை வெளியிடுதல்

அனைத்து மாணவர்களும் எவ்வித அழுத்தமுமின்றி தேர்வு எழுதுவதற்கு ஆசிரியர்கள் முன்னதாகவே மாணவர்களை தயார் செய்யும் வகையில் 201718-ஆம் கல்வியாண்டிற்கான இடைநிலை, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டுக்கான தேர்வுக்கால அட்டவணை கல்வியாண்டின் துவக்கத்திலேயே வெளியிடப்பட்டன.

பொதுத்தேர்வு

தேர்வு

தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி

தொடங்கும் தேதி

முடிவடையும் தேதி

மேல்நிலை பொதுத்தேர்வு - இரண்டாம் ஆண்டு

01.03.2018

06.04.2018

16.05.2018

மேல்நிலை பொதுத்தேர்வு - முதலாம் ஆண்டு

07.03.2018

16.04.2018

30.05.2018

இடைநிலை பொதுத் தேர்வு - பத்தாம் வகுப்பு

16.03.2018

20.04.2018

23.05.2018

தமிழில் மதிப்பெண் சான்றிதழ்

மார்ச் 2017 பொதுத்தேர்வு முதல் மதிப்பெண் சான்றிதழ்களில் தேர்வர்களின் பெயர் மற்றும் பாடங்கள் தமிழிலும் அச்சிட்டு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மின் ஆளுமை வாயிலாக சான்றிதழ்கள்

தமிழ்நாட்டில் பயின்று இடம் பெயர்ந்து பிற மாநிலங்களுக்குக் கல்வி பயிலச் செல்லும் தேர்வர்களுக்கு மின் ஆளுகை வாயிலாக புலப்பெயர்ச்சிச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. சான்றிட்ட மதிப்பெண் நகல் மற்றும் இரண்டாம்படி மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கும் மின் ஆளுகை வாயிலாக விண்ணப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

தேர்வு முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்புதல்

மார்ச் 2017, மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்கள், தேர்வு முடிவுகளை விரைவில் அறியும் வண்ணம் அவர்கள் தேர்வெழுத விண்ணப்பித்தபோது பதிவு செய்த அலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது

மின் ஆவணக் காப்பகம்

காகித ஆவணங்களைப் பயன்படுத்தும் நடை முறையினை நீக்கவும், மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையினை மின்னணு முறையில் அறியவும், 'மின் ஆவணக் காப்பகம்' உதவுகிறது.

மார்ச் 2017 முதல் மேல்நிலை மற்றும் இடைநிலைப் பள்ளி இறுதி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வுகள் மின் ஆவணக் காப்பகக் கணக்கு உடைய மாணாக்கர் மதிப்பெண் சான்றிதழ்களை மின்னணு முறையில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் தரவுக் களஞ்சியத்திலிருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.

தேர்வர்கள் மின்னணு மதிப்பெண் சான்றிதழை எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்வதற்கும், இணைய வழியாகப் பகிர்ந்து கொள்வதற்கும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் தரவுக்களஞ்சியத்திலிருந்து மின்னணு முறையில் நேரடியாக வழங்குவதால் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படுகிறது.

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு

2017-18 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 87.35 கோடி இவ்வியக்ககத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முடிவுரை

ஒவ்வொரு நடவடிக்கையும் மாணவர்கள் பெற்றோர் மற்றும் சமுதாயத்தின் நலன் கருதியே செயல்பட்டு கடந்த வருடங்களில் பல புதுமையான முயற்சிகளைப் புகுத்தித் தேர்வுகளை நடத்துவதிலும், தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் வெளிப்படைத்தன்மையை நிரூபித்துக் கொண்டு இருக்கின்றது.

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி

"எழுத்தறிவு மட்டுமே கல்வி ஆகாது. எழுத்தறிவு கல்வியின் முடிவும் அல்ல தொடக்கமும் அல்ல. ஒரு குழந்தை மற்றும் மனிதனின் உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றிலுள்ள மிகச்சிறந்ததை வெளிக் கொணர்வதே கல்வியாகும்”.

