பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பள்ளிக் கல்வித் துறை பாகம் - 6

பள்ளிக் கல்வித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியம்

"ஆசிரியர்கள் சமுதாயத்தின் சிற்பிகள்”

- பேரறிஞர் அண்ணா

முன்னுரை

ஆசிரியர் தேர்வு வாரியம் 1987ல் தரமும், திறமையும் மிக்க ஆசிரியர்களைத் தெரிவு செய்ய உருவாக்கப்பட்டது. இவ்வாரியம் பல்வேறு வகையான நியமனமுறைகள் மூலமும் மற்றும் நியமன அலுவலர்களின் தேவைக்கேற்பவும் அரசின் கொள்கை முடிவின்படி பல்வேறு வகையான ஆசிரியர்களைத் தெரிவு செய்து வருகிறது. ஒளியியல் குறியீடு வாசிப்பான் (Optical Mark Reader) வழியில் விடைத்தாள் திருத்தம் மேற்கொள்வதால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுப் பணிகள் வெளிப்படைத் தன்மை உடையது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் இதுவரை 1,56,839 பள்ளி மற்றும் கல்லுாரி ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆசிரியர் தேர்வு வாரியமானது தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வினை (TNTET) நடத்தும் மாநில இணைப்பு முகமையாகவும் (Nodal Agency) செயல்பட்டு வருகிறது. பணிநாடுநர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை மற்றும் வழிமுறை பற்றிய விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலக இணையதளம் http://trb.tn.nic.in வழியாக தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகிறது.

குறிக்கோள்கள்

ஆசிரியர் பணிநாடுநர்களின் வெளிப்படையான மற்றும் உள்ளார்ந்த திறமைகளைக் கண்டறிவதும் பணிநாடுநர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளை மேம்படுத்துவதும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அடிப்படை நோக்கம் ஆகும். இதன் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கீழ்க்கண்ட நடைமுறைத் தொழில்நுட்ப உத்திகளைக் கையாள்கிறது

• அனைத்துப் பணித்தேர்வு நடைமுறைகளையும் மின்மயமாக்குதல்

*ஆசிரியரைத் தேர்வு செய்வதற்கான அறிவிக்கை வெளியிடுவதில் தொடங்கி, முடிவுகளைப் பதிவேற்றம் செய்வது வரையுள்ள அனைத்திற்கும் மின் ஆளுமை வளங்களைப் பயன்படுத்துதல்.

• ஒளியியல் குறியீடு வாசிப்பான் (Optical Mark Reader வழியாக தேர்வர்களின் விடைத்தாட்களை மதிப்பிடுதல்.

நம்பகத்தன்மையை மேம்படுத்துதல்

தேர்வு நடைமுறைகளில் உள்ள மந்தனத் தன்மையைக் கருதி முறைகேடான செயல்கள் நடைபெறாமல் உரிய கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மிகவும் மந்தனத்தன்மை வாய்ந்த பகுதிகளான வினாத்தாள் பாதுகாப்பு மையங்கள், தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு அறைகள், பயன்படுத்தப்பட்ட ஒளியியல் குறியீடு வாசிப்பான் விடைத்தாள்களை மின்னணு ஒளிக்கதிர் கொண்டு கணினி பிரதி செய்யும் அறை ஆகிய அனைத்தும் நெருங்கிச் சுழலும் நிழற்படக் கருவி (Closed Circuit Television-CCTV) மூலம் கண்காணிக்கப்படுவதோடு, அனைத்துச் செயல்களும் வீடியோப் பதிவும் செய்யப்படுகின்றன. தேர்விற்கான அனைத்து மந்தனத் தன்மை வாய்ந்த ஆவணங்களை பாதுகாப்பு மற்றும் கவனத்துடன் கையாளுதல் மற்றும் நேர்மையான முறையில் தேர்வுப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றிக்கு முன்னுரிமை தரப்படுகிறது.

ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தலில் வெளிப்படைத் தன்மை மற்றும் நவீன முறைகளைப் பின்பற்றுதல்

ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தல் நடைமுறைகள் அனைத்தும் வெளிப்படத்தன்மையுடனும் துல்லியமாகவும் இருப்பதற்காகப் பல்வேறு நிலைகளில் திருப்திகரமாகக் குறிப்பிடும் வகையில் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. முதன் முறையாக ஆசிரியர் தேர்வு வாரியம் இணையவழி விண்ணப்பத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வசதி எதிர்வரும் அனைத்து பணித் தெரிவுகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படும். 2013-14 ஆம் ஆண்டு முதல், பணிநாடுநர்கள் தங்களது ஒளியியல் குறியீடு வாசிப்பான் விடைத்தாளின் படிவம் மற்றும் மதிப்பெண்களைக் கணினி வாயிலாக நேரடியாகக் கண்டு சரிபார்த்துக் கொள்ளவும் சென்னையில் இவ்வாரிய அலுவலகத்தின் தகவல் மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தகவல் மையச் செயல்பாடு

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 2015 ஆம் ஆண்டு முதல், பணிநாடுநர்களுக்கு முழுமையான தகவல்களை வழங்குவதற்காகக் கணினிமயமாக்கப்பட்ட தகவல் மையப் பிரிவு செயல்பட்டு வருகிறது. தங்களது ஐயப்பாடுகளைத் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்பும் பணிநாடுநர்களுக்கு இத்தகவல் மையம் சிறந்த முறையில் துரிதமாக பணிசெய்து வருகின்றது.

சாதனைகள்

2011-12 ஆம் ஆண்டு முதல் 2016-17ஆம் ஆண்டு வரை ஆசிரியர் தேர்வு வாரியமானது பின்வருமாறு ஆசிரியர்களைத் தெரிவு செய்துள்ளது.

• பள்ளிக் கல்வித் துறை - 40,433 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் *

*பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் - 1259

* உயர்கல்வித் துறை - 1528

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009-இன் வழிகாட்டுதல்களின்படி தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வினை (TNTET) நடத்திட மாநில இணைப்பு முகமையாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2012-ஆம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு (TNTET) குறித்த விவரங்கள் கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வ. எ

தேர்வின் பெயர் மற்றும் ஆண்டு

தேர்வு எழுதியவர்கள்

தகுதி பெற்றவர்கள்

1

TNTET 2012முதன்மைத் தேர்வு

714526

2448

2

TNTET 2012 - துணைத்தேர்வு

643095

19261

3

TNTET- 2013

662498

72716

4

சிறப்பு TNTET -2014

4693

945

 

நிதி ஒதுக்கீடு

2017-2018க்கான நிதியாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ரூ.3.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முடிவுரை

ஆசிரியர்களைத் தெரிவு செய்யும் அரசின் முகவாண்மை நிறுவனமாக இயங்கும் ஆசிரியர் தேர்வு வாரியம், அனைத்து ஆசிரியர் காலிப் பணியிடங்களையும் நிரப்பிட இவ் வாரியத்திலுள்ள பணியாளர்களைக் கொண்டும், பயன்பாட்டுத் துறையின் முழு ஒத்துழைப்புடனும் சீரிய முறையில் பணியாற்றி வருகிறது.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்

'நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு”

ஒளவையார் (மூதுரை)

முன்னுரை

கடந்த 1961 ஆம் ஆண்டு, தமிழ் வளர்ச்சிக்காக, மொழி பெயர்ப்பு மற்றும் அசல் தமிழ் நூல்களை வெளியிடுவதற்காக, "தமிழ் வெளியீட்டுக்கழகம்" என்ற பெயரில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் 1970 ஆம் ஆண்டு தமிழ் வெளியீட்டுக் கழகம் என்ற அமைப்பை உள்ளடக்கிய தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் உருவானது. இந்நிறுவனத்தின் முக்கிய பொறுப்பு இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் பிறதுறை சார்ந்த புத்தகங்களை அச்சிட்டு, வெளியிடுதல் மற்றும் விற்பனை செய்தல் என்பதாக அமைந்தது. 1961 முதல் 1980 வரை உயர்கல்வி தொடர்பான பல்வேறு தலைப்புகளில் 1016 புத்தகங்கள் வெளியிடப்பட்டன. 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் என்பது தமிழ்நாடு பாடநூல் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் பணி விரிவடைந்து 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. அதன்படி கடந்த 2014-2015 ஆம் கல்வி ஆண்டு முதல் விலையில்லா கல்வி உபகரணங்களைக் கொள்முதல் செய்து அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு விநியோகம் செய்யும் பணியினையும் செம்மையாக செய்து வருகின்றது.

குறிக்கோள்

ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பாடத் திட்டத்தின்படி பல்வேறு பாடத் தலைப்புகளில், தேவைக்கேற்ப புத்தகங்களை அச்சிட்டு விநியோகிக்கும் பணியுடன் விலையில்லா கல்வி உபகரணங்களை, கொள்முதல் செய்து வழங்குவதுடன் கல்லூரி மாணாக்கர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் தன்னுடைய பணியை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு அரிய தமிழ் நூல்களை மறுபதிப்பு செய்து அச்சிட்டு வழங்கப்பட உள்ளது. மேலும் உலகளாவிய தமிழ் மக்களைச் சென்றடையும் வகையில், இணையம் அடிப்படையிலான தமிழ் இலக்கிய வளங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறது.

பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் மற்றும் கால்நடை அறிவியல் போன்ற உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு உதவிடும் வகையில் தமிழில் அப்புத்தகங்களை அச்சிட்டு வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வெளியீடுகளும் மின்னணு புத்தகப் பதிப்பு வடிவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். +2 படிக்கும் மாணாக்கர்களுக்கு தரமான பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்பு வசதிகள்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் இயங்கி வருகின்றது. பாடநூல்கள் விற்பனை மற்றும் மாநிலம் முழுவதும் விநியோகப் பணியினை மேற்கொள்ளும் வசதியாக 22 வட்டார கிடங்குகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 6 கிடங்குகள் கழகத்திற்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கி வருகின்றன. ஏனைய கிடங்குகள் தமிழ்நாடு அரசு / மத்திய அரசுக்குச் சொந்தமான கிடங்குகள் / கூட்டுறவு நிறுவன கிடங்குகள் ஆகியவற்றில் இயங்கி வருகின்றன. பொதுப்பணித்துறையின் ஈ.வெ.கி. சம்பத் மாளிகையில் உள்ள அலுவலக கட்டிடம் ரூ.2.56 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

கிடங்குகள் நவீன மயமாக்கல்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்குச் சொந்தமான சென்னை , காஞ்சிபுரம், வேலூர், பர்கூர், தஞ்சாவூர் மற்றும் சிவகாசி கிடங்குகள் ரூ.30 கோடி செலவில் நவீனமயமாக்கப்படும். மேற்கண்ட கிடங்குகளில் Automated Storage and Retrieval System (ASRS) அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

செயல்பாடுகள்

முப்பருவ முறை

2012-2013 ஆம் வருடம் முதல், மாணவர்கள் வருடம் முழுவதும் எதிர்கொள்ளும் புத்தகச் சுமையினை குறைக்கும் பொருட்டு 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான பாடநூல்கள் முப்பருவ முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் புத்தகம் அச்சிடும் முறையை மாற்றி 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள பாடநூல்கள் முப்பருவ முறையிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடநூல்கள் ஆண்டு நூல்களாகவும் அச்சிட்டு வழங்கி வருகிறது.

பாடநூல்கள் அச்சிடப்பட்ட விவரம் (2016 - 2017)

வகுப்பு

விலையில்லாப் பிரதிகள் (கோடியில்)

விற்பனைப் பிரதிகள் (கோடியில்)

பருவம் 1 (1-9)

1.23

0.76

` பருவம் II (1-9)

1.20

0.67

பருவம் III (1-9)

1.21

0.68

ஆண்டுப் பாடநூல்கள் (வகுப்பு 10-12)

1.76

0.68

அச்சுப்பணி

தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வெளிப்படைத் தன்மை சட்டம், 1998 மற்றும் ஒப்பந்தப் புள்ளி விதிகள், 2000 ஆகியவற்றில் கண்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி 2 ஆண்டுகளுக்கென தேர்வு செய்யப்பட்ட தகுதியுள்ள

* அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு தேவையான துணை நூல்கள், கற்றல் திறன் அட்டைகள் மற்றும் வழிகாட்டிகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

*ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் நிர்வாகத்தில் இயங்கும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு சிறப்பு வழிகாட்டிக் கையேடுகளை அச்சிட்டு வழங்குகின்றது.

*2016 - 2017 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா, புதுதில்லி, குஜராத், கேரளா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட பிற மாநிலங்களில் தமிழ் பயிலும் மாணாக்கர்களுக்கு 8,746 தமிழ் பாடநூல்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளன.

* தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம், 2006-இன்படி மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு ஆண்டு பதிப்பாக 7.47 இலட்சம் எண்ணிக்கையிலான தமிழ்ப்பாடநூல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மின் நுால்கள்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிடும் பாடநூல்கள் கழகத்தின் இணையப் பக்கத்தில் (www.textbooksonline.tn.nic.in) பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் கழக இணையப் பக்கத்திலிருந்து பாடநூல்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தர ஆய்வு

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகள் தரத்துடன் விளங்கிட நிர்ணயிக்கப்பட்ட தர அளவீடுகள் முறையாக பின்பற்றி வருகிறது. கணித உபகரணப் பெட்டி, வண்ணம் தீட்டும் குச்சி, வண்ணப் பென்சில், காலணி, புத்தகப்பை மற்றும் கம்பளிச் சட்டை ஆகிய பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கு என உரிய தர அளவீடுகள் மத்திய அரசின் பல்வேறு துறையின் கீழ் அமைந்துள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் ஆய்வுக் கூடங்கள் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன. உற்பத்தியின் முன்னும் பின்னும் பிரத்தியேக ஆய்வுக்கூடங்களின் மூலம் தர ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், தொழில் நுட்பம் மற்றும் தர அளவீடுகளை செம்மைப்படுத்தி தெளிவாக்கிட அவ்வப்போது உரிய நிபுணர்களைக் கொண்டு மறு ஆய்வும் செய்யப்படுகிறது. தரக்குறைபாடுகளிருப்பின் அதன்பொருட்டு அபராதங்கள் விதிக்கப்படுகின்றது.

புதிய முயற்சிகள்

இணையதள நேரடி விற்பனை

பாடநூல்கள் தனி நபர்கள் மற்றும் மாணவர்கள் எவ்விதச் சிரமமுமின்றி பெறும் பொருட்டு இணைய விற்பனை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இச்சேவையை மேலும் மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் அமைந்துள்ள அரசு கேபிள் டி.வியின் பொதுச்சேவை மையங்கள், பாடநூல்களின் தேவையை பதிவு செய்து கட்டணம் செலுத்தும் மையங்களாக மார்ச் 2016 முதல் நியமிக்கப் பட்டுள்ளன. மேலும், பதிவு செய்பவர்கள் அனைவரும் தங்கள் இருப்பிடத்திலேயே பாடநூல்களைப் பெறும் வசதி கூரியர் சேவை நிறுவனம் மூலம் வழங்கப்படுகிறது. தனிநபர், மாணவர்கள் பதிவிட்ட பாடநூல்கள் வரவினைக் கண்காணிக்கும் (Tracking) வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

இணையதள நேரடி விற்பனையின் பயன்கள்

இணையதள விற்பனை சேவை செயல்படுவதன் மூலம் மாணவர்கள் மற்றும் பள்ளிகள் பெறும் பயன்கள் பின்வருமாறு:

* பள்ளிகளின் விற்பனை பிரதிகளின் தேவை துல்லியமாகக் கணக்கிடப்பட்டு அச்சிடப்படுகிறது. தேவைக்கு அதிகமான புத்தகங்களை அச்சிடுதல் மற்றும் தேவையற்ற இருப்பு வைத்தல் தவிர்க்கப்படுகிறது.

* இணையதளம் மூலம் இருப்பினைப் பதிவேற்றுவதால் வெளிப்படையான மற்றும் பொறுப்பான செயல்பாடு ஏதுவாகிறது.

* இணையதளம் மூலம் பாடநூல் இருப்பிற்கேற்ப தனிநபர்களும் பள்ளிகளும் தங்கள் தேவையைப் பதியலாம்.

* வரைவோலை முறைக்கு பதிலாக இணைய வழியாக பணம் செலுத்தும் முறை கடைப்பிடிக்கப் படுகிறது.

* முகவர்களிடம் அதிக விலை கொடுத்து வாங்கிய நிலையும் வழக்கொழிந்த புத்தகங்களை விற்பனை செய்யும் நிலையும் தவிர்க்கப்படுகிறது.

பழமை வாய்ந்த உயர்கல்வி தமிழ் வழி நூல்களை மின்மயமாக்குதல்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், உயர்கல்விக்காக 1961ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு வரை 1016 நூல்களை வெவ்வேறு தலைப்புகளில் தமிழ் வழியில் வெளியிட்டுள்ளது. இன்றும் பல்வேறு வாசகர்கள், மாணவர்கள், போட்டித் தேர்வைச் சந்திப்போர் போன்றோர்களுக்கு தேவைப்படும் இந்நூல்களைத் தேடிக் கண்டறிந்து படித்து பயன்பெறும் அளவிற்கு மேற்கண்ட வெளியீடுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. மேலும் இப்புத்தகங்களை வெளிச்சந்தையிலும், இணையதளத்திலும் அதிக அளவில் நாடுவோருக்கு எளிதில் கிடைத்திடும் வகையில் அவற்றினை மின்மயமாக்கவும், மறு அச்சுப் பணி செய்யவும் கழகத்தால் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள் - மீண்டும் அச்சிட்டு வெளியீடு செய்தல்