- மகாத்மா காந்தி

முன்னுரை

பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககமானது, 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு எழுத்தறிவை வழங்குதல் என்கிற உன்னத நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு 1976 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது. தமிழ்நாட்டில், கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் எழுத்தறிவின்மை நிலையை நீக்கிடும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

கற்போர், தான் பெற்ற கல்விசார் திறன்களைத் தொடர்ந்து தக்க வைத்திடவும், அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் கல்வி கற்பதை ஊக்குவித்திடும் வகையிலும், ஊரகச் செயல்முறை எழுத்தறிவுத் திட்டம், கற்போருக்கான மாநில வயது வந்தோர் கல்வித் திட்டம், மக்கள் செயல்முறை எழுத்தறிவுத் திட்டம், முழு எழுத்தறிவு இயக்கம், தொடர்கல்வி மற்றும் வளர்கல்வி ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன.

கற்போரின் திறன்களை மேம்பாடு அடையச் செய்திடும் வகையிலும், அவர்களைத் தொடர்ந்து வருவாய் ஈட்டச் செய்திடும் வகையிலும், பற்பல வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதை உறுதி செய்திடும் வகையிலும், தொழிற்திறன் பயிற்சி வழங்குதலை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொலைநோக்கு

முழு எழுத்தறிவு நிலையை அடைந்திடும் வகையில் அடிப்படை எழுத்தறிவு, தொழிற்திறன் கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றலில் முன்னேற்றத்தை உருவாக்குதல்.

குறிக்கோள்கள்

* வயதுவந்தோருக்கு அடிப்படைக் கல்வியை வழங்கிட வழிவகை செய்தல்.

* கற்போர் பள்ளிக் கல்விக்கு நிகரான கல்வியை இயல்பாகப் பெறச் செய்தல்.

* தொழிற்திறன் பயிற்சிகளின் வாயிலாக வருவாய்த் திறனை மேம்படச் செய்தல்.

• கற்போரை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் தயார் செய்தல்.

கற்கும் பாரதம் திட்டம்

2001-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், பெண்கள் எழுத்தறிவு 50 விழுக்காட்டிற்கும் குறைவாகப் பெற்றிருந்த தருமபுரி, சேலம், ஈரோடு, பெரம்பலூர், விழுப்புரம், அரியலூர், திருவண்ணாமலை, திருப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கற்கும் பாரதம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது, 3, 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கு நிகரான கல்வியை பள்ளிக்கல்வி முறைக்கு வெளியே கற்போர் பெற வழிவகை செய்கிறது. இத்திட்டத்தில், 15 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் பிற பின்தங்கியோருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு வாரியான கணக்கெடுப்பின் படி, 24.57 இலட்சம் எழுத்தறிவு பெறாத வயது வந்தோரை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரூ. 145.39 கோடி மொத்தத் திட்ட மதிப்பீட்டில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்ற நிதிப்பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கற்றல் மையங்கள்

கிராமப் பஞ்சாயத்து அளவில் 3602 வயது வந்தோர் கல்வி மையங்கள் மூலம் மேலாண்மை , கல்வி மற்றும் தொழில் நுட்பச் செயல்பாடுகள் ஆகியவற்றின் மூலம் எழுத்தறிவு மற்றும் வாழ்நாள் முழுவதும் தொடர்கல்வியைக் கற்போருக்குக் கள் அளவில் வழங்கிடும் பொருட்டு, 9 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் அடிப்படைக் கல்வி, தொழிற்திறன் மேம்பாடு மற்றும் சமநிலைக்கல்வி ஆகிய கல்விசார் செயல்பாடுகள் கற்போருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவு

தேசிய எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பாடத்திட்டத்தினைக் கொண்டு வயதுவந்தோர் கல்வி மையங்களில் கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவு அளிக்கப்படுகிறது.

அடிப்படை எழுத்தறிவுத் திட்டத்தில் படித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படைக் கணக்குத் திறன்களை உள்ளடக்கியுள்ள பாடத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு 300 மணி நேரம் பயிற்சி வழங்கி ஆண்டுதோறும் ஆகஸ்ட் மற்றும் மார்ச் மாதங்களில் கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

தொழில் நுட்பங்களின் ஒருங்கிணைப்பு

2012ஆம் ஆண்டில், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த கற்றல் உபகரணங்களின் வாயிலாகக் கற்போர் நவீன் முறையில் கல்வியைப் பெற்றிடும் வகையில் அரியலூர், தருமபுரி, ஈரோடு, சேலம், பெரம்பலூர், திருவண்ணாமலை, மற்றும் விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் 40 வயதுவந்தோர் கல்வி மையங்களுக்குக் கணினிகள் மற்றும் இதர பொருள்களை ரூ.1 கோடி மதிப்பில் வழங்கி வசதிகள் செய்யப்பட்டு அவை மாதிரி வயதுவந்தோர் கல்வி மையங்களாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இம்மையங்களில், கற்போருக்கு மேற்குறிப்பிட்டுள்ள தகவல் தொழில்நுட்பப் பொருட்களைப் பயன்படுத்தி கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இம்முறையானது, கல்லாதோர் மத்தியில் கல்வி கற்கும் திறனை மேலும் உயர்த்திட உதவியாக உள்ளது. மாதிரி வயது வந்தோர் கல்வி மையங்கள் வாயிலாக இது வரை 23,576 கற்போர் பயனடைந்துள்ளனர்.

மனிதவளம்

கற்கும் பாரதம் திட்டத்தின் கீழ், திட்ட விதிகளின்படி, 26 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும், 100 ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்களும், 5389 மையப்பொறுப்பாளர்களும் மதிப்பூதிய அடிப்படையில் 9 மாவட்டங்களில், பணிபுரிந்து வருகின்றனர்.

சமநிலைக் கல்வித் திட்டம்

சமநிலைக் கல்வித் திட்டமானது, விழுப்புரம், ஈரோடு, சேலம் மற்றும் தருமபுரி ஆகிய 4 மாவட்டங்களில் 64 ஒன்றியங்களிலுள்ள 900 வயதுவந்தோர் கல்வி மையங்களின் வாயிலாக 18000 கற்போருக்கு 3-ஆம் வகுப்பிற்கு நிகரான கல்வியை வழங்கிடும் வகையில் 900 மைய பயிற்றுநர்களைக் கொண்டு முன்னோட்ட அடிப்படையில் ரூ 3.48 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டது.

தமிழ், கணக்கு, சூழ்நிலையியல் மற்றும் கணினி அடிப்படைத்திறன்கள் ஆகிய நான்கு பாடப் புத்தகங்கள் கற்போருக்கு வழங்கி, மையப் பயிற்றுநர்களால் நேரடி வகுப்புகளின் வாயிலாகப் பயிற்றுவிக்கப்பட்டு, ஏப்ரல்2017ஆம் மாதம் இறுதித் தேர்வு நடத்தப்பட்டது.

திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள்

கற்போர் மையங்களானது, 9 மாவட்டங்களில் உள்ள 3602 கிராமப் பஞ்சாயத்துகளில் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியோடு செயற்கை ஆபரணத் தயாரிப்பு, பினாயில் தயாரித்தல், சோப்பு எண்ணெய் மற்றும் சோப்புப் பவுடர் தயாரித்தல், மெழுகு மற்றும் ஊதுபத்தி தயாரித்தல், மென்பொம்மைகள் தயாரித்தல், சம்கி வேலைப்பாடு பயிற்சி, பூவேலைப்பாடு மற்றும் தையல் பயிற்சி ஆகிய தொழிற்திறன் சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

தொழிற்திறன் பயிற்சி உபகரணங்களான தையல் இயந்திரங்கள், பொம்மைகள் செய்ய தேவையான செய்பொருள்கள், செயற்கை ஆபரணத் தயாரிப்புப் பொருள்கள் மற்றும் பிற தொழிற்திறன் பயிற்சி சார்ந்த உபகரணங்கள் வயது வந்தோர் கல்வி மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பெண்கள், எழுதுதல் மற்றும் படித்தல் ஆகிய செயல்பாடுகளைக் கற்றுக்கொள்வதோடு, அவர்கள் தங்கள் வாழ்க்கை சார்ந்த அன்றாடத் தேவைகளுக்கு சுயமாக வருவாய் ஈட்டும் வகையில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

மேலும், கற்போருக்கு தொழிற்திறன் பயிற்சிகளோடு தனிநபர் ஊடக இயக்கம் மூலமாக நிதி அறிவுத்திறன் கல்வி, சட்ட அறிவு, கடமைகள் மற்றும் உரிமைகள், தேர்தல் விழிப்புணர்வுக் கல்வி, பேரிடர் மேலாண்மை மற்றும் குடிமைப் பாதுகாப்பு ஆகியனவற்றில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டுத் தேர்வு

தேசிய எழுத்தறிவு முனைப்பு ஆணையம் மற்றும் தேசிய திறந்தநிலைப்பள்ளி நிறுவனம் இணைந்து கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டுத் தேர்வினை நடத்திச் சான்றிதழ் வழங்குகிறது. தமிழகத்தில், இத்திட்டம் செயல்படும் 9 மாவட்டங்களில், கடந்த மார்ச் - 2017 வரை மொத்தம் 23.89 இலட்சம் பேர் அடிப்படை எழுத்தறிவை முடித்துத் தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனத்தின் சான்றிதழைப் பெற்றுள்ளனர்.