நாட்டுடமையாக்கப்பட்ட சிறந்த கருத்துக்களைக் கொண்ட நுால்களில் சில வெளிச்சந்தையில் எளிதாக கிடைப்பதில்லை. எனவே, நாட்டுடமையாக்கப்பட்ட நுால்களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், அச்சிட்டு பொது நூலகங்களுக்கு வழங்கவும் மற்றும் அவற்றினை வெளிச்சந்தையில் உரிய விலை நிர்ணயம் செய்து விற்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இம்முயற்சியின் வாயிலாக நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள் அனைத்து பொது நூலகங்களிலும் கிடைக்கச் செய்வதன் மூலம் பொது மக்கள் அவற்றை பயன்படுத்திட ஏதுவாக அமையும்.

பல்வேறு பல்கலைக்கழக உயர்கல்வி நூல்களை தமிழாக்கம் செய்து வெளியிடுதல்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் மருத்துவம், சட்டம், பொறியியல், கலை, அறிவியல், ஓமியோபதி, மீன் வளம், உடற் கல்வியியல், கால்நடை அறிவியல் மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் உள்ள ஆங்கில வழிப் பாடநூல்களைத் தமிழாக்கம் செய்து அந்தந்த துறைகளுக்கேற்பவும், தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் வெளியிட உத்தேசிக்கப் பட்டுள்ளது. முதல் கட்டமாக கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகம் விவசாயம் சார்ந்த 69 பாடப்பிரிவு நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிட கோரியுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கான மாத இதழ்கள் வெளியிடுதல்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்கள் படைப்பாற்றல் மற்றும் பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் குழந்தைகள் படிப்பதற்கு ஏற்றவாறு கவிதை, கட்டுரை, ஓவியம், விளையாட்டு, விடுகதை, வினாடி - வினா, அறிவியல், உடல் நலக்குறிப்புகள், பயண அனுபவம் போன்றவை அடங்கிய மாத இதழாக வெளியிடப்படும். மேலும், ஆசிரியர்களுக்கான மாத இதழ் குழந்தைகளின் உளவியல், ஆசிரியர்களின் படைப்புத் திறன் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

நிறுவன வளத் திட்டமிடல்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மென்பொருள் சேவை பல்வேறு பாகங்களாக இருந்து வருகிறது. தற்போது இச்சேவைகளை முழு ஆட்டோமேஷனில் அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நவீன முறையில் கொள்முதல் செய்யப்பட உள்ள மென்பொருள் பயன்பாட்டில் கணக்கு தொகுக்கும் பிரிவு, பாடநூல் விநியோக மேலாண்மை, அச்சுப்பணி, இணையதள விற்பனை, நிர்வாகம், சம்பளப்பட்டியல், நிதி / கணக்குகள் மற்றும் சொத்து மேலாண்மை ஆகிய சேவைகள் இணைக்கப்படவுள்ளது.

முடிவுரை

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பாடநூல்கள் அச்சிடுவது மற்றும் விநியோகிப்பது என்ற எல்லையினைத் தாண்டிக் கல்வியின் தரத்தினைப் பல்வேறு வகையில் சிறப்புடன் மேம்படுத்த ஆயத்தமாகி வருகின்றது. இக்கழகமானது உயர்கல்வி படிப்புகளுக்கான பாடநூல்களை வெளியிடும் அமைப்பாகத் தன்னை மேம்படுத்திக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி அரிதானதும், அதி முக்கியத்துவமும் வாய்ந்த புத்தகங்களை மறுபதிப்பு செய்வதிலும், இணையத்தில் பதிவேற்றம் செய்வதிலும் மற்றும் அவற்றினைப் பாதுகாப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டு அதற்கான நிதியினை வழங்குவதில் தனது ஈடுபாட்டினைச் செலுத்தி வருகின்றது. காலத்திற்கேற்ப இக்கழகமானது தனது பெயரை நிலை நிறுத்தும் விதத்தில் தனது பணிகளைப் பன்முகப்படுத்தி முனைப்புடன் செயலாற்றி வருகின்றது. தமிழ் மொழியில் உள்ள அனைத்து நூல்களையும் உலக மக்கள் அனைவரும் நுகரும் வகையில் அனைத்து விதமான பதிப்பு வடிவங்களிலும் கிடைப்பதினைத் தனது எதிர்கால இலட்சியமாகக் கொண்டு செயலாற்றி வருகின்றது.

ஆதாரம் : பள்ளிக் கல்விதுறை

3.03571428571
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top