தமிழக அரசினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளின் மூலம், அடிப்படை எழுத்தறிவைப் பெற்ற கற்போரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு தொடர்ந்து அதிகரித்து வருவதை அறிய முடிகிறது.

"... வெள்ளிரவெளி ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் செயல்பட்டு வரும் கற்கும் பாரதம் எழுத்தறிவு மைய மாலை நேர வகுப்புகளில் நான் எழுதப் படிக்கக் கற்று வருகிறேன். இதன் மூலம் நான் தினசரி செய்தித்தாள் பேருந்து எண் மற்றும் சுவரொட்டி தகவல் என பல செய்திகளை நான் படிக்கிறேன். கற்கும் பாரத திட்டத்திற்கு எனது நன்றி...''

திருமதி. லட்சுமி

கற்போர்,வெள்ளிரவெளி

வயதுவந்தோர் கல்வி மையம்

திருப்பூர் மாவட்டம்

புதுமைச் செயல்பாடுகள்

2016-17ஆம் ஆண்டில், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 10 வயதுவந்தோர் கல்வி மையங்களானது ரூ. 25 இலட்சம் செலவில் மாதிரி வயதுவந்தோர் கல்வி மையங்களாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

வயதுவந்தோர் கல்வித் திட்டத்தின் தாக்கம்

தமிழக அரசானது, பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வித் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியதன் விளைவாக வயதுவந்தோர் எழுத்தறிவு விழுக்காட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உருவாக்கியுள்ளது. கற்கும் பாரதம் திட்டம் செயல்படுத்தப்பட்ட 9 மாவட்டங்களில் எழுத்தறிவு விழுக்காட்டில் உண்டாகியுள்ள குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தைக் கீழ்க்காண் வரைபடத்தின் வாயிலாகக் காணலாம்.

பெண்கள் எழுத்தறிவு விழுக்காட்டில் வளர்ச்சி

தமிழக அரசின் பல்வேறு தொடர் முயற்சிகளின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் எழுத்தறிவு விழுக்காட்டில் தொடர்ச்சியான வளர்ச்சி அடைந்து வருகிறது

சாதனைகள்

வயதுவந்தோர் கல்வித் திட்டத்தினை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தியமைக்காகத் தேசிய எழுத்தறிவு விருதுகளை 2013, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு நிலைகளில் தமிழ்நாடு பெற்றுள்ளது.

பல்வேறு நிலைகளில் மாநிலம் பெற்ற விருதுகள்

2013ஆண்டு

 • சிறந்த மாவட்டம் -அரியலுார்
 • சிறந்த கிராமப் பஞ்சாயத்து - குப்பாண்டம் பாளையம் கிராமப் பஞ்சாயத்து, அந்தியூர் ஒன்றியம், ஈரோடு மாவட்டம்

2015ஆண்டு

 • சிறந்த மாவட்டம் - தருமபுரி
 • சிறந்த கிராமப் பஞ்சாயத்து- பாலமலை கிராமப் பஞ்சாயத்து, கொளத்தூர் ஒன்றியம், சேலம் மாவட்டம்

2016ஆண்டு

 • சிறந்த கிராமப் பஞ்சாயத்து -வட்டமுத்தாம்பட்டி
 • கிராமப் பஞ்சாயத்து - சேலம் ஊரக ஒன்றியம், சேலம் மாவட்டம்

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு

2017-18 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ரூ.29.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முடிவுரை

வயதுவந்தோர் கல்வித் திட்டமானது கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்குவதோடு நில்லாமல், அவர்களைப் பல்வேறு திறன்களில் மேம்பட்டவர்களாகவும் உருவாக்குகிறது. கற்போரின், கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகளானது, சமுதாயத்தின் நல்ல விழுமியங்களுடன் கூடிய குடிமக்களாகவும், முழுமையான வளர்ச்சி பெற்றவர்களாகவும் மாற்றுகிறது. தனி மனித மதிப்பு மற்றும் மக்களாட்சி சார்ந்த உரிமைகள் ஆகியவற்றில் சிறப்பான முன்னேற்றத்தைக் கல்வி உருவாக்குகின்றது.

ஆதாரம் : பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அரசு

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top